'இடதுசாரிகள் ஏன் வெல்ல வேண்டும்?' -- மதுக்கூர்இராமலிங்கம் (நக்கீரன்- கட்டுரை)

 (எனது நண்பனின் கட்டுரையை நமது வலைப்பக்க நண்பர்களுக்கு படிக்கத் தருவதில் நான் பெருமையடைகிறேன் – நா.முத்துநிலவன்)
மதுக்கூர் இராமலிங்கம்

தராசுத் தட்டில் வைக்கப்படும் எடைக்கற்கள்தான், எதிர்த்தட்டில் உள்ள பொருளின் மதிப்பை அளவிட உதவுகிறது.

அதுபோல, நாடாளுமன்றத்தில் இடம்பெறும் இடதுசாரிக் கட்சிகள்தான், ஆளுங்கட்சியின் நிறத்தையும், நிஜத்தையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் உண்மையான மாற்றாக திகழ்கின்றன. 

முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தியாவின் பெரு முதலாளிகளும், கார்ப்பரேட் ஊடகங்களும் கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதை தடுக்க முயல்கின்றன.


மாநிலங்களவை என்பது, அறிஞர்களும், கலைஞர்களும் அதிகமாக இடம்பெறும் அவையாக இருக்க வேண்டும் என்பதுதான், அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களின் ஆசையாக இருந்தது. ஆனால், இன்றைக்கு மாநிலங்களவை என்பது, முதலாளிகள் இளைப்பாறும் முற்றமாக மாற்றப்பட்டு விட்டது. அடுத்து, மக்கள் நேரடியாக தேர்வுசெய்யும் வாய்ப்புள்ள மக்களவையையும் முதலாளிகள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயல்கின்றனர்.தங்களுக்கு ஆதரவான திட்டங்களைச் சட்டங்களாக மாற்றுவதற்கு, கம்யூனிஸ்ட் இயக்கம் தடையாக இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

எனவேதான் பல்வேறு மாநிலங்களில் கம்யூனிஸ்டுகள் பிற கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து, போட்டியிடுவதை நயவஞ்சகமாக தடுத்துள்ளனர். தமிழகத்தில் நடந்ததும்கூட அப்படித்தான். மகாபாரதப் போர்க்களத்தில், தானத்தால் தனக்குக் கிடைத்த புண்ணியத்தையும் கர்ணன், கண்ணனுக்கு தானம் செய்ததைப் போல தங்களுடைய தியாகத்தையும் கூட தியாகம் செய்துவிட்டு, அரசியலை ஒரு அறவேள்வியாக கருதி உழைப்பவர்கள் கம்யூனிஸ்டுகள்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகள், அணியமைத்துப் போட்டியிட்டாலும், உண்மையில் களத்தில் நிற்பது இரண்டு அணிகள்தான். தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்று சலவை செய்யப்பட்ட வார்த்தைகளில் நடைமுறைப்படுத்தப்படும் முதலாளித்துவத்திற்கு முட்டுக்கொடுக்கும் கட்சிகள் ஒரு அணி. அல்லல்பட்டு ஆற்றாது கண்ணீர் வடிக்கும் பெரும்பான்மை பாட்டாளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இடதுசாரிக் கட்சிகள் இன்னொரு அணி.

இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கணிசமான அளவில் இடம்பெற்றால்தான் கட்டுத்தறியிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட ஜல்லிக்கட்டு காளைபோல இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை முட்டி மோதும், முதலாளித்துவத்தின் கொள்ளையடிக்கும் கொள்கைகளுக்குக் கடிவாளம் போட முடியும்.

தாராளமயமாக்கல் கொள்கைத் தடத்தில் கொண்டுவரப்பட்ட- சில்லரை வர்த்தகத்தில் அந்நியருக்கு அனுமதி, ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தை பங்குபோட்டுத் தின்ன அனுமதி, காப்பீட்டுத்துறை, வங்கித்துறை போன்றவற்றில் அந்நியருக்கு அகலக் கதவு திறப்பது போன்ற காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் முடிவுகளுக்கு பாஜக பக்க பலமாக நின்றது. பெட்ரோலியப் பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயிக்கும் முறையை மாற்றி, அவற்றின் விலையை சர்வதேச சந்தையே தீர்மானிக்கும் என விந்தையான முடிவை காங்கிரஸ் அரசு எடுத்தபோது, பாஜகவும் அந்த முடிவை ஆதரிக்கவே செய்தது. மொத்தமாக வாங்கினால் விலை மலிவு; சில்லரையாக வாங்கினால் விலை அதிகம் என்பதுதான் வர்த்தகப் பொருளாதாரத்தின் அரிச்சுவடி.

மாநில அரசு போக்குவரத்துக் கழகங்கள், ரயில்வே போன்ற பொதுப் போக்குவரத்துக்கு மொத்தமாக டீசல் வாங்கினால், கூடுதல் விலை என்ற விநோதமான முடிவை காங்கிரஸ் தலைமையிலான அரசு அறிவித்தது. ஆனால், பாஜக இதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. இதிலிருந்தே காங்கிரஸ் - பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே வலதுசாரி பொருளாதாரத்தின் இரண்டு கரைகளாக விளங்குகின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையிலும் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. மோடி வந்தால், தனி ஈழம் பெற்றுத்தந்து விடுவார் என்பது போல ஒரு மாயையை ஏற்படுத்த வைகோ, தமிழருவிமணியன் போன்றவர்கள் முயல்கிறார்கள். ஆனால், தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு, பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில்தான் நடைபாவாடை விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அப்போது, அதை எதிர்த்து சாஞ்சிக்கே சென்று மறியல் செய்தார் வைகோ. ஆனால் இப்போது அதை வசதியாக மறைக்க முயல்கிறார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட தமிழர்களை விடுவிக்கக் கூடாது என்பது, காங்கிரஸ் கட்சியின் நிலை மட்டுமல்ல, பாஜகவின் நிலையும் அதுதான். ஆனால், மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பதை மனத்தில் நிறுத்த வேண்டும்.

ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தால் வளர்க்கப்பட்டவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று பூரிப்பில் பொங்கி வழிகிறார், மோடி.
சிறுபான்மை இசுலாமிய - கிறித்தவ மக்கள், இரண்டாம்தரக் குடிமக்களாகவே இந்த நாட்டில் வாழ முடியும் என்பதும், பிராமணிய சாதிய அடுக்கு அப்படியே நீடிக்க வேண்டும் என்பதும்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தம். இதன் அடிப்படையில்தான் குஜராத்தில் சிறுபான்மை இசுலாமிய மக்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மோடி ஆட்சியில் கொன்று குவிக்கப்பட்டார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கூட,கூட்டாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
குழந்தைகளும் கூட மதவெறிக் கூட்டத்திடமிருந்து தப்பவில்லை. 

இதுகுறித்த குற்ற உணர்ச்சி எதுவும் மோடியிடம் இப்போதுகூட இல்லை. காரில் செல்லும்போது, நாய்க்குட்டி அடிபட்டுச் செத்துப்போனால் ஏற்படும் வேதனைதான் வன்முறை குறித்து எனக்கு ஏற்பட்டது, என அலட்டாமல் கூறுகிறார்.

மோடி ஆட்சியில் குஜராத் மக்களின் வாழ்க்கை அப்படி ஒன்றும் வளம்பெற்று விடவில்லை என்பதை பல்வேறு மனிதவளர்ச்சி குறியீடுகள் உணர்த்துகின்றன.

மாறாக, மோடியின் சலுகை மழையால் முதலாளிகள் அபரிமிதமாக வளர்ந்துள்ளனர். மோடி ஆட்சிக்கு வந்தபோது, 2 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு, தற்போது 24 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. டாடா எனும் பெருமுதலாளி 1 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கும் நானோ காருக்கு 80 ஆயிரம் ரூபாயை பல்வேறு வகையில் மானியமாக வழங்குகிறது, மோடி அரசு.

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இயற்கை எரிவாயு விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று கர்மசிரத்தையாக மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியவர்தான் மோடி. 

ஊழலிலும் காங்கிரசும், பாஜகவும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. ஊழல் ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயம் வைத்தால், இருவரும் ஒரேநேரத்தில் வெற்றிக்கோட்டைத் தொடுவார்கள். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல், அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல் என காங்கிரஸ் பட்டியலிட்டால், மறுபுறத்தில் பாஜக, கார்க்கில் வீரர்களுக்கு காலணி முதல் சவப்பெட்டி வரை வாங்கியதில் ஊழல், பொதுத்துறை பங்கு விற்பனை ஊழல், டெகல்ஹா அம்பலப்படுத்திய ஊழல் என பதிலுக்கு பட்டியலை நீட்டுவார்கள்.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, அலைவரிசைக் கற்றை ஒதுக்கீடு போன்ற ஊழலின் மூலத்தை விசாரித்தால், அது முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் துவக்கி வைக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடியும். 

ஊழல் கறை, தொடமுடியாத பெருநெருப்பாக- அரசியலில் ஜொலிப்பவர்கள் இடதுசாரிகள் மட்டுமே. உலகிலேயே மக்களால் தேர்வுசெய்யப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு கேரளத்தில் தலைமை ஏற்றவர் இஎம்எஸ் நம்பூதிரிபாட்.

தனது சொந்த சொத்தையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சி கொடுத்த குறைந்தபட்ச ஊதியத்தில் கடைசிவரை நான்குமுழ வேட்டியோடும், அரைக்கை சட்டையோடும் அரசியல் அதிசயமாக திகழ்ந்தவர் அவர். 

மக்களால், மீண்டும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு, மிக அதிக காலம், மேற்குவங்க முதல்வராக இருந்தவர் ஜோதிபாசு. அவரது அரசியல் எதிரிகள் கூட அவரை நோக்கி சுட்டுவிரல் நீட்டிக் குற்றம் சாட்ட முடியவில்லை. 

மாணிக் சர்கார்
திரிபுரா முதல்வராக இருந்த நிருபன் சக்கரவர்த்தி, புத்தகங்கள், ஆடைகள் மட்டுமே இருந்த இரண்டு பெட்டிகளோடு முதல்வர் இல்லத்தில் இருந்து வெளியேறினார்.

இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் முதல்வர்களிலேயே பரம ஏழை, திரிபுராவின் முதல்வர் மாணிக் சர்க்கார்தான் என்று ஏடுகள் எடுத்துரைக்கின்றன. 

ஆனால் மோடி, நான் டீக்கடை வைத்திருந்தேன் என்று கூறி வருகிறார். டீக்கடை வைத்திருந்த இவரால், எவ்வாறு தனி விமானத்தில் பறந்து பறந்து பிரச்சாரம் செய்ய முடிகிறது? என்கிற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.
ஆர்.நல்லகண்ணு

தமிழகத்திலும் என்.சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு போன்ற பொதுவுடமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர்கள் விடுதலைப் போராட்ட காலம் துவங்கி, இன்றுவரை எளிமையையும் தியாகத்தையுமே அடையாளமாகக் கொண்டு, கம்பீரமாக இயங்கி வருகின்றனர்.தமிழக மக்களின் நூற்றைம்பது ஆண்டுகால கனவான சேதுக்கால்வாய்த் திட்டம் துவக்கப்பட்டபோது, அதை தடுத்து நிறுத்தி வைத்திருப்பதில், பாஜக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு பங்குண்டு.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மாற்று வழியை யோசிப்பதாகக் கூறி, வாய்தா வாங்கி, இத்திட்டத்தை மண்மூடச் செய்ததில், காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கும் பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை. 

தமிழகத்தில் முதன்முறையாக பாட்டாளிகளின் பாடி வீடான இருபெரும் இடதுசாரிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து களம் காண்கின்றன.

மத்தியில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மாற்று அரசு அமைய வேண்டும் என்பதே இடதுசாரிக் கட்சிகளின் அகில இந்தியப் பிரகடனம். அத்தகைய ஓர் அரசு அமையும்போதுதான் மதச்சார்பின்மை மட்டுமல்ல, மாநில உரிமைகளும் பாதுகாக்கப்படும். 

அதற்கு துணைசெய்யும் வகையில் தமிழகத்திலிருந்தும் இடதுசாரிகள் நாடாளுமன்றம் செல்வது அவசியமாகும்.

ஏழை சொல், அம்பலம் ஏறாதுஎன்பது நாட்டுப்புற வழக்கு.
உண்மையில் ஏழை சொல், நாடாளுமன்ற அம்பலம் ஏற வேண்டுமானால், அவர்களின் உண்மையான குரலாக ஒலிக்கும் இடதுசாரிகள் கணிசமான அளவில் நாடாளுமன்றத்திற்கு சென்றாக வேண்டும். 
அதற்கு தமிழகமும் துணை நிற்கட்டும்.

--மதுக்கூர் இராமலிங்கம்
மாநிலக்குழு உறுப்பினர் - சிபிஐ(எம்)
நன்றி: நக்கீரன் 2014 ஏப்.05-08, 2014

இதை அப்படியே எடுத்து வெளியிட்ட
“தீக்கதிர்நாளிதழ் (08-04-2014) தந்திருந்த தலைப்பு –
“ஏழைசொல் அம்பலம் ஏற இடதுசாரிகள் வெல்ல வேண்டும்

 http://epaper.theekkathir.org/ (08-04-2014-செவ்வாய்) பக்கம்-05 

15 கருத்துகள்:

 1. வணக்கம் ஐயா
  பன்முகத்திறன் கொண்ட எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர் திரு. மதுக்கூர் இராமலிங்கம் ஐயாவின் கட்டுரை ரொம்பவே சிந்திக்க வைக்கிறது. மேற்கு வங்காளத்திலிருந்து டாடா வெளியேற்றப்பட்ட போது மோடி தனது மாநிலத்திற்கு அழைப்பு விடுத்தாரோ அன்று முதலே பண முதலைகள் அவரை உயரே தூக்கிப் பிடிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பது தான் உண்மை. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத எளிமையான கம்யூனிஸ்ட்களின் கையில் இந்தியாவை ஒப்படைத்தால் நாடு வளம் பெறும் என்பது ஒப்புக்கொள்ளக்கூடியது தான். ஆனால் விடுவார்களா பணமுதலைகள்? கம்யூனிஸ்ட்கள் அதிக பெரும்பான்மை பெற்றால் மட்டுமே அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியும் .கூட்டணி என்று வந்து விட்டால் ஊழல் கட்சிகளைக் காப்பாற்ற கொடிபிடிக்கும் அவலம் அக்கட்சிக்கு ஏற்படலாம். ஆகவே தனிப்பெரும்பான்மை அவர்களுக்கு வேண்டும் அதற்கான காலம் கனிய வேண்டும். மதுக்கூர் ஐயாவிற்கும் கட்டுரையைப் பகிர்ந்த உங்களுக்கு எனது அன்பான நன்றிகள் ஐயா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதற்கான காலம் கனிய வேண்டும் காத்திருப்போம் ஆனால், காத்துக்கொண்டே சும்மா இருக்காமல் அதைநோக்கி நாமும் செயல்பட்டு இடதுபக்கமே பயணிப்போம் அய்யா நன்றி.

   நீக்கு
 2. பட்டிமன்றத்தில் திரு. மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள் வந்தாலே கொண்டாட்டம் தான்... ரசித்துக் கேட்பேன்... ஐயாவின் கட்டுரை மிகவும் அருமை...

  பதிலளிநீக்கு
 3. திரு.மதுக்கூர் இராமலிங்கம் அவர்களின் கட்டுரை சிந்திக்க வைக்கிறது.பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரி. மறந்துவிடுவது மக்கள் வழக்கம், அதை நினைவூட்டிக்கொண்டே இருப்பது நல்ல பழக்கம்தானே?

   நீக்கு
 4. சீரிய கருத்துகளையுடைய கட்டுரை...பகிர்ந்ததற்கு நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
   ........இல்லாமை இல்லாத நிலை வேண்டும் - கண்ணதாசன் கவிதை சரிதானே சகோதரி?

   நீக்கு
  2. மதுக்கூர் கட்டுரையைப் படித்தேன்.மிக ஆழமான கருத்துகளை நாடு நல்லாயிருக்க அருமையான வழியைக் காட்டியிருக்கிறார்.பணமுதலைகளாகிய கார்ப்பரேட் முதலாளிகள் கம்யூனிஸ்ட்களை நாடாளுமன்றம் நுழைய தடுக்கிறார்கள் என்பதோடு மதவெறிக் கும்பலின் மகாத்மாவைக் கொன்ற கோட்சேயின் குண்டு எப்படியாவது இந்தியாவை பண்பாட்டு மேலாதிக்கத்துக்கு கொண்டுவந்துவிடவேண்டும் என துடிக்கிறது.கடந்த தேர்தல் காலங்களில் முகமூடி அணிந்து வந்த ஆர் எஸ் எஸ் இப்போது நேரடியாகவே நாட்டுமுன் விவாதப் பொருட்களை வைத்துள்ளது.மக்களின் அறியாமையை ,இயல்பான பக்தியை ஒட்டுகளாக மாற்றி தங்களுடைய முன்மொழிவாகிய அகண்ட பாரத கனவை, 370, பொது சிவில் சட்டம் ,ராமர்கோவில் போன்றவற்றை அமுல்படுத்தும் தருணதை எதிர்நோக்கும் ஆபத்தான நிலையும் கூட.இதற்கெல்லாம் பேச்சுப் புலிகளெல்லாம் பலிகெடாக ஆக்கப்பட்டுள்ளார்கள். அல்லது ஆடுகள் வெட்டும் கசாப்புகடைக் காரனிடம் தலையைக் கொடுத்துள்ளன.தனது தலையை மட்டுமல்ல 'மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலியறுக்கவேண்டும்' என ஊர் சொலவடை போல தான் பிழைப்பதற்கு எது தேவையோ அதை பெற்றுக்கொண்டு நாடு எப்படிப போனால் என்ன? என நினைப்பவர்களின் வஞ்சகம் செயலாகுமோ என கவலைப் படவேண்டியுள்ளது.இந்த சூழலில் மதுக்கூராரின் கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைகிறது.நன்றி.

   நீக்கு
 5. தேர்தல் நேரத்தில் கிட்டிய சிந்தனை நன்று. மக்கள் சிந்திப்பார்களாக.. நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலத்தினாற் செய்த நன்று? நன்றி கோபி
   தங்கள் முயற்சி சிறப்படைய என் வாழ்ததுகள் இன்றைய செய்தித்தாளின் முக்கியச் செய்திகள் (குரூப்-1) உங்களையே எனக்கு நினைவூட்டின.. அடுத்த செய்திக்காகக் காத்திருக்கிறேன்.

   நீக்கு
 6. இந்த நேரத்திற்கு தேவையான ஒரு கட்டுரை. மதுக்கூர் இராமலிங்கம் ஐயா அவர்களின் கட்டுரை அருமை. அதனைப் பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 7. சிரிக்கவும் சிந்திக்கவும் பேசும் மது..கூர்ர்ர் ஐயாவின் "நக்கீரன்" கட்டுரை படித்தேன்... இனி அமையும் ஆட்சியை நெறிப்படுத்த இடதுசாரிகள், அதிக இடங்களைப் பெறவேண்டும் என்ற கருத்து சரியானது.... அவர்கள் எடைக்கற்கள் மட்டும் அல்ல.... ஆட்சிக் குதிரைகள் தடம் மாறிச் செல்லாமல் கட்டுப் படுத்தும் கடிவாளமும் கூட.... கிராமத்துல ஒரு சொலவடை சொல்லுவாங்க.... "யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை..." ன்னு.... யோக்கியர்கள் வோட்டுக் கேட்டு வருகிறார்கள்..... இன்றைய சூழலில் தூய்மையானவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிற தகுதி இடது சாரிகளுக்கு மட்டுமே உண்டு............

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி மகா.சுந்தர் அய்யா. தங்களின் கருத்துக்கும் வலைப்பக்கம் திரும்பியதற்கும் நன்றி. உங்கள் பக்கத்திலும் அவ்வப்போது எழுத வேண்டுகிறேன். அதற்கும் என் முன்கூட்டிய நன்றி

   நீக்கு