தமிழ் இனிது -28


எழுத்துக்கள் சரியெனில் வாழ்த்துக்கள்?

          ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்த நண்பர் கேட்டார்- “வாழ்த்துக்களா? வாழ்த்துகளா?” தமிழ்ப் புத்தாண்டில் “ஏப்பி நியூ இயர்” சொன்ன ‘கொடுந்தமிழர்’ இடையே, இப்படிக் கேட்டவரை வாழ்த்தினேன்!

            ‘கள்’ விகுதி பழந்தமிழில் இல்லை! “ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவி“யோடு ஒட்டி, உயர்திணை ஒருமைக்கே மரியாதைப் பன்மை வந்து விட்டது – ”அமைச்சர் அவர்கள் வருகிறார்கள்” போல!  

நாள்கள், ஆள்கள், வாழ்த்துகள் என, இயல்பாகவே எழுதலாம். ‘நாட்கள்’ என்பதற்கு, ‘நாட்பட்ட கள்’ என்று பொருள் எனினும், இப்போது அப்படி யாரும் புரிந்து கொள்வது இல்லை என்பதால் நாட்கள் என்பதை ஏற்கலாம் என்பதே என் கருத்து. தாட்கள், ஆட்கள் என்பது செயற்கை. “எத்தன ஆளுக(ஆள்கள்)?“எனும் சிற்றூர் மக்களிடம் இதைக் கற்கலாம்.   

பரிமேலழகர் முதலாக, தமிழண்ணல் வரை ‘எழுத்துக்கள்’ என்றும் எழுதியுள்ளனர். எழுத்துக்கள் சரியெனில் வாழ்த்துக்களும் சரிதானே? 

ஆக, நாட்காட்டி- நாள்காட்டி, வாழ்த்துக்கள்-வாழ்த்துகள் இரண்டும் வழக்கத்தில் இருப்பினும், நாள்காட்டியே எளிது என்பதை கவனத்தில் கொள்ளலாம், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளையும் சொல்லலாம்!       

பழமுதிர்ச்சோலையா? - பழமுதிர் சோலையா?  

 “ஃப்ருட் ஸ்டால்“ என்பதை, “பழமுதிர் சோலை“ எனப் பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது! பன்னாட்டுப் பண்பாட்டுக் கலப்பில், உலகத் தாய்மொழிகள் பலவும் அழிந்துவரும் சூழலில், இது மகிழ்ச்சிதானே?

முருகாற்றுப் படை,  “பழமுதிர் சோலை மலைகிழ வோனே“ என்று முடிவடையும். “பழமுதிர் சோலையிலே தோழி” எனும் கண்ணதாசனின் திரைப்பாடலை, சுசிலாம்மாவின் இனிய குரலில்  கேட்டு மகிழுங்கள்.  

பழம் உதிர் சோலை! கேட்கவே இனிக்கும் பழந்தமிழ்ச் சொல்! இதை, பழமுதிர்ச் சோலை என்று எழுதுவது முதிர்ச்சியற்ற செயல்!

அண்ணார்? அன்னார்?  

இறப்புச் செய்தி அறிவிப்புகள், “…அன்னாரின் இறுதி ஊர்வலம்..” என்று வரும். இதையே எழுதும்போது, ‘அண்ணாரின்’ என்பது தவறு. அன்னார் என்பது, ‘ஏற்கெனவே குறிப்பிட்டவர்’ எனப் பொருள் தரும்.  குறள் (667,969,1323), சங்க இலக்கியத்திலும் வரும். ‘தேம்பாவணி’யில் மட்டும் இச்சொல், 72இடங்களில் வருவதாகப் பட்டியலைத் தருகிறது “தமிழ்மரபு அறக்கட்டளை“யின் “சங்கம்பீடியா”!

 ‘அண்ணார்’ என்றால் ‘பகைவர்’ என்று பொருள்! இறந்தவரை அறிந்தவர், அன்னாரைப் ‘பழிவாங்க’ அண்ணார் என்று சொல்லலாம்!  

தேநீர் குடிப்பதா? சாப்பிடுவதா?

தேயிலை நீர் தேநீர். இதைத் தேனீர் என்பது சரியல்ல.  

தேநீரை, காப்பியை  குடிப்பதா? சாப்பிடுவதா? அருந்துவதா?

 “இடைப் பலகாரம் சாப்பிடுங்க” இது, செட்டிநாட்டு மக்களின் மாலைச் சிற்றுண்டியைக் குறிக்கும் அழகு தமிழ் அழைப்பு! இதுதான் சரியானது. பலவகை உணவுகளுக்கான பொதுச் சொல் சாப்பிடுவது.

உண்ணல், தின்னல், கடித்தல், குடித்தல், பருகுதல் உள்ளிட்ட ஏறத்தாழ 40 உணவருந்தும் சொற்கள் தமிழில் உள்ளன! ‘பர்கர்’, ‘பீசா’ என, செயற்கையைச் சாப்பிடுவோர் இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை!    

தேநீரில்தான் எத்தனை வகைகளைக் கண்டு பிடித்தனர் நம் கரோனாக் காலத் தமிழர்!  தமிழறிஞர் ஆ.இரா.வேங்கடாசலபதி “அந்தக் காலத்தில் காப்பி இல்லை” என்றொரு நூல் எழுதி வியக்க வைக்கிறார்! 

“டீ குடிக்கலாமா’க்கா?”, 

“டீ சாப்பிடலாமா சகோ?” 

“தேநீர் அருந்தலாமா நண்பா?” - 

--இவற்றை வாழ்நிலை வழக்கு என்றே ஏற்கலாம். 

----------------------------------------------------------------------  

நன்றி - இந்துதமிழ் நாளிதழ் - 26-12-2023 

(26-12-2023 செவ்வாய் 

பிற்பகல் 2-45மணிக்கு 

வெளியிடப் பட்டது) 

தமிழ் இனிது - 27

எது பெரும் பிழை?

ஆவண செய்வதா? – ஆவன செய்வதா?

          அரசு அலுவலரிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்து, ‘ஆவண’ செய்யுமாறு கேட்கிறார்கள். பதிலும் ‘ஆவண’ செய்வதாகவே வருகிறது! ‘ஆவணம்’ என்பதற்கு,  நிலையான பதிவு (Document) என்பது பொருள்!  

            ‘ஆவன’ என்பதே,  ‘ஆக வேண்டியன’ என்னும் பொருள்தரும் சொல். இதுபோலும் சொற்களைப் பற்றி, தமிழ் வளர்ச்சித் துறையினர், மாவட்டம் தோறும், ஆண்டுதோறும் அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி தருகிறார்கள். ஆனாலும், ஒப்பமிடும் அரசு உயர்அலுவலர் அதைப் பார்த்துத் திருத்தினால்தான் மற்றவர்களும் திருத்தமாக எழுதுவார்கள். இதைச் சரிசெய்ய, அரசு தான் ‘ஆவன’ செய்ய வேண்டும்.

ஆத்திச்சூடியா ஆத்திசூடியா?

            குழந்தைகளுக்கு எழுத்துகளை அறிமுகம் செய்வது, கல்வியின் தொடக்கம். ஔவையாரின் “ஆத்திசூடி“, புகழ் பெற்ற சிறுநூல். இந்த வடிவ நூல்கள் அவ்வப்போது தமிழில் வந்துகொண்டே இருக்கின்றன! (ஆத்திசூடியின் முதல்தொடர் –அறம்செய விரும்பு! அறத்தின் வடிவமான குழந்தைகளுக்கு, அறத்தைப் பற்றி விளக்க முடியுமா என்பது வேறு!)

ஆனால், இன்றைய இணையத் தமிழில், ஆத்திசூடி படும்பாடு, பெரும்பாடு!  ஆமாம்! பிறகு, “ஆத்திச்சூடி“ என்று எழுத்துப் பிழையோடு, கல்வி தொடங்கினால்?  அது விளங்குமா?

            ’ஆத்திச்சூடி’  செயலிகள்(Aaps) சிலவும்(!) இருக்கின்றன!  ’இன்ஸ்டா’,  ’யூட்யூப்’,  முகநூல், புலனம் போலும் இணைய ஊடகங்களில் ‘ஆத்திச்சூடி’ என்றே பலரும் எழுதுகிறார்கள்!  இதைப் பார்த்து, “இணையத்தில் தமிழ் ஔவையா! அடடா“ என்று மகிழ்வதா? “நான் எழுதிய ஆத்திசூடியை எழுத்துப் பிழையுடன் எழுதுகிறாயா?” என்று -கையில் கம்போடு- உருட்டி விழிக்கும் ஔவையைப் பார்த்து அஞ்சுவதா?!  

 “நன்மை கடைப்பிடி” என்னும் ஆத்திசூடிக்கு, “நல்லவற்றைப் பின்பற்று”  என்று பொருள். ஆனால் ‘விக்கிப்பீடியா’வில் “கடைபிடி” என்று உள்ளதைப் பார்த்தோ என்னவோ, நமது இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூலிலும் அவ்வாறே உள்ளது! இதற்கு, ‘கடையைப் பிடி’ என்று பொருளாகும்! விக்கிப்பீடியரும், பாடநூல் எழுதியவரும், அடுத்த முறை திருத்திவிட அன்போடு வேண்டுகிறேன்.  

வாய்ப்பாடும் வாய்பாடும்

‘வாய்பாடு’ வாயால் சொல்லிச் சொல்லி, மனப்பாடமாகக் கற்பது. கணித, அறிவியல், வாய்பாடுகளை  ஆங்கிலத்தில் ‘Formula’ என்பர். கணக்கு வகுப்பில், வாய்பாடு சொல்லத் தெரியாமல், வாங்கிய பிரம்படியை, எழுபது வயதிலும் மறக்காதவர் இன்றும் உண்டு!  

‘கணக்கி’ (Calculator) வந்தபின், ஐந்தையும் பதினொன்றையும் பெருக்க, கணக்கியைத் தேடுகிறாள் ஆறாம் வகுப்புக் கலைவாணி!  ‘மனப்பாடம் மட்டுமே கல்வியல்ல’ என்பது, எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, ‘மனப்பாடம் இல்லாமலும் கல்வியில்லை’ என்பதும்! இப்போது வாய்பாடு எனும் அந்தச் சொல்லும் ‘வாய்ப்பாடு’ என்று பிழையாகவே புழங்குகிறது! வாயால் இசைக்கப்படும் வாய்ப்பாட்டின் ‘பக்க –வாத்திய- விளைவாக’த்தான் வாய்ப்பாடு வந்திருக்குமோ?!   

பிழைத்திருத்தமா? பிழைதிருத்தமா?

            பேச்சில் பிழைநேர்ந்தால் ‘வாய்தவறி வந்துவிட்டது’ என்கிறோம். எழுத்தில் பிழை நேர்ந்தால், திருத்தம் செய்து கொள்கிறோம். கை /வாயின் வேகத்துக்கும் மன வேகத்துக்குமான இடைவெளியே எழுத்து /பேச்சில் நேரும் பிழை என்றும் சொல்லலாம். ஆனால், அந்தப் பிழையைத் திருத்த, முயற்சிகூடச் செய்யாமல் இருப்பதுதான் பெரும் பிழை!  

பிழையைத் திருத்திக் கொள்வதில் ‘பிழை திருத்தம்’ செய்வதில் பிழையில்லை!  

‘பிழைத்திருத்தம்’ என்று எழுதுவது தான் பெரும்பிழை!

--------------------------------- 

                 --------நன்றி - இந்து தமிழ் -19-12-2023)--------

                 (பதிவிட்டது - 19-12-2023 மாலை 5.45)

-------------------------  

தமிழ்இனிது-26

 

    அவனன்றி ஓரணுவும் அசையாது’  என்பது சரியா?

உயர்ந்துவிட்டதும், கூடிவிட்டதும்!

‘அந்தக் கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை ‘உயர்ந்து’ இந்தக் கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது’, என்கிறது செய்தி!  

‘உயர்ந்து’ என்பதன்  எதிர்ச்சொல்,  ‘தாழ்ந்து’ தானே? ‘குறைந்து’ விட்டதன்  எதிர்ச்சொல்  ‘கூடிவிட்டது’ தானே?

சாவில் ‘உயர்வு-தாழ்வு’ இருக்கிறதா என்ன!? எண்ணிக்கையைச் சொல்லும் போது கூடுதல், குறைதல் என்பதே தமிழ் மரபு. ஆனால் ‘உயர்ந்து’விட்டது என்று, சாவைக்கூட ‘உயர்த்திய சமத்துவர்’ யாரோ!?

எண்ணிக்கை  கூடியது /  குறைந்தது என்பதே சரியானது.     

சிலவும்  செலவும்

            சிலவா? செலவா? ‘வரவு சிலவுச் சிட்டை’ என்கிறார்களே!  

செல்-செல்வது-பயணம். இலங்கைப் பயணம் பற்றி திரு.வி.க. எழுதிய நூல்- “இலங்கைச் செலவு”.  

செல்-செலவு - செலவழிப்பது - பணம். ‘ஓரிடம் தனிலே, நிலை இல்லாதுலகினிலே உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே“ - உடுமலை நாராயண கவி சொன்னது எவ்வளவு உண்மை!  நிலையாக யாரிடமும் நின்று கொண்டே இருக்காமல் சென்றுகொண்டே இருப்பது செலவுதானே!

ஆக, செலவு என்பதே சரியான சொல். சிலவு என்பது, தவறாகப் புழங்கும் சொல். ‘அது எப்படிங்க, தவறான சொல் புழக்கத்தில் இவ்வளவு காலம் இருக்கும்?’என்று கேட்போர்க்கு ஒரு குறளும் ஒரு குறுங்கதையும்  : 

சிலர் மனிதரைப் போலவே இருப்பார்கள், ஆனால் மனிதர் அல்ல! “மக்களே போல்வர் கயவர்” என்னும் வள்ளுவர், மக்களைப் போலவே இருக்கும் கயவர்களின் ஒப்புமையை வியந்து எழுதுகிறார்! குறள்-1071.

சார்லி சாப்ளின் போல மாறுவேடம் போடும் போட்டியில் கலந்து கொண்ட உண்மையான சாப்ளினுக்கு இரண்டாம் பரிசு கிடைத்ததாம்! குறள் எவ்வளவு உண்மையானது! உண்மையை விட, பொய் அழகானது!   

அன்றியும் இன்றியும்

அன்றி-அல்லாமல், இன்றி- இல்லாமல்  என்று பொருள். கல்வியைக் கற்பது அன்றியும் வாழ்வில் அதன்படி நிற்பது நல்லது -குறள்-391. “குதிரை கீழே தள்ளியதன்றி, குழியும் பறித்ததாம்“ பழமொழி.

“அவனன்றி ஓரணுவும் அசையாது” என்பதும் தவறு! அறிவின்றி வேலை கிடைக்காது, அன்பின்றி வாழ முடியாது என,  இன்றி எனும் சொல்லே இன்றியமையாத தன்மையைக் குறிக்கும். தமிழ்ச் சொற்களைப் பொருளின்றிப் பயன்படுத்துவது, தவறன்றி வேறில்லை!   

திருவளர் செல்வன் – திருநிறை செல்வி

தமிழர் திருமண நிகழ்வு நுட்பங்களில் ஒன்று : திருமண விருந்தில் அல்லது  கையில் தரும் பையில் தேங்காய், பழம் /  நல்லதொரு நூலுடன், –கோவில் பட்டிக் கடலைஉருண்டை- போட்டுக் கொடுத்தால், ‘இவ்வீட்டில் இத்துடன் இனிப்பான மணநிகழ்வு நிறைவடைந்தது’ என்று பொருள்!  

இதே நுட்பம், திருமண அழைப்பிதழில் கூட  உண்டு! மணமகன்/ மணமகள் பெயருக்கு முன்னால் ‘திருவளர்’செல்வன்/செல்வி என்று போட்டால், “இந்த வீட்டில் இவரின் இளையோர் -திருமணத்துக்குக் காத்திருப்போர்- உண்டு” என்று பொருள்!  திரு வளர வாய்ப்புள்ளது!

திருநிறை செல்வன்/செல்வி என்றிருந்தால் “இவரே இந்த வீட்டுக் கடைக்குட்டி“ (இனிமேல் திருமணத்திற்கான காத்திருப்புப் பட்டியல் இவர்கள் வீட்டில் இல்லை)  என்று பொருள்!  திரு நிறைவடைந்தது!  

திருவளர்ச்செல்வன், திருநிறைச்செல்வி என்று, பிழைபடக் குறிப்பிடுவோர், இந்த நுட்பம் அறிந்தால் தமிழருடன் தமிழும் வாழும்!

-------------------------------------

 வெளியீட்டுக்கு நன்றி:

“இந்து தமிழ்” நாளிதழ் -12-12-2023 செவ்வாய்

பதிவிட்டது, 12-12-2023 இரவு-9.50

--------------------------------- 

இன்று கடந்து நாளைய தினம்

இந்த வலைப்பக்கத்தின்

பார்வையாளர் எண்ணிக்கை

ஒரு மில்லியன் (10,00,000) கடந்திருக்கும்

என்று நம்புகிறேன்.

12ஆண்டுகளின் சீரான வளர்ச்சி!

நன்றி நன்றி நன்றி 

நன்றி நன்றி

நண்பர்களே!

----------------------------- 


தமிழ் இனிது-25


(நன்றி - இந்து தமிழ் -05-12-'23)

சம்மந்தி – சம்பந்தி

திருமண உறவால் இரண்டு குடும்பங்கள் இணைவதே சம்பந்தம். புதிய உறவின் குடும்பத் தலைவர்கள் சம்பந்தி ஆகின்றனர். சமமான பந்தம் (உறவு)- சம பந்தம் - சம்பந்தம் ஆனது. ‘மருமகனின் / மருமகளின் பெற்றோர்“ எனும்  பொருள் தரும் சொல் இது. “சமன் செய்து“(குறள்-118), “சரிநிகர் சமானம்“-பாரதி, “சமச்சீர்க் கல்வி“ போல, சம்பந்தியும் –ஏற்றத் தாழ்வில்லாத- சமத்துவம் கருதிய சொல்லே.   

இரண்டு முழங்காலையும் சமமாக மடக்கி அமர்வது சம்மணம். (ச(ம்)மணர் இவ்வாறே அமர்வர்). பந்தி எனில் விருந்து வரிசை.  ஊரார் இதனை “கொண்டான் - கொடுத்தான்” என்றே சொல்கிறார்கள்!

கம்பு எனும் சிறுதானியக்
கூழ் -கம்பங்கூழ்- கம்மங்கூழ் ஆனது போல, ப,ம இனஎழுத்துகள் மயங்கி ஒலிக்கும் மயங்கொலிச் சொல்லே சம்மந்தி என்பது.  எனவே, சம்பந்தி சொல்லே பொருளோடு வாழட்டும்!  

அறுவெறுப்பும் –கண்றாவியும் !

அருவரு என்றால் வெறுத்து ஒதுக்குதல் என்று பொருள். அராவுதல்- அருவுதல். இன்னது என்னும் தெளிவு இல்லாமல், உடலை/மனத்தை (அ)ராவுதல் அருவுதல்- அருவருப்பு. கண்ணை வருத்தும் காட்சியை  கண்ணை (அ)ராவுதல் –உரசுதல் - கண்ணராவி என்போம்! (கண்றாவி அல்ல!) அருவருப்பாக உணர்தலை அருவருப்பு என்பதே சரி. என்ன தான்  வெறுப்பாக இருந்தாலும்,  அருவெறுப்பு என்பது பிழையான சொல்லே.

உடன்பாடும்  உடம்பாடும்

கூட்டணிக் கட்சிகளிடையே “உடன்பாடு ஏற்பட்டது” என்கிறார்கள்! இணையாத ஈரெழுத்துகள் இணைய, உடம்படு மெய் வரும் என்பது இலக்கணம். (நன்னூல்-162) உடம்படுத்தல் தான் சொல்!  

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை, குடங்கருள் பாம்போடு உடன் உறைந்த அற்று” (குறள்-890) என்கிறார் வள்ளுவர், ஆனால் இப்போது கடப்பாடு,  ஒருமைப்பாடு போல, உடன்பாடும் நிலைத்து விட்டது! நாமும் உடன்பாடு எனும் சொல்லோடு, உடன்பட வேண்டியதுதான்! 

நொடி வேறு, வினாடி வேறு!   

இயல்பாகக் கண் இமைக்கும் நேரமும், கைவிரலை நொடிக்கும்         -சொடுக்கும்- நேரமுமே ஒரு மாத்திரை எனும் கால அளவு என்பார் தொல்காப்பியர்  (‘கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை“- தொல்-07).கண்ணையும், விரலையும் எடுத்துக் காட்டாகச் சொன்னது ஏன் எனில், “காது கேளாதவர் புரிந்து கொள்ளக் கண் இமைப்பதையும், பார்வை அற்றவர் அறிந்து கொள்ளக் கை நொடித்தலையும் சொன்னார்” என்று திருச்சியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர், தமிழறிஞர் ஜோசப் விஜூ நயம்படச் சொல்வது சிறப்பு. ஆனால், தமிழ்க் கணக்கின்  அளவான         –அழகான?- நொடி என்பது இன்றைய உலகக் கணக்களவில் இல்லை!

நாழிகை பழந்தமிழ்க் கணக்கு. (அதனால்தான் “நாழியாச்சு” என்று பறக்கிறார்கள்!) தமிழ் எண்கள் மறைந்து, ரோம எண்களே வழக்கில் இருப்பதால் வணிகத்தில் இன்றியமையாத எண்களில் நொடிக் கணக்கு இப்போது வழக்கில் இல்லை!

60வினாடி ஒரு நிமிடம். ஒரு வினாடிக்கு 24நொடி! நொடியும்,  வினாடியும் வேறு வேறு!  வினாடி/விநாடி என்பன வடமொழி! நிமிட(minute) கணக்கை மணித்துளி என்கிறோம், நொடியை வினாடி என்கிறோம், அப்படித்தான் அகராதிகளும் சொல்கின்றன!  வாழ்க்கைக் கணக்கில், தமிழ்க் கணக்கு மாறியதை யார் அறிவார்?  

----------------------------------------------------------------------- 

தமிழ் இனிது-24 -நன்றி - இந்து தமிழ்

 

(நன்றி- இந்து தமிழ் நாளிதழ் - 2023, நவ.28 )

மேன்மேலும் தவறு செய்யாதீர்!

தவறாமல் – தவிராமல்

அழைப்பிதழில் “தவறாமல் வருகை தர” கேட்டுக் கொள்கிறார்கள்! “வருவதைத் தவிர்த்து விடாமல்- தவிர்க்காமல்- தவிராமல்-  வந்துவிட வேண்டுகிறோம்” என்னும் பொருளில்தான் “தவறாமல்” எனும் சொல்லில் அழைக்கிறார்கள்.  ஆனாலும் இது சரியான சொல் அன்று.

அழைப்பதை ஏற்று வருவதில் தவறு, தப்பு ஏதும் உள்ளதா என்ன? எனவே, தவிராமல் (அ) தவிர்க்காமல் வருகைதர அழைப்பதே சரி.

ஏற்கனவே – ஏற்கெனவே

            ஒரு திரைப்படத்தில் வரும் “எனக்கென ஏற்கெனவே பிறந்தவள்” வரிகளைக் கவிஞர் வைரமுத்து சரியாகவே எழுதி, பாடியவரும் சரியாகவே பாடியிருந்தும், இணையத்தில் வழக்கம்போல, ‘ஏற்கனவே’ (Erkanave) என்றே உள்ளது! மின்னூலாகவும் கிடைக்கும் ஒரு கவிதைத் தொகுப்பும், ஒரு நாவலும் கூட “ஏற்கனவே” என்றே வந்துள்ளன!

             இச்சொல், ‘க்ரியா’வின் ‘தற்காலத் தமிழ் அகராதி’யிலும் கூட (பக்256/அக்-2020) இடம் பெற்றுவிட்டது! ஆனால், ‘முன் சொன்னதற்கு ஏற்க-எனவே’எனும் பொருள்தரும் இதற்கு,  “ஏற்கெனவே” (முன்னதாகவே -Already ) என்பதுதான் சரியான பொருள் தரும் சொல்!  

மெள்ள – மெல்ல

‘மெல்ல - எனும் சொல், ‘மென்மை’ எனும் பண்பு குறித்த சொல்.  மெல்லிசை, மெல்லினம் போலும் சொற்களாக எழுத்து மொழியிலும், ‘மெல்லிசு’ போலப் பேச்சு வழக்கிலும்  வரும்.   

இதை ‘மெள்ள’ என்றும் சிலர் எழுதுகிறார்கள்!  ஆனால், ‘மெள்ள’ எனும் சொல்லுக்கு மென்மை என்றோ, மெதுவாக எனும் பொருளிலோ வேர்ச்சொல் ஏதும் இல்லை! கம்பரும் “அருந்தும் மெல் அடகு” என்னும் வரியில், லகர ஒற்றையே பயன் படுத்துகிறார்!

தமிழறிஞர் பலரை உருவாக்கிய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த தமிழறிஞர் நீ.கந்தசாமி அவர்களின் நூலை மேற்கோளிட்டு, ‘மெல்ல’ எனும் சொல், பழந்தமிழில் – மென்மை எனும் பொருளில் - வந்துள்ள சொற்களின் பட்டியலைத் தருகிறார் தமிழறிஞர் நா.கணேசன் (கூகுள்குழு உரையாடல்). அவர், “மெல்ல எனும் சொல்,  வழக்கில் ‘மெள்ள’ என மருவியிருக்கலாம்“ என்றும் சொல்கிறார்.   

இதுபோல “சங்கத் தமிழ் தேடு” செயலியில், “மெல்“ என இட்டால் சங்க இலக்கிய நூல்களில் மட்டும் 97இடங்களில் மென்மை பொருளில் வந்துள்ள பட்டியல் கிடைக்கிறது. ‘மெள்ள’ ஒன்று கூட இல்லை!  

எனவே ‘மெல்ல’ எனும் சொல்லே மென்மை, மெதுவாக எனும் பொருள்களில் வரும் சொல் என்றும், ‘மெள்ள’ எனும் சொல், வழக்கில் மருவி,  தவறாகப் புழங்குவதாகவும் கொள்ளலாம்.     

மேன்மேலும் தவறு செய்யாதீர்!

               தொடர்ந்து தவறு செய்பவரை, “மென்மேலும் தவறு செய்கிறார்” என்கிறார்கள். ஆனால்  அவர்போல இதுவும் தவறே! மேலும் மேலும் தவறு செய்வதை ‘மேன்மேலும்’ என்றுதான் சொல்ல முடியும்.

முதலில் வரும் மேல் எனும் சொல், மெல் என மாறுவது வழக்கில் நடக்கும் தவறு! இது எழுத்திலும் தொடர்வதோடு, பல அகரமுதலி (அகராதி)களிலும் ஏறிவிட்டதால் இதைப் பற்றிச் சொல்ல நேர்கிறது.

அன்புடன் வேண்டுகிறேன், ‘மேன்மேலும்’ என்னும் சொல்லை, ‘மென்மேலும்’ என்று எழுதி, மேலும் மேலும் தவறு செய்ய வேண்டாமே?!

------------------------------------------------------------------    

போட்டி முடிவுகளும், காரணங்களும்

கடந்த 6ஆண்டுகளாக நடந்துவரும் “தமிழ்த்தடாகம்” மின்னிதழ்க் குழுவினர் நடத்திய கவிதைப்போட்டிக்கு என்னை நடுவராக அறிவித்த

இதழாசிரியரும், பதிவுத்துறை உயர் அலுவலவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான 

கவிஞர் வடிவழகி அவர்கள் 

அன்பிற்கு எனது நன்றி

போட்டி முடிவுகளையும், கவிதைகளையும்

“இந்தக் கவிதை 

ஏன் தேர்வுபெற்றது 

/ஏன் பெறவில்லை” என்பதற்கான 

எனது குறிப்புகளுடன்

நமது வலைப்பக்க வாசகர்கள் காண

இங்குப் பதிவிடுகிறேன்

------------------------

கலந்து கொண்ட கவிஞர்களுக்கு என் வாழ்த்துகள்,

தேர்வுபெற்ற கவிஞர்களுக்கு என் பாராட்டுகள்,

கலந்துகொள்ளாதவர்க்கு என் அனுதாபங்கள்,

வாசகர்க்கு என் வணக்கம்.

-------------------------------------------------

முதலிடம் ஒருவர் 

பி.சாந்தி விஜயன், திண்டுக்கல்,

இரண்டாமிடம் இருவர்

1-சாமி கிரிஷ்

2-ப.சுபாஷ் சந்திர போஸ்

மூன்றாமிடம் மூவர்-

1.எம்.சோலை, அம்பத்தூர்

2.சிக்கத்தம்பூர் கரு.ஜெயக்கண்ணன்

3.வில்லூர்ப் பாரதி

ஆறுதல் பரிசுகள் –ஐவர்

1.மு.முபாரக்

2.சத்தியப் பிரியா, திருப்பூர்

3.பார்வதி பாலசுப்பிரமணியன்

4.விஸ்வநாதன் வள்ளிநாயகம், திருவொற்றியூர்.

5.கண்ணம்மாள் ஸ்ரீதர்

”என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்“ (20வரி)

கவிதைகள் பற்றிய எனது கருத்துகள் – நா.முத்துநிலவன்

(1) மு.முபாரக் கவிதை – கவிதை பற்றி

பரல்கள் எனும் சொல்லாட்சி அழகு

கோலர் எழுத்துப்பிழை கோலார் என வந்திருக்க வேண்டும்.

உணராது… உணரும்போது – நல்ல வரி

கடைசி மூன்று வரிகளும் சிறப்பு – ஆறுதல் பரிசு

-------------------------------------------------------

(2) வில்லூர்ப் பாரதி -  கவிதை பற்றி

எண்சீர் விருத்தப்பாக்கள் 3.  

கவிஞருக்குச் சில தகவல்கள்  

 1.எண்சீர்விருத்தம் ஒரு பா என்பது 4அடி கொண்டது, வரிக்கணக்கில் 8வரி ஆகும். (அடியை மடக்கிப் போடுவதால்) அப்படியெனில் 24வரி ஆகிறது! அளவை மீறியது..

2.மரபுப் பாவின் முதற்பாவில் 4ஆம் அடி (7ஆம் வரி)யில் “எங்குமுழவர்” என்பது “கூவிளங்கனி”வகைச் சீராகும். எண்சீர் விருத்தத்தில் காய்ச்சீர் விளச்சீர் மாச்சீர் மட்டுமே வருதல் வேண்டும் என்பது இலக்கணம்

3.“கமம்“ என்பது ஈழத்தமிழ் வழக்கு (வேளாண்மை) சிறப்பு.

மரபுக்கவிதை அழிந்துவரும் இக்காலத்தில் எளிய மரபு வளரவேண்டும் புதியசிந்தனைகளுடன் கூடிய, வகையுளி அற்ற, கடுஞ்சொல் அல்லாத மரபுக்கவிதை –பாரதி போல- வந்தால் தமிழுலகம் வரவேற்கும்.

இவர் கவனமாக எழுதினால் சிறப்பாக எழுதலாம் 

எனவே மூன்றாம் பரிசு!

-------------------------------------------------------------------------------

(3) சிக்கத்தம்பூர் கரு.ஜெயக்கண்ணன்  - கவிதை பற்றி

இறுதிச் சொற்களில் மரபு ஓசை –இயைபுத் தொடை-  சிறப்பு.

அறுசீர் ஓசை ஆங்காங்கே தெரியும் இனிய புதுக்கவிதை! சொற்புனை அளவில் கற்பனையும் கூடுதலாக இருந்திருந்தால் சிறந்திருக்கும்.

இவர் முயன்றால் இன்னும் சிறப்பாக எழுதலாம் – 

எனவே மூன்றாம் பரிசு

--------------------------------------------------------------------------------

(4) கவிஞர் எம்.சோலை அம்பத்தூர் -  கவிதை பற்றி

“ஏரிக்குள் வீடுகட்டி மழைவந்தால் மிதக்கிறான்“ வரி,

“அந்தக் கால இந்தக் கால“ மருத்துவம் ,

“ஆற்றின் கால்களை வெட்டி, அணைகள் கட்டி“

“எல்லா வளத்தையும் இங்கு சுயநலமே கெடுக்குது” - வரிகள் சிறப்பு

‘துபாய்கே“ எனும் சொல், “துபாய்க்கே“ என வந்திருக்க வேண்டும்.

முடிக்கும் வரிகளில் முத்தாய்ப்பான வரிகள் இருந்தால் இன்னும் சிறப்பு

இவர் முயன்றால் சிறப்பாக எழுதலாம் --

எனவே மூன்றாம் பரிசு

---------------------------------------------------------------------------

(5)சத்தியப் பிரியா திருப்பூர் – கவிதை பற்றி-

அழகான ஓட்டம், ஆனால் இலக்கியத் தமிழும் மரபு நடையும் பேச்சுத் தமிழும் கலந்து வந்தது, வடிவத் தெளிவின்றி கவிதையே கலவை யாகிவிட்டது.இலக்கியத் தமிழில் திடீரென்று “இருக்கு” என பேச்சுத் தமிழ் வந்தது குறை (தொடர்ந்து வந்திருந்தால் இது தோன்றியிருக்காது) கவிதைக்கான கற்பனை உள்ளது. எனவே, இக்கவிஞர் தொடர்ந்து முயன்றால் சிறப்பாக எழுத முடியும். 

எனவே ஆறுதல் பரிசு

------------------------------------------------------------------------

(6) பார்வதி பாலசுப்பிரமணியம் – கவிதை பற்றி –

“பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் நமதுசோறில் பங்கிருக்கு“

“சொந்தமின்னு சொல்லிக்கிட ஆடுமாடு கூடயிருக்கு” வரிகள் சிறப்பு.

வண்ணம் பூசா மேகம், நிலவுமடியில் ஊரும் பூமி – முதலான சொற்புனை நலம் அழகு! முடிப்பாக சிறப்பாக ஏதுமின்றித் தட்டையான முடிவு!

மரபுமின்றி புதுக்கவிதையாகவும் இன்றி இரண்டும் கலந்து விட்டது.

இந்தக் கவிஞர் முயன்றால் சிறப்பாக எழுதலாம் 

எனவே ஆறுதல் பரிசு

--------------------------------------------------------

(7) ச.சத்திய பானு கவிதை பற்றி

ஆர்வம் இருக்கும் அளவுக்கு உழைப்பும் தேவை. எழுத்துப் பிழை, ஒருமை பன்மைப் பிழைகள் கவிதையில் வரக்கூடாதல்லவா?

உரைநடையே கவிதையாகிவிடாது. அதற்கென்று உருவ அழகும் உள்ளடக்கச் சிறப்பும் அவசியம். கற்பனை உள்ளது கவிதை இல்லை.

பாரதி பாரதிதாசன் முதல் சிற்பி, மீரா என தமிழில் ஏராளமான                     காலத்தை வென்ற கவிகள் உண்டு! சங்க இலக்கியம் வேறு எந்த மொழியினர்க்கும் கிடைக்காத காலப்பெரும் சொத்து அல்லவா?

கவிஞர்களைப் படித்தால் கவிதை உறுதியாகப் படியும். முயல்க.

--------------------------------------------------------

(8) விஸ்வநாதன் வள்ளிநாயகம், திருவொற்றியூர்.

இடையிடையே சொற்களில் மரபு ஓசை –இயைபுத் தொடை-  சிறப்பு. சொற்களிலேயே கவனம் சென்றதால் பொருள் இரண்டாம் பட்சமாகத் தொடர்பற்ற வரிகள். எனினும் கவிதை ஓசை கைவந்திருக்கிறது  - எனவேதான் ஆறுதல் பரிசு.

----------------------------------------------------

(9) ப.சுபாஷ் சந்திர போஸ் – கவிதை பற்றி

சொல்லும் பொருளும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. அய்க்கூ போல சுருக்கமான சொற்களில் நல்ல சிந்தனைகள். தேர்ந்த சொல்லாட்சி.

எழுத்துப் பிழையும் சொற்பிழையும்  தவிர்க்க வேண்டும்

எனவே தான்  இரண்டாம் பரிசில் இரண்டாமிடம்.

இவர் முயன்றால் சிறந்த கவிஞராக வரலாம். வரவேண்டி வாழ்த்துகள்

-----------------------------------------------

(10) ரா.வெ.செல்வநாயகம் – நாமக்கல் – கவிதை பற்றி

வெறும் தகவல்களும், சொல்லடுக்கும் கவிதையாகாது. ஒரு நாற்காலி செய்யும் தொழிலாளி, அதற்காக உழைப்பைத் தந்து இழைப்பைத் தொடர்கிறான். உலகில் புழங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு திருத்தமான வடிவம் உண்டு! கவிதையும் அப்படித்தான். மரபோ புதுசோ அதற்கான வடிவத்தில் நச் சென்று இருக்கவேண்டும். உழைப்போடு கூடிய சிந்தனையையும் சேர்த்து எதிர்பார்க்கும். தொடர்ந்து முயல வாழ்த்துகள்.

-----------------------------------------

(11) கண்ணம்மாள் ஸ்ரீதர் – கவிதை பற்றி

கவிதை சிறப்பு, ஆனால் தொடச்சி தலைப்பை விட்டு விலகிவிட்டதே! பஞ்ச பூதங்களை அஞ்சறைப் பெட்டிக்குள் அடைக்காதீர் – சிறப்பானது. கடைசி வரிகளும் அருமை. ஆனாலும் தலைப்புக்கு நியாயமில்லாத வரிகளே மிகுதியும், எனவே ஆறுதல் பரிசில் ஐந்தாவது பரிசு.

-----------------------------------------------------------------

(12) பி.சாந்தி விஜயன், திண்டுக்கல் – கவிதை பற்றி

சொல்லழகும் பொருளழகும் சேர்ந்து, 

தலைப்பில் இணைந்து அளவாகவும் அழகாகவும் 

வந்திருக்கும் கவிதை.

“சுற்றும் பூமியை 

சற்றேநிறுத்தி                                                                                            

உற்றுப் பார்த்தேன் உலகப் பார்வையில்                                                                

ஓரிடத்தில் மட்டுமே உயிர்த்துடிப்புத் தெரிந்தது,                                                   

இதயமாய் இருந்தது இந்தியா!” எனும் 

உயிர்ப்பான தொடக்கம்!                  

(சற்றே மிகை என்றாலும் ‘கவிதைக்குப் பொய் அழகு’ எனும்போது மிகையைப் பற்றிக் கவலைப்படலாமோ?) 

சொல்லும் பொருளும் இணைந்த அழகு

மனத்தில் வந்து ‘பச்சக்’ என்று ஒட்டிக்கொண்டது!

“வலிகளும் கொஞ்சமில்லை நாட்டில்                                                                       

வாழ்க்கை விதியினை மாற்றிடுவர் கோட்டில்“

காப்பியங்கள் சொல்லும் வரலாற்றுப் படிமங்கள்   

கைகளில் தவழ்கிறது அகழாய்வுத் திடலில்” – என்ற தொடர்கள்!

இறுதி வரிகளில் சிறப்பான தலைப்புக்கேற்ற முடிப்பு!

சரியாக 20வரிகள்!                                                          

வீணான சொல் ஒன்று கூட இல்லை என்பது வெகுசிறப்பு!

எனவேதான் முதற்பரிசு! 

வாழ்த்துகள் கவிஞரே!

தொடர்ந்து எழுதிச் சிறந்த கவிஞராகப் புகழ்பெற

எனது இனிய வாழ்த்துகள்.

-----------------------------------------------

(13) சாமிகிரிஷ் –கவிதை பற்றி

நெஞ்சை அறுக்கும் வரிகள்! வரிகள் தோறும் விரியும் இந்தியப் பெருமையுள் கிடக்கும் சிறுமைகள்! இதுதானே உண்மை! சிந்தனையும் சொல்லழகும் பொருளழகும் இணைந்து கிடக்கும் அழகு! எனவே பரிசு!

என்ன.. ஓரிரு வரியில் சில பொருள். ஒரே வரியில் சில. நாலுவரியில் சில என்று வடிவத்துக்குள் உறுத்தும் வடிவம். 

எனவேதான் இரண்டாம் பரிசில் முதலிடம்!

தொடர்ந்து சிறப்பாக எழுதிச் சிறந்த கவிஞராகப் புகழ்பெற

எனது இனிய வாழ்த்துகள்.

-----------------------------------------------

(14) இந்திராணி மாரிமுத்து – கவிதை பற்றி

மரபு ‘போன்ற’ வடிவம் (நாற்சீர் வரியின் இறுதியில் தனிச் சொல் வருவது) ஆனால் மரபுக் கவிதைக்கான வேறு கூறுகள் ஏதுமில்லை. எழுத்துப் பிழை, வரிகளுக்கிடையே தொடர்பற்ற தொடர்ச்சி. உரைநடையே கவிதையல்ல!

தமிழின் வளமான மரபு, புதுக்கவிதைகளை ஆழ்ந்து பயின்று இக்கவிஞர் கவிதை படித்துப் படைக்க வேண்டுகிறேன்!

-----------------------------------------------

(15) கவிதைக்கான அழகோ சிந்தனையோ கற்பனையோ இல்லை. வார்த்தைகளை அடுக்கி வைப்பது கவிதை அல்லவே! தொடர்ச்சியான கவிதை சொல்லாலும் பொருளாலும் சொக்க வைக்க வேண்டும். எந்த முயற்சியும் இன்றி அப்படியே அனுப்ப அவசரப்படக் கூடாது. எழுதி முடித்த கவிஞர் அதன் பின் ஓர் இதழ் ஆசிரியராக “எடிட்“ செய்யவும் வேண்டும்.

------------------------------------------------

(16) சிட்டு கனகராசன் – கவிதை பற்றி

பனியில்லாத மார்கழியா எனும் கண்ணதாசன் திரைப்பாடலின் 

தாக்கத்தில் விளைந்ததோ? 

“அண்ணன் என்பவன் தம்பிக்கு மூத்தவன்,                                                        

திண்ணை என்பது தெருவின் உயர்ந்தது” என்பது போலும் தொடர்பற்ற “டி.ராஜேந்தர் பாணி” வரிகள்! இந்தக் கவிதையில் எதுகை மோனை அமைந்திருந்தாலும் அதுமட்டுமே கவிதை ஆகாதே

வரிகளில் கவித்துவத்தோடு வந்துவிழவேண்டும் சொற்கள்! எனவே..

இந்தக் கவிஞரின் ஆர்வத்தைப் பாராட்டி தமிழின் இனிய அரிய கற்பனை வளமும் சொற்புனை நலமும் சார்ந்த கவிதைகளைப் படித்து விடாமுயற்சி கொண்டு எழுதிப் பழக வேண்டுகிறேன்.

---------------------------------------------------------------

(17) .சுந்தரபாண்டியன் மதுரை

அழகான உரைநடை.  நல்ல சிந்தனை, நல்ல தொடர்ச்சி.

இவை மட்டுமே கவிதை யாகாதே!

“கவிதைக்குக் கற்பனை, காப்பிக்குக் காப்பிப் பொடிபோல அவசியம்! தண்ணீர் இல்லாமல் பாலிலேயே காப்பி போடலாம், பாலும் இல்லாமல் வறக்காப்பியும் பொடலாம். இனிப்பின்றிப் போடுவதுதான் இப்போது பாதுகாப்பு! எப்படியானாலும் காப்பித்தூள் இல்லாமல் எப்படிக் காப்பி போடுவது?” என்று கேட்பவர் என் மனம்கவர்ந்த கவிஞர் கந்தர்வன்.

கவிதைக்கு கற்பனையே அடிப்படை. என்பது அறிந்து இந்தக் கவிஞரின் முயற்சியைப் பாராட்டி, தமிழின் நல்ல கவிதைகளைப் படித்துப் படித்து தெளிந்து எழுத தொடர்ந்து முயல வேண்டுகிறேன்.

--------------------------------------------------------------- 

இனி 

போட்டிக்கு வந்த கவிதைளைத் தொகுத்து - 

“தமிழ்த்தடாகம்” மின்னிதழ் ஆசிரியர்

 கவிஞர் வடிவழகி அவர்கள் 

எனக்கனுப்பியிருந்த கவிதைகள்

------------------------------------------------------------------ 

 (1)

கொட்டிக்கிடக்கிறது முத்துக்களாய்

நெல்மணிகள்,

கண்ணுக்கெட்டிய தூரம் வரை

பரந்து கிடக்கிறது

கோதுமை பரல்கள்,

கடற்கரையெங்கும் நிரம்பிவழியும்

வெள்ளைத் தங்கங்கள்

பூத்துக்குலுங்குகிறது பல பல வண்ணங்களில் பூக்கள்

நட்சத்திரங்களாய்,

அடர்ந்த வனங்களை நினைவுபடுத்துகிறது கரும்புத்தோட்டங்கள்,

வாழ்வை மின்ன வைக்கிறது

கோல ர் தங்கங்கள்,

வற்றாது ஓடிக்கொண்டிருக்கிறது

கங்கையும் யமுனையும்,

அகிம்சையை உலகிற்கு தந்து

உயர்ந்து நிற்கிறது பொக்கிஷமாய்,

எத்தனை எத்தனை வளங்கள்

எங்கள் தேசத்தில்

அத்தனையும் வரங்கள் எங்கள் வாழ்வில்,

தேசம் விட்டு

உணராது ஒடுகின்றன சில மனங்கள்

உணரும் போது அவை வலி தரும் ரணங்கள்,

தாய்க்காக வாழும் தேசத்தில்

தாய்நாட்டுக்காக வாழும் போது

உயர்வோம் நாமும் நம் தேசமும்!

------------மு.முபாரக்

-------------------------------------------------------

(2)  மரபுபா எண்சீர் விருத்தம் (16 அடிகள்)

பொங்கிவரும் காவிரியாள் ஒடு கின்ற

          பொன்னாட்டின் புஞ்சைநிலம் செழிப்பி லோங்கும்/

சங்கமதன் மடிவளர்ந்த எங்கள் தாயாம்

          செந்தமிழாள் மொழிதுலங்கும் தேச மெங்கும்/

கங்கைவளம்காட்டுவளம் கனிம மெல்லாம்

          கொண்டிலங்கும் திருநாட்டில் என்ன இல்லை/

எங்குமுழவர் ஏரோடும் எங்கள் நாட்டில்

          என்றுமிங்கு பஞ்சமேனும் கண்ட   தில்லை./

 

மதியுடையார் பார்பிறந்த  தெங்கள் நாட்டில்

          மலையளவு தொழில்நுட்ப மாற்றத் தாலே/

அதியுயர்ந்த ஆய்வுகளால் புதுமை கொண்டே

          அபிவிருத்தி கண்டுவானும் தொட்டு வந்தார்/

பதியுறையும் பழமைமிகு கோவி லுண்டு

          பருத்திவளம் , பட்டுவளம் தொழிலும் உண்டு/

நிதிதருமாம் நெடுங்கடலும் குளமு முண்டு

          நீள்தென்னை , பனையோடு நெல்லு முண்டு/

 

கமத்தோடும் கடற்றொழிலும் சிறந்தே யோங்கும்

          கன்னலுடன் கனிதேனும் பண்ணை யுண்டு/

சமரோங்கும் வல்லரசின் வளர்ச்சி கண்டு

          சரியாத பொருளாதா ரத்தில் வென்று/

நிமிர்ந்தின்று நிற்குமெங்கள் நேச நாட்டில்

          நெஞ்சத்தில் துணிவுமிகும் இளைஞ ருண்டு/

நிமிர்ந்தபெரும் குன்றினிலே ஓடும் ஆறு

          நடந்துவரும் பாதையெலாம் பசுமை யோங்கும்./

 ------------வில்லூர்ப் பாரதி--------

------------------------------------------------------------------

(3)

இந்திய தேசம் எம்தேசம்!

இந்தியர் என்பதே சந்தோஷம்!

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?

ஏந்த வேண்டாம் நம்கையை

வெளிநாட்டில்!

 

உலகம் வியக்கும் நாடன்றோ?

உலகில் இதுபோல் நாடுண்டோ?

கலையோடு,இலக்கியம்,பண்பாடும்

காலமெல்லாம் சிறந்திட புகழ்பாடும்!

 

ஆயிரம் வேறுபாடுகள் ஆனபோதும்

அத்துணையும் ஒன்றுபடும் தேசம்!

தாயினும் சாலப்பரிந்திடும் மண்ணில்

தனிச்சிறப்போடு விளங்கும் நேசம்!

 

கனவோடு வாழ்கின்ற மனிதன்

நனவாக்கும் காலமொன்று வருமே!

கரைந்தோடும் வாழ்வின் பொழுதை

கரம்தந்து உயர்த்திடும் தினமே!

------------- சிக்கத்தம்பூர் கரு.ஜெயக்கண்ணன்சென்னை.

----------------------------------------------------------------------------

(4)

எல்லா வளமும் இருந்தும் நிறைவில்லாமல் இருக்குது

குறைகள் இதோ இங்கு வரிசை கட்டி நிற்குது

உழவு செழிக்காமல் உழவன் மட்டும் அழுகிறான்

வயிறு நிறையாமல் உழுதவனோ தவிக்கிறான்

நிலத்தைக் கூறு போட்டு வலியவனோ விற்கிறான்

ஏரிக்குள் வீடுகட்டி மழை வந்தால் மிதக்கிறான்

கல்விக்கு வண்ணம் பூசி கலர்கலராய் விற்கிறான்

காசாலே கல்வி முடித்து வெளிநாடு பறக்கிறான்

பணத்துக்கும் சாதி பிடிக்க ரூபாய் நோட்டு மேல் சாதி

யாசகமாய் போய் விழுகும் சில்லரைக்காசு கீழ் சாதி

அந்தக்கால மருத்துவரோ ஆறுதலை அனுசரிப்பார்

இந்தக்கால மருத்துவரோ பயமுறுத்தி பணம் பறிப்பார்

 

ஊரைக் காக்க கோவில் கட்டி வைத்தோம் இங்கே

கோவிலே கொள்ளை போனால் கடவுள் என்பவர் எங்கே?

துபாய்கே சவால்விடும் வெயில் காலம் இருந்தும்

குறைந்தபட்ச சோலார் விளக்கு கண்டு மனம் வருந்தும்

ஓடிவரும் ஆற்றுநீரின் கால்கள் அதனை வெட்டி

ஓடாமல் செய்துவிட்டார் குறுக்கே அணை கட்டி

எல்லா வளத்தையும் இங்கு சுயநலமே தடுக்குது

சிலராலே பொதுநலமும் கிடப்பில் தானே கிடக்குது.

----------------கவிஞர் எம்.சோலை, அம்பத்தூர்.

--------------------------------------------------------------------

(5)

வந்தாரை வாழவைக்கும்

    வளங்கள் கொண்ட திருநாடே//

காலைக் கதிரவனின்

       கதிர்கள்  மேம்பட //

கூவும் குயில்களின் ஓசையும்

        உள்ளமெல்லாம் மகிழ்ந்திடுதே //

பார்க்கும் வழியெல்லாம்

       பசுமை நிறைந்த கண்கூடே//

ஒய்யார நடையிலேயே

       ஒற்றுமையாய் வாழ்ந்தோமே //

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்

        விளைநிலங்களும் பயிராகுமே //

வளங்கள் பலவும்

      வகையாய் இருக்கு//

 

பெருகிவரும் நீராற்றல்

    பேரின்பம் கொண்டோமே//

அனைத்திற்கும் சமஉரிமையோடு 

     சமத்துவம் காத்தோமே //

நட்பு உறவினர்களுடன்

     ஆனந்தம் பகிர்ந்தோமே//

தொழில் துறையிலும்

     சாதனைகளை கண்டோமே //

அயல்நாட்டு  மோகமும்

        பணத்தின்.  தாக்கமும் //

இளைஞர்களை ஈர்த்ததால்

        என்னவோ தெரியவில்லை //

அழகிய திருநாட்டை

        விட்டு செல்கின்றனர் //

நம் உழைப்பை வைத்து

       மட்டுமே அந்நியன் ஆழ்கிறான்//

வாகை.  சூடவே

        வருவீர் இளைஞரே//

சிந்தியுங்கள் திருநாட்டை

        பேணிக் காப்பாற்றுங்கள்//

-----------------சந்தியப்பிரியா--திருப்பூர்

-------------------------------------------------------

(6)

பத்து உழவு மழைபெய்தாலும்  தேக்கி வைக்க இடமிருக்கு

பஞ்சம் பசிபோக்க விவசாய நிலம் இருக்கு

பண்டம் பாடி மேய்ச்சலுக்கு பாதையோரம் இடமிருக்கு

பக்கத்துவீட்டு குழந்தைக்கும் நமதுசோறில் பங்கிருக்கு

சொந்தமின்னு சொல்லிக்க ஆடுமாடு கூடயிருக்கு

ஆத்தங்கரை நிறைஞ்சு இருக்கு

வண்ணம்பூசா மேகம் வந்து ஓய்வெடுக்க

உயர்ந்து நிற்கும் மலையும் உண்டு

உலகத்தர விளையாட்டு மைதானமும் உண்டு

உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் உண்டு

ஏற்றுமதி நிறுவனங்கள் ஏராளம் இங்கே உண்டு

போக்குவரத்து நெரிசலோடு போய்வர‌ இடமும் உண்டு

சுற்றுலானு வந்துவிட்டா கண்ணை விட்டு அகலாத இடங்கள் உண்டு

வரலாற்று பெருமை சொல்லும் வடிவான சிற்பங்கள் உண்டு

விண்கல ஏவுதளம் இங்கே உண்டு

விதை சுமக்கும் பஞ்சாக விண்கலங்கள் சுமந்து செல்லும்

நிலவு மடியில் ஊர்ந்தபடி நிதமும் பூமியின் கதை சொல்லும்.!

--------------- பார்வதி பாலசுப்ரமணியம்.

---------------------------------------------------------------------------

(7)

எண்ணற்ற வளங்களை தன்னுள் வைத்திருக்கும் தேசமிது

பொங்கி வழியும் ஆறுகளினால் நிரம்பிய வழிகிறது நெல்மணிகள்

சிந்திய விழும் மழையினை அள்ளி சிரிக்கிறது மலைகளும் காடுகளும்

பெருகி வரும் மூலிகையால் நோய்கள் அனைத்தும் குறைந்து வருகிறது

புவியெங்கும் வண்ணமயமான காய்களும் கனிகளும் பொதிந்து கிடக்கிறது

எத்தனை எத்தனையோ தொழில்நுட்பத்தில் வளர்ந்து நிற்கிறது

உலகெங்கும் பறந்து விண்ணில் தடம் பதித்து காட்டுகிறது

பல்வேறு துறைகளிலும் பல உயரங்களை அடைகிறது

இத்தனை இத்தனை பெருமைகள் அனைத்து உனக்குண்டு அதை விட்டு அயலகம் செல்வது முறையன்று.... உழைத்து முன்னேறு நம் நாட்டில்

இனி எல்லாமே உயர்வு உன் வாழ்வில்....

--------------சத்தியபானு

------------------------------------------------------

(8)

அன்னவயல் ஆயிரமாம் ஆறுகளோ சீறிடுமாம்//1

பொன்விளைப் பூமியிது போகங்கள் ஆறாமே//2

மன்னராக மக்களுமே மகத்தான மாட்சிமையே//3

தென்னவராம் தமிழருமே திகழ்வாரே முன்னவராய்//4

முன்னோர் சென்றவழி முன்னேற்றம் காணவழி/.5

தன்னிகர் ஏதுமில்லா தவபூமி இந்தியாவே//6

கன்னியர் காளையர்கள் காட்டுகின்ற  திறத்தாலே/7

வென்றிடும் வேளையிது வியப்பில்லை பாரதமே//8

சின்னமெனப் பிரிந்தாலும் சிதறாத சிந்தையினால்//9

பின்னமின்றி வாழ்வோமே பிணக்குகள் பெரிதில்லை//

என்னுடைய நாடிதுவே ஏற்றமதே சிந்தனையே//11

அன்புகொண்ட அறத்தாலே அச்சமது தொலைப்போமே/

என்னஇல்லை வளநாட்டில் ஏனிந்தத்  தடுமாற்றம்//13

கன்னல்சுவைத் தேனிருக்க கசப்பினையே நாடுவரோ//

மன்றமதில் நின்றாடும் மாமனிதக் கூட்டமுண்டு//15

தென்றலாய்த் தெரிந்தாலும் தீவிரமாம் புயலுமுண்டே//16

துன்பமிகு வேளையிலே துடிக்கின்ற மனமுண்டு //17

தென்புலத்தார் வடவரென திசைக்காட்டிப் பிரித்தாலும்//18

தொன்மைமிகு பாரதத்தில் தோல்வியுறும் வேற்றுமை//

மென்மையான தன்மையது மேன்மையது தந்திடுமே//20

-------------விஸ்வ நாதன் வள்ளி நாயகம்/திருவொற்றியூர்

------------------------------------------------------------------------

(9)

கற்பூரம் நிகழ்த்தும் பதங்கமாதல் விதியை //

கண்டு களிக்க ஏங்குகிறது //

சமத்துவம் மறுத்து சாத்தப்பட்ட //

கருவறைகள் //

 

இளம் கிடாரிக் கறி சமைக்கும் //

சுதந்திரத்திற்கு காத்துக் கிடக்கின்றது//

எளியோர் வீட்டு அடுப்பங்கரைகள் //

 

ஏர் பிடித்த உழவனின்//

சொந்தமாகாத தெண்ணி வருந்துகிறது //

காணி நிலம் //

 

நெறிக்கப்பட்ட குரல்வளைகளின் //

பிடித்தளர்த்த தவிக்கிறது //

உழைத்த களைப்புக்கு போதாத ஊதியம் //

 

பசி தாங்கிய வயிர்களோடு //

சாலையோரத்தில் பூத்துக் கிடக்கின்றன //

நாளைய சாதனை சமூகம் //

நெருங்கி வா நீதியே ...//

 

எல்லோருக்கும் எல்லாம் வாய்ப்பதற்கு //

என்னதான் வளமில்லை //

இந்தத் திருநாட்டில்.//

 -------------.சுபாஷ் சந்திர போஸ்.

---------------------------------------------------------------

(10)

மண்வளம் கண்டோம்

வற்றாத நதிகளை கண்டோம்

விளைபொருள் கண்டோம்

மக்கள் வளம் கண்டோம்

மொழிவளம் கண்டோம்

கலாச்சாரம் கண்டோம்

இயற்கை வளம் கண்டோம்

கனிம வளம் கண்டோம்

கல்வி வளம் கண்டோம்

தொழில் வளம் கண்டோம்

விஞ்ஞானம் கண்டோம்

புதிய இந்தியா கண்டோம்

கண்டம் விட்டு கண்டோம்

அறிவிவை விற்க கண்டோம்

புதிய பரிமாற்றம் காண்போம்

இந்தியனாய் தலைநிமிர்வோம்

 ---------- ரா.வெ.செல்வநாயகம் நாமக்கல்

---------------------------------------------------------

(11)

மனித வளம்  புனிதர் வளம்

கனிம வளம்  காடு வளம்

எண்ணெய் வளம் நீர் வளம்

எல்லாமும் எல்லோருக்கும்..

 

முக்காலப் பிறவிகளுக்கான

மொத்த சுத்தப் படைப்பு..

 

 பற்றற்ற  பயனாளியாய்

பல்லக்கு நாளில்

 ஊரான் சொத்தென 

உதறிப் பிரிந்தால்,

இல்லையென்பதில்லை. ..

 

வெறுங்கை  வருகை

விரித்த கை விடைபெற...

 

அத்தனைக்கும் ஆசைப்பட

முற்றுமில்லை முகாந்திரம்..

 

பஞ்ச பூதங்களை அஞ்சறைப் பெட்டிக்குள்  அடைக்காதீர்...

 

பிரபஞ்ச நீரோட்டப் பிரயாணிகளே..

கண்ணியத்திற்குக்  கட்டுப்பட்டுக் கரைகளை சேதப்படுத்தா

 கப்பல் பயணமாக இருக்கட்டுமே!

 ---------- கண்ணம்மாள் ஸ்ரீதர்

-------------------------------------------------------

(12)

சுற்றும் பூமியை சற்றே நிறுத்தி

உற்றுப் பார்த்தேன் உலகப் பார்வையில்

ஓரிடத்தில் மட்டுமே உயிர்த்துடிப்பு தெரிந்தது

இதயமாய் இருந்தது தான் இந்தியா...

 

அங்கே குடும்பமே உயிர் நாடி

அனைவர் கூடியிருத்தலே கொள்கை விதி

மொழிகளுக்குப் பஞ்ச மில்லை இங்கே

மொழிந்தவர் கண் துஞ்சவில்லை என்றும்...

 

வேற்றுமையில் ஒற்றுமையெனும் வேருக்குள் ஊடுருவி

வடக்குமுதல் தெற்குவரை வலைபின்னிக் கிடக்கிறது

வலிகளும் கொஞ்சம் இல்லை நாட்டில்

வாழ்க்கை விதியினை மாற்றிடுவர் கோட்டில்...

 

காடுகள் மலைகள் கடல்கள் நதிகளுக்குள்

கரைந்தோடித் தெரிகிறது தலைவர்களின் முகங்கள்

காப்பியங்கள் சொல்லும் வரலாற்றுப் படிமங்கள்

கைகளில் தவழ்கிறது அகழ்வாய்வுத் திடலில்...

 

இயந்திரத் தனமாய் இயங்கிடும்  மனிதா

இமைகளை மூடித் தன்பலம் உணர்வீர்

ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?

என்ன வளம்தான் இல்லை இந்த திருநாட்டில்....

---------- பிசாந்தி விஜயன்  திண்டுக்கல்.

------------------------------------------------------------------------------

(13)

ஈயென மொய்க்கிறது

இளைஞர் வளம்

வேலை தேடி

 

மலிந்து கிடக்கிறது சாதி மலம்

மனிதம் நாடி

 

வீடுதோறும்

நிரம்பி வழிகிறது பெண்ணடிமை

 

ஆறாக ஓடுகிறது மணல் கொள்ளை

 

பற்றாக்குறையே இல்லா

பாலியல் தொல்லை

 

உச்சாணிக்கொம்பிலேறி உட்கார்ந்திருக்கும்

எரிபொருள் விலை

 

வாரந்தோறும் வந்து வதியழியும்

வண்ணத் திரைப்படங்கள்

 

எக்கச்சக்கமாய் ஏற்றத்தாழ்வு

மலை மலையாய்

கனிம வளத் திருட்டு

கணக்கு வழக்கில்லா

கருப்பு பண பதுக்கல்

ஈடில்லா இயற்கையழிப்பு

அளவில்லா ஆக்கிரமிப்பு

கண்டமேனிக்கு காடழிப்பு

வண்டை வண்டையாய்

வரலாற்றுப் புழுகு

 

என்ன வளம் இல்லை

இந்தத் திருநாட்டில்

குரல் நாண் வலிக்க பாடிடுவோம்

இன்னும் ஒருவாட்டி

 -------------- சாமி கிரிஷ், கறம்பக்குடி

------------------------------------------

(14)

பாடும் வானம்பாடி நானே_வானில்

கானம் பாடித் திரிந்தேனே _பாரத

நாட்டு வளத்தை பாடி களித்தேனே!

அன்னை மடியைக் கண்டேன் _அவள்

அள்ளி அள்ளி கொடுக்கக் கண்டேனே!

காடும் மலையும் கண்டேன் -கனிந்த

நல் வரப்பும் உயரக் கண்டேனே!

 

ஆடும் மயிலும் கண்டேன் _ஆங்கே

அல்லி மலர்த் தடாகம் கண்டேனே!

கடலில் கயலைக் கண்டேன் _ஆழ்

கடலில் முத்து குளிக்கவும் கண்டேனே!.

கடலிடை கப்பல் கண்டேன் -திரை

கடலோரம் கலங்கரை விளக்கமும் கண்டேனே!.

பட்டும் நாணக் கண்டேன் _பசுமை

போர்த்திய பூமியின் அழகைக் கண்டேனே!

தேடிய இடமெலாம் வளமாய்க் கண்டேன் _தோண்டிய

இடமெங்கும் கனிமங்கள் நிறையக் கண்டேனே!.

எட்டுத்திசையும் பண்மொழி கண்டேன் -பண்

மொழி புலமை கண்டு இரசித்தேனே!.

ஏடும் எழுத்தாணியும் கண்டேன் -ஆங்கே

எண்ணிலடங்கா நூல்கள் இருக்கக் கண்டேனே!

நாடெங்கும் கணினி கண்டேன் -காற்றை

தாங்கி உலகை அளப்பதைக் கண்டேனே!

வட்ட நிலாவைக் கண்டேன் -எட்டிப்

பிடித்த அறிஞனின் ஆற்றலைக் கண்டேனே !

வளமான இந்தியாவைக் கண்டேன் -உழவே

வாழ்வுக்கும் வளத்திற்கும் அச்சாணி என்பேனே!

------------.இந்திராணி மாரிமுத்து.

---------------------------------------------------------------

(15)

வளங்கள் பெருக்கம் இயற்கையின்  கொடையே/

இறைவனின் படைப்பில் நமக்கு மிகுதியாய்/

மண் பொன் ஆறு ஏரி/

நாற்புறம் கடலும் நம்மை காக்கிறதே/

பாலைவனமும் ஓட்டகமும் நடுவிலும் தோற்றமே/

மலையும் வானுயர்ந்து அரணாய் துணையோடு/

எதிரிக்கு நுழைய இடமின்றி சுவராய்/

மக்களை பாதுகாக்கும் பொருளாய் பொறுப்பில்/

அந்நியரை எதிர்ப்பதில் முதன்மை முதலிடமே/

பொருளுக்கு நடத்த போர்கள் ஏராளம்/

பெண்ணுக்கும் போரிடல் நடந்தது அன்று/

இன்று விண்ணில் பாயும் விண்கலங்கள்/

ஆக்கத்திற்கும் வசிக்க ஆராய்ச்சி மேற்கொள்ள/

சுரண்டல் ஒழிந்தால் வாழ்வு மேம்படும்/

வசதிகள் பலவிருந்தும் விவசாயம் குருகியது/

விளைநிலங்கள் அழிவு கட்டிடங்கள் உயர்வு/

ஏனிந்த இழிநிலை யார் காரணம்/

மக்களின்  அறிவுப்பெருக்கம் வாழ்வுநிலை மாற்றம்/

படிப்பும் வேலையும் தகுதிக்கேற்ப வேறுப்படல்/

உழைப்பும் ஊதியமும் சரியானால் வெற்றியே/

-------------எழுதியவர் யார் என்ற குறிப்பு இல்லை

--------------------------------------------------------------

(17)

என்ன வளம் இல்லை என்று எம் மக்கள்

அன்னை மண் விட்டு அயலகத்தை நாடுகிறார்

சொல்லித் தெரியவேண்டுமா

சொந்த மண்ணின் சொர்க்க வளங்களை

அன்று தொட்டு இன்றுவரை பெருமை கொள்ளத் தக்க பல நூறு வரலாறை கொண்டதுதான் இந்த பூமி தெரிந்து கொள்ளுங்கள் சிந்து சமவெளி நாகரிகம் கண்டு சொன்னதற்கு முந்தியதாய் விளங்கியது கீழடியில் கண்ட வைகை நதி நாகரிகம் வந்து பாருங்கள்

வள்ளுவனும் கம்பனும் இளங்கோவடிகளும் தெள்ளு தமிழ் காவியங்கள் படைத்துச் சென்றார் கல்தோன்றி மன் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்குடியாம் முதற் சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமைக் குரிய தமிழர்கள் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என முத்தமிழை கொண்டு இறுமாந்திருந்த இன்பத் தமிழ் நாடு

இயற்கை எழில் கொஞ்சும் எத்தனையோ இன்பச் சுற்றுலா மையம் இங்குண்டு அறிவியல் ஆராய்ச்சி ஆகாயம் தாண்டி வேற்றுக்கிரகமும் விரைந்து சென்று வருகின்றார் கணினியும் கைபேசியும் தொலைக்காட்சிப் பெட்டியும் இன்ன பிற இலகுவான இல்லப் பொருட்களும் வாகண வகைகளும் இங்கே நாம் தயாரித்து ஏற்றுமதியும் செய்கின்றோம்இதற்கும் மேலாக எண்ண வேண்டும் தமிழா இங்கிருந்து பாடுபடு இமயம் என உயர்ந்திடுவாய்

---------------ஆ.சுந்தரபாண்டியன் மதுரை

-------------------------------------------------------- 

“தமிழ்த் தடாகம்”

மின்னிதழ்க் குழுமம் 

குறுங்குறி (QR-Code) :

“தமிழ்த் தடாகம்” முகநூலில் இணைய-
------------------------------------ 

போட்டியைத் நடத்திய “தமிழ்த்தடாகம்” ஆசிரியர்

கவிஞர் வடிவழகி அவர்களுக்கு எனது வணக்கமும்

கலந்து கொள்ளத் தவறியவர்களுக்கு எனது அனுதாபமும்.

வாசகர்களுக்கு எனது நன்றியும் வணக்கமும்.