தமிழ் இனிது -47 நன்றி - இந்து தமிழ் - 14-5-2024

நிறுத்தக் குறிகளைத் தின்னும் புதிய மொழி!

துணையெழுத்துகள்

அனைத்து மொழிகளும் அ எழுத்தையே முதன்மையாக உடையன. வாயைத் திறந்ததும் வரும் எழுத்து என்பதுதான் காரணம்.  அ,இ,உ,எ,ஒ என்பன உயிரெழுத்தில் முதன்மை எழுத்துகள். ஆ,ஈ,ஊ,ஏ,ஓ, என்பன –முதன்மை எழுத்து நீள்வதால் வரும்- நெடில் எழுத்துகள். ஐ,ஔ, என்பவற்றைக் கூர்ந்து பார்த்தால் இவை கூட்டெழுத்து என்பதும் புரியும்.

எழுத்துகளின் வரிவடிவம் மாறி மாறி வந்துள்ளதால்,  இக்காலத் துணையெழுத்துகளின் பெயரைத் தெரிந்து கொள்வது அவசியம் :

அம்மா – இதில் அ எழுத்து முதன்மை வடிவம். ம் மெய்யெழுத்து. மா எழுத்தில் ம முதன்மை வடிவம், அடுத்துள்ள  கால் துணையெழுத்து.

துணைக்கால் – கா,சா

கொம்புக்கால் – கௌ,சௌ

பிறைச்சுழி – ஆ


ஒற்றைக் கொம்பு – கெ, தெ

இரட்டைக் கொம்பு – பே, வே

இணைக்கொம்பு – பை, வை

 

வளை கீற்று -   கூ,

சாய்வுக் கீற்று – ஏ

இறங்கு கீற்று – பு,சு

இறக்கு கீற்று கீழ் விலங்குச் சுழி – சூ,பூ

 

கீழ் விலங்கு – மு,கு

கீழ் விலங்குச் சுழி – மூ,ரூ

மேல்விலங்கு – கி,தி

மேல் விலங்குச் சுழி – கீ,சீ

மடக்கு ஏறு கீற்றுக் கால் – நூ,னூ,றூ

முதலான எழுத்துகளைக் கொண்டு, கண்டு தெளிக.

நிறுத்தக் குறிகள்

எழுத்தைப் புரிந்துகொள்ள துணையெழுத்துப் போல, தொடரைப் புரிந்து கொள்ள  நிறுத்தக் குறிகளை அறிவதும் அவசியம். இதற்கு, பல்வேறு நடைகளைக் கொண்ட கட்டுரை, கவிதை, சிறுகதைகளைப் படித்துப் பார்த்துத் தெளிவதே சரியான வழி. மற்றபடி நிறுத்தக் குறிகளைப் பற்றிக் கவலை கொண்டு, சொல்லவரும் சிந்தனையில் தடம் மாறிவிடவும், தேவையற்ற இடங்களில் போட்டுக் குழப்பி விடவும் கூடாது.

நிறுத்தக் குறிகள் (Punctuation Marks) ஆங்கில வழி வரவு என்பதால் ஆங்கில வழக்குடன் சேர்த்துப் புரிந்து,  பயன்படுத்துவது எளிது –  இவை ஏராளமாக உள்ளன. முக்கியமானவற்றை மட்டும்  பார்ப்போம் : இதில் சந்தேகம் வந்தால் நம் ஜி.எஸ்.எஸ்.அய்யாவிடம் கேட்டு அறிவோம்.

Comma  ( , )  கால் புள்ளி  - மொழி, கணக்கு, அறிவியல் ஆகிய பாடங்கள்.

Semicolon  ( ; )  அரைப் புள்ளி  - அறிஞர் தான்; சமூகப் பொறுப்பில்லையே!

Colon  ( : ) முக்கால் புள்ளி / வரலாற்றுக் குறி – பின்வருமாறு:

Full Stop  ( . ) முற்றுப்புள்ளி. முடிந்தது.

Excalamation  ( ! ) உணர்ச்சிக் குறி  - அடடா, என்ன சிந்தனை! (பல்வேறு உணர்ச்சிகளைக் காட்டுவதால், ஆச்சரிய/வியப்புக் குறி என்பது தவறு)  

ஆங்கிலத்தில் Teachers’  என்றால் ‘ஆசிரியர் பலரின்’ என்பது பொருள். Teacher’s எனில் ‘ஆசிரியர் ஒருவரின்’ என்று பொருள்.  I am என்பதை  I’m என்று எழுதுவது போல, ஒற்றை மேற்கோள் குறி இட்டு, சரி’ம்மா எனில், “சரி அம்மா“ என்பதன் சுருக்கமாகப் புதியன புகுந்துள்ளது.

தமிழில் மட்டுமல்ல, உலகத்தின் பற்பல மொழிகளின் நிறுத்தக் குறிகளை படக்குறிகள் (இமோஜி) எனும் புதிய மொழி தின்று வருகிறது! வலுத்தது நிலைக்கும்! தமிழுக்கு வலிமை சேர்ப்பது நம் காலக் கடன்.  

-----------------------------------------------

‘தமிழ் இனிது’ தொடர் நிறைவடைகிறது, ---நண்பர்களுக்கு எனது வேண்டுகோள்!

 அன்பினிய உங்களுக்கு என் தோழமை வணக்கம்.

வாராவாரம் ஆரவாரமாக இல்லாவிட்டாலும் நமது “தமிழ்இனிது” தொடர்பான அவசியமான கருத்துகளை எனக்குத் தெரிவித்து வந்த நண்பர்களுக்கும், கருத்துத் தெரிவிக்கா விட்டாலும் தொடர்ந்து படித்து வந்தவர்களுக்கும்  ஒரு செய்தி :

“தமிழ்இனிது“ தொடர் விரைவில் நிறைவடைகிறது! தொடரை வெளியிட்ட “இந்து-தமிழ்“ நாளிதழ் நிறுவனமே, இதே பெயரில் நூலாக்கி வெளியிட உள்ளனர். ஜூன்-4ஆம் தேதி 50ஆவது கட்டுரை வெளிவந்த பின் ஜூன் மாதமே அச்சிட்டுத் தருவதாகச் சொல்லியிருக்கின்றனர்! (ஜூலை முதல்வாரம் FeTNA அழைப்பை ஏற்று நான் அமெரிக்கா போகும்போது எடுத்துச் செல்ல விருப்பம்!)

இன்று - 07-5-2024 செவ்வாய் - 46ஆவது கட்டுரை வந்துள்ளது. அடுத்த கட்டுரையை அனுப்பிய பின்னரே முந்திய கட்டுரையை எனது வலையில் ஏற்றுவது எனும் என் வழக்கத்தின்படி 47ஆவது கட்டுரையை இன்று முற்பகல் அனுப்பிவிட்டேன். அந்த வகையில் -

இன்னும் 3கட்டுரை எழுதி அனுப்ப வேண்டியுள்ளது.

இதுவரை எழுதியதில் விடுபட்ட, வெளிவர வேண்டும் என்று நினைக்கின்ற, நிறைவாகச் சொல்ல வேண்டிய, நடைமுறைச் சொற்கள் அல்லது தமிழ் தொடர்பான குறிப்புகளை நண்பர்கள் அனுப்பலாம்.  

தமிழ் இனிது – 06-06-2023- முதல் கட்டுரையிலேயே தமிழ் ஒரு ஜனநாயக மொழி என்று எழுதியிருந்தேன். அதன்படி ஜனநாயகத் தமிழ்க் கருத்துகளை வரவேற்கிறேன். எனது எண் கீழுள்ளது.

நன்றி

அன்புடன்,

நா.முத்துநிலவன்,

புதுக்கோட்டை.

எனது புலன எண்-94431 93293

---------------------------------------------------------- 

(நன்றி - இந்து தமிழ் நாளிதழ் - 07-5-2024)

“விடுமுறை“க்கு விண்ணப்பிக்கலாமா?

விடுமுறையும் விடுப்பும் -

அரசு (அ) தனியார் நிறுவனம் முறையாக அறிவிப்பது விடுமுறை. விதிகளின் படி, தனது தேவைக்கு விண்ணப்பம் செய்வது விடுப்பு. விடுப்பு வேண்டுவோர், ‘விடுப்பு விண்ணப்பம்’ என்று எழுதுவதே சரி. “விடுமுறை விண்ணப்பம்“ என்று எழுதுவது தவறு. ஒருவரின், தனித் தேவைக்காக, அனைவருக்கும் விடுமுறை விடச் சொல்வது நியாயமாரே?

எதார்த்தமும் இயல்பும் -

            எதையும் ‘இயல்பாக’ ‘உண்மையாக’ எழுதுவதை, தமிழ் இயல்புக்கு மாறாக “எதார்த்தம்” என்கிறார்கள்! “எதார்த்தமாச் சொன்னதப் பிரிச்சி, பதார்த்தம் பார்த்துச் சண்டைக்கு வரலாமா?” என்று, பேச்சிலும் இது புகுந்துவிட்டது. இதில் தமிழ் மரபின்படி வரக்கூடிய எ எழுத்தையும் விட்டு, ‘யதார்த்தம்’ என்றே எழுதும் ‘இலக்கிய அறிவு ஜீவி’களும் உண்டு!

பெயர் சொல்லும் தமிழ் மரபு -

            தமிழறிஞர் திரு.வி.க. வில் உள்ள திரு என்னும் சொல்லைப் பலரும் மரியாதைக்கானது என்று நினைத்துக் கொள்கிறார்கள்! ஆனால் உண்மையில் ‘திருவாரூர் விருத்தாசலனார் மகன் லியாணசுந்தரன்’ என்பதே ‘திரு.வி.க.’வின் விரிவு ‘சிறுப்பிட்டி வைரவநாதர் தாமோதரன்’ என்பது ‘சி.வை.தா.’வின் விரிவு! இவர், தமிழ் ஏட்டுச் சுவடிகளை அச்சுப் பதிப்பதில்  புகழ்பெற்ற உ.வே.சா. அவர்களுக்கும் முன்னோடியானவர்!

சங்க இலக்கியத்தில் ஏறத்தாழ இருநூறு பெயர்களைப் பட்டியல் போடுகிறார் பேரா.ந.சஞ்சீவி. கோவூர் கிழார்,  ஒக்கூர் மாசாத்தியார், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் - தந்தைக்கும் ஊருக்கும் தொழிலுக்கும் பெருமை சேர்த்த பேராண்மை புலவர்களின் பெயர்கள்! (“சங்க இலக்கிய ஆய்வும் அட்டவணையும்“ – ந.சஞ்சீவி. தொகுப்பு – பேரா.காவ்யா சண்முக சுந்தரம்-2010)

இடைக்காலத்தில் சாதிப்பெயர்கள் பின்னொட்டாக வந்தன. இதை எதிர்த்து, சாதிப் பெயர்களைத் தன் பெயரில் போட்டுக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற பெரியாரின் -1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுத் தீர்மான- வேண்டுகோளை ஏற்று, திராவிடச் சிந்தனையாளர் பலரும் சாதிப் பெயர்களை விட்டனர். இப்போது தமிழர் பலரும் சாதிப் பெயரின்றித் தம் பெயரைக் குறிப்பிடுவது பொதுத் தன்மையானது. வட இந்திய, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், திரைத்துறைக்  கலைஞர், விளையாட்டு வீரர் பெயர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும்.

சாதிப் பின்னொட்டை விட்டபின், தந்தை பெயரின் முதல் எழுத்தை மட்டுமே முன்னெழுத்தாக(initial) இட்டனர். 1994இல் முதல்வராக இருந்த ஜெயலலிதா அரசாணை வெளியிட்டும் புழக்கத்தில் வராததைக் கண்டு 2003இல் முதல்வராக இருந்த கலைஞர்  அரசாணை வழி மீண்டும் வற்புறுத்த, இப்போது, தாயின் முதல் எழுத்தையும் சேர்த்துத்  தமிழர்கள் எழுதி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தச் சமத்துவத் தமிழ்ப்பெயர் மரபைப்  பிறநாட்டினரும் பெருமையுடன் பின்பற்றலாம்!  

தடையில்லாச் சான்றும், தடையின்மைச் சான்றும்

         அரசு வழங்கும் ‘தடையில்லாச் சான்று’ (No Objection Certificate- NOC) பற்றி அறிந்திருக்கலாம். இதைத் ‘தடையின்மைச் சான்று’ என்பதே சரியானது. இல்லாத தடையை இருப்பதாகச் சொல்லி அதற்குத் தடையில்லை என்பது சரியானதல்லவே! அரசு விளம்பரங்களில் சரியாக வந்தாலும் ‘ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு நிரந்தரமாகக் கொண்டு செல்லப்படும் வாகனங்களுக்குபடிவம் 28இல் தடையில்லாச் சான்றிதழ்  தேவை’  என்பது போலும் சிலவற்றை,  அரசும்    மக்களும்  மாற்றியமைக்க வேண்டும்.   

--------------------------------------------------------------