எதை எழுத?

                 “கற்பும் கற்பழிப்பும்“ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுத உட்கார்ந்தேன். தகவல்களுக்கான தரவுகளைப் புரட்டியபோது, மனம் கனத்துப் போனது. இந்தியாவில், தமிழகத்தில் உலகளவில் பெண்களுக்கு நாம் (ஆண்கள்) இழைத்து வரும் கொடுமைக்கு அளவோ வகைதொகையோ இல்லை. “மங்கையாராகப் பிறப்பதற்கே மாது-அவம்(பாவம்) செய்ய வேண்டுமம்மா” என்று இதைத்தான் பாடினாரோ கவிஞர்?
                   10ஆண்டுகளுக்கு முன், பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாசுகி எடுத்த குறும்படம்தான் நினைவிலாடுகிறது. அதில் மனைவியின் அன்றாட வேலைப்பளுவைத் தெரியாத கணவன் ஒருவன் எலியாக மாறி அவன் வீட்டிலேயே கிடந்து தன் மனைவி படும் ஒருநாள் வேலைப்பளுவைப் பார்த்து மனம் நொந்து போவான்.... இதைப் பின்னர் நாங்கள் அறிவொளி இயக்கத்திற்காகத் தயாரித்த “கண்ணுக்குத் தெரியாத உழைப்பு” (Un Seen Toil) எனும் நாடகத்தில் பிரதிபலித்தோம். அப்போது நான் எழுதிய பாடல்தான் -
                   மனித ஜாதியில் பாதியானவள் மகாசக்தி பெண்ணே
                   விடியும் காலமிது அடிமையாக இனி வீழ்ந்து கிடப்பதென்னே” எனும் பாடல் இதில் வரும் இரண்டு வரிகள் எனக்கே மிகவும் பிடிக்கும் -
                    “புயல்காற்றினை மணல் வீட்டிலே பு’ட்டிவைத்ததாரு?
                     வானம் பெண்ணே பு’மி பெண்ணே வலிமையானவள் பெண்ணே”
                   இந்தப் பாவிகள் - அடுத்த பிறவியில்- (கட்டாயமாக) அந்தப் பெண்களாகப் பிறந்து அந்தக் கொடுமைகளை அனுபவிப்பதுதான் அதற்கான தண்டனை என்று எந்தக் கடவுளாவது, நீதிபதியாவது தண்டித்தால் அவர்களை நான் -கடவுளைக் கும்பிடாத நான்- கும்பிடுவேன்
                    சரி, கட்டுரை எழுதிய பாடுமில்லை. நாளை -29-12-2012-காலை அரசுஊழியர் சங்கப் பெண்கள் மாநாட்டில் “நீங்கள் யார்?” என்று தலைப்பில் கருத்தரங்கச் சிறப்புரை, மாலையில் தங்கம் மூர்த்தி கவிதைத் தொகுப்பு விழாவில் தொடக்கவுரை... பார்க்கலாம் ஏற்கெனவே எழுத வேண்டிய சில கட்டுரைக் குறிப்புகள் என்னை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, முன்னுரை கேட்டுவந்த இரண்டு நூல்கள் வெறித்துப் பார்க்கின்றன...
                    பார்க்கலாம் எதை எழுதுவதென்று அந்தந்தச் செய்திகள் தானே முக்கியத்துவம் தந்து நமக்கு உணர்த்துகின்றன... நாம் என்ன செய்ய?
                    ---------------------------------------- 

பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை
புதுக்கோட்டை

தங்கம் மூர்த்தியின் கவிதைநூல்கள் வெளியீட்டுவிழா

நாள் 29-12-2012 சனிக்கிழமை ------ மாலை 6-00மணி
புதுக்கோட்டை    வர்த்தகர்கழக சில்வர் அரங்கம்


தலைமை
பேரா.முனைவர் சொ.சுப்பையா
ஆங்கிலத் துறைத் தலைவர்
அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி

வரவேற்புரை
முனைவர் சி.அய்யாவு

தொடக்கவுரை
நா.முத்துநிலவன்

அறிமுகவுரை
திரைப்பட இயக்குநர்
ஜி.முரளிஅப்பாஸ்

பாராட்டுரை
சொல்லின் செல்வர்
ரா.சம்பத்குமார்

பாராட்டிக் கௌரவிக்கப் படுவோர்
இரா.கதிர்
அகரம் பதிப்பகம்-தஞ்சாவுர்
அழ.நாராயணன்
வள்ளல் அழகப்பர் பதிப்பகம் – காரைக்குடி
பேரா.எஸ்.நவநீதன்
எஸ்.ஸ்டீபன் சேகர்

மழையின் கையெழுத்து
(அய்க்கூ கவிதைகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன்)
வெளியிட்டு இலக்கியச் சிறப்புரையாற்றுபவர்
எழுத்தாளர்
எஸ்.ராமகிருஷ்ணன்

முதல்படி பெறுபவர்
அறமனச் செம்மல் சீனு.சின்னப்பா

“கவிதையில் நனைந்த காற்று
(தங்கம் மூர்த்தியின் கவியரங்கக் கவிதைகள்)
வெளியிட்டு இலக்கியச் சிறப்புரையாற்றுபவர்
கலைமாமணி பேராசிரியர் 
முனைவர் கு.ஞானசம்பந்தன்
முதல்படி பெறுபவர்
தாஜ்மஉறால்“ உறாஜி எம்.உபயதுல்லா

ஏற்புரை
தங்கம் மூர்த்தி

நன்றியுரை
பேரா.எஸ்.காசிநாதன்
தொகுப்புரை
பேரா.எம்.கருப்பையா
விழா ஒருங்கிணைப்பு
ஆர்.முத்துச்சாமி, எம்.எஸ்.ரவி, “மகாத்மாரவிச்சந்திரன்

அனைவரும் வருக! வருக! என 
அன்புடன் அழைக்கிறோம்.
------------------------------------ 

தொலைக்காட்சியில் எனது பட்டிமன்றப் பேச்சு - வீடியோ இணைப்பு.அன்பினிய அனைவருக்கும் வணக்கம்.
                     கணினி வாங்கி நானே கற்றுக்கொண்டு, தட்டெழுதப் பழகி, இணைய வலைப் பக்கம் வந்து, படம் செருகப் பத்தாண்டுகள் ஆயின.      இதோ இப்போது அடுத்த கட்டம் 
                     என்னைச் சந்திக்கும்போது  உங்கள் பட்டிமன்றக் குறுந்தட்டுஇருக்கிறதா என்பதில்தான் பெரும்பாலும் முடியும்... எனது பதிலும், “இப்போதெல்லாம் யார் குறுந்தட்டு வாங்குகிறார்கள்? எல்லாம்தான் இணைய வலையில் யு டியுபில் கிடைக்கிறதேஎன்பதாகவே இருக்கும்.
                    ஆனால், அதைப் பதிவிறக்கி எனது வலையில் இட இவ்வளவு நாள் பிடித்ததற்குக் காரணம் அந்தத் தொழில் நுட்பம் எனக்குப பிடிபடாததுதான்!
                    இதோ பிடிபட்டுவிட்டது... 14-12-2012 பொங்கலன்று, கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான, மதிப்பிற்குரிய நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் பட்டிமன்றத்தில் அணித்தலைவராக நான் பேசிய பேச்சு... 


ஆசிரியர் தகுதித் தேர்வின் சமூகச் சிக்கல்

                     இன்று தமிழ்நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கும் பள்ளி மாணவர்க்கான அரையாண்டுத் தேர்வுப் பணிகளை எனது பள்ளியின் துணை முதல்வர் எனும் பொறுப்பில் நான்  பார்த்துக் கொண்டிருக்கும் போது, பயிற்சிப் பணிக்கு -ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளிலிருந்து -வந்திருக்கும் ”மாணவ ஆசிரியர்”களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
                    இன்று பயிற்சி முடித்து விடை பெறும் ஆசிரிய-மாணவி ஒருவர், ஆசிரியர்கள் எல்லாருக்கும் இனிப்பு-காரம் கொடுத்துக் கொண்டு வந்தவர் எங்கள் முதல்வரிடம் கொடுத்துக்கொண்டே, “அப்படியே கையெழுத்தும் போட்டுவிடுங்க சார்” என்று சொல்லவும், வழக்கமாக இதற்கெல்லாம் கோபப் படும் அவர் இப்போது என்னவோ சிரித்துவிட்டு, “ஓ! அதுக்குத்தான் இந்த இனிப்பா?” என்று சிரித்துக் கொண்டே கேட்கவும்தான் அந்தப பெண்ணிற்குப் புரிந்தது போல... “சாரிசார் தெரியாம கேட்டுட்டேன்“ என்றார்.
                  “இப்படி அப்பாவியா இருக்கியேம்மா..” .என்று எனது கவலையைப் பகிர்நது கொண்டேன். நான் அவருக்கு வழிகாட்டி ஆசிரியர் என்பதால், ஒரு “அன்பளிப்பு“ பொட்டலத்தை நீட்டினார்.“கிப்ட்”ஆம்!
                    நான் சிரித்துக்கொண்டே “நன்றிம்மா“ நா இதெல்லாம் வாங்கிறதில்ல..” என மறுக்கவும் அவர் நம்புவதாகத் தெரியவில்லை...
“அட நிஜந்தாம்மா...”  என்று சொல்லி அவரை உட்காரச் சொல்லி அண்மையில் வந்திருக்கும் “டெட்” (ட்டி.இ.ட்டி) தேர்வு பற்றிச் சொல்லி இதன் சாராம்சம் என்னன்னு தெரியுமா எனக் கேட்க, அப்பாவியாய் அவர், தெரியலியே சார்... என்றார். உடன் அவருடன் பயிற்சிக்கு வந்திருக்கும் 7.8பேர் சேர்ந்து என் முகத்தைப் பார்க்கவும் எல்லாரிடமும் பேசினேன்.
                 பாவம் அவர்களுக்கு விஷயமே தெரியவில்லை என்று தெரிந்து கொண்டேன். அண்மையில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கும் “ஆசிரியர் தகுதித் தேர்வு” வழியாக, பணியமர்த்தும் முறை மற்றும் “அக்ரிகேட் மார்க்” முறையில் தற்போது தனியார் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகளில் -பி.எட். மற்றும் “இடைநிலை ஆசிரியர் பயிற்சி“ படித்துக் கொண்டிருக்கும் யாருக்கும் இன்னும் பத்தாண்டு ஆனாலும் வேலை கிடைக்கப் போவதில்லை எனும் செய்தி,அவர்களுக்கே தெரியவில்லை என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது!
              அதிர்ந்து போனதுபோல அவர்கள் நிற்கவும் நிலையை விளக்கிச் சொன்னேன். “நல்ல மதிப்பெண் எடுத்திருந்தால் அரசு ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் சேர்நதிருப்பீர்கள், அது இல்லாததால், 50ஆயிரம் முதல் ஒருலட்சம் ரூபாய் வரை நன்கொடை கொடுத்துத் தனியார் நிறுவனங்களில் ப டிக்கிறீர்கள். ஆனால், தற்போது அரசு அறிவிப்பால், 12ஆம் வகுப்பு, இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியப்பயிற்சிக்கான மதிப்பெண்களையும் சேர்த்துத்தான் டி.இ.டி தேர்வுக்குப் பின் (அக்ரிகேட்) மதிப்பெண் போடுகிறார்கள் எனவே நீங்கள் என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?“ என்று கேட்ட போது உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தவர்களாக நின்றுவிட்டார்கள்...
            மிகச் சிறந்த மதிப்பெண் எடுத்த - மிகச்சிறந்த அறிவுக்கூர்மையுள்ள ஆசிரியர்கள் தமிழ்நாட்டு மாணவர்ககுக் கிடைப்பது நல்லதுதான். ஆனால், இவர்களைப் போல மதிப்பெண் இல்லாமல் (1200க்கு 500, 600மதிப்பெண் எடுத்து)  அதனாலேயே தனியாரிடம் பணம் கொட்டித் தற்போது -2012-2013 கல்வியாண்டில் ஆசிரியப் பயிற்சியைப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்?  இவர்கள் “டெட்” தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தாலும் “அக்ரிகேட்” மதிப்பெண் கிடைக்காது!  இதேபோல, 10-15ஆண்டுகளுக்கு  முன் கல்லூரிகளில் படித்து நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் “டெட்” தேர்வில் இளைஞர்களோடு போட்டி போட முடியாமல் தேர்வாக முடியாது!  அவர்களின் நிகழ்காலமே கேள்விக்குறியாக இருக்கும்போது எதிர்காலம் என்னவாகும்?
           தகுதி திறமை இளமை எல்லாம் சரிதான், லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை, கனவு என்னவாகும் என்னும் கேள்வியை அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிட முடியாது என்றே தோன்றுகிறது. இது ஒரு சமூகப் பிரச்சினை என்பதை ஏன் யாரும் ?புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? இவர்களின் இந்த நியாயத்தைப் புரிந்து கொண்டு வழக்கு மன்றம் செல்ல வாய்ப்பிருப்பதாகவும், வழக்கு மன்றம் நியாயமாக சிந்தித்தால் இவர்களுக்கான “அக்ரிகேட்” மதிப்பெண் மாற வாய்ப்பிருப்பதாகவும்தான் எனக்குத் தோன்றுகிறது.
          தகுதி திறமை என சமூகப் பிரச்சினைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாத தலைவர்களைத்தான் தந்தை பெரியார் சிந்தனைச் சாட்டை கொண்டு சொடுக்கி எடுத்து அண்ணல் அம்பேத்கர் கொண்டுவந்த அரசியல் சட்டத்தை முதன் முதலாகத் திருத்தம் செய்ய வைத்த வரலாறு எல்லாருக்குமே மறந்துவிட்டதா? இப்போது “புதிய ரிசர்வேஷன்“ மறைமுகமாக நடைமுறையாகிக் கொண்டிருக்கிறதா?  கொஞ்சம் யோசியுங்கள் புரியும்!
          மாணவர்கள் நன்றாக இருக்க ஆசிரியர்களும் நன்றாக இருக்க வேண்டுமல்லவா? இதில் அவசரப் படுவது இருவருக்குமே கேடாக முடிந்துவிடக் கூடாதுஅல்லவா?  என்ன நாஞ்சொல்றது சரிதானுங்களா?
----------------------------------------------------------------------------------------------------

மானா மதுரை - பாரதிவிழாக் கருத்தரங்கில் நா.மு.சிறப்புரை

                     சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 15-12-2012 அன்று  நடந்த பாரதிவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன். (இது இந்த ஆண்டு பாரதி பிறந்தநாள்  11-12-12 தொடங்கி நான் தொடர்ந்து கலந்து கொள்ளும் ஐந்தாவது நாள் விழா).
                      நாம் சும்மா இருக்க நினைத்தாலும் பாரதி நம்மை விடமாட்டேன் என்கிறானே! (நன்றி- “மரம் சும்மா இருக்க நினைத்தாலும் காற்று அதை விடுவதில்லை” -சீனப புரட்சியின் நாயகன் மாஓ-சேதுங்.)
                       விழா மேடையில் திரைப்பட-குறும்பட இயக்குநரும, சென்னை இலயோலா கல்லூரியின் மதிப்புமிகு பேராசிரியரும் நாடக இயக்குநருமான பேரா.காளீஸ்வரன், (பாரதியும் பெரியாரும் என்றொரு அருமையான உரையை வழங்கினார்). தமுஎகச சிவகங்கை மாவட்டச் செயலாளர் எழுத்தாளர் ஜீவசிந்தன், மானாமதுரைக் கிளைச் செயலாளர் பாரதி சத்யா.

கீரமங்கலம் JC விழாவில் நா.மு. சிறப்புரை

                      கடந்த 14-12-2012 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் “இளைய வணிகர் சங்கம்” (ஜே.சி.) புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் அங்குள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் 10,12ஆம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவர்க்குப் பரிசளிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோது எடுத்த படம். அருகில் மண்டலத் தலைவர் திரு அருண், மண்டல நிர்வாகிகள் திரு நல்லதம்பி, திரு ரெங்கராஜ், தலைவராகப் பொறுப்பேற்ற திரு வீரையா, முன்னாள் தலைவர் திரு ஜோதிராஜன், பேரூராட்சித் தலைவர் மற்றும் திருமதி மாலதி வீரையா முதலானோர்...(படம் உதவி-கீரமங்கலம் ஜே.சி.நண்பர்கள்) 

மாணவர் படிக்க நூல்பட்டியலும், பார்க்க தமிழ்ப்படப் பட்டியலும் தயாரிப்போம் வாருங்கள்...!

இன்று மோக முள் -   படம் பார்த்தீர்களா? 
                             இன்று (17-12-2012) காலையிலேயே “கே.டிவி.” யில் “மோகமுள்” படம் போட்டிருந்தார்கள்... மீண்டும் பார்க்க வேண்டும் என்று நினைத்த படம், இருந்து ரசித்துப்  பார்க்க முடியாத நேரத்தில்.... கிளம்பிக் கொண்டே குளிக்கவும், உடைமாற்றவுமான இடைநேரத்தில், (கணினி ப்பொறியியல் படித்துக்கொண்டு, விடுமுறைக்கு வந்திருந்த) என் மகளிடம் அந்தக் கதைபற்றிச் சொல்லிக் கொண்டே வந்தேன்.. அவளும் கேட்டுக்கொண்டே, பார்த்துக்கொண்டே...  விளம்பர நேரத்தில் மற்ற அலைவரிசையில் என்ன நடக்கிறது என்பதிலும் கவனமாக இருந்தாள்...
                            என்ன வலிமையான எழுத்து!... தி.ஜா.வின் எழுத்து! அசந்தால் நம்மை எங்கேயோ கொண்டுபோய் விட்டுவிடும் ஆபத்தான எழுத்து!
                            புதுமைப் பித்தனை - சமூக அங்கத எழுத்தாளன் எனலாம்,
                            கு.ப.ரா.வை - பெண்மனச் சித்தன் எனலாம்,
                            ஜெயகாந்தனை - அடித்துப் பெய்த கதைமழை எனலாம்,                          
                            கந்தர்வனை - அழகான கதைசொல்லி எனலாம்,
                            மேலாண்மையை - கிராமத்து நிழல் எனலாம், -- எனில்,
தி.ஜா.வை “ஆபத்தான கதைசொல்லி“ எனலாம் என்பதே எனது கருத்து.

              பள்ளியில் படித்த போது, பொன்னியின் செல்வனையும், யவனராணியையும் ஒளித்து வைத்துப் படித்ததும், கல்லூரிக்கு வந்தபின் மு.வ.,நா.பா.,வுக்குப் பிறகு தி.ஜா.வை ரசித்ததும் பின்னர் ராகுல்ஜி வந்து எல்லாவற்றையும் புரட்டிப் போட, புது்மைப் பித்தனோடும் பாரதி-பாரதிதாசன்-பிறகு புதுக்கவிதைகள் என வந்ததும் நினைவுக்கு வந்தது. வெறிபிடித்துப் படித்துத் திரிந்து நூலகம் நூலகமாக அலைந்து படித்தும், ஊர்ஊராக அலைந்து இலக்கியக் கூட்டம் கேட்டும் திரிந்த  காலம்... நம்மை இப்போதும் ஏங்க வைக்கும் கல்லூரிக்காலம்!
                          இப்போதெல்லாம் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகளை நாமே மற்ற புத்தகங்களைப படிக்க விடுவதில்லையே! மதிப்பெண் போய்விடும் என்று பெற்றோர்களைப் போலவே ஆசிரியர்களும் கவலைப் பட வேண்டியிருக்கிறதே! ( தப்பித் தவறிப் படிப்பவர்களை வேலைக்குப் போகும் படலமும், வீட்டு-நாட்டுச் சூழலும்  “சரி“பண்ணி விடுகிறதே!)
                         பள்ளி-கல்லூரி மாணவர்கள் படிக்கவேண்டிய சிறுகதைகள், கவிதை-கட்டுரைத் தொகுப்புகளுடன், பார்க்க வேண்டிய திரைப்படங்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால் என்ன? 
                 மேல்நிலைப் பள்ளி மாணவர் பார்க்கவேண்டிய தமிழ்ப்படப்பட்டியல் -
                            1.பராசக்தி,
                            2.நாடோடி மன்னன்
                            3.அவள் ஒரு தொடர்கதை
                            4.வேதம் புதிது
                            5.வீடு
                            6.சில நேரங்களில் சில மனிதர்கள்.
                            6.மகாநதி
                            7.பம்பாய்
                            8.மொழி
                            9.பேராண்மை
                            10..வழக்கு எண்18/9 - இது எனது பட்டியல்
 இதே போல பள்ளி மாணவர்க்குத் தனியாகவும் கல்லூரி மாணவர்க்குத் தனியாகவும் படிக்கவேண்டிய புத்தகப் பட்டியலையும் பார்க்க வேண்டிய குறும்படங்களின் பட்டியலையும் தயாரிக்கலாமா? வாருங்கள்.. தயாரிப்போம்.
இது பற்றிய நண்பர்களின் கருத்தறிய ஆவலாக இருக்கிறேன்.
க.நா.சு.மட்டும்தான் பட்டியல் போடவேண்டுமா?  நாமும் போடலாம்தானே?
                ----------------------------------------------------------------------------


நான் எழுதிய நான்காம் சிறுகதை - நா.மு.


மாமா  கையில குப்பை - சிறுகதை
                            
     மாமா! மாமாவ்…”
     பள்ளிக்கூடத்திலிருந்து வந்த வாக்கில் புத்தக மூட்டையைக் கடாசிவிட்டு மாமனைத் தேடினாள் பத்து.
     என்னடீ! நான் இங்கிருக்கேன்..
     ம்.. வந்துமாமா பொங்கல்னு சொல்லேன்.
     ஓகோ! இன்னிக்குப் பள்ளிக்கூடத்திலேர்ந்து புது விளையாட்டு கத்துக்கிட்டு வந்திருக்கியாக்கும்..ம்..சரி பொங்கல்.
     உங்க வாயில செங்கல்ஹய்யா மாமா வாயில செங்கல்…”
     குதித்துக் குதித்துச் சந்தோஷப்பட்டுக்கொண்டே கொல்லைப் பக்கம் ஓடினாள்.
     கொஞ்சநேரத்தில் ராஜசேகர் ஆபீஸில் இருந்து வந்தார். பத்துவின் அப்பா. அவர் கைலியில் நுழைந்து கால்கை கழுவி முகத்தைத் துடைத்துக் கொண்டே சாம்புவிடம் என்னடா சி.சி. கிடைச்சிதா? என்றார்.
     தற்காலிக வேலைகளில் அங்கங்கே ஓட்டிக் கொண்டிருக்கும் சாம்பு சர்வீஸ் கமிஷன் குரூப்-டூ எழுத விண்ணப்பம் போடவே இரண்டு நடத்தைச் சான்றிதழ் தேவைப்பட்டது. அதுவும் நாளை தான் கடைசித் தேதி.
     ஒன்று கடைசியாகப் படித்த கல்லூரி முதல்வரிடம் வாங்க வேண்டும் - அது ஏற்கனவே இருக்கிறது. இன்னொரு சான்றுதான்
     என்னடா சாம்பு! சி.சி. கிடைச்சுதான்னு கேட்டேன் பேசாம இருக்கே!
     இல்லத்தான் காலேஜ்ல ஃபேர்ன்னு போட்டதுனால வெளியில நோட்டட் பர்ஸன் கிட்ட வாங்குறதாவது குட்ன்னு இருக்கணுமாம்.  சொல்றாங்க. என் ஃபிரண்டு அவனுக்குத் தெரிஞ்சவர் மூலமா வாங்கலாம்னு இப்ப ஆறு மணிக்கு வரச் சொல்லியிருக்கான்.
     சாம்புவும் ராமுவும் ஒளவையார் சிலையில் திரும்பி எலியட்ஸ் ரோடில் சைக்கிளை மிதித்தார்கள். மீன் மார்க்கெட்டைத் தாண்டி பாலத்து முக்கில் வரும்போது தன்னையறியாமல் கன்னத்தில் போட்டுக் கொண்டான் ராமு. அனுமார் கோவில் தெரிந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் டீக்கடை ஸ்ரீதரன் நினைவும் அவர் சொன்ன இந்த அனுமார் கோவில் தல புராணமும் சாம்புவுக்கு நினைவுக்கு வரும்.
     டேய்! சாம்பு! சைக்கிளை வேகமா மிதிடா. மணி ஆறாகப் போகுதுடா. சாம்புவும் கேரியரில் ஃபைல் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே சைக்கிளை வேகமாக மிதித்தான்.
     அந்தக் காலனியைத் தாண்டி முத்தையா தோட்டத்தெரு முக்கில் இவர்கள் முன்பு குடியிருந்த வீட்டைப் பார்த்துக் கொண்டே போன போது கொஞ்சம் தள்ளியிருந்த சாராயக்கடையைப் பெருங்கூட்டம் கவிந்து கிடந்தது. இரண்டு பேரும் சைக்கிளை நிறுத்தி எட்டிப்பார்த்தபோது ஒரு ஆள் நோஞ்சலான ஒருத்தனைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தான். அந்த நோஞ்சலான் கும்பிட்டுக் கீழே விழுந்து தீனமான குரலில் கத்தக் கத்த அடியும் உதையும் கண்மண் தெரியாமல் விழுந்தது. கூட்டத்தில் யாரும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.
     சாம்புவின் கண்களில் நெருப்பு எரிந்த போதும் காதுகளில்-உனக்கு எதுக்குடா சாம்பு இதெல்லாம் என்று சொல்வது வந்து விழுந்து அடக்கியது.
     ராமுவோ எந்த உணர்ச்சியுமில்லாமல் அடி வாங்கியவனின் சட்டையும் சதையும் கிழிந்து தொங்குவதை-ஏதோ சினிமாப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தான் - எல்லாரையும் மாதிரியே.
     சாம்புவும் ராமுவும் வேறு பக்கமாக சைக்கிளை வேகமாக மிதித்தார்கள்.
     சாம்பு மீண்டும் மெதுவாக ஆரம்பித்தான். பக்கத்திலிருந்த பெரிய லாட்ஜைக் காண்பித்து ரகசியமான குரலில் இந்த லாட்ஜ்லதாண்டா என் ஃபிரண்டு ஒருத்தன் மெடிக்கல் ரெப்ரசண்டேடிவ் தங்கியிருந்தான். ஒருநாள் நான் அவனைப் பார்க்கப் போனப்ப சும்மா மூனாவது மாடிக்கு மேல இருந்த மொட்டை மாடிக்குப் போனோம். சாந்திரம் அஞ்சு மணியிருக்கும் லாட்ஜீக்கு பின்பக்கத்துல ஒரு ரெட்டை மாடி வீடு பெரிசு. நாங்க பாத்திட்டிருக்கும் போதே அந்த வீட்டு மாடி வராண்டாவுல ஒரு பொண்ணு புடவையும் ரவிக்கையுமில்லாம வெறும் பாவாடை பாடியோட கையால மார மூடிக்கிட்டு தடதடன்னு ஓடியாந்தாபின்னாலயே ஒருத்தன் ஓடி வந்து அவ முடியப் பிடிச்சு தரதரன்னு இழுத்துக்கீழே தள்ளி அந்த மாடி வராண்டாவுல அவளை இம்சை பண்ண ஆரம்பிச்சான். அதுக்குள்ள இன்னொரு ஆளும் வந்து ரெண்டு பேருமா ரூமுக்குள்ள கொண்டு போயிட்டாங்க பட்டப் பகல்லேயே பாவம் யாரு வூட்டுப் பொண்ணோ? வேலைக்கு வந்ததோ இல்ல ஏதாச்சும் உதவி கேட்டு வந்த புள்ளையோ தெரியல
     சரி சரி சாவன்னா வீடு வந்திருச்சு பேசாம வா! ராமு சைக்கிளிலிருந்து இறங்கினான்.
     ராமுவுக்குப் பக்கென்றது. இந்த வீடா? பெரிய மாளிகை மாதிரி இருந்தது. அந்த லாட்ஜிலிருந்து பார்க்கும்போது பின்பக்கம் இந்த அளவுக்கு இல்லையே!
     கூர்க்காவிடம் ராமு பேசிக் கொண்டிருக்கும்போதே சும்மா உள்ளே பாhத்த சாம்புவுக்கு அந்தச் சூழ்நிலையே ஒருவித பயங்கலந்த மரியாதையைக் கொடுத்தது.
     பெரிய கேட்டுக்குள் இருந்த சின்னக் கதவை கூர்க்கா திறந்து விடவும் சைக்கிளை வெளியே வைத்துப் பூட்டிவிட்டு பூ வளைவின் ஓரமாக இருவரும் நடந்து உள்ளே போனார்கள்.
     பாலிஷ் போட்ட சிமெண்ட்டில் வாசல் பரந்து கிடந்தது - இவர்கள் குடியிருந்த வீட்டை விடப் பெரிய அளவுக்கு.
     இவனைக் கையமர்த்திவிட்டு உள்ளே போனான் ராமு.
     எத்தனையோ தடவை இந்தப் பக்கமாகப் போய் வந்தவன்தான் சாம்பு. இப்போது தன் வேலையாக சாவன்னாவுடன் வீட்டுக்குள் வரும்போதுதான் ஒவ்வொன்றும் இவனைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பது போலப் பட்டது.
     வாசலில் தடதடவென்று புல்லட் சத்தம் கேட்கவும் வெளியே பார்த்தான் சாம்பு. மறைவாக நின்று இழுத்துக் கொண்டிருந்த பீடியை அவசரமாக அணைத்துத் தூர வீசிவிட்டு ஓடிவந்த  கூர்க்கா பெரிய கதவைத் திறந்து விட்டான் புல்லட் அடிக்கடி இங்கே வரக்கூடியதாக இருக்க வேண்டும். பூ வளைவில் நுழைந்ததும் இஞ்சினை ஆஃப் பண்ணிவிட்டு வாசலில் வந்து சத்தம் போடாமல் நின்ற புல்லட்டிலிருந்து இறங்கியவனைப் பார்த்ததும் ஆடிப் போனான் சாம்பு.
     வரும் வழியில் அவர்கள் சாராயக் கடை வாசலில் கண்ட நிகழ்ச்சி கண்முன் விரியவும் கால்கள் தாமாக ஒதுங்கிக் கொண்டன.
     இவனை ஒரு கருடப் பார்வை பார்த்தபடி புல்லட் படியேற அதே நேரத்தில் ராமு பக்கத்து அறையிலிருந்து வெளியே வந்தான்.
     கண்டு கொண்டு வணக்கம் போட்ட ராமுவைக் கண்டு கொள்ளாமலே போனான் அவன்.
     படியிறங்கி சாம்புவிடம் வந்த ராமு மெதுவான குரலில் சாவன்னா இருக்காரு. யாரோடவோ பேசிட்டிருக்காரு போல. கூட ஒரு கார் நிக்கிதில்ல. மேனேஜர் நமக்குத் தெரிஞ்சவரா இருந்தது நல்லதாப் போச்சு. கொஞ்சம் இருக்கச் சொன்னார் என்றான்.
     முகத்தில் சலனமில்லாமலிருந்த சாம்புவைக் கவனித்த ராமு என்னடா ஒரு மாதிரி இருக்க! சும்மா ரிலாக்ஸா இரு என்று சொல்லிவிட்டு மீண்டும் குரலைத் தாழ்த்தி புல்லட்ல வந்தது யாருன்னு கவனிச்சியா எல்லாம் சாவன்னாவோட ஆளுதான். இவுங்க மாதிரி ஆளுங்க தன்கிட்ட வந்துட்டா எவனுக்கும் எதுவும் செய்வாங்க. வரலயின்னாதான் வம்பே வரும். சட்டம்கிட்டமெல்லாம் இங்க இருந்துதான்ன என்று சொல்லிவிட்டு அதிகமாகப் பேசிவிட்டது போலச் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சட்டென்று நிறுத்தி சத்தமில்லாமல் சிரித்தான் ராமு.
     உள்ளே மேனேஜர் ரூமுக்குள் மணியடித்தது. ஒரு ஆள் வேகமாய்ப போய்விட்டு மேனேஜரிடம் வந்து உங்கள அய்யா கூப்பிடறாங்க என்றதுமே வெளியே வந்த மேனேஜர் ராமுவைப் பார்த்து கொஞ்சம் உள்ள உக்காரு தம்பி இதோ வந்திர்றேன் என்று கூறிவிட்டுப் போனார்.
     சாம்புவையும் அழைத்துக் கொண்டு மேனேஜர் ரூமில் போய் உட்கார்ந்தான் ராமு. சாம்புவுக்கு ஏதோ புதுவேலைக்குச் சேர்ந்த இடத்தைப் பார்ப்பது மாதிரி படபடப்பாய் இருந்தது. சுற்றும்முற்றும் பார்த்தவாறு பேசாமலே இருந்தான்.
     மேனேஜர் வந்ததும் எழுந்து வணக்கம் சொன்னான்- இவரை எங்கியோ? சாம்புவைப் பற்றி விசாரித்தார் ராமு சொன்னான். ஓகோ! நம்ப ஹைவே ஆபீஸர் ராஜசேகரனோட மச்சினனா நீ? என்று ரொம்பத் தெரிந்தது போல சொல்லிவிட்டு. சி.சி. நெயைப் வந்து கேக்குறாங்கன்னு எங்கிட்டே கையெழுத்துப் போட்டு நெறையக் குடுத்திருந்தார்ப்பா. நாந்தான் ஊர் பேர் ஃபில் அப் பண்ணித் தர்றது. இன்னிக்கு காலையிலதான் தீர்ந்தது. உனக்கு இன்னிக்கே வேணுமா?
     ஆமா சார் மொட்டையா சொன்னான் சாம்பு. நாளைக்குள் குரூப்-டூ அப்ளிகேஷன் போடணும் சார். அதான் என்று முடித்ததான் ராமு.
     சரி சரி செக்ரடேரியட்லேர்ந்து ஒரு ஆபீசர் வந்திருக்காரு. போனதும் அய்யாட்ட நேர்ல வாங்கித் தர்றேன்ம்? மேஜைக்கு எதையோ தேடுவதும் எடுப்பதும் வைப்பதுமாக இருந்தார். இவரை எங்கியோ ஒரு இடத்துல…’ சட்டென்று நினைவு வரவில்லை சாம்புவுக்கு.
     கொஞ்ச நேரத்தில் வாசலில் கார் கிளம்பியதும் அந்த கலெக்டர் போட்ட ஆர்டர் பர்ட்டிகுலர்ஸ்.. என்றவாறே மானேஜர் அறைக்குள் வந்தவரைக் கண்டதும் மேனேஜரும் ராமுவும் எழுந்தார்கள். சாம்புவும் எழுந்து கொண்டான். ராமு வணக்கம் சொன்னான். யாரு? என்றார் அவர்.
     ஒண்ணுமில்லிங்கய்யா கான்டக்ட் சர்ட்டிபிகேட்டுக்காக வந்தாங்க. நம்ம பையன்தான். இவன்  காண்ராக்டர் நாகராஜனோட தம்பி. அந்தப் பையன் ஹைவேஸ் ஆபிசர் மச்சினன். அய்யா கையெழுத்து போட்டுக் குடுத்திருந்த சி.சி.யெல்லாம் தீந்துருச்சு. அதான் இருக்கச் சொன்னேன்…”
     சாவன்னா இவர்களின் கைக்கும்பிட்டுக்குத் தலை அசைத்தவாறு மேனேஜரை உள்ளே வரச் சொல்லிவிட்டுப் போய் விட்டார்.
     சாம்புவுக்கு இப்போது ஞாபகத்துக்கு வந்துவிட்டது. இந்த வீட்டுக்குப் பின்புறமாக அடுத்த வீதியிலிருக்கும் லாட்ஜிலிருந்து பார்த்தபோது சே! சாவன்னாவும் மேனேஜரும்தானா அந்த?
     உடனடியாக இவர்களை அனுப்புவதற்கென்றே வந்தது போல சி.சி. வந்துவிட்டது. நன்றி சொல்லிவிட்டு சாம்புவின் பர்ஸிலிருந்து பத்து ரூபாயை எடுத்து மேனேஜரிடம் கொடுத்துவிட்டு நடந்தான் ராமு. மேனேஜர் ராமுவோடு வந்ததால்தான் கிடைத்தது. இல்லாவிட்டால் நாளைக்கு வரச் சொல்லியிருப்பேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
     வெளியில் வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு திரும்பும்போது ராமு என்னென்னவோ சொல்லிக் கொண்டு வந்தான். சாம்பு பேசாமலே வந்தான். ராமுவை அவன் வீட்டில் விட்டுவிட்டு சாம்பு திரும்பியபோது கேரியரில் இருந்த சான்றுகள் ஃபைல் மலை மாதிரி கனத்துக் கொண்டு சைக்கிள் மிதிக்கவே சிரமப்பட்டான்.
     வீட்டுக்குள் நுழைந்து சான்றுகளோடு அத்தானைத் தேடிய சாம்புவை ஓடிவந்து கட்டிக்கொண்டாள் பத்து.
     மாமா மாமா தொப்பைன்னு சொல்லேன்…”
     தொப்பை.
     உங்க கையில குப்பை அய்யா மாமா கையில குப்பை…”
     குதித்துக் குதித்துச் சந்தோஷப்பட்டாள் பத்துக்குட்டி.
--------------------------------------------------------------- 
நான் எழுதிய நான்காவது சிறுகதை இது. “சாவி“ வார இதழில் வந்தது.