மன்னர் கல்லூரி பாரதி விழாவில் எனது பேச்சு

புதுக்கோட்டை மாமன்னர் அரசுக் கலைக்கல்லூரியில் நடந்த “மகாகவி பாரதி பிறந்தநாள் விழா”வில் சிறப்பு விருந்தினராக கவிஞர் நா.முத்துநிலவன்...
மேடையில், இடமிருந்து- வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் விஸ்வநாதன், கல்லூரி முதல்வர் பேரா.சி.வடிவேலு மற்றும் மாணவபிரதிநிதிகள் -எம்.ஏ., இறுதியாண்டு- ஜகுபர் நிஷா, செபாஸ்டின்.
-----------------------------------------------------------------------------------------------------------

இன்றைய இளைஞர்க்கும் 
வழிகாட்டுகிறார் மகாகவி பாரதி!
மன்னர் கல்லூரி பாரதி விழாவில் 
கவிஞர் நா.முத்து நிலவன் பேச்சு
புதுக்கோட்டை-டிச.12 புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நடந்த மகாகவி பாரதி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவிஞர் நா.முத்து நிலவன், இன்றைய கல்லூரி மாணவர்-இளைஞர்களுக்கும் பாரதி வழிகாட்டியாகத் திகழ்வதாகக் கூறினார்.
      வெறும் முப்பத்தெட்டே முக்கால் ஆண்டுகளே வாழ்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நூற்றுமுப்பதாவது பிறந்தநாள் விழா, டிசம்பர் 11ஆம் தேதி அன்று, தமழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதற்குக் காரணம் அவரது சாகாத படைப்புகளே எனறவர் மேலும் கூறியதாவது -
      வெறும் கவிஞர் மட்டுமல்ல பாரதி, சிறுகதை, நாவல் முயற்சி, புதுக்கவிதையின் முன்னோடியான வசனகவிதை, பத்திரிகை ஆசிரியர், 1905ஆம் ஆண்டே பத்திரிகையில் காரட்ட்டூன் எனப்படும் கருத்துப்படம் வெளியிட்டவர் என, வளர்ந்துவந்த அனைத்துத் துறை வளர்ச்சியிலும் அவர்தான் முன்னோடியாகத் திகழ்கிறார்.
      பற்பலர் வரலாற்றைப் படிக்கிறார்கள், பலரும் வரலாற்றைப் புத்தகமாகப் படைக்கிறார்கள், சிலர் வரலாற்றில் இடம்பிடிக்கிறார்கள், ஆனால் வெகுசிலர்தாம் வரலாறாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள்! அப்படித்தான் மகாகவி பாரதியின் வரலாறு, இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றின் தொடக்கமாகத் திகழ்கிறது. இதை வரலாற்று மாணவர்கள் சமூகப் பாடமாகவே படிக்கவேண்டும்.
      பாரதி நினைத்தது போல அரசியல் விடுதலை வந்துவிட்டது, ஆனாலும் அவர் நினைத்த பொருளாதார விடுதலையும், சமூகவிடுதலையும் இன்னும் வரவில்லை என்பது இன்றும் நேரடி அந்நிய முதலீட்டிலும், தர்மபுரி சாதிவெறியிலும் வெளிப்படுகிறது! எனவே பாரதி இன்றும் தேவைப்படுகிறார். “யாதும் ஊரே யாவரும் கேளிர்என்ற சங்கப் புலவரும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்ற திருவள்ளுவனும் “சாதிமதங்களைப் பாரோம்என்ற பாரதியும் ஒரே நோக்கில்தான் சொன்னார்கள், நாம்தான் அவர்களை எடுத்தெடுத்துப் பெருமையாகப் பேசிப்பேசியே பொழுதைக் கழித்துக்கொண்டே அவர்களைப் போற்றுவது அவர்களுக்குச் செய்யும் பெருமையல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பின்பற்றுவதற்கு உரியவர்களே அன்றி, வெற்றுப் பெருமைக்கு உரியவர்கள் அல்லர்!
      மக்களின் சுய அடிமைத்தனம் போனாலன்றி அரசியல் விடுதலையை முழுவதுமாக சரியாகப பயன்படுத்த முடியாது என்பதோடு, இதைக் களையவேண்டித்தான் “என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்றதையும், தேசப்பற்றாளர் போல நடிப்பவரிடம் ஏமாந்துவிடக் கூடாது என்பதைத்தான் “நடிப்புச் சுதேசிகள் என்றும் பாரதி பாடியதை நாம் புரிந்துகொண்டால் இன்றைய இந்தியப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்!
      தமிழ்நாட்டுத் தாய்மார்கள் “மம்மிஎன்று அழைக்கப்படுவதில் மகிழ்ந்துபோகிறார்கள், மம்மி என்றால் “பதப்படுத்தப்பட்ட பிணம்என்று பொருள்.மம்மி-பகுதி1,2 என்று ஆங்கிலப்  படங்களே வந்தன! இந்த சுயமனஅடிமைத் தனத்தைத்தான் பாரதி “என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்என்று அன்றே பாடியது இன்றும் பொருந்துவதாகவே உள்ளது.
      இளைய பாரதத்தை நம்பிய பாரதி, இளைஞர்களை அழைத்து, “இளைய பாரதத்தினாய் வாவாஎன்றும், குழந்தைகளை அதிலும் குறிப்பாகப் பெண்குழந்தையை அழைத்து, “சாதிகள் இல்லையடி பாப்பாஎன்றும், பெரியவர்களை அழைத்து, “சாதிமதங்களைப் பாரோம்என்றும் பாடியது போதாதென்று, சாதி-மதம் கடந்த இந்தியர் அனைவரையும் அழைத்து, “நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்என்று புதிய பாரதம் காணப் புறப்பட்டான். அவனது கனவை நனவாக்குவதற்கு அவனைப் போற்றுவதல்ல, பின்பற்றுவதே இன்றைய தேவை
      இவ்வாறு பேசினார் கவிஞர் முத்துநிலவன். விழாவிற்கு மாமன்னர் கல்லூரியின் முதல்வர்(பொறுப்பு) முனைவர் சி.வடிவேலு தலைமை தாங்கினார். வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் விஸ்வநாதன் அறிமுகவுரையாற்றினார். முனைவர்கள் செல்வராசு, மாதவன், உள்ளிட்ட தமிழ்த்துறை, வரலாற்றுத் துறைப் பேராசிரியர்கள் பங்கேற்றனர். முன்னதாக எம்.ஏ.இறுதி யாண்டு மாணவி ஜகுபர் நிஷா வரவேற்புரையாற்ற, மாணவர் செபாஸ்டின் நன்றியுரை யாற்றினார்.  விழாக்கூடத்தில் நிகழ்நத இந்த பாரதிவிழாவில் மாமன்னர் கல்லூரியில் பயிலும் ஏராளமான மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர். 


(செய்தி ஆசிரியர்கள் “தினமணி“-திரு மோகன்ராம், “தீக்கதிர்“-திரு மதியழகன் புகைப் படம்-“தினமலர்“திரு.ராஜ்குமார் -12-12-2012)

6 கருத்துகள்:

 1. வாய்ப்புகள் வழிகாட்ட உதவுமேயன்றி, வழங்கப்படுவதில்லை அம்மா!
  முகம்காட்டக்கூட முடியாமல் இப்படிக் “குழந்தை”யாக (படத்தில்)இருக்கிறீர்களே!

  பதிலளிநீக்கு
 2. Good explanation of " mummy" .

  Annaiyai thamiz vayaal mummy enralipathaa?

  பதிலளிநீக்கு
 3. முகமூடி அணிகின்ற உலகினில் நிஜ முகம் அவசியம் தானா ??????

  பதிலளிநீக்கு
 4. என் முகம் காட்டிய நினைப்பில் கேட்டேன், தவிரவும் என் படத்தையும் அல்லவா எனது வலையில் இட்டிருக்கிறேன்... நன்றி.

  பதிலளிநீக்கு
 5. அய்யா,,
  உங்களைப்போல் பேச்சுத்திரமையை வளர்க்க நான் என்ன செய்ய வேண்டும்?

  பதிலளிநீக்கு