நீதிமன்றத் தீர்ப்பும் நியூட்டனின் மூன்றாம் விதியும்.

மேடையில் பேசும்போது-
வட்டம் குறுவட்டங்களாக இருந்தால் அவ்வப்போதும்

எம்எல்ஏக்களாக இருந்தால் பத்து நிமிடத்திற்கு ஒருமுறையும்,

எம்பிக்களாக இருந்தால் ஐந்துநிமிடத்திற்கு ஒருமுறையும்,

மந்திரிகளாக இருந்தால் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறையும்,பேச்சில் சொல்லிக்கொண்டிருந்த வரிகள் இவை

இதயதெய்வம், புரட்சித்தலைவி, தமிழகத்தின் நிரந்தர முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள்“ இந்த வாசகம் கிட்டத்தட்ட அனிச்சைச் செயல்போலவே அவர்களின் பேச்சில் ஆகியிருந்தது...

அதனாலேயே அவர்கள் அந்தப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதையும் ஜனநாயகம் என்று புரிந்துகொண்ட குழப்பம் இது!

இனிமேல் இவர்கள் எப்படிப் பேசுவார்கள்?

இதைத்தான் நமது  சங்க இலக்கியம் -
“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று கூறும்,

இதைத்ததான் நமது திருக்குறள் -
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்..” என்று கூறும்,

இதைத்தான் நமது சிலப்பதிகாரம்,
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”  என்று சொல்லும்.

இதைத்தான் நமது அறிவியல் (நியூட்டனின் மூன்றாம் விதி) -
“ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்விளைவு உண்டு“ எனும்

இதைத்தான் நமது கிராமத்து்க் கிழவி-
“உப்பத் தின்னவன் தண்ணி குடிச்சாகணும்“ என்பாள்


ஆமாம்
யார் இந்த சசிகலா?
அவருக்கும் நமது தமிழக அரசியலுக்கும் என்ன தொடர்பு?
ஆட்சிஅதிகார மையமாக அவரும், அவரது குடும்பமும் ஆனதெப்படி?
நமது ஜனநாயகத்தின் பலவீனங்களில் இதுவும் ஒ்னறு.

எனது வலைப்பக்கப் பதிவுகளில்,  யார் இந்த ராவணன்?
என்றொரு பதிவை இட்டிருநத்து நினைவில் வருகிறது..
http://valarumkavithai.blogspot.in/2012/02/blog-post_03.html

இந்த மாற்று அதிகார மையம் பற்றி விரிவாக, தனியாக எழுத வேண்டும்..
இந்தக் கேவலம்தான் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக மாற்றுகிறது.

ஆனால்,  ஊழல்வழக்குகளுக்கு அதிரடித் தீர்ப்பு வழங்குவதில்
ஏற்கெனவேஅந்த நீதியரசர் -
 நீதிபதி  ஜான் மைக்கேல் டி.குன்கா 
இப்போதும் வரலாற்றில் நிற்கும்படியானதொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
பலஆயிரம் கோடி தொடர்புடைய வழக்கில் சில ஆயிரம் கோடியைப் பெற்றுக்கொண்டு தீர்ப்பை மாற்றியிருக்கவும் வாய்ப்பிருந்த போதிலும், அந்த மனிதர் தன்முடிவில் உறுதியாக இருந்திருக்கிறார்.
அதுவும் ஒரு வாரகாலம் ஜாமீன் கிடைக்காத நாளாகப் பார்த்து, அன்றும் மாலைவரை இழுத்து..திட்டமிட்ட தீர்ப்பு!
Special Judge John Michael D'Cunha
  “தமக்கென முயலா நோண்தாள்
   பிறர்க்கென முயலுநர்        
   உண்மையானே...
   உண்டால் அம்ம இவ்வுலகம்“ எனும் புறநானூற்றிற்கு உதாரணமாகிவிட்டார். (இன்னமும், 
நல்லவர்கள் சிலரும் 
ம்மோடு இருப்பதால் 
ந்தஉலகம் முற்றிலும்
கெட்டுவிடாமல் இருக்கிறது என்பது பொருள்!)

வரலாற்றில் நிலைத்து நிற்கும் தீர்ப்பு..

ஆடிய ஆட்டம் என்ன...!

அம்மா...அம்மா...அம்மா...
அம்மாவைப் பார்த்து 
மந்திரிகளும் மாவட்டங்களும் ... மட்டுமல்லாமல், 
அவர்கள் இருக்கும் தைரியத்தில்
அதிகாரத்தின் கடைக்கோடியில் இருப்போரும்
ஆடிய ...
இன்னும் ஆடிக்கொண்டிருக்கும் 
ஆட்டம் என்ன?

இதைப்பார்த்து, 
ஆளும்கட்சிக்காரர்கள் மட்டுமல்லாமல்,
ஊழலில் மூழ்கி முத்தெடுத்து “பணம் இருந்தா எப்படியும் தப்பிச்சிக்கலாம்“ எனும் நினைப்பில் கிடக்கும் மற்ற அரசியல் கட்சிக்காரர்களும்...

இனியாவது எது நிரந்தரம், 
எது தற்காலிகம் என்பதை புரிந்துகொள்வார்களாக!

இவுங்க புரிஞ்சிக்குவாங்க னு நினைக்கிறீங்க?
புரிஞ்சிக்க மாட்டாங்க ன்றத, இந்திரா காந்தி ஏற்கெனவே புரிஞ்சிக்கிட்டுத்தான் 
எமர்ஜென்சிக்கு மன்னிப்புக் கேட்டு,
மக்களும் மன்னிச்சி.. திரும்பவும் 
அவங்க பரம்பரையே திரும்ப வந்து..
அப்பறமும் ஆடி.. அப்பறம் மோடி வர
இவுங்க ஓடி போகலயா?

சரி...இனிமேல் 
தமிழ்நாட்டில் என்ன நடக்கும்? 

ஒன்றும் குடிமுழுகிடாது.  


நல்லதே நடக்கட்டும்! கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டியிருக்கும்.


இல்லையெனில் மீண்டும் நியூட்டனின் மூன்றாம்விதிதான்!

எந்தத் தனிநபரையும்விட, 
மக்கள்தான் முக்கியம் 
மன்னர்கள் அல்ல, என்பதை 
மக்கள் உணர இது ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்.
------------------------------------

இராமநாதபுரம், பட்டுக்கோட்டை நிகழ்ச்சிகள்


 பட்டுக்கோட்டையார் பற்றிய 
ஆவணப்படம்
இயக்குநர் - திரு பு.சாரோன் 
(ஊடகவியல் விரிவுரையாளர், 
லயோலா கல்லூரி, சென்னை)

----------------------------------------------------------------------------------


இராமநாதபுரம் புத்தகத் திருவிழா
22-09-2014  மாலை
(மேடையில் திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்களுடன் மாவட்ட
புத்தகத்திருவிழா நிர்வாகிகள்)

இராமநாதபுரம்  புத்தகத் திருவிழா பார்வையாளர் பகுதி
(22-09-2014 மாலை)
-------------------------------------------------------------------------------------------------------------------------- 

23-09-2014 - பட்டுக்கோட்டையில்,  பட்டுக்கோட்டையார் பற்றிய 
திரு.சாரோனின் ஆவணப்பட அறிமுகவிழா  பார்வையாளர் பகுதி

எனது நண்பர் (பட்டிமன்றத்தில் எதிரணித் தலைவர்) மதுக்கூர் பேசுகிறார்.
மேடையில் திரு ஐ.லியோனியுடன் பேச்சாளர்கள் 

ஆவணப்பட இயக்குநர் திரு சாரோன்,  பட்டிமன்ற நடுவர் திரு ஐ.லியோனியுடன்...
--------------------------------------------------------------------------------------

பட்டுக்கோட்டையார் பற்றிய அரிய தகவல்களுடன் கூடிய 
இரண்டரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படக் குறுந்தகடு பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள - 
(விலை ரூ.199    விழாவில்  நான் ரூ.150க்கு வாங்கினேன்)
                      saronsenthilkumar@gmail.com                      
செல்பேசி - +91 94442 85103
------------------------------------------------- 

ஆசிரியர்-பணியாளர் தேர்வுகள் உட்பட ஆயிரக்கணக்கான நூல்கள்...இலவசமாக!

.... அசந்துபோனேன்... இதோ பாருங்கள்-

படிடா கண்ணு!  படிச்சு,  உன் அறிவால் 
உலகத்தை மாற்று! முன்னேற்று!வெளியூர்களுக்குப் போகும்போது, நல்ல் நூல்களைத் தேடுவதுபோலவே, பழைய புத்தகக்கடைகளையும் தேடுவது என் வழக்கம்.
இப்போதுதான் இணையத்திலேயே புதிய புத்தகங்களை மட்டுமில்லாமல் பழைய புத்தகங்களையும் பார்க்க முடிகிறதே என்று, புத்தகங்களைத் தேடத் துவங்கினேன்...

அகப்பட்ட சில வலைப்பக்கங்களை நமது வலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்

அடடா.. ஆயிரக்கணக்கிலான புத்தகங்கள் அவ்வளவும் இலவசமாக... அசந்துபோனேன்... இதோ பாருங்கள்-

http://alaiyallasunami.blogspot.com/2012/04/tet.html
அந்த நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து நூல்களைப் பயன்படுத்துவோம்!

அடுத்து, கல்விச்செய்திகளைத் தொடர-
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களாகப் பணியாற்றுவோர்க்கும் பயன்படக்கூடிய 10, 12ஆம்வகுப்புத்   வினாவங்கி, விடைமாதிரிகள் என ஏராளமான தகவல்களைக் கொண்ட கல்வித்தளம் -
http://www.kalvisolai.com/

“இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகள் யாவை?” எனும் கேள்விக்கு எத்தனை பேருக்கு விடை தெரியும். (வேலைக்குத் தேர்வாகி வந்துவிட்டவர்கள் இதுபற்றி எந்தவிதக் கவலையும் கொள்வதிலலை, வேலைதேடுவோர்க்கு இதுபோலும் கேள்விகள் முக்கியமில்லையா?) இதுபோலும் பொது அறிவு மட்டுமின்றி வேலை வாய்ப்பு, மற்றும் அரசு அறிவிப்புகளையும் அவவ்ப்போது தரும் பயனுள்ள செய்தித்தளம் இது
http://www.tnguru.com/
இந்தத் தளத்தின் சமீபத்திய முக்கியமான தகவல் ஒன்று -- 

Application are invited from Women candidates of Tamil Nadu to undergo free coaching for UPSC Examination.details...“ என்பதாகும் ! 


இவற்றோடு, நான் ஏற்கெனவே எனது வலைப்பக்கத்தில் சொன்னதாக நினைவு- துறைசார் நூல்கள் தொடர்பாக - எந்தநூலில் இது இருக்கும், அந்த நூல் எங்கே கிடைக்கும் என - எழும் சந்தேகங்களைக் கேட்டு, நமக்கு உதவிசெய்வதற்காக என்றே மற்றொரு வலைத்தளம் உள்ளது, அது இதோ -
http://www.ssivf.in/info-solutions.php

"எத்தனை மருத்துவர்கள், எத்தனை இஞ்சினியர்கள், எத்தனை வக்கீல்களை இந்த கடை உருவாக்கியிருக்கிறது தெரியுமா?" என்றபடி நம் அருகில் வந்து வாஞ்சையுடன் பேச ஆரம்பிக்கிறார் மேரி. ஆழ்வாருக்கும் மேரிக்கும் என்ன தொடர்பு என அவரைப்பாரத்தால் ஆழ்வாரோட மனைவி  என்கிறார்.--- இதோ இந்தத் தளம் தரும் அரிய புத்தகநிலையம் பற்றிய மற்றும் நூல்களுக்தகவல்-

http://www.4tamilmedia.com/all/tips/5592-2012-05-25-00-52-14

நமது வலைநண்பர் யாழ்பாவாணன் அவர்களின் தளத்திலும்
இதுபோலும் நூல்கள் மற்றும் நூல்கள் கிடைக்கக் கூடிய தளங்கள் பற்றிய பயனுள்ள தகவல்கள் உள்ளன - இதோ -
http://yarlpavanan.wordpress.com 
(இதற்குள் நுழைந்து, மின்நூல் களஞ்சியம் எனும் பெட்டிக்குள் நுழைக)

வணிகநோக்கின்றிப் 
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் 
என்பதொன்றே அவர்களின் வேண்டுகோள்... சரிதானே? 

இதுபோலும் 
பயனுள்ள தளங்கள் பற்றிய 
கூடுதல் தகவல் தெரிந்த 
நம் வலைநண்பர்கள் தெரிவித்தால், நானும் தெரிந்துகொண்டு 
மற்றவர்க்கும் தெரிவிப்பேன், இப்போதெல்லாம் 
என் வேலையே 
இதுதானே?!!

யாம்பெற்ற 
இன்பம், 
பெறுக 
இவ்வையம்!!
------------------------------------------

தந்தை பெரியார் என்பவர் யார்.?

தந்தை பெரியார்

(17-9- 1879 --- 24-12-1973)


         “அறிவைத் தடுப்பாரை,
           மானம் கெடுப்பாரை
          வேரோடு பெயர்க்க வந்த 
           கடப்பாரை” என்று கவிஞர் காசிஆனந்தன் அவர்களும்,
          “தொண்டு செய்து பழுத்த பழம்,
            தூய தாடி மார்பில் விழும், 
            மண்டைச் சுரப்பை 
            உலகு தொழும்
            மனக்குகையில் 
           சிறுத்தை எழும்
            அவர்தாம் பெரியார், 
            யார்? அவர்தாம் பெரியார்” என்று பாரதிதாசன் அவர்களும், ஏற்றிப் போற்றிய தந்தை பெரியார், உலகின் மிகச்சிறந்த சிந்தனையாளர் வரிசையில் என்றும் இருப்பவர்.

           என்னைப் போலும் பலகோடிப் பேருக்கு உலக அளவில் கார்ல்மார்க்சும், இந்திய அளவில் அண்ணல் அம்பேத்கரும், தமிழக அளவில் தந்தை பெரியாரும்தான் மிகப் பெரிய வழிகாட்டிகள் என்பதே உண்மை!

அவரை வெறும் பார்ப்பன எதிர்ப்பாளராகவும்,
கடவுள் மறுப்பாளராகவும் மட்டுமே பார்த்துப் பழகிவிட்டார்கள் பலர்! அவர்கள் யானையைப் பார்த்த குருடர்கள்!

           உண்மையில்,
அவர் சுடர்மிகுந்த சுயசிந்தனையாளர்.
           “அவன் சொன்னான், இவன் சொன்னான்னு நம்பாதே! உனக்கு எது சரின்னு படுதோ அதன் படி யோசி! நட!” என்று சொன்ன உண்மையான சிந்தனையாளர்!
          இன்றைய சமூகத்தில்தான் பெரியார் பெரிதும் தேவைப்படுகிறார்.

          எங்கள் ஊர்க்கவிஞர் சுவாதி எழுதியது போல,
         “ தடுக்கி விழுந்தால்
          எத்தனை கோவில்கள்!
           தந்தை பெரியார் நகர் தந்தை பெரியார் நகரில் கோவில்கள் மட்டுமல்ல, அவரது பெயர் தாங்கிய பாடநூல்களிலும் மூடநம்பிக்கைகள்!

(முதல் செய்யுள் கடவுள்வாழ்த்தாகவும், முதல் பாடம் பெரியார் வரலாறாகவும் எத்தனை பாடநூல்கள்! - ஒருபக்கம் பெரியாரைப்பற்றிய தகவல்களைப் பற்றி மட்டும் பாடம் வைத்துவிட்டு, இன்னொரு பக்கம் அவர் வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப்போராடிய பல மூடநம்பிக்கைகளை அதேநூலின் வேறு பக்கங்களில் பாடம் வைப்பதுபற்றி என்ன சொல்ல? ” - பார்க்க எனது வலைப்பக்கக் கட்டுரை https://valarumkavithai.blogspot.com/2016/02/blog-post_11.html
------------------------------------------------------------ 
“சாமி கும்பிடுவதற்கு“ எதிரானவரல்ல தந்தை பெரியார்!
“கும்பிடுறேன் சாமி“ என்பதற்கு எதிரானவர் என்பதே சரி
------------------------------------------------------------

பெரியார் ஏன் “கடவுள் இல்லை” என்று சொன்னார்?
         கடவுளுக்கும் அவருக்கும் கணக்குவழக்குத் தகராறு ஏதுமில்ல. பங்காளிச் சண்டையும் கிடையாது. அவர் ஏன் கடவுள் இல்லையென்று சொன்னார் எனில், இன்றும் தீராத நோயாக கிராமத்தில் வெளிப்படையாகவும் நகரத்தில் மறைந்தும் கிடக்கின்ற மூடநம்பிக்கைகளும் அதுசார்ந்த ஜாதி உணர்வுகளும் தான் முதல் காரணம்!

நம்நாட்டு சடங்குகள் ஜாதிகளோடு தொடர்புடையவை!
அந்தந்த ஜாதிகளும்  மதத்தோடு பிணைக்கப்பட்டிருப்பன!
மதமோ அந்தந்த மதத்தின் கடவுளோடு தொடர்புடையது!
எனவேதான்- பெரியார் சொன்னார்.
        “கடவுள் ஒழிக!”
 
(இதற்குள் சாதி ஒழிக என்பதும் மதம் ஒழிக என்பதும், முடநம்பிக்கை ஒழிக என்பதுமான பல பொருள்கள் உண்டு!)

இவற்றைக் காப்பாற்றும் “பார்ப்பான் ஒழிக, காங்கிரஸ் ஒழிக, காந்தி ஒழிக“ என்றுதான்  தான் தலைமை வகித்த காங்கிரஸ் கட்சியிலிருந்து நிரந்தரமாக வெளியேறினார் பெரியார்
இதைப் பற்றிய விக்கிப்பீடியாவின் கட்டுரை தெளிவாக உள்ளது 
பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈரோடு வெங்கடசாமி இராமசாமி நாயக்கர்( செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவ தற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும்  திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தவர். இவருடைய  சுயமரியாதை இயக்கமும்பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ் பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை,   தீண்டாமை,   மூடநம்பிக்கை,   வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார்”

மதம் மாறலாம், ஜாதி மாறமுடியாது!
       நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், நம் நாட்டில் மதம் மாறமுடியும். ஆனால், ஜாதி மாறமுடியாது. இந்து மதத்தில் இருக்கிறவன், இசுலாம் மதத்திற்குப் போனாலோ, கிறித்து மதத்திற்குப் போனாலோ அந்தந்த மதங்களின் உலக நாடுகளில் இல்லாதபடிக்கு, புதிய ஏற்பாடாக அந்த மதங்களில் இல்லாத ஜாதி ஏற்பாடாக- இருந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. (வெகு சில இடங்களில் இந்த நடைமுறை மாற்றப்பட்டதால்தான் சிலர் மதம் மாறுவது இன்றும் தொடர்கிறது) உலகில் வேறெங்கும் இல்லாதபடிக்கு நம் நாட்டைப் பிடித்த சிறப்பு நோய் இது! இதற்கு மருந்து கண்டவர் தந்தை பெரியார்.

     “எனக்குக் கீழானவன் யாரும் இல்லை, எனக்கு மேலானவனும் யாருமிலலை” இதைவிட சமத்துவத்தை விளக்குவது எப்படி?

          கல்வியைப் பரப்புவதிலும், பெண்ணுரிமையைப் பெரிய இயக்கமாக மாற்றியதிலும் தந்தை பெரியாருக்குப் பெரும் பங்கு உண்டு. கல்வி- வேலைவாய்ப்புக்காக இடஒதுக்கீடு பெறப் பெரும் போராட்டம் நடத்தி முதன்முதலாக  இந்திய அரசியல் சட்டத்தையே திருத்திய பெருமை பெரியாருக்கே உண்டு 
          தந்தைபெரியாரும்  காமராசரும் தமிழக அரசியலில் இல்லாமல் போயிருந்தால், இந்த முத்துநிலவன் போலும் பலலட்சம் பேர், எழுத்தறிவற்ற முட்டாள்களாக ஆடுமாடு மேய்த்துக் கொண்டுதான் திரிந்திருப்போம்  என்பதால் எனது பட்டங்களை மட்டுமல்ல, எனது சிந்தனைகளையும் தந்தை பெரியாரும் தலைவர் காமராசரும் போட்ட பிச்சை என்று பல மேடைகளில் நான் சொல்லியிருக்கிறேன்.

மார்க்ஸ் ஏங்கெல்சின் “கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை”  நூலை மட்டுமல்ல, இளம்வயதில் நாட்டுக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட  பகத்சிங்கின் “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” நூலையும் தமிழில் முதலில் தந்தவர் தந்தை பெரியார்தான். 

பலலட்சம் மைல் தூரம் பயணம் செய்து தமிழர்
 முன்னேற்றத்திற்காகத் 95 வயதிலும் மூத்திரச் சட்டியை அருகில் வைத்துக்கொண்டே பேசி, எழுதிப் போராடியவர்!

இப்படி ஏராளமாக எழுதலாம், தாராளமாகச் சொல்லலாம்
ஆனால் பெரியாரை வாழ்வில் கடைப்பிடிப்பது கடினம்.
கடைப்பிடிக்கிறேன் என்பதால் நான் உரிமையோடு சொல்வேன்!

 (என் வாழ்வில் எந்த மூடநம்பிக்கைக்கும்-செயல்பாடுகளுக்கும் நான் இடம் தந்ததில்லை, சாதி மறுப்பாளனாகவே இன்றுவரை வாழ்ந்தும் பேசி எழுதிக்கொண்டும் இருக்கிறேன். இதை  நான் மறைத்ததும் இல்லை தேவையானபோது சொல்லியும் வருகிறேன்)

தந்தை பெரியாரின் சிந்தனைகள் வளர்க!
       பெண-உரிமைக்கான இயக்கங்களைப் பெரியார் நடத்தியபோது, யாரோ ஒருவன், “பெண்களைப் பொதுவுடமையாக்குவதாகச் சொல்கிறீர்களே! உங்கள் மனைவியை நான் அழைத்துச் செல்லலாமா?” என்று துடுக்காகக் கேடடானாம்! நாமாக இருந்தால் கோபத்தில் எதையாவது உளறி, திட்டிக் கொட்டியிருப்போம்! தந்தை பெரியார் பதறாமல் சொன்னாராம் -
“ஓ! தாராளமாக அழைத்துப்போகலாம்- அவள் விரும்பி வந்தால். ஒருவேளை அவள் செருப்பால் அடிப்பதாக இருந்தால் வாங்கிக் கொள்ளலாம்” எப்படி?

இதே போலத்தான் கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தின் போது, ஒருவன்,“கடவுள் இல்லை என்கிறீர்களே? ஒருவேளை கடவுள் உங்கள் முன் வந்து நின்றால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டானாம். “அப்படியா? வரச்சொல்! நம்புகிறேன். வரவில்லை என்றால் நான் சொல்வதை நீ நம்பவேண்டும்”
          
சமூகச் சீர்திருத்தப் பொது அரசியலுக்கு வந்ததாலேயே அவரது சொத்துகளை எல்லாம் இழந்தவர் பெரியார். இன்று சம்பாதிப்பதற்காகவே அரசியலுக்கு வருவோரை நினைத்தால் பெரியாரின் தேவை புரியும்.

         இன்று எனக்கென்ன மகிழ்ச்சி என்றால், தந்தை பெரியாரால் பயனடைந்த பலரும் நினைக்காத பொழுதில், மூன்று சகோதரிகள் தனது வலைப்பக்க எழுத்தில் பெரியாரை நினைவு கூர்ந்திருப்பதுதான். படித்துப் பாருங்கள்...

ஒருவர் எனக்கு முன்பின் அறிமுகமில்லாத சகோதரி -
http://nigalkalam.blogspot.com/2014/09/blog-post_17.html

மற்றொருவர் எங்களோடு புதுக்கோட்டையிலேயே வசிக்கும் சகோதரி-
http://velunatchiyar.blogspot.com/2014/09/blog-post_16.html

இன்னொருவர் என் அன்புத் தங்கை மைதிலி-
http://makizhnirai.blogspot.com/

        பெண்ணுரிமையைப் பற்றிப் பலரும் பக்கம் பக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்க, பெரியார் ஒருவர்தான் எளிமையாகச் சொன்னார் -
“பெண்கள் முன்னேறணும்னா... பெரிசா ஒன்னும் பண்ண வேணாம், அவுங்க கையில இருக்குற கரண்டியப் புடுங்கிட்டு, புத்தகத்தைக் குடுத்தாப் போதும்”
எப்படி? இதுதான் பெரியார்! இதற்குள்தான் எத்தனை சிந்தனைத் தெளிவு!

பெரியாரின் கொள்கைகள் வாழ்க!
பெரியார் நினைத்த சமூக மாற்றங்கள் நிகழ நம்மால் ஆனதைச் செய்வதே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
தோழர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் வாழ்க! 

----------இதுவரை நான் எழுதியது -நா.மு. ----------- 

இனிமேல் வருவன இணையத் தகவல்தொகுப்பு ----------------------- 


பெரியாரை பற்றி தெரியாத 
தமிழ்நாட்டு மக்களுக்கு சில செய்திகள்.

தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி.

அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடிய 
தந்தை பெரியாரின் சரித்திரத் துளிகள் சில...

* ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

* பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான்.

* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!

* வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

* தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்து வைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!

* தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!

* இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!

* உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

* இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!

* இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!

* தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

* தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரது சேகரிப்பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!

* முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!

* நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

* தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!

* புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!

* நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்! அந்த பெரிய மனிதருக்கு இருந்த நேர்மை பணிவு கூட இங்கே விசத்தை கக்க வரும் நபர்களுக்கு ஒரு சதவீதம் கூட கிடையாது

* 95 வது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!
_______


பெரியார் என்ன செய்து கிழித்துவிட்டார் என்று கேட்கும் நன்றி மறந்த ஜாதீய தமிழ் அடிமையே..

நன்றாகக் கேள் கல்வி மறுக்கப்பட்ட நாங்கள் இன்று கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உயர்ந்த நிலையை அடைந்திருப்பதற்கு காரணம் இடஒதுக்கீடு! அதை பெற்றுத்தந்தது பெரியாரின் இடைவிடாத போராட்டம்.

அவரவர் சாதித் தொழிலையே பள்ளிகளில் கற்க வேண்டுமென குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டுவந்த போது, மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் செய்தவர் பெரியார் அதனாலேயே குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது. அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் அவரவர் சாதித் தொழிலையே அனைவரும் செய்ய வேண்டியதிருந்திருக்கும். மருத்துவராகவோ பொறியாளராகவோ உயரயதிகாரியாகவோ வாய்ப்பு இருந்திருக்காது. பெரியாரின் உழைப்பை மறந்த நன்றிகெட்ட பார்ப்பனீய அடிமைத் தமிழர்களே இனியாவது உணர்ந்துகொள்...

அனைவரும் கோவிலுக்குள் செல்வதற்காகவும் அர்சகராக ஆவதற்கும் போராடியவர் பெரியார். எங்கள் சுயமரியாதைக்காகவும், இழிவு நீங்கவும், தீண்டாமை நீங்கவும், சாதி மதம் ஒழியவும் தன் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் பெரியார். அந்த பெரும் பணியை மறந்த சிறியார்கள் இல்லை நாங்கள்!

ஏ நன்றி கெட்ட பார்ப்பனீய அடிமை தமிழனே அவரால் உயர்வடைந்துவிட்டு இன்று கேட்பாய் பெரியார் என்ன செய்து கிழித்தார் என்று!

நால்வர்ணத்தைக் கடைபிடித்த, சனாதன தர்மத்தை நிலைநாட்டிய மனுநீதியின்படி ஆட்சி செய்த பார்பன அடிமைத் தமிழ் அரசர்கள், திருக்குறளை - வள்ளுவரைப் போற்றவில்லை, திருக்குறள் மாநாடு நடத்தி தமிழ்நாடெங்கும் திருக்குறளைக் கொண்டாட வைத்தவர் பெரியார்!

அந்த பெரியாரை மறந்த பார்ப்பனீய அடிமைத் தமிழர்களே! இன்று தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என்று வஞ்சமாக கூக்குரலிடும் அயோக்கியர்களே, உன் கையிலிருக்கும் வேதம் காட்டுமிராண்டித் தனமானது
அதை தவிர தமிழில் வேறு என்ன இலக்கியம் உள்ளது? #தமிழை_காட்டுமிராண்டி_மொழியாக்கியதே உன் வேதங்கள் தானே இதை என்று உணர போகிறாய்?

பதில் கிடைக்குமா... ஜாதீய அடிமைகளே...?
___

"மருத்துவமனையில், 'கையை வெட்டினாலொழிய பிழைக்கமாட்டாய்' என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். 'காலை வெட்டினால் ஒழிய பிழைக்கமாட்டாய்' என்றால், காலை வெட்டிவிடச் சம்மதிக்கிறோம்.

மலஜலம் கழிக்க வேறு ஓட்டை போடவேண்டமென்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கிறோம். எடுத்துவிட வேண்டுமென்றால், கருப்பையை எடுத்துவிடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கிய பண்டங்களை இழந்தாவது உயிர் வாழச் சம்மதிக்கிறோம்.

அப்படியிருக்க, ஒரு அயோக்கியக் கூட்டம் நம்மை ஜெயித்து அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கிற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம்மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும் புகுத்தி, இழிவபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்றால்..

இதற்கு... இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம்? என்றால், இந்த இழிவு (சூத்திரத்தன்மை) எப்பொழுதுதான் எந்த வகையில்தான் மறைவது - என்று கேட்கிறேன். என் மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால், அவர்களை வெறும் வெறியர்கள் என்றுதானே அறிவாளிகள் சொல்லுவார்கள்?" - பெரியார்!!

____

பெரியார் என்னும் சகாப்தம்

90-ஆவது வயதில் _ 180 கூட்டம்.
91-
வது வயதில் _ 150 கூட்டம்.
93-வது வயதில் _ 249 கூட்டம்.
94-வது வயதில் _ 229 கூட்டம்.
வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் 
(95-வது வயதில்) 42 கூட்டம்.
இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன்.

ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்.....

சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்.....

இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்?

எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார் ?

அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா?

மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா ?

நான் சொல்வதை கேட்டால் தான்
உனக்கு சொர்கம்;
என்னை வணங்காவிட்டால் நரகம்
என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்...

நான் தலைவன் நான் தவறே செய்தாலும் எனக்கு நீ முட்டு கொடுத்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்...


யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக்கொண்டு, அனுபவத்தைக்கொண்டு, படிப்பினையைக்கொண்டு ஆராய்ந்து - உன் அறிவு ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள் இல்லையென்றால் விட்டுவிடு னு சொன்ன ஒரே தலைவர் பெரியார் மட்டுமே!

பெரியாருக்கு நிகராக எவானவது உண்டா?

பெரியார் என்ன செய்து கிழித்தார் என்று கேட்கும் தற்குறிகளுக்கு

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தொடங்கிய காலத்தில் தமிழ்நாடு இருந்த நிலை...


1. ஆதிதிராவிடர்கள், பார்ப்பன தெருக்கள், கோயில்களை சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்து கூடச் செல்லக் கூடாது.

2. ஆதி திராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டிக்கட்டக் கூடாது.

3. தங்க நகைகள் அணியக் கூடாது.

4. மண் குடத்தை தான் தண்ணீர் பிடிக்க பயன்படுத்த வேண்டும்.

5. ஆதிதிராவிடர் விட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.

6. சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.

7. திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.

8. பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.

9. குதிரை மீது ஊர்வலம் செல்லக் கூடாது.

10. பொதுக் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.

11. மேல் அங்கியோ, துண்டுடோ அணிந்து கொண்டு செல்லக் கூடாது.

12. உயர்ந்தோர் குடியிருப்பின் வழியாக தாழ்ந்தோர் சுடுகாட்டிற்கு செல்லக் கூடாது.

13. பெண்கள் ரவிக்கைகள் அணியக் கூடாது என்பதோடு மேல் சாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணிகளையும் எடுத்து அக்குலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

14. நீதி மன்றங்களில் சாட்சி சொல்ல நேரிட்டால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும்.

இதை எல்லாம் மாற்றியது யார்?
நீ அடிமையாக இருக்கும் உயர்ஜாதி பார்பனீயத் தலைமையா?

பதில் சொல்லுங்கள்! 

-------------------பின் பகுதி இணையத் தொகுப்பு------------------------ 

சிங்கமென சீறி வா! புலியெனப் புறப்பட்டு வா! மதுரை வலைப்பதிவர் திருவிழா அழைக்கிறது!

சிங்கமென 
சீறி வா!
புலியெனப் 
புறப்பட்டு வா!!
அலைகடலென 
ஆர்ப்பரித்து வா!!!
( மனுசனா மட்டும் வந்துராதே! ) -என அழைக்கும் 
அரசியல் கட்சிகளின் 
அழைப்பல்ல இது!

தமிழ் வளர்க்கும் 
வலைப் பதிவர்களே! வருக!

அறிவியல் வளர்க்கும் 
எழுத்தாளர்களே! வருக!

பொழுதுபோக்காகப் பலர்நினைக்கும் 
கலையை-இலக்கியத்தை, 
வாழ்க்கையைப்
பழுது பார்க்கும்  ஊடகமாக மாற்றும்
வல்லமை மிகுந்த 
வலை ஓவியர்களே வருக!

“யாதும் ஊரே! யாவரும் கேளிர்!”
என்பதை உண்மையாய் உணர்ந்து,
ஆறாம்திணை வளர்க்கும்
அன்புத் தமிழ் உறவுகளே வருக!!

அக்டோபர்-26 அன்று 
கூடல்மாநகராம்
கூடலில் கூடுவோம்!

1981இல் மதுரையில் நடந்த
உலகத் தமிழ் மாநாடு பற்றி
“வானம்பாடிக் கவிஞர்” மீரா அவர்கள் எழுதிய, புகழ்பெற்ற
“கூட்டம் கூட்டம் கூட்டம்,
  கூடல் நகரில் கூட்டம் பார்க்க,
  கூட்டம் கூட்டம் கூட்டம்” எனும் கவிதை      
   இப்போது நினைவிலாடுகிறது!

இந்தவிழாவில் தமது கவிதைத் தொகுப்புகளை வெளியிடவிருக்கும்.
புதுக்கோட்டை சகோதரி மு.கீதா --  http://velunatchiyar.blogspot.com/ 
பெங்களுர்  தங்கை கிரேஸ் பிரபா -- http://thaenmaduratamil.blogspot.com/ 
கரந்தை ஜெயக்குமார் அய்யா--http://karanthaijayakumar.blogspot.in/
மற்றும் இதற்கான தயாரிப்பில் இருக்கும் நம் 
இலக்கிய உறவுகளைச் சந்திக்கும் மாநாடாகவே இருக்கப் போகிறது!
(உண்மையில் இந்தப்பட்டியல் தொடரப்போகிறது!, தொடரவேண்டும்!)

இவ்விழாவில் நூல் வெளியிடவிருக்கும் நம் உறவுகளை இப்போதே வாழ்த்துவோம்.. வரவேற்போம்..உதவிசெய்வோம்! வாழ்த்துகள்!!!

இதுதொடர்பான செய்திகளுக்கும், வருகையைப் பதிவுசெய்துகொள்ளவும், இங்கே சொடுக்குக.. 

“நாங்கள்ளலாம் மொதல்லயே பதிவு பண்ணிட்டோம்ல” என்னும் முணுமுணுப்போர், அவ்வப்போதைய செய்திகளை அறிந்து கொள்ளவும்,  பதிவுசெய்ததை உறுதிசெய்து கொள்ளவும், (வாக்களிக்கப் போகும்போது, “உங்க பேரு இல்லயே!” எனும் ஏமாற்றத்தைத் தவிர்த்துக்கொள்ளவும்)..(?) இப்போதே சரிபார்க்க - சொடுக்குக-


திண்டுக்கல் தனபாலன் - http://dindiguldhanabalan.blogspot.com/ 

தமிழ்வாசி பிரகாஷ் - http://www.tamilvaasi.com/

அன்புடன் அழைப்பது,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை
பி.கு. - புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்திலிருக்கும் வலைப்பதிவர் நண்பர்கள், வரும் அக்டோபர் 5ஆம் தேதி எனது நூல்வெளியீட்டு விழாவில் “வலைப்பதிவர் திருவிழாவிற்கு வருக“ என “புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கம்“ சார்பாக ஒரு விளம்பரப் பதாகை (ஃப்ளெக்ஸ்) வைத்து, அந்த விழாவின் பின்னர், படைதிரண்டு(?) மதுரை செல்லத் திட்டமிடுவோம் சரியா?

சாதியைக் காப்பாற்றும் சமூகம் முன்னேற முடியாது!

சாதியைக் காப்பாற்றும் சமூகம் 
முன்னேற முடியாது! 
புதுக்கோட்டை-செப்.11.
புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சியில உள்ள பாரதி மகளிர் கலை-அறிவியல் கல்லூரியில் நடந்த மகாகவி பாரதி நினைவுநாள் விழாவில் சிறப்புரை யாற்றிய கவிஞர் நா.முத்துநிலவன், “சாதியைக் காப்பாற்றும் சமூகம் முன்னேற முடியாது, சாதிக்கெதிரான உணர்வை வளர்த்து, சாதியற்ற சமூகம் தோன்றும்வரை பாரதி  நினைக்கப்ப்படுவான், நினைக்கப்பட வேண்டும்“ என்றார்.
பாரதி கல்விக்குழுமங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமையில் நடந்த விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்றுக் கல்லூரி முதல்வர் ஜானகி சுவாமிநாதன் பேசினார். தொடர்ந்து மாணவியர் உரையாற்றினர், பேராசிரியர் கவிதை வாசித்தார். தமிழ்த்துறைப் பேராசிரியர் மு.பாலசுப்பிரமணியன் அறிமுக உரையாற்றினார்.
விழாவில் சிறப்புரையாற்றிய கவிஞர் நா.முத்துநிலவன் மேலும் பேசியதாவது- அறிவுஎன்பதை வெறும்மதிப்பெண்ணாக மட்டுமே நினைத்துக்கொள்ள கூடாது. “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்ற வள்ளுவர் மிகப்பெரிய மேதை. அதை வெறும் வேலைவாய்ப்புக்கான கருவி என்று நினைப்பது தவறு.
தேர்வில் தோல்வியுற்ற பலர் நாட்டைக் கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள், அதே நேரம் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் மிகுந்த சுயநலத்துடன் ஏதாவது ஒரு நல்ல வேலையில் இருந்துகொண்டு சமூகத்தைப்பற்றிய அக்கறையில்லாமல் இருந்து வருவதைப் பார்க்கமுடிகிறது. இதையே நம் பாரதிதாசன்,“தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு, சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்பொன், சின்னதொரு கடுகுபோல் உள்ளங்கொண்டோன், தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்“ என்று பாடிச் சாடியதன் நுட்பத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன்னோடியாக “வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என நினைத்தாயோ?”  என்று பாரதி பாடியதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.  சாதாரண மனிதர்கள் வேறு, சாதனை மனிதர்கள் வேறு என்பதைப் பாரதி தெளிவாகப் புரிந்து கொண்டு சாதனை மனிதர்களை உருவாக்கவே அவன் கவிதையால் வேள்வி செய்தான்.
அதே போலப் பெண்கள் தம்மை அழகுபடுத்திக்கொள்வதே முக்கியம் என்பது போல விளம்பரம்வருவது வெறும் வணிகநோக்கம் கொண்டது என்பதை மாணவிகள் புரிந்துகொள்ள வேண்டும். உலக அழகிப் பட்டம் பெறுவோர் எல்லாம் தற்காலிகமாகப் புகழ்பெறுவோர்தான். அன்னை தெரசா தான் நிரந்தரமான உலக அழகி என்பதை நம் குழந்தைகள் புரிந்துகொண்டு பள்ளியில் வளர்க்கும் அன்பையும் அறிவையும் இந்த சமூகத்திற்காகப் பயன் படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படித் தன் அன்பால் உலகை வென்றவர்கள்தான் உலக அழகிகளைவிட நிரந்தரப் புகழ்பெற்றிருக்கிறார்கள். “பெண் அடிமைத்தனத்தின் அடையாளமே அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எனும் நான்கு குணம்“ என்று புதுமைப் பெண்களைப் போற்றிக் கும்மியடித்தவன் பாரதி.
அழகை-அறிவைப் புரிந்துகொண்டு, மாணவியர் தமக்குள் ஒளிந்துகிடக்கும் பன்முகத் திறமைகள் அனைத்தையும் வெளிக்கொண்டுவரப் பாடுபட வேண்டும். ஓவியர், பாடகர், இலக்கிய வாதி, விளையாட்டு வீரன், சமூகத்தொண்டாற்றும் தலைவன், எனத் தமக்குள் இருக்கும் பல்வேறு வகை ஆளுமைகளைக் கண்டுபிடிப்பதுடன் அத்திறன் சமூகத்துக்குப் பயன்படுமாறும் வாழவேண்டும். வெறும் மதிப்பெண் எடுக்கும் எந்திரங்கள் மனித  குலத்திற்குப் பயன்தராது. அந்தக் கல்வியை “பேடிக் கல்வி“ என்றும் “ஊணர் கலைத்திறன்“ என்றும் இகழ்ந்தவன் பாரதி.
வாழ்க்கைக்குப் பயன்படாத கல்வியை, கிராமத்துக் கிழவி, கோவில் வாசலில் நன்று மண்ணை வாரித் தூற்றி சாபமிடுவதுபோலவே பாரதி கொதித்துப் பாடுகிறான். “நலமோர் எள்துணையும் கண்டிலேன் –இதை- நாற்பதினாயிரம் கோவிலில் சொல்லுவேன்“ என்று பாரதி சாபமிடுவதை, பயனற்ற கல்வியின்மீதிருந்த கோபம் என்றே புரிந்துகொள்ள வேண்டும். கல்வி வாழ்க்கை முழுவதும் வரவேண்டும்
“தையல்சொல் கேளேல்“ என்று பெண்களை இழிவு படுத்திய சமூகத்திலிருந்து மாறுபட்ட பார்வையுடன், “தையலை உயர்வு செய்“ என்று பாடியவன் பாரதி. அது மட்டுமல்லாமல் அதைத் தன்வாழ்வில் நடைமுறைப்படுத்தி வாழ்ந்துகாட்டியவன். பெண்களைக் குருவாக ஏற்கத் தயங்கிய சமூகத்தில் தான் வெளியிட்ட நான்கு நூல்களையும் தனது ஞானகுருவான அன்னை நிவேதிதா தேவிக்கே சமர்ப்பித்தான்.
அதோடு, “சாதிகள் இல்லையடி பாப்பா“ என்று பாடியது போலவே, தனது வாழ்விலும் “சாதி மதங்களைப் பாரோம், உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின், வேதியர் ஆயினும் ஒன்றே அன்றி வேறு குலத்த்வர் ஆயினும் ஒன்றே“ என்று வாழ்ந்தவன். இப்படிச் சும்மா மேடையில பேசிவிட்டு வாழ்வில் கடைப்பிடிக்காதவரை “நடிப்புச் சுதேசிகள்“ என்றும், “வாய்ச்சொல் வீரர்கள்“ என்றும் எள்ளி நகையாடி இகழ்ந்தவன் பாரதி. சாதாரண மனிதர்கள், சாதனை மனிதர்கள் இடையே வரும் நடிப்புச் சுதேசிகளை இனங்கண்டு புறந்தள்ள வேண்டும்.
பாரதி இப்படிச் சொன்னதை எடுத்துச் சொல்ல எனக்குத் தகுதியிருக்கிறது. என் குடும்பத்தில் யாரும் சாதி பார்ப்பதில்லை. நான், என் மனைவி, மகள், மருமகன், மகன், மருமகள் என யாருமோ சாதியைப் பார்த்து திருமணம் செய்து கொள்ளவில்லை இதை, இயல்பாக எடுத்துக் கொண்டவர்கள். எனவே சாதி ஒழிப்புக் கருத்தில் பாரதியைப் பின்பற்றுவதைப் பெருமையுடன் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சாதி பார்க்கும் சமூகம் எந்தவகையிலும் முன்னேற முடியாது. உழைப்புச் சுரண்டலின் மறுவடிவமே சாதி என்பைதைப் புரிந்து கொண்டுதான் தனது சிறுகதையான “ஆறிலொரு பங்கு“ நூலை “பள்ளர் பறையர் எனப்படும் உழைப்பாளிப் பெருமக்களுக்கு சமர்ப்பணம்  செய்வதாக“ தெரிவித்துள்ளார் மகாகவி பாரதி! இந்த உணர்வு இன்றும் தேவைப்படுகிறது. உழைப்பை மதிக்காத, உழைப்புத் திருட்டின் மறுவடிமான சாதியைப் பெருமையாகக் கருதும் சமூகத்தில் முன்னேற்றத்திற்கு சாத்தியமே இல்லை! இதை இளைய சமுதாயம் புரிந்துகொண்டு, சாதியைப் புறந்தள்ளி, அறிவால்-உழைப்பால் உலகை வெல்லவேண்டும் சாதியற்ற ஒரு சமூகம் எழும்வரை பாரதி பேசப்படுவான், பேசப்பட வேண்டும் “
இவ்வாறு கவிஞர் நா.முத்துநிலவன் பேசி மாணவியர்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். கிராமப் புறத்தில் உள்ள பாரதி மகளிர் கலை-அறிவியல் கல்லூரியின் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவியர் விழாவில் கலந்துகொண்டனர்.
முன்னதாக, கல்லூரியின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள, மகாகவி பாரதியின் உருவச்சிலைக்கு, கல்லூரித் தலைவர் குரு.தனசேகரன், கவிஞர் நா.முத்துநிலவன் ஆகியோர் மாலையிட்டு, மலர்தூவி அஞ்சலி செய்ய, தொடர்ந்து முதல்வர் திருமதி ஜானகிசுவாமிநாதனுடன், பேராசிரியர்களும் நூற்றுக்கணக்கிலான மாணவியரும், மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.(படம்)
நன்றி - தினமணி (திருச்சிப்பதிப்பு)-12-09-2014  
செய்தி-திரு.மோகன்ராம், படம்-திரு.ஜெயச்சந்திரன்.
-------------------------------------------------------------------------------------

அக்டோபர் ஐந்தாம் தேதி அனைவரும் புதுக்கோட்டை வருக.


நண்பர்களே!
நமது 3 நூல்களின் வெளியீட்டுவிழா -
வரும் அக்டோபர் 5ஆம் தேதி அன்று நிகழவுள்ளது. 

அனைவரும் வருக என அன்புடன் அழைக்கிறேன்.
அச்சிட்ட அழைப்பை,
 வரும் 20-09-2014க்கு மேல் 
அஞ்சலில் அனுப்புவேன். அஞ்சல் அழைப்புக் கிடைக்காதவர்கள், இந்த இணைய அழைப்பை ஏற்று வரவேண்டுகிறேன். நன்றி.

 கல்விச்சிந்தனைகள்-
19 கட்டுரைகள் - பக்கம் -157)
விலை ரூ.120-

 இலக்கியச் சிந்தனைகள்
16 கட்டுரைகள் - பக்கம்-216)
விலை ரூ.140-

கவிதைகள்
(மரபுக்கவிதைகளும்,
புதுக்கவிதைகளுமாய்   பக்-96)
விலை ரூ.70-

கிடைக்குமிடம்-
அகரம் பதிப்பகம்,
எண்-1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-613 007, தமிழ்நாடு.
-------------------------------------

நா.முத்துநிலவன் நூலுக்கு மதுக்கூர் இராமலிங்கம் அவர்களின் முன்னுரை

முன்னுரை- மதுக்கூர் இராமலிங்கம்.
மார்க்சியக் 
கலப்பை கொண்டு  
மண்ணை உழும் ஆய்வுகள்
"கலை, கலைக்காகவே" என்றொரு வறட்டுக்கூச்சல் கேட்டது போல இன்னமும் சிலர் ஆய்வு, ஆய்வுக்காகவே என்று வெகு மக்களோடு தொடர்பில்லாத ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். ஆய்வுகளுக்கென்றே ஒரு செயற்கையான மொழியை உருவாக்கிக்கொண்டு எழுதிவருகின்றனர். மறுபுறத்தில் பட்டங்களுக்காக ஆய்வுரை எழுதுபவர்கள் சமூகத்தில் எந்தப் பயன்பாடும் இல்லாத பல்வேறு ஆய்வுகளைச் செய்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை ஆய்வு என்பது பட்டம் பெறுவதற்காகவே. 
ஆனால் மரியாதைக்குரிய அண்ணன் கவிஞர் நா.முத்துநிலவன், தமிழ் இலக்கியம் குறித்துச் செய்துள்ள ஆய்வுகள் அர்த்தச்செறிவுமிக்கவை. இலக்கியத்தின் அடர்த்தியை மட்டுமல்ல, அதன் ஆன்மாவையும் கண்டுணர்ந்து சொல்பவை. 
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை நான் நன்கறிவேன். பொது வாழ்விலும், சொந்த வாழ்விலும் சேர்ந்து சிரிக்கிற வாய்களில் ஒன்றாக மட்டுமின்றி, துவண்டு விழும் போது சாய்ந்து அழும் தோளாகவும் அவர் எனக்கு இருந்து வருகிறார்.
பள்ளியில் தமிழாசிரியப் பணியை நிறைவு செய்துள்ள அவர் தன்னுடைய பணிக் காலத்தில் ஏராளமான மாணவர்களை உருவாக்கியுள்ளார். கவிஞர், நாடறிந்த பேச்சாளர், பாடகர், அறிவொளி இயக்க்க் களப்பணியாளர், ஆய்வாளர் என, பன்முகத் தன்மையோடு இயங்கி வந்துள்ளது அவரது வாழ்க்கைப் பயணம். 
"கம்பன் தமிழும், கணினித் தமிழும்" என்ற தலைப்பில் பல்வேறு காலச் சூழலில் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்.  தமுஎகசவின் கவிதைப் பயிலரங்குகளில் ஒரு ஆசிரியராக பங்கேற்று கவிதையின் ஆழ, அகலங்களை தெளிவாக எடுத்துச் சொல்லும் திறன் பெற்றவர் அவர்.
அந்த வகையில் “இன்றைய தமிழில் பெண் கவிகள்“, புதுக்கவிதை, வரவும்-செலவும்“, காலங்களில் அவன் வசந்தம்“,ஜெய பாஸ்கரனின் கவிதைகளில் கெட்ட வார்த்தைகளா?“, “மரபுக்கவிதையெனும் மகாநதி வற்றிவிட்டதா?, கணினியில் வளரும் தமிழ்“ உள்ளிட்ட கட்டுரைகள், தமிழ்க்கவிதை குறித்த அவரது ஆழமான ஆய்வுகளை எடுத்துரைப்பதாக உள்ளன. 
மார்க்சிய இயங்கியல் எனும் வெளிச்சத்தில் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் அணுகுமுறை இன்றைக்கு அறிவியல்பூர்வ அணுகுமுறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கலாநிதி கைலாசபதி, கா.சிவத்தம்பி, நா.வானமாமலை தொ.மு.சி.ரகுநாதன், கே.முத்தையா, அருணன், ஆ.சிவசுப்பிரமணியம், கோ.கேசவன், அ.மார்க்ஸ், ந.முத்துமோகன், ச.செந்தில்நாதன் என, மார்க்சிய இலக்கிய ஆய்வாளர்களின் பட்டியல் நீளமானது. அந்தப் பபட்டியலில் இடம் பெற்றுள்ள நா.முத்துநிலவன், தமிழ் மரபு அறிந்தவராகவும், மார்க்சிய அறிவு நிறைந்தவராகவும் இருப்பதால் இரு கண்களின் வழியாக ஒரே பொருளை பார்ப்பது போல தன்னுடைய ஆய்வு கண்ணோட்டத்தை அமைத்துக் கொண்டுள்ளார். 
“இன்றைய தமிழில் பெண் கவிகள்“ என்ற கட்டுரையில் தமிழகத்து ஒளவை முதல் ஈழத்து அவ்வை வரை பறவைப் பார்வையாக ஆய்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளார். காதல் என்பது ஆண்,பெண் இருவருக்கும் பொதுவானது. ஆனால், ஆண்கள் பாடுவது போல காதலைப் பெண்கள் பாடமுடியவில்லை. சங்ககாலப் பெண்பாற் புலவர்களுக்கு காதல் உணர்ச்சியை பாடுவதற்கு இருந்த சுதந்திரம் பின்னாளில் பறிக்கப்பட்டது. ஆண்டாள்கூடத் தன்னுடைய காதல் உணர்ச்சியை ஆண்டவன் மீது ஏற்றித்தான் பாடவேண்டியிருந்தது. காதல் உட்பட அனைத்து உணர்ச்சிகளையும் பாடுபவர்களாக இன்றைய பெண் கவிஞர்கள் வளர்ந்து வருவது மகிழ்ச்சி தரும் வளர்ச்சியாகும். தமிழை மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்தையும் முன்னேற்றுவதில் பெண்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை கொள்கிறார் நா. முத்துநிலவன். 
"சங்க இலக்கியமும், தமிழ் சமூக வரலாறும்" என்ற ஆய்வு தனியொரு பெரு நூலாக விரிக்கத்தக்கது. தமிழ்இலக்கிய வரலாற்றை எழுதியுள்ள ஆசிரியர்கள் பலரும் கால வரிசைப்படியே எழுதியுள்ளனர். ஆனால் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் மனித சமூக வளர்ச்சியை ஆதிப் பொதுவுடைமைச் சமுதாயம், அடிமைச் சமுதாயம், நிலவுடைமைச் சமுதாயம், முதலாளித்துவச்  சமுதாயம், சமத்துவச் சமுதாயம் என வகைப்படுத்தியுள்ளது. இந்தச் சமூக அமைப்புகளுக்கான சான்றுகள் தமிழின் சங்க இலக்கியத்தில் இருப்பதை மிக நுட்பமாக ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.
சிலப்பதிகாரம் என்ற காவியமே மன்னர்களாக இருந்த நிலவுடைமையாளர்களுக்கும், புதிய வர்க்கமாக வளர்ந்த வணிக வர்க்கத்திற்கும் நடந்த மோதலின் விளைச்சல்தான் என்று தொ.மு.சி.தன்னுடைய 'இளங்கோவடிகள் யார்' என்ற நூலில் எழுதியிருப்பார். நிலவுடைமைசார் மதமாக சைவ, வைணமும், வணிகம்சார் மதமாக சமண, பவுத்த மதங்களும் இருந்தன. ஆதிப் பொதுவுடைமைச் சமூக எச்சங்களைச் சங்கப்பாடல் சிலவற்றில் காணமுடியும். நிலவுடைமை கெட்டிப்பட்டுப் பேரரசுகள் தோன்றிய நிலையில்தான் பெருங்காப்பியங்கள்  எழுதப்பட்டன.
க.நா.சு, ஜெயகாந்தன் போன்ற படைப்பாளிகள் குறித்தஆய்வு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஜனசக்தியில் துவங்கிய ஜெயகாந்தனின் பயணம், ஜெய ஜெய சங்கர வரை சென்றதை  அவருடைய படைப்புகளின் வழியாக ஆய்வு செய்துள்ளார். அதேபோன்று க.நா.சுவின் இலக்கிய மற்றும் ஆய்வுக் கொள்கை அணிநலன் பாராட்டுதல் மட்டும் சார்ந்தது அல்ல, அடிப்படையில் மக்கள் இலக்கியத்தை மறுதலிப்பது என்பதை நிறுவியுள்ளார். 
பாட்டுப் போட்டி ஒன்றில் மகாகவி பாரதியாருக்கு இரண்டாம்பரிசு மட்டுமே கிடைத்தது என்பதை ஒரு தகவலாக மட்டுமே அறிந்து வந்துள்ளோம். அப்படி என்றால் முதல் பரிசு பெற்ற பாடல் எது, அதை எழுதியவர் யார், என்று தெரியாது. முத்துநிலவனுக்கு ஏற்பட்ட அந்தக் கேள்வியும் ஆர்வமும் முதல் பரிசு பெற்ற பாடலைக் கண்டறிந்து சொல்வதோடு அது முதல் பரிசுக்குத் தகுதியுள்ளதுதானா என்ற கேள்வியையும் எழுப்புவதாக அமைந்துள்ளது. 
மனப்பாடத்தேவையோடு சேர்ந்ததுதான் மரபுக்கவிதைக்கான அவசியமும், ஆனால் இலக்கணக் கரைகளுக்குள் பாய்வதாலேயே அந்த மகாநதி வற்றிவிட வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இன்னமும் ஆற்றலோடு ஊற்றெடுக்க வேண்டியுள்ளது. மரபா,புதிதா என்பதைவிட அதன்வழி சொல்லப்படுவதுஎன்ன என்றகேள்வி மிக முக்கியமானது.
இந்த நூலில் மகுடமாக அமைந்துள்ள ஆய்வுகளில் ஒன்று "கம்பனும், கார்ல்மார்க்சும்" மார்க்சியம் என்பதே மேற்கத்திய இறக்குமதிச்சரக்கு என்று சில சனாதனவாதிகள் சாதிக்கிறார்கள்.  ஆனால் சமத்துவச் சமூகத்திற்கான ஏக்கம் தமிழ்க் கவிதைகளில் நீண்ட காலமாகவே பாலிடை நெய்யாக இருந்து வந்துள்ளது. “அறம் வெல்லும், அல்லவை தோற்கும்“ என்பதே கம்பனின் காவிய நெறியானால்,அறம் வெல்ல உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும்“ என்ற மாமேதை மார்க்ஸ் சொன்னது நடந்தேற வேண்டும் என்கிறார் நா.மு. கம்பனும் கார்ல் மார்க்சும் வாழ்ந்த காலமும் சூழலும் வேறுவேறு.  ஆனால் அவரவர் காலத்திற்குகேற்ப மானுட மேன்மையையே அவர்கள் நாடியுள்ளனர். 
ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இன்றைக்கு கணினியின் வழியாக கண்டங்களைத் தாண்டிப் பயணம் செய்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் மீது எத்தனையோ படையெடுப்புகள் நடந்திருக்கின்றன. ஆட்சிகள் மாறியிருக்கின்றன. ஆனால் அந்த ஆட்சியாளர்களையும் தனக்கு சேவை செய்யவைத்த பெருமை தமிழுக்குண்டு. இன்றைக்கு கணினியும் தமிழின் முன்னால் கைகட்டி நிற்கிறது. 
தமிழ் மரபும், மார்க்சிய் ஆய்வுநெறியும் சரிவர அறிந்த நா. முத்துநிலவன், இன்னும் ஏராளமான நூல்களை எழுதவேண்டும்.அவர் தனது பணிஓய்வுக்காலத்தைத் தமிழ்ப் பணிக்கான முழு வேலைக்காலமாக கொள்ள வேண்டும். இது ஒரு தம்பியின் பணிவான வேண்டுகோள்.
அன்புடனும், தோழமையுடனும்                         
மதுக்கூர் இராமலிங்கம்           “தீக்கதிர்“-நாளிதழ் பொறுப்பாசிரியர்
14-08-2014                       மதுரை-18

---------------------------------------------------------------------------------------------