சாதியைக் காப்பாற்றும் சமூகம் முன்னேற முடியாது!

சாதியைக் காப்பாற்றும் சமூகம் 
முன்னேற முடியாது! 
புதுக்கோட்டை-செப்.11.
புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சியில உள்ள பாரதி மகளிர் கலை-அறிவியல் கல்லூரியில் நடந்த மகாகவி பாரதி நினைவுநாள் விழாவில் சிறப்புரை யாற்றிய கவிஞர் நா.முத்துநிலவன், “சாதியைக் காப்பாற்றும் சமூகம் முன்னேற முடியாது, சாதிக்கெதிரான உணர்வை வளர்த்து, சாதியற்ற சமூகம் தோன்றும்வரை பாரதி  நினைக்கப்ப்படுவான், நினைக்கப்பட வேண்டும்“ என்றார்.
பாரதி கல்விக்குழுமங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமையில் நடந்த விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்றுக் கல்லூரி முதல்வர் ஜானகி சுவாமிநாதன் பேசினார். தொடர்ந்து மாணவியர் உரையாற்றினர், பேராசிரியர் கவிதை வாசித்தார். தமிழ்த்துறைப் பேராசிரியர் மு.பாலசுப்பிரமணியன் அறிமுக உரையாற்றினார்.
விழாவில் சிறப்புரையாற்றிய கவிஞர் நா.முத்துநிலவன் மேலும் பேசியதாவது- அறிவுஎன்பதை வெறும்மதிப்பெண்ணாக மட்டுமே நினைத்துக்கொள்ள கூடாது. “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்ற வள்ளுவர் மிகப்பெரிய மேதை. அதை வெறும் வேலைவாய்ப்புக்கான கருவி என்று நினைப்பது தவறு.
தேர்வில் தோல்வியுற்ற பலர் நாட்டைக் கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள், அதே நேரம் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் மிகுந்த சுயநலத்துடன் ஏதாவது ஒரு நல்ல வேலையில் இருந்துகொண்டு சமூகத்தைப்பற்றிய அக்கறையில்லாமல் இருந்து வருவதைப் பார்க்கமுடிகிறது. இதையே நம் பாரதிதாசன்,“தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு, சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்பொன், சின்னதொரு கடுகுபோல் உள்ளங்கொண்டோன், தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்“ என்று பாடிச் சாடியதன் நுட்பத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன்னோடியாக “வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என நினைத்தாயோ?”  என்று பாரதி பாடியதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.  சாதாரண மனிதர்கள் வேறு, சாதனை மனிதர்கள் வேறு என்பதைப் பாரதி தெளிவாகப் புரிந்து கொண்டு சாதனை மனிதர்களை உருவாக்கவே அவன் கவிதையால் வேள்வி செய்தான்.
அதே போலப் பெண்கள் தம்மை அழகுபடுத்திக்கொள்வதே முக்கியம் என்பது போல விளம்பரம்வருவது வெறும் வணிகநோக்கம் கொண்டது என்பதை மாணவிகள் புரிந்துகொள்ள வேண்டும். உலக அழகிப் பட்டம் பெறுவோர் எல்லாம் தற்காலிகமாகப் புகழ்பெறுவோர்தான். அன்னை தெரசா தான் நிரந்தரமான உலக அழகி என்பதை நம் குழந்தைகள் புரிந்துகொண்டு பள்ளியில் வளர்க்கும் அன்பையும் அறிவையும் இந்த சமூகத்திற்காகப் பயன் படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படித் தன் அன்பால் உலகை வென்றவர்கள்தான் உலக அழகிகளைவிட நிரந்தரப் புகழ்பெற்றிருக்கிறார்கள். “பெண் அடிமைத்தனத்தின் அடையாளமே அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எனும் நான்கு குணம்“ என்று புதுமைப் பெண்களைப் போற்றிக் கும்மியடித்தவன் பாரதி.
அழகை-அறிவைப் புரிந்துகொண்டு, மாணவியர் தமக்குள் ஒளிந்துகிடக்கும் பன்முகத் திறமைகள் அனைத்தையும் வெளிக்கொண்டுவரப் பாடுபட வேண்டும். ஓவியர், பாடகர், இலக்கிய வாதி, விளையாட்டு வீரன், சமூகத்தொண்டாற்றும் தலைவன், எனத் தமக்குள் இருக்கும் பல்வேறு வகை ஆளுமைகளைக் கண்டுபிடிப்பதுடன் அத்திறன் சமூகத்துக்குப் பயன்படுமாறும் வாழவேண்டும். வெறும் மதிப்பெண் எடுக்கும் எந்திரங்கள் மனித  குலத்திற்குப் பயன்தராது. அந்தக் கல்வியை “பேடிக் கல்வி“ என்றும் “ஊணர் கலைத்திறன்“ என்றும் இகழ்ந்தவன் பாரதி.
வாழ்க்கைக்குப் பயன்படாத கல்வியை, கிராமத்துக் கிழவி, கோவில் வாசலில் நன்று மண்ணை வாரித் தூற்றி சாபமிடுவதுபோலவே பாரதி கொதித்துப் பாடுகிறான். “நலமோர் எள்துணையும் கண்டிலேன் –இதை- நாற்பதினாயிரம் கோவிலில் சொல்லுவேன்“ என்று பாரதி சாபமிடுவதை, பயனற்ற கல்வியின்மீதிருந்த கோபம் என்றே புரிந்துகொள்ள வேண்டும். கல்வி வாழ்க்கை முழுவதும் வரவேண்டும்
“தையல்சொல் கேளேல்“ என்று பெண்களை இழிவு படுத்திய சமூகத்திலிருந்து மாறுபட்ட பார்வையுடன், “தையலை உயர்வு செய்“ என்று பாடியவன் பாரதி. அது மட்டுமல்லாமல் அதைத் தன்வாழ்வில் நடைமுறைப்படுத்தி வாழ்ந்துகாட்டியவன். பெண்களைக் குருவாக ஏற்கத் தயங்கிய சமூகத்தில் தான் வெளியிட்ட நான்கு நூல்களையும் தனது ஞானகுருவான அன்னை நிவேதிதா தேவிக்கே சமர்ப்பித்தான்.
அதோடு, “சாதிகள் இல்லையடி பாப்பா“ என்று பாடியது போலவே, தனது வாழ்விலும் “சாதி மதங்களைப் பாரோம், உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின், வேதியர் ஆயினும் ஒன்றே அன்றி வேறு குலத்த்வர் ஆயினும் ஒன்றே“ என்று வாழ்ந்தவன். இப்படிச் சும்மா மேடையில பேசிவிட்டு வாழ்வில் கடைப்பிடிக்காதவரை “நடிப்புச் சுதேசிகள்“ என்றும், “வாய்ச்சொல் வீரர்கள்“ என்றும் எள்ளி நகையாடி இகழ்ந்தவன் பாரதி. சாதாரண மனிதர்கள், சாதனை மனிதர்கள் இடையே வரும் நடிப்புச் சுதேசிகளை இனங்கண்டு புறந்தள்ள வேண்டும்.
பாரதி இப்படிச் சொன்னதை எடுத்துச் சொல்ல எனக்குத் தகுதியிருக்கிறது. என் குடும்பத்தில் யாரும் சாதி பார்ப்பதில்லை. நான், என் மனைவி, மகள், மருமகன், மகன், மருமகள் என யாருமோ சாதியைப் பார்த்து திருமணம் செய்து கொள்ளவில்லை இதை, இயல்பாக எடுத்துக் கொண்டவர்கள். எனவே சாதி ஒழிப்புக் கருத்தில் பாரதியைப் பின்பற்றுவதைப் பெருமையுடன் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சாதி பார்க்கும் சமூகம் எந்தவகையிலும் முன்னேற முடியாது. உழைப்புச் சுரண்டலின் மறுவடிவமே சாதி என்பைதைப் புரிந்து கொண்டுதான் தனது சிறுகதையான “ஆறிலொரு பங்கு“ நூலை “பள்ளர் பறையர் எனப்படும் உழைப்பாளிப் பெருமக்களுக்கு சமர்ப்பணம்  செய்வதாக“ தெரிவித்துள்ளார் மகாகவி பாரதி! இந்த உணர்வு இன்றும் தேவைப்படுகிறது. உழைப்பை மதிக்காத, உழைப்புத் திருட்டின் மறுவடிமான சாதியைப் பெருமையாகக் கருதும் சமூகத்தில் முன்னேற்றத்திற்கு சாத்தியமே இல்லை! இதை இளைய சமுதாயம் புரிந்துகொண்டு, சாதியைப் புறந்தள்ளி, அறிவால்-உழைப்பால் உலகை வெல்லவேண்டும் சாதியற்ற ஒரு சமூகம் எழும்வரை பாரதி பேசப்படுவான், பேசப்பட வேண்டும் “
இவ்வாறு கவிஞர் நா.முத்துநிலவன் பேசி மாணவியர்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். கிராமப் புறத்தில் உள்ள பாரதி மகளிர் கலை-அறிவியல் கல்லூரியின் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவியர் விழாவில் கலந்துகொண்டனர்.
முன்னதாக, கல்லூரியின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள, மகாகவி பாரதியின் உருவச்சிலைக்கு, கல்லூரித் தலைவர் குரு.தனசேகரன், கவிஞர் நா.முத்துநிலவன் ஆகியோர் மாலையிட்டு, மலர்தூவி அஞ்சலி செய்ய, தொடர்ந்து முதல்வர் திருமதி ஜானகிசுவாமிநாதனுடன், பேராசிரியர்களும் நூற்றுக்கணக்கிலான மாணவியரும், மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.(படம்)
நன்றி - தினமணி (திருச்சிப்பதிப்பு)-12-09-2014  
செய்தி-திரு.மோகன்ராம், படம்-திரு.ஜெயச்சந்திரன்.
-------------------------------------------------------------------------------------

10 கருத்துகள்:

 1. மிகவும் அருமையாக உரை நிகழ்த்தி இருக்கிறீர்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 2. மிக மிக கருத்து மிக்க உரை ஐயா! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 3. சாதியைப் பெருமையாகக் கருதும் சமூகம் முன்னேறாது
  அருமையான உரை ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
 4. பாரதி விழா கொண்டாட இதை விட வேறென்ன தகுதி வேண்டும் வாழ்த்துகள் அய்யா..

  பதிலளிநீக்கு
 5. பேச்சை நேரில் கேட்டது போல் இருக்கிறது அண்ணா! பெண்ணுக்கு அணிசெய்வது எது எனத்தொடங்கி, சாதிகளை சாடி அருமையாய் பயணிக்கிறது உரை. வளரும் சமுதாயம் உங்களை போன்ற ஆளுமைகளை பார்த்து வளர்வதே ஆரோக்கியமான விஷயம் இல்லையா அண்ணா?

  பதிலளிநீக்கு
 6. அருமையான உரை அண்ணா..பாரதியின் பாரதிதாசன் மேற்கோள்களை மிக ரசித்தேன்.
  பகிர்விற்கு நன்றி .

  பதிலளிநீக்கு
 7. அண்ணா! இந்த போஸ்ட்டை கொஞ்சம் படிச்சுபாருங்க ப்ளீஸ்:)
  http://makizhnirai.blogspot.com/2014/09/award-thanks.html

  பதிலளிநீக்கு
 8. வழக்கம் போல் ஒரு கலக்கல் உரை ...
  இப்படி தொகுத்து வைப்பது அருமை
  எங்கள் மாணவர்களை தயார் செய்ய உதவும்
  நன்றி

  பதிலளிநீக்கு