மார்க்சியக்
கலப்பை கொண்டு
மண்ணை உழும் ஆய்வுகள்
"கலை, கலைக்காகவே" என்றொரு
வறட்டுக்கூச்சல் கேட்டது போல இன்னமும் சிலர் ஆய்வு, ஆய்வுக்காகவே என்று
வெகு மக்களோடு தொடர்பில்லாத ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். ஆய்வுகளுக்கென்றே ஒரு
செயற்கையான மொழியை உருவாக்கிக்கொண்டு எழுதிவருகின்றனர். மறுபுறத்தில்
பட்டங்களுக்காக ஆய்வுரை எழுதுபவர்கள் சமூகத்தில் எந்தப் பயன்பாடும் இல்லாத பல்வேறு
ஆய்வுகளைச் செய்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை ஆய்வு என்பது பட்டம் பெறுவதற்காகவே.
ஆனால் மரியாதைக்குரிய அண்ணன் கவிஞர் நா.முத்துநிலவன், தமிழ் இலக்கியம் குறித்துச் செய்துள்ள ஆய்வுகள்
அர்த்தச்செறிவுமிக்கவை. இலக்கியத்தின் அடர்த்தியை மட்டுமல்ல, அதன் ஆன்மாவையும் கண்டுணர்ந்து சொல்பவை.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை நான் நன்கறிவேன்.
பொது வாழ்விலும்,
சொந்த வாழ்விலும் சேர்ந்து சிரிக்கிற
வாய்களில் ஒன்றாக மட்டுமின்றி, துவண்டு விழும் போது சாய்ந்து அழும்
தோளாகவும் அவர் எனக்கு இருந்து வருகிறார்.
பள்ளியில் தமிழாசிரியப் பணியை நிறைவு செய்துள்ள அவர் தன்னுடைய
பணிக் காலத்தில் ஏராளமான மாணவர்களை உருவாக்கியுள்ளார். கவிஞர், நாடறிந்த பேச்சாளர், பாடகர், அறிவொளி இயக்க்க்
களப்பணியாளர்,
ஆய்வாளர் என, பன்முகத் தன்மையோடு
இயங்கி வந்துள்ளது அவரது வாழ்க்கைப் பயணம்.
"கம்பன் தமிழும், கணினித் தமிழும்" என்ற தலைப்பில்
பல்வேறு காலச் சூழலில் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்.
தமுஎகசவின் கவிதைப் பயிலரங்குகளில் ஒரு ஆசிரியராக பங்கேற்று
கவிதையின் ஆழ,
அகலங்களை தெளிவாக எடுத்துச் சொல்லும்
திறன் பெற்றவர் அவர்.
அந்த வகையில் “இன்றைய தமிழில் பெண் கவிகள்“, “புதுக்கவிதை, வரவும்-செலவும்“, “காலங்களில் அவன் வசந்தம்“, ”ஜெய பாஸ்கரனின் கவிதைகளில் கெட்ட வார்த்தைகளா?“, “மரபுக்கவிதையெனும் மகாநதி வற்றிவிட்டதா?”,
“கணினியில் வளரும்
தமிழ்“ உள்ளிட்ட கட்டுரைகள், தமிழ்க்கவிதை குறித்த அவரது ஆழமான ஆய்வுகளை
எடுத்துரைப்பதாக உள்ளன.
மார்க்சிய இயங்கியல் எனும் வெளிச்சத்தில் தமிழ் இலக்கியத்தை ஆய்வு
செய்யும் அணுகுமுறை இன்றைக்கு அறிவியல்பூர்வ அணுகுமுறையாக
அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கலாநிதி கைலாசபதி, கா.சிவத்தம்பி, நா.வானமாமலை தொ.மு.சி.ரகுநாதன், கே.முத்தையா, அருணன், ஆ.சிவசுப்பிரமணியம், கோ.கேசவன், அ.மார்க்ஸ், ந.முத்துமோகன், ச.செந்தில்நாதன் என, மார்க்சிய
இலக்கிய ஆய்வாளர்களின் பட்டியல் நீளமானது. அந்தப் பபட்டியலில் இடம் பெற்றுள்ள நா.முத்துநிலவன், தமிழ் மரபு அறிந்தவராகவும், மார்க்சிய அறிவு நிறைந்தவராகவும்
இருப்பதால் இரு கண்களின் வழியாக ஒரே பொருளை பார்ப்பது போல தன்னுடைய ஆய்வு
கண்ணோட்டத்தை அமைத்துக் கொண்டுள்ளார்.
“இன்றைய தமிழில் பெண் கவிகள்“ என்ற கட்டுரையில் தமிழகத்து ஒளவை
முதல் ஈழத்து அவ்வை வரை பறவைப் பார்வையாக ஆய்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளார். காதல்
என்பது ஆண்,பெண் இருவருக்கும் பொதுவானது. ஆனால், ஆண்கள் பாடுவது போல
காதலைப் பெண்கள் பாடமுடியவில்லை. சங்ககாலப் பெண்பாற் புலவர்களுக்கு காதல் உணர்ச்சியை பாடுவதற்கு
இருந்த சுதந்திரம் பின்னாளில் பறிக்கப்பட்டது. ஆண்டாள்கூடத் தன்னுடைய காதல்
உணர்ச்சியை ஆண்டவன் மீது ஏற்றித்தான் பாடவேண்டியிருந்தது. காதல் உட்பட அனைத்து
உணர்ச்சிகளையும் பாடுபவர்களாக இன்றைய பெண் கவிஞர்கள் வளர்ந்து வருவது மகிழ்ச்சி
தரும் வளர்ச்சியாகும். தமிழை மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்தையும் முன்னேற்றுவதில்
பெண்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை கொள்கிறார் நா. முத்துநிலவன்.
"சங்க இலக்கியமும், தமிழ் சமூக வரலாறும்" என்ற ஆய்வு
தனியொரு பெரு நூலாக விரிக்கத்தக்கது. தமிழ்இலக்கிய வரலாற்றை எழுதியுள்ள
ஆசிரியர்கள் பலரும் கால வரிசைப்படியே எழுதியுள்ளனர். ஆனால் வரலாற்றுப் பொருள்
முதல்வாதம் மனித சமூக வளர்ச்சியை ஆதிப் பொதுவுடைமைச் சமுதாயம், அடிமைச் சமுதாயம், நிலவுடைமைச் சமுதாயம், முதலாளித்துவச் சமுதாயம், சமத்துவச் சமுதாயம் என வகைப்படுத்தியுள்ளது. இந்தச் சமூக
அமைப்புகளுக்கான சான்றுகள் தமிழின் சங்க இலக்கியத்தில் இருப்பதை மிக நுட்பமாக
ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.
சிலப்பதிகாரம் என்ற காவியமே மன்னர்களாக இருந்த
நிலவுடைமையாளர்களுக்கும், புதிய வர்க்கமாக வளர்ந்த வணிக
வர்க்கத்திற்கும் நடந்த மோதலின் விளைச்சல்தான் என்று தொ.மு.சி.தன்னுடைய 'இளங்கோவடிகள் யார்' என்ற நூலில் எழுதியிருப்பார்.
நிலவுடைமைசார் மதமாக சைவ, வைணமும், வணிகம்சார் மதமாக சமண, பவுத்த மதங்களும் இருந்தன. ஆதிப் பொதுவுடைமைச் சமூக எச்சங்களைச்
சங்கப்பாடல் சிலவற்றில் காணமுடியும். நிலவுடைமை கெட்டிப்பட்டுப் பேரரசுகள் தோன்றிய
நிலையில்தான் பெருங்காப்பியங்கள் எழுதப்பட்டன.
க.நா.சு, ஜெயகாந்தன் போன்ற படைப்பாளிகள்
குறித்தஆய்வு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஜனசக்தியில் துவங்கிய ஜெயகாந்தனின்
பயணம், ஜெய ஜெய சங்கர வரை சென்றதை அவருடைய படைப்புகளின் வழியாக ஆய்வு செய்துள்ளார். அதேபோன்று க.நா.சுவின்
இலக்கிய மற்றும் ஆய்வுக் கொள்கை அணிநலன் பாராட்டுதல் மட்டும் சார்ந்தது அல்ல, அடிப்படையில் மக்கள் இலக்கியத்தை மறுதலிப்பது என்பதை
நிறுவியுள்ளார்.
பாட்டுப் போட்டி ஒன்றில் மகாகவி பாரதியாருக்கு இரண்டாம்பரிசு
மட்டுமே கிடைத்தது என்பதை ஒரு தகவலாக மட்டுமே அறிந்து வந்துள்ளோம். அப்படி என்றால்
முதல் பரிசு பெற்ற பாடல் எது, அதை எழுதியவர் யார், என்று தெரியாது. முத்துநிலவனுக்கு ஏற்பட்ட அந்தக் கேள்வியும்
ஆர்வமும் முதல் பரிசு பெற்ற பாடலைக் கண்டறிந்து சொல்வதோடு அது முதல் பரிசுக்குத்
தகுதியுள்ளதுதானா என்ற கேள்வியையும் எழுப்புவதாக அமைந்துள்ளது.
மனப்பாடத்தேவையோடு சேர்ந்ததுதான் மரபுக்கவிதைக்கான அவசியமும், ஆனால் இலக்கணக் கரைகளுக்குள் பாய்வதாலேயே அந்த மகாநதி வற்றிவிட
வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இன்னமும் ஆற்றலோடு ஊற்றெடுக்க
வேண்டியுள்ளது. மரபா,புதிதா என்பதைவிட அதன்வழி சொல்லப்படுவதுஎன்ன
என்றகேள்வி மிக முக்கியமானது.
இந்த நூலில் மகுடமாக அமைந்துள்ள ஆய்வுகளில் ஒன்று "கம்பனும், கார்ல்மார்க்சும்" மார்க்சியம் என்பதே மேற்கத்திய இறக்குமதிச்சரக்கு
என்று சில சனாதனவாதிகள் சாதிக்கிறார்கள். ஆனால் சமத்துவச் சமூகத்திற்கான ஏக்கம் தமிழ்க் கவிதைகளில் நீண்ட
காலமாகவே பாலிடை நெய்யாக இருந்து வந்துள்ளது. “அறம் வெல்லும், அல்லவை தோற்கும்“ என்பதே கம்பனின் காவிய நெறியானால், “அறம் வெல்ல உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும்“ என்ற மாமேதை
மார்க்ஸ் சொன்னது நடந்தேற வேண்டும் என்கிறார் நா.மு. கம்பனும் கார்ல் மார்க்சும்
வாழ்ந்த காலமும் சூழலும் வேறுவேறு. ஆனால் அவரவர் காலத்திற்குகேற்ப மானுட மேன்மையையே அவர்கள்
நாடியுள்ளனர்.
ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இன்றைக்கு கணினியின் வழியாக
கண்டங்களைத் தாண்டிப் பயணம் செய்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் மீது எத்தனையோ
படையெடுப்புகள் நடந்திருக்கின்றன. ஆட்சிகள் மாறியிருக்கின்றன. ஆனால் அந்த ஆட்சியாளர்களையும்
தனக்கு சேவை செய்யவைத்த பெருமை தமிழுக்குண்டு. இன்றைக்கு கணினியும் தமிழின்
முன்னால் கைகட்டி நிற்கிறது.
தமிழ் மரபும், மார்க்சிய் ஆய்வுநெறியும் சரிவர அறிந்த நா.
முத்துநிலவன், இன்னும் ஏராளமான நூல்களை எழுதவேண்டும்.அவர் தனது பணிஓய்வுக்காலத்தைத்
தமிழ்ப் பணிக்கான முழு வேலைக்காலமாக கொள்ள வேண்டும். இது ஒரு தம்பியின் பணிவான
வேண்டுகோள்.
அன்புடனும், தோழமையுடனும்
மதுக்கூர்
இராமலிங்கம் “தீக்கதிர்“-நாளிதழ் பொறுப்பாசிரியர்
14-08-2014 மதுரை-18
---------------------------------------------------------------------------------------------
விமர்சனம் நூலினைப் படிக்கத் தூண்டுகிறது ஐயா
பதிலளிநீக்குகாத்துக் கொண்டிருக்கிறேன்
அண்ணா ,
பதிலளிநீக்குஇவரது பட்டிமன்ற பேச்சை போலவே இருக்கிறது அன்பும், ஆழமுமான முகவுரை. அவர் குறிபிடும் கட்டுரைகளை படித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆசையாய் இருக்கிறது புத்தகத்தை படிக்க.
அருமையான முகவுரை
பதிலளிநீக்குகவிஞர் மதுக்கூர் தீக்கதிரின் பொறுப்பாசிரியர் என்பது இப்போது தான் தெரியும்!
வழக்கம்போல் நோக்கியா பணால்
தொடர்பில் வர இயலாமைக்கு மன்னிக்கவும்
தங்களுடைய படைப்புகளைப் படித்து பிரமித்த்ப் போய் இருக்கிறேன். புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் என்ற அளவில் மட்டுமே அறிந்த தங்களின் பன்முகத் தன்மையை அறிந்து கொள்ள உதவியதற்கும் தங்களின் அரிய நட்பு கிடைத்தமைக்கும் இணையத்திற்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.
பதிலளிநீக்குபொருத்தமான முன்னுரை
நூலை கையில் தவழவிடவும், கண்களால் சிறைபிடிக்கவும், அறிவில் ஊன்றி வைக்கவும் காத்திருக்கிறேன்--- ஆவலோடு -- மலையப்பன்
பதிலளிநீக்கு