மும்பை இலக்கியக் கூடத்தில் நா.முத்துநிலவன் உரை (காணொலி இணைப்பு)

 

“பழந்தமிழ் இலக்கியத்தின்

இன்றைய பயன்பாடு”

குவிய வழியில்

நா.முத்துநிலவன்

உரைப்பதிவு

நன்றி :

மும்பை இலக்கியக் கூடம்

நண்பர்கள்

https://youtu.be/QnjYFAhS61M


உரை பற்றிய

நண்பர்களின் கருத்துகளை

அறிய ஆவல்

-----------------------------------

கவிஞர் ஆர்.நீலாவின் கவிதைத் தொகுப்பு அணிந்துரை

கவிஞர் ஆர்.நீலா எழுதிய

“வீணையல்ல நான் உனக்கு”

கவிதைத் தொகுப்பை முன்வைத்து

--------------------------------------------------------------

சுயமாக வளரும் மூலிகைச் செடி

அணிந்துரை  --  நா.முத்துநிலவன்

கவிஞர் நீலாவைப் பார்ப்பதற்கு முன்னதாக அவரது, கிராமிய மணம் கமழும் ஒரு கவிதையைத்தான் முதலில் பார்த்தேன்.  1991 - 92 ஆம் ஆண்டுகளில் புதுக்கோட்டை அறிவொளி இயக்கத்தில், நாடகக் குழுக்கள் - பாடல் ஒலி நாடா பத்திரிகைக்குப் பொறுப்பான மாவட்ட  றிவொளி ஒருங்கிணைப்பாளராக நான் பணியாற்றி வந்தபோது, அறிவொளி இயக்க ஊழியர்களை ஊக்குவிக்க ஊர் கூடிஎனும் மாத இதழை நடத்தி வந்தோம். அது 25,000 பிரதிகள் அச்சிடப்பட்டு மாவட்டம் முழுவதும் நடந்த அறிவொளி வகுப்புகளுக்கு, தகவல் கூறி உற்சாகப்படுத்தி வந்தது.

அந்த இதழின் ஆசிரியராக திருமிகு ஷீலாராணி சுங்கத் அவர்கள், (புதுக்கோட்டையின் அன்றைய மாவட்ட ஆட்சியர்) எங்களை சிறப்பாக வழிநடத்தி வந்தார்கள். ஒருங்கிணைப்பாளர்களின் ஒத்துழைப்போடும், அறிவொளித் தலைவரின் வழிகாட்டுதலோடும் நடத்தப்பட்ட அந்தஊர்கூடி- இதழுக்கு நான் உதவி ஆசிரியராக இருந்தேன்.


அப்படி நீலாவை எனக்கும்,

தமிழிலக்கிய உலகுக்கும் அறிமுகப் படுத்திய கவிதை இது -

அறிவொளி முத்தம்மா!

முதியோர் ஊதியத்தை

முறையாகப் பெற்றுவந்த

முத்தம்மா பாட்டிக்கும்

தபால்காரத் தங்கையாவுக்கும்

ஏதோ தகராறு

அருகில் சென்று

ஆதரவாய்க் கேட்டேன்,

என்ன பாட்டி தகராறு?”

அறிவொளி வகுப்புல நா

அழகாப் படிச்சு,

கையெழுத்துப் போடக்

கத்துக்கிட்டேன் னு சொல்லியும்,

கைநாட்டைக் கேக்குறான் டி

கட்டையில போறவன்

குழந்தையின் கள்ளங்கபடமற்ற சிரிப்பைப் போல பார்த்தவுடனே நெஞ்சோடு வந்து பச்சக்கென்றுஒட்டிக் கொண்டது கவிதை! நான் அதை  மிகவும் ரசித்துப் படித்து, மாவட்ட ஆட்சியரிடம் காட்டினேன். பாசாங்கற்ற அந்தக் கவிதையால் கவரப்பட்ட அவர்கள், ‘எழுதியது யார்?’ என்று கேட்டபோது, ‘ஆர் .நீலா என்று மட்டும் தான் இருக்கிறது வேறு விவரம் இல்லைஎன்றதும், தனது நாட்குறிப்பில் அதை எழுதித் தரச் சொல்லி வாங்கிக் கொண்டு படித்து ரசித்து பெண்கள் கூடும் அறிவொளி நிகழ்ச்சிகளிலெல்லாம் அதைக்கூறி, ‘இதை எழுதிய நீலா யார்? இங்கே இருக்கிறாரா?’ என்று கேட்டுக் கேட்டு, கடைசியாக நீலாவைக் கண்டுபிடித்து என்னிடம் கூறினார்கள். நான் அந்த உருவத்தைப் பார்த்து   வியந்து போனேன்! கவிதையைப் போலவே பாசாங்கற்ற முகம் பேச்சும் அப்படியே.. இந்த மாரிக்க சா..ர்..எனும் நீலாவின் பேச்சு 30 வருடம் கடந்து இப்போதும் அப்படியே இருப்பது இன்னும் வியப்பாகத்தான் இருக்கிறது!

கதை, கவிதை படிப்பதிலும் எழுதுவதிலும் இயல்பாகவே ஆர்வமாக இருந்த நீலா அதன் பிறகு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு நெருக்கமானதில் ஆச்சரியமில்லை த மு எ ச வின்  மாவட்டச் செயலராகவும் இருந்த நான், புதுக்கோட்டையில் நடந்த  இலக்கியக் கூட்டங்களுக்கு நீலாவை அழைப்பதும் அவரும் வந்து கலந்து கொள்வதும் ஆலங்குடியில் தமுஎச கிளை உருவானதும் இயல்பாகவே நடந்தது . அவருடன் அவரது கணவர் எங்கள் அருமை  நண்பர் சுபி, மகன்கள் சுதாகர் - பிரபாகர் மற்றும் ஆலங்குடியின் கலை இலக்கிய நண்பர்கள் அனைவரும் தமுஎகசவோடும் நெருக்கமாயினர்.

பிறகு, தோழர்கள் சு.மதியழகன், எஸ்..கருப்பையா, வடிவேலு, மற்றும் ஓவியர்கள் முதலான அனைவரும் நீலாவின் மூலமாகவே எனக்கும் அறிமுகமாகி மாவட்ட தமுஎகச நிர்வாகிகளாகி தோழமை உறவாயினர்!

இந்த விதமாக, எழுதுவதில் மட்டுமில்லாமல் தலைமைதாங்குவதிலும் ஒரு சேர ஆர்வம் காட்டிய நீலா, அதன்பிறகு அவள் விகடன், இளைஞர் முழக்கம், செம்மலர் இதழ்கள் நடத்திய கலை இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றுச் சிறந்தார். ஆனந்தவிகடன் பவளவிழா கவிதைப்   போட்டியில் நீலாவின் இரண்டு கவிதைகள் தேர்வு செய்யப்பட்டன.

தமுஎகசவின் மாவட்டத் தலைவர்களில் ஒருவராக, பிறகு மாநிலச் செயலாக, மகளிர் ஒருங்கிணைப்பாளராக  வளர்ந்திருப்பது யாருடைய சிபாரிசிலும் அல்ல, தனது படைப்பு உழைப்பு தலைமைப் பண்புக்காக அவரே உழைத்து செதுக்கிப் பெற்ற உயர்வு

காலம் அறிந்து கூடும் சேவலை

கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது

கல்லைத் தூக்கி பாரம் வைத்தாலும்

கணக்காய்க் கூவும் தவறாது

- எனும் பட்டுக்கோட்டையின் கருத்து உண்மையல்லவா?  என்னைச் சந்தித்திருக்காவிட்டாலும் இவருக்கு இந்த வளர்ச்சி எப்படியும் கிட்டியிருக்கும்.  ஏனெனில் இவர் சுயமாக வளரும் மூலிகைச் செடி!.

ஒரு பெண் அவள் பெண் என்பதாலயே வீட்டுக்கும் நாட்டுக்கும் சுமையாகக் கருதப்படுகிறாள் என்பது, இன்றைய சமூகத்தின் முரண்பாடுகளில் முக்கியமானது.

ஆனால் தன் எதிர்பார்ப்பு உள்ளத்தளவிலோ உடலளவிலோ நிறைவேறாதபோது அடங்காத பெண்புலிகளாகி அந்த உணர்வுகளையும் கொட்டித் தீர்த்துவிடும் பெண்கவிகள், அண்மைக்காலமாகத் தமிழ்க் கவிதை உலகில் புயல்கிளம்பி வருவதுதான். இதுவரை தமிழில் கேட்டிராத புதுக்குரல். சங்க காலத்திற்குப் பிறகு இரண்டாயிரம் ஆண்க் கழித்துப் பெண்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருப்பது இப்போதுதான், பெண்களின் வாழ்க்கை இப்போது என்னவாக இருக்கிறது என்பது முன் எப்போதையும் விட அழுத்தமாக வெளிப்படுகிறது என்கிறார் அண்மையில் செம்மொழித் தமிழ்விருது பெற்ற பேரா.பஞ்சாங்கம்.
(
புத்தகம் பேசுது நேர்காணல் - செப் - 04) இதையே கடந்த 2004 செப்டம்பர் 11 ஆம் தேதி, இந்திய சாகித்திய அகாதமியின் பொன் விழாவையொட்டி திருவனந்தபுரத்தில் நடந்த 4 தென்மாநிலங்களுக்கான கருத்தரங்கில் தமிழ்க்கவிதை பற்றி நான் வாசித்த கட்டுரையிலும் கூறியிருந்தேன்.

முன்னெப்போதையும்விடப் பெண் குரல் சற்றே உயர்ந்தும், கலையழகோடும் தமிழ்க் கலை இலக்கியத் துறையில் தற்போது வெளிப்பட்டு வருவதற்கு தமிழ்நாட்டின் ஜனநாயக இயக்கங்கள் அடைந்துள்ள வளர்ச்சி ஒரு முக்கியமான காரணம்

மும்பையிலிருந்து புதியமாதவியும், புதுவையிலிருந்து மாலதி மைத்ரியும், சென்னையிலிருந்து கனிமொழி, இளம்பிறை, தாமரையும், வந்தவாசியிலிருந்து அ. வெண்ணிலாவும், திருத்தணியிலிருந்து.கல்பனாவும ,  துவரங்குறிச்சியிலிருந்து  சல்மாவும், சிவகாசியிலிருந்து திலகபாமாவும், திண்டுக்கல் அய்யம்பாளையத்திலிருந்து சக்திஜோதியும், புதுக்கோட்டை ஆலங்குடியிலிருந்து ஆர். - நீலாவும் நம்பிக்கையூட்டும் வகையில் எழுதிவரும் பெண்கவிகள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

இந்தத் தொகுப்பில் மிகப்பல கவிதைகள் எனக்கு மட்டுமல்ல இதைப் படிக்கும். கவிதை ஆர்வலர் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

பூக்களைப் போல, சிறகு விரிக்க, மரப்பாச்சிப் பொம்மைக்கும், கிரகணம், பொன் பார்க்கும் படலம், அறிவொளி முத்தம்மா, விமர்சனம், நமக்கும் வேணும், ஆராரோ, வீணையல்ல, சந்தேகம், தலைமுறை சோகம், அந்தக் கொள்ளிக் கூடத்தில் மற்றும் ஓசிச்சோறும் ஒருமொந்தைக் கள்ளும், புள்ளி, உடலதிகாரம், முதலான கவிதைகள் அப்படி நேர்த்திக் கவிதைகள்

பூக்களைப் போல
வண்ணங்களோடு பிறக்கவும்
வாசனையோடு இருக்கவும்
ஆசைதான்..
ஆனால்
நல்லவற்றை இணைப்பதென்றால்
நாராக இருக்கவும் சம்மதமே


எனும் கவிதையில் இவர் ஒரு இலக்கியவாதி மட்டுமல்ல, சமூக இயக்கவாதியும் கூட என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார்.

ஆரடிச்சா சொல்லியழு எனும் போஸ்ட் மாடனிசக்கவிதை ஆச்சரியமூட்டுகிறது.

முருங்கைத் தோழி கவிதை நற்றிணையையும்

முன்னம் உனது நாமம் கேட்டான் பக்தி இலக்கியத்தையும் 

நினைவூட்டி இவரது வேர்களின் ஆழத்தை விளக்கும் எனில்

மெயில் விடு தூது கவிதையும், தலைமுறை சோகம் கவிதையும் 

இவரது சிறகுகளின் பார-தூரத்தைக் காட்டுகின்றன 

வீணையல்ல நானுனக்கு எனும் தலைப்புக் கவிதை மிக அருமையானது

. தாய் தந்தை தம் குழந்தைகளை, கணவர் தன் மனைவியை,  வழி நடத்துகிறேன் எனும் ஆர்வக்கோளாறில் செய்யும் அவச்செயல்கள் இந்தத் தலைமுறையில் ஏராளம். இந்தப் புரிதல் இல்லாததால் நடக்கும் குடும்பச் சிக்கல்கள் சமுதாயச் சிக்கலில் கொண்டுபோய் நிறுத்தி, குடும்பமும், சமூகமும் சேர்ந்தே சீரழிவதை நாம் பார்த்து வருகிறோம்.

கெட்ட எண்ணத்தோடு செய்தால் திட்டலாம், திருத்தலாம், நல்ல எண்ணம் கொண்டு செய்யப்படும் இந்த வழிகாட்டுதல் எனும் பிடி வாத கருத்தை என்ன செய்வது? இதைக் கவிதையாக்கி பொட்டில் அறைகிறார் நீலா.


இதைபோலத்தான் நாணமென்றும் அச்சமென்றும் நாய்கட்கும் வேண்டாம் என்று ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய போதும், பாரதி நினைக்கப்பட்டான். ஊமையராய்க் கிடந்த நம் நாட்டு - வீட்டு - பெண்கள்தான் . எந்த அளவு வளர்ந்துவிட்டார்கள் என்பதை பாரதி பார்த்தால் “குழந்தைகளின்“ வளர்ச்சி கண்டு நிச்சயமாக பூரித்துப் போய் ஒரு கவிதை எழுதியிருப்பான் என்றே தோன்றுகிறது.

என் சரியை மட்டுமல்ல
என் தவறையும்
நானே செய்துகொள்கிறேன்


-
எனும் வரிகள் புதிய சமூகத்துக்கான விதைகள்  புதிய விழுதுகளை இறக்கும், அவையும் வேர்விடும், அதிலும் புதிய விழுதுகள் எழும்..

நடன சிங்காரன், வியூகம், விரிகோணம், குரல்கள் தலைமுறை இடைவெளி ஆகிய கவிதைகள் ஒரு பொருட் பல குரல் கவிதைகள்!

பக்கத்துப் பாண்டிய நாட்டுக்குப்பொருள் வயின் பிரிந்ததலைவனை நினைந்து, சோழநாட்டுக் காதலி அலைக்கழிந்த நிலைபோலவே,

இன்றும்

பாலைவன துபாய்க்குப் போன கணவனை நினைந்து, பரிதவிக்கும் காதலி இருக்கத்தான் செய்கிறாள்என்பது பெண்கள் நிலையில் இரண்டு நூற்றாண்டு கழிந்தும் பெரிய மாற்றமில்லை என்பதை அறைந்து சொல்லும் கவிதை நெஞ்சைப் பிழிகிறது!

குடிப்பவன் நீ துடிப்பவள் பெண்என்பதும்,

ஒவ்வொரு முறையும்

ஒரு பிணத்தைத் தழுவுவதை

நீ உணர்வதே இல்லை என்பதும் என்றைக்கு மாறுமோ என படிக்கும் அனைவரையும் குடிக்கு எதிராகத் திருப்பும் கூர்வேல் கவிதைகள்.


ஏற்கனவே ஒரு சிறுகதை, கவிதைத் தொகுதி, ஒரு கட்டுரைத் தொகுதி வெளியிட்டிட்ருந்தாலும் கவிதையைப் பொறுத்தவரை, இவை இவரது மொத்தத் தொகுதி. இன்னும் இன்னும் வேண்டும ், எழுதுவார்.

இந்த மூலிகைச் செடியின் வாசம், ஆலங்குடி புதுக்கோட்டை தாண்டி தமிழகம் முழுவதும் மணம்பரப்பி வருவது பெருமிதம் தருகிறது.

கவிதையின் பழைய அடையாளங்களை மட்டுமல்ல, நவீன போக்குகளையும் நன்கு உணர்ந்து எழுதியும் இயங்கியும் வரும் இவர், இன்னும் இன்னும் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன் .

அன்புடன்,

நா.முத்துநிலவன் - செல்பேசி - 94431 93293

புதுக்கோட்டை

06-09-2021

------------------------------------------------------------------------ 

 

குறள் அறமும் மனு (அ)தர்மமும் - (ஆய்வுக் கட்டுரை)

 எங்கள் குறளும் உங்கள் மனுவும் 

எப்படிச்  சமமாகும்?

(ஆய்வுக் கட்டுரை)

-- நா.முத்துநிலவன் — 

-- வெளியீட்டுக்கு நன்றி --

 “திராவிடப் பொழில்”

( இருமொழி, முத்திங்கள் ஆய்விதழ் - அக்-டிச-2021)

இணைய இணைப்பு-


       https://dravidapozhil.pmu.edu/Kuralum-Manuvum-Oppidu.aspx

 

மனுநூல் ஒரு மக்கள் விரோத நூல். பெண்களை, உழைக்கும் மக்களை இழிவுபடுத்தி, பார்ப்பனர்கள் உழைக்காமலே அதிகாரம் செய்து சாப்பிடுவதற்கான சூழ்ச்சிகளைக் கொண்ட ஒரு நூல். ஒவ்வொரு சூத்திரமும் (சுலோகம்) உழைக்கும் மக்களை அடிமைப் படுத்துவதற்கான வஞ்சக சூத்திரநூல்! இதை ஏற்கெனவே பலகாலமாகத் தந்தை பெரியாரும்,  திராவிடர் கழகமும், இடதுசாரி, தலித்திய, முற்போக்கு இயக்கத் தோழர்களும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.  

ஆனால், அண்மையில், “அய்ரோப்பிய ஒன்றியப் பெரியார் அம்பேத்கரியத் தோழர்கள் கூட்டமைப்புநடத்திய கருத்தரங்கம் ஒன்றில், “இந்திய அரசியலில் பெரியார்எனும் தலைப்பில் பேசிய வி.சி.க.தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள், மனுநூல் பெண்களை இழிவு செய்திருப்பதைச் சொல்லி, அதை எதிர்த்துப் பெரியார் நடத்திய போராட்டங்களைப் பற்றியும் பேசினார். இந்த நிகழ்ச்சி பெரியார் வலைக்காட்சியில் அக்.-16, 2020 அன்று வந்தது. இன்றும் இருக்கிறது. “ மனு (அ)தர்ம நூலைத் தடைசெய்என்ற திருமா, அதற்கான இயக்கத்தையும் முன்னெடுத்தார் (1)  இதற்காகத் தோழர் திருமாவளவன் மீது வழக்குப் போட்டார்கள்,  அந்த வழக்குத் தள்ளுபடி ஆகிவிட்டது.  வாய்மையும் சிலநேரம் வெல்லுமல்லவா? ஆனால் அதன் தொடர்ச்சியாக தமிழ் ஊடகங்களில் நடந்த விவாதங்கள் எளிதில் மறந்துவிடக்  கூடியவை அல்ல.

மனுதர்மத்தின் அதர்மக் கருத்துகளுக்கு எப்போதுமே வக்காலத்து வாங்கும் வக்கீலான தினமணி சும்மா இருக்குமா?  சுடச்சுடக் கட்டுரைகளை வெளியிட்டு மனுப்போட்டு வந்தது!  மனுஸ்மிருதியில் பெண்கள் என, கோதை ஜோதிலட்சுமி என்பவர் எழுதிய கட்டுரையை, திருமா இயக்கம் நடத்திய பதினைந்தாம்நாளில், தினமணி (2)      வெளியிட்டு, “மனுதர்ம நூல், பெண்களை இழிவு செய்யவில்லை,  மாறாகப் பெருமைப் படுத்தியே இருக்கிறதுஎன்று வலிந்து சொல்லிப் பார்த்தது. இதற்கு தந்தை பெரியார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பே பதில் தந்து விட்டதைத் தமிழகம் அறியும், நாமும் அறிவோம் என்பதால் மௌனம் காத்திருந்தோம்.  ஆனால்,  இவ்வளவு சொல்லியும் நம்மைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களேஎன்று நினைத்தோ என்னவோ,  தமிழர் போற்றும் திருக்குறளை சீண்டிப் பார்த்தால், ஒருவேளை தமிழர்கள் கவனிப்பார்களோ?”  எனும் நினைப்பில், மீண்டும் மநுவுக்கு ஏன்இந்த எதிர்மனுஎனும் தலைப்பில்ஆர்.நடராஜன் என்பவர் எழுதிய கட்டுரையை --அடுத்த15ஆம் நாள்- வெளியிட்டது தினமணி.(3)    

இந்தக் கட்டுரைகள் வெளியான தேதிகளைக் கவனித்தால் அவர்களின் அவசரமும் ஆத்திரமும் புரியும்!  இதையும் யாரும் கவனிக்காமல் இருந்துவிடக் கூடாதே என்னும் கவலையோடு,  சிலவரிகளைப் பெரிது படுத்தி, தினமணி நடுப்பக்கக் கட்டுரையின் நடுவில் வெளியிட்டதை மட்டும் அதன் முக்கியத்துவம் கருதி, கவனம் குவிக்க வேண்டி, இங்கு அப்படியே எந்த மாற்றமும் இன்றி— அதில் உள்ளபடியே தருகிறேன். -  மநு பெண்களைப் பற்றிச் சொல்வதையேதான் திருவள்ளுவரும் சொல்லி யிருக்கிறார், மநுதர்ம சாஸ்திரம் தடை செய்யப்பட வேண்டுமானால், அதே காரணத்திற்காகத்  திருக்குறளும் தடைசெய்யப்பட வேண்டியதே   

இது சரிதானா ?

குறளும் மனுவும் சொல்லும் கருத்துகள் ஒன்றுதானா?               

இவ்விரண்டு நூல்களையும் 

ஒப்பிட்டுப் பார்க்கலாம், வாருங்கள்-

பெண்ணைப் போற்றும் குறளும், இழிவுபடுத்தும் மனுவும்-           

கற்பை வலியுறுத்தும் அந்தக்கால நடைமுறையிலும் கூட,  பெண்ணின் பெருந்தக்க யாவுள?” (4) என்று, பெண் இனத்தைப் பெருமைப் படுத்திய குறள் எங்கே?  நூலின் அனைத்துப் பகுதிகளிலும் பெண்இனத்தை இழிவுபடுத்தி, “எல்லாச் சாதிக்குள்ளும் இழிந்த சாதியாகபெண்களைப் பேசும் மனுஎங்கே? ‘உயர்ந்தசாதிஎன்று அவர்களே உயர்த்திச் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனக் குலத்திலேயே பிறந்திருந்தாலும், அவள் பெண்ணாகப் பிறந்து விட்டால் இழிந்த பிறவிதான் என்கிறது மனு (5)

மனுவைப் பொறுத்தவரை, அனைத்து சாதிப் பெண்களும் சூத்திரர் தானே?! எனவேதான் "பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்(6) என்றும்,  “பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் குறிப்பிடுவனவற்றையும் கேட்பீராக”(7) என்றும், இதுபோலப் பற்பல இடங்களிலும் பெண்களை இழிவுபடுத்தியே மனுவில் சொல்லப் பட்டிருப்பது உண்மை தானே? பெண்களை ஒழுக்கக் கேடானவராக, மயக்கும் குணம் கொண்டவர்களாகவே மனுதர்மம் சித்திரிக்கிறது. பாலியல் ரீதியி  ல் ஒழுக்கக் கேடுகள் ஏதும் நடந்தால், அதில் ஆணுக்கு பொறுப்பு எதுவும் இல்லை என்பது போல மனுநூல் பெண்களை இழிவுபடுத்துகிறது.

தமது அலங்காரத்தால் மனிதரைக் கவரும் பெண்களின் இயல்பறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள். (8)

கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்றுப் பணிபுரியாமல் இருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும் சொல்கிறது மனுநூல் (9), இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக (10),  மறுமையின்பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும், இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது(11)

வ்வளவு தூரம் மனு பெண்களை இழிவுபடுத்தும் போது, இதற்கு மாறாக நமது குறள், பெண்கள் பற்றி என்னென்ன சொல்லியிருக்கிறது என்றும் பார்க்க வேண்டும்.

இல்லறவியல் என்றொரு தனி இயல் (நூலின் சிறு பிரிவு) வகுத்து, அதற்கென்றே இருபது அதிகாரங்களில் இருநூறு குறட்பாக்களை எழுதி, வாழ்க்கைத் துணையின் பெருமை சொல்லி, மக்கட்பேறு தரும் மகிழ்வைச் சொல்லி, அன்புடமையோடு, விருந்தோம்பி, இனியவை கூறி, செய்ந் நன்றியறிந்து, நடுவுநிலை தவறாது, அடக்கம் மற்றும் ஒழுக்கத்துடன், பிறனில் விழையாது, பொறுமையுடன், பொறாமை தவிர்த்து, பேராசைப்படாது, புறங்கூறாது, பயனில சொல்லாது தீவினை அஞ்சி, ஒப்புரவறிந்து ஈகையுடன், புகழ்பெற வாழச் சொல்லித் தருகிறது நமது குறள் (12)

இல்லறத்திற்கே 200குறள் எழுதிப் 

பெண்ணின் பெருமை சொன்ன குறள் எங்கே? 

பெண்ணை இழிபிறவியாகவே சொல்லி வைத்த மனு எங்கே?

இதனால்தான், கவிஞர் கந்தர்வன்,

இந்த தேசத்துப் பன்றி கூட

கோடீஸ்வரன் மகளை விடவும்

மதிப்பு மிக்கது - என்றும்,

நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லை,

ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக் கில்லை  என்றும் இன்றைய பெண்களின் பரிதாப நிலையைச் சொல்லி, அதற்கான தீர்வுநோக்கிச் சிந்திக்க வைக்கிறார் (13)

ரு நாட்டு முன்னேற்றம்,  அந்நாட்டுப் பெண்களின்  முன்னேற்ற அளவில்தான் அமையும் என்பார்கள்.  ஆனால், மனுநூலின் ஒவ்வொரு சுலோகத்திலும் பெண்ணடிமைத்தனம் வழிந்து ஆறாய்ப் பெருகுகிறதே! ஓரிடத்திலாவது பெண்ணும் ஓர் உயிர்தான் அவள் மனிதப் பிறவிதான்,  ஆணுக்குச் சமமான உரிமையுள்ளவள் தான் என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா?  இல்லையே!  மாறாக, எல்லா இடங்களிலும் பெண்கள் ஆண்களைத்தான் சார்ந்திருக்க வேண்டும், எந்த வயதிலும் அவளுக்குச் சுதந்திரம் கிடையாது. ஆண்களால் காப்பாற்றப் படுவதற்காக, பெண் சுயஅறிவின்றியே படைக்கப்பட்டாள் என்று எத்தனை வகையான சுலோகங்கள்?

 பாலியத்தில் தகப்பன் ஆஞ்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆஞ்ஞையிலும், கணவனிறந்த பின்பு பிள்ளைகளின் ஆஞ்ஞையிலும்  இருக்க வேண்டியதே யல்லாது, ஸ்த்ரீகள் தன் ஸ்வாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது (அத்-9, சுலோ-148) எனும் இந்த வரிகள் அப்படியே ஓர் எழுத்தும் மாறாமல், “மநுதரும ஸாஸ்த்திரம்எனும் நூலின் உரையில் உள்ளவை. “திருவந்திபுரம் கோமாண்டுர் இளையவில்லி, இராமாநுஜாச்சாரி என்பவர் எழுதிய உரையோடு, 1865ஆம் வருடம் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட நூலில் உள்ளது. (இதன் பிடிஎஃப் கோப்பு வடிவம் இன்றும் இப்போதும் கணினி இணையத்தில் கிடைக்கிறது ஒரிஜினல்மனு தர்ம சாஸ்த்திரத்தைப் போய்ப் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன்)

அந்த ஒரிஜினல் சுலோகம் இதோ -

 பிதா ரக்ஷதி கௌமாரே,

பர்த்தா ரக்ஷதி யௌவனே

புத்ரோ ரக்ஷதி வார்தக்யே

நஸ்த்ரீ ஸ்வாதந்தர்ய மர்கதி(14)

இந்தக் கருத்தை, அறிவொளி இயக்கத்திற்காக 1990-91இல், இக்கட்டுரை ஆசிரியர் --நா.முத்துநிலவன்-- மொழி பெயர்த்து, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் நாடகப் பாடலாகப் பாடப்பட்ட மொழிபெயர்ப்பு வரிகள் இதோ -

தந்தைக் கடிமை சிறுவயதில்,

கணவற் கடிமை இளவயதில்,

மகனுக் கடிமை முதுமையிலே

எந்நாளும்பெண் அடிமைதான்  

 (உண்மைஇதழிலும் அப்போது வந்தது) 

                          

இவ்வாறாக, பெண்களைப் பற்றிய மனுவின் பார்வை, “ஆண்களுக்கான போகப் பொருளாக பெண்களைப் படைத்திருப்பதாகவே உள்ளது.

இது ஒருபுறமிருக்க,

மனுவின் பங்காளியான பகவத்கீதை இதுபற்றி என்ன சொல்கிறது என்று பார்த்தால் பெண்களும் சூத்திரர், வைசியர் ஆகியோருடன், பாவயோனியில்இருந்து பிறந்ததாகச் சொல்கிறது! (15) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பகவத் கீதை நூல்களில் இதை இழிந்த பிறப்புஎன்று சொல்லிவிட்டார்கள். ஆனால் ஆங்கிலத்தில் நேரடியாக born out of the womb of sin (16) என்று போட்டு உடைத்து விட்டார்கள் ரெண்டும் ரெண்டாப்பை!  ரெண்டும் கழண்டாப்பை என்னும் நமது கிராமத்துப் பழமொழி இதனால் தான் எழுந்ததோ?                                       

எனில், 

பெண்ணைப் பெருமைப் படுத்தி, 

இல்லறம் பாடும் எங்கள் குறளும் ,  

இழிவு படுத்தி வசை பாடும் 

உங்கள் மனுவும் எப்படிச் சமமாகும்?  

பிறப்பால்மனிதர் அனைவரும் சமம் இல்லையா?

பொதுவாகவே எல்லா மனிதர்க்குமான அறம்கூறும் நூல் என்பதால் உலகப் பொது மறை என்று குறளைப் போற்றுகிறது குவலயம்! அதுகூடப் பொருளற்ற  புகழ்ச்சிதான். மறை என்றாலே ரகசியமாகச் சொல்லும் வேதம் என்றுதானே பொருள்?அதனால், எல்லார்க்கும் பொதுவான அறநூல் எனும் பொருளில்,“உலகப் பொதுமுறை என்பதே சரி எனும் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் இஆப., அவர்களின்  கருத்தே சரியானது.

சூத்திரர்என்றால் பிராமணர்களின் வைப்பாட்டி மக்கள்என்று பொருள். ஆம். அப்படித்தான் மனுசாஸ்திரம் கூறுகிறது்(17)  இதிலிருந்தே மனுநூல் ஒரு மக்கள் விரோத நூல் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

அன்றைய சாதியச் சமுதாயத்திலேயே,“ஆறறிவுபடைத்த மனிதர்கள் மட்டுமல்ல, உலக உயிர்கள் அனைத்துமே சமம், ஏனெனில் ஓரறிவுத் தாவரம் முதல், ஐந்தறிவு விலங்குகள்வரை ஒவ்வொன்றும் ஒரு மதிப்பிற்குரியவையே எனும் ஆழ்ந்த பொருளில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்(18) என்பது உலகப் புகழ்பெற்ற குறள்வரி.   இதற்கு நேர் எதிராக, “நான்கு  வர்ணங்களை  பிரம்மனே படைத்ததாகச் சொல்லும் மனு, “தனது  முகத்தில்  பிராமணரையும்,  தோளில்  சத்திரியரையும்,  தொடையிலிருந்து  வைசியரையும்,  காலிலிருந்து  சூத்திரரையும் பிரம்மா  படைத்தான்(19) என்று கதைகட்டியது. 

இதை விழுங்கிச் செரித்து, அப்படியே வாந்தியெடுத்த பகவான் கிருஷ்ணன், நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்என்கிறான்(20)  கீதை, ஒரு புனித நூலாக  இந்திய வழக்கு மன்றங்களில், அங்கீகரிக்கப்பட்டுள்ள செய்தியும், மனுதர்ம(?)நூல் இதுவரை முப்பத்தெட்டு தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது எனும் தகவலும் இன்றைய நமது சமூகத்தின் அவலநிலைக்கு உச்சபட்ச சாட்சிகள்!

இந்தப் புரட்டுக் கதையைத் தானே நம் புரட்சிக்கவிஞர் 

புரட்டிப் புரட்டி எடுத்தார்?

"முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே?

தோளிற் பிறப்பதுவும் உண்டோ தொழும்பனே?

இடையிற் பிறப்பார் உண்டோ எருமையே?


காலில் பிறப்பார் உண்டோ கழுதையே?


நான்முகன் என்பான் உளனோ நாயே?


புளுகடா புகன்றவை எலாம்போக் கிலியே
(21)

 

இதே போல சாதிக்கொரு நீதி சொல்லும் சனாதனப் போக்கைக் கண்டித்து,

சூத்திரனுக்கொரு நீதி தண்டச்  

                                            

சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி

                         சாத்திரம் சொல்லிடு மாயின் அது

                           சாத்திரம் அன்று சதியென்று கண்டோம் எனும் பாரதியின் குரலும் (22)

நினைவுக்கு வருவது போல, “அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழி்தலும் ஆம் ”(23) எனப் பரிமேலழகர் குறளுக்கு எழுதிய  உரைப்பாயிர வரிகளும் நினைவில் எழுவது இயல்பே. என்னா அக்குறும்பு!

சாதிகளைத் தாண்டி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்எனப் பொது நீதி சொன்ன வள்ளுவரையே மனு சொன்னபடி குறள் எழுதினார்என்கிறார் பரிமேலழகர்!           சீழ் வைத்த புண்ணைச் சொறிந்து காணும் சுகமன்றி இது வேறென்ன?

 சாதி மதம் மீறி  நடக்கும் கலப்புத் திருமணங்களை மனு ஏற்கவில்லை,  வர்ணம் வேறு, சாதி வேறு! வர்ணம், “பிரம்மாபடைத்த நால்வர்ணம். ஆயினும், இந்த வர்ணக் கலப்பில் உருவான பிரிவுகளையே சாதிகள் என்றது பிற்காலப் பார்ப்பனியம். இந்தக் கலப்புமணம் பிரம்மாவை மீறி(?!) காலகாலமாக நடந்தே வந்திருக்கிறது. சாதி வேறுபாடுகள் தம் கையை மீறிப் போய்விடாமலிருக்கவே இந்த நான்கு வர்ணத்தில் அனைத்துச் சாதிகளையும் அடக்கி  வைத்தனர் பிற்காலப் பார்ப்பனர். இப்போதும் மோட்சம் என்பது பார்ப்பனர்களுக்கு மட்டுமே சித்தியாவது (சின்னம்மா ஆவதல்ல, சித்தி என்றால் நல் வாய்ப்பு என்று பொருள்!) வீடுபோறு என்பதைப் போனால் போகிறது என்று பார்ப்பனர் அல்லாத மற்ற வர்ணத்தினர்க்கும் கிடைக்க ஏற்பாடு செய்தார்கள். அதாவது, பார்ப்பன சேவைகளைச் சரியாகச் செய்கின்ற மற்ற வர்ணத்தினர் வீடு பேறு அடைந்து, அடுத்த பிறவியில் பார்ப்பனராகப் பிறந்து, பார்ப்பனப் பிறவியில், பார்ப்பனருக்குரிய தர்மம் தவறாது நடந்து மோட்சம் அடையலாம், அடே...ங்கப்ப்பா! பரம்பரை பரம்பரையாகவே, உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடுவதற்கான ஏற்பாடு இது என்பதைக் கொஞ்சம் யோசித்தாலே புரிந்து கொள்ளலாம்! ஆனால் யோசிக்கணும்!

அம்பேத்கார் இயற்றிய அரசியல் அமைப்புச் சட்டம், கலப்பு மணம் செய்வதை ஏற்கிறதே! சமூகத்தில் உள்ள சாதிய ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதற்காகவும் கலப்புத் திருமணம் சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களை ஊக்குவிக்கவும் டாக்டர்  அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.   2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த நிதித் திட்டம், சாதி மறுப்புத் திருமணம் செய்த  பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார பாதுகாப்புக்காகவும் சமூக அங்கீகாரத்துக்காகவும் உருவாக்கப்பட்டது” (24)  

அதிலும் புரோகிதர் இல்லாமல் இந்துச் சடங்குகள் இல்லாமல் நடக்கும் பகுத்தறிவு சுயமரியாதைத் திருமணத்தை நமது சட்டம் ஏற்கிறதே! இந்தச் சட்டம் 1967இல் அண்ணா தமிழக முதல்வராகப் பதவி ஏற்றவுடன் தந்தை பெரியார் செய்த சிறு திருத்தத்துடன் நிறைவேறியது(25)தந்தை பெரியாருக்கு எனது நன்றிக் காணிக்கைஎன்று அவர் சொன்னதும் ஒரு சரித்திரப் பதிவு! புரோகிதர் இல்லாமல் நடக்கும் சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட ஏற்பு கிடைத்தது, சாதாரணமல்ல , சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல்கல்! தமிழ்நாடு அரசின் இந்த அரசாணை 20-01-1968-அன்று வெளியாகி இப்போதும் நடைமுறையில் உள்ளது.  எனில் நமது ஒன்றிய, மாநிலச் சட்டங்களை விட சாதிக் கொரு நீதிசொல்லும்மனு மேலானதாமோ? 

திருக்குறள் இன்பத்துப் பால் முழுவதும் சாதி,மதம் கடந்த- காதல்தானே நிறைந்து கிடக்கிறது! “காதல் சிறப்புரைத்தல் எனும் அதிகாரத்தின் பத்துப் பாடலில் எந்த இடத்திலும் சாதி மதம் பற்றிய குறள் இல்லையே! ஒரு பெண்ணைப் பார்த்து, இருவரும் குறிப்பறிந்து, கூடி  மகிழ்ந்து, நலம்புனைந்துரைத்து, அதுவே அலராகி திருமண வாழ்வில் கூடியதைக் கற்பியல் எனும் அடுத்த பதினெட்டு அதிகாரப் பாடல்களிலும் காதல் ததும்பும் காட்சிகளைச் சொல்லும் குறள், எந்த இடத்திலும் --இன்பத்துப் பாலின் இருநூற்றைம்பது பாடலில் ஓரிடத்திலும்-- சாதி மதம் பற்றிப் பேசவில்லையே!

காதலின்பத்தைப்  பற்றிய இன்பத்துப் பாலில் மட்டுமல்ல, ஏனைய அறத்துப் பால் பொருட்பால் என எந்த இடத்திலும் சாதி-மத வேறுபாடு பற்றி ஒரு சொல்லும் சொல்லாத  பெருமைக்கு உரியதே குறள் எனும் எமது பண்பாட்டு நூல்!

மாறாக --

மனு நூல் முழுவதும் 

சாதிவெறிச் சாக்கடை பொங்கி வழிந்து நாறுகிறதே!

இதனால்தான் நீராரும் கடலுடுத்த” - தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணியம் பேராசிரியர் சுந்தரனார், 1891ஆம் ஆண்டிலேயே,  குறளைப் படித்தவர், “சாதிக்கு ஒரு நீதிசொல்லும் மனுவை ஏற்க மாட்டார் என்று --இன்றைக்கு 130ஆண்டுகளுக்கு முன்பே-- எழுதி எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறார்!

வள்ளுவர்செய் திருக்குறளை 

மறுவற நன்கு உணர்ந்தோர்கள்               

உள்ளுவரோ மனுவாதி 

ஒருகுலத்துக்கு ஒரு நீதி?(26)  

தமிழக அரசின் கலைஞர் மு.கருணாநிதி ஆட்சியில் கொண்டு வந்து இப்போதும் நடைமுறையில் உள்ள தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் உள்ள பகுதியைத் தொடர்ந்து வரும் வரிகள் இவை!  

எனில்,

சாதியற்ற எங்கள் 

சமத்துவக் குறளும்                                             

உங்கள் சாதிவெறி நாறும் மனுவும் 

எப்படிச் சமமாகும்?  

பிறப்பால் மட்டுமல்ல, பெயராலும் தொழிலாலும் ஏற்றத்தாழ்வு

சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்என்னும் குறள், அவரவர் செய்யும் தொழிலால் ஏற்றத் தாழ்வு ஏதுமில்லை என்று சொல்கிறது (27) இதற்கு நேரெதிராக, இன்ன சாதிக்காரன் இன்ன தொழிலைத்தான் செய்ய வேண்டும்என்று வரையறை செய்வதோடு, அதிலும் கறாராக ஏற்றத் தாழ்வைக் காட்டுகிறது மனு நூல்.  பார்ப்பனர்களின் சமூக மேலாதிக்கத்தை வலியுறுத்தும் மனுநூல், சத்திரியர், வைசியர், சூத்திரர்களுக்குஅவரவர் சாதிக்குரிய பணி மற்றும் சமூகநிலை குறித்துப் பின்வருமாறு வரையறை செய்கிறது-

பார்ப்பனர்க்குரிய பணிகள் யாவை?சுயம்புவான பிரம்மா, தேவர்களுக்கு அவிசொரிந்து மகிழ்விக்கவும், பிதுர்களுக்கு சிரார்த்தம் செய்யவும் தக்கவனாக பிராமணனைத் தனது முகத்தினின்றும் முன்னம் படைத்தார்”(28) (இவையெல்லாம் இந்தக் கொரோனாக் கொடுங் காலத்தில் அரசாங்கத்தாலேயே தடைசெய்யப்பட்டதும் மனிதரின் அத்தியாவசியத் தேவைப் பட்டியலில் இவை இல்லை என்பதும், இந்தியாவின் பணக்கார சாமியான திருப்பதி உட்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பலமாத காலம் இழுத்து மூடப்பட்டதும் இதுபோலும் கடவுள் வழிபாடும், பூஜை-புனஸ்காரங்களும், திதி கொடுத்தலும் மனிதவாழ்வில் தவிர்க்க முடியாதவை அல்ல என்பதை ஒரு சிறுகிருமி கற்றுக் கொடுத்துவிட்டது. ஆக, பார்ப்பனர்கள் செய்யும் வேலையும் சொல்லும் மந்திரங்களும் இந்தச் சமூகத்திற்குத் தேவையில்லை என்பதை மூளை உள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள்

சத்தியரியரின் பணிகள் யாவை? பிரஜா பரிபாலனம் செய்வது, ஈகை, வேள்விகள் செய்வது, வேத பாராயணம் செய்விப்பது, மன்னர் கடமையாகும்(29) ஒருவேளை நாலாம் வருணத்தோன் நாடாள வந்துவிட்டால்? என்று யோசித்த மனு அதற்கும் ஓர் அவசரச் சட்டத்தை எழுதிவைத்திருக்கிறான். '’நாலாம் வருணத்தோன் அரசனாக இருக்கும் நாட்டிலும், அறம் அறியாதோரும் தீய ஒழுக்கமுடையோரும் வசிக்கும் கிராமத்திலும், பாவிகள் அருகுறையும் ஊரிலும் வசிக்கக் கூடாது(30) மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தானால் நடைபெறுகின்றதோ, அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப் போல், கண் முன்னே துன்பமுறுகின்றது31)) நாலாம் வருணத்தாரும் நாத்திகருமே மிகுந்து, இரு பிறப்பாளர் இல்லாமற் போகின்ற நாடு வறுமை வாய்ப்பட்டு விரைவில் அழிந்து போகும் (32)

அனுஷ்டானங்களில்லாத அந்தணன் மன்னன் சார்பாகத் தீர்மானங்களைச் செய்யவும் கூடும். நாலாம் வருணத்தவன் செய்யக்கூடாது. வைசியனையும், நாலாம் வருணத்தானையும் தன் தன் தொழிலைச் செய்யுமாறு மன்னன் கட்டளையிடுக. இல்லையெனில், வேலையற்ற இவர்கள் உலகையே அழித்து விடுவார்கள் (33)

நான்கு வருணத்திற்கும் அப்பால், சண்டாளர் என்ற சாதியை மனு குறிப்பிடுகிறது. தேர்ப்பாகர், இரண வைத்தியர், மீன் பிடிப்பவர், எலி, உடும்பு பிடிப்பவர், தச்சு வேலை செய்பவர் ஆகியோர் நால் வருணத்திற்கு வெளியில் உள்ளவர்களாவர்.(34) இவர்கள் வாழும் இடமாக '’இவர்களனைவரும் நகரத்திற்கும், ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, இடுகாட்டின் அருகில், மலை, மலர்ச்சோலை ஆகிய இடங்களில் தங்கள் தொழிலைப் பலரறிய இயற்றி வாழ்ந்திருக்கவும்’' (35) என்கிறது. இவர்கள் உலோகத் தாலான பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது. இவர்கள் தீண்டிய பாத்திரங்கள் துலக்கினாலும் தூய்மையாகா. நாய், கழுதை இவற்றை இவர்கள் வளர்க்கலாம். மாடு வைத்துப் பிழைக்கக் கூடாது. (36)

இவர்கள் பிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும். இரும்பு பித்தளை நகைகளை அணிய வேண்டும். எப்போதும் தொழிலுக்காகச் சஞ்சரிக்க வேண்டும் (37)

“வாணிபர்க்கு ஆநிரைகளைக் காத்தல், தானம் கொடுத்தல், கடலாரம், மலையாரம், கனிப்பொருள், விளைபொருள், தானியங்கள் இவற்றை வியாபாரம் செய்தல், வட்டிக்கு விடுதல், பயிர்த்தொழில் செய்தல் ஆகியவை  விதிக்கப்படுகின்றன (38)

பிறப்பிலேயே வேறுபாடு வந்தபிறகு, பெயர் வைப்பதிலும் பேதம் காட்டுகிறது மனு அதர்ம நூல்.    மங்களம், மேன்மையைக் குறிக்கும் வகையில் பிராமணனது பெயர் அமைய வேண்டுமாம் (39),

பிராமணனுக்கு மங்களத்தையும் – 

(மங்களேஸ்வரன், மகாலட்சுமி போல…)

சத்திரியனுக்கு பலத்தையும் – 

(வைத்தீஸ்வரன், ஜெகதீஸ்வரி போல…)

வைசியனுக்குப் பொருளையும்

(பொன்னையா, திருமூர்த்தி போல…)

சூத்திரனுக்குத் தாழ்வையும் – 

(மண்ணாங்கட்டி, அமாவாசை போல…)  

பிரித்துக் காட்டுவதான பெயர்களை இடவேண்டும் என்கிறது மனு.  

(என்னா அக்குறும்பு??? 

பெயர் உதாரணம் வழக்கிலிருந்து எடுத்தது இந்தக் கட்டுரை ஆசிரியர்)

இப்பொழுதும் நமது உழைக்கும் மக்கள் வீடுகளில் மண்ணாங்கட்டி, அமாவாசை என்றெல்லாம் பெயர் வைப்பதன் நுனிமுனைக் கயிறு எங்கிருக்கிறது பார்த்தீர்களா? சமூக நீதியின் வெற்றியாக இன்றைய உழைக்கும் மக்கள் இதைக் கடந்த பெயர்களை வைப்பதும் நடக்கிறது. (இதைப் புரிந்துகொண்டு, “கும்புடுறேன் சாமிஎன்று  தன் மகனுக்குப் பெயர்வைத்து, பள்ளி ஆசிரியர் ராஜகோபாலய்யரை, அட்டென்டன்ஸ் எடுக்கும்போதெல்லாம் கும்புடுறேன் சாமிஎன்று கூப்பிட வைத்த நம் ஆட்களின் குசும்பும் இதில் அடக்கம்!) சுப்பிரமணியன் (பிராமணர்க்கு நல்லவன்) எனும் பெயரை உயர்சாதியினர் வைத்துக் கொண்டால் அதன் வழக்கு தனி! நமது ஊடகங்கள் அரசியல் தரகர் சுப்பிரமணிய சாமியைமிஸ்டர் சுவாமிஎன்றே அழைக்கும். அதே பெயரை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்ப பட்டவர்கள் அறியாமையால் வைத்திருந்தாலும்என்னடா சுப்பாஎன்றுதான் கூப்பிடும்! 

மனுவின் விஷவிழுதுகளின் இன்றைய நீட்சிகளே இவை என்பதை உணர வேண்டும். இதனால்தான் சாதி-மதம் கடந்த பெயர்களை வைத்தார் பெரியார். இல்லையெனில் இன்றும் கூட தமிழர்களின் பெயர்கள் சாதி-மதப் பெயர்களாகவே --அடிமை வரலாற்றின் அழியாத அடையாளங் களாகவே-- நிலைத்திருக்கும் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

சாதிப்பட்டத்தை விடாமலே இன்றும் பெரும்பாலான வட-இந்தியர்களின் பெயர்கள் இருக்கின்றன. தமிழகத்தில் சாதிப் பட்டங்களை ஒழியுங்கள்என்று பெரியார் நடத்திய இயக்கத்தின் பலனாகவே இன்றைய தமிழர்களின் மிகப் பெரும்பாலான பெயர்கள் சாதிப் பட்டங்களைத் தவிர்த்திருக்கின்றன என்பதை வடஇந்திய தமிழ்நாட்டுப் பெயர்களை ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும். 1927 டிச-25 குடி அரசு இதழிலிருந்தே சாதிப்பட்டத்தைத் தவிர்த்து எழுதிவந்த தந்தை பெரியார், அவ்வாறே திராவிடக் கழகத்தினரும் பின்பற்ற வேண்டும் என்ற வேண்டுகோள் சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கத் தக்கது. இன்றைய நிலையில்  இது மிகப்பெரிய செய்தி. (தமிழக கிரிக்கெட் வீரர் நடராசன் பற்றிப் புகழ்பாடும் போது, வட இந்தியரின் சாதிப் பெயர் ஒட்டும் பேசப்பட்டது முக்கியமானது)

என்னுதும் என்னுது, உன்னுதும் என்னுது என்பது நியாயமா?                    

        வர்ண பேதத்தின் சாதியப் பிடிமானத்தின் அடிக்கட்டுமானம், உரிமை மற்றும் உடமையில் ஆதிக்கம் செலுத்துவது தானே? உழைப்புச் சுரண்டல்தானே? இதை உணர்ந்துபார்ப்பனர்க்கு அடிமைச் சேவகம் செய்வதற்கென்றே பிறப்பெடுத்த நாலாம்வருணத்  தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ பார்ப்பனர்கள் வேலை வாங்கலாம் (40) என்கிறது மனு. இதை இளைய தலைமுறையில் கூடச் சிலர் இதை இன்றும் தொடர்வதன் காரணம் புரிகிறதா?

இதற்கு நேர் மாறாக, தனக்கு உரியதல்லாத தன் உழைப்பாலன்றிக் கிடைக்கும்-- எந்தப் பொருளையும் திருட்டுஎன்றே கொள்ளவும் தள்ளவும்  வேண்டும் என்னும் குறள் எவ்வளவு உயர்வானது என்பதை உலகமே வியக்கிறதே!                    

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் 

 கள்ளத்தால் கள்வேம் எனல் (41) 

ஆனால், உழைக்காமலே உட்கார்ந்து  கொண்டு அடுத்தவர் பொருளைச் சுரண்ட சாதியின் பெயரால் அனுமதிக்கும் மனு யாருக்கானது என்பதைப் புரிந்துகொள்க.

உண்மையில் இந்தச் சாதியின் பெயரால் கிடைக்கும் உழைப்புச் சுரண்டல் தான் மனுவின் அடிப்படை நோக்கமே! அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுதான் நூற்றாண்டுக் காலமாக இப்போதுவரை- உழைக்காமல்  உட்கார்ந்து கொண்டே உண்ணும் சவுரியத்தைத் தொடர நினைக்கிறது பார்ப்பனியம்.

"பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனெனில் சூத்திரன் எவ்விதப் பொருளுக் கும் உடையவனாக மாட்டான் (42)   "பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்திரவதை செய்து கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம்." (43)

"சூத்திரனுக்கு பிராமணப் பணி விடை ஒன்றே பயன் தருவதாகும். பிராமணன் இல்லாதவிடத்தில் சத்திரியனுக்கும், சத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு.(44)  

இப்படி  

உட்கார்ந்து கொண்டு திருடியே சாப்பிடச் சொல்லும் உங்கள் மனுவும் , பிறன் பொருளைத் திருடாதே என்றல்ல, ”திருடவும் நினைக்காதேஎன்று கள்ளாமைஎனும் ஓர் அதிகாரமே எழுதிய எங்கள் குறளும் எப்படிச் சமமாகும்?

ஒழுக்க வரையரை கூட சாதிக்குச் சாதி வேறுபடுமா?

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்                                       

பிறப்பொழுக்கம்  குன்றக் கெடும் என்னும் குறளில் (45)  படித்த கல்வி மறந்தால் மீண்டும் படித்துக் கொள்ளலாம், ஆனால் உயர்ந்தசாதி என்று சொல்லிக்  கொள்பவன், ஒழுக்கம் தவறினால் அந்த உயர்ந்தஇடத்தை இழந்துவிடுவான் என்று தெளிவாகச் சொல்கிறார் திருவள்ளுவர். ஆனால், “பிறப்பாலான பார்ப்பன உயர்வு எந்த வகையிலும் மாறாதுஎன்கிறது மனு. இது சரிதானா?

கல்விகற்றவர் மற்றும் ஒழுக்கமுடையவர் உயர்வையும், கல்லாதவர் மற்றும் ஒழுக்கமிழந்தவர் இழிவையுமே திருக்குறள் பலப்பல பாடல்களில் சொல்கிறது.

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார்  கீழ்ப்பிறந்தும்                           

கற்றார் அனைத்திலர் பாடு(46) என்ன சொல்கிறது எனில், கல்லாதவர் உயர்குடியில் பிறந்தவராயினும், தாழ் குடியில் பிறந்த கற்றவர்க்கு ஈடாக மாட்டார் என்பது சாதியச் சமூகத்தில் மனுவுக்கு எதிரான அன்றைய போர்க்குரல் அல்லவா?

சங்க இலக்கியத்தின் புறநானூற்றில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் எனும் மன்னன் எழுதி பாடல் ஒன்றுண்டு. “ஒரு வீட்டில் வயதில் மூத்தவனை விடவும் கல்வி உடையவனே மேலானவன், ஒரு நாட்டில் கீழ் சாதியில் பிறந்தவனாயினும் கல்விஅறிவு பெற்றவன் சொல்வதையே மேல்சாதிக்காரனும் கேட்க வேண்டும் கற்றவன் சொல்வதை சாதிகடந்து- அரசாங்கம் கேட்பதே சிறந்ததுஎன்பது அந்தப் புறநானூற்றுப் பாடலின் பொருளாகும். மன்னன் சொன்னதைப் பாருங்களேன் (பெயர்ப் பொருத்தமும் சரியாக இருக்கிறது ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்!!)

ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்

மூத்தோன் வருக என்னாது, அவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்,

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே(47)

நமது குறளும் சங்கஇலக்கியமும் இப்படி! மனு சொல்வது எப்படி? பாருங்கள் -  பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒருபோதும் நீதி செலுத்தலாகாது (48)  

ஆக

பிறப்பு ஒன்றையே சிறப்பாகச் சொல்லும் உங்கள் மனுவும், ஒழுக்கத்தையும் கல்வியையுமே போற்றக் கூடிய எங்கள் குறளும் எப்படிச் சமமாகும்?

தண்டனைக்கும்  சாதி வேறுபாடு உண்டுங்காணும்?                     

அறியாமல்  செய்த தவறைப் பொறுத்தல்  மனித  மாண்பை  வளர்க்கும்  என்று  உலகப் பேரறிஞர்  பலரும்  சொல்லியிருக்க,  அதற்கும்  மேலே போய், “அறியாமல்  செய்தவர்   அறியும் வழி,   அவர்க்கு நன்மை செய்து விடுவதுதான் என்று நல்லறம்  சொன்னவர் வள்ளுவர் (49) இதுதானே  மனிதரைப்  பண்படுத்தும்  உயர்நெறி?  அதே வேளையில், “பயிர்களை  நல்லபடியாக  வளர்க்க  வேண்டுமானால், பயிர் வளர்ச்சியைக் கெடுக்கும்  களைகளை அழிப்பதும்  அவசியம்  என்பதுபோல,  அறிந்தே   கொலை செய்த   கொடியவரை   அவர் யாராக  இருந்தாலும்  தண்டிப்பதே  அரச நீதி!” என்றும் எளிதில் புரியும் எடுத்துக் காட்டுடன் குறள் கூறும் (50)

ஆனால்இதற்கு  மாறாக, கொலை செய்தவனின் சாதிபார்த்துத்தான் தண்டனை  தரவேண்டும்  (51) என்பதா சமநீதி?!?  அதாவது,  கொலைகாரன்  பிராமணனாக இருந்தால்   அவன்  குடுமியைச்  சிரைத்தாலே போதுமானது,  மற்ற  சாதி எனில்,  உயிரையே  எடுத்துவிட வேண்டுமாம்   என்னங்கடா உங்க நியாயம்?  இதுவா பொதுநூல்?  எனில் எங்கள் குறளும் உங்கள் மனுவும் எப்படிச் சமமாகும்? 

வீடுபேறு மோட்சம் மனுவில் உள்ளது, குறளில் இல்லையே?

குறள் வடமொழியின் நான்கு வேதங்களைப் பின்பற்றி எழுதப்பட்டது எனும்  கட்டுக் கதைகள் நிறையவே உண்டு, எல்லாம் அவர்கள் புனைந்த புனைசுருட்டுகள் தான்.  இதற்காகவே கி.பி.11ஆம் நூற்றாண்டில்  திருவள்ளுவ மாலை என்றொரு நூலைத் தொகுத்தார்கள்.  இதில் நான்மறையைத் தமிழில் தந்த என்பதான தொடர்கள் நிறைய வரும்!  இந்நூலின் முதற்பாடல் அசரீரி,  இரண்டாம் பாடல் கலைமகள் எழுதியது போலும் கற்பனைகளே  இந்நூலைப் புனைந்தவர் நோக்கம் புரியும். அதை உதாரணம் வேறு காட்டுவார்கள். அதிலிருந்தே அவை ஒப்பனை இல்லாத கற்பனைச் சொற்புனைக் கதைகள் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

55வெண்பாக்கள் உள்ள இந்த நூலில், நாமகள் (கல்வித் துறைக்கான கடவுள்), உக்கிரப் பெருவழுதி (மன்னன்), கோதமனார், நல்லந்துவனார், வெள்ளிவீதியார், மாங்குடி மருதனார், வடமொழி வேத-வைதீக- வழியில் குறள் எழுதப்பட்டது என்று பாராட்டியுள்ளனர். நக்கீரர், அம்மூவனார், கீரந்தையார் சிறுமேதாவியார் முதலான புலவர்கள் நான்கு உறுதிப் பொருள்களை வள்ளுவர் பாடியதற்காகப் பாராட்டி எழுதியிருக்கின்றனர். இதனால்தான் திருவள்ளுவ மாலைஒரு போலி நூல், ஒருவரே பலபெயரில் எழுதிய நூல்என்றார் தமிழறிஞர் மு.அருணாசலம் (தமிழிலக்கிய வரலாறு நூற்றாண்டு வரிசை)

ஆனால் அறம்பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே என்னும் பிற்கால நன்னூலின் கருத்து வள்ளுவரின் கருத்தல்ல!  வள்ளுவர் இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு எனவும், “அறமுதலாகிய மும்  முதற்பொருள் எனவும் தொல்காப்பியத் தமிழியத்தைப் பின்பற்றி முப்பால் வகுத்தவர்! 

மனுவைப் போல 

வேத வழிப்பட்டதல்ல குறள்,  

தமிழ் மரபை ஒட்டி,  

வீடுபேற்றை வெட்டி 

வாழ்வியலை மட்டுமே பாடினார் வள்ளுவர்!

நட்பு முரணும் பகை முரணும்

          திருக்குறளிலும் இன்றைய பகுத்தறிவுக் கருத்துகளுக்கு ஒவ்வாத சில முரண்பாடுகளும் இருக்கவே செய்கின்றன.  ஆனால் அவை நட்பு முரண் வகை சார்ந்தவை. “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று சொன்னதுதான்  இந்தக் கருத்துப் போரின் ஜனநாயகத்தைப் புரிந்துகொண்ட பகுத்தறிவுக்கூற்று.  இதேயே பெரியாரும், “நான் சொல்கிறேன் என்பதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டாம், உன் பகுத்தறிவைப் பயன்படுத்தி நன்றாக யோசித்து உண்மை அறிந்துகொண்டால் போதும் என்றே சொல்லிவந்தார்.  ஆனால் இந்த ஜனநாயக கருத்துகள் எதையும் ஏற்காத மனு, இறைவன் படைத்தான் நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எப்படிச் சரியாகும்? இதுதான் பகைமுரண். நட்பு முரணைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.  பகைமுரணை  போராடித் தான் வெல்ல முடியும். நாம் வெல்வோம். மக்கள் வெல்வார்கள்!

          சாதி மத அழுத்தமே நமது முன்னேற்றத்திற்குப் பெருந்தடை என்பதால்தானே நமது அறிவுசார் நல்லுலகோர், அதை எதிர்த்து சமர் புரிந்தார்கள்.  இப்போது, அந்தச் சாதி ஏற்றத் தாழ்வைக் காப்பாற்றத்தானே அதை வலியுறுத்தும் மனுவைத் தூக்கிக் கொண்டுவந்து எங்களையும் ஏற்கச் சொல்கிறீர்கள்?  இந்த நுட்பத்தைப் புரிந்து கொண்டுதான் நான் இந்துவாகச் சாகவிரும்பவில்லை என்று பிரகடனப்படுத்திய அம்பேத்கார், “சாதி ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட இந்துமதத்தால் யாருமே முன்னேற முடியாது, அந்த மதமே ஒரு அழிவு மதம்தான் என்று சொல்லித்தானே பத்து லட்சம் பேர்களுடன் இந்துமதத்தை விட்டொழித்து பவுத்த மதத்தைத் தழுவினார்? (52)

சங்கராச்சாரி  கைதுக்கு எதிராக, வடஇந்தியாவில் முன்னாள் பிரதமர் மூவர் உண்ணாவிரதம் இருந்தார்கள், தமிழ்நாட்டில் சிறு அசைவும் இல்லையே ஏன்? இது திருக்குறள் போலும் மனித மேம்பாட்டுக்கான கருத்துகளால் கட்டமைக்கப்பட்ட நாடு, தந்தை பெரியார் போலும் சுய சிந்தனையாளர்களால் அறிவு பெற்ற பூமி. சாதி வெறி மனுவை ஏற்காத மக்கள் நிரம்பிய மாநிலம் என்பதுதான் காரணம்.

இன்றைய தமிழகத்தில் மிகப்பெரும்பாலோர் படித்துக்கொண்டே இருக்கும் நூல் திருக்குறள்தான். அறிஞர் மு.வ.எழுதிய திருக்குறள் தெளிவுரைநூல் நூறு பதிப்புக்கு மேல் கண்டுள்ளது. இதுபோலும் ஏதேனும் ஒரு திருக்குறள் நூலே இன்றும் அதிக விற்பனை உள்ள (BEST SELLER) நூலாக விற்றுக் கொண்டே இருக்கிறது! திராவிடத் தொடர் இயக்கங்கள் அரசு நடைமுறைகளில் மட்டுமல்லாமல் சமூகரீதியாகவும் நடத்திய இயக்கங்கள் திருக்குறளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்ததன் விளைவு, பொருளற்ற புரோகிதத் திருமணங்களைத் தவிர்த்து, திருவள்ளுவரை சாட்சியாக வைத்து திருக்குறளின் இல்லறவியல் பாடல்களைச் சொல்லித் திருமணம் செய்வது வரை வந்திருக்கிறது.

உலகில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. கலைஞர் வரை நூற்றுக்கு மேற்பட்ட தமிழறிஞர்களின் உரையும் திருக்குறளுக்கு மட்டுமே வாய்த்த பெருமை!  வெகுசில காலத்துக்கு ஒவ்வாத கருத்துகள் இருப்பினும் இன்றும் கூட, தமிழரின் தமிழ்ப் பண்பாட்டின் தனி அடையாளமாகத் திருக்குறளே புகழ்பெற்றுத் திகழ்கிறது.  

மனுவை ஏற்றிப் போற்றிச் சொல்லிக் கொள்வதும் அதை அவரவர் பத்திரிகையில் வெளியிட்டுக் கொள்வதும் அவரவர் விருப்பம்.  அதற்காகத்  திருக்குறளை இழிவு செய்வதையும், “குறளும் மனுவும் ஒன்றே  என்பதான அறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை வெளியிடுவதையும் தமிழ்நாடு ஏற்காது என்பதை அறிந்து மனுவாதிகள் (அ) குறளின் எதிரிகள் தம்மைத் திருந்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் திருக்குறள் சொன்னபடி(53) ஆயிரக்கணக்கான திருக்குறள் நூலை அனுப்பி, படிக்கச் சொல்லியே திருத்துவோம். ஆனாலும் அதைக் கவனமாக நீங்கள் படிக்கவேண்டுமே என்னும் கவலைதான் எங்களுக்கு!

உங்கள் மேடை

உங்கள் நாக்கு,

எதுவேண்டுமானாலும் பேசுங்கள் !

உங்கள் பேனா

உங்கள் அச்சகம் ,

எது வேண்டுமானாலும் எழுதுங்கள் !

உங்கள் தராசு

உங்கள் எடைக்கல் ,

எதுவேண்டுமானாலும் விமர்சியுங்கள் ! . . . .

ஆனால்-  நாளை

காலத்தின் விமர்சனம் ,

உங்கள் பிணங்களைக் கூட

தோண்டி எடுத்து வந்து தூக்கில் போடும்

என்பது மட்டும்

ஞாபகமிருக்கட்டும்” – வைரமுத்து (54)

மேலும்,

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு குறள் (எண்-355, மெய்யுணர்தல்)

-----------------------------------------------------------------

அடிக்குறிப்புகள் --

(1)  24-10-2020 விகடன் இணையம் படத்துடன்

(2)  04-11-2020 தினமணி நாளிதழ் நடுப்பக்கக் கட்டுரை

(3)  20-11-2020 தினமணி நாளிதழ் நடுப்பக்கக் கட்டுரை

(4)  திருக்குறள்-வரிசை எண்-54 , அதிகாரம்வாழ்க்கைத் துணைநலம் )

(5)  மனுதர்ம சாஸ்திரம் -  அத்தியாயம்-11 சுலோகம்-6

(6)  மனு தர்ம சாஸ்திரம் -- அத்".11. சுலோ-.66.

(7)  மனு தர்ம சாஸ்திரம் -- அத்-9, சுலோ-19

(8)  மனு தர்ம சாஸ்திரம் -அத்-2 சுலோ 213

(9)  மனு தர்ம சாஸ்திரம் -அத்- 9 சுலோ 78

(10)           மனு தர்ம சாஸ்திரம் -அத்-5 சுலோ-154

(11)          . மனு தர்ம சாஸ்திரம் -அத்- 5 சுலோ-156

(12)          (மு.பழனியப்பன்-திருக்குறள் தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு-பக்-51

(13)          கந்தர்வன் கவிதைகள்சந்தியா பதிப்பகம்பக்-

(14)           மனு தர்ம சாஸ்திரம் - அத்-9, ,சுலோ-148)

(15)          பகவத் கீதை -  அத்-9, சுலோ-32

(16)           கீதையின் மறுபக்கம்கி.வீரமணி- பின்அட்டை

(17)          மனுதர்ம சாஸ்திரம் - அத்-8; சுலோ-415

(18)          திருக்குறள்- வரிசை எண்-972 (அதிகாரம்-பெருமை)

(19)           மனு தர்ம சாஸ்திரம் - அத்-1, சுலோ-31

(20)          பகவத் கீதை - அத் 4 , சுலோ- 13

(21)          பாரதி தாசன் - குறிஞ்சித்திட்டுவரிகள்-520-525

(22)           பாரதியார்உயிர்பெற்ற தமிழர் பாட்டு -13

(23)          தமிழ்நாடு அரசின் தமிழிணையக் கல்விக் கழக இணையத் தளம் திருக்குறள் - பரிமேலழகர் உரை)  http://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=31&auth_pub_id=29&pno=9 )

(24)          ) விகடன் இணையம் - பிப்.07, 2018

(25)          மாபெரும் தமிழ்க் கனவு- தமிழ் திசை- செல்வ.புவியரசன்- பக்-220

(26)           மனோன்மணியம்- தமிழ்த் தெய்வ வணக்கம், 11ஆம் தாழிசை

(27)          திருக்குறள்-வரிசை எண்-972, அதிகாரம்-பெருமை

(28)          மனு தர்ம சாஸ்திரம் -அத்-1, சுலோ-94)

(29)          .மனு தர்ம சாஸ்திரம் அத்-1-சுலோகம்-89

(30)           மனு தர்ம சாஸ்திரம் -4-61  

(31)           மனு தர்ம சாஸ்திரம் - 8-21

(32)            மனு தர்ம சாஸ்திரம் -8-22

(33)          . மனு தர்ம சாஸ்திரம் -8-417

(34)           மனு தர்ம சாஸ்திரம் -10-47-49

(35)            மனு தர்ம சாஸ்திரம் - 10-50

(36)           மனு தர்ம சாஸ்திரம் -10 : 52

(37)           மனு தர்ம சாஸ்திரம் - 10 : 52

(38)           மனு தர்ம சாஸ்திரம் - 1:90

(39)           மனு தர்ம சாஸ்திரம் 2-31, 32

(40)           மனு தர்ம சாஸ்திரம் - 8 -412

(41)           திருக்குறள்- வரிசை எண்-282, அதிகாரம்- கள்ளாமை

(42)            மனு தர்ம சாஸ்திரம்- அத்தியாயம்-8, சுலோகம்--417

(43)           மனு தர்ம சாஸ்திரம்அத்தியாயம்-.9. சுலோகம்.248

(44)           மனு தர்ம சாஸ்திரம் - அத்தியாயம்-11. சுலோகம்-12.

(45)           திருக்குறள்வரிசை எண் -134, அதிகாரம்-ஒழுக்கமுடைமை

(46)           திருக்குறள்வரிசை எண் -409, அதிகாரம்-கல்லாமை.

(47)           புறநானூறு, பாடல் எண்-183, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

(48)           மனு தர்ம சாஸ்திரம் -அத்தியாயம்-8, சுலோகம்-20

(49)            திருக்குறள்- வரிசை எண்-314, அதிகாரம்- இன்னா செய்யாமை.

(50)           திருக்குறள் வரிசை எண்-550, அதிகாரம்- செங்கோன்மை.

(51)           மனு   தர்ம சாஸ்திரம் அத்தியாயம்-8, சுலோகம் 379

(52)           புரட்சியாளர் அம்பேத்கரின் நாக்பூர் உரை- 15-10-1956

(53)           திருக்குறள்வரிசை எண்கள்  -314 மற்றும் 987.

(54)           வைரமுத்து கவிதைகள்பக்கம்-143,144)

(55)           திருக்குறள் வரிசை எண் -355, அதிகாரம்-மெய்யுணர்தல்)

-------------------------------------------------------------------------------------

கட்டுரைக்கு உதவிய நூல்களுக்கு நன்றி  

(1)   மனுநீதி- ஜாதிக்கொரு நீதி  தந்தை பெரியார்,

(2)  கீதையின் மறுபக்கம்  கி.வீரமணி

(3)  மனு தர்ம தந்திரம்… - விடுதலை இராசேந்திரன்,

(4)  பொசுங்கட்டும் மனுதர்மம்  கலி பூங்குன்றன்

(5)  மநு அதர்மம்  சுந்தம்பட்டி வெ.நாராயணசாமி

(6)  மனுதரும சாஸ்த்திரம்கோமாண்டுர் இராமாநுஜாச்சாரியார் (1865Pdf)

(7)  பகவத் கீதை உண்மையுருவில்  பக்தி வேதாந்தசுவாமி பிரபுபாதர்

(8)  திருக்குறள்-தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு தொகுப்பு (USA-ஆண்டு-2000)

(9)  ஈரடிப் போர்  ஆயிஷா இரா.நடராசன்

(10) திராவிடர் கழக வரலாறு கி.வீரமணி

(11) மாபெரும் தமிழ்க் கனவு தமிழ்த்திசை வெளியீடு

(12) மற்றும் 04-11-2020, 20-11-2020 தேதியிட்ட தினமணி நாளிதழ்கள் 


                “திராவிடப் பொழில்”

 ( இருமொழி, முத்திங்கள் ஆய்விதழ் - அக்-டிச-2021)

நமது கட்டுரையின் இணைய இணைப்பு-

       https://dravidapozhil.pmu.edu/Kuralum-Manuvum-Oppidu.aspx

                                        (கட்டுரை,  இடம் கருதி சற்றே சுருக்கி 

என்னிடம் தெரிவித்த பின்னரே வெளியிடப்பட்டது,

 பொருள் மாறாமல் வெளியிட்டமைக்கு 

திராவிடப்பொழிலுக்கு நன்றி)

------------------------------------------ 

நல்லன தேடிக் கற்கும் ஆர்வமுள்ளோர்க்கான

“திராவிடப்பொழில்”

( இருமொழி, முத்திங்கள் ஆய்விதழ் பற்றிய

ஆசிரியர் குழு, சந்தா விவரங்கள்- 

--------------------------------