கவிஞர் ஆர்.நீலாவின் கவிதைத் தொகுப்பு அணிந்துரை

கவிஞர் ஆர்.நீலா எழுதிய

“வீணையல்ல நான் உனக்கு”

கவிதைத் தொகுப்பை முன்வைத்து

--------------------------------------------------------------

சுயமாக வளரும் மூலிகைச் செடி

அணிந்துரை  --  நா.முத்துநிலவன்

கவிஞர் நீலாவைப் பார்ப்பதற்கு முன்னதாக அவரது, கிராமிய மணம் கமழும் ஒரு கவிதையைத்தான் முதலில் பார்த்தேன்.  1991 - 92 ஆம் ஆண்டுகளில் புதுக்கோட்டை அறிவொளி இயக்கத்தில், நாடகக் குழுக்கள் - பாடல் ஒலி நாடா பத்திரிகைக்குப் பொறுப்பான மாவட்ட  றிவொளி ஒருங்கிணைப்பாளராக நான் பணியாற்றி வந்தபோது, அறிவொளி இயக்க ஊழியர்களை ஊக்குவிக்க ஊர் கூடிஎனும் மாத இதழை நடத்தி வந்தோம். அது 25,000 பிரதிகள் அச்சிடப்பட்டு மாவட்டம் முழுவதும் நடந்த அறிவொளி வகுப்புகளுக்கு, தகவல் கூறி உற்சாகப்படுத்தி வந்தது.

அந்த இதழின் ஆசிரியராக திருமிகு ஷீலாராணி சுங்கத் அவர்கள், (புதுக்கோட்டையின் அன்றைய மாவட்ட ஆட்சியர்) எங்களை சிறப்பாக வழிநடத்தி வந்தார்கள். ஒருங்கிணைப்பாளர்களின் ஒத்துழைப்போடும், அறிவொளித் தலைவரின் வழிகாட்டுதலோடும் நடத்தப்பட்ட அந்தஊர்கூடி- இதழுக்கு நான் உதவி ஆசிரியராக இருந்தேன்.


அப்படி நீலாவை எனக்கும்,

தமிழிலக்கிய உலகுக்கும் அறிமுகப் படுத்திய கவிதை இது -

அறிவொளி முத்தம்மா!

முதியோர் ஊதியத்தை

முறையாகப் பெற்றுவந்த

முத்தம்மா பாட்டிக்கும்

தபால்காரத் தங்கையாவுக்கும்

ஏதோ தகராறு

அருகில் சென்று

ஆதரவாய்க் கேட்டேன்,

என்ன பாட்டி தகராறு?”

அறிவொளி வகுப்புல நா

அழகாப் படிச்சு,

கையெழுத்துப் போடக்

கத்துக்கிட்டேன் னு சொல்லியும்,

கைநாட்டைக் கேக்குறான் டி

கட்டையில போறவன்

குழந்தையின் கள்ளங்கபடமற்ற சிரிப்பைப் போல பார்த்தவுடனே நெஞ்சோடு வந்து பச்சக்கென்றுஒட்டிக் கொண்டது கவிதை! நான் அதை  மிகவும் ரசித்துப் படித்து, மாவட்ட ஆட்சியரிடம் காட்டினேன். பாசாங்கற்ற அந்தக் கவிதையால் கவரப்பட்ட அவர்கள், ‘எழுதியது யார்?’ என்று கேட்டபோது, ‘ஆர் .நீலா என்று மட்டும் தான் இருக்கிறது வேறு விவரம் இல்லைஎன்றதும், தனது நாட்குறிப்பில் அதை எழுதித் தரச் சொல்லி வாங்கிக் கொண்டு படித்து ரசித்து பெண்கள் கூடும் அறிவொளி நிகழ்ச்சிகளிலெல்லாம் அதைக்கூறி, ‘இதை எழுதிய நீலா யார்? இங்கே இருக்கிறாரா?’ என்று கேட்டுக் கேட்டு, கடைசியாக நீலாவைக் கண்டுபிடித்து என்னிடம் கூறினார்கள். நான் அந்த உருவத்தைப் பார்த்து   வியந்து போனேன்! கவிதையைப் போலவே பாசாங்கற்ற முகம் பேச்சும் அப்படியே.. இந்த மாரிக்க சா..ர்..எனும் நீலாவின் பேச்சு 30 வருடம் கடந்து இப்போதும் அப்படியே இருப்பது இன்னும் வியப்பாகத்தான் இருக்கிறது!

கதை, கவிதை படிப்பதிலும் எழுதுவதிலும் இயல்பாகவே ஆர்வமாக இருந்த நீலா அதன் பிறகு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு நெருக்கமானதில் ஆச்சரியமில்லை த மு எ ச வின்  மாவட்டச் செயலராகவும் இருந்த நான், புதுக்கோட்டையில் நடந்த  இலக்கியக் கூட்டங்களுக்கு நீலாவை அழைப்பதும் அவரும் வந்து கலந்து கொள்வதும் ஆலங்குடியில் தமுஎச கிளை உருவானதும் இயல்பாகவே நடந்தது . அவருடன் அவரது கணவர் எங்கள் அருமை  நண்பர் சுபி, மகன்கள் சுதாகர் - பிரபாகர் மற்றும் ஆலங்குடியின் கலை இலக்கிய நண்பர்கள் அனைவரும் தமுஎகசவோடும் நெருக்கமாயினர்.

பிறகு, தோழர்கள் சு.மதியழகன், எஸ்..கருப்பையா, வடிவேலு, மற்றும் ஓவியர்கள் முதலான அனைவரும் நீலாவின் மூலமாகவே எனக்கும் அறிமுகமாகி மாவட்ட தமுஎகச நிர்வாகிகளாகி தோழமை உறவாயினர்!

இந்த விதமாக, எழுதுவதில் மட்டுமில்லாமல் தலைமைதாங்குவதிலும் ஒரு சேர ஆர்வம் காட்டிய நீலா, அதன்பிறகு அவள் விகடன், இளைஞர் முழக்கம், செம்மலர் இதழ்கள் நடத்திய கலை இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றுச் சிறந்தார். ஆனந்தவிகடன் பவளவிழா கவிதைப்   போட்டியில் நீலாவின் இரண்டு கவிதைகள் தேர்வு செய்யப்பட்டன.

தமுஎகசவின் மாவட்டத் தலைவர்களில் ஒருவராக, பிறகு மாநிலச் செயலாக, மகளிர் ஒருங்கிணைப்பாளராக  வளர்ந்திருப்பது யாருடைய சிபாரிசிலும் அல்ல, தனது படைப்பு உழைப்பு தலைமைப் பண்புக்காக அவரே உழைத்து செதுக்கிப் பெற்ற உயர்வு

காலம் அறிந்து கூடும் சேவலை

கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது

கல்லைத் தூக்கி பாரம் வைத்தாலும்

கணக்காய்க் கூவும் தவறாது

- எனும் பட்டுக்கோட்டையின் கருத்து உண்மையல்லவா?  என்னைச் சந்தித்திருக்காவிட்டாலும் இவருக்கு இந்த வளர்ச்சி எப்படியும் கிட்டியிருக்கும்.  ஏனெனில் இவர் சுயமாக வளரும் மூலிகைச் செடி!.

ஒரு பெண் அவள் பெண் என்பதாலயே வீட்டுக்கும் நாட்டுக்கும் சுமையாகக் கருதப்படுகிறாள் என்பது, இன்றைய சமூகத்தின் முரண்பாடுகளில் முக்கியமானது.

ஆனால் தன் எதிர்பார்ப்பு உள்ளத்தளவிலோ உடலளவிலோ நிறைவேறாதபோது அடங்காத பெண்புலிகளாகி அந்த உணர்வுகளையும் கொட்டித் தீர்த்துவிடும் பெண்கவிகள், அண்மைக்காலமாகத் தமிழ்க் கவிதை உலகில் புயல்கிளம்பி வருவதுதான். இதுவரை தமிழில் கேட்டிராத புதுக்குரல். சங்க காலத்திற்குப் பிறகு இரண்டாயிரம் ஆண்க் கழித்துப் பெண்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருப்பது இப்போதுதான், பெண்களின் வாழ்க்கை இப்போது என்னவாக இருக்கிறது என்பது முன் எப்போதையும் விட அழுத்தமாக வெளிப்படுகிறது என்கிறார் அண்மையில் செம்மொழித் தமிழ்விருது பெற்ற பேரா.பஞ்சாங்கம்.
(
புத்தகம் பேசுது நேர்காணல் - செப் - 04) இதையே கடந்த 2004 செப்டம்பர் 11 ஆம் தேதி, இந்திய சாகித்திய அகாதமியின் பொன் விழாவையொட்டி திருவனந்தபுரத்தில் நடந்த 4 தென்மாநிலங்களுக்கான கருத்தரங்கில் தமிழ்க்கவிதை பற்றி நான் வாசித்த கட்டுரையிலும் கூறியிருந்தேன்.

முன்னெப்போதையும்விடப் பெண் குரல் சற்றே உயர்ந்தும், கலையழகோடும் தமிழ்க் கலை இலக்கியத் துறையில் தற்போது வெளிப்பட்டு வருவதற்கு தமிழ்நாட்டின் ஜனநாயக இயக்கங்கள் அடைந்துள்ள வளர்ச்சி ஒரு முக்கியமான காரணம்

மும்பையிலிருந்து புதியமாதவியும், புதுவையிலிருந்து மாலதி மைத்ரியும், சென்னையிலிருந்து கனிமொழி, இளம்பிறை, தாமரையும், வந்தவாசியிலிருந்து அ. வெண்ணிலாவும், திருத்தணியிலிருந்து.கல்பனாவும ,  துவரங்குறிச்சியிலிருந்து  சல்மாவும், சிவகாசியிலிருந்து திலகபாமாவும், திண்டுக்கல் அய்யம்பாளையத்திலிருந்து சக்திஜோதியும், புதுக்கோட்டை ஆலங்குடியிலிருந்து ஆர். - நீலாவும் நம்பிக்கையூட்டும் வகையில் எழுதிவரும் பெண்கவிகள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

இந்தத் தொகுப்பில் மிகப்பல கவிதைகள் எனக்கு மட்டுமல்ல இதைப் படிக்கும். கவிதை ஆர்வலர் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

பூக்களைப் போல, சிறகு விரிக்க, மரப்பாச்சிப் பொம்மைக்கும், கிரகணம், பொன் பார்க்கும் படலம், அறிவொளி முத்தம்மா, விமர்சனம், நமக்கும் வேணும், ஆராரோ, வீணையல்ல, சந்தேகம், தலைமுறை சோகம், அந்தக் கொள்ளிக் கூடத்தில் மற்றும் ஓசிச்சோறும் ஒருமொந்தைக் கள்ளும், புள்ளி, உடலதிகாரம், முதலான கவிதைகள் அப்படி நேர்த்திக் கவிதைகள்

பூக்களைப் போல
வண்ணங்களோடு பிறக்கவும்
வாசனையோடு இருக்கவும்
ஆசைதான்..
ஆனால்
நல்லவற்றை இணைப்பதென்றால்
நாராக இருக்கவும் சம்மதமே


எனும் கவிதையில் இவர் ஒரு இலக்கியவாதி மட்டுமல்ல, சமூக இயக்கவாதியும் கூட என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார்.

ஆரடிச்சா சொல்லியழு எனும் போஸ்ட் மாடனிசக்கவிதை ஆச்சரியமூட்டுகிறது.

முருங்கைத் தோழி கவிதை நற்றிணையையும்

முன்னம் உனது நாமம் கேட்டான் பக்தி இலக்கியத்தையும் 

நினைவூட்டி இவரது வேர்களின் ஆழத்தை விளக்கும் எனில்

மெயில் விடு தூது கவிதையும், தலைமுறை சோகம் கவிதையும் 

இவரது சிறகுகளின் பார-தூரத்தைக் காட்டுகின்றன 

வீணையல்ல நானுனக்கு எனும் தலைப்புக் கவிதை மிக அருமையானது

. தாய் தந்தை தம் குழந்தைகளை, கணவர் தன் மனைவியை,  வழி நடத்துகிறேன் எனும் ஆர்வக்கோளாறில் செய்யும் அவச்செயல்கள் இந்தத் தலைமுறையில் ஏராளம். இந்தப் புரிதல் இல்லாததால் நடக்கும் குடும்பச் சிக்கல்கள் சமுதாயச் சிக்கலில் கொண்டுபோய் நிறுத்தி, குடும்பமும், சமூகமும் சேர்ந்தே சீரழிவதை நாம் பார்த்து வருகிறோம்.

கெட்ட எண்ணத்தோடு செய்தால் திட்டலாம், திருத்தலாம், நல்ல எண்ணம் கொண்டு செய்யப்படும் இந்த வழிகாட்டுதல் எனும் பிடி வாத கருத்தை என்ன செய்வது? இதைக் கவிதையாக்கி பொட்டில் அறைகிறார் நீலா.


இதைபோலத்தான் நாணமென்றும் அச்சமென்றும் நாய்கட்கும் வேண்டாம் என்று ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய போதும், பாரதி நினைக்கப்பட்டான். ஊமையராய்க் கிடந்த நம் நாட்டு - வீட்டு - பெண்கள்தான் . எந்த அளவு வளர்ந்துவிட்டார்கள் என்பதை பாரதி பார்த்தால் “குழந்தைகளின்“ வளர்ச்சி கண்டு நிச்சயமாக பூரித்துப் போய் ஒரு கவிதை எழுதியிருப்பான் என்றே தோன்றுகிறது.

என் சரியை மட்டுமல்ல
என் தவறையும்
நானே செய்துகொள்கிறேன்


-
எனும் வரிகள் புதிய சமூகத்துக்கான விதைகள்  புதிய விழுதுகளை இறக்கும், அவையும் வேர்விடும், அதிலும் புதிய விழுதுகள் எழும்..

நடன சிங்காரன், வியூகம், விரிகோணம், குரல்கள் தலைமுறை இடைவெளி ஆகிய கவிதைகள் ஒரு பொருட் பல குரல் கவிதைகள்!

பக்கத்துப் பாண்டிய நாட்டுக்குப்பொருள் வயின் பிரிந்ததலைவனை நினைந்து, சோழநாட்டுக் காதலி அலைக்கழிந்த நிலைபோலவே,

இன்றும்

பாலைவன துபாய்க்குப் போன கணவனை நினைந்து, பரிதவிக்கும் காதலி இருக்கத்தான் செய்கிறாள்என்பது பெண்கள் நிலையில் இரண்டு நூற்றாண்டு கழிந்தும் பெரிய மாற்றமில்லை என்பதை அறைந்து சொல்லும் கவிதை நெஞ்சைப் பிழிகிறது!

குடிப்பவன் நீ துடிப்பவள் பெண்என்பதும்,

ஒவ்வொரு முறையும்

ஒரு பிணத்தைத் தழுவுவதை

நீ உணர்வதே இல்லை என்பதும் என்றைக்கு மாறுமோ என படிக்கும் அனைவரையும் குடிக்கு எதிராகத் திருப்பும் கூர்வேல் கவிதைகள்.


ஏற்கனவே ஒரு சிறுகதை, கவிதைத் தொகுதி, ஒரு கட்டுரைத் தொகுதி வெளியிட்டிட்ருந்தாலும் கவிதையைப் பொறுத்தவரை, இவை இவரது மொத்தத் தொகுதி. இன்னும் இன்னும் வேண்டும ், எழுதுவார்.

இந்த மூலிகைச் செடியின் வாசம், ஆலங்குடி புதுக்கோட்டை தாண்டி தமிழகம் முழுவதும் மணம்பரப்பி வருவது பெருமிதம் தருகிறது.

கவிதையின் பழைய அடையாளங்களை மட்டுமல்ல, நவீன போக்குகளையும் நன்கு உணர்ந்து எழுதியும் இயங்கியும் வரும் இவர், இன்னும் இன்னும் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன் .

அன்புடன்,

நா.முத்துநிலவன் - செல்பேசி - 94431 93293

புதுக்கோட்டை

06-09-2021

------------------------------------------------------------------------ 

 

7 கருத்துகள்:

  1. பெரும்பான்மையான அணிந்துரைகள்
    பூசி மெழுகிப் புகழ்ந்துரைப்பவையாகவே உள்ளன.ஆனால் இது கவிஞர் குறித்தும் அவரது கவிதை குறித்தும் தரமான அறிமுக உரையாக இருக்கிறது.இது அணிந்துரை தருபவரின் அறம்சார் நேர்மையை தெரியப்படுத்தாகிறது.
    அதுவும் கவிஞர் நம்மவர் என்கிறபோது இந்த எழுத்து நேர்மை எள்ளளவுக்கும் ஐயத்துக்கு இடம்தராதிருக்க வேண்டியதாகிறது.இவர் பூசிமெருகிட்ட பொன்மகளல்ல;பெருமலையின்
    இறுக்கத்தைப் பெயர்த்தெடுத்த வைரம் என்பதை அவரது கவிதை வரிகளைக் கொண்டே வாசகருக்குப் புரியவைத்த நுட்பம் சிறப்பு.அணிந்துரையின் தொனி வியந்தோதலாக அமையாதல் ஆய்வறிஞர் தொனியில் அமைந்திருப்பது மிகச் சிறப்பான அம்சம்.
    முன்மாதிரி அணிந்துரை.ராட்டுகள் நிலவன்.

    பதிலளிநீக்கு
  2. கவிஞர் நீலாவுக்கு வாழ்த்துகள் 💐

    பதிலளிநீக்கு
  3. பொதுவாக அணிந்துரை எழுதுபவர்கள் நூலாசிரியரின் திறமையைத் தட்டிக் கொடுக்கும் விதத்தில்தான் எழுதுவார்கள்; அந்தத் தட்டிக் கொடுத்தலில் ‘நீ கீழ், நான் மேல்’ எனும் பாணி தென்படும். ஆனால் நீங்களோ இவ்வளவு எளிமையாக எழுதியிருக்கிறீர்கள்! இதை அணிந்துரையெனவே சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. இது நட்புரை, அன்பானதொரு வாழ்த்துரை!

    கவிஞர் நீலா அவர்களைப் பற்றிச் சில மாதங்கள் முன் நம் தோழர் மைதிலி கஸ்தூரிரெங்கன் அவர்கள் கூறினார். கவிஞரை அறிமுகப்படுத்த அவர் கடினப்படவோ சொற்களை விரயமாக்கவோ இல்லை. ஆனந்த விகடனில் முத்திரைக் கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது கவிதையின் இரண்டு வரிகளைச் சொன்னார், அடுத்த வரிகளை உடனே நான் சொல்லி விட்டேன்.

    "முந்தானையை முறுக்கியபோதும்
    கால் விரலால் நிலத்தைக் கீறியபோதும்
    ... ... ...
    எல்லாம் அவனை நினைத்தே செய்வதாய்
    அடித்தாயே அப்பா!
    நீ
    அடித்த பிறகுதானப்பா
    அவனை நினைத்தேன்."

    என்பது அக்கவிதை (நினைவிலுள்ள வரை).

    18 ஆண்டுகள் ஆகின்றன, படித்து. ஆனால் இப்பொழுதும் நினைவில்! "எப்படி ஒரு படைப்பை எழுதியிருக்கிறார் பார்த்தீர்களா?" என்று நாங்கள் இருவரும் பேசிக் கொண்டோம். இப்படி முத்திரைப் படைப்புகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தக் கவிதைகள் சில இன்னும் மனதில் மணம் வீசிக் கொண்டுதான் இருக்கின்றன. கவிஞர் நீலா தொடர்ந்து இப்படிப்பட்ட அழுத்தமான படைப்புகளை வழங்க இந்தச் சிறுவனின் பணிவன்பான வாழ்த்துக்கள்!

    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  4. கவிதைப் புத்தகம் படிக்காதவர்களும் கவிதைகளைப் படிக்கத் தூண்டும் அற்புதமானதொரு அணிந்துரை ஐயா.

    பதிலளிநீக்கு