அழியாத் தமிழின் அடையாளம் யார்? தொல்காப்பியரா? வள்ளுவரா? கம்பரா? பாரதியா? -இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்!

அன்பினியீர் வணக்கம்.
நான், 1980ஆம் ஆண்டிலிருந்து 1997வரை
திருமிகு குன்றக்குடி அடிகளார்
திருமிகு மதுரை நன்மாறன்
திருமிகு சாலமன் பாப்பையா
திருமிகு பாரதி கிருஷ்ணகுமார்
1997 முதல் 2017வரை
திருமிகு திண்டுக்கல் .லியோனி
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு
திருமிகு நந்தலாலா,
திருமிகு மதுக்கூர் இராமலிங்கம்
திருமிகு பழ.கருப்பையா,
திருமிகு அப்துல் காதர் 
முதலான சான்றோர்ளை நடுவராகக் கொண்ட இலக்கிய, சமூக, கல்வி, அரசியல் பட்டிமன்றங்களில் சிலஆயிரம் மேடைகளில் பேசியிருக்கிறேன்.
அதிலும்,
நகைச்சுவைத் தென்றல் திரு.திண்டுக்கல் .லியோனி அவர்கள் என்னை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் தலைநகர்கள், மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், கத்தார், சிசெல்ஸ், ஜாம்பியா என  உலகின் பல நாடுகளுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார். லியோனி அவர்களோடு மட்டுமே (1997முதல்- 2017 வரையான) இருபதாண்டுகளில் குறைந்த பட்சம் 2,000 பட்டிமன்ற நிகழ்வுகளில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பேசியிருக்கிறேன். (இது இன்னும் அதிகமாக இருக்கும்! எண்ணவில்லை என்பதாலேயே சுமாராக என்கிறேன்)
அதோடு,
பொதிகை, சன், கலைஞர், விஜய், ராஜ், பாலிமர், மெகா, நியூஸ்18, என பற்பல தொலைக்காட்சிகளில் பலநூறு முறை பேசியிருக்கிறேன். (இந்தக் கரோனாக் காலத்தில் சில  மறு ஒளிபரப்பாகவும் வந்ததன! வந்தன! வந்துகொண்டே இருக்கின்றன!) 

பேசிய பட்டிமன்றம் அனைத்திலும் அணித் தலைவராக  மட்டுமே பேசியிருக்கிறேன் என்பது என் பெருமையல்ல, நடுவர்களின் பெருந்தன்மை!

1990களில் நான் நடுவராக, என் தலைமையில் அப்போது பேசிய மதுக்கூர் ராமலிங்கம், நந்தலாலா ஆகியோர் என்னை விடவும் சிறப்பாகப் பேசி வருவதை உணர்ந்து, நாளடைவில் அவர்களின் தலைமையில் பேசவும் நான் தயங்கியதில்லை. திண்டுக்கல் திரு.லியோனி அவர்களே இதை ஆலங்குடிக் கவிஞர் வெள்ளைச்சாமி அவர்களின் கவிதைநூல் வெளியீட்டு விழாவில் (15-3-2020) புதுக்கோட்டையில் சொன்னார். திறமைக்கு வயது தடையல்லவே!

ஆயினும், பல்லாயிரம் மேடை கண்ட நான், நடுவர் பொறுப்பை விரும்பிச் செய்வதில்லை! அது தொழில் போல ஆகிவிட்டதை நான்விரும்பவில்லை. தமிழகத்தின் பிரபலமான சில நடுவர்கள் விரும்பி அழைத்த போதும் கூட, நான் நாகரிகமாக மறுத்திருக்கிறேன். (எனக்கு நெருக்கமான பேச்சாளர் நண்பர்களுக்கும் இது தெரியும்) நான் எனக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு தான் மேடையேறுவேன். எனக்கு உடன்பாடற்ற தலைப்பில் பேசமாட்டேன் என என் நண்பர்கள் அறிவர். குறிப்பாக திரு .லியோனி அவர்கள் மற்றவரிடமும் இதைச் சொல்வார்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு
நான் நடுவராக
ஒரு பட்டிமன்றம் வருகிறது!
அதுவும் நான் விரும்பியது போல 
முழுக்க முழுக்க இலக்கியம்  
பேசுவதாக அமைந்திருப்பது 
எனக்குப் பெருமகிழ்ச்சியளிக்கிறது.

இதுவரையான தமிழ்ப் பட்டிமன்ற உலகில்
இந்தத் தலைப்பில் யாரும் பேசியதில்லை என்று
உறுதியாகச் சொல்வேன் – 
பட்டிமன்ற நண்பர்கள் இதை அறிவார்கள்

எமது இலக்கியப் பட்டிமன்றத்தின் தலைப்பு -
அழியாத் தமிழின் அடையாளம் யார்?
தொல்காப்பியரா? வள்ளுவரா? கம்பரா? பாரதியா?

அவரவர் வீடுகளில் இருந்தே
ஐவரும் பேசப் போகிறோம்.
நீங்களும்
வீடுகளில் இருந்தே 
நட்பும் உறவுமாய்ப் பார்த்து கேட்டு மகிழலாம்.

தமிழ்சார்ந்த பல அரிய தகவல்களை நாங்கள் ஐவரும் தருவோம் எனும் உறுதியை மட்டும் உங்களுக்கு வழங்கி, நிகழ்வை நேரலையாகக் காண வருக வருக என அன்புடன் அழைக்கிறேன்

நன்றி, வணக்கம்.
தோழமையுடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை-622 004
செல்பேசி எண்- 94431 93293
-------------------------------------------------------- 

 நிகழ்வின் பதிவை வலையொளியில் காண்பதற்கான  இணைப்பு - 

https://youtu.be/nMtJWVt3A7Q 

---------------------------------- 

கல்லூரி உரை வலையொளி இணைப்பு

கடந்த பல்லாண்டுகளாக, கல்லூரிகளில் வகுப்புத் தொடக்க விழா, தமிழ்மன்றத் தொடக்கவிழா, மாணவர்- ஆசிரியர்- பெற்றோர் மன்றத் தொடக்க விழா, இலக்கியவிழா மற்றும் ஆண்டு விழாக்களில் பங்கேற்றுப் பேசி வருவது வழக்கமாயிருந்தது.

இந்த ஆண்டு கரோனாவால் உலகம் முழுவதும் எவ்வளவோ இழப்பு. பொதுக்கவலையோடு, என் தனிப்பட்ட கவலையும் இணைந்து, இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று நினைத்திருந்தேன். 

இதோ இணைய வழியே பேச முதல் அழைப்பு!

(இந்தக் கரோனாக் காலத்தில் 10, 12 இணைய அரங்க நிகழ்வுகள் பேசி விட்டாலும், இதுதான் முதல் கல்லூரி வகுப்புத் தொடக்க விழா! கடந்த வாரம் புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரியில் இலக்கண வகுப்பைத் தொடங்கி வைத்ததைத்தான் நண்பர்கள் பார்த்திருப்பீர்களே!)

இன்று (26-6-2020 வெள்ளி) காலை 10.30 – 11.45மணி இது நடந்தது.

வீட்டிலிருந்தே 

ஒரு கல்லூரியின் 

தமிழ்மன்றத் தொடக்கவிழாவில் 

பங்கேற்றுப் பேசுவது 

புதிய அனுபவமாகத்தான் இருந்தது!

மாணவ-மாணவியரின் தொடர் ஆரவாரத்திற்கிடையே 
அவர்களின் மலர்ந்த முகங்களைப் பார்த்துக் கொண்டே, 
கையொலி முழக்கங்கள் மற்றும் சிலநேரம் சீழ்க்கையும்(?) சேர்த்துப் பார்த்துக் கொண்டே பேசுவது ஒரு சுகமான அனுபவம்! 

(நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு மாறாகப் பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரிகளில்தான் சீழ்க்கை அதிகம் பறப்பதை நேரில் பார்த்து வியந்து மகிழ்ந்திருக்கிறேன். பாவம் அந்தப் பிள்ளைகளை வீடுகளில் வாயைத் திறக்க விடாமல் “பொத்திப் பொத்தி” வளர்த்து வந்தால் இப்படித்தான் சிலநேரம் இடம்பார்த்துப் பொங்குவார்கள்!)

இதோ இந்த ஆண்டின் முதல் இணைய வழி எனது உரை-

கேட்டுப் பார்த்துச் சொல்ல வேண்டி நண்பர்களை அழைக்கிறேன்

வலையொளி இணைப்புக்குச் சொடுக்குக –

https://youtu.be/ef7x1WqfWbY




எட்டு லட்சம் நன்றிகள்!


ஓடிக்கொண்டே இருப்போம்!
22-02-2011 அன்று தொடங்கிய
எனது ஒன்பதாண்டு
இணையத் தமிழ்ப் பயணத்தில்
இப்போது,
848 பதிவுகள்  
11,744 பின்னூட்டங்கள்
508 பின்தொடர் நண்பர்கள்
உடன், இப்போது
எட்டுலட்சத்தைக் கடந்த
பக்கப் பார்வைகளைத்
தந்தமைக்கு நன்றி
(இதை எழுதுவதற்குள் -இரண்டு நாளைக்குள்-
மேலும் எழுநூறைத் தாண்டி ஓடுகின்றது!)
பக்தி-ஆன்மீகம்-சோதிடம்-சாப்பாடு-பொழுதுபோக்குப் பற்றி 
நான் எழுதியதே இல்லை,  
இனி எழுதவும் போவதில்லை!
------------------------------------------------------------
சமூக முன்னேற்றத்திற்கான
எதையும் எளிமையாக எழுதுவேன்! 
இதுவே எனது பாணியும் பணியுமாகும்!
------------------------------------------------------------
ஐயா அருள்முருகன் போல அரிதானவற்றை எழுதவும்,
மதுரை செந்தில்குமார் போல அருஞ்செய்திகளை எழுதவும்,
தில்லி வெங்கட் நாகராஜ்போல பயணக்குறிப்பு எழுதவும்,
அமெரிக்க விசு, ஆல்ஃபி போல நகைச்சுவை எழுதவும்,
திண்டுக்கல் தனபாலன் போல குறள்,இசை தந்து எழுதவும்,
சென்னை முரளிதரன் போல எளிமையாக எழுதவும்,
சகோ.துளசி,கீதா, KSRவைசாலிபோல இணைந்தெழுதவும்,
திருச்சி விஜூ, சென்னைப் புலவர் போல மரபு எழுதவும்,
வேலூர்இராமன், காவிரிமைந்தன்போல அரசியல்எழுதவும்,
புதுகை கஸ்தூரி, ஸ்ரீமலை போல ஆங்கிலம் எழுதவும்
மும்பைபுதியமாதவி, புதுகைமு.கீதாபோல பெண்ணியம்எழுதவும்,
யு.எஸ்.மதுரைத்தமிழன் போல கிண்டலாக எழுதவும்,
மதுரை முனைவர் வா.நேரு போல பகுத்தறிவு எழுதவும்,
புதுகை மைதிலி, செல்வா போல புதுக்கவிதை எழுதவும்,
அட்லாண்டா கிரேஸ் போல மொழியாக்கமாக எழுதவும்,
கனடா பாரதிதாசன் போல இலக்கணம் எழுதவும்,
துபை பரிவை சே.குமார் போல சிறுகதையாக எழுதவும்,
தஞ்சை ஜம்புலிங்கம் ஐயா போல களஆய்வுகளை எழுதவும்,
கரந்தை ஜெயக்குமார் போல நாடகபாணிஎழுதவும்
காரைக்குடி தேனம்மை போல தொடர்ச்சியாக எழுதவும்,
செங்கை நீச்சல்காரன் போல கணிமை எழுதவும்
எனக்கும் ஆசைதான்…  ஆனால்என்ன செய்ய?
நமக்கு அப்படியெல்லாம் வந்தால்தானே எழுத முடியும்?
(என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம்?
நமக்கும் இதெல்லாம் எழுத வரணும்ல?)

ஆனால், சங்கஇலக்கியம் தொடங்கிச்
சமகால இலக்கியம் வரை, மேற்காணும்
இவர்அனைவரிடமிருந்தும் கற்றுக்கொண்டு
எழுத, விடாமல் முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன்…!
----------------------------------------------
நம்மோடு பயணித்த நண்பர்களில்,
புதுக்கோட்டைத் தோழர்கள் வைகறை, குருநாதசுந்தரம்,
திருச்சி நண்பர் தமிழ்இளங்கோ
மதுரை சீனுஅய்யா
ஆகிய இனியவரை இழந்தது
மறக்கமுடியாத பெருந்துயரம்!
----------------------------------------------------
இதில் சிலரின் படைப்புகள் தரமாக இருந்தும் பார்வையாளர் எண்ணிக்கை இவர்களுக்கு ஏன் அதிகரிக்கவில்லை?” என்று நான் அவ்வப்போது குழப்பமும் கவலையும் அடைவதுண்டு!

சோதிடம், ஆன்மீகம், சினிமா, ஜோக்குகளை மட்டுமே வெளியிடும் சிலரின் பார்வையாளர் எண்ணிக்கை எகிறுவதைப் பார்க்க
இந்தச் சமூகத்தின் மனநிலை பற்றி வருத்தப்படுவதும் உண்டு!

          தமிழ்மணத்தை இப்போது பார்க்க முடிவதில்லை               
என்பது பெருந்துயரம்
இனித் தொடர்ந்து எழுதுவேன்... வேறு வழி?

என்றாலும், எனது பதிவு இடப்படும் நாளில் சுமார் 500 பக்கங்களும், மற்றநாள்களில் சுமார் 250பக்கங்களும் பார்க்கப்படுவது ஒன்றும் சிறிய செய்தியல்ல! சிறப்புப் பதிவெனில் ஒரேநாளில் 2000 பக்கம் வரையும் பார்க்கப் படுவதுதான் எனக்கே நம்பிக்கையோடு வியப்பளிக்கிறது!

(தமிழுக்கு விளம்பர உதவி  வந்துவிட்டதாக அறிகிறேன்.
ஆனால், அதில் வரும் ரம்மி போலும் ராஸ்கல் விளம்பரங்களைத் தவிர்த்து உரியவற்றை மட்டும் பெற முடியுமா கஸ்தூரி?)

சாதி ஒழித்திடல் ஒன்று நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால் மற்றப்
  பாதி துலங்குதல் இல்லை 
பாரதி தாசன்.
-------------------------------------------------- 
(பி.கு. என் நெடுங்கால இணைய நண்பர்கள் மன்னிக்கவும்.
ஏன் மன்னிப்புக் கோருகிறேன் என்பதை என் புதிய நண்பர்கள் பழைய நண்பர்களிடம் கேட்டு எனக்கும் சொல்லவும்!)
---------------------
சரி
இப்போது நாளை மறுநாள்
(வரும் வெள்ளியன்று)
26-6-2020 காலை 10.30மணிக்கு
ஒரு நேரலை உரை!


கலந்துகொள்ள அவசியம் வருக!
கருத்துகளை 
இப்பதிவின் பின்னூட்டத்திலும் தருக!