தமிழ் இனிது -20 - பெயர்களை மாற்ற வேண்டுமா?

   

(நன்றி- தமிழ் இந்து நாளிதழ் - 31-10-2023 )

   இசையமைப்பாளர், தமிழார்வலர் ஜேம்ஸ் வசந்தன்,  ”ர,ற,ல,ள,ழ எழுத்துகள், ஏன் மொழி முதலில் வருவதில்லை?” என்று கேட்டிருக்கிறார்.

·          மெய்யெழுத்துகள் -18,

·          ஆய்த எழுத்து -1,

·          ட,ண,ர,ல,ழ,ள,ற,ன– எழுத்துகளின் வர்க்க எழுத்துகள் (8x12) -96,

·          ங,ஞ,ய,வ – வர்க்க எழுத்துகளில் சில - 30.                                               

 ஆக, 145 எழுத்துகளும் மொழி முதலில் வராதவை என்பர்.

முதலில் வராத காரணம்

உயிரெழுத்துகள் பிறப்பை 3நூற்பாவில் விளக்கும் தொல்காப்பியர் (85-87), மெய்யெழுத்துகள் பிறப்பை, 13நூற்பாவில் சொன்ன பிறகும், ‘புறனடை’யில், ‘மெய்களை, மாத்திரையால்’ சொல்வார் (102)

‘உயிரின்றி மெய் தனித்து இயங்காது’ என்பதால், மெய் முதலில் வராது! உயிரோடு சேரும் போதுதான் மெய்யெழுத்தின், உச்சரிப்பு எளிதாகும்.  “க்“ எனும் எழுத்தை, “இக்” என்றே சொல்கிறோம் அல்லவா?       

அடுத்து, 

உயிர்மெய் எழுத்துகளிலும், உச்சரிப்பு மாறக்கூடிய  ல-ழ-ள,  ட-ர-ற,  ண-ன எழுத்துகள் சொல்லின் முதலில் வந்தால் புரிதலில் குழப்பம் நேரும். இதனாலேயே இவற்றைப் பிரித்து சொல்லின் முதலில் வராத எழுத்துகள் பட்டியலில் வைத்தனர். இதுவே ஜேம்ஸ் வசந்தனின் கேள்விக்கான எனது விளக்கம்.

எனினும், தற்காலத் தமிழ், இம்மரபை மீறிவருகிறது.

 வாழ்வியல் கலப்பே மொழிக்கலப்பு

தமிழுக்கு மாறாக, மெய்யெழுத்தில் தொடங்கக் கூடிய வடமொழிச் சொற்கள் – ப்ரியா போல -  தமிழில் புழங்கும் போது, ‘இதே எழுத்துகள் ஏன் தமிழில் முதலாகாது?’ எனும் கேள்வி எழுவது இயல்பே.

‘வடசொற்கள் தமிழில் வழங்கும் முறை’ பற்றி விளக்குகிறார் தொல்காப்பியர்(884).  பின்வந்த நன்னூல், ‘வடமொழியாக்கம்’ என்றொரு தலைப்பில், இருமொழி எழுத்துகளையும் ஒப்பிட்டு, தமிழில் எழுதக்கூடிய முறையை விளக்கும். இதில்தான் ஸ்ரீரங்கா–அரங்கன்,  ராஜ்–இராசா,  ருஷப-இடபம், ஷண்முக–சண்முகன், ப்ரியா–பிரியன் என்றாகும். உண்மையில் ஆழ்வார்கள் பாடிய “அரங்கம்” முதலிய தனித்தமிழ்ச் சொற்களில் கிரந்த எழுத்துகளைச் சேர்த்து மீண்டும் தமிழில் இப்படி வரும் என்றது, தொல்காப்பியர்க்குப் பின்வந்தோர் செய்த “உள்ளடி வேலை“ என்றறிக!

சமயச் சடங்கு வழி, தமிழர் வாழ்வில் கலந்த சொற்களால், புதிய மொழிகள் தோன்றியதைச் சொல்வார் பெ.சுந்தரனார்

வாழ்வியல் இலக்கணம்!

இன்றைய பன்னாட்டுப் பண்பாட்டுக் கலப்பில், தமிழ் இலக்கண வரலாற்றைக் கவனிக்கிறோமா? ‘Hospital’-ஐ ‘ஆஸ்பத்திரி’யாக ஆக்கியும், சிற்றூர்க் கிழவி, ‘ஆசுபத்திரி’ என்கிறாரே!  ‘காமாட்சி’ என்ற மகனை, சிவகாமி அம்மையார், ‘ராசா’ என்று அழைக்க, நமக்குக் ‘காமராசர்’ கிடைத்தாரே!  இதுதான் மரபு வழிவந்த வாழ்வியல்!  

மாற்றுவதும் மரபே!

 ‘ச,ர,ல எழுத்துகள் மொழி முதலாகாது’ என்ற பழைய மரபு மாறிவிட்டதே? இன்றைய தமிழ்க் குழந்தைகளின் கலப்புப் பெயர்களில் வாழ்வியல் கலப்பும் தெரியவில்லையா?  

தமிழே அல்லாத ‘கிரந்த’ முதலெழுத்தில் தொடங்கும் ‘ஸ்டாலின்’, ‘ஜெயலலிதா’, ‘ஜீவா’ போலும் பெயர்களை மாற்ற வேண்டுமா? மொழி வளர்ச்சியும் சமூக வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை ஏற்கத்தானே வேண்டும்? ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல’ – நன்னூல்.  ஆனால் கவனம்,  கழித்தல் அல்ல கழிதல்!

ஜேம்ஸ் வசந்தன் கேட்டிருந்த உயிர்மெய்களில் சில, இப்போது மொழி முதலாவதோடு, பிறமொழி மெய்யெழுத்துகளும் மொழி முதல் ஆகின்றனவே?  புழங்குமொழி மாறாமலே இருப்பதும் இயலாதே! மாறுவது மரபு,  இல்லையேல் கவனத்தோடு   மாற்றுவதும் மரபுதான்!  

-------------------------------------- 

(இக்கட்டுரை பற்றிய உரையாடலின் போது, ஒரு முக்கியமான 

பிழையைச் சுட்டி, திருத்தம் சொன்ன, 

சென்னை நண்பர் இ.பு.ஞானப்பிரகாசம் அவர்களுக்கு 

எனது நன்றி கலந்த வணக்கம்) 

---------------------------------------------------- 

 

தமிழ் இனிது -19 "பொரி, பொறி"

           

(நன்றி- 17-10-2023 இந்து தமிழ் நாளிதழ் )

           என்னிடம் பேசும் பலரும், கேட்கும் கேள்வி “இது உங்க அப்பா அம்மா வச்ச சொந்தப் பெயரா, புனைப்பெயரா?“ என்பதுதான்!  நான் “புனைப் பெயரில்லை,  புனை பெயர்தான்“ என்பது வழக்கம்!

இரண்டுக்கும் வேறுபாடு உண்டு! எழுத்தாளர் பலரும் தமது சொந்தப் பெயரை விட்டு, வேறெரு மாற்றுப் பெயரில் எழுதுவார்கள்.  ஜெயகாந்தன் (முருகேசன்), புதுமைப் பித்தன் (சொ.விருத்தாசலம்), கண்ணதாசன்(முத்தையா), சுஜாதா, (ரங்கராஜன்) கந்தர்வன் (நாக லிங்கம்)  எனப் புகழ்பெற்றவர், உண்மைப் பெயர் அடைப்புக்குறிக்குள்!

அரசு விதி / கம்பீரம் என இதற்குச் சில காரணம் உண்டு! எனினும் அந்தப் பெயர், புனைந்து கொள்ளும் பெயர் என்பதால் “புனை பெயர்“ என்பது தான் (வினைத் தொகை) சரி. புனைப்பெயர் என்பது தவறு.   

கைப்பிடியும், கடைப்பிடியும்

          ‘கை பிடி அரிசி’ என்பது தவறு. கையால் ஒரு பிடி எடுக்கும் அளவால், மற்றும் ஆதரவாகப் பிடித்துக் கொள்வதால் ‘கைப்பிடி’ என்பதே சரி. “நல்ல கருத்தை, படிப்பது மட்டுமல்ல, ‘கடை பிடிக்க’வும் வேண்டும்“ என்பதும் சொல்லளவில் தவறு! கடையைப் போய் எதற்குப் பிடிக்க வேண்டும்?  ‘கடைப் பிடி’ என்பது தான் சரி.

சில்லரையும், சில்லறையும்

          முந்நூறு ரூபாய் தந்து, 295 ரூபாய்க்குப் பயணச் சீட்டு வாங்கி, மீதி 5ரூபாய்க்காக, இரவெல்லாம் தூங்காமல் வருவோர் உண்டு! விழிப்புணர்வைத் தூண்டிவிட்ட நடத்துநர் நடக்கும் போதெல்லாம், காதலன் காதலியைப் பார்ப்பது போலப் பார்த்து, ”அந்த சில்லரை?” என்று - தனக்கே கேட்காத குரலில் – கேட்பவர் உண்டு! சில்லரை என்பது தவறு! (இதை அந்த நேரத்தில் சொன்னால், அந்தப்  பயணர் நம்மைக் கடித்தே தின்று விடுவார் என்பதால் துணிச்சலோடு இந்து-தமிழில் சொல்கிறேன்!)

“ஒரு தொகையை சிலவாக அறுத்து (கூறுபோட்டு) தரப்படுவது சில்லறை. ஆகவே சில்லறைதான் சரியான சொல்“ என்று இதை அழகாக விளக்குவார் தமிழறிஞர் கோ.ஞானச்செல்வன்.

கோரலும், கோறலும்

            கோரிக்கையில்தான் கோரல் வரும். ‘கோருகிறோம்’ என்றால் ‘விண்ணப்பிக்கிறோம்’ என்பது பொருள். இதைச் சிலர் ‘கோறல்’ என்கிறார்கள்! ‘கோறல்’ என்றால் கொலை செய்தல்’ என்று பொருள்! (குறள்-321). எழுத்துப் பிழைக்காகக் கொலைப்பழி தாங்கலாமா?

சொரியும், சொறியும்

            ஊர்த் திருவிழாவில்  பூச்சொரிதல் முக்கியமானது.  

சிரங்கு வந்தால் நம்மை அறியாமலே கைகள் ‘சொறி’யும்!  பூவைச் சொறிந்து விட்டால் அதற்குக் கூசுமே? சொரிதல் வேறு, சொறிதல் வேறு.  

‘சொறி’யில் வரும் வல்லெழுத்தால் சிரங்கை, சிறங்கு என்பது தவறு! கவிமணி தேசிக விநாயகர்,  சிரங்கு வந்து பட்ட சிரமத்தைக் கூட வெண்பாவாய்ப் புலம்பினார்  “…சிரங்கப்ப ராயா, சினமாறிக் கொஞ்சம் இரங்கப்பா ஏழை எனக்கு”!  

பொரியும், பொறியும்

            வீட்டு எலிகளைப் ‘பொறி’ வைத்துப் பிடிக்கிறார்கள்.  

மாலைப் பொழுதினில், அதுவும் மழை நேரம் எனில்,    காரப் பொரி கடலையை வாய் தேடுகிறது!  

‘பொறி’ என்பது ஒருவகை எந்திரம். ‘பொரி’ என்பது காரைக்குடி நகரத்தார் வழக்கில் சொன்னால் “இடைப் பலகாரம்”!  இடையில் உண்ணும்  சிற்றுண்டி – டிஃபன்! - இந்தச் சொல்லே இனிக்கிறதல்லவா!

--------------------------------------  

(நன்றி- 17-10-2023 இந்து தமிழ் நாளிதழ் )

------------------------------------ 

கடந்த நமது வலைப்பதிவில் கேட்டிருந்த

கணக்குப் புதிருக்குப்

பலரும் சரியான விடையைச் சொல்லிவிட்டார்கள்!

அவர்கள் யார் யார் என்று 

கடந்த பதிவின் பின்னூட்டத்தில் பார்க்கலாம்.

விடையும், கடந்த பதிவின் 

பின்னூட்டத்திலேயே  (கமெண்ட்ஸ்) உள்ளது!

தனியாகத் தெரிவித்தவர்களும் பலர் உளர்.

இவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளுடன்,

நன்றி கலந்த வணக்கமும்.

அப்புறம்,

ஒரு முக்கியமான நன்றி-

இந்தப் புதிர் ஒன்றும்  நம் கற்பனையல்ல,

(அவ்வளவுக்கு நமக்கேது கணக்கறிவு?)

ஒரு சீன வலைத்தளத்தில் வந்தது.

அறிமுகமில்லாத அந்தத் தயாரிப்பாளர்க்கு 

எனது நன்றியும் வணக்கமும்.

----------------------------------------

5 + 5 + 5 = 550 எப்படி வரும்?

 சும்மா 

எப்பப் பாத்தாலும்

பெரிய பெரிய செய்தியாத்தான்

பேசணுமா?

---------------------------------------

மண்டை காயுதுல்ல? 

--------------------------------------- 

இப்ப ஒரு சின்ன

கணக்குப் புதிர்

பாக்கலாமா?


எத்தன பேரு

சரியா

விடை சொல்றீங்கனு

பாக்கலாமே?

----------------------------------- 

5 + 5 + 5 = 550 வரணும்

இதில்

ஒரே ஒரு முறை

நீங்கள் ஏதேனும் செய்யலாம்

விடை சரியாக 550 வரணும்.

அவ்வளவு தாங்க!

விடை தெரிஞ்சவுங்க

இதே பின்னூட்டப் பெட்டியில் போடலாம்.

--------------------------------------- 

(தெரியாதவங்க 

திங்கள் கிழமை தெரிஞ்சுக்கலாம்!

இதே பதிவை 

மீண்டும் பாத்துத் 

தெரிஞ்சுக்கங்க)

வர்ட்டா?

----------------------------------------------- 


தமிழ்இனிது-18- (அய்யாவும் மய்யமும் - இந்து தமிழ் நாளிதழ்)

( நன்றி - இந்து தமிழ் - திசைகாட்டி -10-10-2023 )

நண்பர் ஒருவர், “ஐயா, அய்யா  இரண்டில் எது சரி?, கமல் கட்சியில் ‘மய்யம்’ என்பது சரியா? ‘மையம்’தானே சரி?” என்று கேட்டார்.

 ‘ஐயா’வில் உள்ள ‘ஐ’ எழுத்தை, அதற்குரிய இரண்டு மாத்திரை அளவுக்கு அழுத்தி உச்சரிக்காமல், ஒன்றரை மாத்திரை அளவில் ‘அய்யா’ என்றே பேசுகிறோம். அதுபோலவே, ‘சமையல்’, ‘சமயல்’ ஆகிறது. ‘மழை பெய்கிறது’ என்பதை, ‘மழ பெய்யுது’ என்றே சொல்கிறோம்.   

 இதை ‘ஐகாரக் குறுக்கம்’ என்று இலக்கணம் சொல்கிறது.  அதாவது, ‘ஐ’ எனும் இரண்டு மாத்திரை, தன் ஓசையில் குறுகுவது!

‘தற்சுட்டு அளபு ஒழி ஐ, மூவழியும் நையும்’ - நன்னூல்-95.  கை, பை, எனவரும் ஓரெழுத்து ஒருமொழி தவிர்த்து, தொடரில் வரும் ‘ஐ’யை, 2மாத்திரைக்கு உச்சரிப்பதில்லை. ‘ஐ’ முதலில் வந்து ‘ஐயா’, ‘அய்யா’ ஆகிறது! இடையில் வந்து, ‘உடைமை’- ‘உடமை’ ஆகிறது, இறுதியில் வந்து ‘தவளை’ , ‘தவள’ ஆகிறது. 

இதுபற்றித் தொல்காப்பியரிடம் கேட்டால், ‘அகர இகரம் ஐகாரம் ஆகும்’ (தொல்-நூற்பா எண்-54) என்று,  ‘ஐ’, ‘அய்’ இரண்டையுமே பயன் படுத்தச் சொல்லி, வியக்க வைக்கிறார்!   

மீண்டும், ‘விளிமரபு’ இயலில், ‘ஐ ஆய் ஆகும்’  என்கிறார் (தொல்-606). ‘அன்னை’ என ஐகாரத்தில் முடியும் சொல், விளி(அழைப்பு) ஏற்கும்போது ‘அன்னையே’ என்று ஆவது போல, ‘அன்னாய்’ என்றும் வரும் (கலித்தொகை-51). ஆக, ‘ஐ’-‘அய்’ என வருவது புதிதல்ல! பழந்தமிழில், ‘கை’யை, ‘கய்’என்றே சொல்கின்றன சிந்தா மணியும் (கய்தரு மணி) கம்ப ராமாயணமும் (கய்யொடும் இற்று).      

இன்றும் கிராமக் காவல் தெய்வமாக ‘அய்யனார்’ இருக்கிறார்! ‘ஐயப்பன்’ ‘அய்யப்பன் இருவரும் ஒருவரே! ஆக, ‘ஐயா’, ‘அய்யா’ இரண்டும் சரிதான். கமல், ‘மய்யம்’ என்பதும் சரிதான்.    

உடனே, ‘தமிழில் ‘ஐ’ எனும் உயிர் எழுத்தே வேண்டாமா?’ எனில், ‘ஐ’ இருக்கும். இரண்டும் கெட்டானாக, ‘ஐய்யா’ என்பதுதான் இருக்கக் கூடாது! அதோடு, ‘அய்’ என்பதே தவறு என்றும் சொல்ல வேண்டாம்!   

இதன் தொடர்ச்சியாக, ‘கலைஞரை, கலய்ஞர் என்றல்லவா எழுத நேரும்?’ எனில், ஆம்! ஆனால், ‘ஒரே மூச்சில் ஒன்பது படி தாண்டக் கூடாது’ என்றே எழுத்துத் சீர்திருத்தர் வலியுறுத்தவில்லை என்று நினைக்கிறேன்.

வள்ளுவர் குறளில், ‘ஔ’ எழுத்தையே பயன் படுத்தவில்லை! ‘ஔ’ வந்த இரண்டு குறளிலும் (167,169) ‘அவ்’ என்றே சொல்கிறார்! ‘ஐ’, ‘அய்’ ஆவதற்கும் ‘ஔ’, ‘அவ்’ ஆவதற்கும் தொடர்புண்டோ?

மறுபக்கம், மற்ற உயிரெழுத்துகள் போலன்றி, ‘ஐ’ ‘ஔ’ இரண்டு எழுத்து மட்டும் கூட்டெழுத்தாக உள்ளதையும் ஆய்வு  செய்ய வேண்டும்.   

“இலக்கணமும் சமூக உறவுகளும்” என்றொரு சிறு ஆய்வு நூலை, ஈழத் தமிழறிஞர் கா.சிவத்தம்பி எழுதியிருக்கிறார். அதன்படி பார்த்தால், ‘தோழரே’, ‘உடன்பிறப்பே’, ‘ரத்தத்தின் ரத்தமே’, ‘ஜீ’ என்று, அவரவர் சார்பை அடையாளப் படுத்துவது போல, பெரியார் கருத்துகளை ஏற்றுக் கொள்வோர், ‘ஐயா’வைப் பெரும்பாலும் ‘அய்யா’ என்றே எழுதுகிறார்கள் என்பதும் உண்மை தான் ! “மய்யம்” கமலும் அப்படித்தான் போல!    

--------------------------------------------------------------------- 

தமிழ்இனிது-தொடர்16, 17

 தமிழ் இனிது-16     

 (நன்றி -இந்து தமிழ் நாளிதழ் 
26-9-2023 செவ்வாய் )
உளமார / மனமாற வாழ்த்தலாமா?!

மனம், குளம், மரம்  
        இவை போலும் சொற்கள் தொடரில் வரும்போது, ‘அத்து’ எனும் பகுபத உறுப்பு (சாரியை) சேர்ந்து, ‘மனத்தில் நினைத்தேன்’, ‘குளத்தில் குளித்தேன்’, ‘மரத்தில் ஏறினேன்’ என்று மாறுவது மரபு. எனினும் ஏனோ, ‘மனம்’ மாறி(?) ‘மனதில்’ என்று பேசுவது பழக்கமாகி, பிறகு அதுவும் தொடர்ந்து வழக்கமாகி, எழுத்திலும் வந்துவிட்டது! பாரதி, “மனதில் உறுதி வேண்டும்” என்றே பாடுகிறார். மனத்தில் என்பது மனதில் என்றானதற்காக, ‘குளதில்’ குளிக்க முடியாது! ‘மரதில்‘ ஏறவும் கூடாது!  அப்படியான வழக்குகள், தமிழில் இல்லை! ஆனால், இங்கே பேச்சு வழக்கில் உள்ள ‘மனசு’, “மனசில் ஆயோ?” என்று மலையாள வழக்கிலும் உள்ளதை, ஒப்பாய்வு செய்யலாம்.    

தமயன் - தமையன்-

   தம்+ஐயன்= தமையன் (தமக்கு மூத்த, பெரியவன்),  தம்+அக்கை=தமக்கை, தம்+பின்= தம்பி (தமக்குப் பின் பிறந்தவன்), தம்+கை= தங்கை (தமக்கு இளையவள், சிறியவள்), கை எனும் சொல், சிறிய என்றும் ஒரு பொருள்தரும்! கைப் பை, கைக் கடிகாரம், கைப் பேசி என்பன கையில் இருப்பதால் மட்டுமின்றி கைக்கு அடக்கமான அளவில் சிறியதாய் இருப்பதாலுமே  இப்பெயர் பெற்றன என்பது இன்னொரு தமிழ் நுட்பம்!  

அடமானம் - அடைமானம் - 

   ‘மானத்தை அடகு வைப்பது’ ன்னும் பொருளில் வரும் இந்தச் சொல்லின் பண்பாட்டுச் சிறப்பைப் பாருங்கள்! சொந்தக் காலில் நிற்க வேண்டுமே அன்றி, கடனாகக் கூடஏற்பது இகழ்ச்சிஎனும் சுயமரியாதை இதற்குள் கிடக்கிறது! அடகு வைப்பது சொத்தை அல்ல,  தன்மானத்தையாம்! பேச்சு வழக்கில் அடைமானம் அடமானம் என, எனும் நெடில், என குறில் ஓசை பெறுவது ஐகாரக் குறுக்கம். ஆனால்,  எழுதும்போது சேர்த்து எழுதுவதே மரபு. அதாவது, எழுதும்போது பழைமை, உடைமை, புடைவை, தமையன், ஏழைமை, அடைமானம் என எழுதுவதை, பேச்சு வழக்கில் பழமை, உடமை, புடவை, தமயன், ஏழமை, அடமானம் என்றே சொல்கிறோம்.  எனினும் பேச்சு மொழியை எழுத்து மொழியில் எழுதுவது வழக்கமாகி வரும்போது, இந்த  எழுத்து மரபை  அறிந்திருப்பதும் அவசியம்.

உளமாற – உளமார?  

   நண்பர்கள் ஆரத் தழுவிக் கொள்வதும், வாயார வாழ்த்துவதும், உளமாரப் புகழ்வதும், வயிறார உண்பது சரிதான். இதை மனமாற என்றால், மனம் மாற என்னும் தவறான பொருள் தந்துவிடும்.

வான வேடிக்கை – சரியா?  

    வானத்தில்  நடப்பதால்   வானவேடிக்கை ஆகிவிடாது! வானமா வேடிக்கை காட்டுகிறது? வானத்தில் நாம்தானே வேடிக்கை காட்டுகிறோம்? வாணம் என்றால் வண்ணவெடிச் சரம். எனவே ‘வாண வேடிக்கை’ என்பதே சரி. ‘புஸ்வாணம்’ என்பது வெடிக்காமலே ‘புஸ்‘ என ஒலி-ஒளியைத் தருவதால் வந்த பெயர். இதை, ‘எதிர்பார்த்தது நடக்காத’ போது, கிண்டலாக, ‘புஸ்வாணம் ஆயிருச்சு!’ என்னும் வழக்கில் கேட்கலாம்.

வீடு கட்ட, பூமியைத் தோண்டுவதையும் ‘வானம் தோண்டுவது’ என்னும் வழக்கு வியப்பானதுதான்! ‘மதுரையில்மெஜுரா மில்’ கட்ட வானம் தோண்டிய போது ரோம நாணயங்கள் கிடைத்தன!’ என்பது, சொல்லாலும் பொருளாலும் வியப்பூட்டும் தமிழ் நுட்பம்! 

 --------------------------------------------

 தமிழ் இனிது     (17)                      

(நன்றி - இந்து தமிழ் -03-10-2023 - செவ்வாய் ) 
------------------------------------------------------------------- 
 'அண்ணா'வை   கைவிடலாமா?

சொற்களைப் புரிந்து கொள்ள, நேரடியாக அகர முதலி -Dictionary- யில் தேடுவதை விடவும், சூழலுடன் அச் சொல்லைப் பொருத்திப் பார்க்கும் போதுதான் தெளிவு கிடைக்கும்.

மேல்நாடும், கீழத்தெருவும் –   

தமிழ் வழக்கில், “மேல்நாடு” என்பதை, மேற்குலக நாடு என்றே புரிந்து கொள்கிறோம். சிலருக்கு, “மேற்கில் உள்ள நாடா, மேலான நாடா?” என்று சந்தேகம் வருவதும் இயல்பு. தமிழில் மேற்கு கிழக்கு என்பன திசைகளைக் குறித்தாலும், உயர்ந்த, தாழ்ந்த என்றும் பொருள் உண்டு! தமிழ்நாட்டின் மேற்கில், உயரமான மேற்கு மலைத்தொடரும், கிழக்கில், தாழ்வான நிலப்பகுதிகளும் இருப்பதிலிருந்து இக்கருத்து வந்திருந்தாலும், சமூக ஏற்றத்தாழ்வைக் குறிப்பதும் ஆய்வுக்குரியது.  (குறள்-973). பெரும்பாலான சேரிப் பகுதிகள், ஊருக்குக் கிழக்கிலேயே இருப்பதைச் சிந்தித்தால் இது விளங்கும். “சிந்துவெளி நகரங்களின் மேல்-மேற்கு, கீழ்-கிழக்கு இருமைத் தன்மை” என்று, இதுபற்றி ஒரு அத்தியாயமே எழுதுகிறார் “ஒரு பண்பாட்டின்  பயணம்” எனும் பெருநூலின் ஆசிரியர், திரு ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப., இந்தக் கருத்து வியப்புக்கு மட்டுமல்ல சமூகவியல் ஆய்வுக்கும் உரியது.

எல்லாரும், நல்லோரும்

            இலக்கிய வழக்கில் “எல்லோரும்“ என்னும் சொல், பேச்சு வழக்கில் “எல்லாரும்“ என்றே வருகிறது. “எல்லாரும் ஓர் விலை” - பாரதி பாடல், சில பதிப்புகளில் “எல்லோரும்” என்றும் அச்சாகியுள்ளது! “எல்லார்க்கும் நன்றாம் பணிதல்”-குறள்-125. இதேபோல, “நல்லாரைக் காண்பதுவும் நன்றே” என்கிறார் ஔவை. இதற்குத் தொல்காப்பியரும் “ஆ ஓ ஆகும்.. …செய்யுள் உள்ளே”–“அதாவது, நல்லார் என்பது நல்லோர் என்றும் வரும்” - என்று ஒப்புதல் தருகிறார் (தொல்-680). எனவே,  இரண்டு சொற்களில் ஏதேனும் ஒன்றை ஓசைக்கேற்பப் பயன்படுத்தலாம்.  

  மூத்த சகோதரர் எதற்கு?

            பிறமொழிச் சொற்களைக் கடன் வாங்கலாம், பிறநாட்டவரின் கண்டுபிடிப்புகளை, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் பயன் படுத்தும் போது, அவர்களின் சொற்களைப் பயன்படுத்துவதும் இயல்பே. ஆனால், அந்தச் சொற்களில் தமிழ் மரபின் கவனமும் தேவை.

             ‘அண்ணன்’ எனும் ஒற்றை உறவுச்சொல் ஆங்கிலத்தில் இல்லை. அதில் ‘Elder Brother’ தான். அதற்காக ஆங்கில வழியில்  ‘மூத்த சகோதரர்’ என்று தமிழைப் படுத்தலாமா? அண்ணன் என்னாவது? waterfalls-ஐ  ‘நீர்வீழ்ச்சி’ என்றால் ஏற்கெனவே இங்கிருக்கும் அழகு தமிழ் ‘அருவி’ வருத்தப்படாதா? இவைபோலும் சொற்களில் மிகுந்த கவனம் தேவை! ஆடம்பரத்திற்காகக் கடன் வாங்கினால் வாழ்க்கை சீரழியும், அலட்சியமாகச்  சொற்களைக் கடன்வாங்கினால் தமிழும் சீர்குலையும்.   

காந்தீயமா? மார்க்சியமா?   

காந்திய வாதிகள் தீயவற்றைப் பார்க்க, பேச, கேட்க வேண்டாம் என்று மூன்று குரங்குகள் உணர்த்தும். இருந்தும் சிலர் “காந்தீயம்” என்று எழுதுகிறார்கள், இது தவறு. “இசம்“ (ism) எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம்தான் “இயம்”என்பது. இதன்படிப் பார்த்தால் காந்தியம், மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், என்பனவே பொருத்தமான சொற்கள். இதே போல, பாசிசம், நாசிசம், என்கிறார்கள்! தமிழ் மரபின்படி ‘பாசியம்’, ‘நாசியம்’ என்றல்லவா எழுத வேண்டும்?! சர்வாதிகாரத்தைத் தமிழ் விரும்பவில்லை போலும்! குறள்-அதிகாரத்தை ஏற்கும் தமிழ், சர்வ-அதிகாரத்தை ஏற்பதில்லை என்றே தோன்றுகிறது. இதுதான் தமிழ் அறம்! ஏனெனில் தமிழ் இனிது! 


------------------------------------------------------------------ 

 நமது “தமிழ் இனிது” தொடர் பற்றி,

03-10-2023 - காலை “கலைஞர் தொலைக்காட்சி” 

“ஒன்றே சொல் நன்றே சொல்” பகுதியில் பேசிய  

அண்ணன் சுப.வீரபாண்டியன் அவர்கள்,

மனம் திறந்து வாழ்த்தி, பாராட்டினார்கள்.

4-நிமிடம் கடந்த அவர்களது உரையைப் பெற்று

பதிவிட முயல்கிறேன்.

(நண்பர்கள், கிடைத்தாலும் அனுப்பலாம்)

-------------------------------------