தமிழ் இனிது -20 - பெயர்களை மாற்ற வேண்டுமா?

   

(நன்றி- தமிழ் இந்து நாளிதழ் - 31-10-2023 )

   இசையமைப்பாளர், தமிழார்வலர் ஜேம்ஸ் வசந்தன்,  ”ர,ற,ல,ள,ழ எழுத்துகள், ஏன் மொழி முதலில் வருவதில்லை?” என்று கேட்டிருக்கிறார்.

·          மெய்யெழுத்துகள் -18,

·          ஆய்த எழுத்து -1,

·          ட,ண,ர,ல,ழ,ள,ற,ன– எழுத்துகளின் வர்க்க எழுத்துகள் (8x12) -96,

·          ங,ஞ,ய,வ – வர்க்க எழுத்துகளில் சில - 30.                                               

 ஆக, 145 எழுத்துகளும் மொழி முதலில் வராதவை என்பர்.

முதலில் வராத காரணம்

உயிரெழுத்துகள் பிறப்பை 3நூற்பாவில் விளக்கும் தொல்காப்பியர் (85-87), மெய்யெழுத்துகள் பிறப்பை, 13நூற்பாவில் சொன்ன பிறகும், ‘புறனடை’யில், ‘மெய்களை, மாத்திரையால்’ சொல்வார் (102)

‘உயிரின்றி மெய் தனித்து இயங்காது’ என்பதால், மெய் முதலில் வராது! உயிரோடு சேரும் போதுதான் மெய்யெழுத்தின், உச்சரிப்பு எளிதாகும்.  “க்“ எனும் எழுத்தை, “இக்” என்றே சொல்கிறோம் அல்லவா?       

அடுத்து, 

உயிர்மெய் எழுத்துகளிலும், உச்சரிப்பு மாறக்கூடிய  ல-ழ-ள,  ட-ர-ற,  ண-ன எழுத்துகள் சொல்லின் முதலில் வந்தால் புரிதலில் குழப்பம் நேரும். இதனாலேயே இவற்றைப் பிரித்து சொல்லின் முதலில் வராத எழுத்துகள் பட்டியலில் வைத்தனர். இதுவே ஜேம்ஸ் வசந்தனின் கேள்விக்கான எனது விளக்கம்.

எனினும், தற்காலத் தமிழ், இம்மரபை மீறிவருகிறது.

 வாழ்வியல் கலப்பே மொழிக்கலப்பு

தமிழுக்கு மாறாக, மெய்யெழுத்தில் தொடங்கக் கூடிய வடமொழிச் சொற்கள் – ப்ரியா போல -  தமிழில் புழங்கும் போது, ‘இதே எழுத்துகள் ஏன் தமிழில் முதலாகாது?’ எனும் கேள்வி எழுவது இயல்பே.

‘வடசொற்கள் தமிழில் வழங்கும் முறை’ பற்றி விளக்குகிறார் தொல்காப்பியர்(884).  பின்வந்த நன்னூல், ‘வடமொழியாக்கம்’ என்றொரு தலைப்பில், இருமொழி எழுத்துகளையும் ஒப்பிட்டு, தமிழில் எழுதக்கூடிய முறையை விளக்கும். இதில்தான் ஸ்ரீரங்கா–அரங்கன்,  ராஜ்–இராசா,  ருஷப-இடபம், ஷண்முக–சண்முகன், ப்ரியா–பிரியன் என்றாகும். உண்மையில் ஆழ்வார்கள் பாடிய “அரங்கம்” முதலிய தனித்தமிழ்ச் சொற்களில் கிரந்த எழுத்துகளைச் சேர்த்து மீண்டும் தமிழில் இப்படி வரும் என்றது, தொல்காப்பியர்க்குப் பின்வந்தோர் செய்த “உள்ளடி வேலை“ என்றறிக!

சமயச் சடங்கு வழி, தமிழர் வாழ்வில் கலந்த சொற்களால், புதிய மொழிகள் தோன்றியதைச் சொல்வார் பெ.சுந்தரனார்

வாழ்வியல் இலக்கணம்!

இன்றைய பன்னாட்டுப் பண்பாட்டுக் கலப்பில், தமிழ் இலக்கண வரலாற்றைக் கவனிக்கிறோமா? ‘Hospital’-ஐ ‘ஆஸ்பத்திரி’யாக ஆக்கியும், சிற்றூர்க் கிழவி, ‘ஆசுபத்திரி’ என்கிறாரே!  ‘காமாட்சி’ என்ற மகனை, சிவகாமி அம்மையார், ‘ராசா’ என்று அழைக்க, நமக்குக் ‘காமராசர்’ கிடைத்தாரே!  இதுதான் மரபு வழிவந்த வாழ்வியல்!  

மாற்றுவதும் மரபே!

 ‘ச,ர,ல எழுத்துகள் மொழி முதலாகாது’ என்ற பழைய மரபு மாறிவிட்டதே? இன்றைய தமிழ்க் குழந்தைகளின் கலப்புப் பெயர்களில் வாழ்வியல் கலப்பும் தெரியவில்லையா?  

தமிழே அல்லாத ‘கிரந்த’ முதலெழுத்தில் தொடங்கும் ‘ஸ்டாலின்’, ‘ஜெயலலிதா’, ‘ஜீவா’ போலும் பெயர்களை மாற்ற வேண்டுமா? மொழி வளர்ச்சியும் சமூக வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை ஏற்கத்தானே வேண்டும்? ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல’ – நன்னூல்.  ஆனால் கவனம்,  கழித்தல் அல்ல கழிதல்!

ஜேம்ஸ் வசந்தன் கேட்டிருந்த உயிர்மெய்களில் சில, இப்போது மொழி முதலாவதோடு, பிறமொழி மெய்யெழுத்துகளும் மொழி முதல் ஆகின்றனவே?  புழங்குமொழி மாறாமலே இருப்பதும் இயலாதே! மாறுவது மரபு,  இல்லையேல் கவனத்தோடு   மாற்றுவதும் மரபுதான்!  

-------------------------------------- 

(இக்கட்டுரை பற்றிய உரையாடலின் போது, ஒரு முக்கியமான 

பிழையைச் சுட்டி, திருத்தம் சொன்ன, 

சென்னை நண்பர் இ.பு.ஞானப்பிரகாசம் அவர்களுக்கு 

எனது நன்றி கலந்த வணக்கம்) 

---------------------------------------------------- 

 

15 கருத்துகள்:

  1. 'வ' எழுத்தும், மொழிக்கு, முதலில் வராதா? 'வ' எழுத்தில் தொடங்கும் பல சொற்கள் தமிழில் இருக்கின்றனவே!
    இதைப் பற்றி விளக்கம் தேவை அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், நவம்பர் 01, 2023

      வ வா வி வீ வெ வே வை தவிர்த்த வகர வரிசையின் பிற வு வூ வொ வோ எழுத்துகள் எழுத்துகள் சொல் முதலாக வருவதில்லையே!

      நீக்கு
  2. ஐயா! இப்படிப் பொதுவில் நன்றியறிவிப்பு வெளியிடும் அளவுக்கு நான் பெரிதாக ஏதும் செய்து விடவில்லை என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களைப் போல் தமிழ் நன்கறிந்தவர்கள் மொழிக்காக எவ்வளவோ செய்கிறீர்கள். என்னால் அந்த அளவுக்குச் செய்ய முடியாவிட்டாலும் உங்களைப் போன்றோருக்கு உதவுவதன் மூலம் மகிழ்வடைகிறேன், அவ்வளவுதான்☺️

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், நவம்பர் 01, 2023

      அது சிறிய உதவியல்ல நண்பரே. பெரிது! சிறிதாயினும் நன்றி சொல்வதே நல்லது. ஆனால் உண்மையிலேயே பெரிது எனும் போது..நன்றி

      நீக்கு
    2. மகிழ்ச்சி ஐயா! மட்டற்ற மகிழ்ச்சி!

      நீக்கு
  3. அருமையான பதிவு 💐💐

    பதிலளிநீக்கு
  4. உள்ளடி வேலைகள் இன்னமும் செய்து கொண்டு இருக்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், நவம்பர் 01, 2023

      ஆகா.. கவனித்து விட்டீர்களா?
      அதுதான் அதேதான் கவனிக்க வைப்பதுதான் நம் வேலையே..

      நீக்கு
  5. "மாறுவது மரபு, இல்லையேல் கவனத்தோடு மாற்றுவதும் மரபு தான்" அருமை அண்ணா

    பதிலளிநீக்கு
  6. "மாறுவது மரபு, இல்லையேல் கவனத்தோடு மாற்றுவதும் மரபு தான்"
    அருமை அண்ணா.
    -கிரேஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், நவம்பர் 01, 2023

      மாறாது எனும் சொல்லைத்தவிர அனைத்தும் மாறும் என்பதுதானே உண்மை. சில தானாக மாறும் சிலவற்றை நாம்தான் மாற்ற வேண்டும்

      நீக்கு
  7. நல்ல விளக்கம் தோழர், நன்றி 🌹

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், நவம்பர் 01, 2023

      நன்றி மட்டும் சொன்னால் போதாது, உங்களைப் போன்றவர்களின் ஆலோசனைகள் அவசியம் எனக்குத் தேவை.. கடலுக்குள் குதித்திருக்கும் எனக்குக் கை கொடுக்க வர மாட்டீர்களா? நீச்சல் கொஞ்சம் தெரியும் என்றாலும் நம்பிக்கை தரும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்

      நீக்கு
  8. காமராசர் பெயர்க்காரணம் அறிந்தேன் காலத்திற்கு ஏற்ப மாறுதலும் அவசியம் அறிந்தேன் நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  9. ஆம்.தற்போதைய ஏழாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மொழி முதல் வரும் எழுத்துகள், முதலில் வராத எழுத்துகள் எவை என்பது குறித்து படித்து இருக்கிறேன்.ஐயா அவர்களின் விளக்கமும், குறிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

    பதிலளிநீக்கு