(நன்றி- இந்து தமிழ் நாளிதழ் -07-11-2023 ) |
ஆய்தமும்
ஆயுதமும்-
‘ஆய்தல்’ எனில் ‘நுணுகிப் பார்த்தல்’
எனப் பொருள்(தொல்-813). ஆய்வு செய்பவர் ‘ஆய்வாளர்’. உயிரெழுத்து
மெய்யெழுத்து போலன்றி, ‘நுணுகிய ஓசையோடு வருவதே ஆய்த எழுத்து’ இதையே,
அஃகேனம் (அக்கன்னா!) தனிநிலை, முப்புள்ளி எனவும் சொல்வர்.
‘ஆயுதம்’- தொழிலுக்கான கருவி. அதனால்தான் “ஆயுதபூசை“ நடக்கிறது! உயிருக்கும்
மெய்க்கும் நடுவில் ஆயுதத்தை வைக்கலாமா?! முப்புள்ளி எனும் பெயரால், கேடயம்(?)
என்றெண்ணி, ‘ஆயுத எழுத்து’ என எழுதுகிறார்களோ? ஆயினும், ஆய்த எழுத்து என்பதே
சரி.
நினைவு
கூர்வதா? நினைவு கூறுவதா?
அன்பிற்கு
உரியவரின் நினைவை மீண்டும் நினைத்துப் பார்ப்பதை ‘நினைவு கூர்தல்’ என்பதா? ‘நினைவு
கூறுதல்’ என்பதா?
‘கூர்ந்து’ என்பது ‘மிகுந்து, குவிந்து’ என்னும் பொருளில் வரும். ‘அன்பு
கூர்ந்து’ ‘கூர்ந்து கவனி’ ‘நினைவு மிகுந்து மரியாதை செய்வது” என்பதால் ‘நினைவு
கூர்தல்’ என்பதே சரியானது. “இடும்பை கூர் என்வயிறே” – ஔவையார் (நல்வழி-11).
எனில், ‘நினைவு கூறுதல்’ எனும் தொடர், ‘நினைவை எடுத்துச் சொல்லுதல்’என, வலிந்து
பொருள் கொள்வதாக- தவறாகவே- அமையும்.
வாழ்க
வளமுடனா? வளத்துடனா?
‘வாழ்க வளமுடன்’ என்று எழுதக்கூடாது, அத்துச் சாரியை தந்து ‘வளத்துடன்’ என்பதே சரி
என்பார் சிலர். ஆனால், ‘வளமுடன் வாழலாம்,
என்பது நானல்ல, உலகமொடு(புறம்-72), காலமொடு(தொல்-686) எடுத்துக்
காட்டி, “நலமுடன் எழுதலாம்“என்பவர், தமிழண்ணல்!
தமிழ்நாடு
அரசா? தமிழ்நாட்டு அரசா?
அண்ணா சொன்ன “தமிழ் நாடு அரசு“ என்பதை, “தமிழ்நாட்டு அரசு என்றல்லவா
எழுத வேண்டும்?” என்று, இப்போதும் கேட்போர் உண்டு! இதை மறுத்து, தமிழறிஞர்கள்
நன்னன், வ.சுப.மாணிக்கம் போல்வாரை வழிமொழிந்து, ‘தமிழ்நாடு அரசு என்றே எழுதலாம்“
என, பொருநர் ஆற்றுப்படை “நாடு கிழவோனே“ இறுதி அடியைக் காட்டுவார் தமிழண்ணலார்
(உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் – பக்-111)
அல்லன்,
அல்லை, அல்லர் – தேவையா?
மேற்கண்ட பத்தி ஒன்றில் “நானல்ல” என்று ஒரு தொடர் உள்ளது. இதைத் தவறு என்பார்
இலக்கணப் புலவர். திணை, பால், எண், இடம் மாறாமல் வர வேண்டும் என்பது சரிதான்.
அதற்காக, நான் அல்லேன், நீ அல்லை, அவன் அல்லன், அவர் அல்லர் என்று எழுதச்
சொன்னால் ‘இருக்கிற சிக்கல் போதாதா அய்யா?’ என ஓடுவர் இளைஞர்!
வேறு, இல்லை, உண்டு எனும் சொற்களை திணை, பால், எண், இட வேறுபாடு
கருதாமல் பொருத்திக் கொள்ளலாம் என்னும் முனைவர் பொற்கோ கருத்தை ‘புதியன புகுத’லாக
நானும் வழிமொழிகிறேன்- (அண்ணல் தமிழ் – பக்-83). ஆக, நானல்ல, நீயல்ல என்பன
சரிதானே?
தப்பும்
தவறும்
தப்பு, தவறு - இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் ஆள்வர்.
இரண்டுக்கும் வேறுபாடு உண்டு!
“தவறு என்பது தவறிச் செய்வது,
தப்பு என்பது தெரிந்து செய்வது” – வாலி ( திரைப்பாடல்)
நமது உழைப்பாளி மக்கள் ஆடும் சரியான ஆட்டத்தை, “தப்பாட்டம்” என்றது, தெரிந்தே
செய்த தப்பல்லவா? ஆட்டத்தை அல்ல, போரைக் குறித்த இசைக்கருவிக்கு வைத்த பேரைச்
சொல்கிறேன்.
--------------------------------------------
பி.கு.
கடைசிப் பத்தியில் திரைப்பாடல் இடம்பெற்ற படம்
நம்நாடு என்று தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன்.
பாடல் இடம்பெற்ற படம் - பெற்றால்தான் பிள்ளையா
இந்தத் தொடரை எழுத வேண்டியதன் அவசியத்தை
உணர்ந்து கொண்டேன்! -
இன்றுதான் பத்துக்கு மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்தன-
இந்தத் தவற்றைத் திருத்தி! அனைவர்க்கும் நன்றி.
---------------------------------------
07-11-2023 பிற்பகல் 5.30
-------------------------------------
மிக்க நன்றி ஐயா
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள பதிவு
பதிலளிநீக்கு"தப்பாட்டம்" தப்பு-தல்அடித்துத் துவைத்தல் என்ற பொருளில் கிழக்குத்தஞ்சையில் வழக்காறு உண்டு.துணி தப்பப்
பதிலளிநீக்குதப்பு தவறு வேறுபாடு அறிந்தேன் நன்றி அய்யா
பதிலளிநீக்குசிறப்பான தொடர். மனம் நிறைவாக இருக்கிறது. வாழ்த்துகள் ஐயா.
பதிலளிநீக்குவழமை போலவே உங்கள் பாணியில் சுவையான தமிழ்ப் பாடம்!
பதிலளிநீக்குவளமுடன் என்பது தவறு என்றுதான் நானும் நினைத்திருந்தேன். இப்படியும் எழுதலாம் என்று சான்றுடன் விளக்கி உதவினீர்கள்! மிக்க நன்றி!
காலையில் இதைப் படித்தபொழுதே மேற்படி பாடல் நம் நாடா, பெற்றால்தான் பிள்ளையாவா என ஐயம் வந்தது. தேடிப் பார்த்து உங்களுக்குச் சொல்ல எண்ணினேன்; மறந்து விட்டேன். இது பற்றிப் பத்துக்கும் மின்னஞ்சல்களா!! தமிழைத் திரையில் சொன்னால் மக்கள் எந்தளவுக்கு மறவாமல் இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது.
விளக்கங்கள் மிகவும் அருமை ஐயா...
பதிலளிநீக்குதமிழில் எழுத விரும்புவோர் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய கருத்துகள், நன்றி தோழர்
பதிலளிநீக்குசிறப்பான விளக்கங்கள்..அருமை நண்பரே அன்பின் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு