தமிழ் இனிது-23 / நன்றி - 21-11-23 இந்து தமிழ் நாளிதழ்

(நன்றி -  இந்து தமிழ் நாளிதழ் -21-11-2023)

சுவறும், சுவரும்!

சுவர் விளம்பரத்தை விரும்பாத வீட்டார், “சுவற்றில் எழுதாதீர்” என்று எழுதி வைக்கிறார்கள். “சுவர்”, இடையின எழுத்தில் முடிகிறது, இதனால் சுவர் விழுந்துவிடுமோ(?) என்று, “சுவற்றில்“ என்று வல்லெழுத்துப் போடுவது தவறு! “சுவரில் எழுதாதீர்” என்றே சரியாக எழுதுவோம்.

பாரையும், பாறையும்

கடப்பாரை, இரும்புக் கோல்-கருவி. கல்லால் ஆனது  கற்பாறை, இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.  “கடப்பாரைக்கும் உடையாத பாறை, அதன் அடியில் முளைத்துக் கிளம்பும் சிறு செடியின் வேருக்கு நெகிழ்ந்து இடம் கொடுக்கும்“ என்று, வேறுபட்ட இவ்விரண்டு சொற்களைக் கொண்டு வாழ்வியலை விளக்குகிறார் ஔவையார்-

“பாரைக்கு நெக்கு விடாப் பாறை, பசுமரத்தின்

      வேருக்கு நெக்கு விடும்”(நல்வழி 33) 

“பாறை ஓவியங்கள் காலத்தால் தொன்மையானவை“ என்கிறார், தமிழறிஞர் நா.அருள்முருகன், நூல் -“புதுக்கோட்டை மாவட்டப் பாறை  ஓவியங்கள்”

தொல்லியல் ஆய்வுகளில் கடப்பாரையைப் பயன்படுத்துவதில்லை!

முருக்கா? முறுக்கா?

      தமிழரின் பலகாரங்களில் ஒன்றான இது, முருக்கா? முறுக்கா? என்று கேட்டால், நம்மிடம் முறுக்கிக் கொள்பவர்களும் உண்டு!

இதைத் தெளிவுபடுத்த, தமிழறிஞர் கண்ணபிரான் ரவிசங்கர் (“கரச“) சிறுபாணாற்றுப் படையின், “விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி" (247) வரியையும், “பிட்டு, அவல், அடை, முறுக்கு" எனும் திருப்புகழ் வரியையும் உதாரணம் காட்டுவது சிறப்பு.

ஆக, முறுக்கு தான் தின்பண்டம். முருக்கு என்பது, “கொல்” எனும் பொருளில் வழக்கிழந்து, இப்போது தவறாகப் புழங்கி வரும் சொல்!

அரையும், அறையும்-

விரல் விரிந்த கையளவே ‘சாண்’. அவரவர் கையால் எட்டு சாண் கொண்டதே அவரவர் உயரம்! “எறும்பும்தன் கையால் எண் சாண்” என்பார் ஔவையார். உடலின் கால் பகுதியே கால் எனும் மனித உறுப்பு! உடலின் அரைப்பகுதியே அரை - இடுப்பு!  “பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து”(சுந்தரர் தேவாரம்), இடுப்பில் கட்டும் அரைஞாண் கொடியே “அரணாக்கொடி”!  கால்களை அரையுடன் தொடுப்பது தொடை!

அறை என்னும் சொல்லுக்கு விளக்கம் வேண்டாம். எவ்வளவு பேரிடம் ‘அறை’ வாங்கியிருப்போம்? இது தவிர, வீடு-விடுதியில் உள்ளதும் அறை!  

ஒலியும், ஒளியும், ஒழியும்

            1991இல், இந்தியாவில் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (LPG) வந்தது. அதற்குமுன்  - தனியார் தொலைக்காட்சிகள் வருமுன் - 1980களில்  பொதிகைத் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நிகழ்ச்சி “ஒலியும் ஒளியும்”

            இதில், ஒற்றல் லகர ஒலி எனும் சொல் ஓசையைக் குறிக்கும், வருடல் ளகர ஒளி எனும் சொல் வெளிச்சத்தைக்  குறிக்கும். ‘ஆடியோ விஷூவல்’ எனும் ஆங்கிலத் தொடரின் தமிழாக்கமே இது! அடுத்து வரும் ஒழி எனும் சொல்லுக்கு ஒழிந்து போ என்று பொருள்.   

            இந்த வேறுபாடுகள் இருந்தும், “தமில் வால்க, சாதி ஒளிக” என்று நரம்பு புடைக்கச் சொல்லிப் பயன் என்ன? இதனால்தான் தமிழ் தனக்குரிய பெருமையோடு வாழாமலும், சாதி ஒழியாமல் ஒளிந்து கொண்டும் இருக்கிறதோ? என்று நான் நினைப்பதுண்டு!  எழுத்து, பேச்சு எனும் இருவழியில்தான் ஒரு மொழி வளர்வதும், அழிவதும் நடக்கும். இதை உணர்ந்து பேசி-எழுதினால்தான் தமிழ் வாழும்! நடந்தால் சாதி ஒழியலாம்.

---------------------------------------------------------------------------  

கட்டுரையைப் படித்த நண்பர்கள் 

தங்களின் கருத்தைத் தெரிவிக்கவும்

மின்னஞ்சலை  FOLLOWER பெட்டியில் இட்டு, 

 நண்பராகத் தொடரவும்,

தேவையெனில் பேசவும்  வேண்டுகிறேன்

எனது செல்பேசி :   +91 94431 93293

--------------------------------------------------------

13 கருத்துகள்:

  1. அருமை ஐயா! எளிய மக்களுக்கான சுவையான விளக்கங்கள்! முறுக்குக்குத் திருப்புகழ் விளக்கம் கரச-விடமிருந்து சொன்னது அவருடன் எனக்கு இருந்த இனிய நட்பை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது.

    தமிழைச் சரியாக வாழ்த்தாமலும் சாதி ஒழிப்பைச் சரியாக ஒலிக்காமலும் இருப்பதுதான் தமிழ் இன்னும் சரியாக வாழாமலும் சாதி இன்னும் ஒழியாமலும் இருக்கக் காரணமோ என்றது வியப்பான கோணம்! சரியாக வாழ்த்தித் தமிழை வாழ்விப்போம்! தமிழ் வழியில் நடப்பதன் மூலம் சாதியையும் ஒழிப்போம்! என்றும் உங்கள் வழியில் நடப்போம் நாங்கள்!

    சுவரில் என்றுதான் எழுத வேண்டும், சுவற்றில் என்பது பிழை என்பதைப் பல காலமாக உங்களைப் போல் தமிழறிந்தவர்கள் வலியுறுத்தி வருகிறீர்கள். ஆனால் இப்படிப் பல பிழைகளுக்கு எழுத்தாளர்களே காரணமாக இருப்பார்களோ என்று அடிக்கடி தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, ‘பணம்’ எனும் பழைய திரைப்படத்தில் ‘எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?" என ஒரு புகழ் பெற்ற பாடல். கவியரசு கண்ணதாசன் எழுதி கலைவாணர் என்.எசு.கிருட்டிணன் அவர்கள் பாடிய இந்தப் பாடலில் "சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ" என ஒரு வரி இடம்பெற்றுள்ளது. எழுத்தாளர்கள் தமிழறிந்தவர்களாகவும் இருக்க வேண்டியது எவ்வளவு இன்றியமையாதது என்பதை இது காட்டுகிறது. எழுத்தாளர்கள் ஒரு சொல்லை எழுதும் முன் பேச்சுத்தமிழில் அதை எப்படி உச்சரிக்கிறோம் என்று ஒருமுறை ஒரே ஒருமுறை சிந்தித்துப் பார்த்து எழுதினாலே பெரும்பாலான பிழைகளைத் தவிர்த்து விடலாம். ஆனால் யாரும் செய்வதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், நவம்பர் 21, 2023

      அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீர்கள்? சிந்தனை மிக்க எழுத்தாளர்கள் கூட எழுத்துப் பிழைகளைப் பற்றிக் கவலையே படுவதில்லை அப்புறம் தமிழ்நடை பற்றியா கவலைப் படுவார்கள்? ஆனால் ஒன்று, சிந்தனை வேகத்திற்கும் கை வேகத்திற்குமான இடைவெளியே எழுத்துப் பிழை என்பதும் என் கருத்துத்தான். ஆனால், மொத்தச் சமூகமுமே இதுபற்றிய அலட்சியத்தில் இருக்கும்போது அவர்கள்தான் என்ன செய்வார்கள்? பெரும்பான்மைச் சமூகக் கருத்தே தமிழ் பற்றிய அலட்சியத்தில் இருப்பதை முதலில் மாற்ற வேண்டும் என்பதே முக்கியம்.

      நீக்கு
    2. கண்டிப்பாக ஐயா! அந்த இனிய மாற்றத்துக்குத் ‘தமிழ் இனிது’ தொடர் கட்டாயம் சீரிய பங்காற்றும்!

      நீக்கு
  2. தங்களுக்கான அழகிய தமிழில் விளக்கம் சிறப்பு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், நவம்பர் 21, 2023

      நன்றி வலைச்சித்தரே
      (ஆமா.. உங்கள் கருத்து இவ்ளோதானா?)

      நீக்கு
  3. பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், நவம்பர் 21, 2023

      நன்றி அய்யா. நீங்கள் வரலாற்றுப் பதிவுகளாகப் பதிவிட்டு வருவது சிறப்பு அய்யா

      நீக்கு
  4. அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள். வாசிக்க சுவாரசியமாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்வியாழன், நவம்பர் 23, 2023

      நன்றிம்மா. தொடர்ந்து படிப்பதோடு கருத்துகளையும் பகிர வேண்டுகிறேன்

      நீக்கு
  5. அருமை அருமை அருமை ஐயா, முறுக்கை பற்றி நானும் தற்போதுதான் தெளிவடைந்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்வியாழன், நவம்பர் 23, 2023

      சரக்கு முறுக்கா, செட்டியார் முறுக்கா என்பதில் செயல்தான் முன்னிற்கும் அல்லவா?

      நீக்கு
  6. அறை அறை விளக்கம் சுவ(ற்)ர் விளக்கம் நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்வியாழன், நவம்பர் 23, 2023

      அம்மா, அப்பா, ஆசிரியரிடம் நான் அறைவாங்கி யிருக்கிறேன்.. அங்க எப்புடீ?

      நீக்கு