நாம் பாராட்டவேண்டிய கணினி அறிஞர், சிறுமி விசாலினியைப் பாராட்டுவோம்!


நமது வலைப்பக்கம் மற்றும் முகநூல் நண்பர் திரு அலெக்ஸ் தரும் பின்வரும் செய்தியை அப்படியே நமது வலைப்பக்க நண்பர்களுக்குத் தெரிவித்து அதே வேண்டுகோளை நானும் வைக்கிறேன். -
ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!

வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். 

இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே, பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர்.

உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

MCP (Microsoft Certified Professional)

CCNA (Cisco Certified Network Associate),

CCNA Security(Cisco Certified Network
Associate Security),

OCJP (Oracle Certified Java
Professional).

CCNA
வில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.


வேண்டுகோள்:

1)
ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.

2)
விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!
நண்பர் திரு அலெக்ஸ் அவர்களின் முகநூல்  முகவரி - https://www.facebook.com/profile.php?id=100005485415479

-----------------------------------------------------------------------------
விசாலினியின் மின்னஞ்சல் முகவரி - visalini2000@gmail.com 
----------------------------------------------------- 
விசாலினிக்கு நான் எழுதிய மின்னஞ்சலையும் அதற்கு அவர் அனுப்பியிருந்த பதிலையும் அதன்பின் அவரது தளத்தில் நான் இட்ட கருத்துரையும் இங்கு.....

அன்பிற்குரிய விசாலினிக்கு,
உன் சாதனைகளைப் பற்றி அறிய வந்தபோது பெரிதும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.
கணினி உலகின் பெண் பில்கேட்ஸாக வளர்ந்து, பெரும் புகழ்பெறவும், பெரும் பணம் ஈட்டவும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இப்போது, தமிழில் மின்னஞ்சல் தரலாம் என்பதுகூடத் தெரியாமல் இருக்கும் தமிழ்நாட்டுத் தமிழருக்கு உன் அறிவால் உணர்வூட்டு.
வெற்றுத் தமிழ்ப் பெருமை பேசாமல், அறிவியல் வழியில் நம் கல்வியையும், சமூகத்தையும் மாற்றியமைக்க உன் அறிவைப் பயன்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
நா.முத்துநிலவன் 
Jun 30 (1 day ago)
-----------------------------------------------  
 Visalini Kumarasamy visalini2000@gmail.com Mon, Jul 1, 2013 at 11:24 AM 
hello sir 
thank you for your mail 
I saw you in  Tv program 
surely i will visit your website 
now i got 5 world records and 10 international certificates in computer networking 
I have been a chief guest for 7 international conferences and gave keynote speeches there
I am conducting seminars for engg students like BE Btech students in various universities and engg colleges
you know my grand parents , both of them are  Rtd  Tamil teachers  PG asst
pl visit my own website which is created by me     www.kvisalini.com
thank you 
-------------------------
இதன் பின், http://www.kvisalini.com/ எனும் விசாலினியின் தளத்திற்குப் போய்                                   அங்கு ஆங்கிலத்திலேயே இருந்த கடிதங்களிடையில் நமது  தமிழ் மின்னஞ்சல் கருத்தேற்றம் - 
------------------------------------------------ 
அன்பு விசாலினி, உன் கணினித் திறமைக்கு என் வாழ்த்துகள். அதே நேரம் உன் தொழில் நுட்பம் தாய்மொழிக்கும் பயன்பட வேண்டும என்பதே என் விருப்பம். நான் தமிழாசிரியர் என்பதாலோ உன் தாத்தாவும் பாட்டியும் தமிழாசிரியர்கள் என்பதாலோ அல்ல, உன் தாய்மொழி தமிழ் என்பதால்... உலக நுட்பங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் கொண்டுவா! உன்னால் கணித்தமிழும் வளரட்டும். 
அன்புடன், நா.முத்துநிலவன், புதுக்கோட்டை http://valarumkavithai.blogspot.in/.
Reply • 1 • Like • Follow Post • 7 minutes ago • 01-07-2013

----------------------------------------------------------- 

முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வன

முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வன -- நா முத்துநிலவன்


நமது தமிழில், உலகத்தரம் வாய்ந்த சிறுகதைகளை எழுதிவந்த முற்போக்கு எழுத்தாளர் கவிஞர் கந்தர்வன்(59) அவர்கள் சென்னை கெளரிவாக்கத்தில் உள்ள அவரது மூத்த மகள் வீட்டில் கடந்த 22.04.2004 வியாழன் அன்று இரவு 9.30மணிக்குக் காலமானார் என்பதைத் தெரிவிக்க வருந்துகிறேன்.

ஜி.நாகலிங்கம் எனும் இயற்பெயர் கொண்ட கந்தர்வன், தமிழ் நாடு அரசின் கருவூலக் கணக்குத்துறையில் மாவட்டத் துணைக் கருவூல அலுவலராக (A.T.O.) பணியாற்றியவர். அந்த சங்கத்தின் மாநிலத்தலைவராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவராகவும், மாநில அளவில் போராட்டக்காலங்களில் வீரம் மிகுந்த தளபதியாகவும் அறியப்பட்டவர். அதனாலேயே 19 மாதகாலப் பணியிடை நீக்கம், 6 ஆண்டு ஊதிய உயர்வு ரத்து, ஓயாத பணியிட மாறுதல்கள் உள்ளிட்ட பல்வேறு பழிவாங்குதல்களுக்கும் ஆளாகி, ஓய்வு பெறுவதற்கு முன்பு கூட 3 ஆண்டுகளில் 4 மாவட்ட மாறுதல்களுக்கு ஆளானவர்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்து தொடர்புள்ள கூர்மையான படைப்பாளி, அதன் மாநிலத் துணைத்தலைவர். 
போராட்டக் காலங்களில் அவரது கவிதைகள் நெருப்பாகப் பற்றும், அவரது பேச்சு புயலாக வீசும். இவரது திட்டமிட்ட செயல்பாடுகளும் வழிகாட்டுதல்களும் போராட்டப் பிரளயத்தைக் கிளறிவிடும்.
1981 முதல்-
கிழிசல்கள்,
மீசைகள்,
சிறைகள் எனும் மூன்று தனித்தனிக் கவிதைத்தொகுப்புகள் வந்தன.(இவை மூன்றும் சிவகங்கை கவிஞர் மீராவின் அன்னம் வெளியீடுகள்).பின்னர் இவற்றைத் தொகுத்து 'கந்தர்வன் கவிதைகள் ' எனும் பெரும்தொகுப்பும் 2003ஆம் ஆண்டு வந்தது.(இது மட்டும் சென்னை சந்தியா பதிப்பகம்)
பூவுக்குக் கீழே,
ஒவ்வொரு கல்லாய்,
சாசனம்,
கொம்பன்,
அம்மாவும் அப்பாவும் எனும் 5 சிறுகதைத் தொகுப்புகள் அன்னம் வெளியீடுகளாக வந்துள்ளன.
ஓய்வு பெற்ற பிறகும் சிறுகதைகளை எழுதிக்கொண்டேயிருந்தார். அவரது சிறுகதை மேனிலை (+1, +2) வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்த்துணைப் பாட நூலில் இடம்பெற்றுள்ளது. அவரது சிறுகதை மற்றும் கவிதைகளை எம்.ஃபில், பி.எச்.டி. பட்டங்களுக்குச் சிலர் ஆய்வுசெய்து வருவதை நான் அறிவேன் (என்னிடமே அவர் படைப்புப் பற்றிய விவரம் கேட்டனர் சிலர்)
செம்மலர், தாமரை போலும் இடைஇதழ்களில் மட்டுமன்றி, விகடன் போலும் வெகு ஜன இதழ்களிலும், இடது சாரி இலக்கியச் சிற்றிதழ்களிலும் எழுதிக்கொண்டேயிருந்தார்.
தீக்கதிரின் வண்ணக்கதிர் இலக்கியப்பகுதியிலும், 'புதிய புத்தகம் பேசுது ' இதழிலும் இலக்கிய நூல்களைப் பற்றிய அறிமுகம்/விமர்சனம் எழுதினார்.
கடந்த 10 நாளைக்கு முன்பு கூட தீக்கதிர் நாளிதழில் 'இந்தியா ஒளிர்கிறது ' பற்றி ஒரு கிண்டல் கவிதையை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாத கலைமகள், மற்றும் விகடன் இதழ்களுக்கு அடுத்த படியாக, மிக அண்மையில் வெளிவந்த சென்னை த.மு.எ.ச.வின் 'கூட்டாஞ்சோறு ' இதழில் எழுதியிருந்த சிறுகதைதான் அவர் இறுதியாக எழுதிய கதை.
கடந்த மாதம் மதுரையில் சாகித்ய அகாதெமி நடத்திய சிறுகதை பற்றிய கருத்தரங்கில் கலந்துகொண்டதுதான் அவர் இறுதியாகக் கலந்துகொண்ட பெரிய இலக்கிய நிகழ்ச்சி.
ஆரிய பட்டா
வானத்தைக் கிழித்தது,
அணுகுண்டு சோதனை
பூமியைக் கிழித்தது,
அரைக்கைச் சட்டை
கிழிந்தது மட்டுமே
நெஞ்சில் நிற்கிறது.
பிள்ளை வேண்டாமென்று
கருப்பையைக் கிழித்தார்கள்,
இனி, உணவும் எதற்கென்று
இரைப்பையைக் கிழிப்பார்கள்.
எல்லாம் கிழிந்த
எங்கள் தேசத்தில்
வாய் கிழிவதுமட்டும்
வகை வகையாயிருக்கும்.
(கிழிசல்கள்)

பொதுக்கிளாசில் டீ கேட்க,
தனிக்கிளாசில் டீ கொடுக்க,
ஒரு டீ யின் விலை
ஒன்பது உயிர்கள் என்று
விலைவாசி உயர்ந்துகிடக்கிறது.
(மீசைகள்)

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை,
ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கில்லை.
-- போன்றன அவரது புகழ்பெற்ற கவிதைகளில் ஒரு சில.
கவிதைகளை விடவும் அவரது இலக்கியச்சாதனை சிறுகதைகளிலேயே நிகழ்ந்தது என்பது எனது கருத்து.
அவரது 'துண்டு ', 'கொம்பன் ', 'அதிசயம் ', 'பூவுக்குக் கீழே ' போன்ற சில கதைகள், தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் புதுமைப் பித்தன் வரிசையில் தாராளமாக அவரை என்றென்றும் பேச வைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஒரு நாவல் எழுதிக்கொண்டிருப்பதாகவும், இந்தக் கோடை விடுமுறையில் மனைவி மற்றும் பேத்தியுடன் புதுக்கோட்டைக்கு வரும்போது அதை நிறைவு செய்ய எண்ணியிருப்பதாகவும் கடந்த 10 நாளைக்கு முன் தொலைபேசியில் பேசிய என்னிடம் அவர் தெரிவித்திருந்ததும், அது நடவாமலே அவர் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றதும் பெரிய சோகம்.
இரண்டு மகள்களையும் திருமணம் செய்துகொடுத்து நிறைவான வாழ்வாகவே அவர் வாழ்ந்திருந்தாலும், எங்கோ இராமநாத புரத்துச் சிக்கல் ஊரில் பிறந்து, பணி நிமித்தமாகப் பல ஊர்களும் சுற்றி, அப்படி 1981இல் புதுக்கோட்டை வந்த அவரை கடைசிவரை புதுக்கோட்டைக் காரராகவே வைத்திருந்த எங்கள் இலக்கியச்சுற்றம் ஒரு பெரும் ஆலமரத்தை இழந்த சோகத்தில் இருக்கிறது.
அதிலும் அவரது ஒரே மகனை, நான் பணியாற்றும் முன்மாதிரி மேல் நிலைப் பள்ளியில் 6 ம் வகுப்பில் வேண்டிக் கேட்டு நானே கொண்டுபோய்ச்சேர்த்து... சேர்ந்த ஒரே வாரத்தில் மதிய நேரத்தில் அருகில் இருந்த குளத்தில் இறங்கி அகால மரணம் அடைந்த நிகழ்ச்சி என் நெஞ்சில் என்றும் குத்திக்கொண்டே யிருக்கும் முள்ளாக நிலைத்துவிட்ட பெரும் சோகத்தை யாரிடம் போய்ப் பகிர்ந்து கொள்வதென்றே தெரியவில்லை.
இப்போதும் நான்தான் அவரது ஒரே மகனை 'அநியாயமாக ' கொண்டுபோய் சாவின் வாயில் கொடுத்துவிட்டதாக எங்கள் ஊரில் சிலர் நினைப்பதைப் போல, நானும் நினைத்துக் கூனிக் குறுகிப் போகிறேன். ஆனால் அந்தப் பெரிய உள்ளம் மட்டும் தனது பெரும் இழப்பை மறைத்துக்கொண்டு, எனக்கு ஆறுதல் சொன்னதை என் வாழ்நாள் உள்ளளவும் மறக்கமுடியாது. இதனால், அவரது மூத்த மருமகனே அவருக்குக் கொள்ளி வைத்தார்
23.04.2004 அன்று மாலை புதுக்கோட்டை எண்30, பிரகதாம்பாள் நகர்- கோவில்பட்டி-திருக்கோகர்ணம் புதுக்கோட்டை 622 003 இல் இருந்து தொடங்கிய அவரது இறுதி ஊர்வலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பினர் தே. இலட்சுமணன், செம்மலர் சிரியர் எஸ்.ஏ.பெருமாள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பேரா.கதிரேசன், திண்டுக்கல் எம்.எல்.ஏவும் கவிஞருமான பாலபாரதி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் சா.தோ.அந்தோணிசாமி, திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணக்குமார், சாகித்ய அகாதெமி உறுப்பினர் பவா செல்லத்துரை, 'சீவலப்பேரி பாண்டி ' செளபா, எழுத்தாளர் தவன் தீட்சண்யா, மற்றும் அவர் பணியாற்றிய அரசு ஊழியர் சங்கம் / எழுத்தாளர் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் ஏராளமான அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மாநிலமுழுவதும் இருந்து வந்திருந்த கலை இலக்கியவாதிகளும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
செய்தியறிந்து மாநிலமுழுவதும் இருந்து விவரம் கேட்டு, வந்துகொண்டேயிருந்த இரங்கல் செய்திகள் ஏராளம். சாகித்ய அகாதெமியின் தமிழ் மொழிக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலா, பிரபல இலக்கிய விமர்சகர் தி.க.சி., சென்னை டாக்டர் மங்கை-அரசு, திண்டுக்கல் ஐ.லியோனி, முதலானவர்கள் இரங்கல் செய்தி அனுப்பிக்கொண்டேயிருந்தார்கள். என்னிடம் தொலைபேசி வழியே கேட்ட விவரங்களை வைத்தே அடுத்த நாள் (24.04.2004) தினமணியிலும், ஹிந்துவிலும் செய்தி போட்டிருந்தார்கள். இந்த வாரம் ஆனந்த விகடனிலும் இரங்கல் செய்திவந்திருப்பதை நண்பர்கள் பார்த்திருக்கக் கூடும்.
'60வயதை நெருங்கிய போதும், வயதை மீறி, நீட் 'டாக பேண்ட்டுக்குள் சட்டையை 'இன் 'செய்து, முழுக்கைச்சட்டையை மடித்துவிட்டு, 'டை 'அடித்து, அழகான தோற்றத்துடனேயே எப்போதும் காணப்படும் கந்தர்வன் நான் உள்பட பற்பல எழுத்தாளர்களை எப்போதும் உற்சாகப்படுத்திய மாபெரும் உற்சாகி! அவரது உருவமும், அவர் எழுதிய கதை-கவிதைகளின் உள்ளடக்கமும் என்றும் நம்முள் நின்று செயல்படத்தூண்டும் என்பதில் சந்தேகமில்லை
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பான நண்பர்களுக்கு, வணக்கம்.
இது, கந்தர்வன் காலமானபோது, “திண்ணை“ இணைய இதழில் நான் எழுதியது.  http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60404295&format=print&edition_id=20040429
கந்தர்வன் காலமாகி 8ஆண்டுகள் ஓடிவிட்டன. இதை ஏன் இப்போது எடுத்து நமது வலையில் இடுகிறேன் எனில், சாகித்திய அகாதெமி –அதன் தமிழ் மொழிக்குழு ஒருங்கிணைப்பாளராக்க் கவிஞர் பாலா அவர்கள் இருந்தபோது- கந்தர்வனைப்பற்றிய நூல் எழுத என்னைக் கேட்டுக்கொண்டது. அதை நான் கிட்டத்தட்ட எழுதி முடித்துவிட்டேன். (சாகித்திய அகாதெமிக்கு எழுதுவதை முன்கூட்டியே வெளியிடக் கூடாது என்பதால் நமது வலையில் அதை வெளியிடவில்லை) ஆனால், வரும் 25-07-2013ஆம் தேதிக்குள் அந்த நூல் படைப்பை நான் சாகித்திய அகாதெமிக்கு அனுப்ப வேண்டும்.
எனவே,
இதனைப் படிக்கும் நண்பர்கள் – இலக்கிய வாதிகள் – முற்போக்கு எழுத்தாளர் பெருமக்கள்- மற்றும் கந்தர்வன் மேல் மாறாத பற்றும் பாசமும் கொண்ட தோழர்கள், கந்தர்வன் எழுதிய சிறப்பான படைப்பு என்று தாங்கள் கருதுவது பற்றிய குறிப்பு அல்லது அவரது வாழ்வில் நடந்த –மற்றவர்க்குச் சொல்லி மகிழத்தக்க- நிகழ்ச்சி பற்றிய குறிப்பு, புகைப்படம் முதலானவற்றை பின்வரும் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவினால், சாகித்திய அகாதெமி வெளியிடவிருக்கும் எனது நூலில் அவரவர் பெயர் குறிப்பிட்டுப் பாராட்டுவதுடன், நன்றியுடையவனாகவும் இருப்பேன் என்பதையும் தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி வணக்கம். 
-- 15நாள்களுக்குள் 
   எதிர்பார்ப்புடன்  
   நா.முத்துநிலவன், புதுக்கோட்டை 
   மின்னஞ்சல் - muthunilavanpdk@gmail.com
------------------------------------------------------------------------


காதலும் காமமும் - என் ஒப்பீடு.

இன்று26-06-2013, சற்றுமுன், இரவு 10.30 மணியளவில், விஜய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த –முந்திய “கனாக் காணும் காலங்கள்“-“கல்லூரி வாசல் என்னும் தொடர்களின் தொடர்ச்சியாக இப்போது வந்துகொண்டிருக்கும்- “ஆஃபீஸ்“எனும் நெடுந்தொடரைப் பார்த்துக்கொண்டே நானும் என்மனைவியும் சாப்பிட்டோம்.
அதில்வரும் நாயகன் கார்த்திக், இரவு தன்காதலியுடன் தொலைபேசியில் பேசியதும், அதனால் அந்தப் பெண்ணின் வீட்டில் அத்தை சண்டை பிடித்திருப்பாள் என்பதையும், காலையில் சாப்பிடாமலே வந்திருப்பாள் என்பதையும் யூகித்து, கையில் சாண்ட்விச்-உடன் வந்து பேசிக்கொண்டிருந்த காட்சி மனசில் ஒட்டிக்கொண்டது. 
இருவரின் இயல்பான நடிப்பு மட்டுமல்லாமல், உண்மையான காதலர்களின் மனஉணர்வை அளவாக வெளிப்படுத்திய-இயல்பான- வசனமும் அதற்குக்காரணம் என்று தோன்றியது.
சில நல்ல காதல் படக்காட்சிகள் மனத்திரையில் ஓடின...
காதல்தான் எவ்வளவு உன்னதமானது!
காதலிப்பதுதான் எவ்வளவு இனிமையானது!
அதைவிடவும் இனிமையானது உண்டா என்று கேட்டால், உண்டு! அது, காதலிப்பவரால் தானும் காதலிக்கப்படுவது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!
வள்ளுவன், மலரினும் மெல்லிது காமம்என்றது, காமத்தை அல்ல, உண்மையான காதலை! அவன் காலத்தில் காமத்திற்கே காதல் என்றுதான் பொருள் போல, மூன்றாவது பால் காமத்துப் பால்! அடப் பாவிகளே! எங்கள் காலத்தில் காதலையே காமமாக மாற்றிய பாவிகளே! உங்களுக்கு காமத்தாலேயே அழிவுவரும்.  
காதல்தான் தன்னை இழந்து தன் துணைக்குத் துணையாக இருக்கச் செய்யும்.
காமம் தன்னை முன்னிறுத்தி, தனக்கான சுகத்தை மட்டுமே நினைக்கச் செய்யும்

காதலில் நம் நினைவே நமக்கு இருக்காது!
காமத்தில் தன் நினைவு மட்டும்தான் இருக்கும்!

காதலில் பின்விளைவுகளை எண்ணி 
எச்சரிக்கையாக இருக்கத் தோன்றாது - உண்மையாக இருப்பதால்.
காமம் பின்விளைவுகளை எண்ணி 
எச்சரிக்கையோடு இருக்கத் தூண்டும் – பொய்யாக இருப்பதால்.

காதல், தொடர்புடைய இருவரோடு சேர்ந்து
எல்லாவற்றையும் ஜெயிக்க வைக்கும்.
காமம் எப்படியும் தொடர்புடையவரில் 
ஒருவரையாவது தோற்கடிக்காமல் விடாது.

காதல் நின்று வெல்லும்.
காமம் அப்போதில்லாவிட்டாலும் 
அடுத்தடுத்துக் கொல்லும்.

காதல் ஜெயித்தால், 
இருவருக்கும் மிஞ்சுவது மகிழ்ச்சி, 
தோற்றால் அதுவே சரித்திரமாகும்.
காமம், ஜெயித்தாலும் தோற்றாலும் 
இருவருக்கும் மிஞ்சுவது மறதிமட்டுமே!

காதலில் சதையும் இடம்பெறும், 
இதயமே முதலிடம் பெறும்.
காமத்தில் சதையே பிரதானம், 
இதயமா?  அப்படின்னா? எனும்.

என்மனைவியை –இந்த 58வயதில்- இப்போதுதான் நான் அதிகமாகக் காதலிக்கிறேன் என்று தோன்றியது. ஆனால், பாரதிதாசனின் “குடும்பவிளக்கு“ நாயகர்களைப் போல எங்களுக்கு இன்னும் “சருகுபோல் உடம்பு“ ஆகாவிட்டாலும், “அருகருகு இருவர் மிக்க அன்புண்டு செயலே இல்லை”  என்பதும்கூட முழு உண்மையில்லை. ஆகா! இப்போதுதான் நான் என் மனைவியை அதிகமாகக் காதலிக்கிறேன் என்பது உண்மைதான்!
இளைய நண்பர்களே! யாரையாவது காதலியுங்கள், காதலிக்கப் படுங்கள். தோற்றால் அந்த முள்குத்திய “சோக சுகத்தோடுவாழ்நாள் முழுவதும் அதை நினைத்துக்கொண்டே வாழுங்கள்...
தொழுவது சுகமா, வண்ணத்
      தோகையின் கனிந்த மார்பில்
விழுவது சுகமா? உண்ணும்
      விருந்துதான் சுகமா? இல்லை!
பழகிய காதல் எண்ணிப்
      பள்ளியில விழுந்து, நித்தம்
அழுவதே சுகம் என்  பேன்,யான்!
                        அறிந்தவர் அறிவா ராக!
இந்தக் கடைசி  இரண்டுவரியில்தான் கண்ணதாசன் கவியரசாகிறான்... இல்ல?!?!?!
உணர்ந்தவர் உணர்வாராக...!   
பி.கு(1) நேற்று முன்தினம் 24-06, கண்ணதாசன் பிறந்தநாள்!
பி.கு.(2) நாங்களும் எங்கள் மகன் மற்றும் மகள் இருவருக்குமே சாதிமறுப்ப, சடங்கு மறுப்பு முக்கியமாக அவரவர் விரும்பிக் காதலித்தவர்க்கே மணமுடித்து வைத்தோம். இப்ப நல்லாவும் மகிழ்ச்சியாவும் தலா இரண்டு குழந்தைகளோடும் இருக்காங்க..நல்லா இருக்கணும், அவுங்க காதல் உண்மையா இருந்தா நிச்சயம் நல்லாவே இருப்பாங்க. வாழ்க.
----------------------------------------------------------------

சிங்கம் பார்ட்-2 அல்லது நெய்வேலி நிலக்கரி ஆலை (N.L.C.) பங்கு விற்பனை! அல்லது ஆட்டு வாலைவெட்டி அதுக்கே சூப் வச்சுக் குடுத்த கதை!


கிராமத்துக் கிழவி சொல்லும், ஆட்டுக்கு உடம்பு சரியில்லன்னு ஒருத்தன் வைத்தியம் பாக்கப் போனானாம், அவஞ் சொன்னானாம், “ஆட்டுக்கு சூப் வச்சிக் குடுத்தா சரியாயிடும்“னு. உடனே ஆட்டுக்கார முட்டாப்பய  சூப்  வக்கிறேன்னு அந்த ஆட்டு வாலையே வெட்டி சூப் வைக்கப் போனானாம்
     இந்த மாதிரித்தான் இருக்கு... நம்ம மத்திய அரசு நெய்வேலி நிலக்கரி ஆலைப் பங்குகளைப் “பொது மக்களுக்கு“ விற்க முடிவெடுத்திருப்பதும். அதற்கு இவர்கள் சொல்லும் காரணம், “பொதுத் துறை கம்பெனிகள் சிலவற்றின் பொருளாதாரப் பிரச்சினையை சமாளிக்க“ அதுசரி... அப்பறம் வாலை வெட்டுறதால. ஆடே செத்துப் போற அளவுக்கு நிலைமை போயிரும்கிறது அந்தப் படிக்காத முட்டாப் பயலுக்குத்தான் தெரியல, இந்த “பொருளாதார மேதை“களுக்குமா தெரியல...  
     புதிய தலைமுறை தொலைக்காட்சியில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன் சொன்னாரு 5சதவீதப் பங்குகள் தானேன்றது முக்கியமில்ல, அடுக்கு வீட்டுல ஒரு செங்கல்தானே புடுங்கப்போறம் கிற மாதிரி இருக்குன்னது நல்ல உதாரணம். அதுலயே, தொலைபேசி வழியா மதிமுக வை.கோ.வும் ஆவேசமாச் சொன்னாரு, தந்தி தொலைக்காட்சி விவாதத்துல மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் அ.சௌந்தர்ராஜன் “பொதுமக்களுக்கு விற்பனைன்னு சொல்லிட்டு யாருக்கு விற்பீங்க.. சாதாரண ஜனங்களா வாங்கப்போறாங்க, பன்னாட்டு முதலாளிகளும் உள்நாட்டுப் பெருமுதலாளிகளும்தான் பொதுமக்களா?“ ன்னு கேட்டது சுறுக்னு தச்சுது. நம்ம முதலமைச்சர் அம்மாவும் காட்டமா ஒரு கடிதத்த தட்டிவிட்டிருக்காங்க...
ஆனா, இதெல்லாம் அந்த மத்திய அரசுக்குக் காதுல விழணுமே! விழவே விழாது, அப்பறம் ஓட்டுமட்டும் விழுமாங்கிற அடுத்த வருசம் இந்த நேரம் தெரிஞ்சுக்கலாம்...  நம்ம பேராசிரியர் அருணன் “காலந்தோறும் பிராமணியம்“னு ஒரு –எட்டுத் தொகுதியா- ஒரு பெரிய புத்தகம் போட்டிருக்காரு... அதுல ஒரு அத்தியாயத் தலைப்பு – “ராஜிவ்- ராவ் காலம்“ இந்தியாவின் “ராவுகாலம்“ ன்னு இருந்தது, சரிதான்ல?
     முந்தி வாஜ்பேயி அரசாங்கமும் இந்த முயற்சியச் செஞ்சது நினைவிருக்கிறது... அப்ப ஆளாளுக்குக் கத்தி முடிவ மாத்த வச்சாங்க.. இப்ப சத்தம் போடாம வேலை நடக்குது...
            யாரு எத வித்தா நமக்கென்ன?
சிங்கம் பார்ட்-2 வந்திருச்சில்ல.. அந்த செய்திகளைப் பார்ப்போம்..
உறரி-சூர்யா வின் வெற்றிக் கூட்டணி சும்மா கர்ஜிக்கிறாருல்ல சூர்யா...
சிங்கம்-2வின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்து விட்டன. ஆனாலும் இன்னும் படம் பற்றிய தகவல்களை ரகசியமாகவே வைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி. இருந்தாலும் கிடைத்த சில தகவல்கள் இதோ...

* சென்னை, ஐதராபாத், தூத்துக்குடி, நெல்லை, காரைக்குடி, பகுதிகளில் இரண்டு கட்டமாக வசன பகுதிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டது.


* அனுஷ்காவும், ஹன்சிகாவும் போட்டி போட்டு கிளாமராக நடித்திருக்கிறார்கள்.


* அஞ்சலி நடித்த ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் ஒரு கோடி செலவு செய்திருக்கிறார்கள். அஞ்சலிக்கு சம்பளம் 20 லட்சம்.


* தெலுங்கில் "யடுகு-2" என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியிடப்படுகிறது.


* படத்தின் இந்தி உரிமையை தயாரிப்பாளரே வைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். இந்தியில் அவரே தயாரிக்க இருக்கிறாராம்.


* நடுக்கடலில் கடற் கொள்ளையரும் சூர்யாவும் போடும் சண்டைக் காட்சி தூத்துக்குடி கடலில் 10 நாட்கள் படமாக்கப்பட்டது. இதில் கடற் கொள்ளையர்கள் முஸ்லிம்கள் என்பதற்கு அடையாளமாக அவர்கள் முஸ்லிம் பெயர்களை சொல்லிக் கொள்வது போல காட்சி இருந்ததாம். இது வெளியில் கசிந்து எதிர்ப்பு கிளம்பியதால், டப்பிங்கில் அதை மாற்றி வேறு புரியாத பெயர்களை பயன்படுத்த இருக்கிறார்கள்.


* 3வது கட்ட படப்பிடிப்பு முழுவதும் பாடல் காட்சிகள்தான் படமாக்கப்படுகிறது. கென்யா, தான்சானியா நாடுகளுக்கு சென்று இயக்குனர் ஹரி லொக்கேஷன் பார்த்து திரும்பி உள்ளார். பாடல் காட்சிக்காக சூர்யா தான் வைத்திருந்த ஸ்பெஷல் மீசையை எடுத்து விட்டார்.

“ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு” 
(இது சிங்கம் படத்துல சூர்யா சொல்ற (புரமோ)வசனமாவும் வச்சிக்கலாம், நெய்வேலி பங்குவிற்பனை பற்றிய  -தேர்தலுக்காகக் காத்திருக்கும்- மக்களின்முடிவாகவும் வச்சிக்கலாம்ல?
------------------------------------