டி.எம்.எஸ். - இசையால் வசமாகா இதயமெது? (பகுதி-1) அஞ்சலிக் கட்டுரை – நா.முத்துநிலவன்

டி.எம்.எஸ். - இசையால் வசமாகா இதயமெது? (1)
அஞ்சலிக் கட்டுரை – நா.முத்துநிலவன்


(24-03-1922 25-05-2013)

டிஎம்எஸ். -எனும் தொகுளுவ மீனாட்சி - சௌந்தர ராஜனுக்கு அஞ்சலி!  
      தமிழைத் தாய்மொழியாக்க் கொண்ட பாடகர்களே தமிழைக் கொலைசெய்து பாடிப் புகழ்பெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய தமிழ்த்திரையிசைச் சூழ்நிலையில்... சௌராடஷ்ர மொழியைத் தாய் மொழியாக்க் கொண்ட டிஎம்எஸ் இரண்டு தலைமுறைத் தமிழர்களுக்கு உணர்ச்சி பூர்வமாகவும், மிகச்சரியான உச்சரிப்புடனும் தமிழைக் கற்றுத்தந்தார் என்பது மிகையன்று.

அவரது  மறைவு தமிழ்த்திரையிசைக்கு மட்டுமல்ல, தமிழர் அனைவருக்குமே ஒரு பேரிழப்புத்தான்.

பிரபல தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார்  எனும் செய்தி மார்ச் 24ஆம் தேதி தொலைக்காட்சிகளில வந்தபோது நான் அளவில்லா வருத்தமடைந்தேன். அவர் கடந்தசில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவுடன்தான் இருந்தார்.

தென்னிந்தியத் திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாகப் பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
தனது 28வயதில் -1950ஆம் ஆண்டு- கிருஷ்ண விஜயம் எனும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி' எனும் பாடலுடன் தமிழ்த்திரையிசைக்கு அறிமுகமான டிஎம்எஸ், தமிழ் தவிர தெலுங்கு மலையாளம் ஆகிய வேறுசில மொழிகளிலுமாக மொத்தம் 10, 000 பாடல்களுக்கும் அதிகமாகப் பாடியிருக்கிறார். தவிரவும், சுமார் 2500  தனி-பக்திப் பாடல்களையும் பாடியிருக்கிறார். திரைப்படம் தவிர்த்த பாடல்கள் பலவற்றுக்கு இவரே தான் இசையமைத்தாராம்.
இவர் இசையமைத்த “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்”, “உள்ளம் உருகுதையாபாடல்கள், பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைத்து, பிரபல நடிகர்கள் நடித்தால் மட்டுமே பாடல்கள் பிரபலமாகும் என்னும் பொதுக்கருத்தைப் பொய்யாக்கி திரைப்படப் பாடல்களுக்கு நிகராகப் புகழ்பெற்றவை! 
என்ன ஒன்று... பக்திப்பாடல்களைப் போலவே, சமூகப் பாடல்களையும் இவர் தனியாகவே தந்திருந்தால், இன்னும் நெடுங்காலத்திற்குப் பேசப்படுவார் என்பதையும் மறுப்பதற்கில்லை. எம்.பி.சீனிவாசன் இசையமைத்த பாடல்கள் –குறிப்பாக, குழுப்பாடல்முறை- இத்தனை ஆண்டுக் காலம் கழிந்தும் பேசப்படுவதற்கு அவரது “மக்கள் இசையும் ஒரு காரணம்தானே?
எஸ்.எம். சுப்பையா நாயுடு தொடங்கி, ஏ.ஆர்.ரஹ்மான் வரை 50க்கும் மேற்பட்ட திரைப்பட இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்த ஒரே தமிழ்ப் பின்னணிப் பாடகரும் இவர் தான். 
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என தமிழ்த்திரையுலகின் அனைத்து பழம்பெரும் நடிகர்களுக்காகவும் பாடியுள்ளார். 2010ம் ஆண்டு தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் குரல் கொடுத்திருந்தார். 
இறுதியாக 1991ம் ஆண்டு “ஞானபைரவி“ எனும் திரைப்படத்தில் பாடிய பின்னர் திரைப்பட பாடல்களில் டி.எம்.எஸ் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. 
இதோ... 91 வயதில் இறந்தும் போனார்... ஆனால், இவரின் இசையால் மயங்காதார் இதயமெது?
--------------------------------
முதல்வரிசையில் அவர் உட்கார்ந்திருக்கிறார். தமிழ்ச்சமூகத்தில் சுமார் 50வருட காலமாக இரண்டறக் கலந்துவிட்ட அவரது பாடல்களை மேடையில் நான், பேச்சுக்கு இடையிடையே பாடிக் கொண்டிருக்கிறேன்.
பாடலை ரசிக்கும் வகையில் அவ்வப்போது அவர் கைகள் எழுந்தும் தாழ்ந்தும் தாளம் போட்டபடி இருக்கின்றன. அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வயிற்றைக் கலக்குகிறது. நாம் சரியாகத்தான் பாடுகிறோமா என்று சந்தேகமில்லை. நான் நன்றாகப் பாடுவதாக  நமக்குத்தான் தாளம் மட்டும் நிற்காதே! அந்த ராட்சஷன்  கண்டுபிடித்து விடுவாரே... என்றுதான் கவலை! ஆனால் அவரோ ஒரு குழந்தையைப் போல ரசித்தது மட்டுமல்ல நிகழ்ச்சி முடிந்ததும் மேடையேறி வந்து எல்லாரையும் மனசாரப் பாராட்டியதோடு, என் தோள்களில் தட்டி, “நல்ல குரல், நல்லாவே பாடுறீங்கஎன்றதும் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! மத்திய மாநில விருதுகளை ஒருசேரப் பெற்றது போல...! டிஎம்எஸ் பாடல்களில் விஞ்சி நிற்பது காதல் பாடல்களா? தத்துவப் பாடல்களா?என்பது தலைப்பு. நடுவர் நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல் ஐ.லியோனி, நானும் மதுக்கூர் ராமலிங்கமும் இரண்டு அணிகளின் தலைவர்கள். இதே நிகழ்ச்சி மும்பை, சென்னை, மதுரை ஆகிய மூன்று இடங்களில் நடந்தது.

வாலி எழுதி, எம்.எஸ்.விசுவநாதன் இசையமைத்து, எம்.ஜி.ஆருக்காக டிஎம்எஸ் பாடிப் புகழ்பெற்ற –படகோட்டி-  படத்தில் வரும்
     “மின்னலாய் வகிடெடுத்து.... மேகமாய் தலைமுடித்து...
பின்னலாய் ஜடைபோட்டு... என் மனசை எடைபோட்டு...
மீன்பிடிக்க வந்தவளை நான் புடிக்கப் போனேனே...
மைஎழுதும் கண்ணாளே... பொய்யெழுதிப் போனாளே... எனும், பாடலை கிட்டத்தட்ட டிஎம்எஸ்சின் குரலிலேயே ரசித்துப் பாடினேன்.... பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட கைத்தட்டல்... “இந்தக் கைத்தட்டல் எல்லாம் இதோ எதிரில் அமர்ந்திருக்கிறாரே, தமிழ்த்திரை உலகின் மறக்கமுடியாத மணிக்குரலுக்குச் சொந்தக்காரர்... அய்யா டிஎம்எஸ் அவர்களைத்தான் சேரும்என்று கைகூப்பி நான்சொல்ல, அதற்கும் எழுந்த கைத்தட்டலில் மக்களுடன் சேர்ந்து அவரும் கரவொலி எழுப்பியதை ஜென்மத்திற்கும் மறக்கமுடியுமா?
அதன் பிறகு இதே தலைப்பில் மும்பையில் இரண்டு இடங்களிலும், மதுரையில் ஒரு முறையும் அய்யா டிஎம்எஸ் அவர்களின் முன்னிலையிலேயே நடந்தது! மதுரை சௌராஷ்ரா மேல்நிலைப்பள்ளியில நடந்தபோது, உடல்நிலை காரணமாக அவர் வரமுடிய வில்லை என்றாலும், மைக்கில் வைக்கச் சொல்லி செல்போனிலேயே அவர் வாழ்த்துத் தெரிவித்தார்! மற்றொரு முறை மதுரை நிகழ்ச்சியின் போது மேடைக்கு வந்து, “த்த்துவப் பாடல்களே என்று நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல் திரு ஐ.லியோனி தீர்ப்பளித்தது சரியல்ல, என்பாடல்களில் விஞ்சி நிற்பது காதல் பாடல்கள்தான் என்று மைக் பிடித்துப் பாடி பேச ஆரம்பித்து விட்டார்! – நடுவர் லியோனிக்கே சிரிப்புத் தாங்கவில்லை!  

திரு டி.எம்.எஸ்., பி.சுசீலாம்மா  இருவரின் பாடல்களில் விஞ்சி நிற்பது காதலா தத்துவமா 
எனும் தலைப்பில் நகைச்சுவைத்தென்றல் திண்டுக்கல் திரு ஐ.லியோனி அவர்களின் தலைமையில் நான் கலந்துகொண்டு சென்னையில் பேசிய ஒரு பட்டிமன்றத்தில் பார்வையாளராக வந்திருந்த  திரு பிபிஎஸ் அவர்கள் மேடைக்கு  வந்து எங்களையெல்லாம் வாழ்த்திவிட்டுப் போனது  ஆறேழு ஆண்டு ஆனாலும் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.  அப்போது, நானும் திரு லியோனி அவர்களுடன் இணைந்து,  புகழ்பெற்ற டிஎம்எஸ் பிபிஎஸ் பாடிய பொன்ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லைபாடலை பாடி பார்வையாளர்களின் கைத்தடடலை அள்ளியிருந்தோம்... அடாடா... அது மறக்கக் கூடிய நினைவா என்ன?  பார்வையாளர்களாக வந்திருந்தோர் டிஎம்எஸ், சுசிலாம்மா, பிபிஎஸ் அல்லவா”  - இது, திரு பிபி சீனிவாஸ் அவர்கள் அண்மையில் மறைந்தபோது நான் எழுதிய எனது வலைப்பதிவு 
http://valarumkavithai.blogspot.in/2013_04_01archive.html

இப்போதுஅவர்நம்மிடையேஇல்லை! 

“உள்ளம் உருகுதையா“  - மொழிகடந்த இனிய குரலிசை டிஎம்எஸ் உடையது...
ராஜீவ் காந்தியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தின் போது “உள்ளம் உருகுதையா“ பாடலை டி.எம்.எஸ் பாட அதைக்கேட்டு உணர்ச்சிவசப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,  டி.எம்.எஸ் அருகில் வந்து அவ்வரிகளின் அர்த்தத்தை கேட்டுள்ளார். அர்த்தத்தை சொன்னதும், எனது இதயம் உண்மையில் உருகிவிட்டது என டி.எம்.எஸுக்கு வாழ்த்து தெரிவித்து சென்றதாக முக்தா சீனிவாசன்  குறிப்பிட்டுள்ளார்.  அவரது குரலின் நேர்த்தி அப்படி!
2003ம் ஆண்டு டி.எம்.எஸ்சிற்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.  அரசின் பட்டியலில் இல்லாமலே அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின்  நேரடி முன்மொழிவில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டதாக தினமணி கலாரசிகன் எழுதியிருந்ததைப் படிக்கும்போது, ஆச்சரியம் எழவில்லை... திறமைசாலிகளின் நிலைமை இதுதானே? நன்றி கலாம் அவர்களே!
முன்னதாக தமிழ்நாட்டின் கலைமாமணி விருதும் பெற்றிருந்தார்.
1960, 70 காலப்பகுதியில் தமிழ்நாட்டின் மாநில விருதையும் பல முறை பெற்றுள்ளார்.  
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என தமிழ்த்திரையுலகின் அனைத்து பழம்பெரும் நடிகர்களுக்காகவும் திரைஇசைப்பாடல்களை பாடியுள்ளார்.
இறுதியாக 2010ம் ஆண்டு தமிழ் செம்மொழி மாநாடு பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் குரல் கொடுத்திருந்தார். 

டி.எம்.எஸ் இன் மறைவு உலகெங்கும் பரவியிருக்கும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மாத்திரமல்லாது தமிழ்த் திரை இசையுலகுக்கே பெரும் இழப்பாக ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உதித் நாராயணன்கள் கவனிக்கட்டும்...  
இறந்துவிட்டவரைப் புகழ்வதும், இருப்பவரைக் கண்டுகொள்ளாத்தும் எனும் எதார்த்த உலக்க் கருத்தாக இல்லாமல், அவர் இருக்கும்போதும், அவரையும மேடையில் வைத்துக்கொண்டும் சொன்னதைத்தான் நான் சொல்கிறேன்... இன்று பாடும் உதித் நாராயணன்கள் கவனிக்க வேண்டிய இடம் அவரது உச்சரிப்புத் தெளிவு... “உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக் கண்ணல்லவா?என்னும் வரிகளை அவர் பாடும்போது, உள்டென்று சொல்வதுந்தன் கள்ணல்லவா?என்பது ல,ன, ற மூன்றும் நுனிநா ஒற்றலின் முயற்சிப் பிறப்பில் வரும். ள,ண,ட என்பவை நடுநாவின் வருடல் பிறப்பில் வரும் என்பது புலவர்கள் மட்டுமே அறிந்தது. ல, ள மற்றும் ன,ண வேறுபாடுகளை -அவற்றின் முயற்சிப்பிறப்பை-உச்சரிக்கும் முறையினாலேயே வேறுபடுத்தி, அதை ஒரு பாடகராகப் பொதுமக்களுக்கும்  உணர்த்தியதுதான் டிஎம்எஸ் எனும் தமிழ்ப் பாடகரின் நிகரற்ற பெருமை! என்றும் நினைவு கூரும் பெருமை!
“பெரியம்மா பொண்ணை ரசிக்கலாம் தப்பில்லேஎன்னும் வரிகளுக்குள் . “பிரியமான பொண்ணை ரசிக்கலாம்என்பதுதான் உண்மையான வரி என்பதை ஆராய்ச்சி பண்ணியல்லவா அறியமுடிகிறது?
“காதல் பெஸாசுஎனும் பாடலுக்குள் “காதல் பிசாசுதான் இருக்கிறது என்று யார் சொல்வது?
ஏசுதாஸ் பாடலில் கூட “பிள்ளை நிலா” “பில்லை நிலாவாகத்தான் உச்சரிக்கப்பட்டது. ம்கூம்... இனியிந்த வேறுபாடுகளை சொல்லித்தரத் தமிழாசிரியர்களுக்கும் தனிவகுப்புத்தான் தேவைப்படும்!
---------------------------------------------------
முக்தா சீனிவாசன்: டி.எம்.சௌந்தரராஜனின் குரல் மீது எப்போதும் எனக்கு ஈர்ப்பு உண்டு. அதனால்தான் நான் இயக்கிய "பலப்பரிடசை' என்ற படத்துக்கு அவரை இசையமைக்கும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் எனக்காக இசையமைத்தார். அவர் இசையமைத்த ஓரே படம் இதுதான். பிறகு வேறு படங்கள் எதற்கும் அவர் இசையமைக்கவில்லை. இதற்கான் காரணத்தை அவரிடம் கேட்டபோது, "தொடர்ந்து பாடுவதற்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் இசையமைப்பில் கவனம் செலுத்த முடியவில்லை' என்றார். ஆயினும் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்... என்கிறார்.
------------------------------------------------------
நூற்றுக்கணக்கான “எம்.ஜி.ஆர் பாடல்கள்“ பிரபலமானதும், அவற்றில் எம்ஜிஆரை மட்டுமே பார்த்த ஏழை மக்களிடம், எம்ஜிஆரை மறந்துவிடாமல் பார்த்துக் கொண்டதும், லட்சக்கணக்கான கிராமங்களில் எம்ஜிஆருக்கான வாக்கு வங்கியை ஒருங்கிணைத்ததும் டிஎம்எஸ் குரலல்லவா?  இப்படியான பாடல்கள் –
“நானே போடப்போறேன் சட்டம் பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்என்ற நாடோடி மன்னனின் குரலில் மக்கள் எம்ஜிஆரைத்தான் நினைத்துக் கொண்டார்கள். அதனால்தான், பின்னாளில் திமுகவில் எம்ஜிஆர் இருந்தபோது...
“நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்...”,
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை”,
“சூரியன் உதிச்சதுங்க இங்கே 
காரிருள் மறைஞ்சதுங்க...                                                     
சரித்திரம் மாறுதுங்க இனிமே 
சரியாப் போகுமுங்க”  
“மூன்றழுத்தில் என் மூச்சிருக்கும்”  - முதலான பற்பல  பாடல்கள் எம்ஜிஆர் “இமேஜை“ மக்கள் மனத்தில் அழுந்தப் பதிந்து வைத்தன. அதையெல்லாம் தூசுதட்டித்தான் எம்ஜிஆரின் புதிய கட்சி ஐந்தே ஆண்டுகளில் தமிழக ஆட்சியைப் பிடித்தது. இதில் டிஎம்எஸ் தான் எம்ஜிஆரின் கொள்கை பரப்பும் குரலாக இன்றும் இருக்கிறார்... இனியும் இருப்பார்! ஆனால், இவைவெல்லாம் டிஎம்எஸ் அவர்களின் பெருமையல்ல... அது தனீ...    
                                    ------------ (பகுதி-2இல் தொடரும்)

4 கருத்துகள்:

  1. இவ்வுலகம் இருக்கும் வரை அவரது குரல் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும்... சிறப்பான தொடரை தொடருகிறேன்... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. இசையின் பொருள் விளங்க பாடி ஏமை எல்லாம் இசையின் வசமாகச் செய்தவர் பாடகர் திலகம் டி.எம்.எஸ். அவர்கள். மிகவும் அருமையான பதிவு. உள்ளம் உருகுதையா, அழகென்ற சொல்லுக்கு முருகா, மண் ஆனாலும் போன்ற பல பக்தி பாடல்களை இசை அமைத்துள்ளார். ஒரு தவறான செய்தி தரப்பட்டுள்ளது; "சிந்தனை செய் மனமே" என்ற பாடல் அம்பிகாபதி திரைப்படத்தில் இசை மேதை ஜி. ராமநாதன் அவர்களால் இசையமைக்கப்பட்ட பாடல் ஆகும்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி நண்பர் சிவகுமார் அவர்களே, உங்கள் கருத்தைப் பார்த்தபின் இடுகையில் திருத்திவிட்டேன். மீண்டும் நன்றி. அடுத்த பகுதியையும் விரைவில் எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  4. இது
    அஞ்சலிக் கட்டுரையல்ல
    ஆய்வுக்கட்டுரை!
    இது
    என் போன்றவர்களுக்கு
    பாடப் பொத்தகத்தில்
    ஓரலகு!

    பதிலளிநீக்கு