ஏன் இந்தக் கொலைவெறி? -- பாடல்


ஏன் இந்தக் கொலைவெறி?
(இந்த “உலகப்புகழ்“ பெற்ற பாடலை இதே இசையில் கிண்டல் செய்து> பள்ளிவிழாவில் பாடவேண்டி மாணவர்கள் கேட்க எழுதித்தந்த பாடல்)

ஏனிந்தக் கொலவெறி கொலவெறி கொலவெறிய்யா? – திருக்
குறள்நெறி தமிழில் இருப்பதும் தெரியலயா?

இனிக்கும் தமிழ்வகை மூனு! மூனு! - இப்பக்
கணினி சேர்ந்தா நாலு!
பெருந் தொகைய நீ நெனச்சு, நெனச்சு – சங்கக்
குறுந்தொகைய நீ மறந்தே!           
-- ஏனிந்தக் கொலவெறி கொலவெறி

பத்துப் பாட்டுக் கேட்ட மண்ணெ - நீ
குத்துப் பாட்டுல கொன்னே!
ஆங்கி லத்தை வாந்தி யெடுக்க
அன்னைத் தமிழை ஏன் தின்னே?
-- ஏனிந்தக் கொலவெறி கொலவெறி  

வெக்கம் மானம் யாருக்கும் கெடல - நீ
வெவரம் தெரிஞ்ச விடல!
பெத்த தாயின் சதைய உடல -மகன்
பிச்சுத் திங்கிற கதைய விடல?       
-- ஏனிந்தக் கொலவெறி கொலவெறி
----------------------------------(23-01-2012)---------------- 

சாகித்ய அகாதெமி எழுதிய முதல் கவிதை!


சாகித்ய அகாதெமி எழுதிய முதல் கவிதை!
      இதற்கு முன்னரும் இருமுறை தமிழ்க் கவிஞர்கள் சாகித்ய அகாதெமி விருது பெற்றிருந்தாலும் அவர்களுக்கே அது நிறைவளித்திருக்காது என்பது நிச்சயம்! புரட்சிக்கவிஞன் என்று அறியப்பட்ட பாரதிதாசனை நாடகத்திற்காகப் பாராட்டியதை நாம் பாராட்ட முடியுமா என்ன அதைவிடவும் வெங்கொடுமை! தமிழறிஞராகவே அறியப்பட்ட அ.சீனிவாசராகவனை (அசீரா) அவரது  கவிதைகளுக்காகப் பாராட்டியதுதான்!
      இதே போலத்தான் ஜெயகாந்தன் தி.ஜானகிராமன் க.நா.சுப்ரமணியம் கி.ராஜநாரயணன் பொன்னீலன் போலும் சிறந்த படைப்பாளிகள் விருதளிக்கப்;பட்ட போது அவர்களின் மிகச் சிறந்த (Master Piece) படைப்புகளுக்காக அகாதெமி பரிசளித்துவிடவில்லை என்பதையும் நாம் மறக்க வில்லை.  
      அதேநேரத்தில் ரகுநாதன் ராஜம் கிருஷ்ணன் சு.சமுத்திரம் பிரபஞ்சன் போன்றோருக்கு தகுதியானவர்களின் தகுதியான படைப்புக்கே பரிசு என்று அறிவித்து இற்றுப்போன நமது நம்பிக்கையை ஒட்டவைத்துக்கொண்டே வந்த வேலையையும் மறந்துவிட முடியாது.
      இப்படியான சூழலில் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்திருப்பது சரியான பரிசாகவே படுகிறது!
      உண்மையில் இது சாகித்ய அகாதெமி எழுதியிருக்கும் முதல் கவிதை!
      1976-இல் -அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரியில்- நடந்த அனைத்துக் கல்லுரிக் கவிதைப் போட்டியில் அவரிடம் முதல் பரிசுக் கோப்பைணைப் பெற்ற என்னைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்கள்-புதிய மரபுக் கவிஞர்கள்- நாங்களே பரிசு பெற்றது போலப் பெருமைப்படுகிறோம்!
      இந்த வகையில் 1955-ல் தமிழ் இன்பம் கட்டுரைத் தொகுப்புக்காக ரா.பி சேதுப்பிள்ளை தொடங்கி முதல் 10 ஆண்டுகள் தமிழறிஞர்களே பெற்ற விருதை 1999இல் அப்துல் ரகுமான் - புதுக்கவிதைப் படைப்புக்காகப் பெற்றிருப்பது மிக அருமையான முன்னேற்றம். 
         இது தொடர வேண்டும் என்பதே தமிழகக் கலை இலக்கியவாதிகளின் விருப்பம்! 
      பாராட்டு ரகுமானுக்கு மட்டுமல்ல  விருதுதந்த சாகித்திய அகாதெமிக்கும் தான்!
------- தினமணியில் நான் எழுதிய கடிதம்.  நாள்: 07.01.2000 தினமணி நாளிதழ். -------

சங்க இலக்கியமும் தமிழ்ச் சமூக வரலாறும்

– நா.முத்துநிலவன்-
                ‘தமிழ் இலக்கிய வரலாறுஎனும் தலைப்பிலேயே ஏராளமான நூல்கள் வந்துள்ளன. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார், சி.பாலசுப்பிரமணியனார், தமிழண்ணலார் என பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் உள்ளிட்ட தமிழறிஞர் பலரும் எழுதியுள்ளனர்.
                தமிழ் இலக்கிய வரலாற்றுக்கான, நுட்பமான பல இலக்கியத் தகவல்களை  சி.வை.தாமோதரனார், உ.வே.சாமிநாதர், எஸ்.வையாபுரியார், கே.ஏ.நீலகண்டனார், டி.வி.சதாசிவனார், கே.கே.யார், தேவநேயப் பாவணர், மயிலை சீனி.வேங்கடசாமியார் முதலானோர் பலரும் திரட்டித் தந்துள்ளனர்.
                இத்தமிழறிஞர்களின் ஆழ்ந்த புலமையிலோ, அவர்தம் கடுமையான உழைப்பிலோ குறைகூற முடியாத அளவிற்கு ஏராளமான தகவல்களை அவர்கள் வெளிக்கொண்டு வந்துள்ளனர். தமிழ் இலக்கிய வரலாறுகள் புதிய கோணங்களில் எழுதப்படும் போதெல்லாம் இவர்களின் ஆய்வுகளே மெத்தவும் பயன்படுகின்றன.
                ஆயினும் -     
                ‘மனித குல வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறேஎனும் வாசகத்துடன் தொடங்கி உலகையே மாற்றிவிடத்தக்க சமத்துவ சமுதாயம் படைப்பதற்கான  தந்த மார்க்ஸ் - எங்கெல்ஸின் வழியில், முழுமையான தமிழ் இலக்கிய வரலாறு இன்னும் எழுதப்படாதது பெருங்குறையே.
                அரசியல் - பொருளாதாரத்தில் மட்டுமல்ல, வரலாறு - இலக்கியத்திலும் மார்க்சியப் பார்வை தரும் வெளிச்சம் பல புதிய சிந்தனைகளை உலகம் எங்கும் விதைத்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை.
                பேராசிரியர்கள் நா.வானமாமலை, க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோர் இந்த நோக்கில் பல அரிய கட்டுரைகளை எழுதியுள்ளனர். ந. சுப்பிரமணியன், கா.சுப்பிரமணியன், கே.முத்தையா, சு. வித்தியானந்தம், ஆ. சிவசுப்பிரமணியன், கோ.கேசவன், ராஜ்கௌதமன், அருணன், வீ.அரசு, புலவர் ஆதி, வெ.பெருமாள்சாமி முதலானோர் சிறுபுத்தகம்-கட்டுரைகளை எழுதியுள்ளனர். வெளிநாட்டு அறிஞர்கள் கமில் சுவெலபில், ஜார்ஜ் ஹார்ட் போன்றோரும் எழுதியுள்ளனர். ஆயினும் இந்தப் புள்ளிகளை இணைத்து நேர்க்கோடாக்கும் பணியை யார் தொடங்குவது?
                எந்தப் புள்ளியை, எந்தப் புள்ளிக்கு அடுத்து வைப்பது எனும் கோலக் குழப்பம் எப்போது தீரும்?
                மார்க்சியத் தோய்வும், தமிழ் மரபு ஆய்வும் இணையும் போதே இது சாத்தியமாகும்.
                தமிழ்ச்சமூக வரலாற்றை எழுதும் பணியின் முதற்படியே தமிழ்இலக்கிய வரலாற்றை சமூகவியல் பார்வையுடன் எழுதுவதேயாகும். இதற்கு, தமிழ்கூறும் சமூக வரலாற்றுக் குறிப்புகளில் தெளிவு பெற வேண்டும்.
                உலகம் இதுவரை ஐந்து வகையான சமுதாய அமைப்புகளைக் கண்டுள்ளதாக மார்க்சியம் கூறுகிறது.
1.            ஆதிப் பொதுவுடமைச் சமுதாயம்
2.            அடிமைச் சமுதாயம்
3.            நிலவுடமைச் சமுதாயம்
4.            முதலாளித்துவ சமுதாயம்
5.            சமத்துவ சமுதாயம்
முதல் மூன்று வகைச் சமுதாய அமைப்புகளுக்கும் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவுகள் உள்ளன. மனித குல வரலாறுகூறும் வகுப்பாசிரியர்கள் இந்தக் குறிப்புகளைத் தமிழ்நாட்டு வகுப்புகளில் பயன்படுத்தலாம். இதைக் கேட்கும் தமிழ்மக்கள் இதுபற்றிய மேல்தகவல்களைச் சேர்க்கச்சேர்க்க இன்னும் தெளிவு கிடைக்கும். மற்ற மொழியினர் போலவே பொத்தாம் பொதுவாக மனிதகுல வரலாற்றைக் கூறாமல். இந்த இலக்கியக் குறிப்புகளைத் தமிழர்கள் மட்டுமே சேர்த்துச் சொல்லமுடியும் என்பதால் நம்கடமை பெரிதாகி நிற்பது காண்க.

ஆதிப் பொதுவுடமைச் சமுதாயக் கூறுகள்
                ‘இச்சமுதாய காலத்தில் உலகில் நாடுகள், நகரங்கள், ஊர்கள், வீதிகள், வீடுகள் என்று ஏதும் தோன்றி இருக்கவில்லை. தனிச்சொத்து, குடும்பம். அரசு என்று ஏதும் இருக்கவில்லை. மக்கள் மிருகங்களைப் போல் காடுகளில் வாழ்ந்தனர். அவர்களின் கருவிகள், ஆயுதங்கள் கல்லும், வில்லும்தான். இந்த நிலையில் யாரும் தனித்துவாழ முடியாது. தனித்து உணவு தேடவும் முடியாது. கூட்டாகவே இம்முயற்சிகளில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. ஒரு கூட்டத்தைச் சேர்ந்த அனைவரும் கூட்டாக வேட்டையில் ஈடுபட்டனர். கிடைத்த மாமிசத்தையும் கூட்டாகவே பகிர்ந்துண்டனர். இதுதான் இச்சமுதாயத்தின் உற்பத்தி வினியோகமுறையாக இருந்தது. இதனாலே இதற்கு ஆதிப் பொதுவுடமைச் சமுதாயம் எனும் பெயர் வந்தது’ – என விளக்குகிறார் பி.ஆர்.பரமேஸ்வரன். (மார்;க்சியத் தத்துவம் - பாடக்குறிப்பு எண். 33)               
இச்சமுதாயத்தில் திருமண முறையோ, குடும்பமுறையோ இல்லை கூட்டம் முழுவதும் கூட்டத் தலைவி தாய் - வழியாகவே அறியப்பட்டது. அதனால்தான் இது தாய்வழிச் சமுதாயம்என்றும் கூறப்படுகிறது. கூட்டு உழைப்பின்போது எழுப்பிய ஓசையே - பிறகு மொழியாகப் பரிணமித்தது.
                இயற்கையை அறியாத மனிதர் நிலம், நீர், மரம், நெருப்பு, காற்று, மழை இவற்றுக்கு அஞ்சி வணங்கவும், வழிபடவும் செய்தனர். கிடைத்த போது இறைச்சி காய் கனிகளைப் பகிர்ந்து கொண்டது போலவே, கிடைக்காத போது பட்டினியையும் பகிர்ந்து கொண்டனர்.
                இச்சமுதாயத்தின் இறுதிக் கூட்டமே இனக்குழு மக்கள் சமுதாயம் ஆகும்.
                கால்நடைகளைக் கொன்று தின்ற நிலையிலிருந்து, அவற்றை வளர்க்கும் நிலைக்கு வந்தனர். உணவு சேகரிக்கும் நிலையிலிருந்து, உணவு பயிரிடும் நிலைக்கு வளர்ச்சியடைந்தனர்.
                கல், வில், அம்புக்குப் பதிலாத கத்தியும், கூர்வாளும், கோடரியும் வந்தன.
                ‘கோடாரி வரலாற்றில் ஏற்படுத்திய மாறுதல் மகத்தானதுஎன்கிறார் ஏங்கல்ஸ்.
                புதிய உற்பத்திக்கருவிகள் வரவே, விவசாயம் வளரத் தொடங்கியது. குழந்தை வளர்ப்பு வீட்டுப் பராமரிப்பு பெண்களின் பொறுப்பானது. சமுதாய உழைப்பிலிருந்து பெண் அகற்றப்பட்டாள்.
                மனித குல வரலாற்றில்; நிகழ்ந்த முதல் வேற்றுமை கருவிகள் உள்ளவர் இல்லாதவர் என்பதே.
முதல் அடிமைத்தனம் - ஆணுக்குப் பெண் அடிமைப்பட்டதே.
குடும்பமும், தனிச்சொத்தும் இவ்வாறே தோன்றின என்கிறார் ஏங்கல்ஸ்.

தமிழ் இலக்கியத்தில் இச்சமுதாயப் பதிவுகள்
                உழவு தோன்று முன், காய், கனி, கிழங்குகளைத் தேடி உணவு சேகரிக்கும் நிலையின் புனை கதையே’ ‘வள்ளியின் கதையாகும். இது பின்னால் முருகனோடு சேர்க்கப்பட்டு புனைகதை- புராணமானது. 
இதன் இறுதிக்கட்டமான - இனக்குழுச் சமுதாயத்தில் - உழவு செய்யும் நிலையின் புனைகதையே சீதையின் கதையாகும். இதுவும் பின்னால் ராமனோடு சேர்க்கப்பட்டு புனைகதையானது. இதிகாசமாகவும் எழுதப்பட்டது. (சீதை என்பதற்கு உழுத பள்ளம்என்றே அர்த்த சாஸ்திரம் பொருள் தருவதாக கா.சுப்பிரமணியன் கூறுகிறார் சங்ககாலச் சமுதாயம்என்.சி.பி.எச் - 1987 பக்-35)
                தாய்வழிச் சமூகத்தில் தோன்றிய பெண்தெய்வ வழிபாடுகளை இன்றும் காணலாம்.
கான் அமர் செல்வி’ (அகநானூறு 345).
கடல்கெழு செல்வி’ (அக-370).
அணங்குடைச்சீலம்அக-198),
அணங்குடைச்சாரல் (பெரும்பாண் 494), 
சூர்மகள்’ (நற்றிணை 34),
மழையணங்கு’ (புறம் 151) என்பவற்றோடு, பழந்தமிழ் இலக்கியம் கூறும் பாலை நிலக் கொற்றவையே பிறகு பார்வதியாக சக்தியாக ஆதிபராசக்தியாக வடக்கே காளியாக வளர்ந்தது என்பதையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம். சிலப்பதிகாரத்தில் வரும் கொற்றவைவழிபபாடும், ‘ஐயைவழிபாடும் தாய்வழிச் சமூகத்தின் எச்சமே என்கிறார் நா.வானமாமலை. (தமிழர் வரலாறும் பண்பாடும் - 92 ஐஐஐஇ பக்.78).
                தாய்வழிச் சமுதாயம் மறைந்து பெண், ஆணைச் சார்ந்தவளே எனும் கருத்தின் வளர்ச்சியே சக்தி சிவம்’, ‘சிவத்தில் பாதியே சக்திகதைகள்! யார் பெரியவர்எனும் போட்டியில் சிவன் எரித்தது சக்தியை அல்ல தாய்வழிச் சமுதாய மிச்ச சொச்சத்தை! எரித்த பிறகு பாதி உடலைக் கொடுத்தாராம்பரமசிவன் ! கொடுக்கும் நிலைக்கு உயர்ந்தஆணாதிக்க சமூக வரலாற்றின் வெளிப்பாடே அந்தக் கதையும்.
                இச்சமுதாய காலத்து மலைவாழ் மனிதர்கள் குன்றக்குறவர்’ (ஐங்குறு நூறு 251 – 260) எனப்பட்டனர். இவர்கள் வேட்டைக் கருவியாக கவட்டை (அகம் 34), மற்றும் வேட்டை நாய், கொம்புகளோடு (நற்றிணை 276) வேட்டையாடினர். கொண்டு வந்த விலங்குகளைக் கூட்டாக அறுத்துச் சுட்டுத் தின்றபிறகு கூட்டாக கள்குடித்து மயங்கினர் (அக – 172). வேட்டையாடி வந்த காட்டுப் பன்றியை குன்றக் குறப்பெண் அறுத்துப் பங்கிட்டு அனைவர்க்கும் தந்தாள் (நற்.336).
                உணவு சேகரிக்கும் நிலை, மிகத் தெளிவாக உள்ளது. உடும்பினை குத்தித் தூக்கிக் கொண்டும், மண்ணைத் தோண்டி விரித்த வளைகளைப் பிடித்துக் கொண்டும், உயரமான மண்புற்றுகளை உடைத்து அங்குள்ள ஈசலை வாரிக் கொண்டும் முயலினைக் கொன்று எடுத்துக் கொண்டும் வந்த வேடன் ஒருவனைப் பற்றிக் கூறுகிறது ஒரு பாடல் -
    “உடும்பு கொலீஇ வரிநுணல் அகழ்ந்து                                     நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி             
  எல்லுமுயல் எறிந்த வேட்டுவன்”  - நற்றிணை 59
                உணவு சேகரிக்கும் நிலையிலிருந்த மனிதக் கூட்டம், உழுது பயிர் செய்யும் நிலைக்கு உயர்ந்தது ஒரு முக்கியமான வளர்ச்சிக் கூட்டம். குறிஞ்சி-முல்லையில் திரிந்துகொண்டிருந்த மக்களை மருதநிலம் ஓரிடத்தில் நிலையாக இருக்க வைத்தது இது, தமிழ் இலக்கியத் தொகுப்பில் மட்டுமல்ல, இலக்கணப் பகுப்பிலும் இவ்வாறே பதிவாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.
                தானே விளையக்கூடிய வரகு, கொள், தினை, அவரை தவிர சிறந்த உணவு வேறு இல்லை என்கிறார் மாங்குடி மருதனார் (புறநானூறு-335).
                உழவர் உழவு செய்யாத காலத்திலும், பாரியின் பறம்பு மலையில் மூங்கில்நெல்லும், பலாப்பழமும், வள்ளிக் கிழங்கும், மலைத்தேனும் நிறையக் கிடைத்ததாக மகிழ்ச்சியடைகிறார் கபிலர் (புறம் 109)

நால்வகை நிலப் பிரிவில்  தொல்காப்பியரும் காரல் மார்க்சும் :
                முறையே குறிஞ்சிநிலமும், முல்லைநிலமும் ஆகிய மலையிலும், காட்டிலும் உணவுதேடி அலைந்த மனித இனம் அடுத்து உழவு செய்யத் தொடங்கியதும் வயலுக்கு (மருதநிலத்திற்கு) வந்தது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. மலையிலும், காட்டிலும் இயற்கையைக் கண்டு அஞ்சியவன் வயலில் இயற்கையை ஒட்டி வாழக் கற்றுக் கொண்டபின், இயற்கையைத் தன் போக்கில் இணைத்துக் கொள்ளவும் முடியும் என்பதே கடல்பகுதிநெய்தல்நிலவாழ்வு! 
    ஆக குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்எனும் தமிழ்நிலப்பிரிவு தொல்காப்பியத்திலும் மார்க்சியத்திலும் ஒன்றாகவே வருகிறது! (ஐந்தாவதான பாலைதமிழ்நாட்டில் இல்லை. என்றாலும், இந்தியாவில் ராஜஸ்தானிலும், உலகின் வெப்பமிகுந்த ஆப்பிரிக்கக் கண்டம் உள்ளிட்ட வேறு சில  நாடுகளிலும் இருப்பதால் திணை ஐந்தானது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூரும்நல்லுலகில்ஐந்தாம்திணையான பாலை இல்லாததால் நானிலம்என்றாலே உலகுஎனும் வழக்கம் தமிழில் வந்தது)
     எனவே, மனிதகுலவரலாற்றுப் பரணாமம்பற்றிய பார்வையில், தொல்காப்பியரும் மார்க்சும் ஒத்த கருத்துடையவர்களாக இருப்பதாகவே எனக்குப் படுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களும் தொல்காப்பியரும் காட்டும் குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல் எனும் நால்நிலப் பகுப்பு மனிதக் கூட்டம் உணவுசேகரிக்கும் நிலையிலிருந்து, உணவைப் பயிர் செய்யும் நிலைக்கு வளர்ந்ததைக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.
                தொல்காப்பியர் அகத்திணையில் முல்லை (வனப்பகுதி), குறிஞ்சி (மலைப்பகுதி), மருதம் (வயல்பகுதி), நெய்தல் (கடல்பகுதி) என முறை வைத்துவிட்டு; புறத்திணையில் குறிஞ்சி முல்லை மருதம் - நெய்தல் என்றே வைக்கிறார். (தொல். அகத். நூற்பா 5, புறத் நூற்பா 1-6) என்றாலும், உணவு தேடி அலைந்த இரண்டு நிலப்பகுதிகளிலிருந்து அடுத்தகட்ட வளர்ச்சியாக உணவைப் பயிர்செய்யும் நிலைக்கு வந்ததில் தொல்காப்பியருக்கும் மாற்றமில்லை.

இனக்குழு மக்கள் வாழ்க்கை நிலை
                “சங்ககாலத் தமிழ்ச்சமுதாயம் இனக்குழுக்கள் அமைப்பிலிருந்து பையப்பைய வளர்ச்சியுற்று, நிலப்பிரபுத்துவ சமுதாயமாக மாறத் தொடங்கியுள்ளதைக் காட்டுகின்றது. உருவாகிக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவம,; அரசுகளை நிறுவியது. தங்கள் ஆதிக்கத்தின் கீழ் பிறஇனக்குழுக்களோடு பெரிதும் புகழுடன் விளங்கிய சிற்றரசுகளையும் கொண்டுவர முயன்றது. அச்சமயங்களில் பெரும் போர்கள் நடைபெற்றனஎன்று எல்.ஆர்.திருநாவுக்கரசு கூறுவது (தமிழ்நாட்டு வரலாறு சங்க காலம் - அரசியல் - த.நா.பா.நூ.நி.1983 – பக். 504) மிகவும் கவனிக்கத் தக்கது. ஆனால் ஆழ்ந்த தமிழ் - வரலாறு அறிஞர் 10 பேரால் எழுதப்பட்ட அரிய ஆய்வுகளைக் கொண்ட இந்நூலில், ‘இனக்குழுத் தலைவர்கள்எனும் சொல், மார்க்சியப் பார்வையில் புரிந்து கொள்ளப்படாமல் வேளிர், குறுநில மன்னர் எனும் சொற்களோடு குழம்பிக்கிடக்கிறது. அதோடு, இனக்குழுத் தலைவர்களை உடைத்து நொறுக்கி நிலவுடைமைச் சமூகம் எழு முன் அடிமைச் சமுதாயம் இடையில் பரவியிருந்தது என்னும் சமூகவியல் உண்மையை இந்நூல் மறந்துவிட்டதையும் கவனிக்க வேண்டும்.
                இனக்குழு மக்கள் கூட்டு வாழ்க்கை நடத்தினர். காட்டுக் கனிகள், கிழங்குகளையும், வேட்டை விலங்குகளையும் பகுத்து உண்டனர். உணவு சேகரிப்பு, உணவுப் பயிரிடும் நிலைகளிலும் ஒரு கட்டம் வரை இந்த வாழ்க்கை நீடித்தது. இனக்குழுத் தலைமை நிரந்தரமானதல்ல. அதன் தலைவர்கள் தமது கூட்டத்தை விட உயர்ந்த வாழ்க்கையும் வாழவில்லை. வேட்டை மற்றும் அடுத்த கூட்டத்துடன் சண்டை வரும்போது மட்டுமே தலைமையேற்று மற்ற காலங்களில் தம் கூட்டத்தில் சாதாரண ஒருவராகவே வாழ்ந்தனர்.
ஆதிப்பொதுவுடமைச் சமுதாயம், தன்இயல்புக்கேற்ப கிடைத்தபோது வளமையிலும் கிடைக்காதபோது வறுமையிலும் பங்கேற்றது. தலைவர்க்குத் தனிச்சலுகை ஏதுமில்லை. கள்ளுண்ட மயக்கத்தில் கிடக்கும் எம்தலைவனுக்கு, படுக்கப் பாயோ, தோலோ கொடுங்கள்என்கிறார் வேம்பற்றூர்க் குமரனார்(புறம்-317)
                இனக்குழுத் தலைவன், அச்சமுதாய அமைப்பிற்கேற்ப கையில் பொருள் ஏதுமில்லாதவன் (புறம் 141), விருந்தினர் யாரும் வந்தால் கூட உபசரிக்க முடியாத நிலையில் கை வாளை அடகு வைப்பவன் (புறம் 134), ஆயினும் அவனும் அடிமையில்லை, அவனுக்கு யாரும் அடிமையில்லை. அவன் நிலவுடமையாளனும் அல்லன்! வளமை, வறுமை இரண்டையும் தன் கூட்டத்துடன் பகிர்ந்து கொண்ட அவனே இனக்குழுத் தலைவன்!
                ஆனால், சமுதாயம் மாறி அடுத்த கட்டத்துக்கு வந்த போது இனக்குழு முறை அழித்துக்கொண்டே குறுநிலமன்னராகத் தோன்றிய வேந்தரிடம், ‘எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. ஏனெனில் நீ எங்களது (இனக்குழுத்) தலைவனைப்போல இல்லைஎன்று கூறுகிறார்; பெருந்தலைச் சாத்தனார் (புறம்-151)

கோமாதா-கன்றுபுனிதமானதன்று!
                ஆதிப்பொதுவுடமைச் சமுதாயத்தின் தொடர்;களான உணவு சேகரிக்கும் நிலையிலும், உணவு பயிரிடும் நிலையிலும் ஆடு-மாடுகளே மனிதனின் சொத்துகள். பயிர்த் தொழிலுக்குப் பயன்படுமுன்பு வரை அவையே மழைக்கால உணவுக் கிடங்குகளாயிருந்தன. வேண்டியபோது அடித்துச் சாப்பிடுவதும் வழக்கமாயிருந்தது.
                புறநானூற்று நெட்டிமையாரும் (9), ஆலத்தூர் கிழாரும் (34), சிலப்பதிகார இளங்கோவடிகளும் பசுவை புனிதமாகக் கருதிப் பாதுகாக்க வேண்டும் என்றது பிற்காலத்து வழக்கம். ஆனால் ஆதிப் பொதுவுடமைக் காலத்தில் அடுத்த கூட்டத்துடன் சண்டை நடந்தால் முதல் தாக்குதல் ஆடுமாடுகளின் மீதுதான். பெரும்பாலும் அதற்காகத்தான் சண்டையே நடந்தது!. கொண்டுவந்த கொழுப்பு நிறைந்த பசுவை வெட்டி, அதன் ரத்தத்தை வேப்பமரத்து சாமிக்கு பலியாகத் தூவி, கறியை சுட்டும், வேக வைத்தும் தின்றார்கள்.
                “கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்ப்
      புலவுப் புழுக்கு உண்ட”(அக.309) என்பது அன்றைய சமுதாயத்தின் அடையாளம். (ஒரே காலத்தில், நிகழ்காலத்தையும், முந்திய சமுதாய நிகழ்வுகளையும் குறிப்பது இப்போதும் உள்ளதுதானே?)
அடிமைச்சமுதாய மக்கள் நிலை     
  வில்,வாள்,வேல் முதலான உறுபடைக் கருவிகளோடு, கோடரிகொழு,கடப்பாரை முதலான உழுபடைக் கருவிகளும் ஒரு சிலரிடம் சேரச்சேர இந்த உற்பத்திக் கருவிகள்உள்ளவர்க்கும் இல்லாதவர்க்குமான முதல்முரண்பாடு மனிதசமுதாயத்தில் ஏற்பட்டது. இல்லாதவர்கள் அடிமையானர்கள், இருந்தவர்கள் ஆண்டைஆனார்கள். இதுதான் தெளிவான முதல் வர்க்கவேற்றுமை. அடிமைகளைக் கொல்லவும் விற்கவும் ஆண்டைகளுக்கு உரிமைஇருந்தது. இருப்பவன் இல்லாதவர்களை பலவந்தமாக வேலை வாங்கினான். அடக்கு முறைக் கருவியாக அரசுதோன்றியது.
                இதனை, “ஒரு பக்கம் கடுமையான அடக்கு முறை. மறுபக்கம் உற்பத்தி அதிகரிப்பு. விவசாயம், குடியிருப்பு, கைத்தொழில் வளர்ச்சி, பண்டப் பரிவர்த்தனை முறைகளும் தோன்றின. ஆண்டை வர்க்கத்தைச் சேர்ந்த பலர் உடல் உழைப்பிலிருந்து விடுபட்டு அறிவுத் துறையில் ஈடுபட்டனர். மொழி வளர்ந்தது. எழுத்தும், இலக்கியங்களும், தத்துவங்களும், இலக்கணமும் தோன்றின”. “சிறுபான்மையினரான ஆண்டைகள், பெரும்பான்மையோரான அடிமைகளை அடக்கி ஒடுக்க அடக்குமுறை மட்டுமே போதவில்லை. அவர்களை மயக்கிவைக்கும்  அபின்தேவைப்பட்டது. புதிய மதங்கள், கடவுள்கள், தலைஎழுத்து, முற்பிறப்பு, மறுபிறப்பு, நரகம் -சொர்க்கம், எல்லாம் அவன் செயல் போன்ற அனைத்தும் இக்காலத்தில் சுரண்டும்வர்க்கத்தைச் சார்ந்த அறிவாளிகளால் உருவாக்கப்பட்டனஎன்கிறார் பி.ஆர்.பரமேஸ்வரன் (முன்நூல். 37 – 38).
                எழுத்தாளர்களே! கவனியுங்கள்! ஒவ்வொரு சிறுகதை, கவிதையின் பின்னால் மட்டுமல்லஈ ஒவ்வொரு சொல்லின் பின்னாலும் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறதுமாசேதுங் கருத்தின்படி ஒவ்வொரு சொல்லையும் அதன் முன்-பின் சூழல் மற்றும் பொருள் புரிந்து பயன்படுத்த வேண்டும். இல்லாவிடில் அறிவாளி அறிவு  ஜீவிகள் - என்று, கலை-இலக்கிய வாதிகள் அந்தப் பக்கமே’; நின்று விட நேரும்!
         “வசதியிருக்கிறவன் தரமாட்டான் -அவனை   
    வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்”  என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் பாடிய வர்க்கப் போராட்டம், மனித குல வரலாற்றில் அடிமைச் சமுதாயத்திலிருந்து இன்றைய சமுதாயம் வரை தொடர்கிறது!
      இந்த அடிமைச் சமுதாயநிலை தோன்றிய ஒருசில நூற்றாண்டுகளில் உலகம் முழுவதும் மாறுபட்ட வடிவங்களில் பரவியது. உதாரணமாக இந்தியாவில் வருணாசிரமதர்ம நான்குவர்ண முறை அதன் வடிவமாக அமைந்தது. இது நிலப்பிரபுத்துவ காலத்தில் எண்ணற்ற ஜாதிகளாகப் பரிணமித்தது” – என்கிறார் பி.ஆர்.பி.
தமிழ் இலக்கியங்களில் இச்சமுதாயக் குறிப்புகள்
              முதலில் ஒன்றைச் சொல்லிவிட வேண்டும்.
        மற்ற சமுதாய அமைப்புகளைக் கூட ஒத்துக் கொள்ளும் தமிழறிஞர் பலரும், அடிமைச் சமுதாய நிலையும் தமிழகத்தில் இருந்தது என்பதை மட்டும் ஏனோ ஏற்பதில்லை. சங்க காலம் - பொற்காலம்என்றே சொல்லிப் பழகியவர்களுக்கு இந்தச் சமுதாய நிலையை ஏற்பதில் சங்கடம் தானே? ஆனால் இதில் ஒன்றும் சங்கடமில்லை. உலகம் முழுவதும் பரிணமித்த சமுதாயக் கூறுகளிலிருந்து தமிழகம் மட்டும் தனித்து நின்றிருக்க முடியுமா என்ன?
    பழந்தமிழகத்தில் - “கரும்புதின்னக கைக்கூலி கொடுக்கவும். காதில்கிடந்த பொன்தோட்டைக் கழற்றிக் காய்ந்த நெல்லைக் கொத்தவந்த கோழியை விரட்டவும் விளைவும் செல்வமும் விஞ்சிநின்றனஎன்கிறார் தேவநேயப் பாவணர்  (பழந்தமிழாட்சிகழகம் 1972 – பக்:169).
      “நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியனவாக நிறைந்து செழித்தமையால், விருந்தினர்க்கு வேண்டும் உணவைக் கொடுத்து, அவர்கள் உண்டு மகிழ மக்கள் கண்டு மகிழ்ந்தனர்என்கிறார் சு..வித்தியானந்தம் (தமிழர் சால்பு சங்க காலம்’ – பாரி ஐஐஐ – 1985 – பக்:52)
   இவர்கள் சொல்வதில் தவறில்லை. அது நடந்திருக்கக் கூடியதுதான். ஆனால் இது ஒருபக்கம் மட்டுமே. மறுபக்கம் உழைப்பாளி மக்கள் வறுமையில் மடிந்ததும் நடந்தது என்பதை ஏன் மறைக்க வேண்டும்? இன்றும் நூற்றுக் கணக்கான மகிழ்வுந்துகள் வைத்திருக்கும் வள்ளல்கள்ஒருசிலர் நம்மிடையே வாழவில்லையா? அவர்கள் வாழும் அதே இந்தியாதமிழ்நாட்டில் பலகோடிப்பேர் வறுமையில் வாடவில்லையா? இரண்டில் எது வரலாற்றை மாற்றுகிறது எந்தப்பக்கம் நாம் நிற்க வேண்டும் என்பது தானே மார்க்சியம் எழுப்பும் வினா?
      அடிமைச் சமுதாயத்தில், தமிழக உழைப்பாளி மக்கள் சிக்கிச் சீரழிந்தனர் என்பதே தமிழிலக்கியம் காட்டும் குறிப்புகளில் தெளிவாகத் தெரிகிறது.
     மலைபோல் உயர்ந்தபல நெல்கூடுகளை ஒன்றாகக் கட்டி வைத்திருந்த ஒருவனும் இருந்திருக்கிறான்.மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின் பெருநெல் பல்கூட்டு எருமை உழவ!” (நற்றிணை 60)
          சாதாரணமாக, மற்றவர்களைப் போல மாடுகளைக் கொண்டு தாளடிக்க முடியாத ஒரு ஏழை உழவன், தன் பிள்ளைகளோடு கால்களாலேயே அடித்து வரகு தானியத்தைப் பிரித்து முடிந்தவுடனே அவனைக் கடன்காரர்கள் சூழ்ந்த நிகழ்ச்சியும் நடந்திருக்கிறது.
     “எருதுகால் உறாஅது இளைஞர் கொன்ற                               
   சில்வினை வரகின் புல்லென் குப்பை                               
   தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்” – (புறம் - 327)
  இது வளமைவறுமை முரண்பாடுதான். கடன்வாங்கும் அளவுக்கு உரிமைஇருந்திருந்தால் அடிமைத்தனம் இருந்திருக்க முடியாது. எனில் அடிமைகளைப் பற்றியே நேரடியான செய்தி உண்டா? உண்டு:
    வைராத ராயன் என்ற சிற்றரசன் தன் மனைவி சீதனமாகக் கொண்டு வந்த அடிமைகளில் முப்பத்தாறு பேரை ஒரு மடத்துக்கு விற்றான். அந்த அடிமைகளுக்கு சூலப்பொறி பொறிக்கப்பட்டது.
      ராஜ ராஜ சோழனின் 19-ஆம் ஆட்சியாண்டில் வயலூர்க் கிழவன் மகன் செந்தாமரைக் கண்ணன் என்பவன், தற்போதைய சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூரிலுள்ள ஆதிபுரீஸ்வரர் கோயிலுக்கு ஐந்து பெண்களை நெல் குத்துவதற்காக தானமாக அளித்தான். அந்தப் பெண்கள் மட்டுமின்றி அவர்கள் பரம்பரையினரும் இப்பணியைத் தொடர்வார்கள் என்று கல்வெட்டு கூறுகிறது. இக்குறிப்புகளை ஆ.சிவசுப்பிரமணியன் எடுத்துக் காட்டுகிறார். (பொற்காலங்கள்’ – கார்க்கிநூலகம் 1981 –பக் -35,36).
     மேலும் இவர், “பல உரிமைகள் மறுக்கப் பட்ட நிலையிலும், இழிவாகக் கருதப்பட்ட நிலையிலும் பல சாதியினர் பொற்காலச் சோழர்காலத்தில் வாழ்ந்துள்ளனர். ஆடு, மாடுகளைப் போல விற்கவும். தானமாக அளிக்கப்படவும் உரிய நிலையிலர் மக்களுள் ஒரு பிரிவினர் இருந்தனர். மாடுகளைப் போலவே இவர்களுக்கும் அடையாளச் சின்னம் பொறிக்கப்பட்டதுஎன்று கூறும் தகவல்கள், ‘பொற்காலசமூகத்தின் கற்கால நடைமுறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளன.
    உண்மையில் -மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் நிலப்பிரபுத்துவம் வளர்ந்து, பேரரசுகள் நிலைகொண்ட காலத்தில் நிகழ்ந்தவை தான் என்றாலும், அதற்கு முந்திய காலத்தின் மிச்சசொச்சமாகவே தெரிகிறது. சங்க காலப் பாடல்களின் அரசப் புகழ்ச்சி வெளிச்சத்தில் இந்த அடிமை இருள் இலை மறைகாயாகவே காணப்படுகிறது.
                “கி.பி.3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவச் சாசனம் ஒன்றின்படி நிலத்தோடு அதனைச் சேர்ந்த ஆட்களும் தானமாக அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது” – எனும் இந்தியாவில் வரலாறுநூல் (மாஸ்கோ 1979-பக்:194) கூறும் குறிப்பும் கவனிக்கத் தக்கது.
        இன்னும் குறிப்பாக அடுத்த நாட்டுக் கூட்டத்தினருடன் சண்டையிட்டு, வெற்றி கொண்டபிறகு அவர்தம் ஆடு, மாடு செல்வங்களைக் கொள்ளையடித்து வந்ததோடு அவர்தம் வீட்டு நாட்டுப் பெண்களையும் அடிமைப் பெண்களாகப் பிடித்து வந்த செய்திகளும் வெகு சில (வென்றவர் பெருமை கூறும்) இடங்களில் கிடைக்கிறது. பட்டினப் பாலை” (வரி:246) கூறும் கொண்டிமகளிர் எனும் தொடருக்கு, ‘தோற்றார் பால் பிடித்து வந்த மகளிர்என்று பழைய உரையாசிரியரே பொருள் கூறுகிறார். இதே தொடர் மதுரைக்காஞ்சி (வரி 583), பதிற்றுப் பத்து (ஏழாம்பத்து பாடல் எண் 3, வரி – 9), மணிமேகலை (காதை 18, வரி 109) முதலிய இடங்களிலும் இதே பொருளில் அரிதாக வருவதையும் கவனிக்க வேண்டும்.
     ஆக, செய்திகள் இலைமறையாக வெறு சிலவே இருந்தாலும், அடிமைச் சமூகமும் தமிழகத்தில் இருந்ததைக் கவனித்து சமூக வரலாறு எழுதப்படவேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. கல்வெட்டுகளும், சில சாசனங்களும், வேறு பல குறிப்புகளும் இதற்கு இன்னும் கூடுதலான தகவல்களைத் தரமுடியும். அவற்றையும் தேடிச் சேகரித்து தமிழிலக்கிய வரலாற்றோடு பொருத்திப் பார்த்து எழுத வேண்டும்.
நிலவுடமைச் சமுதாய வாழ்க்கைக் கூறுகள்
     “பழைய அடிமைகள் நிலப்பிரபுக்களின் பண்ணைகளில் விவசாயிகளாக மாறினர். துண்டு துக்காணி நிலத்தில் சொந்தமாகவும் பயிரிடலாம். அவர்களின் பிள்ளைகள் பண்ணையில் தான் வேலை செய்ய வேண்டுமென்ற – (அடிமைச் சமுதாயகால) கட்டாயமில்லை. அவர்கள் பல்வேறு கைத்தொழில்களில் ஈடுபட உரிமை பெற்றனர். இது, வரலாற்றில் ஏற்பட்ட பெரிய முன்னேற்றம”.
        “நிலபிரபுக்களில் பலர் குறுநில மன்னர்களாக முடி மன்னர்களாக மாமன்னர்களாக சக்கரவர்த்திகளாக வளர்ச்சியடைந்தனர். நாடுகளும், சாமராஜ்யங்களும் தோன்றின”.
    “விவசாயமும் கைத்தொழிலும் வளர்ந்த போது உற்பத்திப் பொருட்களைப் பரிவர்த்தனை செய்வதையே தொழிலாகக் கொண்டு ஒரு வணிகக் கூட்டம் தோன்றியது. பல பட்டறை உற்பத்தியாளர்களும், வணிகர்களும் இணைந்து நாளாவட்டத்தில் பெரும் அளவில் விற்பனைச் சரக்கை உற்பத்தி செய்யும் பூர்ஷ்வா வர்க்கமாக உருவாகினர். நிலப்பிரபுத்துவ அமைப்பில் ஒரு புதிய வர்க்கம் பிறந்தது” – என்கிறார் பி.ஆர்.பரமேஸ்வரன் (மார்க்சியத் தத்துவம் - பாடக் குறிப்பு எண் 39, 40)
                அரசர்களைச் சார்ந்த புரோகிதர் கூட்டம் ஒன்று உருவானது. இனக்குழு மக்கள் காலத்துக்கு நேர் எதிராக, மன்னனை மிக உயர்ந்தவனாக பெருந்தலைவனாக அவனே உலகைக் காக்கும் இறைவனின் அவதாரமாக ஆதி பராசக்தியாக புகழ்ந்து கூறியது. மத தத்துவ சமயச் சடங்குகளை அதற்கு சார்பாகவே உருவாக்கி மக்களை அச்சுறுத்தியும், ஆசை காட்டியும் மயக்கி கலை, இலக்கியங்களை அந்த அடிப்படையிலே உருவாக்கி வளர்த்தது. உழைக்கும் மக்களை ஒன்றுபட விடாமல் மதங்களால், ஜாதிகளால், சாமிகளால் கூறுபோட்டது, அதற்கு நிலவுடைமை அரசனிடம் பெரிய பெரிய அன்பளிப்புகளையும் பெற்றுக் கொண்டது. பலநேரம் புரோகிதர்களும் புலவர்களும் கலந்து கிடந்தனர்.
                அரசனின் ஆசைக்கு ஆணை போடாமல், நாடு பிடிக்கும் - மேலும் மேலும் செல்வங்களைச் சேர்க்கும் - ஆசைக்கு துணையாக, போர் உணர்வை நாட்டு உணர்வோடு கலந்தனர். போரிடுவது நாட்டுக்காகஎன்று கூறி பேராசைக்காக ஆயிரக்கணக்கான போர்களில் ஏராளமான இளைஞர்களைப் பலியிட்டனர். வீரர்களுக்கு நடுகல்நட்டு, விழா எடுத்து, இருப்பவர்களும் அப்படிச்சாரும் ஆசைக்குதூண்டப்பட்டனர். இதைச் சிந்தித்து எதிர்த்தவர்கள் ராஜ துரோகியானார்கள்.
                வளம் ஒரு புறம் வறுமை மறுபுறமாக முரண்பாடு வளர்த்தது. ராஜ துரோகிகளின் ஜனநாயகக் குரல் பூர்ஷ_வாக்களால் மேலும் உசுப்பேற்றப்பட்டது. சிறுமன்னர் பெருமன்னர் முரண்பாடுகள், ‘ப+ர்ஷ_வா வர்க்க - புரோகித வர்க்க சுயலாபச் சண்டைகள், உறவு நிலை கடந்த ஒரு வர்க்கம் இவர்களின் இடைவிடாத போராட்டமே அடுத்த கட்டத்தை உருவாக்கியது, இதன் கறாரான இரண்டு கூறாக, மன்னர்களுக்கு எதிராக மக்கள்……! இந்த வர்க்க முரண்பாடு, சமூகத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செலுத்தியது.

தமிழ் இலக்கியத்தில் இச்சமுதாயப் பதிவுகள்
  உண்மையில், நிலவுடமைக்கால இலக்கியங்களே இன்றுகிடைத்தமைக்கும் ஏராளமான பழந்தமிழ் இலக்கியத் தொகுப்புகள் கலை காசுக்காகஎனம் பழைய குரலுக்கு எதிராக கலை, கலைக்காகவேஎனும் புதிய அன்றைய முற்போக்கு குரலே பழந்தமிழ் இலக்கணப் பகுப்புகள் எனலாம்.
                இனக்குழு மக்கள் சமுதாயத்தில், குழு உறுப்பினர்களில் ஒருவனாக இருந்த தலைவன், நிலவுடமைக் காலத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாததலைவனாக மிக உன்னத ஆண்டவனின் அவதாரமாக உயர்த்திக் காட்டப்பட்டான். காளிதாசனின் ;குமார சம்பவம்; இரண்டாம் விக்கிர மாதித்தனை ;முருகனின் இன்னொரு அவதாரம்என்றது போல திருவுடை மன்னனைக் காணின் 
திருமாலைக் கண்டேன்என்றதும் அதே. (திருவாய் மொழி 4-8)
 “நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே            
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” (புறம் 186) - என்று கூறிய மோசி கீரனார் அதனால், எனது உயிர்கூட மன்னனுக்குக் கடமைப் பட்டதேஎன்கிறார்! இப்படிப்பட்ட புலவர்க்கு கவரி வீசிய அரசன் செயலில் (புறம்50) ஆச்சரியமில்லை. தன் பெருமையைக் காலகாலத்துக்கும் பேசி நிற்கப் போகும் பெரிய கோவிலை எழுப்பிய சிற்பிக்கு, ‘எச்சில்பணிக்கம்சுமந்த ராஜராஜசோழனின் பணிவில் ராஜகௌரவம்உயர்ந்ததே!
  முந்திய சமுதாயத்தின் இனக்குழுத் தலைவர்களை, உருவாகி வந்த அடிமைச் சக்தியை நிலவுடமைச் சமுதாய குறுநில மன்னர்கள் அவ்வப்போது சண்டையிட்டு அழித்தனர். காரியும் ஓரியும் கூட தமக்குள் முரண்பட்டு போரிட்டவர்களே! (சிறுபாண்:84 – 113, புறம் 158)
     இனக்குழு வாழ்க்கையில் இறுதிக் காலத்தில் குமண வள்ளலின் தம்பி, தான் தலைவனாகக் கருதி அண்ணனின் தலைக்கு விலை வைத்தான் (புறம் 165) எனப் பெருந்தலைச் சாத்தனார் பாடுகிறார்.
   அண்ணனும், தம்பியுமான சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் போரிட்டனர். (புறம் 45) எனக் கோவூர் கிழார் பாடுகிறார்.
    பிசிராந்தையாருடன் கொண்ட நட்புக்காக, இன்றளவும் தமிழகத்தில் புகழ் கொண்டு நிற்கும் கோப்பெருஞ்சோழன், தனது மகன்களுடனே போரிட்டான்! (புறம் 213)
     மயிலுக்குப் போர்வை தந்த பேகன், தன் மனைவியைத் தள்ளிவைத்துதவறு என்று மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டி நான்கு புலவர்கள், ஐந்து பாடல் எழுதியிருக்கிறார்கள். (புறம் 143 – 147), ஏற்றுக் கொண்டானா என்று தெரியவில்லை!
        இவ்வளவு ஏன்?
                ‘முல்லைக்குத் தேர் தந்த பாரிஎன்று இன்றும் மேடை தோறும் புகழப்படும் பாரியைக் கொனறு, அவனது பெண் மக்கள் இருவரையும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் ஊர் ஊராக அலைந்த கொடுமையும் இதே மண்ணில் தானே நடந்தது! (புறம் 110)
    சிறிய மீன்களை விழுங்கிப் பெரிய மீன் வளர்ந்தது 
  சிற்றரசர்களை வென்று பேரரசு உருவானது!
    சேர, பாண்டிய சிறு மன்னர்ளோடு 17 வேளிர்களையும் வென்று கரிகால் சோழன் பெருமன்னன் ஆனான் - நிலவுடமைச் சமூகம் உறுதிப்பட்டது. நால்வகைப் படைகள் உருவாயின  இடம் சிறிது என்னும் ஊக்கம் செலுத்த’ (புறம் 8)     சண்டை தொடர்ந்தது. ஒளிறு வாள் அரும்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புறம் 312) என்று கற்பிக்கப்பட்டது. பசுவும், பசுப்போன்ற பார்ப்பனரும், பெண்டிரும், பிணியாளரும், குழந்தையில்லாதவரும், பாதுகாப்பான இடத்துக்குப் போய்விடுங்கள்என்று அறவழியில்அறிவித்து, நடந்ததாகக் கூறப்படும் (புறம் 9) போர்களின் அழிவுகள் கொஞ்சமல்ல!
    ‘பகைவன் பல்லைப் பிடுங்கி வந்து கோட்டை மதிலில் பதித்தான்’ (அகம் 211) ஒருவன்.  தோற்றவர் கையைப் பின்னால் கட்டித் தலையில் நெய் ஊற்றி நெருப்பிட்டான் இன்னொருவன்பதிற் - 2-9 செங்குட்டுவனோ பகைவர் ஊரை அழித்து, அவன் ஊர்ப் பெண்களின் கூந்தலை அறுத்து கயிறாகத் திரித்து அதில் யானையைப் பூட்டி ஓட்டினான் (பதி- 5 பதிகம்)
    இதில் என்ன வேடிக்கை எனில், இந்த அழிவுப் போர்க்குப் புகழ்ப்பாடல் பாடிய புலவர்க்குப் பொன்னும், பொருளும், நிலமும், பெண்களும் வாரிவழங்கப்பட்டன(ர்)! தன்னைப் புகழ்ந்து பத்துப் பாடல் பாடிய கபிலர் எனும் புலவர்க்கு சிறுபுறமென நூறாயிரம் காணம் பொன் கொடுத்து.  நன்றாஎன்னும் குன்றின் மீது ஏறிநின்று தன் கண்ணுக்கெட்டிய நிலத்தையெல்லாம் வரிசெலுத்தாத நிலமாக கொடுத்தான் செல்வக் கடுங்கோவாழியாதன் எனும் மன்னன் ! (பதிற்றுப் பத்து ஏழாம் பத்து அடிக்குறிப்பு). இந்தப் புலவர்தான், மொத்தம் 2381 பாடல் கொண்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனும் இரண்டு தொகுப்புக் கொண்ட சங்க இலக்கியத்திலேயே, தனிஒரு புலவராக அதிகப் பாடல்களை (235) எழுதியவர். புலவர் -அரசர் உறவு எப்படி (இது இன்றுவரை வேறுவடிவில்,  கவிஞர்-மந்திரி உறவாகப் புழங்குவதை ஒப்பிட்டுப் பார்க்க)
                பேரரசுகளின் அழிவுப் போரையும், அறவழியையும் மாற்றி மாற்றிப் பாடிய புலவர்கள் பாடல்கள்தான் புறநானூறும், பதிற்றுப் பத்தும், மதுரைக் களஞ்சியம், பட்டினப் பாலையும்! பகைவரிடம் நாடெனும் பேர் காடாக ஆசேந்த வழி மாசேப்ப ஊரிருந்த வழி பாழாகசண்டையிட்ட மன்னனே. தன்நாட்டில், “அரசியல் பிழையாது அறநெறிகாட்டிப் பெரியோர் சென்று அடிவழிப் பிழையாதுஆள்வானாம் (மதுரைக் காஞ்சி 156-8, 191,2)
                இது குறித்து இறுதியாக – “பேரரசுகளின் வளர்ச்சியில் பண்ணிக் குடியரசுகளின் மிச்ச சொச்சங்களைப் பெற்றிருந்த குறுநில மன்னர்களையும், அவர்களது அரசுகளையும் அழித்து ஒழிப்பதி;ல், செல்வங்களைக் கொள்ளை கொள்வது தான் முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. அதில், ஈவு, இரக்கம், தயவு, தாட்சணியம், அன்பு, அறம் என்ற தமிழனின் பண்புகள் எனக் கூறப்படுபவையெல்லாம். பேரரசுகளின் வளர்ச்சிக்;கான தேர்ச்சக்கரத்தில் நசுங்கித் தூள் தூளாயினஎனும் கே. முத்தையா அவர்களின் கருத்தே தெளிவானது. (தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம்’ – சிகரம் வெளியீடு – 1981 – 11, பக்:21)
     சரி இந்த அளவுக்கு பெறியூட்டப்பட்ட போர் நிகழ்ச்சிகளிடையே மக்கள் என்ன பாடு பட்டிருப்பார்கள் என்பதையும் பார்;போம் - ஒரு ஒப்பீடாக.
                உயர்ந்த மன்னர்களின் பெருமை உழைக்கும் மக்களின் நிலைமை
சோறு வாக்கிய கொழுங்கஞ்சி    ஆறு போலப் பரந்தொழுகி ஏறு பொரச் சேறாகி  தேரோடத் துகள் கெழுமி”  சோழன் கரிகாலனின் உயர் குடிவளம் இது (பட்டினப் பாலை வரி: 44 – 47)  (சோறாக்கி வடித்து வழிந்த கஞ்சி வீட்டிலிருந்து பெருகி ஆறுபோல ஓட, அதில் காளைகள் விளையாடிச் சேறாக, அதில் தேர்கள் தொடார்ந்து ஓட சேறு காய்ந்து தூசு பறக்க...)
     “ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பில்
  ஆம்பி பூப்ப தேம்பு பசி உழவா                                      
  பால் இன்மையின் தோலொடு திரங்கி                                  
  இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை                           
  சுவைத்தொறும் அழுஉம் தன் மகத்துமுகம் நோக்கி”.          (சமைத்தல் தொழிலையே மறந்துபோன, தேயாத அடுப்புக்குள் காளான் பூத்துக் கிடக்க, பசி பொறுக்க முடியாமல் பால் சுரக்காத அம்மாவின் வயிற்றில் மார்பைச் சுவைத்து அழுது கொண்டிருக்கும் குழந்தை) புறநானூறு – 164.
   ஒரு பெண்ணின் தாய்வீட்டில் மலைபோல் உயர்ந்த நெற்கூடு நிரம்ப நெல் இருந்தது நற்றிணை-26 கடன் வாங்கியும் தன் வாளை அடகு வைத்ததும் தீராத வாழ்க்கை ! புறம்: 316 அணிகலன்கள் ஏராளம்  முத்தும் பவளமும் பொன்னும் மணியும் (சிலம்பு :16 – 106) அணிய வேறு ஆடையில்லாமல், ஒரே ஆடையைத் தொடர்ந்து உடுத்தி அழுக்கும், ஈறும் பேனும் நிறைந்து வைத்து, தைத்து நைந்த ஆடை அணிந்தவர் (புறம் 69) கோழிக்கறியுடன் வெள்ளிய நெய் கலந்த  நெல் அரிசிச் சோறு உண்டனர் (பெரும்பாண் - 255) உணவு இல்லாமல், குப்பைக் கீரையை உப்பில்லாமல் வேகவைத்து, மற்றவர் பார்க்க வெட்கி வாசல் கதவை மூடிக்கொண்டு சாப்பிட்ட பெண் - (சிறு பாண் - 129-40)
        இதுபோல அடுக்கினால் போய்க் கொண்டேயிருக்கும். ஒடுக்கும் வர்க்கத்திடம் உபரி சேரச் சேர,  உழைக்கும் வர்க்கம் ஓடாகிப் போவது அதிகரிக்கத்தானே செய்யும்?
                காட்டை அழித்து வயல் செய்த (அகம் 140), - முல்லை அருவி நீரால் ஐவன நெல் விளையவைத்த (புறம் 159), - குறிஞ்சி மீன் பிடித்து முதலில் பசித்தவர்க்கு வாரிக் கொடுத்து எஞ்சியதையே விலைக்கு விற்ற (அகம்) நெய்தல் எல்லாப் பகுதி உழைக்கும் மக்களும் நிலவுடமை சமூகத்தில் மருத நிலத்தில் சுரண்டப்பட்டனர்.
                ‘உண்டாயின் பதில் கொடுத்து  இல்லாயின் உடன் உண்ணும்               இல்லோர் ஒக்கல் தலைவன்: (புறம் 95)                       இனக்குழுக்கள் காலத்தோடு மலைறே, ‘மக்கள் வரிதாங்க முடியாமல் தவிக்கிறார்கள், மூவேந்தரிலும் சிறந்த எம் மன்னா, வரியைக் குறைத்து மக்களைக் காப்பாற்று’ (புறம் 35) வெள்ளைக்குடி நாகனாரின் குரல் பரிதாபமாகக் கேட்கிறது. நீதிபோதனைகள் நிகழ்த்தப்பட்டன. சைவ,வைணவ இன்ன பிற போதகர்கள் பெருகினர்.
                ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்புஎன நான்கு குணமே பெண்களுக்கு அணிகலன் என்று இலக்கணம் (தொல்காப்பியம் - பொருள் - களவியல் - நூற்பா 8) வந்தது. அதே தொல்காப்பியம் ஆணாதிக்க உணர்வு மிகுந்து, ‘காதற் பரத்தை, காமப்பரத்தை, இற்பரத்தை, சேதிப்பரத்தைஇவர்களோடு ஆடிக்களிப்பது ஆடவர்க்குத் தவறல்ல என்னும் கற்பித்தது. பழந்தமிழ்ச் சமூகத்தில் பெண்ணடிமைத் தனம் சொல்லச் சொல்ல பெரிய நூலாகும்.
                விதவைக் கொடுமை குறுந் 69, புறம்: 246,248,250,373
                கூந்தல் களைதல், வளையல் நீக்குதல் - புறம் 261, 280
                பாண்டியராணியே உடன் கட்டை ஏறியது புறம் 246
                இதுதான் நிலவுடமைச் சமுதாயம்!
           எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனத் தொகுப்பு நூல்களையும், அதனுள் புறநானூறு, அகநானூறு, பட்டினப்பாலை என்று தனித்தனியே பிரித்து தொகுத்திருந்தாலும் ஒரு புலவரே பல நூல்களில் எழுதியிருப்பதால், ஒவ்வொரு புலவரின் பாடல்களையும் தனித்தனியே ஆய்வு செய்ய வேண்டும்.
        மார்க்ஸ் கூறும் சமுதாய மாற்றங்களை அப்படித் தனித்தனியே ஆய்வு செய்து தொகுக்கும் போது நூல்களின் பெயர்ப் பொருத்தத்தை விட காலப்பொருத்தம் சரியாக அமையும். கிறிஸ்து ஆண்டுக் கணக்கிலும் வரிசைப் படுத்த முடியும்.
                அது தனி ஒருவர், தனி ஒரு நிறுவனம் கூடச் செய்து முடிக்கக் கூடியதல்ல மார்க்சியம் அறிந்த வரலாறு புரிந்த தமிழறிஞர் குழு என்று அமைத்தால் பல ஆண்டுப் பணியில் முடியக் கூடிய செயல் அது. வாருங்கள் தோழர்களே! புதிய சமுதாய மாறுதலுக்கான பல கூறுகளை தமிழ் மரபில் கண்டெடுத்து, புதியதோர் உலகம் செய்வோம்!
------------------------------------------------------------------------
(வெளியீட்டுக்கு நன்றி - தீக்கதிர்-பொன்விழாமலர் - 2013, பக்-383-388)