தமிழ்இனிது-26

 

    அவனன்றி ஓரணுவும் அசையாது’  என்பது சரியா?

உயர்ந்துவிட்டதும், கூடிவிட்டதும்!

‘அந்தக் கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை ‘உயர்ந்து’ இந்தக் கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது’, என்கிறது செய்தி!  

‘உயர்ந்து’ என்பதன்  எதிர்ச்சொல்,  ‘தாழ்ந்து’ தானே? ‘குறைந்து’ விட்டதன்  எதிர்ச்சொல்  ‘கூடிவிட்டது’ தானே?

சாவில் ‘உயர்வு-தாழ்வு’ இருக்கிறதா என்ன!? எண்ணிக்கையைச் சொல்லும் போது கூடுதல், குறைதல் என்பதே தமிழ் மரபு. ஆனால் ‘உயர்ந்து’விட்டது என்று, சாவைக்கூட ‘உயர்த்திய சமத்துவர்’ யாரோ!?

எண்ணிக்கை  கூடியது /  குறைந்தது என்பதே சரியானது.     

சிலவும்  செலவும்

            சிலவா? செலவா? ‘வரவு சிலவுச் சிட்டை’ என்கிறார்களே!  

செல்-செல்வது-பயணம். இலங்கைப் பயணம் பற்றி திரு.வி.க. எழுதிய நூல்- “இலங்கைச் செலவு”.  

செல்-செலவு - செலவழிப்பது - பணம். ‘ஓரிடம் தனிலே, நிலை இல்லாதுலகினிலே உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே“ - உடுமலை நாராயண கவி சொன்னது எவ்வளவு உண்மை!  நிலையாக யாரிடமும் நின்று கொண்டே இருக்காமல் சென்றுகொண்டே இருப்பது செலவுதானே!

ஆக, செலவு என்பதே சரியான சொல். சிலவு என்பது, தவறாகப் புழங்கும் சொல். ‘அது எப்படிங்க, தவறான சொல் புழக்கத்தில் இவ்வளவு காலம் இருக்கும்?’என்று கேட்போர்க்கு ஒரு குறளும் ஒரு குறுங்கதையும்  : 

சிலர் மனிதரைப் போலவே இருப்பார்கள், ஆனால் மனிதர் அல்ல! “மக்களே போல்வர் கயவர்” என்னும் வள்ளுவர், மக்களைப் போலவே இருக்கும் கயவர்களின் ஒப்புமையை வியந்து எழுதுகிறார்! குறள்-1071.

சார்லி சாப்ளின் போல மாறுவேடம் போடும் போட்டியில் கலந்து கொண்ட உண்மையான சாப்ளினுக்கு இரண்டாம் பரிசு கிடைத்ததாம்! குறள் எவ்வளவு உண்மையானது! உண்மையை விட, பொய் அழகானது!   

அன்றியும் இன்றியும்

அன்றி-அல்லாமல், இன்றி- இல்லாமல்  என்று பொருள். கல்வியைக் கற்பது அன்றியும் வாழ்வில் அதன்படி நிற்பது நல்லது -குறள்-391. “குதிரை கீழே தள்ளியதன்றி, குழியும் பறித்ததாம்“ பழமொழி.

“அவனன்றி ஓரணுவும் அசையாது” என்பதும் தவறு! அறிவின்றி வேலை கிடைக்காது, அன்பின்றி வாழ முடியாது என,  இன்றி எனும் சொல்லே இன்றியமையாத தன்மையைக் குறிக்கும். தமிழ்ச் சொற்களைப் பொருளின்றிப் பயன்படுத்துவது, தவறன்றி வேறில்லை!   

திருவளர் செல்வன் – திருநிறை செல்வி

தமிழர் திருமண நிகழ்வு நுட்பங்களில் ஒன்று : திருமண விருந்தில் அல்லது  கையில் தரும் பையில் தேங்காய், பழம் /  நல்லதொரு நூலுடன், –கோவில் பட்டிக் கடலைஉருண்டை- போட்டுக் கொடுத்தால், ‘இவ்வீட்டில் இத்துடன் இனிப்பான மணநிகழ்வு நிறைவடைந்தது’ என்று பொருள்!  

இதே நுட்பம், திருமண அழைப்பிதழில் கூட  உண்டு! மணமகன்/ மணமகள் பெயருக்கு முன்னால் ‘திருவளர்’செல்வன்/செல்வி என்று போட்டால், “இந்த வீட்டில் இவரின் இளையோர் -திருமணத்துக்குக் காத்திருப்போர்- உண்டு” என்று பொருள்!  திரு வளர வாய்ப்புள்ளது!

திருநிறை செல்வன்/செல்வி என்றிருந்தால் “இவரே இந்த வீட்டுக் கடைக்குட்டி“ (இனிமேல் திருமணத்திற்கான காத்திருப்புப் பட்டியல் இவர்கள் வீட்டில் இல்லை)  என்று பொருள்!  திரு நிறைவடைந்தது!  

திருவளர்ச்செல்வன், திருநிறைச்செல்வி என்று, பிழைபடக் குறிப்பிடுவோர், இந்த நுட்பம் அறிந்தால் தமிழருடன் தமிழும் வாழும்!

-------------------------------------

 வெளியீட்டுக்கு நன்றி:

“இந்து தமிழ்” நாளிதழ் -12-12-2023 செவ்வாய்

பதிவிட்டது, 12-12-2023 இரவு-9.50

--------------------------------- 

இன்று கடந்து நாளைய தினம்

இந்த வலைப்பக்கத்தின்

பார்வையாளர் எண்ணிக்கை

ஒரு மில்லியன் (10,00,000) கடந்திருக்கும்

என்று நம்புகிறேன்.

12ஆண்டுகளின் சீரான வளர்ச்சி!

நன்றி நன்றி நன்றி 

நன்றி நன்றி

நண்பர்களே!

----------------------------- 


8 கருத்துகள்:

  1. ஒவ்வொன்றையும் விவரிக்கும் விதமே அருமை...

    அருகில் இருந்து சொல்வது போல உள்ளது...

    பதிலளிநீக்கு
  2. ஆமாம், அந்த "அவன்" யார்...?

    நமக்குள் இருக்கும் அவனா...?

    பதிலளிநீக்கு
  3. அருமை. அவனின்றி செலவு கூடி குறைந்து விளக்கம்...

    பதிலளிநீக்கு
  4. திருநிறை / திருவளர் வேறுபாடு விளக்கியமைக்கு நன்றி அய்யா மேலும் சிறு வேண்டுகோள் PHARMACIST என்பதற்கு மருந்தாளுனர்/ மருந்தாளுநர் எது சரி என விளக்க அன்புடன் வேண்டுகிறேன்
    சி.கனகமுத்து மருந்தாளுனர்

    பதிலளிநீக்கு
  5. இந்த வாரம் பல தகவல்கள் எனக்குப் புதியவை ஐயா!

    உயர்ந்து / கூடி - வேறுபாடு இப்பொழுதுதான் அறிகிறேன்! மிக்க நன்றி!

    அன்றி / இன்றி ஆகியவற்றின் வேறுபாடு பற்றிய விளக்கம் சுவை! இத்தனை காலம் இதை அறியாமல் இருந்திருக்கிறேன்.

    திருநிறைசெல்வன் / திருவளர்செல்வி வேறுபாட்டை இத்தனை நாள் தலைகீழாகப் புரிந்து கொண்டிருந்தேன். ஒருமுறை பட்டிமன்றப் பேச்சாளர் ஒருவரும் இதைச் சொன்னார். ஆனால் எனக்கு அது ஏற்கத்தக்கதாக இல்லை. இப்பொழுது உங்கள் விளக்கம் உண்மையை உணர்த்தியது. மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  6. 10,00,000 பார்வையாளர்களைக் கடந்து வெற்றிநடையிடும் வளரும் கவிதைக்கு அன்பு கமழ் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துகள். குறிப்பிடத்தக்க சாதனை/மைல்கல்.
    மேலும் தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி!

    பதிலளிநீக்கு