தமிழ் இனிது -28


எழுத்துக்கள் சரியெனில் வாழ்த்துக்கள்?

          ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்த நண்பர் கேட்டார்- “வாழ்த்துக்களா? வாழ்த்துகளா?” தமிழ்ப் புத்தாண்டில் “ஏப்பி நியூ இயர்” சொன்ன ‘கொடுந்தமிழர்’ இடையே, இப்படிக் கேட்டவரை வாழ்த்தினேன்!

            ‘கள்’ விகுதி பழந்தமிழில் இல்லை! “ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவி“யோடு ஒட்டி, உயர்திணை ஒருமைக்கே மரியாதைப் பன்மை வந்து விட்டது – ”அமைச்சர் அவர்கள் வருகிறார்கள்” போல!  

நாள்கள், ஆள்கள், வாழ்த்துகள் என, இயல்பாகவே எழுதலாம். ‘நாட்கள்’ என்பதற்கு, ‘நாட்பட்ட கள்’ என்று பொருள் எனினும், இப்போது அப்படி யாரும் புரிந்து கொள்வது இல்லை என்பதால் நாட்கள் என்பதை ஏற்கலாம் என்பதே என் கருத்து. தாட்கள், ஆட்கள் என்பது செயற்கை. “எத்தன ஆளுக(ஆள்கள்)?“எனும் சிற்றூர் மக்களிடம் இதைக் கற்கலாம்.   

பரிமேலழகர் முதலாக, தமிழண்ணல் வரை ‘எழுத்துக்கள்’ என்றும் எழுதியுள்ளனர். எழுத்துக்கள் சரியெனில் வாழ்த்துக்களும் சரிதானே? 

ஆக, நாட்காட்டி- நாள்காட்டி, வாழ்த்துக்கள்-வாழ்த்துகள் இரண்டும் வழக்கத்தில் இருப்பினும், நாள்காட்டியே எளிது என்பதை கவனத்தில் கொள்ளலாம், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளையும் சொல்லலாம்!       

பழமுதிர்ச்சோலையா? - பழமுதிர் சோலையா?  

 “ஃப்ருட் ஸ்டால்“ என்பதை, “பழமுதிர் சோலை“ எனப் பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது! பன்னாட்டுப் பண்பாட்டுக் கலப்பில், உலகத் தாய்மொழிகள் பலவும் அழிந்துவரும் சூழலில், இது மகிழ்ச்சிதானே?

முருகாற்றுப் படை,  “பழமுதிர் சோலை மலைகிழ வோனே“ என்று முடிவடையும். “பழமுதிர் சோலையிலே தோழி” எனும் கண்ணதாசனின் திரைப்பாடலை, சுசிலாம்மாவின் இனிய குரலில்  கேட்டு மகிழுங்கள்.  

பழம் உதிர் சோலை! கேட்கவே இனிக்கும் பழந்தமிழ்ச் சொல்! இதை, பழமுதிர்ச் சோலை என்று எழுதுவது முதிர்ச்சியற்ற செயல்!

அண்ணார்? அன்னார்?  

இறப்புச் செய்தி அறிவிப்புகள், “…அன்னாரின் இறுதி ஊர்வலம்..” என்று வரும். இதையே எழுதும்போது, ‘அண்ணாரின்’ என்பது தவறு. அன்னார் என்பது, ‘ஏற்கெனவே குறிப்பிட்டவர்’ எனப் பொருள் தரும்.  குறள் (667,969,1323), சங்க இலக்கியத்திலும் வரும். ‘தேம்பாவணி’யில் மட்டும் இச்சொல், 72இடங்களில் வருவதாகப் பட்டியலைத் தருகிறது “தமிழ்மரபு அறக்கட்டளை“யின் “சங்கம்பீடியா”!

 ‘அண்ணார்’ என்றால் ‘பகைவர்’ என்று பொருள்! இறந்தவரை அறிந்தவர், அன்னாரைப் ‘பழிவாங்க’ அண்ணார் என்று சொல்லலாம்!  

தேநீர் குடிப்பதா? சாப்பிடுவதா?

தேயிலை நீர் தேநீர். இதைத் தேனீர் என்பது சரியல்ல.  

தேநீரை, காப்பியை  குடிப்பதா? சாப்பிடுவதா? அருந்துவதா?

 “இடைப் பலகாரம் சாப்பிடுங்க” இது, செட்டிநாட்டு மக்களின் மாலைச் சிற்றுண்டியைக் குறிக்கும் அழகு தமிழ் அழைப்பு! இதுதான் சரியானது. பலவகை உணவுகளுக்கான பொதுச் சொல் சாப்பிடுவது.

உண்ணல், தின்னல், கடித்தல், குடித்தல், பருகுதல் உள்ளிட்ட ஏறத்தாழ 40 உணவருந்தும் சொற்கள் தமிழில் உள்ளன! ‘பர்கர்’, ‘பீசா’ என, செயற்கையைச் சாப்பிடுவோர் இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை!    

தேநீரில்தான் எத்தனை வகைகளைக் கண்டு பிடித்தனர் நம் கரோனாக் காலத் தமிழர்!  தமிழறிஞர் ஆ.இரா.வேங்கடாசலபதி “அந்தக் காலத்தில் காப்பி இல்லை” என்றொரு நூல் எழுதி வியக்க வைக்கிறார்! 

“டீ குடிக்கலாமா’க்கா?”, 

“டீ சாப்பிடலாமா சகோ?” 

“தேநீர் அருந்தலாமா நண்பா?” - 

--இவற்றை வாழ்நிலை வழக்கு என்றே ஏற்கலாம். 

----------------------------------------------------------------------  

நன்றி - இந்துதமிழ் நாளிதழ் - 26-12-2023 

(26-12-2023 செவ்வாய் 

பிற்பகல் 2-45மணிக்கு 

வெளியிடப் பட்டது) 

20 கருத்துகள்:

  1. நல்ல கருத்துக்களை வரலாற்றுச் சான்றுடன் தாங்கள் கூறுவது மிகவும் சிறப்பு ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.மு வின் கட்டுரை நனி அழகு.

      நீக்கு
    2. நா.முத்துநிலவன்செவ்வாய், டிசம்பர் 26, 2023

      நன்றி புகழ்மணி.. இன்னும் விரிவாகத் தங்கள், நண்பர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
  2. வாழ்த்துக்கள் # வாழ்த்துகள் ‌- இவற்றில் "எது சரி" என்கிற குழப்பம் நீடிக்கிறது... இணையம் முழுவதிலும் பல பதிவுகள் உள்ளன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், டிசம்பர் 26, 2023

      இன்னுமா? அந்தப் பத்தியின் கடைசி வரி?

      நீக்கு
  3. இராம கி ஐயா அவர்கள் "வாழ்த்து" என்று மட்டும் சொல்வதை, இன்று வரை தொடர்கிறார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், டிசம்பர் 26, 2023

      ஆமாம் வாழ்த்து, நன்றி சொல்ல கள் வேண்டாம் என்றும் ஒரு - நல்ல - கருத்து உள்ளது. இராம.கி. அய்யா நல்லறிஞர். அவரை நாமும் பின்பற்றலாம்

      நீக்கு
  4. பலருக்கும் பல ஆண்டுகளாக இருந்த வந்த குழப்பத்தைத் தீர்த்து விட்டீர்கள் ஐயா! வாழ்த்துக்கள், நாட்கள், எழுத்துக்கள் எல்லாம் சரியே! ஆனால் நீங்கள் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகும் ‘வாழ்த்துகள்’ படச் சுவரொட்டியைக் கோத்து விட்டு முற்றுப்புள்ளியின் பக்கத்தில் மேலும் இரு புள்ளிகள் வைத்து விட்டார்கள் இதழினர்!!😟

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், டிசம்பர் 26, 2023

      ஆனால், அது சரியென்று சொல்லவில்லையே! எதிர்க் கருத்துகளைக் கொண்ட படங்களையே பெரும்பாலும் சேர்த்து வெளியிடுவார்கள்! (மருந்தை விட நஞ்சு விரைவில் ஏறுமல்லவா? பொதுவான ஊடகப் பார்வை அதுதான்)

      நீக்கு
    2. ஓ! அப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமா? புரிகிறது ஐயா!

      நீக்கு
  5. வணக்கம் ஐயா
    நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் பதிவு வாசிக்கிறேன் தினமும் எதிர்கொள்ளும் கேள்விகள் இவை. பல எடுத்துக்காட்டுகளோடு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், டிசம்பர் 26, 2023

      வணக்கம். தங்கள் கருத்துரைக்கு மகிழ்கிறேன். ஆனால், இது பற்றிய விரிவான விமர்சனத்தை, இதுபோலும் குழப்பமான சொற்களின் பட்டியலை எதிர்பார்க்கிறேன். நன்றி

      நீக்கு
  6. தமிழை எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வழிகளை இளைய தலைமுறையினருக்கு கிழமை தோறும் , உரிய எடுத்துக்காட்டுகளுடன், அளிக்கும் பாங்கு நன்று..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், டிசம்பர் 26, 2023

      நன்றி தோழர். உங்களுக்குத் தோன்றும் சொற்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்

      நீக்கு
  7. இளைய தலைமுறையினரும் அறியும் வண்ணம், உரிய எடுத்துக்காட்டுகளுடன், தமிழை இனிமையாகப் கொண்டு செல்லும் பாங்கு நன்று..!

    பதிலளிநீக்கு
  8. தேநீர் பழம் உதிர் சோலை தந்த (அன்னாருக்கு) ஐயா அவர்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், டிசம்பர் 27, 2023

      நன்றி நண்பரே .
      தொடர்வேன், தொடர்க

      நீக்கு