(நன்றி - இந்துதமிழ்)
‘விவரம்’ தெரியாமல் ‘விபரம்’ எனலாமா?!
கூடு, கூண்டு –
தேனீக்களும், பறவைகளும்
தாம் வாழ, தாமே கட்டுவது கூடு(Nest). தேன்கூடு, குருவிக்கூடு போல. மனிதர்கள்
வீடுகட்டி வாழக் கற்றுக் கொண்டதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேனீக்களும்,
குருவிகளும் கூடுகட்டி வாழ்ந்தன என்கிறது சூழல்-அறிவியல்!
பறவை,
விலங்குகளை அடைக்க, மனிதர் கட்டுவது கூண்டு(Cage). ‘கூண்டுக்கிளி’ என்னும் ஒரேஒரு படத்தில்தான்
எம்ஜிஆர், சிவாஜி எனும் இருபெரும் நடிகர்களும் இணைந்து நடித்தார்கள்! கூட்டுப் பறவையைக்
கூண்டில் அடைப்பது இயற்கைக்கு எதிரானது. உலக உயிரினங்களில் இளைய (Junior Most) உயிரினமான
மனிதர், ‘உலகம் முழுவதும் தமக்கே உரிமை’ என நினைப்பது, தமக்குத் தாமே கட்டிக் கொள்ளும்
கூண்டு!
நெரி, நெறி-
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் குரல்வளை
‘நெறி’க்கப்படுவதான செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்தின. நெறி என்பது வழி, தத்துவம் எனப்படும். “குறள்நெறியில் வாழ்வதுதான் வாழ்வைப் பொருளுடைய
தாக மாற்றும்” என்பதுதான் சரி.
கழுத்தை
‘நெரித்து’க் கொல்வதும், கை காலில் புண் வந்தால் கவட்டில் ‘நெரி’கட்டுவதும் சொல்லளவில்
சரி. நெரி வேறு, நெறி வேறு.
புனைவும் புணையும்-
“நீர்வழிப் படூஉம் புணை“
என்பது புறநானூறு-192. எழுத்தாளர் தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்“ புதினம்தான், 2023ஆம் ஆண்டுக்கான
அகாதெமி விருதை வென்றது. புணை என்றால் தெப்பம்.
புனைபெயர்,
தாமே புனைந்து கொள்ளும் பெயர்! “வினைபுனை நல்இல்”-அகநானூறு.98. புனைதல்-அழகுறச் செய்வது,
கவிதை புனைதல்
விபரம் விவரம்-
தமிழைச்
சரிவர உச்சரிக்கத் தெரியாத ஆங்கிலேயர், மதராஸை ‘மெட்ராஸ்’, திருஅல்லிக் கேணியை ‘ட்ரிப்ளிகேன்’
என்றது போல ஊர்ப்பெயர் மாற்றம் தமிழ்நாட்டில் நூற்றுக் கணக்கில் உண்டு! நம் ‘செந்தமிழர்’ பலரும், இன்றும் அப்படியே செப்புவதுதான்
சிரிப்பு!
இதுபோல,
வடமொழியின் அரசியல் தாக்கம் மிகுந்துவந்த இடைக் காலத்தில் – பிற்காலச் சோழரிலிருந்து,
இப்போதும் - பல்லாயிரம் ஊர்ப் பெயர்களும்,
வாழ்முறைச் சொற்களும் வடமொழி மாற்றம் கண்டன.
9ஆம்
நூற்றாண்டுக்கு முந்திய தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரின் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
– முதலாயிரம் – பாடல் எண்-872) “அரங்கமா நகருளானே!” என்னும் வரி,
பெருமாளை அரங்கன் என்றே அழகு தமிழில் அழைத்தது. 10-11ஆம் நூற்றாண்டின் பிறகு, இது
மாற்றப் பட்டு, ஸ்ரீரங்கன் ஆகி, இன்று ரங்கா ரங்கா என்கிறது! அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் பாடிய ‘ஐயாறன்’
பஞ்சநதீஸ்வரன் ஆகி, ‘அறம்வளர்த்த நாயகி’ தர்ம சம்வர்த்தினி ஆனது போல நிறைய நிறைய உள்ளன.
இப்படித்தான்
உலகம், லோகம் ஆனதும். “சங்க இலக்கியம் தொடரடைவு” எனும் அருமையான செயலி ஒன்று, சங்க
இலக்கியத்தில் “உலகம்”எனும் சொல் 53இடத்தில் வருவதாகப் பட்டியலிட்டுள்ளது. தவிர,
உலகில், உலகத்து, உலகத்தோடு எனும் சொற்கள் 160 என்று சொல்கிறது! இந்த பழைய ‘உலக’மே இப்போது லோகம் ஆகிவிட்டதை
என்ன சொல்ல!
விவரம்
– விவரித்தல்- விபரம் போல, சில்லாயிரம்
சொற்கள்! இவ்விவரம் தெரியாதவர் விபரம் என்றே எழுதுகிறார்கள்! தனித் தமிழறிஞர்கள்
பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள், பாவாணர்,
பெருஞ்சித்திரன், பாரதிதாசன், சரவணத்தமிழன், தமிழ்க்குடிமகன், இரா.இளவரசு, இன்றும்
செந்தலை ந.கவுதமன் போன்றோரின் தொடர் முயற்சிகளால் தமிழ் மறுமலர்ச்சி கண்டு வருவது நமது
பெறுபேறுதான்!
---------------------------------------------
நன்றி - 02-01-2024 இந்து தமிழ் நாளிதழ் திசைகாட்டி
வலையேற்றிய நேரம், 02-01-2024 மாலை 4-30மணி
--------------------------------------------
ஆம் ஐயா! விபரம் என்று 80, 90-களில் அதிகம் எழுதிக் கொண்டிருந்தார்கள். இன்று அப்படி எழுதுபவர்கள் அரிதுதான். இருந்தாலும் பழைய புத்தகங்களில்தாம் தமிழ் சரியாக இருக்கும் எனும் நினைப்பில் யாரும் மீண்டும் பழைய பிழையை மீட்டு விடாதிருக்கும் பொருட்டாவது இதைப் பதிவு செய்வது தேவையாகிறது.
பதிலளிநீக்குஊர்ப் பெயர்க் குழப்பம் பல தலைமுறைகளாகவே நீடிக்கிறது. கடந்த எடப்பாடியார் ஆட்சியில் பெயர்களைச் சீரமைக்கிறோம் என்று முயன்று மேலும் குழப்பித்தான் விட்டார்கள் என்று சருச்சையும் எழுந்தது. இப்பொழுது தமிழ் நலப் போராளிகள் நிறைந்த கூட்டணி தமிழ்நாட்டின் ஆட்சியில் பங்கெடுத்திருக்கும் இந்நேரத்தில் மீண்டும் அந்த முயற்சியை மேற்கொண்டு சரியாக நிறைவேற்றலாமே? பல காலப் பிழை திருத்தப்படும்!
நல்ல தகவல் மிக்க நன்றி ஐயா
பதிலளிநீக்குநன்றி நண்பா
நீக்குதெளிவு பெற்றேன்...நன்றி தோழர்.
பதிலளிநீக்குகடுமையான உங்கள் பணிகளை அறிவேன். இருப்பினும் எனது பதிவைப் படித்து, கருத்துப் பதிவிடும் தங்கள் அன்பிற்கு நன்றி நண்பர் ராஜா. வணங்குகிறேன்
நீக்குஅருமை...நன்றி தோழர்.
பதிலளிநீக்கு"விவரம் கெட்டமனுசனாஇருக்கீங்களே!"-என்று ஊரில் ஏசுவதைக்கேட்டிருக்கிறோம்.அப்படிப்பட்டமனிதர்களே விபரம் என்று பிழையாக உச்சரிப்பர்.
பதிலளிநீக்குஇதனை ஆய்வுசெய்ததில்கிடைத்த விவரம்.கோழிவளர்ப்போர்
கோழியை அழைக்கும் குறியீடு பா.....பா..ஆகும்.
தமிழ்தெரியாத அந்நியர் வ என்ற முதல்எழுத்துடன் தொடங்கும் சொற்களைச்சொல்லத்தெரியாமல் வத்தலக்குண்டு என்பதை பட்லக்குண்டு என்பர்.
வங்காளம் என்பதை பெங்கால் என்பர்.வெங்காயநல்லூரை பெங்களூர் என்பர்.
நாக்குப்பயிற்சியின்றி பேசும் குழந்தைகளும் இத்தவறைச்செய்வார்கள்.
நன்றி அய்யா. தமிழ்மொழியை உச்சரிக்கத் தெரியாமல் த்ரமிள - த்ரமிட-த்ரவிட-என்ற வழியில்தான் திராவிட எனும் உச்சரிப்பு பழந்தமிழ் பற்றியதாகி பிறகு மொழிக் குடும்பத்திற்கு ஆனதாகவும் அறிஞர் சொல்வர்
நீக்குநல்ல பதிவு தான் நண்பரே!
பதிலளிநீக்குஇருப்பினும் இதுவும் ஒரு ஆவணம் போல் ஆகிடாது இருப்பின் நல்லது!
ஆவணம் என்றால் என்ன பொருளில் நீங்கள் புரிந்திருக்கிறீர்கள் என்று புரியவில்லையே?
நீக்குபயனுள்ளதாக இருக்கிறது ஐயா
பதிலளிநீக்குஇந்த தயார்நிலை (டெம்ப்ளேட்) கருத்தெல்லாம் வேணாம் சோலை. படித்து நேரம் இருக்கும் போது எழுதினால் போதும் நண்பா...
நீக்குகடுகைத்துளைத்து எழுகடலை புகுத்தினாற்போல்...இத்தனை சின்ன இடுகைக்குள் எத்தனை விவரங்கள்!!! ஒன்றையொன்று பின்னி தொடராகி மாலையாகியிருக்கிறது..
பதிலளிநீக்குநன்றியும்...அன்பும்,
வணக்கம். தங்கள் பெயரை அறிந்து கொள்ள இயலவில்லை! எனினும் நன்றி. இதையே நம் நண்பர்கள் பலரும் சொல்கிறார்கள். ஆனால், இவ்வளவுதான் அளவு என்றபின் சுண்டக் காய்ச்சினாலன்றி, சுவையோ பயனோ இராதே எனும் அச்சத்தில் வந்த நல்ல பயிற்சியிது!
நீக்குசிறப்பு தோழர்.
பதிலளிநீக்குநன்றி தோழர் (பெயரை அறிய முடியலயே? என்ன சிக்கல் என்றும் புரியவில்லை! நம்ம தொழில் நுட்ப அறிவு அவ்ளோதான்! நண்பர் வலைச் சித்தரிடம்தான் கேட்க வேண்டும்)
நீக்குவிவரம் விபரம் வேறுபாடு அறிந்தேன் நன்றி அய்யா
பதிலளிநீக்குநன்றி நண்பரே (முந்திய பதிலில் உள்ளதையே மீண்டும் சொல்லும் நிலை! விரைவில் தீர்வு காண்போம்)
நீக்குஅருமை தோழர் சிறப்பு
பதிலளிநீக்கு