ஒற்றுமை பாடும் தமிழ்க் கவிதைகள்!

என்சாமி பெரியசாமி உன்சாமி சின்னச்சாமி” என்று சாமியின் பெயராலும் சாதியின் பெயராலும் மக்களைப் பிரித்து வரும் சுயநல வாதிகளுக்குச் சொல்லுங்கள் - மக்கள் என்றும் ஒற்றுமை விரும்பிகள்தான் என்பதை!  
அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியத்தின் அடிநாதமாக –சாதி மதம் பாராத –மக்கள் ஒற்றுமை விரும்பிகள்தான்!


அஞ்சு விரல்ல ஏத்த இறக்கம் இருந்தாலும் உள்ளங்கையி எல்லாருக்கும் ஒண்ணுதானே’ என்னும் உணர்வோடுதான் மக்கள் என்றும் இருக்கிறார்கள் என்பதுதமிழ்கூறும் இலக்கிய கண்ணாடியில் கொஞ்சம் கால ஏடுகளைப் புரட்டிப் பார்த்தாலே தெரியும். பார்ப்போம் வாருங்களேன்...?!?!

உலகப் பார்வை:
தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு
      சம்பாத்யம் இவைஉண்டு தான்உண்டு என்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்’ என ஒதுக்கி விடும் பாரதிதாசன் தான்- உலகம் உண்ண உண்! உலகம் உடுத்த உடுத்து’ என்றார் இது அனைத்து மக்களுக்கும்’ எனும் ஆழமான அர்த்தத்தில் வருகிறது. பிராமண எதிர்ப்பு இயக்கத்தில் இருந்தவரே பிராமணரை விட்டு விட்டு மற்றவர் உண்ண உண் என்றோ அல்லது  அல்லாப்பிச்சை கிடக்கட்டும் நீ உடுத்து என்றோ கூறவில்லை! அனைத்து சாதி மத இன மொழி தேச எல்லைகளைக் கூடக் கடந்து அனைத்துமக்களும் உண்ண’ என்பது மிகப்பரந்த- தேவையான- உள்ளம் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்தே இந்தப் பண்பாடு வளர்ந்து வந்திருப்பது பார்க்கப் படிக்கத் தெரிகிறது.

பழந்தமிழ் இலக்கியங்களில் உலகப்பார்வை:
அனைவருக்கும் தெரிந்த வரி ஐ.நா.சபைக்கும் போன வரி – தமிழில் அதுவும் பழைய சங்கத் தமிழில் உள்ளது! யாதும் ஊரே யாவரும் கேளிர்” இந்த ஒரு வரியில் மற்ற அனைத்து சங்கப்புலவர்களைக் காட்டிலும் உலகப் புகழ் அதாவது உலகில் எங்கெல்லாம் தமிழர் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பரவிய புகழ் -பெற்றுவிட்டார் கணியன் பூங்குன்றனார். அவ்வளவு   பெருமையும் - இந்த ஒருவரிக்கு உண்டு எனில் அதன்  காரணம் உலகம் முழுவதையும்  ஓன்றாக -ஒரே மனித உலகமாக-நினைத்தது தான். உண்மையில் சமண முனிவராகிய பூங்குன்றனார் நிலையாமைக் கருத்தை வலியுறுத்த எழுதிய பாடலின் முதல் வரியே அந்தப் பாடலின் முழு அர்த்தத்தையும் முந்திக்கொண்டுவிட்டது என்பதுதான் உண்மை.
இதில் ஆச்சிரியப்படத்தக்க விஷயம் - மொத்தமுள்ள சஙகத் தமிழ்ப் பாடல்கள் 2381இல் இவர் எழுதிய பாடல்கள் இரண்டே இரண்டுதான்!  இந்தப் பாடல் தவிர இவர் எழுதிய மற்றொரு பாடல் எது எனக் கேட்டால் ஆராய்ச்சியாளருக்குத்தான் தெரியும்! உலகைத் தழுவிக் கொண்ட இந்தப் பாடலைத்தான் உலகமும் தழுவிக் கொண்டது, ஏன் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

காதல் மணம் - கலப்பு மணம் செய்யத் துணிந்த ஒருவன் சாதியை-மதத்தை-இடத்தையெல்லாம் தாண்டி இணைவது பற்றியும் தமிழ்க்கவிஞன் பாடியிருக்கிறார். அவர்பெயர் செம்புலப் பெயல் நீரார்எனும் புலவர். (உண்மையில் தனது உண்மையான பெயர் மறைந்தும் ஒரே பாடலில் புகழ்பெற்ற உவமையால் அதே உவமையின் பெயரில் நிலைத்து விட்டவன் அவன்.)
யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல-
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
காதல் பற்றிய பாடல்கள் அனேகமாக -உலக மொழிகள் அனைத்திலும்- உலகப் பார்வை உடையவைதாம். எனவே தமிழில் அது மிகுந்து கிடப்பதை இதற்குமேல் கூறவேண்டியதில்லை.


திருக்குறளில் உலகப்பார்வை
இந்தத் தலைப்பில் ஏராளமான கட்டுரைகள் வந்திருப்பதால் நான் விரிவாகச் சொல்லத் தேவையில்லை. தமிழிலிருந்து மிக அதிகமான உலகமொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கும் நூல் திருக்குறள்தான். நமக்குத் தெரியாத நூற்றுக்கணக்கான மொழிகளுக்குத் தமிழை அறிமுகப்படுத்திய திருக்குறளில் தமழ் என்னும் சொல்லே இல்லாததில் வியப்பில்லைஆனால் ஏராளமான விஷயமிருக்கிறது ஆய்வு செய்ய. ஒரு மொழிக்கோ ஒரு  நாட்டுக்கோ வள்ளுவன் சொல்லவிலலை உலகமனிதனுக்குச் சொன்னதுதான் திருக்குறள்! முதல்குறளே உலகு எனும் சொல்லைக்கொண்டிருப்பதும் அப்படியே! பிறப்பொக்கும்  எல்லா மனிதருக்கும்அல்ல!  எல்லா உயிர்க்கும்  என்பது மிகுந்த ஆய்வுக்குரியது.

சிலப்பதிகாரத்தில் மத ஒருமை- மக்கள் ஒற்றுமை:
முத்தமிழ் - மூவரசர் -மூன்று நாடு என்று  சமமாகப்  பாடப்பட்ட“ -ஆண்டவன் அல்லாத ஒருவனை தலைவனாகக் கொண்ட முதல் தமிழ்க் காப்பியமாம் சிலப்பதிகாரத்தில் சமணக் கருத்துகளே அதிகம் வந்தாலும்  பிறசமயக் காழ்ப்பு எந்த இடத்திலும் இல்லாதது குறிப்பிடத்தக்கது. திருக்குறளைப் போலவே ஒரு சமயக் கருத்து உள்ளே விரவி வந்தாலும் தொடங்கும் போது வரும் கடவுள் வாழ்த்தில் சிலப்பதிகாரம் அனைவர்க்கும் பொதுவான திங்கள் ஞாயிறு மழை மற்றும் ஊர்(பூம்புகார்) வாழ்த்தோடு தொடங்குவது தனியாக ஆய்வுசெய்யத் தக்கது.

உலகம் தழுவிய தமிழ் வரிகள்:
பழந்தமிழ் புலவர்கள் அனைத்து மக்களையும் குறிக்கும் அடையாளச் சொல்லாகவே உலகம் எனும் வார்த்தையைக் கொண்டு தமது காவியம் அல்லது கவிதைகளைத் தொடங்குவது பெருவாரியாக உள்ளது.
உதாரணத்துக்குப் பயன்படுத்தினாலும் கூட உலகு’ எனப் பேசுகிறது. பக்தியை அதுவும் குறிப்பிட்ட புலவர் சார்ந்த சைவ வைணவ இஸ்லாமிய கிறித்துவ மதக் கருத்தை பரப்புவதற்காக எழுதப்பட்ட இலக்கியங்களில் கூட உலகப்பார்வை விரவிக்கிடக்கிறது. மற்ற மதங்ளை வம்புக்கிழுக்காமல் தனது வைணவத்தைப் புகழ்ந்து பாடும் கம்பராமயணத்தில் கூட முதல் பாடலில்-முதல் வரியில்-முதல் சொல்லேஉலகம்’ தழுவியதுதான். உலம் யாவையும் தாமுள வாக்கலும்” தான்! 
இன்னும் வேடிக்கையானது சமணர்களை --ஆங்கங்கே பேட்டை ரவுடி பாஷையில்-- அமண்குண்டர்’ என்றெல்லாம் திட்டித் தீர்க்கும் பெரிய புராணத்தில் சிவபெருமான் எடுத்துக் கொடுத்தபடி (!) வந்த வார்த்தை - முதல் பாடலிலும் கடைசி-4286 ஆம் பாடலிலும் செங்குத்தாக நடுப்பாடலிலும் வந்த வார்த்தை – ‘உலகெலாம்’ என்பது! அப்புறம் வேறென்ன சொல்ல?

கம்பன் காட்டும் சாதி - இன ஒருமை:
அரசகுல ராமன் ஒருவேடர் குலத்தையும் ஒரு குரங்கினத் தவனையும் ஓர்அரக்கர் குலத்தவனை யும் தன் சகோதரர்களாக்க கருதி
குகனொடும் ஐவரானோம் முன்பு பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவ ரானோம் எம்உழை அன்பின் வந்த
அகன்அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவ ரானோம்
புகல்அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை
என்ன சகோதரத்துவ ராமன்! “ என்னைகாட்டுக்கு அனுப்பியதன் மூலம் ஏற்கனவே இருந்த நான்கு பேரோடு நீங்கள் மூவரும் சேர ஏழு மகனுக்குத் தந்தையானான் உன்தந்தையாகிய தசரதன’ என்கிறான்.
(ஐயா! ஐயப்பா… இப்படியாப்பட்டவனுக்கு கோயில் கட்டவாய்யா அங்க இருந்த ஒரு மசூதிய இடிச்சீகஉருப்படுவீகலாய்யா’- என நமது தெக்கத்திப் பாட்டி பாணியில் கேட்க தோன்றினால் தப்பில்லை!) திருமாலின் அவதாரம் என்றாலும் தான் பாடிய இராமனின் கதையில் நூற்றுக்கு மேற்பட்ட செய்யுளில் சிவனைப் போற்றும் வரிகளைக் கம்பன் வைத்த்தைக் காணலாம்! அரி அரன் இடையே பேதம் சொல்வோர் அறிவிலார் என்றே சொல்கிறார்!

இன்றைய தமிழில் இன மத ஒருமை இடைக்காலத்தில் தோன்றிய சித்தர்களின் பாடல்களின் தேச இன கடவுள் சாதி கடந்த கருத்துக்கள் ஏராளம். ஒன்றே ஒன்று:
சாதியாவ தேதடா மதங்களாவ தேதடா என்பது அவரே
“ பறச்சி ஆவது ஏதடாபார்ப்பனத்தி ஆவது ஏதடா
 இறைச்சி தோல் எலும்பிலே இலக்கம் இட்டிருக்குதோ?” என்றதும் நெத்தியடி!

நவீன தமிழில் பாரதியின் தேச ஒருமை மக்கள் ஒற்றுமைப் பாடல்கள் பலரும் அறிவர். பலர் அறியாத ஓரு பாடல்:
கருநிறம் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்.
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே -- பதிய ஆத்திசூடி
இதற்கும் மேல் - பலரும் அறிந்த தெளிவான பாடல்
தெய்வம் பலப்பல சொல்லி-பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர் -- ‘இதைவிட வேறென்ன சொல்ல?

அடுத்த வந்த பாரதிதாசன்-
வாழ்வதிலும் நலம் சூழ்வதிலும் புவி
மக்களெல்லாம் ஒப்புடையார் என்கிறார். 
தொடர்ந்து அவர் கூறும்
இமயம் வாழும் ஒருவன் இருமினால்,
குமரி வாழ்வோன் மருந்து கொண்டோடுவான் என்பதன் பொருளென்ன?

அடுத்து வந்த பட்டுக்கோட்டையாரோ இன்னும் எளிமையாக-
ஆருமேல கீறினாலும் ரத்தம் ஒன்னுதான்,
ஆகமொத்தம் எல்லாருமே பத்தாம் மாசந்தான்என்பது நெத்தியடி!

அடுத்தவர் கோவிலை இடிக்கச் சொல்லும் சங்’ பரிவாரங்களுக்கும் அதன் புதிய தலைவராகப் புறப்பட்டிருக்கும் திருவாளர் மோடிக்கும் சொல்வோம்! இடித்தல்  மற்றும் எரித்தல் வேலைகளை விட்டு புதிதாய் சேர்த்தல் உயர்த்தல் வேலைகளில் புதிய இந்தியா உலகுக்கே வழி காட்டும்.
யாரோ ஒரு புதுக்கவிஞன் –பேருந்துப் பயணத்தில் இடிபடும் இளம்பெண் ஒருத்தியின் குரலில்- சொன்னதுபோல,
             “இடிப்பதற்கு இங்கே
          ஏராளம் பேர் வருகிறார்கள்!
          கட்டுவதற்குத்தான்
          யாரும் இல்லை!

இப்போது மட்டுமல்ல,
எப்போதுமே நம் தமிழ்ஒற்றுமைக் குரல் இதுதான்-
           நீ-
     இந்துவாக இரு
           இஸ்லாமியராக இரு
           கிறிஸ்துவராக இரு
           ஆனால்-
           மறக்காமல்
           மனிதனாக இரு !”
-- என்று பெயர்தெரியாத மாமனிதக் கவிஞன் யாரோ ஒருவன் எழுதியதைத்தான் நம் நெஞ்சில் எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள் நம் முன்னோடித் தமிழ்க்கவிஞர் பலர். இதைப் புரிந்துகொண்டால் இந்தியாவுக்கு நல்லது.
          அண்ணல் காந்தி எம்மத மேனும்,
        அவர்தான் எங்கள் தாத்தா!
        அன்னை தெரசா எம்மத மேனும்,
        அவர்தான் எங்கள் அன்னை!
        அப்துல் கலாம் எம்மத மேனும்,
        அவர்தான் எங்கள் வழிகாட்டி!
        --நா.முத்துநிலவன்.

------------------------------------------------------------------ 

14 கருத்துகள்:

 1. அதே போல
  "உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
  நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,
  அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
  அன்னவர்க்கே சரண் நாங்களே" கம்பராமாயணப் பாடலிலும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலகம் தழுவிய எனும் பத்தியில் இதனை ஒரு வரியில் சொல்லியிருக்கிறேன்.. நல்ல நினைவாற்றல்தான் உனக்கு

   நீக்கு
 2. "தெக்கத்திப் பாட்டி பாணி" உட்பட அனைத்தும் உங்கள் பாணியில் அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
 3. அருமை ஐயா.ஒற்றுமை குறித்து சொல்லப்பட்ட உண்மைகள் அருமை.நிஜம் தான் நீ யாராக இருந்தாலும் மனிதனாக இரு..அட்டகாசம்..
  வாழ்த்துக்கள் ஐயா..

  பதிலளிநீக்கு
 4. தமிழனின் பாரம்பரிய குண நலனை மிக மிக
  அற்புதமாகத் தொகுத்துக் கொடுத்துக்
  கொடுத்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. ஒரே பதிவுல இப்படி எல்லாத்தையும் கொட்டினா? எப்படி எடுத்துவைக்க?என் தமிழ் மீது எனக்கே கோபம் வருகிறது....
  உங்கள் பள்ளியில் படித்திருக்கலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் எவ்வளவோ இருக்கு... புத்தகத்தில மத்ததச் சொல்லலாம்னு...இப்ப நாம ஒரே பள்ளியிலதான படிக்கிறோம் செல்வா?

   நீக்கு
 6. எவ்வளவு தகவல்கள்...
  மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க ஐயா...
  செல்வா அண்ணா சொன்னது போல் உங்கள் பள்ளியில் படித்திருக்கலாம்... நாங்களும் கொஞ்சமேனும் தமிழ் கற்றிருப்போம்...

  அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
 7. எவ்வளவு அழகான தகவல்கள்...நாங்கள் எழுதுவதெல்லாம் ஒன்றுமே இல்லை. அத்தனை அழகான தொகுப்பு! இறுதி வரிகள் அந்தச்சிவப்பு வரியள் நச்!

  பதிலளிநீக்கு
 8. அண்ணல் காந்தியையும் அன்னை தெரேசாவையும் ஐயா அப்துல் கலாம் அவர்களை இணைத்துக்கொண்டுதான் நாம் எல்லோரும் ஒன்றாக வாழ்வதை அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.

  பதிவின் துவக்கமாய் இருக்கும் அந்த புகைப்படம் எனக்கு சிலிர்ப்பை உண்டாக்கியது ஆனந்த கண்ணீரோடு.

  கோ

  பதிலளிநீக்கு
 9. அற்புதம் ஐயா! அற்புதம்! இதை இவ்வளவு தாமதமாகப் படிப்பதற்காக மிகவும் வருந்துகிறேன்! தமிழ் இலக்கியங்களில் உலகப் பார்வை என்கிற தலைப்பில் பட்ட மேற்படிப்புக்கான ஓர் ஆய்வையே நிகழ்த்தியிருக்கிறீர்கள்! செம்மையான கட்டுரை! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு