ஆனந்தவிகடன் கவனத்திற்கு, வலைப்பதிவர் வேண்டுகோள்!

 அன்பினிய “ஆனந்தவிகடன்“ நிர்வாகத்திற்கு வணக்கம்.  கடந்த ஆண்டே மிகவும் எதிர்பார்த்தும், இந்த ஆண்டும் இல்லாத ஏமாற்றத்தை இக்கடிதத்தின் வழியாக விகடன் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
 எல்லாவகையான கலை-இலக்கிய விருதுகளையும் தருகிற விகடன், வலைப்பக்க இலக்கியம் எனும் வகையை மறந்துவிட்டது ஏன்?

      தமிழின் சிறந்த கலைஞர்களை, எழுத்தாளர்களை –மற்ற சில அமைப்பினரைப் போலப் படைப்புகளை அனுப்பக்கூடச் சொல்லாமல்- தானே தகவல் திரட்டி திரைப்படம்-தொலைக்காட்சியில் சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், மற்றும் சிறந்த சிற்றிதழ், கதைத்தொகுப்பு, கவிதைத்தொகுப்பு, நாவல், மொழிபெயர்ப்பு மட்டுமின்றி சிறந்த விளம்பரங்கள், கார், பைக் இவற்றோடு பல்வேறு துறையின் சிறந்த தமிழர்கள் எனப் பலதரப்பட்ட விருதுகளையும் வழங்கிச் சிறப்பிக்கிறது விகடன், கடந்த 2007முதல்! இது தமிழகத்தின் ஆகச் சிறந்த கௌரவமான விருதாகவும் மதிக்கப்படுகிறது. மகிழ்ச்சி தருகிறது.
   இதில், வளர்ந்துவரும் தமிழின் நுனிமுனைக் கொழுந்தான வலைப்பக்க  இலக்கியம் என்ன பாவம் செய்தது? ஐந்தாம் தமிழால் அகிலத்தை இணைத்து, அன்பை வளர்க்கும் இந்த வகையை ஆனந்த விகடன் மறந்தது நியாயமா?
  சிற்றிதழுக்கு விருது தருகிறீர்கள்... இது நியாயம்தான்.கிட்டத்தட்ட சிற்றிதழ்களைப் போலவே, சுதந்திரமாக இயங்கிவரும் தமிழின் புதிய வரவான வலைப்பக்க இலக்கியத்தை வளர்க்க வேண்டாமா? 
     மற்ற அச்சுஊடகம் போலவே அல்லது அதனினும் சற்றுக் கூடுதலாகவே இணையத்திலும் நச்சுவிதைகள் உண்டுதான். அதற்காகக் கவலைப்படுவதைவிட நல்லவற்றை ஆதரிப்பதுதானே சரியான வழி?
     இருட்டைப் பற்றிக் கவலைப்படுவதைவிட ஒரு சிறுவிளக்கை ஏற்றுவது சிறந்ததென்று சொல்வதை விகடனுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.
     வலைப்பதிவராக இருந்துகொண்டே மிகச்சிறப்பாக சமூகப் பணிகளை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வா.மணிகண்டன் அவர்களுக்கு விருது தந்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது, என்றாலும் அவரது சமூகப் பணிக்காகத்தான் அந்த விருது வழங்கப்பட்டதே அன்றி வலைப்பக்க எழுத்திற்காக அல்ல என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
    எனவே, அடுத்த ஆண்டாவது, விகடன் விருதுப் பட்டியலில் நல்ல இலக்கியம் வளர்க்கும், சமூகவிமர்சனங்களை முன்வைக்கும், தமிழ்ச்சமூகம் முன்னேறத் தளராது பணியாற்றும் தமிழ்-வலைப்பக்க எழுத்தாளர்க்கும் தனியாக விருது வழங்கிட வேண்டுமாய் உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். 
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
ஒருங்கிணைப்பாளர்-
கணினித் தமிழ்ச்சங்கம்,
புதுக்கோட்டை. 
18-02-2016
பி.கு. தமிழ்நாடு அரசோ, அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகமோ கூட ஆண்டுதோறும் இம்மாதிரியான விருதுகளை வழங்கலாம்தான். ஆனால், தமிழகஅரசு தரும் ஏனைய விருதுகளில்  அரசியல் புகுந்து விளையாடி வருவதை அனைவரும் அறிவோம் என்பதாலேயே, விகடனிடம் இந்த வேண்டுகோள்.
(ஆனந்த விகடனுக்கு இந்தப் பதிவை, மின்னஞ்சல் வழியாக இன்று அனுப்பியுள்ளேன் பார்க்கலாம், நல்லது நடக்கத்தானே முயற்சிகளை மேற்கொள்கிறோம்?முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமைதான் வெல்லாது. - நா.மு.) 

40 கருத்துகள்:

 1. வலைப்பதிவாளர்கள் எவ்வித ப்ரதிபலன் பாராமல் தங்கள் கருத்துக்கள் தமிழ் கவிதைகள் வெளீயிடுகின்றனர். ஊக்குவிக்க ப்பட விகடன் முன் வரட்டும் .நா. முத்துனிலவன் முயற்சிக்கு பாராட்டுதல்கள்

  பதிலளிநீக்கு
 2. விருது என்பது விரும்பியவர்களுக்கு கொடுக்கும் காலம் இது. அதற்கு அரசாங்கம் மட்டுமல்ல விஜய்டிவி சன் டிவி, ஆனந்தவிகடனும் விலக்கு அல்ல. அதனால் யாரிடமும் விருதுக்காக கெஞ்ச வேண்டாம். இந்த விருதுகளைவிட நம் படைப்புகளை படிக்கும் ஒருவர் ( நண்பர் அல்ல உறவினர் அல்ல நம்மிடம் உதவி பெறுவர் அல்ல) பாராட்டி ஒரு சில வார்த்தைகள் சொன்னார் என்றால் அதுவே மிக சிறந்த விருதாகும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது எனக்கான கெஞ்சுதல் அல்ல நண்பா! “விண்ணப்பித்து வாங்குவதா விருது?” என தினமணியில் கட்டுரை எழுதியவன் எனக்காக யாரிடமும் கெஞ்சுபவனுமல்லன். இது நம் தமிழ் வலை எழுத்தாளர்களுக்கான கோரிக்கை.

   நீக்கு
  2. யாரிடமும் விருதுக்காக கெஞ்ச வேண்டாம் என்பதற்கு பதிலாக வேண்டுகோள்விடுவிக்க வேண்டாம் என்று மாற்றிக் கொள்ளுங்கள்.....(சில சமயங்களில் மனசில் நினைப்பதை எழுத்தில் கொண்டுவரும் போது வார்த்தைகள் சரியாக வாராமல் போய்விடுகின்றன)


   நீங்கள் விருதுக்காக கெஞ்சுகிறீர்கள் என்ற அர்த்ததில் நான் சொல்லவில்லை. பதிவர் எழுதும் பதிவுகளுக்கு உங்களைப் போன்றவர்களின் தரமான கருத்துக்களே பெரிய விருதுகள் கிடைத்த மாதிரிதான்

   நீக்கு
  3. திருத்திக் கொண்டேன்... விளக்கத்திற்கும் மீள் வருகைக்கம் நன்றி

   நீக்கு
 3. மிகச் சரியான வேண்டுகோள். அதுவும் தகுதியான ஒருவரிடமிருந்து கோரப்பட்டிருப்பதால் விகடன் நிச்சயம் பரிசீலணைக்கு எடுக்கும் என நம்பலாம்.

  பதிலளிநீக்கு
 4. நல்ல யோசனை. நல்ல வேண்டுகோள். நன்றி.

  பதிலளிநீக்கு
 5. கட்டாயம் தேவைப்படுகிற மிக நல்ல முயற்சி. வரும் ஆண்டுகளில் விகடன் கண்டுகொண்டால் நல்லது. வாழ்த்துகள். நிறைவேறட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களைப் போன்றவர்களையெல்லாம் இன்னும் ஏராளமாக விருதுகள் மட்டுமல்ல, உதவிகளும் செய்துதந்து பாராட்டி எழுத வைக்க வேண்டும் எனும் எண்ணத்தின் வெளிப்பாடே இது நண்பரே!

   நீக்கு
 6. நல்ல யோசனை! ஆனால் அரசியல் நுழையாமல் இருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசியல் இல்லாத இடமில்லையம்மா. நல்ல அரசியல் முன்னேற வேண்டும் அவ்வளவுதான். நன்றிடா.

   நீக்கு
 7. பதில்கள்
  1. உங்களைப் போன்ற பிரபல பதிவர்கள் இதை மறுபதிவு செய்தோ, முகநூல்களில் பகிர்ந்தோ இன்னும் பலரைச் சென்றடையச் செய்தால் ஒருவேளை வெற்றிபெறலாம்.

   நீக்கு
 8. நல்ல வேண்டுகோள் ...வளர்ந்து வரும் வலைபூக்களின் ....வளர்ச்சிக்கான ஒரு வித்து ....வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. உங்கள் வேண்டுகோளை நான் வழிமொழிகிறேன் ,தலைப்பில் ,வலைப்பதிவர் என்பதில் 'கள்'ளைச் சேர்த்துக் கொள்ளுங்கள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கள்ளைச் சேர்ப்பதா? ஓ! கள் விகுதியைச் சொன்னீர்களா? பகவானே? நீர் ஜோக்காளி என்பதில் சந்தேகமென்ன?

   நீக்கு
 10. வலைப்பக்க இலக்கிய விருது வழங்கப்பட வேண்டுமென்ற தங்களின் கோரிக்கை விகடனுக்கு மட்டுமல்ல அனைத்து இலக்கிய அமைப்புகளின் கவனத்தையும் ஈர்க்கும் . நாளை விடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உச்ச நோக்கம் அதுதான்... தமிழகஅரசே தரவேண்டும். விகடன் தொடங்கினால் நல்லது நடக்கும்.

   நீக்கு
 11. நியாயமான ஆதங்கம்தான் கவிஞரே..

  கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி விட்டு பெண்களை மரத்தோடு கட்டிப்பிடித்து ஆடியதற்காக டாக்டர் பட்டம் கொடுத்தாங்கே ஒரு நடிகனுக்கு.

  நமது பதிவர்கள் பலரும் (நான் அல்ல) சமூக நலனுக்கு வேண்டி பல நல்ல விடயங்களை முன் வைக்கின்றார்கள் உண்மையில் இவர்களை ‘’ஊக்கு’’ வித்து ஒரு வரி எழுதினால்கூட பெரிய சந்தோசத்தை தரும் பார்ப்போம்.
  ஊதுவதை ஊதி வைப்போம்

  த.ம.வ.போ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது வியாபாரம்..கில்லரே! இதுவும் அப்படி ஆகாமல் செய்ய உங்கள் பாணியில் “ஊக்கு”வித்தால், ஊரில் ஊக்கு விற்பவன் கூடத் நல்ல தேக்கு விற்பானே? அது சரி அது என்ன தமவபோ...? தமவாபோ இல்ல? (ஒருவேளை வா போ ன்னு சொன்னா மரியாதையா இல்லன்னு காலை ஒடிச்சிட்டீங்களோ?)
   நீங்க செய்வீங்க..ஒரு மா3 ஆளுல்ல..(?)

   நீக்கு
  2. தமிழ் மணம் வழக்கம் போல் 80தையே அப்படி எழுதினேன் கூடுதலாக எழுதினால் மின்சார செலவுதானே ....

   நீக்கு
 12. சரியான வேண்டுகோள்....நடக்கும்..நம்புவோம்...வழக்கம் போல் மணிகட்டிவிட்டீர்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ம வேலையே அதானே?
   சொல்லுற சொல்லிப்புட்டேன்,
   செய்யுறத செஞ்சிடுங்க
   நல்லதுன்னா கேட்டுக்குங்க
   கெட்டதுன்னா விட்டுடுங்க - நன்றி -மக.பகோக.

   நீக்கு
 13. நல்லதோர் வேண்டுகோள். விகடன் செவிமடுக்கும் என நம்புவோம்..

  பதிலளிநீக்கு
 14. அருமையான வேண்டுகோள் தான் ஐயா.நானும் இணைத்தில் படிக்க தொடங்கிய சில நாட்களில் சிலர் அருமையாக இலக்கியத்தை எளிமையாக எழுதுகிறார்கள் அப்போது நானும் நினைத்தேன் இதுப்போன்ற கருத்தை ஏன் அரசு ஆதரித்து ஊக்கமளித்தால் என்ன..??என்று.உண்மை தான் தாங்கள் சொன்னதுபோல அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் ஐயா.

  எல்லாம் நன்மைக்கே எதிர்பார்ப்போம் ஐயா..

  பதிலளிநீக்கு
 15. உங்களின் உயர்ந்த எண்ணத்திற்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள்

  பதிலளிநீக்கு
 16. வலைப்பதிவர்கள் சார்பில் தங்களின் இந்தக்கோரிக்கை மிகவும் நியாயமானதே. அதற்கு வலைப்பதிவர்கள் அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ooooo

  தமிழகத்தின் பிரபல பத்திரிகையான ஆனந்தவிகடன் நிர்வாகம் நம் வலைப்பதிவர்களின் திறமைகளைப்பற்றி ஏற்கனவே நன்கு உணர்ந்து உள்ளவர்களே என்பதையும் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

  உதாரணமாக நம் வலைப்பதிவர்களில் சிலரை ஆனந்தவிகடன் - என் விகடன் - ’வலையோசை’ என்ற பகுதியில் சிறப்பித்து முன்பெல்லாம் வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போதும் அந்த வழக்கம் தொடர்கிறதா என்பதுபற்றி எனக்கு சரியாகத் தெரியவில்லை.

  எனக்குத்தெரிந்து என்னைத்தவிர திரு. சேட்டைக்காரன், திரு. ரிஷபன், திரு. ஆரண்யநிவாஸ் ஆர். இராமமூர்த்தி போன்ற சில பதிவர்களைப்பற்றி சிறப்பித்து பாராட்டி எழுதியிருந்தார்கள்.

  அதைப்பற்றிய மேலும் முழு விபரங்கள் இதோ இந்த என் பதிவினில் கொடுத்துள்ளேன்:

  http://gopu1949.blogspot.in/2012/11/blog-post_3.html

  ஆனந்தவிகடன் - என் விகடன் - வலையோசைப் பகுதியில் என்னைப்பற்றி எழுதி வெளியிட்டிருந்த பகுதியைக்காண:

  http://en.vikatan.com/article.php?aid=25811&sid=751&mid=33

  [Title: Humourous write up by Vai Gopalakrishnan]

  ooooo

  ஆனந்தவிகடன் பத்திரிகைக்கும் எனக்கும் நேரிடையான எந்தவொரு தொடர்போ, சம்பந்தமோ இதுவரை கிடையாது என்பதையும் இங்கு நான் குறிப்பிட்டுச்சொல்ல விரும்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 17. காலத்திற்கேற்ற வடிவில் தமிழ் தற்போது கணினி வழி மெருகேறி வளர்கிறது ; உங்களின் இந்த கேள்வி விகடன் கண்டிப்பாக பரிசீலனை செய்ய வேண்டும் என்பது ஆவா..

  பதிலளிநீக்கு
 18. நேற்றே வாசித்தேன்... கருத்து இடவில்லை...
  நல்ல கடிதம் ஐயா...
  விகடன் பரிசீலனை செய்தால் நல்லது....
  பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 19. ஆகா,,,அருமையானதொரு முன் மொழிவு,,,, வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்/

  பதிலளிநீக்கு
 20. ஆஹா! அருமையான வேண்டுகோள் ஐயா/அண்ணா! விகடன் இதைக் கண்டிப்பாகப் பரிசீலனை செய்து ஏற்கும்! பாருங்கள்! நம்பிக்கை உள்ளது! நல்லகாலம் பிறக்குது நல்லகாலம் பிறக்குது! நல்லது நடக்க உள்ளது வலையுலகிற்கு. முன் கூட்டியே உங்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் உங்கள் முயற்சியின் வெற்றிக்கு!!!

  பதிலளிநீக்கு
 21. பத்திரிகைகள் பல படைப்பாளிகளை மதிப்பதில்லை என்பது யாவரும் அறிந்தது. அங்கு ஒரு படைப்பை அனுப்பினால் முடிவு தெரியவே மாதக்கணக்கில் ஆகும். இப்போது வலைப்பதிவர்களின் ட்வீட்ஸ், ஸ்டேட்டஸ்களை எடுத்துப் போடாத பத்திரிகை இல்லை. விகடனிடம் ஏன் கெஞ்ச வேண்டும் என்று புரியவில்லை. அவர்கள் அங்கீகரித்தால்தான் மரியாதையா? அங்கெல்லாம் ஏற்கனவே இல்லாத அரசியலா!

  பதிலளிநீக்கு
 22. நல்ல விஷயம் முன் வைத்துள்ளீர்கள் ! தற்போதைய சமூக வலைத்தளங்களுக்கான வரவேற்பும் நறுக்கென்று எழுதபவர்களே அவர்களும் படிக்க வைக்க முயல்கின்றனர். இத்தகைய ஒரு அங்கீகாரம் எழுதுபவர்களை நிச்சயம் ஊக்கப்படுத்தும்.

  பதிலளிநீக்கு
 23. நல்ல வேண்டுகோள். அதே வேளையில், வலைப்பதிவாளர்களும் தங்கள் பொறுப்பினை உணர்ந்து, தரமான பதிவுகளை பதிவு செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு