குழந்தையைக் கொன்ற கொடுங்கோலன் வெங்கடாசலபதியிடம் என்ன வேண்டியிருப்பான்?


நாக்கு நீண்ட நரி
பல்லில் விஷம் தடவிய பாம்பு
கண்ணில் கொடுமை காட்டும் கழுகு
உடம்பெல்லாம் கொழுப்பெடுத்து ஆடும் ஓநாய்
சொட்டு ரத்தத்தையும் விடாமல் 
நக்கித் திரியும் சொறிநாய்

 இதெல்லாம் ஒன்று சேர்ந்து வந்ததுதான்
ராஜபக்ஷ எனும் நரமிருகமோ
(சிங்கம் புலி என்று சொல்லி 
அவற்றின் வீரத்தை நான் இழிவு செய்ய விரும்பவில்லை
அதற்கும் இங்கே சிவப்புக் கம்பளம் விரிக்க அலையும்
சில அ-மனிதர்களை என்ன சொ்ல்ல?)

என்ன கொடுமையடா பாவி!
அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்...
ஏது பற்றியும் அறியாமல்,
பால்வடியும் முகம் கூட மாறாமல்
எதையோ தின்று கொண்டிருக்கும் 
அந்த அப்பாவித்தனத்தைப் பார்
அந்தக் குழந்தை என்ன செய்ததடா பாவீ!

அதைக் கொன்று ரத்தம் குடித்து
நீ எதைச் சாதித்து முடிததாய்?
உன் ரத்தப் பசி 
லட்சக்கணக்கில் எங்கள் மக்களைக்
கொன்று முடித்தும் 
ஆறவில்லையென்று
குழந்தையையும் தின்று முடித்தாயா?

உனக்குக் கோபமென்றால் 
ஒரு குழந்தை கூட உயிருடன் இருக்கலாகாதா?
அது -
ஒருவேளை பிரகலாதனாக வந்திருக்குமோ 
என்று அச்சமா?
அப்படியானால் நீ கொடுமைக்கார அரசன்தான் 
என்றுனக்கு புரிந்து விட்டதோ

பிரபாகரனுடன் 
கருத்து வேறுபாடுள்ளவர்களும்
ஏற்க மறுக்கும் இந்தக் கொடுமையை 
ஏனடா செய்தாய்?

எங்கள் ஊரில் பிரியாணி தின்றால்
சோடா குடிப்பார்கள் பீடா போடுவாரகள்

உங்கள் ஊரில் மட்டும்
குழந்தையைக் தின்றுவிட்டுக்
கோவிலுக்கு வருவீர்களோ?

வெங்கடாசலபதி என்ன
விவரம்கெட்ட சாமியா?-உன்
விருப்பமறிந்து
வேண்டிய வரம் கொடுக்க?

விடுதலை கேட்ட நெல்சன் மண்டேலாவும்
சிறையில் அடைத்த கிளார்க் எனும் அரக்கனும்
ஒரே கர்த்தரைத்தான் கும்பிட்டார்கள்
கர்த்தர் குழம்பிப் போனார்

ஈராக் பாயும் அவரை அழிக்கத் துடித்த
ஈரான் பாயும் ஒரே அல்லாவைத்தான் தொழுதார்கள்
அல்லா குல்லாவை எடுத்துவிட்டு
தலையைச் சொரிந்துகொண்டார்.

வைணவரை அழிக்க சைவரும்
சைவரை அழிக்க வைணவரும்
திட்டமிட்ட போதெல்லாம்
இந்துச் சாமிகள் எல்லாருமே
நொந்துதானே போயிருப்பார்கள்?

எண்ணாயிரம் சமணரைக்
கழுவில் ஏற்றிய காலத்தில்,
கண்ணாயிரம் கொண்ட தாய்
-சம்பந்தருக்குப் பால்நினைந்தூட்டிய பார்வதி-
பார்த்துக்கொண்டுதானே இருந்தாள்?

லட்சம் லட்சமாய்
கொன்று முடித்த கொடுங்கோலன்
பிள்ளை ரத்தத்தையும்
அள்ளிக் குடித்த பெரும்பாவி

இந்தியா வந்து-
வெங்கடாசலபதியிடம்
என்ன வேண்டியிருப்பான்?

அவன் என்ன இழவாவது
வேண்டியிருக்கட்டும்

அதே வேங்கடத்தானை
வேண்டிக் கிடக்கும் எம் மக்கள்
இன்றில்லாவிட்டால் நாளை...
நாளையில்லாவிட்டாலும்
இன்னொருநாள் பொங்கி எழுவார்கள்-

எங்கள் பிள்ளைகளைக் கொன்று தின்ற
வாயை ஒருநாள் கிழித்தெறிவாரகள்
எங்கள் பெண்டுகளின் யோனியைக் குதறிய
குறிகளை ஒருநாள் குலையறுப்பார்கள்
எங்கள் நிலத்தைப் பிடுங்கிய
கைகளையெல்லாம் 
மொத்தமாய் முறித்துப் போடுவார்கள்
உரிமையைப் பறித்த கொடுமைக்கு ஒருநாள்
ஒன்றுக்குப் பத்தாய் பதிலடி கொடுப்பார்கள்

உன் வம்சம் மட்டுமல்ல
உன்னைப் போல எண்ணங்கொண்ட
அத்தனை பேரின் ஆணவத்திற்கும் ஒருநாள்
புத்தரின் பேரிலேயே புதைகுழி தோண்டுவார்கள்!

நீ வேண்டிக்கொண்ட
வெங்கடாசலபதி
அதையும் பார்த்து ரசிப்பார்...
பாரடா பார்!
பாவி கொடுங்கோலா!

சிறுவனைக் கொன்ற
சிறுபொறி ஒருநாள்
பெருநெருப்பாகும்
அதில் நீ
பற்றி எரிவாய்... 
எரிந்தே அலறி அலறி அழிந்து போவாய் 
பார்!
அதில் உனக்கு
இறுதிச் சடங்கு நடத்த
உன் எலும்பும் கூட மிஞ்சாது,
ஒரு பிடிச் சாம்பலும் கூடக் கிடைக்காது! போ! 

‘‘காற்றின் குரல்’’ - இசையுடன் கவிதைகள்


‘‘காற்றின் குரல்’’
இசையோடு இணைந்து சிறப்பு ஒலிகளோடு சேர்ந்து...
------------------------------------------------  
கவிஞர் ஜெயபாஸ்கரன் கவிதைகள்
------------------------------------------------
கவிதைகள்    வழங்கியவர்கள்
1.கடல் -       கவிஞர்இளம்பிறை
2.ஆலமரம் -   கவிஞர் ஜெயபாஸ்கரன்
3.என்னைப் பெறாத அன்னை – வீ.க.த.பாலன்
4.குழந்தைகள் - பேரா. தென்காசி மீனா
5.மருத நிலம் - பேரா. பர்வீன் சுல்தானா
-----------------------------------------
தொகுப்புரை – ஏகா.இராஜசேகர் 
(பண்பலை அறிவிப்பாளர்)
--------------------------------------
இசை – அ.தட்சிணாமூர்த்தி
ஒலிப்பதிவு- வே.தனபதியின் “மேழிஒலிப்பதிவகம்
தயாரிப்பு – ஜெகமதி கலைக்கூடம்
தொடர்புக்கு – 9444956924
மின்னஞ்சல்- kaniyamudhan25@gmail.com 
------------------------------------------------------------ 
இணைப்புக்கு
http://www.kavignarjayabaskaran.com/
கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டு இவாங்கிக் கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன்.
                   --------------------------------------------------

“ஞானாலயா“ புதுக்கோட்டையில் ஒரு புத்தகக் கோட்டை


‘‘ஞானாலயா’’
  
புதுக்கோட்டையில் ஒரு 
புத்தகக் கோட்டை


   புத்தகக் காதலர்      
  மிழ்நாட்டின் மிகப்பெரிய தனியார் நூலகங்களில் இரண்டாவது இடம்பெறும் ஒரு மாபெரும் அறிவுலக அமுதசுரபி எங்கள் ஊரில் இருப்பது எங்கள் ஊரில் பலருக்கும் தெரியாது. ஆனால், உலகம் முழுவதுமிருந்து புதுக்கோட்டையை நாடிவரும் எந்த்த் தமிழரும் அறிந்து வைத்துக்கொண்டு, “ஞானாலயா போக வேண்டும் என்று தமது பயணத்திட்டத்திலேயே குறித்து வைத்திருந்து, போய் வரும் இடமாக இப்போதும் இருப்பது எங்கள் ஊரின்- புதுக்கோட்டையின்- பெருமை.

  தமிழ்நாடு அரசின் கல்வித்துறை கணித ஆசிரியராகத் தொடங்கி, முதுகலைத் தமிழாசிரியராகி, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகி ஓய்வுபெற்ற திரு பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்

  திரு பா.கி.அவர்களுடன் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றிய போதே சாதி-மதங்களைக் கடந்து வாழ்க்கையிலும் இணைந்த திருமதி டோரதி அவர்கள் பின்னர் கல்லூரித் தாவரவியல் பேராசிரியராகவும், அரசுக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் 

  1959இல் தொடங்கிய புத்தக சேகரிப்பை ஞானாலயாவாக மிகப்பெரிய ஆய்வுநூலகமாக வளர்த்து, இருவரும் ஓய்வுபெற்றபோது வந்த பணம் ரூ.11லட்சத்தையும் இந்த ஞானாலயா வளர்ச்சிக்கே செலவிட்டு (மிகப்பெரிய தனிவீடு) இன்றும் பயன்அறிந்தோர்க்குப் பழுமரமாக இருக்கும் ஞானாலயா பற்றிய -16நிமிடம் ஓடக்கூடிய- செய்தித் தொகுப்பை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்.

  பாரதியாரின் முதல் கவிதையான தனிமை இரக்கம்வெளிவந்த ஞானபாநு உள்ளிட்ட ஏராளமான -முதல்பதிப்பு- மூலநூல்கள்...  பாரதியார பற்றி மட்டும் சுமார 1500 நூல்கள், திருக்குறள் பற்றி மட்டும் பலமொழிபெயர்ப்பு உள்பட அத்தனை உரைகளுமாய 1500 நூல்கள் என

1,75,000 தமிழ்நூல்கள்...!
மற்றும் பல்லாயிரம் அரிய ஆங்கில நூல்கள்…!

   1920முதல் தமிழில் வந்த சிற்றிதழ்களின் தொகுப்புகள்... என லட்சக் கணக்கான பத்திரிகை நூல் பிரதிகள் அவ்வளவும் வகைப்பட அடுக்கி வைக்கப்பட்டு ஆய்வாளர் கேட்ட உடனே எடுத்துக் கொடுக்க்கூடிய வகையில் தனிவீடு! நகலச்சு வசதியுடன். 

வீடே நூலகம்.... நூலகமே வீடு!
 ஞானாலயா பற்றி இன்னும் பலபத்திரிகைத் தகவல்கள் உள்ளன. 
 அவற்றில் ஒன்று –
  THE HINDU – METRO PLUS – WEEK END  (Dated - October 09,2010) பார்க்கலாம்.
------------------------- 
தொடர்பிற்கு
  “ஞானாலயா“ திரு.பா.கிருஷ்ணமூர்த்தி 
வலைப்பக்கம் -
http://www.gnanalaya-tamil.com/
அலைபேசி – 9965633140  
தொலைபேசி எண் –04322 221059

வேளாண் கல்லூரியில் தமிழ்விழா!

தமிழ்ப் பயிர் வளர்க்கும் அரசு வேளாண் கல்லூரி!

திருநெல்வேலியிலிருந்து 15கி.மீ.
ஆனால் அது
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்.

கிள்ளிகுளம்

அங்கிருக்கும் அரசு வேளாண் கல்லூரி முத்தமிழ் விழா
சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள்...
அலட்சியத்துடன்தான் போனேன்

கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி
தஞ்சை மருத்துவக் கல்லூரி உட்பட....

எத்தனை நூறு கலைக்கல்லூரிகள் பார்த்தாச்சு...

இவர்கள் என்ன புதிதாகச் செய்துவிடப் போகிறார்கள் என்னும் அலட்சியத்துடன்தான் போய் நெல்லையில் இறங்கினேன்.

இரவு 10மணிக்குமேல்- நான் போய் இறங்கிய சில நிமிடங்களில்
“அய்யா எங்கய்யா இருக்கீங்க?” என்று அழகிய தமிழில் அழைப்பு!
அவர்களை அடையாளம் சொல்லச் சொன்னால்...
“அய்யா நாங்க பாத்துட்டோம்யா... அப்படியே திரும்பிப் பாருங்க... உங்களுக்கு நேர் பின்னால 2பேரு வேட்டிகட்டிக்கிட்டு...”

திரும்பினால் ஆச்சரியமாய்...
தழையத் தழைய பட்டுவேட்டியுடன் இளைஞர் இருவர்.
ஒருவர் என் பெட்டியைப் பிடுங்கப் பார்க்க
என் இயல்பில் மறுத்துவிட்டு “வண்டி எங்க நிக்கிது?“ என்று கேட்க...
பொலிரோ கதவை ஒரு மாணவர் திறக்க,
“அய்யா உட்காருங்களய்யா” இன்னொருவர் சொல்ல...
எனக்கு அப்போது தொடங்கிய வியப்பும் மகிழ்ச்சியும்
அடுத்த நாள் மதியம் விழா முடிந்து என்னைத் திரும்பவும்
நெல்லையில் கொணடுவந்து விட்ட வரை மாறவே இல்லை...

கல்லூரி வாசலில் பெரீய்ய்ய திருவள்ளுவர் பதாகையுடன் விழா அழைப்பு
உள்ளே திரும்பினால் சிலம்புடன் கண்ணகி... அந்தப்பக்கம் பரதப் பதாகை

முத்தமி்ழ் விழாவாம்....  அசத்திவிட்டார்கள் வேளாண்கல்லூரி மாணவர்!

காலையில் கல்லூரி முதல்வர் வந்து கூடஇருந்து காலை உணவு!
சிறப்பு விருந்தினருக்கான கௌரவமாம்!
ஒவ்வொன்றிலும் பார்த்துப் பார்த்துச் செய்து வியப்படைய வைத்தார்கள்!

விழா வாசலில் -
வரவேற்கும் மாணவியர் அழகான புடவைகளில் புன்னகைக்க...
அது இயல்புதானே என்று பார்த்தால் பெரும்பாலான விழாக்குழுப் பெண்கள் புடவையிலேயே இருப்பதைப் பார்த்து வியந்தும் மகிழ்ந்தும் போனேன்...

விழாமேடையில் இருந்த இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டும் கோட்டும் பேண்ட்டும் போட்டு மிரட்டினார்கள்...

உண்மையிலேயே தமிழ்வழியில் படிக்காத -படிக்க முடியாத- அரசு ஏற்பாடு இல்லாததால்- ஆங்கில வழியிலேயே அவ்வளவு பேரும் தகுதி-மதிப்பெண் அடிப்படையில் தேர்வு பெற்றிருந்ததால் அவ்வளவு ஒழுங்கு நேர்த்தி!

நான் சிட்டுக் குரு்வியே சிறகை விரி! எனும் தலைப்பில் பேசினேன்.

நகைச்சுவைக்குக் கூட அளவாகத்தான் சிரித்தார்கள் என்றால் பாருங்கள்

பிற கல்லூரிகளைப் போல அல்லாமல் பொறுப்பு முதல்வர் அவர்களும், பேராசிரிய நண்பர்களும் இயல்பாகப் பேசினார்கள்...

மொத்தத்தில் -
தமிழ் மணம் கமழ்ந்த தமிழ்விழா!
என் மனம் கவர்ந்த கிள்ளிகுளம் வேளாண்கல்லூரி முத்தமிழ் விழா!

எதிர்கால இந்தியா இவர்கள் கையில் பத்திரமாக முன்னேறும்!
வாழ்க கல்லூரி நிர்வாகம், வளர்க அந்தச் சிட்டுக் குருவிகளின் சிறகுகள்!


---------  நன்றி- 
முகமது இக்ஷான்
நிகழ்ச்சிப் பொறுப்பாளர் -உண்மையிலேயே அழகான
மாணவர் ஒருங்கிணைப்பாளர் ----------


விநோதினி அநியாயச் சாவு – நெஞ்சில் ஒரு முள்!


விநோதினி அநியாயச் சாவு – நெஞ்சில் ஒரு முள்!
தினமும் காலையில் பத்திரிகை படிக்கத்தான் செய்கிறோம்.
13-02-3013 இன்றைய செய்தி ஒன்று ரொம்பவே பாதித்துவிட்டது...

அமிலவீச்சில் காயமடைந்த விநோதினி சாவு – தினமணி 

ஆண் உலகில் பெண் ஒரு “துய்க்கப்படு பொருளாகவே பார்க்கப்படுவதன் விளைவாக எத்தனை எத்தனைப் பெண்கள் யுகம் யுகமாகப் பாதிக்கப் படுகிறார்கள்! அவளுக்கும் உயிர் உண்டு, அவளுக்கும் உணர்வு உண்டு அவளும் நம்மைப்போல் ஒரு மனிதஇனம்தான் என்னும் அடிப்படை அறிவு கூட இல்லாத ஆண்களால் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பெண் இனம் இப்படி அமில வீச்சாலும், பாலியல் வன்கொடுமையாலும் அழியப் போகிறதோ தெரியவில்லையே!
காரைக்காலைச் சேர்ந்த அந்தப் பெண் பொறியியல் படித்துவிட்டு, குடும்ப வருமானத்திற்காகவே வேலைக்கும் போய்கொண்டு, காதலை நினைக்காமல் இருந்தபெண்ணை சுரேஷ் என்னும் நாய் தன்னைக் காதலிக்க வற்புறுத்த, அடித்துப் பழுக்க வைக்க அதுவொன்றும் இரும்பல்லடா இதயம் காதல் என்பது தானாகப் புக்கும் காட்டுப் பு என்பதை அந்த நாய்க்கு எப்படி விளக்க முடியும்? நக்குற நாய்க்கு செக்குத் தெரியுமா, சிவலிங்கம் தெரியுமா?
அந்த சுரேஷ் – நம்சமூகத்தால்தானே உருவாக்கப் பட்டிருக்கிறான்!
பெண்ணுரிமையை சொல்லித்தராத கல்வி முறை...
பெண்ணின் உணர்வுகளை மதிக்கக் கற்றுத்தராத குடும்ப அமைப்பு...
பெண்ணை “ஆண் அனுபவிப்பதற்கான ஒரு பண்டம்என்றே சொல்லிச்
சொல்லிப் பாடி ஆடும் நமது திரைப்படங்கள்...
  பெண் என்பவள் ஆணின் கொடுமைகளைச் சகித்துக்கொண்டும், அதோடு  
   அவனுக்காகவே , அழுகொண்டும் வாழவேண்டியவள்    
    என்பதையே மீண்டும் மீண்டும் சொல்லி அழும் தொ.கா.தொடர்கள்... 
  “பானமடி நீ எனக்கு-பாண்டமடி நான்உனக்கு“ எனபபாடிய பாரதி உட்பட  “ஆர்லிக்ஸா மாறிவிட நாரெடி என்ன அப்படியே சாப்பிட நீ ரெடியா?” என்று பெண்ணே கேட்பதாக எழுதும் திரைப்படக் கவிக்கிறுக்கன்கள்
  எல்லாவற்றுக்கும் மேலாக இதையெல்லாம் “அரசியல்ல இதெல்லாம்
சகஜமப்பா“ என்பது போல எடுத்துக்கொள்ளும் ஆணாதிக்க அரசியல்
என எத்தனை எத்தனை புறக்காரணிகள்...
எல்லாம் எழுதி என்ன ...
 என்னென்ன கனவுகளோடு வாழ்க்கைக் கணக்குகளைப் போட்டு வைத்திருந்தாளோ... எல்லாம் ஒரு அமிலவீச்சில் நாசமாகி விட்டதே!

டெல்லிப் பெண் சாவும் கொடுமையானதுதான் ஆனால், அதற்குச் சற்றும் குறையாத கொடுமையை 3 மாதமாக அனுபவித்தும் இறந்து போன விநோதினியின் அநியாய மரணம் தந்த புண் ஆறவே ஆறாது...
அதற்குத்தந்த முக்கியத்துவத்தை நமது ஊடகங்கள் இதற்கும் தந்திருந்தால் ஒரு வேளை நிதி சேர்ந்து விநோதினியைக் காப்பாற்றியிருக்கலாமோ என ஒருபக்கம் பெருமூச்சு வருவதைத் தவிர்க்க முடியவில்லையே!


முவ அவர்கள் எழுதிய ஒரு நாவலின் தலைப்பு “நெஞ்சில் ஒரு முள்”  அந்தத் தலைப்புத்தான் இந்த நேரத்தில் நெஞ்சில் குத்துகிறது...  விஸ்வரூபம் சூழ்நிலையில் ஒரு காமெடி...


பய புள்ளைக என்னமாத்தேன் கற்பனை பண்றாய்ங்கெ....!


பார்த்துச் சிரிச்சுப்போட்டு, போயிரணும்...
கோர்ட்டு கேசுன்னு கௌம்பினிய... அம்புட்டுத்தேன்
சொல்லிப்புட்டேன்... ஆமா...

யு-ட்யுப் இணைப்பில் காண வாங்கங்கோ...
http://www.youtube.com/watch?v=A8Hmajg0Awg

குறிப்பு -
மன்னிக்க வேண்டும்... இதை யார் தயாரித்ததென்றே தெரியவில்லை நண்பர்கள் வழியாகத் தனக்கு வந்ததை எனக்கு அனுப்பியதாக நண்பர் களப்பிரன் தெரிவிக்கிறார்...
தயாரிப்பு மற்றும் குரல்கள் பற்றித் தெரிந்தவர்கள் சொன்னால் அதை வெளியிடலாம்...