கமல் எழுதிய கவிதைகள்!

புதியதலைமுறை இதழ் ஆசிரியர் எழுத்தாளர் மாலன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு “திசைகள்“ இணையஇதழ் வெளிவந்தபோது -10ஆண்டுகள் இருக்கும்- 
அதில் ஒரு கமல் கவிதை 
படித்ததாக நினைவு
(அ) வேறு இதழா நினைவில்லை.

ஆனால் தலைப்பு நினைவில் இருக்கிறது
“பீ அள்ளும் தாயம்மா” 
இதுதான் கமல்!

அவர் எழுதியதாக இப்போதும் 
சில கவிதைகள் உள்ளன.
கூகுளார் அருளால் தேடிப் பிடித்தேன் –
நீங்களும் படிக்கலாம்.


நான் வேறு விளக்கம் எழுதி           
கமலை அவமதிக்க விரும்பவில்லை
------------------------------------------------------------------------------------------------------------- 

திரைப்படம் பேசினால்
அரசியல் தெரியாதோ என்பீர்!

அரசியல் பேசினால்
ஆறடி தள்ளி நிற்பீர்!

மொழிப்பற்று கொண்டால்
ஆங்கிலம் புரியாதோ என்பீர்!

ஆங்கிலம் பேசினால்
படித்த திமிர் என்பீர்!

பகுத்தறிவு பேசினால்
கடவுள் பிடிக்காதா என்பீர்!

கடவுள் நம்பிக்கை கொண்டால்
கர்னாடகம் என்பீர்!

சகோதரத்துவம் சொன்னால்
நீங்கள் கம்யூனிஸ்டா என்பீர்!

ஜனநாயகம் பேசினால் நாட்டின்
இறையாண்மைக்கு எதிரானது என்பீர்!

காதல் பிடிக்காதென்றால்
ஆண்மையில் ஐயம் கொள்வீர்!

காமம் பற்றி பேசினால்
காதுகளைப் பொத்திக்கொள்வீர்!

மெய்ஞ்ஞானம் பேசினால்
விஞ்ஞானம் அறியீரோ என்பீர்!

விஞ்ஞானம் பேசினால்
விலகித் தள்ளி நிற்பீர்!

ஓடி ஓடி உழைத்தாலும்
பணத்தாசை பிடித்தவன்!

பொருள் வேண்டாமென்றாலும்
பிழைக்கத் தெரியாதவான்!

எதிர்த்துப் பேசினால்
அதிகப்பிரசங்கி!

பேசாமலிருந்தால்
கல்லுளிமங்கன்!

எத்தனை கடினம் இவ்வுலகில்
நான் நானாய் வாழ்வதில்.....!!!!

பத்ம ஸ்ரீ கமலஹாசன்
( காண்செவிக் குழுவில் வந்தது )
  
கண்ணோடு கண்ணை கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை

உடனே கையுடன் கைக்கோர்த்தாளா ?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை

கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினளாயின்
காசை மதியாள் எச்சரிக்கை

உன்னுடன் இருப்பது சுகமேன்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கொள் 

கூட்டல் ஒன்றே குறி என்றானபின்
கழிவது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர் ?
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்! 

முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவே எனக்கொள் 

காமம் எனப்படும் பண்டை செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்

இப்பெண்ணுரைக்கு எதிராய் ஆணுறை ஒன்றை
ஏற்ற துணியும் அணி சேர்த்துக்கொள் 

இயற்ற துணியும் அணி செர்த்துக்கனுமா?
துணிவே அணியும் துணை என்றானபின்
அணியொன்று எதற்கு? தனியே வருவேன் 

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய் கழுத்தைகவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்

குழந்தை வாயை முகர்ந்தது போல
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்

காம கழிவுகள் கழுவும் வேளையும்
கூட நின்றவன் உதவிட வேண்டும்
சமையலின் போதும் உதவிட வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திட திண்தோள் வேண்டும்

மோதி கோபம் தீர்க்க வசதியாய்
பாறை பதத்தில் நெஞ்சும் வேண்டும்
அதற்கு பின்னால் துடிக்கும் இதயமும்
அது ரத்தம் பாய்ச்சி நெகிழ்த்திய சிந்தையும்

மூளை மடிப்புகள் அதிகம் உள்ள
மேதாவிலாச மண்டையும் வேண்டும்

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கி புழங்கிட பணமும் வேண்டும்

நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்
எனக்கென சுதந்திரம் கேட்கும் வேளையில்
பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்

இப்படி கணவன் வரவேண்டும் என நான்
ஒன்பது நாட்கள் நோன்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலக்ஷ்மிஎன 
கடும் நோன்பு முடிந்தும் தேடிப்போனேன் 

த்ரிஷா: தேடி எங்க போனா அந்த பொண்ணு
கமல்: பீச்சுக்குதான்

பொடி நடை போட்டே இடை மெலியவென
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மண துறவிகள் கூடிட கண்டேன்

த்ரிஷா: எங்க? TV’ லையோ ?
கமல்: shhhhhhhhhhhhhh....

மூத்த அக்காள் கணவனுக்கு
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையிலே அவன்
சக்காளத்தி வேண்டும் என்றான்

எக்குலமானால் என்ன என்று
வேற்று மதம் வரை தேடிப் பார்த்தேன்

வரவர புருஷ லக்ஷணம் உள்ளவர்
திருமண சந்தையில் மிகமிக குறைவு

வரம்தர கேட்ட வரலக்ஷ்மி உனக்கு
வீட்டுகாரர் அமைந்தது எப்படி?

நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது ?
உறங்கி கொண்டே இருக்கும் உந்தன்
அரங்கநாதன் ஆள் எப்படி?

பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
இதுவும் உதுவும் அதுவும் செய்யும் 
இனிய கணவர் யார்க்கும் உண்டோ?

உனக்கேனுமது அமையபெற்றால்
உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல் எனக்கும் அமையசெய்யேன்
ஸ்ரீ வரலக்ஷ்மி நமோஸ்துதே...

படம்: மன்மதன் அம்பு
கவிதை: கமல் ஹாசன்
பாடியவர்கள்: கமல் ஹாசன், த்ரிஷா
இசை: தேவிஸ்ரீ பிரசாத்

படமும் கவிதையும் வெளியீட்டுக்கு நன்றி –
-------------------------------------------------------------------- 
கோவை வானம்பாடிக் கவிஞர் புவியரசு அவர்களின்
கவிதைநூல் வெளியீட்டு விழாவில் கமல் வாசித்த கவிதை இது -
மனித வணக்கம்
தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா,  தகப்பா!
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா,  தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு!

தமக்காய்,  தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடி போனாயோ?

மனைவி,  காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.

மகனே,  மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!

மகளே,  மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல..
எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை,
காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

நண்பா,  நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா,  பகைவா!
உன் ஆடையெனும் அகந்தையுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.
மதமென்றும், குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா,  வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.
ஆம்,
நாளை உன் வரியில் நான் தெரிவேன்.

அன்பன்
-
கமல்ஹாசன்
நன்றி - http://kuttipisasu.blogspot.in/2007/11/blog-post_22.html

------------------------------------------------------------------ 
அய்யா நீர் புலவர்தான்! 
யாரங்கே! அந்த ஆயிரம் பொற்காசுகளை எடுத்து 
இந்தச் சொல்-கருமி கையில் கொடு!
----------------------------------------------------------------- 

12 கருத்துகள்:

 1. முதல் கவிதை படித்த நினைவு இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 2. இவற்றில் முதல் கவிதை மட்டுமே அறிமுகம் மற்றவை இப்போதுதான் பார்க்கிறோம். பல இடங்கள் புரியவில்லை...ஒரு வேளை எங்களுக்குத்தான் அறிவு போதவில்லையோ.

  பதிலளிநீக்கு
 3. "திசைகள்" பத்திரிகை, மாலன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வந்தது தெரியும்...
  ஆனால்... இணைய இதழ்???

  பதிலளிநீக்கு
 4. //புதிய தலைமுறை இதழ் ஆசிரியர் எழுத்தாளர் மாலன்//

  இப்போதும் அவர்தான், அதன் ஆசிரியரா?

  பதிலளிநீக்கு
 5. நண்பர்கள் மன்னிக்க வேண்டும். என் வலைப்பக்கத்தில் பின்னூட்டத்திற்குப் பதிலளிக்கும் இடம் அடைபட்டுள்ளது. எனவே மொத்தமாகப் பதில்தருவதைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்-
  திரு ஸ்ரீராம் -நன்றி.
  திரு துளசிதரன் - கவிதைன்னா அப்படித்தான்.
  திரு 1990இல் அச்சிதழாக வந்த திசைகள் 2001இலிருந்து முதல் ஒருங்குறி (யூனிகோடு) இணைய இதழாக வெளிவந்தது. பார்க்க -http://maalan.co.in/
  திரு வேகநரி - வேகத்தில் ஐ, ஜ ஆகிவிட்டதே!

  பதிலளிநீக்கு
 6. ஐய்யா, தமிழ் எழுத்து பிழையை மன்னித்துவிடுங்கள்.

  பதிலளிநீக்கு
 7. கொஞ்சம் புரிந்தும், நிறைய புரியாமலும் இருப்பதுதானே கமலஹாசனின் கவிதைக்கு அழகு!

  பதிலளிநீக்கு
 8. வாசிக்க வேண்டிய கவிதைகளை தேடிப்பிடித்து போடுங்கள் சார்.. அதைவிட்டுவிட்டு உலகநாயகன் என்பதால் அவர் வாந்து எடுப்பதை எல்லாம்...

  பதிலளிநீக்கு
 9. ஐயா!நல்லவை எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்துக் பகிரவது பாராட்டுக்குரியது கவிதைகள் எனக்கும் பிடிக்கும். பீயள்ளும் தாயம்மாள் கவிதையை ஒரு முறை விஜய் டிவியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் ஏற்ற இறக்கத்துடன் வாசித்துக் காட்டினார். என்ன ஒரு பொருள் பொதிந்த அற்புதமான கவிதை. என் வலைப்பக்கத்த்தில் காணொலியாகவும் வரிகளாகவும் பகிர்ந்துள்ளேன்
  கமலஹாசன் கவிதை

  பதிலளிநீக்கு
 10. ஐயா, கபாலி படத்துக்கு வரும் அலப்பறைகளை பார்த்த பின்பு அறிந்து கொள்ள முடிகிறது, நீங்க வெளியிட்ட கமல்ஹாசன் கவிதை இதை விட மேல் என்பது.

  பதிலளிநீக்கு
 11. நான் இப்போ முதல் தடவையாக படிக்கிறேன் நன்றாக இருக்கிறது

  பதிலளிநீக்கு