எளிய தமிழ் இலக்கண வகுப்பு - காணொலி இணைப்பு

                    காணொலிப் பதிவு!  காண வருக!

        ------- 

        TNPSC, TNUSRB, TRB, UPSC உள்ளிட்ட,  தமிழ்நாடு அரசின்

      அரசுப் பணிப் போட்டித் தேர்வு எழுதப் போகும் மாணவர்கள்

      மட்டுமின்றி, பொதுவான தமிழார்வலர்கள், பெற்றோர்கள்

       எழுத்தாளர்கள் அனைவரும் பயன் பெறும்படியாக 

தமிழ் இலக்கணக் குறிப்புகளை, எளிமையாக

      நேரலை வகுப்பில் சொல்லி இருக்கிறேன்.

      அகத்திணைகள் ஐந்து+இரண்டு பிரிவு ஏன்? விளக்கம்

      புறத்திணைகள் பன்னிரண்டு என்னென்ன? விளக்கம்

     கைக்கிளை, புறத்திணையில் வருவதெப்படி? ஏன்?

      குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை- விளக்கம்

            மற்றும்

        6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையான 

       தமிழ்ப்பாட நூல்களில் உள்ள 

இலக்கணக் குறிப்புகள்  

வருக – தமிழ் பருக – 

நண்பர்களுக்கும் இவ்வாய்ப்பைத் தரப் பகிர்க 

அன்புடன்,

நா.முத்துநிலவன்,

      புதுக்கோட்டை – 622 004

      காணொலி இணைப்புக்கு அழுத்துக –

  https://youtu.be/ntM02-oc9Sk

புதுக்கோட்டையில் ஒரு கீழடி – பொற்பனைக் கோட்டை - இந்து தமிழ் நாளிதழில் வந்த எனது கட்டுரை

  (இக்கட்டுரையை 03-9-2021 அன்று இந்து-தமிழ் திசை நாளிதழில் வெளியிட்ட ஆசிரியர் குழுவிற்கு  எனது நன்றி  

 வெளிவந்த கட்டுரையில் பக்க அளவு, வடிவச் சுருக்க நோக்கில் வெட்டுப் பட்ட ஒரு சில சொற்றொடர்களுடன் மேலும் புதிய சிற்சில தகவல்களைச் சேர்த்தும், ஒக்கூர் தொடர்பான எனது தகவல் பிழையைத் திருத்தியும்   இங்கு னது இந்த வலைப்பக்கத்தில் வெளியிடுகிறேன்.)

       வாளோடு முன்தோன்றி மூத்த குடிஎன்று, தமிழ்க் குடியின் தொன்மையை, புறப்பொருள் வெண்பாமாலை எனும் இலக்கண நூலின் மின்னல் வெண்பா உதாரணச் செய்யுள் சொன்னாலும், சிந்துவெளி ஆய்வுக்குப் பிறகே, இந்தியத் துணைக்கண்டத்தின் தொன்மையை உலகம் அறிந்தது. சிந்துவெளிக்குப் பிறகு, கீழடி மேல்எழுந்த பின்னரே தமிழர்களின் தொன்மையை உலகம் உணர்ந்து வருகிறது. கீழடியில் கிடைத்துள்ள புழங்கு பொருள்கள் தமிழகத்தில் வேறெங்கும் இதுவரை கிடைக்காதவை என்றால், வேறெங்கும் கிடைக்காத சங்க காலக் கோட்டைஎனும் நம்பிக்கை தருவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொற்பனைக் கோட்டை ஆகும். ஆனால், இங்கு தொல்லியல் ஆய்வு தொடர வேண்டிய அவசியத்தை நாம் உணர்ந்திருக்கிறோமா?  

 பொற்பனைக் கோட்டை  (நன்றி கூகுள் படம்)

தொல்லியல் ஆய்வுகளின் தொட்டில் புதுக்கோட்டை

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், ஆதித் தொல்குடிகள் பயன்படுத்தியகல்லாயுதம்ஒன்று புதுக்கோட்டை அருகில் உள்ள குருவிக்கொண்டான் பட்டி கிராமத்தில்  ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டுள்ளது  

பொ..மு.5000ஆண்டுகள் என மதிப்பிடக் கூடிய தொன்மையுடன், இனக்குழு மக்கள் வாழ்க்கையைக் காட்டக் கூடிய பாறை ஓவியங்கள் திருமயம் கோட்டையில் இருப்பதாக, “புதுக்கோட்டை மாவட்டப் பாறை ஓவியங்கள்நூலாசிரியர் தமிழறிஞர் நா.அருள்முருகன் தொல்காப்பிய ஒப்பீட்டுடன் சொல்கிறார்.

இரண்டாண்டுக்கு முன், புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தைச் சேர்ந்த குறளரசன் எனும் பள்ளிச் சிறுவனால்,  அறந்தாங்கி அருகில் உள்ள அம்பலத்திடல் எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடரி, சுமார் 3,500ஆண்டு முந்திய புதுக்கோட்டைப் பகுதியின் தொன்மை வரலாறு தொடர்வதன் சான்றாகும்! இது இப்போது தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  

புதுக்கோட்டை மாவட்ட வரலாறுஉள்ளிட்ட பல அரிய வரலாற்று நூல்களின் ஆசிரியரும், தொல்லியல் அறிஞருமான  ராஜாமுகமது, சிந்துவெளியில் காணப்பட்ட பானைக் குறியீடு(எழுத்து)களும், புதுக்கோட்டைப் பகுதியில் கிடைத்துள்ள பானைக் குறியீடு(எழுத்து)களும் ஒன்றாக உள்ளதாக வியப்பூட்டுகிறார்! எனில், ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் சிந்துவெளி நாகரிகம் விட்ட இடத்திற்கும் கீழடி நாகரிகம் தொட்ட இடத்திற்கும்இடை நிலமாக, புதுக்கோட்டையின் பொற்பனைக் கோட்டை இருக்கலாம் எனும் ஆவல் மீதூர்வதும் இயல்புதானே?

சங்க காலத்திலிருந்து பொ..13ஆம் நூற்றாண்டுவரையான சோழ பாண்டிய நாடுகளின் எல்லைப்பகுதி இன்றைய புதுக்கோட்டைக்குள் வருவதாலும், வடக்கில் கந்தர்வகோட்டை, தெற்கில் கீழாநிலைக்கோட்டை இருப்பதாலும் பொற்பனைக் கோட்டை பாதுகாப்புக் கருதி கோட்டை-கொத்தளத்துடன் இருந்திருக்கலாம் தானே?

      சங்க இலக்கியத்தோடும் சங்கப் புலவர்களோடும் தொடர்புடைய பற்பல ஊர்ப்பெயர்கள் இப்போதும் புதுக்கோட்டையைச் சூழ இருக்கின்றன. புகழ்பெற்றமுல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே எனும் புறநானூற்றுப் பாடலில் (எண்-242) வரும் ஒல்லையூர் என்பது, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் ஒலியமங்கலம் என இபோது வழங்கப்படுகிறது. இந்த ஒல்லையூரை வென்ற மதுரை அரசர், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என சங்க இலக்கியத்தில் அறியப் படுகிறார். அகநானூறு பாடல்-25, புறநானூறு பாடல்-71 ஆகிய சங்கச் செய்யுள்களைப் பாடியவர் இவரே! இவரது மனைவியான பெருங்கோப் பெண்டு எழுதியதே புறநானூறு 246-எனவும் அறிகிறோம். சங்க இலக்கியத்தில் கிடைக்கும்  குறிப்புகள், இவ்வூரின் சங்க காலத் தொன்மைக்கு இன்றும் சான்றாக உள்ளன.

ஒக்கூர் மாசாத்தியார் பாடியதாக, புகழ்பெற்ற கெடுக சிந்தை கடிதிவள் துணிவேஎனும் புறப்பாடலை(279) உள்ளிட்ட எட்டுப் பாடல்களும், ஒக்கூர் மாசாத்தனார் எழுதிய (அக-14, புற-248 ஆகிய) இரு பாடல்களும்  கிடைத்துள்ளன. இந்த ஒக்கூருடன், வேள்பாரியின் ஊரான பரம்புமலை ஆகிய இரண்டு ஊர்களும் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் இருந்தாலும், புதுக்கோட்டை நகரிலிருந்து ஐம்பதுகி.மீ. தொலைவுகளில் இருப்பதும், முல்லைக்குத் தேர்கொடுத்த பாரியின் நினைவாக இன்றும் பேசப்படுகிறமுல்லைமங்களம்ஊர் புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்குள் திருக்களம்பூர் அருகில் இருப்பதும், பாரியின் நினைவைப் போற்றும் விதமாக, பாரிவிழாவைப் பல்லாண்டுகளாகப் பரம்பு மலையில் நமது குன்றக்குடி அடிகளார் நடத்திவருவதும் கவனத்திற்குரியது.     

உலகப் புகழ்பெற்றயாதும் ஊரே யாவரும் கேளிர்எனும் புறநானூற்றுப் பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாரின் ஊர்தான் இன்றைய மகிபாலன்பட்டி! இதுவும் புதுக்கோட்டை மாவட்ட எல்லை தாண்டினாலும் 50கி.மீ தொலைவில்தான் உள்ளது! இவற்றோடு, ஆவூர், முள்ளுர், குறிச்சி,  குடவாயில் (குடவாசல்), அழும்பில் (அம்புக்கோவில்), எரிச்சலூர் (எறிச்சி), கீரனூர், கீர(ன்)மங்கலம், வளவன்ஊர்,  அவ்வையாப் பட்டி, முல்லை மங்கலம் மற்றும் பட்டி,ஊர் என முடியும் பலநூறு ஊர்ப்பெயர்கள் தொன்மையான ஊர்களாக இருக்கலாம் தானே? இவைஇன்றும் புழங்குவது, அன்றைய சரித்திரத்தின் தொடர்ச்சி, அசைக்கமுடியாத அகச்சான்றாகும்!  

அதேபோல, புதுக்கோட்டைப் பகுதியில் வாழ்ந்த சங்க கால மக்கள் 60கி.மீ. கிழக்கில் உள்ள வங்கக் கடல்வழியே ரோமாபுரியோடு வாணிகம் செய்திருக்கலாம் என்பதற்குச் சான்றாக, பொற்பனைக் கோட்டையின் அருகிலுள்ள கருக்காகுறிச்சி எனும் ஊரில் ரோமானிய நாணயங்கள் கிடைத்திருப்பதும், அவை இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுக்கு முந்தியவை என்பதும் புறக்கணிக்க முடியாத புறச்சான்றாகும்!  

      உலோக காலத்தின் பிற்பகுதியாகக் கருதப்படும் இரும்புக்கால ஆயுதங்கள், அணி-மணிகள், புதை தாழிகள் புதுக்கோட்டையைச் சுற்றிலும்  கிடைத்துள்ளன. பொ..மு.800முதல் பொ..100வரை பெருங்கற்கால நாகரிகம் தழைத்திருக்க வாய்ப்புள்ளதாகத் தொல்லியல் அறிஞர் கருதுகின்றனர். இந்தக் காலத்தையே சங்க காலம் என்று மு.வரதராசனார் உள்ளிட்ட தமிழறிஞர் பலரும் குறிப்பிடுகின்றனர்.

      ஓவியத்திற்கு உலகப் புகழ்பெற்ற சித்தன்னவாசலின் ஏழடிப்பட்டம் குகையில் பிராமி (எ) தொல் தமிழி எழுத்துகள் உள்ளன. மாவட்டம் முழுதும் உள்ள இயற்கைக் குகைக்கோவில்கள், ஏராளமான கல்வெட்டுகளுடன், சமண ஆய்வுக்கு மிகவும்  முக்கியமான சான்றுகளைக் கொண்ட புதுக்கோட்டையில் ஆதிகாலந் தொட்டே தொல்குடிகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதால், இப்போதும் நூற்றுக்கு மேற்பட்ட தொல்லியல்துறைப் பகுதிகள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ளதால், “தொல்லியல் ஆய்வுகளின் தொட்டில் புதுக்கோட்டைஎன்பது மிகையல்ல!

தொன்மை உணர்ந்த தொல்லியலாளர் பதிவுகள்

தொல்லியல் அறிஞரும், ‘இராஜேந்திர சோழன்உள்ளிட்ட புகழ்பெற்ற வரலாற்று நூல்களின் ஆசிரியருமான குடவாயில் பாலசுப்ரமணியன், 2005ஆம் ஆண்டில் பொற்பனைக் கோட்டையில் நடத்திய ஆய்வில், “அழகன்குளம், உறையூர், பூம்புகாரில் கண்ட செங்கல்லும், “பொப்பண்ணக் கோட்டையில் கிடைத்துள்ள செங்கல்லும் ஒரே வகைஎன்றதோடு, இதற்கு, சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரின் பாயிரச் செய்யுள் வரிளையும் இலக்கியச் சான்றாகப் பதிவு செய்துள்ளார்.

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, புதுக்கோட்டையின் தொல்லியல் சான்றுகளைக் கண்டுகண்டு சொல்லிக்கொண்டே இருக்கும் 82வயது இளைஞர் கரு.இராசேந்திரன் அய்யா, பொற்பனைக் கோட்டையை ஆய்வுசெய்ய வேண்டி மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். கீழடிக்காக சட்டப் போராட்டம் நடத்திய கனிமொழிமதி போல, பொற்பனைக் கோட்டைக்கு ஒரு கணபதி சுப்பிரமணியன் கிடைத்தார்! மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அளிக்க, பல்கலைக் கழகமும் ரூ.ஒருலட்சம் நிதி ஒதுக்க, தொல்லியல் பேராசிரியர் இனியன் தலைமையில், திருச்சியிலிருந்து ஒரு குழு ஆய்வுசெய்ய வந்து சேர்ந்தது.


           செம்பராங்கற் படுகையில் இ.இனியன், ஆ.மணிகண்டன்

2021-ஜூலை-30ஆம் தேதி,  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், பொற்பனைக் கோட்டை அமைந்துள்ள ஆலங்குடித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான  சிவ.வீ.மெய்யநாதன் அகழாய்வைத் தொடங்கிவைத்தார் (இந்து-தமிழ்,30-7-2021-செய்தி)  

    ஆட்சியர் தலைமையில் அமைச்சர் தொடங்கி வைத்த அகழாய்வு
 

பல்லாண்டுகளாகப் புதுக்கோட்டை மாவட்டத் தொல்லியல் ஆய்வில் தன்னார்வமாகப் பணியாற்றிவரும் தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆசிரியர் ஆ.மணிகண்டன் குழுவுடன், வேப்பங்குடி ஊராட்சித் தலைவர் ராஜாங்கம் கோட்டைச் சுவரை அடைத்து வளர்ந்திருந்த பெரும் புதர்ச் செடிகளை வெட்டி அகற்றிப் பேருதவி செய்தார். இராமநாதபுரம் மாவட்டத் தொல்லியல் குழுத்தலைவர் ராஜகுரு தலைமையில் சில மாணவர்கள், வேப்பங்குடி கிராமத்து சுபாஷ்சந்திர போஸ் இளைஞர் மன்றத்தினர் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஆசிரியர் ராஜாங்கம், டெய்சிராணி, பீர்முகமது, புதுகைசெல்வா உள்ளிட்டோர், வ்வப்போது வந்து நின்று உதவிகள் செய்தாலும், அகழாய்வுப் பணியில் நேரடியாக ஈடுபடுவோர் –நான் பார்த்த செப்-1ஆம் தேதி- வெறும் ஐந்து பேருக்கும் குறைவே! அரசு ஆணை, நிதிஉதவி கிடைத்தால்தான் அடுத்த கட்டத்திற்கு சரியான ஆய்வுகளை நகர்த்த முடியும் எனும் நிலை!

வேறெங்கும் கிடைக்காத சங்க காலக் கோட்டை-கொத்தளம்!

பொற்பனைக் கோட்டையை ஆய்வு செய்ய வழக்குத் தொடுத்த, கரு.இராசேந்நதிரன் அய்யா, “30அடி உயர மண்கோட்டையும் அதன் மேற்பகுதியின் கொத்தளங்களும் வேறு எங்கும் காணாத அரிய சான்றுகளாக உள்ளன, இவற்றைத் தொடர்ந்தால் கீழடிபோல தமிழரின் சங்க கால நாகரிகம் இங்கும் இருந்ததை உலகம் அறியும்” என்கிறார். இதனாலேயே இவர் வழக்கும் தொடுத்தார்.

வட்ட வடிவில் உள்ள கோட்டை 1.63கி.மீ. சுற்றளவுடன், 50ஏக்கர் நிலப்பரப்பில், நான்கு புறவாயில்கள், மேற்புற வாயில்கள், பத்துஅடி அகல சுற்றுப் பாதைகளில் செம்புராங்கல் பரவியுள்ளது. இடையே அம்பு எய்யும் அறைகள் ஆங்காங்கே (கொத்தளம்) காணப்படுவது முக்கியமானது. இவை, மண் மேடல்ல கோட்டை தான் என்பதை அடையாளப்படுத்த முக்கியமான சான்றாகும் என்கிறார் .மணிகண்டன்.

 பொற்பனைக் கோட்டையின் கோட்டை-கொத்தளம் அருகில்   தொல்லியல் கழக கரு.இராசேந்திரன், ஆ.மணிகண்டன் ஆகியோர்.

படைக் கருவிகளைச் செய்வதற்கான இரும்பு உருக்கு உலை தரைத்தளத்தின் உள்பகுதியில் செம்புராங்கற் படுகைகளில் நிறைய உள்ளதும், இந்த உலை பாறையைத் துளையிட்டு உருவாக்கப்பட்டு உள்ளதும் முக்கியமானது. இந்தப் பகுதிகளில் இரும்பு உருக்கு ஆலைகள் தொடர்ச்சியாக இருந்ததற்கான சான்றுகள் புதுக்கோட்டை மன்னரின் மேனுவல் ஆவணங்களிலும் உள்ளதாகத் தெரிவிக்கும் .மணிகண்டன்,  2019ஆம் ஆண்டே தனது வலைப் பக்கத்தில் து பற்றி விரிவாக எழுதியிருப்பதும் கவனத்திற்குரியது. இது போர்க்களக் கோட்டைதான் என்பதற்கு ஆதாரமாக இதனருகில் செந்நாக்குழி” எனும் இடம் இப்போதும் உள்ளது. செந்நாக் குழி என்பதன் பொருள் சிவந்த நெருப்புக் குழி என்பதால் இரும்பு உருக்கு ஆலை இருந்ததற்கு இதுவே தெளிவான சான்றும் ஆகும்.

தொல்காப்பியப் புறத்திணையும் பொற்பனைக் கோட்டைக் கல்வெட்டும்

தற்போதைய புதுக்கோட்டை நகரின் கிழக்கே ஆறுகி.மீ. தொலைவில் உள்ள பொற்பனைக் கோட்டையில் முக்கோண வடிவில் கிடைத்துள்ள கல்வெட்டில், பசுக் கூட்டத்தைக் கவர நடந்த போரில் கோட்டைக் காவலன் இறந்த செய்தி 2013இல் வெளிவந்த ஆவணம் இதழில், தொல்லியல் அறிஞர் பேரா. சு.இராஜவேலு அவர்களின் குழுவால் பதிவுசெய்யப்பட்டுள்ளது இதனைத் தொல்காப்பியப் புறத்திணையியல், வெட்சிப்போர் கரந்தைப் போர் என பசுக்கூட்டத்திற்காக நடக்கும் போரைவேற்றுப் புலக் களவின் தந்து ஓம்பல்என்று குறிப்பிடும்.  சங்க இலக்கியம் பலவும் குறிப்பாக கலித்தொகையின் பலப்பல பாடல்களில் இது வருகிறது. “ஆநிரை வரும் போர் வெட்சிஎன்றும், “ஆநிரை மீட்கும் போர் கரந்தை” என்றும் நம் இலக்கிய இலக்கணங்கள் குறிப்பிடுவதையும் இதனோடு ஒப்பிடலாம். போரில் மட்டுமல்ல போர் போலும் வீர விளையாட்டிலும் மாடு வருவதுதான் சல்லிக்கட்டு! “கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்” என்பது கலித்தொகை (பாடல்எண்-103). இதில் இருந்துதான் பழந்தமிழரின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு நடந்ததற்கான தரவும் கிடைக்கிறது.

எனவே,

பொற்பனைக் கோட்டையின் அகழாய்வு, கோட்டை கொத்தளம் வரை நீள வேண்டும். ஒன்றிய அரசு கைவிட்டாலும் தமிழ்நாடு அரசு கையில் எடுத்ததால்தான் கீழடியின் தொன்மை உலகிற்குத் தெரியவந்தது. அதே போல், தமிழ்நாடு அரசே பொற்பனைக் கோட்டையில் நேரடியாக தொடர் ஆய்வில் ஈடுபடவேண்டும்.

திறந்தநிலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் இனியன் அவர்களின் அறிக்கையைப் விரைந்து பெற்று, இதைத் தமிழக அரசின் தொல்லியல் ஆய்வுத் துறையே தொடர்வதுதான் சரியாக இருக்கும். ஏனெனில் இதனைத் தனிஒரு பல்கலைக் கழகம் நிதிச்சுமையோடு தொடர முடியாது! ஒன்றிய அல்லது மாநிலத் தொல்லியல்தான் துறைவழி அரசு அனுமதியுடன், சிலகோடி நிதி ஒதுக்கீடும் பெற்று இதைத் தொடர முடியும். கீழடியைக் கைவிட்டுச் சென்ற ஒன்றிய அரசு இதைச் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் தமிழரின் தொன்மை - நன்மையில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவரும் இன்றைய தமிழ்நாடு அரசு செய்யும், செய்ய வேண்டும் என்பதே தமிழ்கூறும் தொல்லுலகின் வேண்டுகோள் மற்றும் எதிர்பார்ப்பு.

-----------------------------------------------------------

( நன்றி - இந்து தமிழ் திசை நாளிதழ் - 03-9-2021 )

-------------------------------------------------------------

கட்டுரையாளர் – நா.முத்துநிலவன், எழுத்தாளர், அரசுப் பள்ளியில் 34ஆண்டுகள் பணி நிறைவுசெய்த தமிழாசரியர், “முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!” உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

செல்பேசி எண்  +91 94431 93293   

மின்னஞ்சல்muthunilavanpdk@gmail.com

---------------------------------------------------------------