“தமிழ் இனிது” பதிப்புரை, என்னுரையுடன், நூல் பெறும் விவரமும்

வணக்கம்

ஜூலை 3முதல் 15ஆம் தேதிவரையான எனது அமெரிக்கப் பயணம் அமெரிக்கையாக இருந்தது!  

(தமிழில் உள்ள இந்தச் சொல்லே  தனித்துவமான அமெரிக்கப் பண்பைச் சொல்லுவதாக உள்ளது! இது பற்றித் தனியாக ஒரு சொல்லாய்வு செய்யலாம் போல! – செய்வோம்!)

அமெரிக்கப் பயணம் பற்றி நாலைந்து இயல்கள் (அத்தியாயம்) எழுத வேண்டும். எழுதுவேன்.  பயணத்தின்10ஆம் நாள்-12ஆம் தேதி- மதியம், நியூயார்க் சுதந்திர தேவி சிலை முன் எனது செல்பேசி தொலைந்து போனது ஒரு பெரும் சோகம்!  அன்று மதியம்வரை அமெரிக்க நிகழ்வுகளில் எடுத்த படங்கள் அனைத்தும் செல்லோடு போய்விட்டன!

எனினும் நியூயார்க்கில் உள்ள நண்பர் ஆல்ஃபி @ ஆல்ஃபிரட் தியாகராஜன்,  பாஸ்டனில் உள்ள தம்பி அருண் ரவி ஆகியோரின் சலிப்பில்லாத அன்பால் பத்திரமாக ஊர்வந்து சேர்ந்தது தனிக்கதை!

இப்போது புதுக்கோட்டை வந்து செல்பேசித் தொடர்பு எண்களை மீட்டு எடுத்துவிட்டேன். படங்களை நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். கிடைத்ததும் அமெரிக்க நண்பர்களின் அன்பை விரிவாக எழுத ஆசை -

நல்ல வேளையாக எனது இணையருக்கும் இனிய நண்பர்களுக்கும் அவ்வப்போது அனுப்பிய படங்களில் பாதி கிடைத்திருக்கிறது. முழுவதும் கிடைத்ததும் தொடர்ச்சியாக எழுதுவேன்.

இது நிற்க.

அமெரிக்கப் பயணத்திற்கு முதல்நாள் –ஜூலை 1ஆம் தேதி –இந்து தமிழ் திசை நாளிதழில் ஓராண்டாகத் தொடரந்து வெளியான “தமிழ்இனிது” நூலும் அச்சாகி வந்துவிட்டது. 10பிரதிகளை மட்டும் எடுத்துச் சென்று FeTNA பேரவை நிகழ்விலும் வெளியிட்டாகி விட்டது (இதை முந்தைய எனது வலைப்பதிவில், அட்லாண்டா தங்கை கிரேஸ் பிரதிபாவின் மேசைக் கணினி வழி நமது வலைப்பக்கத்தில்  பகிர்ந்ததை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். பார்க்காதவர்கள் பார்த்துவிட வேண்டுகிறேன்)

நமது நூல்பிரதிகள் எங்கே கிடைக்கும் என்று நண்பர்கள் பலரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் அவர்களுக்காகவே இந்தப் பதிவு –


தமிழ்இனிது நூல் வெளியீடு : “இந்து தமிழ் திசை“ குழுமம்.                   எனவே   மாவட்டத் தலைநகர் அனைத்திலும், முக்கியமான நகரங்களிலும் இந்து-தமிழ்- விற்பனை நிலையங்கள் உள்ளன

சென்னை “இந்து தமிழ் திசை” அலுவலகத்தில் நூல் கிடைக்குமிடம் –விற்பனையகப் பொறுப்பாளர்- திரு இந்துராஜ் அவர்களின் –                      தொடர்பு எண் – 91 74012 96562,   மற்றும்     ஜி.பே.எண் - 9840699497.  

அவர்களிடமே கேட்டால் விவரம் தெரிவிப்பார்கள்.

புதுக்கோட்டையில் மேல ராச வீதி “சக்சஸ் புக்ஸ்டால்”இல் கிடைக்கும் (நூல் வந்த பதினைந்து நாளில் 100பிரதிகள் விற்பனை ஆகிவிட்டதாக சக்சஸ் அஜ்மீர் மகிழ்வுடன் தெரிவித்தார்!)                   அவரது தொடர்பு எண் - +91 98420 18544

பொதுவாக 10 %கழிவு தருகிறார்கள். பிரதிகள் அதிகமாக வாங்கினால் அதிக கழிவும் கிடைக்கும். என்னைத் தொடர்பு கொண்டால் எவ்வளவு கழிவு தருவார்கள் எனும் கூடுதல் விவரத்தையும் தருவேன்.

நூலைப் படித்தபின், சிறந்த -புகழ்ந்த அல்ல- நூல்விமர்சனத்தின் பகுதியை அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடத் திட்டமுள்ளது. எனவே ஆக்கவழியிலான கருத்துகளைத் தெரிவிக்க  வேண்டுகிறேன்.

வணக்கம்.

---------------------------------------------------- 

நமது வலை நண்பர்களுக்காக

இந்து தமிழ் திசை ஆசிரியர்

திருமிகு அசோகன் அவர்களின்

அருமையான பதிப்புரை-


 

என்னுரை -




இனி,

மற்றவை-

நூலைப் படித்தபின்

உங்கள் கருத்தறிந்து..

நன்றி வணக்கம்.

(அடுத்த பதிவு-

அமெரிக்கப் பயண நினைவுகள்... )

------------------------------------------------------- 

“தமிழ் இனிது“ நூல் வந்துவிட்டது!

     நமது கட்டுரைகளை வெளியிட்ட, இந்து தமிழ்“ நாளிதழ் நிர்வாகமே, உடனடியாக நூலாகவும் கொண்டு வந்துள்ளது.

   கடந்த 06-06-2023 முதல், ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் கட்டுரைகள் வெளிவந்த போதே, இதை நூலாக வெளியிடுங்கள் என்று பலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதோ அவர்களுக்காக... 

  இந்த 06-06-2024 தேதியிட்ட என்னுரையுடன், தமிழ்நாட்டின் மிகப் புகழ்பெற்ற –இரண்டு சாகித்திய அகாதெமி விருதுகளும், பத்மஸ்ரீ விருதும் பெற்ற ஒரே – கவிஞர்,

          அய்யா சிற்பி பாலசுப்பிரமணியன் அவர்கள்,

சமூக முன்னேற்றத்திற்கான கூர்ப்படைக் கருவியாகத் தமிழை முன்னெடுத்து வருபவரும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவரும், மிகச்சிறந்த உரை வீச்சாளருமான –

அண்ணன் சுப.வீரபாண்டியன் அவர்கள்

ஆகிய இருவரின் (6+2பக்க) மதிப்புரைகளுடன் நூல் வந்துள்ளது.  

    நூல் விவரம்–பக்கம்-160 (கட்டுரைகளில் வெளிவந்த படங்கள்,  50கட்டுரை +600சொற்கள் +சொல்லடைவு - எந்தச் சொல் விளக்கம் எந்தக் கட்டுரையில் வந்துள்ளது எனும் விவரம்)




விற்பனை விவரம் –

          HINDU TAMIL THISAI,

          KSL Media Limited,

          124, Walajah Road,

          (Ellis Road Corner Building),

          Anna Salai – CHENNAI-600 002,

          Ph- 74012 96562 (திரு இன்பராஜ்)

நூல் வாங்குவோர்க்கான கழிவு விவரம் –

          10பிரதிகள் வரை – 10%

          20 பிரதிகள் வரை-15%

          50 பிரதிகள் வரை -20%

          100பிரதிகள் வரை-25%

          101பிரதிகள் முதல் - 30%

அஞ்சல் செலவு : தனி ஒரு பிரதிக்கு ரூ.25, ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளுக்கு ரூ.10 (இதுபற்றிப் பேசித் தெரிந்து கொண்டு, ஜி பே- செய்ய வேண்டிய எண்- 98406 99497- திரு இன்பராஜ் )

(50 பிரதிகள், 100பிரதிகள் மொத்தமாக வாங்கி, ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்க்கு வழங்க விரும்புவோர் என்னுடன் பேச வேண்டுகிறேன்) 

--------------------------------------------------------------  

    “வாசகர்களின் மதிப்புரை”களைத் தேர்வு செய்து அடுத்த பதிப்பில் வெளியிட எண்ணியிருக்கிறேன்- வெறும் பாராட்டுகளை அல்ல!

        மதிப்புரைகளை இதே பதிவின் பின்னூட்டத்திற்கு அனுப்பலாம். சிலர் சொல்வது போல, அதில் பதிவிட இயலாதவர்கள் எனக்குத் தனியாகவும் மின்னஞ்சல் செய்யலாம் – muthunilavanpdk@gmail.com 

--------------------------------------------------------------

புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம், 

வீதி-கலை இலக்கியக் கழகம், 

புதுக்கோட்டை மாவட்ட தமுஎகச தோழர்கள், 

மற்றும் என் இனிய நண்பர்களை

இன்னொரு நல்ல செய்தியோடு 

விரைவில் நேரில் சந்திப்பேன்.

அதற்காகக் காத்திருக்காமல் உடனடியாக

எழுதப் போகிறவர்களுக்கு இப்போதே 

எனது நன்றியும், வணக்கமும்.

-------------------------------------------------------------- 

“தமிழ் இனிது“ - நூலாகிறது! நன்றி!!

(நன்றி - இந்து தமிழ் - 16-6-2024)

வலைப்பக்கத்தில் என்னைத் தொடரும்                                                      வாசக நண்பர்களுக்கு வணக்கம்.

“இந்து தமிழ்“ நாளிதழில் 06-06-2023முதல் -ஓராண்டாக-

வாரம்தோறும் செவ்வாய் அன்று வெளிவந்த நமது

“தமிழ்இனிது” தொடர், இன்றைய (16-6-2024-ஞாயிறு)

50ஆவது கட்டுரையுடன் நிறைவடைகிறது.

அடுத்த வாரம்

இந்துதமிழ் பதிப்பக வழி                           

நூலாக வருகிறது.

“இந்துதமிழ் இயர்புக்“ அளவில் 160பக்கங்கள்.

மதிப்பிற்குரிய கவிஞர் சிற்பி அய்யா,

அன்பிற்குரிய அண்ணன் சுப.வீரபாண்டியன் இருவரும் 

சிறப்பான மதிப்புரைகளை  வழங்கியுள்ளனர்.

நானும், நன்றி கூறி, என்னுரை எழுதியிருக்கிறேன்.

தொடரில் வெளிவந்த படங்களும் இடம்பெறுகின்றன.

இன்றைய கட்டுரை பற்றி மட்டுமல்ல, வெளிவந்த 50கட்டுரைகளைப் பற்றிய உங்கள் கருத்தை, இந்த வலைப்பக்கப்பின்னூட்டத்திலோ , எனது மின்னஞ்சல் வழியோ பகிர்ந்தால், அது ஆக்கம் தரும் “நூல் அறிமுகமாக” இருந்தால், தமிழ் இதழ்களுக்கு – அவரவர் பெயரிலேயே - அனுப்ப உதவியாக இருக்கும். அடுத்த பதிப்பில் நல்ல கருத்துகளையும், சரியான திருத்தங்களையும் அவரவர் பெயருடன் வெளியிட எண்ணியிருக்கிறேன்.(செல்பேசி எண் அவசியம். பொதுவில் எண் பகிர விரும்பாதவர் கீழுள்ள எனது எண்ணில், மின்னஞ்சலில் விவரம் தரலாம்)

தமிழ்ச் சமூகத்திற்கு இன்று தேவையான ஒரு நல்ல நூலைத் தந்த நிறைவு எனக்கு. அதை ஊக்கப்படுத்தி வளர்த்த பெருமை உங்களுக்கு!

இதுவரை எனது வலைப்பக்கத்தின் பின்பற்றுவோர் பட்டியலில் இணையாத நண்பர்கள் ‘Follower பெட்டியில் உங்கள் மின்னஞ்சலைத் தந்து இணைந்து எனது அடுத்தடுத்த படைப்புகளைப் பெற அழைக்கிறேன்.

நூலோடும், மற்றொரு   -                                                                                                      மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியோடும்                                                            அடுத்த வாரம் சந்திப்போம், 

நன்றி நன்றி நன்றி வணக்கம்.

என்றும் தங்கள் தோழமையுள்ள,

நா.முத்துநிலவன்,

புதுக்கோட்டை – 4

செல்பேசி – 94431 93293

மின்னஞ்சல் –muthunilavanpdk@gmail.com  

இலக்கிய ஆய்வுப் பட்டிமன்ற நடுவர் உரை -நா.முத்துநிலவன் (காணொலி இணைப்பு)

 

இராமநாதபுரம் புத்தகத் திருவிழா: 
இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்
அழியாத் தமிழின் அடையாளம் யார்? 
தொல்காப்பியரா? 
வள்ளுவரா? 
கம்பரா? 
பாரதியா? 
நடுவர் உரை- காணொலி



தமிழ் இனிது – 49 - (அடுத்த வாரம் நிறைவடையும்)

 

(நன்றி -இந்து தமிழ் -28-5-2024)
 இலக்கணத்தில் இரட்டைக் கவனம் ஏன் தேவை?

3000-ஆண்டுக்கு மேலாக- பேச்சு எழுத்து இரண்டிலும் மக்கள் மொழியாகத் தொடர்வது தமிழ். எழுத்து வடிவங்கள் மாறினாலும் பொதுவான பேச்சில் பெரிய மாற்றமில்லை. ஆக, கற்காலம் தோன்றி தற்காலமும் நாம் பேசும் தமிழை, “வயது ஏற ஏற வனப்பேறும் அதிசயமே!” என்று அப்துல் ரகுமான் வியக்கிறார்!  

அவ்வப்போது தோன்றும், மறையும் சொற்களைப் பற்றியும்,  பாடும்- எழுதும் பாவகைக்கு ஏற்பவும் இலக்கண நூல்களும் மாறி வந்துள்ளன. விருத்தங்கள் எல்லாம் அப்படி வந்தவை தாம்! இப்போது இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ் இலக்கணத்தை மீறிய புதுக்கவிதை வந்து, பலரையும் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது. புதிய புதிய சிந்தனைகளில் இலக்கியங்கள் தோன்ற, தமிழ்ச் சமூகம் ஒரு பாய்ச்சல் வேகத்திற்கு மாறி வருகிறது!  

மாறிவரும் இலக்கண மரபுகள்-   

            தொல்காப்பியரே, “மொழி, காலத்தாலும் இடத்தாலும் மாறும்“ என்பதை ‘புறனடை’ இலக்கணமாகச் சொல்லி விட்டார்! “கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும் கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே” எனும் நூற்பாவை இருவேறு இடங்களில் (602,781) அமைத்த தொல்காப்பியர், கால மாற்றத்திற்கு ஏற்ப மொழி மாற்றத்தை முன்மொழிகிறார்.

தொல்காப்பியர்க்கு, 1,500ஆண்டு பின்வந்த நன்னூலாரும், “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என வழிமொழிகிறார். தமிழை அழிக்க நினைப்போர்க்கு இரையாகி விடாமலும், வளர்க்க நினைப்போர்க்குச் சுமையாகி விடாமலும் புதிய இலக்கணத்தில் இரட்டைக் கவனம் தேவை!

புதிய இலக்கணத்தின் தேவை

ச-எழுத்து, அ,ஐ,ஔ எனும் மூ எழுத்துகளில், சொல்லின் முதலில் வருவதில்லை (ச,சை,சௌ எனத் தமிழ்ச் சொற்கள் தொடங்குவதில்லை) என்கிறது தொல்காப்பிய நூற்பா-62, ஆனால் சங்க இலக்கியத்திலேயே “ச“ எழுத்து நூறு இடங்களில் மொழி முதலில் வந்திருப்பதைப் பட்டியலிடுகிறார், ‘சங்க இலக்கியம் தொடரடைவு’  எனும்   செயலியை, தனது பேருழைப்பால் தொகுத்திருக்கும் மதுரை ப.பாண்டியராஜா. ஆக, தொல்காப்பியர் கருத்தும், பின்னர் மாறியிருப்பதைப் பார்க்கிறோம்.

1990களின்பின், பன்னாட்டுப் பண்பாடு பரவியபோதே, “புதிய மணிப்பிரவாள நடை“ ஆங்கில, கிரந்த எழுத்துகளில் பரவியது! பள்ளி மாணவர் பெயர்கள் 99விழுக்காடு கிரந்தக் கலப்பில் உள்ளனவே?!  

ஆக, பயன்பாடற்ற இலக்கணத்தைக் கைவிட்டு, புதிய இலக்கணம் தொகுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பேராசிரியர் பொற்கோ, தமிழண்ணல் போன்றோர் இதைப் பற்றிக் கவலையோடு சொல்லி யிருக்கிறார்கள்.

உரை நடையில் இலக்கணம் தேவை

            தொல்காப்பியம் “உவமஇயல்“ என்றே தனித்துச் சிறப்பித்த உவமையை, நன்னூல் 12ஆகச் சுருக்கியது (நூற்பா-366). இவற்றிலும் ஒன்றுகூட இப்போது வழக்கில் இல்லை! மாறாக, ‘ஆட்டம்’ ‘மாதிரி’ ‘கணக்கு’ போலும் புதிய உவம உருபுகள் வந்து விட்டன! (“குரங்காட்டம் தாவுற“ “ஆந்த மாதிரி முழிக்கிற“, “கிளி கணக்கா பொண்ணு“) இவற்றுக்குப் புதிய இலக்கணம் தேவை!  இது ‘ஒரு சோற்றுப் பதம்’ தான்!

இலக்கணத்தைப் பழைய முறையில் (1)நூற்பா, (2)எடுத்துக் காட்டு, (3)பொருத்த/விளக்கம் என்று இல்லாமல், உரைநடைச்  சொற்களைக் கொண்டே –சுமையற்ற வகையில்- மாணவர்க்குக் கற்றுத்தர வேண்டும். எளிமையும், நடைமுறைத் தெளிவும், வலிமையும் கொண்டதாக, புதிய இலக்கணம்,  “தமிழ் இனிது” என மாறவேண்டும். 

                                                                    (அடுத்த வாரம் நிறைவடையும்)

           ------------------------------------------- 

28-5-2024- இன்று காலையே “இந்து தமிழ்“ நாளிதழில்

நமது கட்டுரையைப் படித்த மதிப்பிற்குரிய 

நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள்

பின்வரும் குறுஞ்செய்தியை எனக்கு 

அனுப்பியிருந்தார்கள்.

அவர்களின் அன்புக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. 

“தமிழ் இந்து நாளிதழில் தங்களின் தமிழ் உலா அடுத்த வாரம் நிறைவடையும் என்பதை பார்த்தேன். இன்னும் கொஞ்ச காலம் தொடர்ந்திருக்கலாம் தமிழ் இந்து”

------------------------------------------

கடந்த ஓராண்டாக, செவ்வாய் தோறும் வந்த நமது கட்டுரையைப் பல்லாயிரக்கணக்கானோர் படித்தாலும், ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கிய பெருந்தகையினரை விரல் விட்டு எண்ணிவிடலாம்! அவ்வாறான பெருந்தகையினர் இருவர் தாம்  முன்னுரை, அணிந்துரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்! 

அடுத்த மாதமே “தமிழ் இனிது” நூல் வருகிறது! பணியைத் தொடங்கி விட்டார்கள் இந்து-தமிழ்ப் பதிப்பகத்தார்!

500-ஐத் தாண்டும் சொற்களை அடுக்கி, “சொல்,பெயர் அடைவு” (எந்தச் சொல், எந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது) எனும் விவரக் குறிப்பை அகர வரிசையில் தயாரித்துக் கொண்டிருக்கிறேன் நான்! 

நூலோடு சந்திப்போம்!

நன்றி 

----------------------------------

தமிழ் இனிது -48 ---நன்றி ---இந்து தமிழ் -21-5-2024

 


பிறர் பொருளைத் தமிழ்ப் படுத்தலாமா? 

க் ச் வருமா? வராதா?

தமிழ்ச் செய்தித் தாள்களின் முதன்மைச் செய்தி எதிலும் வல்லொற்று இருக்காது! பொருள் மாறா இடங்களில் க் ச் வருமா என்று கேட்போரை அச்சுறுத்த வேண்டியதில்லை, பொருள் மாறுகிறதா என்று பார்த்தால் போதும் என்பதே எனது கருத்து. 

“வல்லினம் மிகும் இடங்கள்-34, மிகா இடங்கள்-29” என்று பட்டியல் தருகிறார், பொறிஞரும் தமிழ் அறிஞருமான திருச்சி கரு.பேச்சிமுத்து (நூல்:“பிழை தவிர்“ -2018) ஆனால், எந்த இடத்தில் வேண்டும்  என்பதில் புலவர்களிடம் இன்றும் கருத்தொற்றுமை இல்லை என்பதே உண்மை! அதற்கான பட்டியலை எடுக்க, அரசுதான் முயற்சி செய்ய வேண்டும். அதுவரை “சந்தேகத்தின் பலனை வாதிக்குத் தரலாம்” என்னும் நீதிமன்ற நிலைக்கருத்து, தமிழுக்கும் பொருந்துமல்லவா?

பிறமொழிகளில் இல்லாத சிக்கலாக, இந்த ”ஒற்றெழுத்து மிகுமா? மிகாதா?” கேள்விக்கு அஞ்சியே இன்றைய இளைஞர் பலர் தமிழை விட்டு ‘தங்லீசு’க்குப் பாய்கின்றனர். தகுந்த தமிழ்ச் சொல் பயிற்சியும் இல்லை என்பதும் உண்மை! ஆங்கில மோகத்தின் அமோக விளைச்சலிது! இணையத்தில் “முக்காலே மூனுவீசம்” “தங்லீஷ்”ஆக, காரணம் இவை!  

எழுத்துப் பிழை பெரிய பாவமல்ல, தமிழில் எழுதுங்கள்!

‘தங்லீஷ்’ எழுதுவதே தவிர்க்க வேண்டிய தமிழ்க் குற்றம்!

பிறர் பொருளுக்குத் தமிழில் பெயர் வைப்பது பற்றி..

பிறர் ஒருவர் கண்டுபிடித்த பொருளைத் தமிழர் புழங்கும் போது அதற்கான பெயர் அந்த மொழியில் இருப்பதை மாற்றி, எப்படித் தமிழில் தருவது என்று விவாதம் நடக்கிறது. FaceBook - முகநூல்? என்பது போல!

இதில் அடிப்படையான கேள்விகள் இரண்டு. (1) பிறர் ஒருவர் கண்டுபிடித்த பொருள் வேண்டும், அவர் வைத்த பெயர் வேண்டாமா? (2) நாம் கண்டுபிடித்த பொருளை அவர்கள் மொழியில் பெயரிட்டு அழைப்பதை நாம் ஒப்புவோமா? கடந்த ஆயிரம் ஆண்டுக்கும் மேலாக அறிவியல் கண்டுபிடிப்பு எதையும் தமிழர் – தமிழில்- சொந்தமாகத் தரவில்லையே, ஏன்? என்பது தனி ஆய்வு!

அப்படியே தமிழில் பெயர் வைத்தாலும் ‘மகிழுந்து’(Car) தனியாகவா வருகிறது? சிறுசிறு  பகுதிப் பொருள்கள் (Spare Parts) எத்தனை? எப்படிச் சொல்வது? இது அலட்சியத்தால் வரும் வினா அல்ல, “அடிப்படையில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும், சிந்தனையைத் தூண்டும் கல்விமுறை பற்றிய செயல் திட்டம் இல்லாமல் ‘சும்மா’ தமிழ்ப் படுத்துவாக நினைத்துப் ‘படுத்துவது’ யாரை?” எனும் அக்கறை வினா.   

பொதுவான அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தமிழில் தரலாம். அதிலும் விவாதங்கள் நடக்கின்றன. Video, காண்பதும் கேட்பதுமாக இருப்பதால், ‘காணொலி’ என்றே தமிழறிஞர் செந்தலை ந.கவுதமன் உள்ளிட்ட பலரும் –நானும்- சொல்கிறோம். ‘இந்து-தமிழ்’ நாளிதழ் உள்ளிட்ட இதழாளர், ‘காணொளி’ என்கிறார்கள். இரண்டும் புழக்கத்தில் வரட்டுமே? சரியானது நிலைக்கட்டும்! இரண்டையும் விட்டுவிட்டு, ‘வீடியோ’ என இரண்டும் கெட்டானாய்ச் சொல்ல வேண்டாம் என்கிறேன்.

மொத்தத்தில் தமிழின் மீது அலட்சியம் வேண்டாம். எழுத்துப் பிழை பற்றி அஞ்சாமல், தமிழில் எழுத முயற்சி செய்ய வேண்டும் பழகப் பழகத் தேவையான திருத்தம் காண்பது எளிது! தமிழறிஞர்கள் மட்டும் இதைச் செய்துவிட முடியாது. மக்கள் பங்கேற்புடன் அரசுதான் செய்யவேண்டும்!

            ------------------------------------------------------   

தமிழ் இனிது -47 நன்றி - இந்து தமிழ் - 14-5-2024

நிறுத்தக் குறிகளைத் தின்னும் புதிய மொழி!

துணையெழுத்துகள்

அனைத்து மொழிகளும் அ எழுத்தையே முதன்மையாக உடையன. வாயைத் திறந்ததும் வரும் எழுத்து என்பதுதான் காரணம்.  அ,இ,உ,எ,ஒ என்பன உயிரெழுத்தில் முதன்மை எழுத்துகள். ஆ,ஈ,ஊ,ஏ,ஓ, என்பன –முதன்மை எழுத்து நீள்வதால் வரும்- நெடில் எழுத்துகள். ஐ,ஔ, என்பவற்றைக் கூர்ந்து பார்த்தால் இவை கூட்டெழுத்து என்பதும் புரியும்.

எழுத்துகளின் வரிவடிவம் மாறி மாறி வந்துள்ளதால்,  இக்காலத் துணையெழுத்துகளின் பெயரைத் தெரிந்து கொள்வது அவசியம் :

அம்மா – இதில் அ எழுத்து முதன்மை வடிவம். ம் மெய்யெழுத்து. மா எழுத்தில் ம முதன்மை வடிவம், அடுத்துள்ள  கால் துணையெழுத்து.

துணைக்கால் – கா,சா

கொம்புக்கால் – கௌ,சௌ

பிறைச்சுழி – ஆ


ஒற்றைக் கொம்பு – கெ, தெ

இரட்டைக் கொம்பு – பே, வே

இணைக்கொம்பு – பை, வை

 

வளை கீற்று -   கூ,

சாய்வுக் கீற்று – ஏ

இறங்கு கீற்று – பு,சு

இறக்கு கீற்று கீழ் விலங்குச் சுழி – சூ,பூ

 

கீழ் விலங்கு – மு,கு

கீழ் விலங்குச் சுழி – மூ,ரூ

மேல்விலங்கு – கி,தி

மேல் விலங்குச் சுழி – கீ,சீ

மடக்கு ஏறு கீற்றுக் கால் – நூ,னூ,றூ

முதலான எழுத்துகளைக் கொண்டு, கண்டு தெளிக.

நிறுத்தக் குறிகள்

எழுத்தைப் புரிந்துகொள்ள துணையெழுத்துப் போல, தொடரைப் புரிந்து கொள்ள  நிறுத்தக் குறிகளை அறிவதும் அவசியம். இதற்கு, பல்வேறு நடைகளைக் கொண்ட கட்டுரை, கவிதை, சிறுகதைகளைப் படித்துப் பார்த்துத் தெளிவதே சரியான வழி. மற்றபடி நிறுத்தக் குறிகளைப் பற்றிக் கவலை கொண்டு, சொல்லவரும் சிந்தனையில் தடம் மாறிவிடவும், தேவையற்ற இடங்களில் போட்டுக் குழப்பி விடவும் கூடாது.

நிறுத்தக் குறிகள் (Punctuation Marks) ஆங்கில வழி வரவு என்பதால் ஆங்கில வழக்குடன் சேர்த்துப் புரிந்து,  பயன்படுத்துவது எளிது –  இவை ஏராளமாக உள்ளன. முக்கியமானவற்றை மட்டும்  பார்ப்போம் : இதில் சந்தேகம் வந்தால் நம் ஜி.எஸ்.எஸ்.அய்யாவிடம் கேட்டு அறிவோம்.

Comma  ( , )  கால் புள்ளி  - மொழி, கணக்கு, அறிவியல் ஆகிய பாடங்கள்.

Semicolon  ( ; )  அரைப் புள்ளி  - அறிஞர் தான்; சமூகப் பொறுப்பில்லையே!

Colon  ( : ) முக்கால் புள்ளி / வரலாற்றுக் குறி – பின்வருமாறு:

Full Stop  ( . ) முற்றுப்புள்ளி. முடிந்தது.

Excalamation  ( ! ) உணர்ச்சிக் குறி  - அடடா, என்ன சிந்தனை! (பல்வேறு உணர்ச்சிகளைக் காட்டுவதால், ஆச்சரிய/வியப்புக் குறி என்பது தவறு)  

ஆங்கிலத்தில் Teachers’  என்றால் ‘ஆசிரியர் பலரின்’ என்பது பொருள். Teacher’s எனில் ‘ஆசிரியர் ஒருவரின்’ என்று பொருள்.  I am என்பதை  I’m என்று எழுதுவது போல, ஒற்றை மேற்கோள் குறி இட்டு, சரி’ம்மா எனில், “சரி அம்மா“ என்பதன் சுருக்கமாகப் புதியன புகுந்துள்ளது.

தமிழில் மட்டுமல்ல, உலகத்தின் பற்பல மொழிகளின் நிறுத்தக் குறிகளை படக்குறிகள் (இமோஜி) எனும் புதிய மொழி தின்று வருகிறது! வலுத்தது நிலைக்கும்! தமிழுக்கு வலிமை சேர்ப்பது நம் காலக் கடன்.  

-----------------------------------------------