தமிழ்இனிது-22 ‘வேறுபாடு’ ‘முரண்பாடு’ என்ன வித்தியாசம்?

 

(நன்றி - இந்து தமிழ் நாளிதழ் - 14-11-2023)

வேறுபாடும் முரண்பாடும்

ஒரு கருத்திற்கு மாறான வேறொரு கருத்து. எல்லாருடைய கருத்தும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை, அது அழகுமில்லை. ஐந்து விரலும் ஒன்றுபோல அன்றி வேறுவேறு வடிவில் இருப்பதே அழகும் பயனும் ஆகும். ‘நூறு பூக்கள் மலரட்டும்’ ஜனநாயகம். வேறுபாடுகள் பெரிதானால் முரண்பாடு வரும்!

எதிர்க்கருத்து. வேறுபாட்டைப் பேசித் தீர்க்கலாம், முரண்பாட்டை மோதித்தான் தீர்க்க வேண்டும் என்கிறது குறள்! (1077)

எத்தனை? எவ்வளவு?  

எண்ண முடியும் அளவை ‘எத்தனை?’ என்று கேட்கலாம். எண்ணிக்கை தெரியாத அளவை ‘எவ்வளவு?’ என்று கேட்கலாம். பணத்தாள்களை எண்ணலாம், அதை “எத்தனை ரூபாய்?“ என்பதே சரியான வழக்கு. தொகை தெரியாத போது “எவ்வளவு  ரூபாய்?” என்றும் கேட்கலாம்.

பொதுவாக காலம், நீர், ஒலி, ஒளியை அளக்க முடியாது என்ற பழங்காலத்தில் இவற்றைப் பிரித்துப் பார்க்க இந்த அளவை முறைகள் இருந்தன. இப்போது துல்லியமாக அளக்கின்ற கருவிகள் வந்துவிட்டதால் இரண்டு சொற்களும் ஒரே பொருளில் வருவதில் தவறில்லை. எனினும் இப்படியான வேறுபாடு தமிழில் இருந்தது பற்றி அறிந்திருப்பது நல்லது. 

துல்லியம், துள்ளியம்

            மிகச் சரியாக அளவிட்டு, நுட்பமாகச் சொல்வது ‘துல்லியமானது’ துள்ளி ஓடும் மானை பிடிக்கமுடியாது, துல்லியமாகப் படம் பிடிக்கலாம்! அவசரத்தில் சிலர் ‘துள்ளியமாக’ என்று  எழுதுவது தவறாகும்.

நீள் வட்டப் பாதையில் சுற்றும் நிலவிலிருந்து, பூமி உள்ள தூரத்தை, அருகில் 3,64,000 கி.மீ. எனவும், தொலைவில் 4,06,000கி.மீ. எனவும், இருவகையில் ‘துல்லியமாக’ கணக்கிட்டுச் சொல்கிறார்கள்.  

‘மாறடித்து’ அழுவது சரியா?

          கற்பனை நலமும், சொற்புனை வளமும் கைவரப்பெற்ற நல்ல கவிஞர்கள் கூட, எழுத்துப் பிழையோடு எழுதினால் தமிழ் வருந்தாதா? அவர்கள் அறியாத தமிழல்ல, அவர்களைப் பார்த்து எழுதும் மற்றவரும் அப்படி எழுதுவார்களே? சிற்றூர்ப் பெண்கள் மாரடித்து அழுவதுண்டு! ‘மாறடித்து’ அழுவதாக நான் அறிந்த நல்ல கவி ஒருவர் எழுதியிருந்தார்.

            மாற்ற முடியாத சோகத்தை, ‘மாரடித்து’ அழுது  மாற்ற முயல்வது நம் கிராமத்துப் பண்பாடு. “தன்நெஞ்சு அறிவது பொய்யற்க”குறள்(293), “நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டா” உலகநீதி(2) மார்-மார்பகம், நெஞ்சு - உறுப்பின் மேல் ஏற்றிய அழகான கற்பனை வேலை!  

சின்ன ர’ என்பதும் தவறு!   பெரிய ற’ என்பதும் தவறு! 

ர - இதனை, இடையின ர கரம் என்பதே சரியானது - மரம், கரம்.

ற - இதனை வல்லின ற கரம் என்பதுதான் சரி - மறம், அறம்.

வல்லினம் கசடதபற (வன்மையாக, நெஞ்சிலிருந்து பிறக்கும்) மெல்லினம்ஙஞணநமன (மென்மையாக,மூக்கிலிருந்து பிறக்கும்) இடையினம்யரளவழல (இடைப் பட்ட கழுத்திலிருந்து பிறக்கும்)

வலுத்த பணக்கார வர்க்கம் (வல்லின எழுத்து)

வறுமைப் பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)

இடையில லோல் படுற’ நடுத்தர வர்க்கம்! (இடையின எழுத்து)

இதுல வல்லெழுத்து ரெண்டும் சேர்ந்து வராது.

சிலபேரு முயற்ச்சினு எழுதறது தப்பு!

என்னதான் கடுமையான முயற்சியா இருந்தாலும் அது முயற்சிதான் !

வாழ்க்கை முறையை இப்படி எழுத்து அமைப்பிலும் வச்ச நம்ம பெருசுக,   எப்பேர்ப்பட்ட ஆளா இருக்கணும்? யோசிங்க... யோசிச்சா தமிழ் இனிது!

-------------------------------------------

-- பின் குறிப்பு--

(வலைப் பக்க வாசகர்களுக்காக)

நான் மற்றவர் கருத்துகளையோ பதிவுகளையோ

“வெட்டி ஒட்டும்” பழக்கமுடையவன் அல்ல! மேற்கோள் காட்டினால் அதற்கான ஆதாரத்தையும் எழுதுவேன்.

இக்கட்டுரையின் இறுதிப் பகுதி

“வளரும் கவிதை”எனும் இந்த நமது வலைப்பக்கத்தில்  

நான் எழுதிய பதிவின் சாரம்!  

இந்தப் பதிவு லட்சக்கணக்கான பார்வையாளரைக் கொண்டது! 

(கீழுள்ள முதற்பத்து (டாப்-டென்!) பதிவுகளைப் பாருங்களேன்!

 எளிமையான தமிழ் இலக்கணம் என்பதால்

மீளப் பயன்படுத்தினேன் அவ்வளவே

அந்தப் பதிவின் இணைப்பு இதோ - https://valarumkavithai.blogspot.com/2014/11/blog-post_26.html

---------------------------------------------- 

 (பதிவிட்டது -14-11-23 இரவு-8-00மணி) 

--------------------------------------------------------- 

11 கருத்துகள்:

 1. அருமையான பரிந்துரைகள் ஐயா!

  ‘துள்ளியமாக’, ‘மாறடித்து’ எனவெல்லாம் கூட எழுதுகிறார்கள் என்பது வியப்பான செய்தி! சரியாக எழுதுவதற்குத்தான் எல்லை. தவறு செய்ய எல்லையே இல்லை போலும்.

  தமிழ் எழுத்தின வகைகளை மக்கள் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட்டது எங்கள் தமிழாசிரியருக்குள் இருக்கும் பொதுவுடைமையாளரை மீண்டும் இனம் காட்டியது. மிக்க மகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு
 2. தமிழ் மொழியின் பெருமையினை எடுத்துரைத்த தங்களுக்கு நன்றிகள்
  பேச்சு வழக்கினை மாற்றி எழுத்து நடையின் பொருளுணர்தல் நன்று

  பதிலளிநீக்கு
 3. இலக்கணத்தை எளிமையாக கற்று வருகிறேன் நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
 4. அவசரத்தில் கணினி அச்சில் தவறி விடுவது ஒருவகை. அவர்கள் திருத்திக் கொள்வார்கள். பொருள் புரியாமலே இதுவாகத்தான் இருக்கும் என்று தாமே முடிவெடுத்துக் கொண்டு சொற்களைத் தவறாகப் பயன்படுத்ததுவோர் ஒருவகை. இவர்களுக்குச் சொன்னாலும் புரியாது. ஏற்கவும் மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 5. வேறுபாடு .. மாறடித்து சிறப்புங்க ஐயா

  பதிலளிநீக்கு
 6. A brilliant exposition! Your post is insightful, well-crafted, and a pleasure to read. Thanks for sharing your valuable perspective.

  பதிலளிநீக்கு
 7. Your blog consistently delivers excellence. Thank you for the valuable information!

  பதிலளிநீக்கு