தமிழ் இனிது / இந்து தமிழ் நாளிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் இனிது / இந்து தமிழ் நாளிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

“தமிழ் இனிது“ - நூலாகிறது! நன்றி!!

(நன்றி - இந்து தமிழ் - 16-6-2024)

வலைப்பக்கத்தில் என்னைத் தொடரும்                                                      வாசக நண்பர்களுக்கு வணக்கம்.

“இந்து தமிழ்“ நாளிதழில் 06-06-2023முதல் -ஓராண்டாக-

வாரம்தோறும் செவ்வாய் அன்று வெளிவந்த நமது

“தமிழ்இனிது” தொடர், இன்றைய (16-6-2024-ஞாயிறு)

50ஆவது கட்டுரையுடன் நிறைவடைகிறது.

அடுத்த வாரம்

இந்துதமிழ் பதிப்பக வழி                           

நூலாக வருகிறது.

“இந்துதமிழ் இயர்புக்“ அளவில் 160பக்கங்கள்.

மதிப்பிற்குரிய கவிஞர் சிற்பி அய்யா,

அன்பிற்குரிய அண்ணன் சுப.வீரபாண்டியன் இருவரும் 

சிறப்பான மதிப்புரைகளை  வழங்கியுள்ளனர்.

நானும், நன்றி கூறி, என்னுரை எழுதியிருக்கிறேன்.

தொடரில் வெளிவந்த படங்களும் இடம்பெறுகின்றன.

இன்றைய கட்டுரை பற்றி மட்டுமல்ல, வெளிவந்த 50கட்டுரைகளைப் பற்றிய உங்கள் கருத்தை, இந்த வலைப்பக்கப்பின்னூட்டத்திலோ , எனது மின்னஞ்சல் வழியோ பகிர்ந்தால், அது ஆக்கம் தரும் “நூல் அறிமுகமாக” இருந்தால், தமிழ் இதழ்களுக்கு – அவரவர் பெயரிலேயே - அனுப்ப உதவியாக இருக்கும். அடுத்த பதிப்பில் நல்ல கருத்துகளையும், சரியான திருத்தங்களையும் அவரவர் பெயருடன் வெளியிட எண்ணியிருக்கிறேன்.(செல்பேசி எண் அவசியம். பொதுவில் எண் பகிர விரும்பாதவர் கீழுள்ள எனது எண்ணில், மின்னஞ்சலில் விவரம் தரலாம்)

தமிழ்ச் சமூகத்திற்கு இன்று தேவையான ஒரு நல்ல நூலைத் தந்த நிறைவு எனக்கு. அதை ஊக்கப்படுத்தி வளர்த்த பெருமை உங்களுக்கு!

இதுவரை எனது வலைப்பக்கத்தின் பின்பற்றுவோர் பட்டியலில் இணையாத நண்பர்கள் ‘Follower பெட்டியில் உங்கள் மின்னஞ்சலைத் தந்து இணைந்து எனது அடுத்தடுத்த படைப்புகளைப் பெற அழைக்கிறேன்.

நூலோடும், மற்றொரு   -                                                                                                      மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியோடும்                                                            அடுத்த வாரம் சந்திப்போம், 

நன்றி நன்றி நன்றி வணக்கம்.

என்றும் தங்கள் தோழமையுள்ள,

நா.முத்துநிலவன்,

புதுக்கோட்டை – 4

செல்பேசி – 94431 93293

மின்னஞ்சல் –muthunilavanpdk@gmail.com  

தமிழ்இனிது-41 --நன்றி - 02-04-2024 இந்து தமிழ் திசைகாட்டி நாளிதழ்



பேச்சுத் தமிழின் பேரழகு!

பல்நோக்கு மருத்துவமனை, சரியா?

            தமிழ்நாடு அரசு, “ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை”  என்று பெயர்  வைத்துள்ளது. ஆனால், தனியார் பலரும் “பல்நோக்கு மருத்துவமனை” என்று வைத்துள்ளனர்! இதுதான் குழப்பம்.

“பல்நோக்குத் திட்டங்கள்“ பற்றிய செய்திகளையும் பார்க்கலாம். பத்தாம் வகுப்பு புவியியல் பாட நூலில் “இந்தியா - பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்”(பக்-169) என்றே உள்ளது! இதுபோல Multy purpose Projects, Multy Speciality Hospital  பல உள்ளன. தமிழில் மட்டும் -பல்நோக்கு என- ஏன் பல்லை நோக்க வேண்டும்? “பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்“ என்றால் குழப்பமே இல்லாமல்  ‘பல்லை நோக்கும் ஆய்வாளர்’ என்று பொருள் வருமே! பிறகு, பல்மருத்துவர் என்னாவது?!

எனவே, “பலநோக்கு“  என்பதை, பல வேறுபட்ட மருத்துவமும் செய்யக் கூடிய எனும் பொருளில்-  “பன்னோக்கு”  என்பதே சரி. இன்னும் எளிமையாகப் புரிய வேண்டும் என்றால், “பல நோக்கு” என்று பிரித்தே போடலாம். அல்லது, மற்ற பல்வேறு அரசுத் துறைகளில் உள்ளது போல “ஒருங்கிணைந்த” எனும் சொல்லைப் பயன்படுத்தினால் கூடுதல் நலம்.  

நோன்பு திறப்பா, துறப்பா?

இஃப்தார் எனில், ரமலான் மாத நோன்பு நோற்கும் இஸ்லாமியர், நோன்பு முடித்து மாலையில் அனைவரும் இணைந்து உணவருந்துவது. ஆனால் சுவரொட்டி சிலவற்றில் “நோன்பு துறப்பு” என்றும் வேறு சிலவற்றில் “நோன்பு திறப்பு” என்றும் போட்டிருப்பதுதான் குழப்பம்.   

ஒருநாள் உண்ணா நிலையை முடித்து -துறந்து- உண்பது எனில்,  தமிழில் “நோன்பு துறப்பு“ என்பதே சரி. பிறகு “திறப்பு” எப்படி வந்தது? “நோன்பு“ என்பதை வழக்கில் ”நோம்பு” என்கிறோம் அல்லவா? அப்படித்தான்! “நோன்பு துறப்பு“ என்பது எழுத்துத்தமிழ். “நோம்பு திறப்பு“ என்பது பேச்சுத்தமிழ். “நோம்புக் கஞ்சி” குடித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் தனிச் சுவை! மதம்கடந்த அன்பின் சுவை!

ஆமா’ல்ல? எனில், ஆமாவா? இல்லையா?

         பேச்சு வழக்கில் இப்போது பலரும் பயன்படுத்தும் சொல் “ஆமா’ல்ல?“ என்பது! அதாவது ஆமா, இல்லை!  இதன் பொருள் ஆமாம் என்பதா? இல்லை என்பதா? என்று யாரும் குழம்புவதில்லை, அந்தச் சூழலில் அது தெளிவாகவே புரிந்து விடும். இதில் ஆமா(ஆம்ஆம்), இல்லை எனும் இரு சொற்களும் எதிர் எதிர்ச் சொற்கள்! அது எப்படி ஒரே தொடரில் இணைந்து வருகின்றன? அதுதான் பேச்சுத் தமிழின் பேரழகு!   

            ‘அவனுக்கு எப்படி இது தெரிந்தது?’ ‘அவள் எப்படி இதை ஒத்துக் கொண்டாள்?’ போலும் உரையாடலில், அவர்கள் முன்பு நினைத்திராத ஒன்று புதியதாகத் தெரிய வரும்போது, இப்படி வரும். ஆங்கிலத்தில் இரண்டு எதிர்ச்சொல் சேர்ந்தால் ஒரு நேர்ப்பொருள் (Two Negatives Make a positive) வருவது போல! அட, ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்! சொல்லுக்கான பொருள் அகரமுதலியில் இருந்தாலும், பயன்படுத்தும் சூழலில்தான் அது முழுமையாகப் புரியும். சூழல் புரியாமல் செய்வது எதுவும் தவறாகி விடுவது போல, சூழல் புரியாமல் எழுதுவதும், பேசுவதும் கூடத் தவறாகி விடும்! அரசியலில் மட்டுமல்ல, பேச்சு வழக்கிலும் கூட இதெல்லாம் உண்டு’ல்ல?!  

---------------------------------------------------------- 

ஒரு பின்னிலை விளக்கம் 

இக்கட்டுரையின் இறுதிச் சொல்லை, இன்றைய இந்து-தமிழ் நாளிதழில் வந்திருப்பது போல “சகஜமப்பா” என்றுதான் எழுதி அனுப்பி விட்டேன். பிறகுதான் இக்கட்டுரையின் இறுதிச் சிறுதலைப்புக்கும் ஏற்ப இப்படி மாற்றலாமே என்று சற்றுத் தாமதாகவே அவர்களுக்கும் தெரிவித்தேன், அதற்குள் அச்சாகி விட்டது போல. சரி நமது வலையில் திருத்தி விடுவோம் என்று இப்படி மாற்றிவிட்டேன். இது நான் செய்த மாற்றம்தான். மாற்றியது நல்லாருக்கா? இல்ல இந்து தமிழில் வந்ததே நல்லாருக்கா? நண்பர்கள் சொல்லுங்களேன்... - நா.மு.,

---------------------------------------------------------

 

தமிழ்இனிது-30 (நன்றி-இந்து தமிழ் 09-01-2024)

       


       
வரலாறு மாறி வரலார் ஆகலாமா?

ஒன்று – ஒண்ணு? ஒன்னு?

         வி.சேகர் இயக்கிய திரைப்படம், ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும். இந்த வரியில் தொடங்கும் கண்ணதாசன் திரைப்பாடல் ஒன்றும் உள்ளது.    

மாறாக, கன்றுக்குட்டி - பேச்சு வழக்கில் - ‘கன்னு’க்குட்டி ஆகிறது. “கன்னுக்குட்டி கன்னுக்குட்டி“- திரைக்கலைஞர் சிவகுமார் நடித்த பாடல்!  கொன்று, தின்று - ‘கொன்னாப் பாவம், தின்னாப் போச்சு!”-  பழமொழி!

இப்படி, ‘று’ எழுத்து, இனவழியில், ‘னு’ ஆவதுண்டு!  எண்ணுப் பெயர்களில்,  ஒன்று-ஒண்ணு, மூன்று- மூணு என, ‘ணு’ ஆவது எப்படி?       

         தமிழறிஞர் இராம.கி., தனது “வளவு“ வலைப்பக்கத்தில் “ஒண்ணு சரியா? ஒன்னு சரியா? என்றால், ‘ஒண்ணு’ என்பது முதலில் வந்திருக்க வேண்டும், ‘ஒன்னு’ என்பது பின்னால் வந்திருக்க வேண்டும்” என்கிறார். (https://valavu.blogspot.com/2005/11/blog-post_03.html)

இதை, இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம்: ‘ஒண்ணா’  எனில் ‘இயலா’ என்பது பொருள். ‘சொல்லொ(ண்)ணாத் துயரம்’,  ‘காண ஒண்ணாக் கொடுமை’  என, ‘ஒண்ணா’ - எதிர்ச் சொல்லாகவே உள்ளது!  

ஆக; ஒன்று, மூன்று என்பன எழுத்து வழக்கு; ஒன்னு, மூனு என்பன பேச்சு வழக்கு,  ஒண்ணு, மூணு  என்பன தவறான வழக்கு எனலாம்.                   

ஆர்ந்த - ஆழ்ந்த இரங்கல்?

அன்பிற்குரியவர்களின் மரணத்தில், “மனமார்ந்த அஞ்சலி / இரங்கல்” என்கிறார்கள்!  நல்ல உள்ளங்களை வாழ்த்துவோம். ஆனால், “ஆழ்ந்த இரங்கல்” என்பதே சரி.  ‘உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து’ என்பது உட்பொருள். நன்றி சொல்ல, “மனமார்ந்த நன்றி” என்பதே சரி.

‘நன்றியை உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து சொல்லக் கூடாதா?’ எனில், “நல்லதுக்கு, அழைச்சாத்தான் போகணும், கெட்டதுக்கு அழைக்க மறந்தாக் கூட, கேள்விப் பட்டாலே போகணும்” என்பார்கள்! ஆளில்லாத பூக்கடையில், இரவிலும் சில மாலைகள் தொங்குவதைப் பார்க்கலாம்! பணத்தை மீறிய தமிழர்மரபு!  நல்ல மரபுதானே இலக்கணமாகிறது?!   

ஒருக்காலும் ஒருகாலும் – 

நக்கீரரின் முருகாற்றுப் படைக்குப் பின்னுள்ள – ‘கடைச் செருகல் - வெண்பாக்கள் ஒன்றில், “ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்” என்னும் தொடர் உள்ளது. 

ஆள்பவனையும், ஆண்டவனையும் கேள்விகேட்ட திருவிளையாடல் படத்தில், முக்கண்ணன் சிவனிடமே, இருகண் சிவந்து “...ஒருக்காலும் இருக்க முடியாது!” என்று சீறுவார் நக்கீரர்!

“ஒருக்கா வந்துட்டுப் போப்பா?” இது, சிற்றூர்த் தாயின் தவிப்பு! மலை(ST)மக்கள் இலக்கியமான குற்றாலக் குறவஞ்சி, ‘ஒருக்கால்’ ‘இருக்கால்’ என்றே பாடும் (கு.கு: 353ஆம் பாடல்).  

  ஆக, ‘ஒருமுறை’ எனப் பொருள்படும் ‘ஒருகால்’ எனும்  சொல் பேச்சுவழக்கில் ‘ஒருக்கால்’ என்றாகிறது. ‘ஒருக்காலும்’ என ‘உம்’ சேரும்போது எதிர்ச் சொல்லாகிறது எனக் கருதலாம்.

அடையார்? பெரியார்?  – வரலார்?

காஞ்சிபுரத்துத் திருப்பெரும்புதூர் அருகில் பிறந்து, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களைக் கடந்து, மொத்தம் 43கி.மீ., நடந்து, வங்கக் கடலை அடையும் ஆறு அடையாறு! இதை, ‘அடையார்’ என்பது அடுக்குமா? சொல்லின் இறுதியில் வரும் ‘று’ (குற்றியலுகரம்) ஆங்கிலேயர்க்கு வராததால் ‘ர்’ போட்டு அடையார் என்றனர்! 

இவ்வாறே, ‘முல்லைப் பெரியாறு’ (பேரியாறு-பதிற்றுப் பத்து : 28), ‘பரளியாறு’ (பஃறுளியாறு –சிலம்பு:11:காடு:19) என்பனவும் மருவின.  

தமிழக ஆறுகளின் ‘வரலாறு’ மாறி,  ’வரலார்’ ஆவது நல்லதா?!  

----------------------------------------------------------------

(வலையேற்றப்பட்ட நேரம் :

09-01-2024 செவ்வாய் பிற்பகல்-2-30)

தமிழ் இனிது-24 -நன்றி - இந்து தமிழ்

 

(நன்றி- இந்து தமிழ் நாளிதழ் - 2023, நவ.28 )

மேன்மேலும் தவறு செய்யாதீர்!

தவறாமல் – தவிராமல்

அழைப்பிதழில் “தவறாமல் வருகை தர” கேட்டுக் கொள்கிறார்கள்! “வருவதைத் தவிர்த்து விடாமல்- தவிர்க்காமல்- தவிராமல்-  வந்துவிட வேண்டுகிறோம்” என்னும் பொருளில்தான் “தவறாமல்” எனும் சொல்லில் அழைக்கிறார்கள்.  ஆனாலும் இது சரியான சொல் அன்று.

அழைப்பதை ஏற்று வருவதில் தவறு, தப்பு ஏதும் உள்ளதா என்ன? எனவே, தவிராமல் (அ) தவிர்க்காமல் வருகைதர அழைப்பதே சரி.

ஏற்கனவே – ஏற்கெனவே

            ஒரு திரைப்படத்தில் வரும் “எனக்கென ஏற்கெனவே பிறந்தவள்” வரிகளைக் கவிஞர் வைரமுத்து சரியாகவே எழுதி, பாடியவரும் சரியாகவே பாடியிருந்தும், இணையத்தில் வழக்கம்போல, ‘ஏற்கனவே’ (Erkanave) என்றே உள்ளது! மின்னூலாகவும் கிடைக்கும் ஒரு கவிதைத் தொகுப்பும், ஒரு நாவலும் கூட “ஏற்கனவே” என்றே வந்துள்ளன!

             இச்சொல், ‘க்ரியா’வின் ‘தற்காலத் தமிழ் அகராதி’யிலும் கூட (பக்256/அக்-2020) இடம் பெற்றுவிட்டது! ஆனால், ‘முன் சொன்னதற்கு ஏற்க-எனவே’எனும் பொருள்தரும் இதற்கு,  “ஏற்கெனவே” (முன்னதாகவே -Already ) என்பதுதான் சரியான பொருள் தரும் சொல்!  

மெள்ள – மெல்ல

‘மெல்ல - எனும் சொல், ‘மென்மை’ எனும் பண்பு குறித்த சொல்.  மெல்லிசை, மெல்லினம் போலும் சொற்களாக எழுத்து மொழியிலும், ‘மெல்லிசு’ போலப் பேச்சு வழக்கிலும்  வரும்.   

இதை ‘மெள்ள’ என்றும் சிலர் எழுதுகிறார்கள்!  ஆனால், ‘மெள்ள’ எனும் சொல்லுக்கு மென்மை என்றோ, மெதுவாக எனும் பொருளிலோ வேர்ச்சொல் ஏதும் இல்லை! கம்பரும் “அருந்தும் மெல் அடகு” என்னும் வரியில், லகர ஒற்றையே பயன் படுத்துகிறார்!

தமிழறிஞர் பலரை உருவாக்கிய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த தமிழறிஞர் நீ.கந்தசாமி அவர்களின் நூலை மேற்கோளிட்டு, ‘மெல்ல’ எனும் சொல், பழந்தமிழில் – மென்மை எனும் பொருளில் - வந்துள்ள சொற்களின் பட்டியலைத் தருகிறார் தமிழறிஞர் நா.கணேசன் (கூகுள்குழு உரையாடல்). அவர், “மெல்ல எனும் சொல்,  வழக்கில் ‘மெள்ள’ என மருவியிருக்கலாம்“ என்றும் சொல்கிறார்.   

இதுபோல “சங்கத் தமிழ் தேடு” செயலியில், “மெல்“ என இட்டால் சங்க இலக்கிய நூல்களில் மட்டும் 97இடங்களில் மென்மை பொருளில் வந்துள்ள பட்டியல் கிடைக்கிறது. ‘மெள்ள’ ஒன்று கூட இல்லை!  

எனவே ‘மெல்ல’ எனும் சொல்லே மென்மை, மெதுவாக எனும் பொருள்களில் வரும் சொல் என்றும், ‘மெள்ள’ எனும் சொல், வழக்கில் மருவி,  தவறாகப் புழங்குவதாகவும் கொள்ளலாம்.     

மேன்மேலும் தவறு செய்யாதீர்!

               தொடர்ந்து தவறு செய்பவரை, “மென்மேலும் தவறு செய்கிறார்” என்கிறார்கள். ஆனால்  அவர்போல இதுவும் தவறே! மேலும் மேலும் தவறு செய்வதை ‘மேன்மேலும்’ என்றுதான் சொல்ல முடியும்.

முதலில் வரும் மேல் எனும் சொல், மெல் என மாறுவது வழக்கில் நடக்கும் தவறு! இது எழுத்திலும் தொடர்வதோடு, பல அகரமுதலி (அகராதி)களிலும் ஏறிவிட்டதால் இதைப் பற்றிச் சொல்ல நேர்கிறது.

அன்புடன் வேண்டுகிறேன், ‘மேன்மேலும்’ என்னும் சொல்லை, ‘மென்மேலும்’ என்று எழுதி, மேலும் மேலும் தவறு செய்ய வேண்டாமே?!

------------------------------------------------------------------    

தமிழ்இனிது-22 ‘வேறுபாடு’ ‘முரண்பாடு’ என்ன வித்தியாசம்?

 

(நன்றி - இந்து தமிழ் நாளிதழ் - 14-11-2023)

வேறுபாடும் முரண்பாடும்

ஒரு கருத்திற்கு மாறான வேறொரு கருத்து. எல்லாருடைய கருத்தும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை, அது அழகுமில்லை. ஐந்து விரலும் ஒன்றுபோல அன்றி வேறுவேறு வடிவில் இருப்பதே அழகும் பயனும் ஆகும். ‘நூறு பூக்கள் மலரட்டும்’ ஜனநாயகம். வேறுபாடுகள் பெரிதானால் முரண்பாடு வரும்!

எதிர்க்கருத்து. வேறுபாட்டைப் பேசித் தீர்க்கலாம், முரண்பாட்டை மோதித்தான் தீர்க்க வேண்டும் என்கிறது குறள்! (1077)

எத்தனை? எவ்வளவு?  

எண்ண முடியும் அளவை ‘எத்தனை?’ என்று கேட்கலாம். எண்ணிக்கை தெரியாத அளவை ‘எவ்வளவு?’ என்று கேட்கலாம். பணத்தாள்களை எண்ணலாம், அதை “எத்தனை ரூபாய்?“ என்பதே சரியான வழக்கு. தொகை தெரியாத போது “எவ்வளவு  ரூபாய்?” என்றும் கேட்கலாம்.

பொதுவாக காலம், நீர், ஒலி, ஒளியை அளக்க முடியாது என்ற பழங்காலத்தில் இவற்றைப் பிரித்துப் பார்க்க இந்த அளவை முறைகள் இருந்தன. இப்போது துல்லியமாக அளக்கின்ற கருவிகள் வந்துவிட்டதால் இரண்டு சொற்களும் ஒரே பொருளில் வருவதில் தவறில்லை. எனினும் இப்படியான வேறுபாடு தமிழில் இருந்தது பற்றி அறிந்திருப்பது நல்லது. 

துல்லியம், துள்ளியம்

            மிகச் சரியாக அளவிட்டு, நுட்பமாகச் சொல்வது ‘துல்லியமானது’ துள்ளி ஓடும் மானை பிடிக்கமுடியாது, துல்லியமாகப் படம் பிடிக்கலாம்! அவசரத்தில் சிலர் ‘துள்ளியமாக’ என்று  எழுதுவது தவறாகும்.

நீள் வட்டப் பாதையில் சுற்றும் நிலவிலிருந்து, பூமி உள்ள தூரத்தை, அருகில் 3,64,000 கி.மீ. எனவும், தொலைவில் 4,06,000கி.மீ. எனவும், இருவகையில் ‘துல்லியமாக’ கணக்கிட்டுச் சொல்கிறார்கள்.  

‘மாறடித்து’ அழுவது சரியா?

          கற்பனை நலமும், சொற்புனை வளமும் கைவரப்பெற்ற நல்ல கவிஞர்கள் கூட, எழுத்துப் பிழையோடு எழுதினால் தமிழ் வருந்தாதா? அவர்கள் அறியாத தமிழல்ல, அவர்களைப் பார்த்து எழுதும் மற்றவரும் அப்படி எழுதுவார்களே? சிற்றூர்ப் பெண்கள் மாரடித்து அழுவதுண்டு! ‘மாறடித்து’ அழுவதாக நான் அறிந்த நல்ல கவி ஒருவர் எழுதியிருந்தார்.

            மாற்ற முடியாத சோகத்தை, ‘மாரடித்து’ அழுது  மாற்ற முயல்வது நம் கிராமத்துப் பண்பாடு. “தன்நெஞ்சு அறிவது பொய்யற்க”குறள்(293), “நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டா” உலகநீதி(2) மார்-மார்பகம், நெஞ்சு - உறுப்பின் மேல் ஏற்றிய அழகான கற்பனை வேலை!  

சின்ன ர’ என்பதும் தவறு!   பெரிய ற’ என்பதும் தவறு! 

ர - இதனை, இடையின ர கரம் என்பதே சரியானது - மரம், கரம்.

ற - இதனை வல்லின ற கரம் என்பதுதான் சரி - மறம், அறம்.

வல்லினம் கசடதபற (வன்மையாக, நெஞ்சிலிருந்து பிறக்கும்) மெல்லினம்ஙஞணநமன (மென்மையாக,மூக்கிலிருந்து பிறக்கும்) இடையினம்யரளவழல (இடைப் பட்ட கழுத்திலிருந்து பிறக்கும்)

வலுத்த பணக்கார வர்க்கம் (வல்லின எழுத்து)

வறுமைப் பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)

இடையில லோல் படுற’ நடுத்தர வர்க்கம்! (இடையின எழுத்து)

இதுல வல்லெழுத்து ரெண்டும் சேர்ந்து வராது.

சிலபேரு முயற்ச்சினு எழுதறது தப்பு!

என்னதான் கடுமையான முயற்சியா இருந்தாலும் அது முயற்சிதான் !

வாழ்க்கை முறையை இப்படி எழுத்து அமைப்பிலும் வச்ச நம்ம பெருசுக,   எப்பேர்ப்பட்ட ஆளா இருக்கணும்? யோசிங்க... யோசிச்சா தமிழ் இனிது!

-------------------------------------------

-- பின் குறிப்பு--

(வலைப் பக்க வாசகர்களுக்காக)

நான் மற்றவர் கருத்துகளையோ பதிவுகளையோ

“வெட்டி ஒட்டும்” பழக்கமுடையவன் அல்ல! மேற்கோள் காட்டினால் அதற்கான ஆதாரத்தையும் எழுதுவேன்.

இக்கட்டுரையின் இறுதிப் பகுதி

“வளரும் கவிதை”எனும் இந்த நமது வலைப்பக்கத்தில்  

நான் எழுதிய பதிவின் சாரம்!  

இந்தப் பதிவு லட்சக்கணக்கான பார்வையாளரைக் கொண்டது! 

(கீழுள்ள முதற்பத்து (டாப்-டென்!) பதிவுகளைப் பாருங்களேன்!

 எளிமையான தமிழ் இலக்கணம் என்பதால்

மீளப் பயன்படுத்தினேன் அவ்வளவே

அந்தப் பதிவின் இணைப்பு இதோ - https://valarumkavithai.blogspot.com/2014/11/blog-post_26.html

---------------------------------------------- 

 (பதிவிட்டது -14-11-23 இரவு-8-00மணி) 

---------------------------------------------------------