இயக்குநர் சங்கர் இயக்கி வெளிவந்துள்ள படம் “ஐ”
விக்ரமின் நடிப்பு, இசை பிரம்மாண்டம் எல்லாம் சரி.. ஆனால், கதையில் வில்லன்களில் ஒருவராகவும் அலங்கார நிபுணராகவும் வரும் பிரபல ஆடை அலங்கார நிபுணர் ஓஜாய் ரஜினி எனும் திருநங்கையரைப் படத்திலும் அவ்வாறே ஆடைஅலங்கார நிபுணராக மட்டுமின்றி திருநங்கையாகவும் காட்டி, காமவெறி பிடித்தவராகவும், தனது இச்சைக்கு இணங்காத கதாநாயகனைப் பழிவாங்குபவராகவும் காட்டிய இயக்குநர் சங்கரைக் கிழிகிழியென்று கிழித்துத் தொங்கவிடுகிறார் - திருநங்கை “லிவிங் ஸ்மைல்“ வித்யா. இவர் மிகச்சிறந்த நிகழ்த்துகலைக் கலைஞர் மட்டுமல்ல.. எழுத்தாளரும் கூட..
இவரைத் தெரியாதவர்கள் இந்த இவரது குமுறலின் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்..
இது சாதாரணக் கட்டுரையல்ல
கிண்டலும் கேலியுமாக
உண்மையை உரத்து முழங்கும்
சத்திய ஆவேசம்! -
கிண்டலும் கேலியுமாக
உண்மையை உரத்து முழங்கும்
சத்திய ஆவேசம்! -
தமிழ் சினிமா கண்ட
மாபெரும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு,
தங்களின் “ஐ”(ய்யே) காவியம் கண்டேன்.
விக்ரம் போன்ற வித்தியாச நடிப்பு வெறி கொண்டவர்களும், ஆஸ்கர் ரவிச்சந்திரன் போன்ற தயாரிப்பாளரின்
பணவெறிக்கும், கோடிக்கணக்கான
ரசிகர்களின், ரசிக மனோபாவத்திற்கு
பின்னுள்ள பெண்களின் மீதான பாலியல் வெறிகளுக்கும், ஹீரோயிசம் எனும் பொறிக்கித் தனங்களுக்கும், நாயகவழிபாட்டிற்கெல்லாம் தஞசம் தரும் ஆலயம, “a Shankar film” தான் என்பதை அறியாதார் யார்?!
நியாயமான ஒரு படைப்பை
புரிதலின்றி மதத் துவேசமாக சித்தரித்து அப்படைப்பையும், படைப்பாளியையும் பின்வாங்க செய்யும் அதேவேளையில் தான்
உங்களின் படைப்புச் சுதந்திரத்தின் வெற்றியையும் வேடிக்கைப்
பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதே மதத் துவேசத்தை காரணம் காட்டி “’டாவின்சி கோட்’’ தடை செய்யப்பட்ட
நாட்டில், இதே மத துவேசத்தை
காரணம் காட்டி தற்காலிக தடை செய்யப்பட்டு, அதுவே பெரும்
விளம்பரமுமாகி வணிக வெற்றியும் அடைந்த ‘’விஸ்வரூபம்’’ படம் வெளியானதும் இங்கேதானே..
ஆனால், தாய்நாட்டு அகதிகளாக, பாலியல் வெறியர்களாக, அருவெருப்பான சமூக விரோதிகளாக எங்களை எப்படியும்
சித்தரிக்ககூடிய அருகதை கொண்ட தங்களைப் போன்ற மகா கலைஞர்களை மட்டும் யாரும்
எதுவும் கூறப்போவதில்லை.
சமீபகாலமாக வலைதளங்களில்
திரைப்படங்களை துவைத்து, கிழித்து தொங்கப்போடும்
வலைதள விமர்சகர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்களுக்குகூட இந்த ‘ஐ’ படம் அவர்களின்
எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கம் தான். இம்மொக்கை கதை, திரைக்கதையை கலாய்த்த அளவிற்கு ‘ஒன்பதுகளை’ காயப்படுத்தியதைப்
பற்றி கண்டுகொள்ளவில்லை. இன்னும் கூடுதலாக ஒரு விமர்சகர் ‘’ இதில் ஒரு ‘நயன்’தாரா வேறு வில்லன்..!!’’ என்று எழுதியிருக்கிறார். குறைந்தபட்சம் இந்த ஆபத்தான
ரசனையை வளப்படுத்திய விதத்தில் நீங்கள் உள்ளம் குளிர்ந்திருப்பீர்கள் என்று
நம்புகிறேன்.
பிரம்மாண்டம், பிரம்மாண்டமான செட், பிரம்மாண்டமான கலைஞர்கள், அதிபிரம்மாண்டமான பட்ஜெட் தாண்டி “அதற்கும் மேல’’ யும் சில விசயங்கள்
இருப்பதை தங்களின் பிரம்மாண்ட மூளைக்கு முன் பகிர்ந்து கொள்ள இச்சிறுமதியாள்
விரும்புகிறேன்.
”சிவாஜி” படத்தில் போகிற போக்கில் திருநங்கைகள் மீது காறி
உமிழ்ந்ததை நினைத்துப் பார்க்கிறேன். “சின்னக் கலைவாணர்” அவர்கள் ‘’இப்பத்தான் ஆப்பரேசன் பண்ணிட்டு வந்திருக்கு’’ என்று ஏளனமாக கூறியதும் ‘’சீ..சீ…’’ என்று அருவெறுப்புடன்
எங்கள் சூப்பர் ஸ்டார் விலகிச் சென்றதை தூசி தட்டி தற்போது, “அதற்கும் மேலாக’’ பிரம்மாண்டமாய் காறி
துப்பியதைத் தான் பேச விரும்புகிறேன்.
வழக்கமான நாயகன் போலவே
இதிலும் விக்ரம் அவர்கள் மிக ஆண்மையுடன் வில்லனை பார்த்து, முதல் பத்து நிமிடங்களிலேயே ‘’டே…பொட்ட..’” என்கிறார். நான் அதிர்ச்சியடையவில்லை, நானும் என்னைப் போன்ற பொட்டை பிறவிகளும் தமிழ் சினிமாவின
இத்தகைய தொடர் பதிவுகளால் இவற்றிக்கு நன்கு பழகியிருக்கிறோம். விக்ரம்
அவர்களுக்கும் கூட இந்த வசனம் ஒன்றும் புதிதல்ல, தனக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுத்த பாலா அவர்களின் ’’சேது’’ படத்தில் கூட “டே.. இப்பிடி பண்ணி பண்ணியே ஒருநாள் நீ அஜக்காவே
மாறப்போற…” என்று சொன்னவர்தான்.
அதற்கு பிறகு இச்சொல்லாடலை அவர் பயன்படுத்தாத படங்களின் எண்ணிக்கைதான் குறைவாக
இருகக்கூடும்.
‘’சதுரங்க வேட்டை’’ என்னும் சமூக அக்கறை கொண்ட படமியக்கிய திரு.வினோத்
அவர்களே ‘’பொட்ட’’ என்று சொல்லாடலை எளிதாக பயன்படுத்துகையில், அதனை பிரபல திரைவிமர்சகர்களான கேபிள்சங்கர்களும்
சப்பைக்கட்டு கட்டும் போது, உங்களிடம் மட்டும் அந்த
கரிசனத்தை நாங்கள் எதிர்பார்க்கவா முடியும்.
அதுசரி உங்களால் ’’பொட்டை’’ என்று அறியப்படும்
நாங்கள் உங்கள் ஆண்மை பராக்கிரமத்திற்கு முன் அப்படி என்னதான் குறைந்து விட்டோம்?! உள்ளம் முழுதும் பெண்மை குடியிருப்பதை அறிந்து
எம்பாலினத்திற்கு நேர்மையாக இருக்கிறோமே ‘’அதற்கும் மேலாக’’வா உங்கள் பராக்கிரமம் சிறந்தது? திருநங்கையாக குடும்பத்தையும், அது தரும் அரவணைப்பையும், பாதுகாப்பையும் விட்டு வெளிவர துணிச்சல் இருக்கிறதே ‘’அதற்கும் மேலாக’’வா உங்கள் பராக்கிரமம்
சிறந்தது? இந்திய பிரஜைக்குரிய
சகல உரிமைகளும் மறுக்கப்பட்டு தாய்நாட்டு அகதிகளாவோம் என்பதை அறிந்தும்
திருநங்கையாக குடும்பத்தை விட்டு வெளியேறுகிறோமே ’’அதற்கும் மேலாக’’வா உங்கள் பராக்கிரமம்
சிறந்தது? பெற்றோர்களின்
சொத்துசுகம் எதுவிமில்லாமல் சூனியத்திலிருந்து எங்கள் வாழ்க்கையை நிர்கதியாகத்
துவங்கி அடுத்தவர்களை சாராமல் வாழ்கிறோமே ‘’அதற்கும் மேலாக’’வா உங்கள் பராக்கிரம்ம் சிறந்த்து? தெருவிலும், வெள்ளித்திரையிலும்
உங்கள் ஆண்பராக்கிரசாளிகள் சொல்லாலும், செயலாலும் எங்கள் மீது
நிகழ்த்தும் வன்முறைகளை துணிவோடு எதிர்கொண்டு தொடர்ந்து செல்கிறொமே ’’அதற்கும் மேலாக’’வா உங்கள் ஆண்மை
பராக்கிரமம் வாய்ந்தது? அல்லது ‘பொட்டைகள்’ சோத்தில் உப்பு போட்டு
தின்பதில்லை என்பது உங்களின் திண்ணமான எண்ணமா??
”ஐ” என்ற தலைப்பிற்கேற்ப ஐந்து வில்லன்கள் வேண்டுமென்று
யோசித்தது சரி. அதற்கும் மேலே, கதைக்களத்திற்கேற்ப அதே
துறைசார்ந்த வில்லன்களாக வைத்த உங்களின் மெனக்கெடலை பாராட்டுகிறேன்.. அதற்கும்
மேலாக, பிரம்மாண்டமாக, ரிச் லுக்குடன், அதேசமயத்தில்
வித்தியாசமான, காமடியான, வில்லன் வேண்டுமென, ஒரு ஸ்டைலிஸ்டாக
திருநங்கையை வைத்ததையும், அதுவும் ஆத்தண்டிக்காக
இருக்க வேண்டுமென்பதற்காக உலக அழகியையே, அழகாக காட்டிய நிஜ
ஸ்டைலிஸ்ட் ஓஜாஸ் ரஜினியையே (எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராயை அழகாய் காட்டியவர்
இவர்தான்.. மொழி தெரியாத அவருக்கு என்ன கதை சொல்லி நடிக்க வைத்தீர்கள் என்பது
தங்களுக்கே வெளிச்சம்.) நடிக்கவைத்ததில் நிஜமாகவே நான் மெரசலாகிட்டேன். ஆனால், அந்த கீழ்த்தரமான பாத்திரத்திற்கும் அவரது நிஜப் பெயரான
ஓஜாஸ் என்பதையே வைத்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் இயக்குநரே?
தான் வியக்கும், விரும்பும் அழகியாலேயே இந்தியாவின் நம்பர் ஒன்
ஸ்டைலிஸ்ட் என்று அறிமுகப்படுத்தப்பட்ட போதும், ஓஜாஸ் மீது நாயகனுக்கும், நண்பனுக்கும் அவ்வளவு கீழ்த்தரமான பார்வை ஏன் வருகிறது?. எல்லா இன்னல்களையும் கடந்து பல திருநங்கைகள் பல
துறைகளில் சாதித்து வருகிறார்கள் தான். ஆனாலும், அவர்கள் ஏளனத்திற்குரியவர்கள், என்பதை, பார்க்கும் ரசிகர்கள் மனதில் உறுதியாக
விதைக்கத்தானே?! இதைச் செய்தீர்கள்?. தமிழ் ரசிகர்களே திருநங்கைகளை கலாய்க்க, ‘’காஞ்சனா’’ (அந்தப் படம்
திருநங்கைகளை சற்று கண்ணியமாகிய படம் என்றாலும், இறுதியில் அதையும் கலாய்க்க பயன்படுத்தும் ரசிகர்களை
எண்ணி வியக்கேன்..!!) என்று அழைக்க அப்டேட் ஆகியிருக்கும் நிலையில் ‘’ஊரோரம் புளியமரம்..” என்று பாடுவது எதனால்? நீங்கள் எதிர்பார்த்ததை போலவே அந்த காட்சியில்
ரசிகசிகாமணிகள் அரங்கம் அதிர சிரித்தார்கள்தான். என்ன அந்த அருவெறுப்பான சிரிப்பை
மீறி, முதல்வன் படத்தில்
வரும் புகழின் அம்மாவைப்போல என்னைப் போன்ற ‘பொட்டை’களை பெற்ற அம்மாக்களின் கேவல்கள் உங்கள் காதை
எட்டியிருக்காது.
அதெப்படி, வெறும் திரையிலும், போஸ்டர்களிலும் மட்டுமே
கண்ட ஒரு அழகியை, அவள் அழகி என்பதால்
மட்டுமே ஒரு ஆணழகன் காதலித்துவிடமுடியும், அதுவும் உண்மையான, நியாயமான, கல்மிஷம் இல்லாத
காதலாகிறது. குற்றவுணர்வாலும், பரிதாபத்தாலும் ஒரு
அழகியால், ஆணழகனை பரிசுத்தமாக
காதலிக்க முடிகிறது. ஆனால், ஒரு திருநங்கையின்
காதல் உணர்வு மட்டும் எப்படி தங்களுக்கு அவ்வளவு நாராசமானதாகிறது. அவள் காதல், நாயகனால் மட்டுமல்ல, நண்பனாலும், நாயகியாலும், படத்தில் வரும் விளம்பர பட இயக்குநராலும் அருவெறுப்பாகவே
பார்க்கப்படுகிறது. அதாவது இப்படத்தின் இயக்குநராகிய நீங்கள் வெறுப்பதைதான்
சூசகமாக கூறுகிறீர்கள் இல்லையா?
அவரை ரிச்-திருநங்கையாக, காட்ட ஆரம்பத்தில் அழகான கேமரா ஆங்கிளை பயன்படுத்திய
நீங்கள். அவரது காதல் புறக்கணிக்கப்படும் கணம் முதல் அவரை அசிங்கமாக மட்டுமே காட்ட
பயன்படுத்திய காமிரா ஆங்கிளில் அசிங்கமாக தெரிந்தது ஓஜஸ் மட்டும் இல்லை
நீங்களும்தான் என்பதை உணர்ந்தீர்களா?
இவ்வளவு வரைக்குமே
உங்களிடம் நாகரீமாகத்தான் கோபம் கொள்ள நினைத்திருந்தேன். ஆனால், “9’” என்ற அறையெண்ணை காட்டி பின் ஓஜாஸை காட்டிய உங்கள் அரதப்
பழசான, அருவெறுப்பான
விளையாட்டை எண்ணி என்னால் கெட்டவார்த்தைகளால் வசைபாடாமல் இருக்கமுடியல்லை. ஏனெனில், இதே ‘’9’’ என்ற சொல்தான், என் பள்ளிகாலம் முழுதும் முள்ளாக குத்தி, கண்ணீர் சூழ சக மாணவர்களிடமிருந்து என்னை
தனிமைப்படுத்தியது. இதே ‘’9’’ என்ற சொல்தான், இப்போதுவரையிலும் எந்த அற்பனும் என்னை சிறுமைபடுத்த
பேராயுதமாக பயன்படுத்துகிறான். அவற்றோடு கூடுதலாக சமூகம் கற்றுக்கொடுத்த
கெட்டவார்த்தைகள்தான் இப்போது என் கைவசம் இருப்பவை.
இருந்தாலும், கேபிள்சங்கர் போன்ற விமர்சன சிகாமணிகள் எனக்கு ‘நாகரீக வகுப்பு’ எடுப்பார்களே என்று
அஞ்சி நானாகவே நாகரீகமாகவே தொடர்கிறேன். ’’இப்படத்தில் எந்த
மிருகங்களும் துன்புறுத்தப்படவில்லை’’ என்ற டிஸ்க்லைமருடன்
துவங்கும் இப்படத்தில் தான், கிடைக்கும் ஒரு
வாய்ப்பை கூட விடாமல் பாலியல் சிறுபான்மையினர் முதல், மாற்றுத்திறனாளிகள் வரை காயப்படுத்த தங்களுக்கு கட்டற்ற
சுதந்திரம் அளித்திருக்கிறது நமது சென்சார் போர்ட். அதன் தாராள மனதை கண்டிக்காமல்
உங்களை மட்டும் கேள்வி கேட்டு என்ன பயன்?
ஒரேயொரு படத்திற்காக
இத்தனை மெனக்கெடலையும், கடின உழைப்பையும், தனது நேரத்தையும் கொடுத்து மகாகலைஞனாக உயர்ந்து நிற்கும்
விக்ரமிடம் இதுபோன்ற அற்பகாட்சிகளில் நடிக்க வேண்டாமென என்னால் வேண்டுகோள் கூட
வைக்கமுடியவில்லை. ஏனெனில், அடுத்த உலகநாயகனாக
வேண்டுமென துடிக்கும் அவரது ஆதர்ச நாயகனான கமலும் கூட, வாசிப்பும், பகுத்தறிவும் கொண்ட
நடிகரென நவீன இலக்கியவாதிகள் ஈசிக்கொள்ளும் அதே கமல்ஹாசன் அவர்களும்தான் ‘பொட்டை’என்னும் சொல்லாடலை
தொடர்ந்து தமது படங்களிலும், “அதற்கும் மேலாக” ‘’வேட்டையாடு, விளையாடு’’ படத்தில் திருநங்கைகளையும், சமபால் ஈர்ப்பினரையும் தனது பங்கிற்கு சிறப்பாக
மலினப்படுத்தியிருக்கிறாரே…
உங்கள் இருவருக்கும்
மட்டுமன்றி, அனைத்து நடிகர்கள், காமடியன்கள், இயக்குநர்களுக்கும், ஒரேயொரு தகவல்.. நீங்கள் கொண்டாடும் ஆண்பராக்கிரமசாளிகள்
மட்டுமே உங்கள் ரசிகர்கள் அல்ல. உங்களால் ஏலியனாக கருதப்பட்டு, மலினப்படுத்தப்படும் நாங்களும் உங்களின் ரசிகர்கள்தான்.
எங்கள் வீட்டிலும் டிவி பெட்டி உண்டு. நாங்களும் படங்கள் பார்க்கிறோம்.
ரசிக்கிறோம், சிரிக்கிறோம், அதுமட்டுமல்ல தவறாமல் சோற்றிலும் உப்பு போட்டுதான்
சாப்பிடுகிறோம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
-------------- லிவிங்
ஸ்மைல் வித்யா
(வரிகளுக்கு வண்ணங்கொடுத்ததும், அடிக்கோடிட்டதும் நான்தான். மற்றபடி இந்தக் கட்டுரை முழுவதும் சகோதரி“லிவிங்ஸ்மைல்” வி்த்யா அவர்களுடையதுதான் - நா.முத்துநிலவன்)
-----------------
இவரது வலைப்பக்கம் -http://livingsmile.blogspot.in/
இவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள -
http://ta.wikipedia.org/ லிவிங்ஸ்மைல்வித்யா
http://www.vallinam.com.my/issue44/vidyabathilgal.html
------------------------
வணக்கம் அய்யா !
பதிலளிநீக்குஅலுவல் காரணமாக பல நாட்கள் வலைதளம் வரமுடியாமல் இன்றுதான் நேரம் வாய்த்தது ! முதலில் வித்யா அவர்களின் பகிரங்க கடிதத்தை உங்கள் தளத்தில் பிரசுரித்தமைக்கு மரியாதையுடன்கூடிய நன்றிகள் பல !
ஜாதி, மதம், பாலியல் மற்றும் ஆணாதிக்க சிந்தனைகள் தொடங்கி மனிதனின் நிறம் பற்றிய கருத்து வரை சினிமாவால் சீரழிக்கப்பட்ட தமிழ் சமூகத்துடன் ஒப்பிட மற்றொரு சமூகம் உலகில் இருப்பதாய் தோன்றவில்லை !
சினிமா அதிமேதாவிகளின் தந்திர பரப்புரைகளை எழுதினால் பல பதிவுகளுக்கு நீளும்.
ஆணாதிக்க மற்றும் வக்கிர "ஷங்கர்" இயக்குனர்களின் பரப்புரைகளை தமிழ் ஊடங்களும் "மறந்து" விடுவது "செலக்டிவ் அம்னீஷியா" தான் ! மூடர்கூட்டம் படம் எந்த மேல்நாட்டு படத்தின் தழுவல் என்பதை மிகச்சரியாக கணிப்பவர்களின் கண்களுக்கு மைக்கேல் ஜாக்சனின் ஆல்பங்கள் தொடங்கி matrix, beauty and the beast, volverine, xmen போன்ற பிரபல, சமீபத்திய படங்களிலிருந்து ஷங்கர் உருவும் "மேக்கப்ப்புகள்" மட்டும் தெரிவதில்லை ! அதைவிட மோசம் ஜென்டில்மேன் படத்திலிருந்து ஒரே "சுட்டக்கோழி" கதைக்கு பலமுறை மசாலா தடவி விற்பதும் ஏனோ புரியாமல் போவது !!!
மாபெரும் சமூக புறக்கணிப்பையும் மீறி போராட்டம், தியாகம், உழைப்பு என முன்னேறும் வித்யா போன்றவர்களின் முன்னால்... "ஷங்கர்" இயக்குனர்கள் விமர்சனத்துக்கு கூட லாயக்கற்றவர்கள்.... இருந்தாலும் அவரின் பாய்ஸ் படத்துக்கு விகடன் எழுதிய விமர்சனத்தை இங்கு குறிப்பிட விரும்பிகிறேன்...
" ச்சீ ! "
நன்றி
சாமானியன்
பணம் புகழ் இந்த இரண்டை மட்டும் குறியாகக் கொண்ட இந்த வெறியர்களுக்கும் அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் பக்குவம் என்றும் வராது
நீக்குகண்ணதாசன் அன்று எழுதினான்"கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்.- அதுபோல இந்த ஜன்மங்களும் திருநங்கையாக பிறந்து (கோடி முறை) அவர்கள் அடைந்த, அடைந்துகொண்டிருக் கின்ற துன்பங்களை ஒவ்வொரு கணமும் அனுபவித்தால்தான் உணருவார்கள்.
சகோதரி வித்யா உணர்ச்சிகரமாக எழுதக்கூடியவர என்பதை இந்தக் கட்டுரையிலேயே பார்க்க முடியும். தவிரவும் வேறுசில நூல்களையும் எழுதியிருக்கிறார். அற்புதமான மேடைநாடகக் குழுவை நடத்துகிறவர். இயல்பான மனிதர்.
நீக்குசகோதரி வித்யாவின் எழுத்துப் பதிந்த தளத்திற்கே சென்று, நன்றி தெரிவித்திருக்கும் நண்பர் சாமானியருக்கு நன்றி
நீக்குஅன்பின் முத்து நிலவன்
பதிலளிநீக்குலிவிங் ஸ்மைல் வித்யாவின் பதிவு நன்று. அதனை இங்கு வெளியிட்ட தங்களையும் பாராட்ட வேண்டும்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
நன்றி சீனா அய்யா.
நீக்குNeed patience to read this.....
பதிலளிநீக்குஉண்மைதான்
நீக்குஐயா,
பதிலளிநீக்குஇணையத்தில் ஐ படம் பற்றிய பல விமர்சனங்களை படித்தேன் ஐயா. ஆனால் யாருமே இந்த செய்தியினை முன் வைக்கவே இல்லை. தங்களின் பதிவில் ஐ பற்றிப் படிக்கப் படிக்க மனம் கூசுகிறது ஐயா
இப்படியா திருநங்கைகளைக் கேவலப் படுத்துவது
லிவிங் ஸ்மைல் வித்யாவின் கண்டணத்தை முழுவதுமாய் பதிவிட்ட தங்களைப் பாரட்ட வேண்டும் ஐயா
சங்கரின் பிரம்மாண்டத்தில் விழுந்து கிடக்கும் உலகில் உண்மையான பார்வை இதுதான்... அதுதான் என்னைக் கவர்ந்து எடுத்துப் பதியச் செய்தது. பாராட்டு சகோதரியையே சாரும்.
நீக்குதம 2
பதிலளிநீக்குஒவ்வொரு வரியும் சாட்டை அடி என்று சொல்வதை விட, அவரின் மன வலி தெறிக்கிறது...
பதிலளிநீக்குவலியில் அலறும் வார்த்தைகள் நமக்குள் ஏற்படுத்திய வலியை விவரிக்கவே முடியாது. இனியேனும் இதைப்படிப்பவர்களேனும் திருநங்கையர் உணர்வைப் புரிந்துகொண்டு, மனிதர்களாக நடத்தினால் போதும்.
நீக்கு// கீழ்த்தரமான பார்வை ஏன் வருகிறது...? // இந்த வரிக்கு பின்னால் வரும் வரியை சரியாக படிக்க முடியவில்லை... background color-யை மாற்ற வேண்டும் ஐயா... இல்லையெனில் எழுத்தின் நிறத்தை வெள்ளை நிறத்திற்கு மாற்ற வேண்டும்...
பதிலளிநீக்குநன்றி வலைச்சித்தரே. மாற்றிவிட்டேன்.
நீக்குதமிழ்மணத்தில் முதலில் ஏறவில்லை. பின்னர்தான் ஏறியது. அதற்கும் நன்றி.
நீக்குலிவிங் ஸ்மைல் வித்யாவின் மனக்குமுறலைப் படித்தபோது மனம் கனத்தது. எந்த அளவு மனம் வருத்தப்பட்டிருந்தால் இவ்வாறு எழுதியிருப்பார். உண்மையிலேயே மிகவும் வேதனையான செய்தி. தனக்காகவும் தன்னைப் போன்றோருக்காகவும் இவர் எழுதியுள்ளது சமூகத்திற்கே ஒரு பாடம். அவர்களுடைய உணர்வை நாம்புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். வியாபார நோக்கு அனைத்துத் துறையிலும் பெருகிவிட்டுள்ள நிலையில் மனிதம் நம்மிடம் குறைந்துவருகிறது என்பதையே இவை போன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன. திருந்த முயற்சிப்போம். வேதனையைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி அய்யா. மாறுபட்ட பார்வை இருக்கிறது அதுதான் சரியான பார்வையும் கூட என்பதே என் கருத்து...தங்கள் கருத்திற்கு நன்றி
நீக்குஅருமையான பகிர்வு. விவேக் உள்ளிட்ட காமெடியன்கள் மனிதர்களின் உடல் ஊனங்களை நகைச்சுவை என்ற பெயரில் வசனங்களால் குத்துவது பல படங்களிலும் பார்த்துப் பழக்கப்பட்ட ஒன்று. வித்யாவின் ஆதங்கத்தில் 100 சதவிகிதம் நியாயம் உள்ளது. அவர்களுக்கென்று குரல் கொடுக்கத்தான் ஆட்கள் இல்லை. மிகவும் வேதனையாக இருந்தது. "அது மட்டுமல்ல, தவறாமல் சோற்றிலும் உப்புப்ப் போட்டுதான் சாப்பிடுகிறோம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்பது முத்தாய்ப்பான வரி.
பதிலளிநீக்குஅதுதான் சரியான அடி.
நீக்குஅவர்கள் உப்புப் போட்டுத் தின்றால் இது உறைக்க வேண்டும்
நெத்தியடி...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு
நன்றி மது
நீக்குதம +
பதிலளிநீக்குநன்றி மது. (நேற்றைய பொள்ளாச்சி நிகழ்வுக்கு வர இயலாத சூழலுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்)
நீக்குஒவ்வொரு வார்த்தையிலும் வேதனை கொப்பளிக்கிறது. பலரும் இந்த விஷயத்தை கண்டிக்கவே செய்திருக்கின்றனர் .சங்கர் போன்றவர்களுக்கு இது அழகல்ல.தினந்தோறும் ரயிலில் திருநங்கைகளை பார்க்கிறேன். அவர்களை கேலிப் பொருளாக பார்க்கும் மன நிலை இப்போது மாறிவருகிறது. இந்த சூழ்நிலையில் இது போன்ற சித்தரிப்புகளால் திரைப்படங்களை பார்க்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தக் கூடாது.
பதிலளிநீக்குவிஜய் டிவி இவர்கள் தொடபாக ஒரு நிகழ்ச்சி நடத்தியது. அதை பார்த்தவர்களுக்கு நிச்சயம் சிறு மாற்றமாவாது நிகழ வாய்ப்பு இருக்கிறது.அதைப் பற்றிய பதிவு ஒன்றும் எழுதி இருந்தேன்
நீயா?நானா?திருநங்கைகளும் பொதுமக்களும்
நல்ல பகிர்வை அளித்திருக்கிறீர்கள் ஐயா! முன்பெல்லாம் அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தக் கூட வாய்ப்பு இல்லை. இப்போது இணைய தளம் அந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறது.அவர்களின் குரல் சமுதாயத்தில் இனி சற்று அதிகமாக ஒலிக்கட்டும். இதை முகநூலில் பகிர்கிறேன் நன்றி
அவசியம் படிக்கிறேன் முரளி.
நீக்கு“முன்பெல்லாம் அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தக் கூட வாய்ப்பு இல்லை. இப்போது இணைய தளம் அந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறது.அவர்களின் குரல் சமுதாயத்தில் இனி சற்று அதிகமாக ஒலிக்கட்டும்”
உண்மையான வார்த்தைகள். முகநூல்பகிர்வுக்கும் நன்றி.
திருநங்கையரின் கோணத்தில் இருந்து இவ்வளவு சிந்தனையா? எப்படிப்பட்ட மனச்சோர்வை அவரகளுக்கு நாம் அறிந்தோ அறியாமலோ கொடுத்து வந்திருக்கிறோம் ! இனியாவது 'பொட்டை' 'ஒன்பது' போன்ற சொற்களை கவனத்தோடு பயன் படுத்துவோமாக !
பதிலளிநீக்குதங்களின் நல்ல மனத்தில் உதித்த சொற்களில் - “எப்படிப்பட்ட மனச்சோர்வை அவரகளுக்கு நாம் அறிந்தோ அறியாமலோ கொடுத்து வந்திருக்கிறோம்“ என்பதில் நானும் இருந்திருக்கிறேன் அய்யா. இந்த மாற்றம்தான் அந்தச் சகோதரிகளின் எதிர்பார்ப்பு. அவருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அவர்களது குரலை நாமும் முழங்குவோம்.
நீக்குதம்பி! பெரும்பாலும் நான் திரைப்படங்களைப் பார்ப்பதில்லை! தங்கள் பதிவு என்பதால் படித்தேன் !உணர்வுப் பூர்வமான வலி திரு நங்கையின் உள்ளத்தில் ஏற்பட்டது நியாமே! படித்த எனக்கே கூட வேதனை ஏற்பட்டது என்றால் மிகையல்ல! அனைவரும் அறியத் தந்த தங்களுக்கு நன்றி!
பதிலளிநீக்குநன்றி அய்யா.
பதிலளிநீக்கு“உணர்வுப் பூர்வமான வலி திரு நங்கையின் உள்ளத்தில் ஏற்பட்டது நியாமே! படித்த எனக்கே கூட வேதனை ஏற்பட்டது“ என்கிறீர்கள்..
இதுதான் அந்தச் சகோதரியின் எதிர்பார்ப்பு. அந்த அளவில் அவர் வெற்றிபெற்றுவிட்டார் என்பதைத் தெரிவிப்பதே என் எதிர்பார்ப்பு
நன்கு உரைக்கிற மாதிரி நறுக்கென்று கேள்வி கேட்டிருக்கிறார்! இனியாவது சினிமா வியாபாரிகள் திருந்தினால் சரி!
பதிலளிநீக்குஇதற்கெல்லாம் திருந்தமாட்டார்கள் என்பதால் சகோதரி வித்யாவும், திருநங்கையர் அமைப்பினரும் நேற்று வழக்குப் போட்டிருக்கிறார்கள் இன்றைய செய்தித்தாளில் பார்க்கவும். நன்றி
நீக்குஉண்மைதான் ஐயா...
பதிலளிநீக்குகாஞ்சனா போன்ற ஒரு சில படங்கள் திருநங்கைகளை உயர்வாய் காட்டின என்றாலும் ஐ படத்தில் தரக்குறைவான பேச்சுக்கள், வசனங்கள் என வைத்தது ரொம்பக் கொடுமை.
அவர்கள் எண்ணம் எல்லாம் தியேட்டரில் சிரிக்க வேண்டும் அவ்வளவே... அது நடந்தது... அவர் வரும் காட்சிகளில் எங்கும் சிரிப்பலை... ஆனால் இங்கு சகோதரி சொல்லியிருப்பது போல் அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ள யாரும் இல்லை....
நல்ல கட்டுரை... இதை ஷங்கர் போன்ற இயக்குநர்கள் கண்டிப்பாய் படிக்க வேண்டும்.
இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா...
நன்றி நண்பரே.
நீக்குசங்கர் என்று நல்ல படம் கொடுத்திருகிறார்? யாரவது சொல்லவும்?
பதிலளிநீக்குஅவரைக் குறைத்து மதிப்பிட முடியாது.
நீக்குதிரைமொழியில் தேர்ந்தவர். என்ன..எல்லாவற்றையுமே பிரம்மாண்டமாகக் காட்டித் திரையுலக அம்பானியாகிவிட்டார். நல்லசெய்திகளுக்குள் சில நாற்றத்தையும் வைத்துவிடுவார்.
லிவ்விங் ஸ்மைல் வித்யா எழுதிய "நான் (சரவணன் ) வித்யா எனும் புத்தகத்தைச் சங்கர் படித்திருந்தால், இந்த இழிதனத்தைச் செய்திருக்கமாட்டார்.
பதிலளிநீக்குபல சினிமாச் சாக்கடைப் பன்றிகளில் "பிராமாண்டம்" சங்கரும் ஒருவர்.
அவருக்குப் படிக்கக் கிடைத்தாலும்..பிரம்மாண்டப் படுத்திப் பணத்தை அள்ளும் வெறியில் இதெலலாமா பெரிய விஷயம்? தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே
நீக்குஅண்ணா
பதிலளிநீக்குஇதற்கு போகிற போக்கில் கமென்ட் போடமுடியாது. மாலை வருகிறேன்!
அன்புள்ள ஐயா
பதிலளிநீக்குவணக்கம். தமிழ் திரைப்படத்தில் கல்லூரி காட்சி என்றால் நகைச்சுவைக் காட்சிக்கு நகைச்சுவை நடிகர் தமிழாசிரியராக இருப்பார். தமிழ்வகுப்புதான் கிண்டல்மொழி அன்று தொடங்கி இன்றுவரை. கடையெழு வள்ளல்களின் ஒருவனான பாரியின் மகளிரைக் கரையேற்ற கபிலர் பட்ட பாட்டையெல்லாம் தமிழுலகம் அறியும். அதனயும் நாடறிந்த ஒருவர் என்கிட்ட இரண்டுபொண்ணுங்க இருக்கு பழக வாங்க.. பிடிச்சா.... இப்படி பேசியவர் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார். எல்லாம் மறந்த கூட்டம் கைதட்டிக்கொண்டிருக்கிறது அந்த தமிழ்ப் பண்பாட்டாளருக்கு.. அப்படித்தான் இதுவும். திருநங்கைகளின் பிறப்பிற்கு அவர்களா காரணம்? இதுபோன்ற தருணங்களில் திரைப்படத் தணிக்கைக் குழுவில் திருநங்கைகளையும உறுப்பினர்களாகப் பங்குபெற்றிருந்தால் இதுபோன்ற நிகழ்வுகளில் தங்கள் உணர்வுகளைப் பிரதிபலிக்க ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும். வித்யா அவர்களின் உணர்வுகளில் அத்தனை நியாயம் இருக்கிறது. உணர்வுபூர்வமான நியாயம் அது.
அய்யா வணக்கம். என்ன வியப்பு! தாங்கள் சொன்ன இதே ஆலோசனையைத்தான் அந்தச் சகோதரியரும் கோரிக்கை வைத்து நேற்று முழக்கமிடடதாகச் செய்தித்தாளில் படித்தேன். தாங்கள் சரியாகவே சிந்திக்கிறீர்கள். நன்றி
நீக்குஷங்கர் படத்திற்கு என்று என்னிடம் எப்பொதும் ஒரு கண்ணோட்டம் உண்டு அண்ணா! பெண் என்றால் தலையத்தலைய புடவை கட்டவேண்டும், பூ வைக்கவேண்டும், கைநிறைய வளையல் அணியவேண்டும், சாமி கும்பிடவேண்டும் என பல டும் களை பல படங்களில் காட்டுவார். மறந்துட்டேன் பெரும்பாலான ஹீரோயின்கள் வெஜிடேரியனாக வேறு இருப்பார்கள். சைன்டிபிக்கான விசயங்களை வைத்து பிற்போக்கான விசயங்களை கட்டுகிறார் என்று நானும் நினைத்திருக்கிறேன். பெண்களுக்கு சிந்திக்கவே தெரியாது, அவர்கள் அழகு பதுமைகளாக வலம்வர மட்டுமே படைக்கப்பட்டவர் என சித்தரிக்கும் அவர் படங்கள் மூன்றாம் பால் பற்றி புரிந்துகொண்ட பேசும் என நான் எதிர்பார்க்கவே இல்ல! விடுங்க வித்யா,,,, அவருக்கு தெரிஞ்சது அவ்ளோ தான்!
பதிலளிநீக்குநாம் விட்டுவிடலாம் மைதிலி.. காயம் பட்ட அந்தச் சகோதரியர் விடுவதாக இல்லை, கூட்டம் கூட்டி சென்னை மதுரை இரண்டு வழக்குமன்றங்களிலும் அமைப்பு சார்பாக வழக்கும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். நாமும் அவர்களுக்கு ஆதரவாகப் பேச வேண்டும். நன்றிம்மா
நீக்குஐயா!
பதிலளிநீக்குஒரு பக்கம் காயம்பட்ட திருநங்கைகளுக்கு ஆதரவு தருறீங்க. அதாவது ஷங்கரின் கருத்துச் சுதந்திரத்துக்கு வரம்பு இருக்குணு சொல்றீங்க!
இன்னொரு பக்கம் பெருமாள் முருகன், பல தாய்களை கண்கலங்க வைத்துள்ளார். ஒரு சிலர் பின்னூட்டங்களில் வந்து தானும் திருச்செங்கோடுதான், அம்மா அப்பாவுக்கு பல வருடங்கள் சென்றுதான் குழந்தை பிறந்தது .. இப்படி ஒரு கதை எழுதி என் மனதை, குடும்ப வாழ்க்கையை பாதிக்கப்பட வ்வச்சுட்டாரு இந்தாளுனு சொல்றாங்க..
அப்படி கண்கலங்க சொல்லும் பெண்களை கண்டுக்காமல்.. அவர்கள் உணர்வுகளை குப்பையில் போடணும் என்பதுபோல் பெ முருகனின் "அ"நியாய கருத்துச் சுதந்திரத்துக்கு வக்காலத்து வாங்குறீங்க.
கருத்துச் சுதந்திரம் சம்மந்தமான உங்கள் நிலைப்பாடு வேடிக்கையாக இருக்கிறது.
அதாவது நீங்கள் பெ முருகனுக்கு ஆதரவு தந்தால் ஷங்கருக்கும் ஆதரவு தரணும். கருத்துச் சுதந்திரம் ரெண்டு பேருக்கும்தான் இருக்கு..
அல்லது
பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் மனவேதனைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், பெ முருகனின் புனைவால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்.
I dont see any consistency in your stand. தனிப்பட்ட விருப்பு வெறுப்பை வைத்து உங்க நிலஇப்பாடு மாறுபடுகிறது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
விளக்கம் கொடுக்கவும்.
இது நாகரீகமாக எழுதப்பட்ட பின்னூட்டம் என்பதால் இதை பிரசுரிச்சு, "கருத்துச் சுதந்திரம்" பற்றி உங்க நிலைப்பாட்டை விளக்கவும். நன்றி.
ஆகா.. உங்கள் நகைச்சுவை உணர்வு கண்டு பிரமித்துப் போனேன் நண்பர் வருண் அவர்களே! மதுவின் மலரத்தரு விவாதத்தின் பின்னூட்டத் தொடர்ச்சியை இங்கே தொடர்கிறீர்கள் ! சரிதான்.
பதிலளிநீக்குஆடைக் குறைப்பு என்ற ஒரே ஒற்றுமையை வைத்து, காந்தியையும் கவர்ச்சி நடிகையையும் ஒப்பிடுவது போல உங்கள் எழுத்தின் கிண்டல் அருமை போங்கள்.. இதைத்தான் “குதிரைக்குக் குர்ரம்னா ஆனைக்கு அர்ரம்“ என்று சொல்கிறார்களோ?
தலைப்புக் கூட வைக்கலாம் - “பிரம்மாண்ட இயக்குநரும் பெருமாள் முருகனும் ஒன்றுதான்” எப்படி நல்லாருக்கா?
உங்கள் அளவிற்கு எனக்கு இங்கிலீசு தெரியாதையா. ஆனாலும் எங்கள் ஊர்ப் பழக்க வழக்கங்கள், கொஞ்சம் வரலாறு கொஞ்சம் தமிழ் தெரியும். அதனால் விவாதிப்போம்.. சற்றே பொறுக்க வேண்டுகிறேன்.. அவசர வேலைகளை முடித்துவிட்டு, இன்று நாகூர் நிகழ்ச்சி முடித்து நாளை காலை வருகிறேன். சரியா?
ஐயா:
நீக்குசீரியஸான கேள்வியை "காமெடி" அல்லது "நகைச்சுவை" என்பது தவறானதுனு நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லணுமா?
இதேபோல் இன்னொரு முக்கியமான கேள்விக்கு இதே தளத்தில் "கழிப்பறை" உதாரணம் கொண்டு வந்தவர் தாங்கள் என்பது நினைவுக்கு வருகிறது..
உங்கள் தளம். இங்கே நீங்கள் தான் சர்வாதிகாரி என்பதென்னவோ மறுக்க முடியாத ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைப்பாடுதான் என்னுடையது.. இருக்கட்டும்..
இங்கே ஷங்கரையும், பெ முருகனையும், எக்ஸ்(அ) மற்றும் ஒய் (க) என்று வைத்துக்கொள்வோம்..
இப்போ ப்பாதிக்கப் பட்டவர்களைப் பார்ப்போம்..
ஒரு பக்கம் "அ" வால் ..
* திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்னொரு பக்கம்.."க"வால் கழதைப்பேறு தாமதமாக அமைந்த தாய்மார்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்..
* அதாவது வருடங்கள் காத்திருந்து குழந்தை பெற்ற தாய்கள். ஆமாம் தன் கணவனைத்தவிர வேறு எந்த ஆணையும் அந்தரங்க வாழ்க்கையில் சந்தித்திராத தாய்கள்.. மற்றும், அப்படிப்பட்ட தாய்களுக்கும் அவர்களுடைய ஆம்படையானுக்கும் நாட்கடந்து மகளாக/மகனாக பிறந்தவர்கள். ஒரு சில மகள்கள் பின்னூட்டங்களில் வந்து கண்ணீர்விட்டு சென்றுள்ளார்கள். கண்களைத் திறந்துபார்த்தால் அவைகள் உங்கள் கண்களுக்கும் தெரியும்.
இந்த இரு தரப்பும் பாதிக்கப்பட்டுள்ளது..
இதில் உங்கள் நிலைப்பாடு ஒரு பக்கத்தில் உள்ளவர் உணர்வுகளை மதிக்காமல் ஏறி மிதிப்பதாகவும் இன்னொரு பக்கம் உள்ளவர்களை அரவனைத்து ஆறுதல் தருவதாகவும் உள்ளது..
"காமெடி/நகைச்சுவை" போன்ற வார்த்தைகளை வைக்காமல் விளக்கம் அளிக்கவும்..
பொறுமையாக காத்திருக்கத் தயார்!
நன்றி ஐயா!
நன்றி
நீக்குஎனது அடுத்த பதிவே உங்களைப் போலும் நண்பர்களுக்காகத்தான். இன்னும் சற்றே பொறுத்திருங்கள்.
வருணின் பின்னூட்டம் யோசிக்க வைக்கிறது. பெ.மு விஷயத்தில் என் மனம் என்ன நிலைப்பாடு என்பது எனக்கே புரியாத நிலைதான் இன்னமும். ஆனால் கருத்துச் சுதந்திரம் என்று வரும்போது இருவேறு நிலைகளா, இது சரியா என்ற கருத்து யோசிக்க வைக்கிறது.
பதிலளிநீக்குதிரைப்படம் பார்ப்பவர்களோடு ஒப்பிடுகையில் புத்தகங்கள் படிப்பவர்கள் மிகக் குறைவே. மேலும் புத்தகம் படிப்பவர்கள் கொஞ்சமாவத பக்குவம் வந்தவர்களாக இருப்பார்கள். திரைப்படம் என்பது வெகுஜன ஊடகம். நிறைய பேர்களால் பார்க்கப் படுகிறது. குறிப்பாக இளம் வயதினர் திரைப்படங்களுக்கு அடிமையாகவே இருக்கின்றனர். எனவே திரைப்படங்களால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என்று சொல்லலாமா?
சுதந்திரம் என்பது எதிராளியின் முகத்தில் இடிப்பதாக இல்லாதவரை சுதந்திரத்தைப் பாராட்டலாம்!
கருத்துரிமை மற்றும சுதந்திரம் என்பதற்கு “நடுநிலை“ என்றொரு சொல்லைப் பயன்படுத்துவார்கள். நீதிமன்றத்தில் “நடுநின்று“ ஆய்ந்து தீர்ப்புச் சொல்வதாகவும் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை நடுநிலை என்று ஒன்று இல்லை. நல்லது கெட்டது, சரியானது தவறானது இவற்றின் இடையில் நடுநிலை ஏது நண்பா? அந்த வகையில் ஒரு சார்புதான் சரியானது. எந்தச் சார்பு என்பதில் வேறுபடுகிறோம். இன்னும் சொன்னால் சரியானதற்கும் தவறானதற்கும் நடுநிலையில் நான் நிற்பேன் என்பவன் தவறானதற்கே துணைபோகிறான் இல்லையா? சற்றே யோசியுங்கள். அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.நன்றி
நீக்கு