தமிழ் இனிது -43 -------- நன்றி- இந்து தமிழ் திசைகாட்டி - 16-04-2024

 தமிழ்ப் பெயர் தானா?

         நண்பர்கள் சிலர், “என் பெயர் தமிழ்தானா?” என்று கேட்டனர்.  “பொதுவாக அன், உ என முடியும் ஆண் பெயரும் அள், ஐ என  முடியும் பெண் பெயரும் தமிழ்ப் பெயராக இருக்கும், இ இருபால் பெயரிலும் வரும். இதனால்தான் பாரதி, மணி என்பன இருபாலிலும் உள்ளன“ என்றேன். இதைக் கேட்ட ஒருவர், “அய்யோ! நான் பெருமாள், இது  பெண் பெயரா?”என்று பதறிவிட்டார்! இன்னொருவர் ”நடிகை சிம்ரன் ஆண்பாலா?” என்று என்னை மடக்கினார்.   

தமிழில்தான் அன் ஆண்பால், சிம்ரன் தமிழ்ப் பெயரல்ல என்றதும் சற்றே நிம்மதியடைந்தார்! கடவுள் பெயர்களுக்கும், ஜ,ஸ்ரீ,ஷ,க்ஷ,உற,ஸ  கிரந்த எழுத்துப் பெயர்களுக்கும் தமிழ் விதி பொருந்தாது.

            ஆ என முடியும் வடமொழிப் பெயர்கள் தமிழாகும் போது ஆண் எனில் அன் எனவும் பெண் எனில் ஐ எனவும் மாறும் அதர்வா-அதர்வன், சீதா-சீதை போல. தமிழில் பெயர்வைக்கும் உணர்வு இப்போது  பெருகி வருவது மகிழ்ச்சி. பெயர் வெறும் பெயரல்ல, பண்பாட்டின் அடையாளம்! உங்கள், குழந்தைப் பெயர்கள், தமிழ்ப் பெயரெனில் நல்லதுதான். அதைவிட சாதி, மதம் காட்டாத பெயராக இருந்தால் மிகவும் நல்லது.  

நோக்கும் பார்வையும்

            நோக்கம், பார்வை  இரண்டும் ஒன்றுபோல் தோன்றினாலும் வேறு வேறு பொருள் தருவன! பயணத்தின் போது, நம் கையில் உள்ள செய்தித்தாளைக் கேட்பவர், “ஒரு பார்வை (Glance)பாத்துட்டுத் தர்ரேன்” என்பது மேலோட்டமான பார்வை. காதலியைக் காதலன் -ஒரு நோக்கத்தோடு(Sight)- பார்ப்பது நோக்கம்! “அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்“-கம்பன். இதை, “இவள் இருவித நோக்கம் கொண்டவள், ஒரு நோக்கு நோய் தரும், மற்றது அந்நோய்க்கே மருந்தாகும்”(குறள்1091) என்பது கதைக் கவிதை!

ஒற்றுமையும் ஒருமையும்

         ’பன்மையில் ஒருமை’, ‘ஒற்றுமையே வெற்றிக்கு வழி’ என்பதை அடிக்கடி கேட்கிறோம். ஒருமை, ஒற்றுமை இரண்டும் ஒன்றல்ல!

போர்க்கால நிலையில்  ‘இந்தியர் அனைவரும் ஒருதாய் வயிற்று மக்கள்’ என்பது உணர்ச்சியூட்டும் ஒருமைப்பாடு. எல்லா நிலைக்கும் இது பொருந்தாது. மதம், மொழி, இனம், பண்பாடு கடந்து, ‘இந்திய உணர்வில்’ ஒருவருக்கொருவர் உறவு சொல்லி வாழ்வது ஒற்றுமை! இதுதான் இந்தியாவின் பெருமை! இலக்கணத்தில் சொன்னால், ஒருமை தற் கிழமை (என் கை) போல, பிரிக்க முடியாதது. ஒற்றுமை பிறிதின் கிழமை (என் பேனா) போல, தேவைக்கேற்பப் பிரிந்தும் சேர்ந்தும் இருக்கலாம்.

‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி, ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து’ -குறள்-398. ‘ஒருதலைமுறையில் கற்கும் கல்வி, ஏழு தலைமுறைக்கும் உதவும்’ எனும் பொருளன்றி ஒற்றுமைப் பொருளல்ல!

காலமும் நேரமும்

         அழைப்பிதழ்களில், நிகழ்ச்சி நடக்கும் நேரத்தை, ‘காலம்: காலை 10மணி’ என்று அச்சிடுகிறார்கள். இந்த இடத்தில் நேரம் என்பதே சரியானது. காலம், ஆண்டின் பெரும்பிரிவு. நேரம், நாளின் சிறுபிரிவு. இதைப் பெரும்பொழுது, சிறுபொழுது என்பது தமிழ் நுட்பம்! கடந்த (தமிழ்இனிது-42) கட்டுரையில் ‘இது தேர்தல் நேரம்’ என்று எழுதிவிட்டேன்! ‘தேர்தல் காலம்’ என்பதே சரி. சுட்டிக் காட்டாத நண்பர்களுக்கு நன்றி. “கால நேரம் பாப்பமா, கல்யாணத்த முடிப்பமா?” என்பது திரைப்பாடல்.

-----------------------------------

தமிழ் இனிது-42


தமிழ்மரபு உயிர்ப்போடு உள்ளதா?

சிந்தாமல்  சிதறாமல்..

இது தேர்தல் நேரம். “தமிழனுக்கு வாயெல்லாம் பல், பல்லெல்லாம் சொத்தை“ என்ற கந்தர்வன் கவிதைதான் நினைவுக்கு வருகிறது. வாக்குக் கேட்போர், “உங்கள் வாக்குகளை, சிந்தாமல் சிதறாமல் எங்களுக்கே போடுங்கள்” என்கிறார்கள். நீர்மப் பொருள்தான் வழிந்து சிந்தும் (எண்ணெய் தரையில் சிந்தும்), திடப்பொருள் உடைந்து சிதறும் (கண்ணாடி உடைந்து சிதறிவிட்டது). எனில், சிந்தவும் சிதறவும் நமது வாக்கு என்ன, திரவப் பொருளா? திடப்பொருளா? அப்படிப் பேசிப் பழகிவிட்டார்கள்! வாக்களிப்பது ஒவ்வொருவரின் வாழ்க்கைக் கடமை! வாய்ச்சொல்லில் உண்மை தேர்வது வாழ்க்கைக் கடன்!   

மக்கள் தமிழ் கொச்சையல்ல!

         பேச்சுத் தமிழைக் கொச்சை(vulgar) என்று சொல்வது தவறு. உலக மொழி அனைத்திலும் பேச்சுமொழி, எழுத்துமொழி இரண்டும் உண்டு. எழுத்து இல்லாத மொழிகள் பேச்சுமொழியால் மட்டுமே  வாழ்வதுண்டு. நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் இருந்தும், ஆங்கில எழுத்துகளைக் கொண்டே எழுதப்படுகின்றன! எழுத்திலக்கியம் வந்த பின்னரே இலக்கணம் உருவாகும். ‘எள்ளில் இருந்து எண்ணெய் எடுப்பது போல, இலக்கியத்தில் இருந்தே இலக்கணம் உருவாக்கப்படும்‘

இலக்கணத்தின் முன்னோடி பேச்சுவழக்கே என்பதால்தான் தொல்காப்பியத்துக்குப் பாயிரம் (அணிந்துரை) தந்த பனம்பாரனார் “வழக்கும் செய்யுளும்” என்று வழக்கை முன்னே வைத்தார்! இப்போது, பன்னாட்டுப் பண்பாட்டுக் கலப்பாலும் பிறமொழியாளர் வாழ்வியல் தொடர்பாலும் நுழையும் வேற்றுமொழிச் சொற்களை ‘இழுத்துப் பிடித்து’ தமிழ் இலக்கண மரபைக் காப்பதும் பேச்சுமொழி வழக்கே!  “உயிர் மெய்யல்லன மொழிமுதல் ஆகா” என்னும் இலக்கணம் அறியாத படிக்காத கிராமத்துக் கிழவி, ப்ரியா(Priya)  என்பதை பிரியா என்பது எப்படி? அப்படி, தமிழ் எழுத்துகளில் மொத்தம் 24எழுத்துகள்தான் மொழியிறுதியில் வரும் என்னும் நன்னூல் படிக்காத பாமரர் ஒருவர் Road என்பதை ரோடு என்பதும், Nut-என்பதை நட்டு என்பதும் எப்படியெனில் அதுதான் தமிழரின் வாழ்வு, பண்பாடு, உச்சரிப்பு முறையின் மரபு! இதுபோல, படித்தவர்கள் கலப்பதும், படிக்காதவர்கள் தவிர்ப்பதுமான நுட்பத்தால் தான் தமிழ்மரபு இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது!

ஆனால், வரம்பின்றிப் பேச்சுமொழியை ஏற்றால் அதுவே புதிய மொழி தோன்றவும் காரணமாகிவிடும். இன்னும் சில நூற்றாண்டுகளில் சென்னைத் தமிழ் வேறொரு கிளை மொழியாக உருவெடுப்பது உறுதி! கொங்குத்தமிழ், நெல்லைத்தமிழ் சற்றே தாமதமாகலாம். எனவே, இலக்கணமாக அச்சுறுத்தாமல், பள்ளிக் குழந்தைகளுக்கு வாழ்வியல் மொழிநடையைக் கற்பிக்கும் தேவை உள்ளது.  

எழுத்துப் பேணும் தமிழ் உறவுகள்!

         ஔவையின் ஆத்திசூடியில் “ஙப்போல் வளை“ என்றொரு தொடர் வரும். இதற்கு, “வாழ்க்கையில் முன்னேற ஏற்றம், இறக்கம், வளைவு உயர்வு அனைத்தையும் கற்க வேண்டும்“ என்று, ங எழுத்தின் அமைப்பைக் கொண்டு விளக்குவதுண்டு.  மாற்றிச் சிந்தித்தால், தமிழின் நுட்பத்தைப் புரிந்து சொல்லலாம்!

ங வருக்கத்தில் 12எழுத்துகள் உள்ளன. அதில், இந்த ங என்னும் எழுத்தைத் தவிர மற்ற 11எழுத்தும் பயன்படுவதில்லை! ங என்னும் ஓர் எழுத்து, மற்ற 11எழுத்துகளையும் காப்பாற்றி வருவது போல, “உடல் நலமற்ற, மூத்த, குறையுள்ள மனிதரை, நாம்தான் காப்பாற்ற வேண்டும்” என, எழுத்தின் வழி வாழ்வியல் கற்பிக்கலாமே! தமிழ் இனிது!

------------------------------------ 

(வெளியீட்டுக்கு நன்றி-09-04-2024 இந்து தமிழ் நாளிதழ்)

தமிழ்இனிது-41 --நன்றி - 02-04-2024 இந்து தமிழ் திசைகாட்டி நாளிதழ்பேச்சுத் தமிழின் பேரழகு!

பல்நோக்கு மருத்துவமனை, சரியா?

            தமிழ்நாடு அரசு, “ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை”  என்று பெயர்  வைத்துள்ளது. ஆனால், தனியார் பலரும் “பல்நோக்கு மருத்துவமனை” என்று வைத்துள்ளனர்! இதுதான் குழப்பம்.

“பல்நோக்குத் திட்டங்கள்“ பற்றிய செய்திகளையும் பார்க்கலாம். பத்தாம் வகுப்பு புவியியல் பாட நூலில் “இந்தியா - பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்”(பக்-169) என்றே உள்ளது! இதுபோல Multy purpose Projects, Multy Speciality Hospital  பல உள்ளன. தமிழில் மட்டும் -பல்நோக்கு என- ஏன் பல்லை நோக்க வேண்டும்? “பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்“ என்றால் குழப்பமே இல்லாமல்  ‘பல்லை நோக்கும் ஆய்வாளர்’ என்று பொருள் வருமே! பிறகு, பல்மருத்துவர் என்னாவது?!

எனவே, “பலநோக்கு“  என்பதை, பல வேறுபட்ட மருத்துவமும் செய்யக் கூடிய எனும் பொருளில்-  “பன்னோக்கு”  என்பதே சரி. இன்னும் எளிமையாகப் புரிய வேண்டும் என்றால், “பல நோக்கு” என்று பிரித்தே போடலாம். அல்லது, மற்ற பல்வேறு அரசுத் துறைகளில் உள்ளது போல “ஒருங்கிணைந்த” எனும் சொல்லைப் பயன்படுத்தினால் கூடுதல் நலம்.  

நோன்பு திறப்பா, துறப்பா?

இஃப்தார் எனில், ரமலான் மாத நோன்பு நோற்கும் இஸ்லாமியர், நோன்பு முடித்து மாலையில் அனைவரும் இணைந்து உணவருந்துவது. ஆனால் சுவரொட்டி சிலவற்றில் “நோன்பு துறப்பு” என்றும் வேறு சிலவற்றில் “நோன்பு திறப்பு” என்றும் போட்டிருப்பதுதான் குழப்பம்.   

ஒருநாள் உண்ணா நிலையை முடித்து -துறந்து- உண்பது எனில்,  தமிழில் “நோன்பு துறப்பு“ என்பதே சரி. பிறகு “திறப்பு” எப்படி வந்தது? “நோன்பு“ என்பதை வழக்கில் ”நோம்பு” என்கிறோம் அல்லவா? அப்படித்தான்! “நோன்பு துறப்பு“ என்பது எழுத்துத்தமிழ். “நோம்பு திறப்பு“ என்பது பேச்சுத்தமிழ். “நோம்புக் கஞ்சி” குடித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் தனிச் சுவை! மதம்கடந்த அன்பின் சுவை!

ஆமா’ல்ல? எனில், ஆமாவா? இல்லையா?

         பேச்சு வழக்கில் இப்போது பலரும் பயன்படுத்தும் சொல் “ஆமா’ல்ல?“ என்பது! அதாவது ஆமா, இல்லை!  இதன் பொருள் ஆமாம் என்பதா? இல்லை என்பதா? என்று யாரும் குழம்புவதில்லை, அந்தச் சூழலில் அது தெளிவாகவே புரிந்து விடும். இதில் ஆமா(ஆம்ஆம்), இல்லை எனும் இரு சொற்களும் எதிர் எதிர்ச் சொற்கள்! அது எப்படி ஒரே தொடரில் இணைந்து வருகின்றன? அதுதான் பேச்சுத் தமிழின் பேரழகு!   

            ‘அவனுக்கு எப்படி இது தெரிந்தது?’ ‘அவள் எப்படி இதை ஒத்துக் கொண்டாள்?’ போலும் உரையாடலில், அவர்கள் முன்பு நினைத்திராத ஒன்று புதியதாகத் தெரிய வரும்போது, இப்படி வரும். ஆங்கிலத்தில் இரண்டு எதிர்ச்சொல் சேர்ந்தால் ஒரு நேர்ப்பொருள் (Two Negatives Make a positive) வருவது போல! அட, ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்! சொல்லுக்கான பொருள் அகரமுதலியில் இருந்தாலும், பயன்படுத்தும் சூழலில்தான் அது முழுமையாகப் புரியும். சூழல் புரியாமல் செய்வது எதுவும் தவறாகி விடுவது போல, சூழல் புரியாமல் எழுதுவதும், பேசுவதும் கூடத் தவறாகி விடும்! அரசியலில் மட்டுமல்ல, பேச்சு வழக்கிலும் கூட இதெல்லாம் உண்டு’ல்ல?!  

---------------------------------------------------------- 

ஒரு பின்னிலை விளக்கம் 

இக்கட்டுரையின் இறுதிச் சொல்லை, இன்றைய இந்து-தமிழ் நாளிதழில் வந்திருப்பது போல “சகஜமப்பா” என்றுதான் எழுதி அனுப்பி விட்டேன். பிறகுதான் இக்கட்டுரையின் இறுதிச் சிறுதலைப்புக்கும் ஏற்ப இப்படி மாற்றலாமே என்று சற்றுத் தாமதாகவே அவர்களுக்கும் தெரிவித்தேன், அதற்குள் அச்சாகி விட்டது போல. சரி நமது வலையில் திருத்தி விடுவோம் என்று இப்படி மாற்றிவிட்டேன். இது நான் செய்த மாற்றம்தான். மாற்றியது நல்லாருக்கா? இல்ல இந்து தமிழில் வந்ததே நல்லாருக்கா? நண்பர்கள் சொல்லுங்களேன்... - நா.மு.,

---------------------------------------------------------

 

30-03-2024 சனி மாலை, அமெரிக்காவுடன் இணைவோமா?

      

       

வட அமெரிக்காவில் கடந்த 36ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும்   

                                “வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை”                                    

(Federation of Tamil sangams of North America – FeTNA) 

தனது 37ஆவது ஆண்டுப் பேரவை நிகழ்ச்சிகளுக்குத் 

தயாராகி வருகிறது.

அதையொட்டி, முன்னோட்ட விழாக்கள் நடக்கின்றன

               வரும் 30-04-2024 சனிக்கிழமை மாலை    

இலக்கியத் திருவிழா  நடைபெற உள்ளது.

(-----------அமெரிக்காவிற்கு காலை 10மணி,    

இந்தியாவிற்கு அதே நாள் மாலை 7.30மணி!---------)

உரைவீச்சு, கவியரங்கம், 

சுழலும் சொல்லரங்கம், தமிழிசை நிகழ்ச்சி 

என சுமார் 3 மணி நேரத்திற்குத் 

                   திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்வில்,                         

  எனது தலைமையில் -சுமார் 50நிமிட அளவிற்கு-     

சுழலும் சொல்லரங்கம் நடக்க உள்ளது

அதற்கு முன் கவிஞர் ஜெயபாஸ்கரன் உரை, 

பிறகு கவியரங்கம், தமிழிசைப் பாடல்கள் என 

வரிசை கட்டி நிற்கும் இலக்கிய நிகழ்ச்சிகள் 

தலைப்பு, இணைய இணைப்பு விவரங்கள் கீழே உள்ளன

இலக்கிய ஆர்வலர்கள் வருக! வருக!!

இணையத் தமிழால் இணைவோம்

FeTNAவின் முகநூல் இணைப்பு-

https://www.facebook.com/share/p/u5hgRkw5eb1Goo3S/?mibextid=xfxF2i

அன்றைய முழு நிகழ்ச்சி நிரல் விவரம் -

-- இதோ கவியரங்கப் பதாகை --

Ayya சூம் நேரலை - Zoom Live : https://tinyurl.com/FETNAIK2022
நிகழ்ச்சி நிரல் நேரத்தைக் கவனித்து

குறித்த நேரத்திற்கு குவிய வழி (Zoom) வந்து சிறப்பிக்க

அன்புடன் அழைக்கிறேன்

------------------------------------------
தமிழ் இனிது-40---- நன்றி - இந்து தமிழ்26-03-2024

 


தடியடியும் அடிதடியும்

            “மக்களிடையே அடிதடி! காவல்துறை தடியடி” என்னும் செய்தியை ஊடகங்களில் பார்க்கிறோம். ஒன்று போலவே இருந்தாலும் இரண்டு சொற்களுக்கும் வேறுபாடு உண்டு! தடியடி (Lathi Charge) கூட்டத்தைக் கலைக்க, அரசால் திட்டமிட்டு நடத்தப் படுவது. இதற்குக் காவல்துறை உயர் அலுவலரின் முன்அனுமதி தேவைப்படும். அடிதடி என்பது வேண்டாதவரை திட்டமிடாமலே தாக்குவது அல்லது அந்தக் குழுத் தலைவரால் திட்டமிட்டு நடத்தப் படுவது. அடிதடி, கலவரம்  நடக்கும் இடத்தின் நிலவரம் அறிந்து காவல் துறை நடத்துவது தடியடி! 

செல்வர் சரி, அது என்ன செல்வந்தர்?

செல்வம் உடையவர் செல்வர். எனவேதான் தமிழர் பெயர்களில் செல்வன், செல்வி, தமிழ்ச்செல்வன், கலைச்செல்வியர் பலர் உள்ளனர். செல்வர் என்பதை, வடமொழியில் ‘தன்வந்தர்’ என்பர். அது, தனவந்தர்- செல்வந்தர்- எனும் பொருளற்ற சொல்லாகி, நூறாண்டுக்கு முந்திய “மணிப் பிரவாள நடை” காலத்தில், கலப்புத் தமிழாக நுழைந்து விட்டது.

 செல்வம் என்பதற்குத் தமிழில் வேறு பொருளும் உள்ளது. “பொருட் செல்வம், பண்புகள் இல்லாதவரிடமும் சேரும். அருள் என்னும் செல்வமே சிறந்த செல்வம்”என்பது குறள்(241). அருட்செல்வர், கருணைச் செல்வி, குழந்தைச் செல்வம், போதும் செல்வம் (கடைசிக் குழந்தையாக இருக்கட்டும் என்று வைக்க, அதன் பிறகும் குழந்தை பிறப்பதுண்டு!) இப்படியான பொருள் விளக்கம் தனவந்தர், தன்வந்தர், செல்வந்தர் எனும் சொற்களில் இல்லையே! எனவே, செல்வர் என்பதே நுட்பமான பொருள் கொண்ட இனிய தமிழ்ச் சொல். செல்வந்தர் எனும் கலப்படம் வேண்டாம். 

குறிப்பாக – சிறப்பாக

            எதிர்ச் சொற்களைக் கையாளும் போது, நம்மை அறியாமலே சில தவறுகளைச் செய்கிறோம். காலை-மாலை, ஒளி-இருள் என்பது போல, ஆண்-பெண் சொற்களை எதிர்-எதிர்ச் சொல்லாகக் கருதுவது, ‘ஆணும் பெண்ணும் சமம்’ என்னும் இக்காலக் கருத்திற்கு எதிரான தவறல்லவா?  

            இதுபோலவே, ‘பொதுவாக’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல்லாக ‘குறிப்பாக’ என்னும் சொல்லைப் பயன் படுத்துகின்றனர். “அவர் பொதுவாக எல்லாரிடமும் அன்பு காட்டுவார், குறிப்பாக என்னிடம் மிகுந்த அன்பு காட்டினார்” என இரங்கல் தெரிவிக்கிறார்கள். இது தவறு. “வெளிப்படையாகச் சொல்ல  முடியாத பலவற்றை, குறிப்பாக எனக்கு உணர்த்துவார்“ என்பதுதான் சரி.  ‘குறிப்பு’ என்பதன் எதிர்ச்சொல் ‘வெளிப்படை’ என்பதே. அதேபோல, ‘பொதுவாக’ என்பதன் எதிர்ச்சொல் ‘சிறப்பாக’ என்பதே. இதை உணர்ந்து, பொதுவாக அல்லாமல் சிறப்பாகப் பயன்படுத்துவது, வெளிப்படையாக எல்லார்க்கும் குறிப்பாகத் தமிழுக்கு நல்லது!

மன்னன் - நிலைபெற்றவனா?

            மன்னன்’ எனில் ‘நிலையானவன்’ என்பது பொருள். இதனால்தான் “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்றது புறநானூறு(186). எனினும், ‘முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடிசாம்பல் ஆவர்’ என்பதை உணர்ந்து, ‘மக்களே உயிர், மன்னன் உடல்தான்’ என்று மன்னராட்சிக் காலத்திலேயே மக்களாட்சிக் கோலத்திற்கு புள்ளியிட்டார் கம்பர்! உலகில் யாரும் ‘நிரந்தரமானவர்‘ இல்லை என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆக, தமிழ் மன்னன் உடலால் அல்ல, புகழால் நிலைத்தவன் என்றே புரிந்துகொள்ள வேண்டும்! “மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே”(புறநா-165)

--------------------------------------------------------------------

தமிழ்இனிது-39 - (நன்றி -இந்துதமிழ்-19-03-2024 )

 


அயற்சி – அயர்ச்சி

அயர் - அயர்வு – அயர்ச்சி,  தளர்ச்சி எனப் பொருள் தரும் சொல்.  ‘அயர்ந்த’ என்பதே, ‘அசந்த’ எனப் புழங்குகிறது. அயர்தி –அசதி. இதில், அயர்ச்சி என்பதே சரியான சொல். அயற்சி என்பது தவறானது.

அது என்ன கால்நடை?

            காலால் நடக்கும் ஆடு மாடுகளைத்தான் கால்நடை என்கிறோம். ‘மனிதர்களும் காலால் தானே நடக்கிறார்கள்?’ எனில், “மனிதர்கள் மனத்தாலும், காலத்தை மீறியும் நடப்பர்!“ என்கிறார் கவிஞர் நந்தலாலா!  

“காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்“ என்ற பாரதி காலத்தில் தொலைப்பேசி இல்லை! “அடுத்த நூற்றாண்டில் சோதனைக் குழாய்க் குழந்தை பிறக்கும்” என்று பெரியார் சொன்னபோது பலர் அதை நம்பவில்லை!  சிந்தனையாளர், மனத்தால் காலம் கடந்து, நடந்து விட்டார்கள் அல்லவா? ஆடு, மாடுகள் அப்படி அல்லவே! காலால் மட்டும் நடப்பதால் அவை கால்நடை ஆயின!

உடம்பு- உடலம் – சடலம்   

‘உடம்பு’ என்பதே, பழந்தமிழ்ச் சொல் (குறள்-1122, நன்னூல்-59) “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” – திருமந்திரம். உடல், உடலம் என்பன, இருந்தாலும் இறந்தாலும் சொல்லப்படும் சொற்களே. ஆனால், ‘சடலம்’ அப்படியல்ல. அது உயிரற்ற உடல்,  பிணம் என்பதையே குறிக்கும். தமிழில் உயிர், மெய் எனும் சொற்கள் எழுத்து இலக்கணத்தை மீறி, ஆய்வுக்குரிய ஒரு தத்துவ மரபில் அமைந்துள்ளன.

மெய் என்பது உருவம், உயிர் என்பது உள்ளடக்கம். உயிரும் மெய்யும் சேர்வதே உயிர்மெய் என்பது தமிழர்களின் மொழியும் வாழ்வும் இணைந்த கருத்து! ‘க்’ என்னும் மெய்யும் ‘அ’ என்னும் உயிரும் சேர, ‘க’ எனும் உயிர்மெய் எழுத்தின் உருவம் மெய்யிலிருந்தும், ஓசை உயிரிலிருந்தும் வருகிறது அல்லவா!

அழுகணிச் சித்தர், “ஊத்தைச் சடலம்” என்று பாடியிருந்தாலும், உடலுக்கும் உரிய மதிப்பைத் தந்திருப்பதே தமிழ் மரபு!  

பெரிய பதவியிலோ, பெரும் பணக்காரனாகவோ இருந்தாலும், இறந்தபின் ‘பிணம்’ என்ற அஃறிணைப் பெயர்தானே சூட்டப் படுகிறது! உயிரற்ற உடம்பு மட்டுமல்ல, அறிவற்ற குழந்தையும் அஃறிணைதான் என்கிறது தொல்காப்பியம்(540). உயிருடன், அறிவும் இருந்தால்தான் உயர்திணை! இது வெறும் இலக்கணமா? வாழ்வியல் நுட்பமல்லவா?!    

“பேரினை நீக்கிப் ‘பிண’மென்று பேரிட்டு“ (திருமந்திரம்-145) நிலையாமை சொல்லி, அறவழிப் படுத்தினர் முன்னோர். மெய் என்றால், ‘உடம்பு’ என்றும், ‘உண்மை’ என்றும் இரு பொருள் உண்டு! ‘உடம்பு உண்மையானது’ என்பதை அறியாத பலர், இந்த ‘உண்மை’ /’மெய்’யை  ‘நிஜம்’ /’சத்யம்’ என்கிறார்கள்,  தமிழ் நுட்பம் அறியாதவரே!

“காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா!“ என்ற கருத்திற்கு எதிராக, “காயமே இது மெய்யடா இதில் கண்ணும் கருத்தும் வையடா!” என்ற பட்டுக்கோட்டையார் கருத்தே தமிழ் மரபுக் கருத்து. இதையே “உயிருறும் உடலையும், உடலுறும் உயிரையும் அயர்வறக் காத்தருள்” என்னும் வள்ளலார் அகவலிலும் (368)  காணலாம்.  

            எனவேதான் “ஆளும் வளரணும் அறிவும் வளரணும்“ என்று, ஆள்(மெய்) வளர சத்துணவும், அறிவு(உயிர்) வளரக் கல்வியும் கொடுத்து, மனிதரை உயர் திணையாகவே  வளர்க்கிறது தமிழ்ச் சமூகநீதி மரபு!  

---------------------------------------------------------

சிலம்புப் பட்டிமன்றம் - காண கேட்க வருக

 என்னவோ தெரியவில்லை!

இந்த -2023-2024- கல்வியாண்டில்

கல்லூரிகள் பலவற்றில் பேசும் வாய்ப்புகள் வந்தன

எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி-

முன்னர்

அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை,

கவிதைப் பயிலரங்கமாக

கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை,

பின்னர்

மன்னர் அரசு கலை அறிவியல் கல்லூரி புதுக்கோட்டை.

என, புதுக்கோட்டையின் முக்கியமான

முப்பெரும் கல்லூரிகளிலும் ஒரே மாதத்துக்குள் 

எனது உரையுடன் கூடிய நல்ல விழாக்கள்!

இதோ இப்போது 

புதிதாகத் தொடங்கிய

ஆலங்குடி அரசு கலை-அறிவியல் கல்லூரி!

அழைத்த எனது மதிப்பிற்குரிய 

முதல்வர்கள், துறைத்தலைவர்களுக்கு

எனது நெஞ்சு நெகிழும் நன்றி.

பத்தாண்டுக்கு முன் வரை

புதுக்கோட்டையில் மட்டுமே 

அரசுக் கல்லூரிகள் எனும் நிலையில்

அடுத்தடுத்து கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி

அறந்தாங்கி, திருமயம் என 

அரசுக் கல்லூரிகளை வழங்கி

கிராமத்துப் பிள்ளைகள் உயர்கல்வி கற்க 

உதவிவரும் தமிழ்நாடு அரசுக்கு 

எனது நெஞ்சார்ந்த நன்றி.

இளைய தமிழர் முன்னேறட்டும்!

இவை தவிர்த்து,

இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தினர்

நல்லதொரு ஆய்வுத் தலைப்பில்

இலக்கியப் பட்டிமன்றம் நடத்த 

அழைத்துள்ளனர்

நெடுநாள் கழித்து 

நல்லதொரு தலைப்பில்

இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்!

வருக நண்பர்களே!

16-03-2024 சனிக்கிழமை மாலை
----------------------------------------------------- 


இது 19-03-2024 செவ்வாய் காலை  

இரண்டு நிகழ்வுக்கும் 

வாய்ப்புள்ள நண்பர்கள் 

வருக, வணக்கம்

தமிழ்இனிது-38 - நன்றி - இந்துதமிழ் 12-03-2024 .

 


வாழைத்தார் – வாழைத்தாறு

            அடையாறு, அடையார் ஆனது! வாழைத்தாறு வாழைத்தார் ஆகிவிட்டது! ‘தாறு’, யானையை ஏவும் கைக்கருவி(படம்), குறிஞ்சிப் பாட்டு-150. இதை இப்போது ‘அங்குசம்’ என்பர். யானையை வேலை வாங்குவது குறைந்து, மாட்டைப் பயன்படுத்தும் இக்காலத்தில், உலோகத் தாறு, மரத்‘தாறு’ ஆகி, ‘தார்க்கோல்’ – ‘தார்க்குச்சி’  ஆகிவிட்டது! ‘தாறு’, ஒழுங்கான  வடிவம் கொண்டது. முறையற்ற பேச்சைத் “தாறு மாறாக” பேசுவதாகச் சொல்வதில் இச்சொல் புரியும். வாழைத் தாறும் ஓர் ஒழுங்கில், அழகிய வடிவில் ஆனது தானே?

சொற்களைப் பிரிப்பது  

தாறுமாறாகச் சொற்களைப் பிரிப்பதும், நிறுத்தக் குறிகளைத் தேவையின்றி இடுவதும், சொல்ல வருவதைப் புரியவிடாமல் செய்துவிடும். இவையற்ற ஓலைச் சுவடியிலிருந்து அச்சில் பதிப்பித்த தமிழறிஞர்கள், எவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டு நமக்குத் தந்திருக்கிறார்கள்! புரிந்து – புரியும்படி – எழுத வேண்டும்  அல்லவா? 

‘’கட்டுண்டோம்‌, பொறுத்திருப்போம்என்பதைக்கட்டு உண்டோம்‌, பொறுத்து இருப்போம்எனப்பிரிப்பது பிழையாகி விடும்‌. 'பன்மணிமாலை' என்பது ஒரு நூல்வகை. அதைப்‌ 'பல்மணி மாலை' என்று சொல்லிப் பாருங்கள்‌. சிரிப்புக்கு இடமாகும்‌” என்கிறார் தமிழண்ணல். கணினியில் வடிவமைப்போர் (page maker) அச்சில் சமன் செய்து காட்டுவதில் (Left, Centre, Right and Justify)  இந்தச் சிக்கல் வரும்.

‘காலச்சுவடு’ வெளியிட்டுள்ள “பாரதி கவிதைகள்“ நூலை, பதம்(சொல்) பிரித்து, தந்திருக்கிறார் பழ.அதியமான். “பதம் பிரிக்கும் போது, ஓசை இன்பம் தடைபடும். எனினும் பொருள் உணர அப்படிப் பிரிப்பது தவறாகாது” என்னும் இவரது முன்னுரையை இன்றைய எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறையும், பாடநூல் கழகமும் இணைந்து வெளியிட்டுள்ள “செவ்வியல் நூல்கள் -உரை வரிசை“ பயன் தரும் தொகுப்பு. இலக்கிய வாசிப்பு, சொற்களைப் பிரித்துப் பயன்படுத்தும் முறை என இரண்டு பயன் கிடைக்கும்.

ஔ – துணையெழுத்து சரிதானா?

ஓவிய எழுத்து, ஒலியெழுத்து, வட்டெழுத்து, பிராமி (எ) தமிழி எழுத்து என தமிழ் எழுத்துகளின் வரிவடிவம் மாறி மாறி வந்துள்ளது. இதை வேடிக்கையாக, “இன்றைய திருக்குறளை, வள்ளுவருக்கே படிக்கத் தெரியாது!” என்பார்கள். 

17ஆம் நூற்றாண்டு வரை, எ ஒ தலையில் புள்ளி வைத்து குறில் என்றும், புள்ளியில்லாத எ ஒ எழுத்துகளே நெடில் என்றும் இருந்தன.  இவற்றை மாற்றி, இப்போதைய - எ(குறில்), ஏ(நெடில்), ஒ(குறில்), ஓ(நெடில்) எழுத்து வடிவ மாற்றத்தை நமக்குத் தந்தவர் இத்தாலியப் பாதிரியார், வீரமாமுனிவர் எனும் தமிழறிஞர்!  

            எனினும் தமிழின் துணையெழுத்துகளில் இன்னும் தெளிவு தேவை. ளகர வர்க்கத்திலுள்ள ள எழுத்து  ஊ, ஓள எனும் கூட்டெழுத்துகளிலும் உள்ளது. ஆனால், கூட்டெழுத்தில் வரும் ள எழுத்து தன் ஒலியை இழப்பதன் அடையாளமாக, சிறிதாகப் போட வேண்டும். கணினி, செல்பேசி  எழுத்துருக்களில்,  ஊ வசதி,  ஔ எழுத்துக்கு இல்லை! எனவே, ஆரம்பப் பள்ளி மாணவர், ஔவையாரை, ஒ-ள-வை-யா-ர் என்றே படிக்கிறார்கள்! 

       கையால் எழுதும் போது ஊ, ஔ எழுத்தில் வரும் ள எழுத்தைச் சிறிதாக எழுதிப் பழ(க்)க, வேண்டும். வீரமாமுனிவரின் ‘ர’, ர் இன்னும் -ஒருங்குறி தவிர்த்த- பல எழுத்துருக்களில் துணைக் காலாகவே உள்ளதும் கவலைக்குரியது.

-----------------------------------------------------------------------------------   

தமிழ்இனிது-37 - நன்றி - இந்து தமிழ் -05-3-2024.

 'முதற்கண்' பாவம் இல்லையா?!

தடையமா? – தடயமா?

            வரலாறு கொந்தளித்து எரிந்து அணைகிறது. தடையங்களாக இடிபாடுகளை.. விட்டுச் செல்கிறது” - குறுங்கதை ஒன்றில் வரும் தொடர்.  

தடயம்  -துப்பு / அறிகுறி எனப் பொருள்தரும் சொல். தடையம்  'தடை' என்பதிலிருந்து தோன்றும் சொல் என்கிறது ‘விக்ஷனரி’. இப்போது, அந்தத் தொடரை மீண்டும் பாருங்கள்.  ஐகாரக் குறுக்கம், புடைவை-புடவை, உடைமை-உடமை என வழக்கில் வரும். இல்லாத ஐ-யை ஏற்றி “தடையம்” என்பது தவறான சொல், தடயம் என்பதே சரி.    

ஒருவற்கு, ஒருவர்க்கு

          அனைவர்க்குமான கருத்துகளை, கற்பனையான ஒருவரை முன்னிறுத்திச் சொல்வது, உலக அளவிலான ஓர் இலக்கிய உத்தி! “உன்னிடம் சொல்கிறேன், நீ எல்லாருக்கும் சொல்லிவிடு” என்பது போல! நம் கிராமத்து மக்களிடம் இந்த உத்தி இப்போதும் புழங்குகிறது! அந்த இடத்தில் இல்லாத ஒருவரைக் கற்பனையாக முன்னிறுத்தி, “நீ வண்டியில காட்டுத் தனமாப் பறப்ப, எங்கிட்டாவது மோதி, அநியாயமாப் போய்ச் சேந்துருவ? உன் அலப்பறைக்கு உன் குடும்பம் பலியாகணுமா’டா?” என்று மகனைப் பற்றி அப்பாவிடம் பேசும் பெரியவர் உண்டு!

யாப்பருங்கலக் காரிகை” எனும்  இலக்கண நூலே இப்படி உள்ளது!  “ஒருவற்கு” என்பது, “ஒருவனுக்கு” என்னும் பொருளில் இலக்கியங்களில் வரும். குறளில்  பலப்பல இடங்களில் வந்துள்ளது-40,95,398,400,454,600. மூதுரை-01, நாலடி-73,142. இவற்றில் ‘ஒருவற்கு’, என ஒருமையில் சொன்னாலும் பால்கடந்து அனைவர்க்கும் சொல்லும் அந்த உத்திதான்.

அவர்கள், அவைகள் - 

நமது தொடரில் “திரு எனும் முன்னொட்டு, பெயருக்கு முன்னால் தான் வரும், பதவிக்குப் முன்னால் வராது“ என்றதை  ஏற்றுக்கொண்ட பலரும் கேட்ட கேள்வி, ”பெயருக்குப் பின்னால் ‘அவர்கள்’ போடுவது சரியா“, ”அது எப்படி ஒருமைப் பெயருக்குப் பன்மையைச் சேர்ப்பது?”.  ‘அவர்கள்’ என்னும் சொல், சொல்லளவில் பன்மைதான் எனினும் தொடரில் வரும்போது ஒருவரையே குறிப்பதால் ஏற்கலாம் என்பதே பதில். “அமைச்சர் அவர்கள்  வருகிறார்கள்“ என்பதை “அமைச்சர் வருகிறார்“ என்பது மரியாதைக் குறைவானது என்பது புரியாதா என்ன? புரியாதவர்க்கு, ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ புரிய வைக்கும்!

இதனை,“ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி”என, தொல்காப்பியம் ஏற்கிறது. (சொல்-கிளவியாக்கம்-510) எனினும் இதை, “பால்வழு அமைதி” என்னும் தலைப்பிலேயே சொல்லியிருப்பது, இது, பொதுப்படை அல்ல என்பதையும் புரிய வைக்கும் நுட்பம்!

அதற்காக, ‘அவை’ என்னும் சொல்லோடு, மேலும் ஒரு கள் விகுதி போட்டு ‘அவைகள்’ என்பது தவறு!  ஆக, ‘அவர்கள்’ சரி!  ‘அவைகள்’ தவறு ! கள் போடும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டுமல்லவா?!  

முதற்கண் வணக்கம்?

            பேச்சாளர் சிலர், ”…அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கம்“   என்று தொடங்குவதைப் பார்க்கலாம். நல்ல வேளையாக, “இரண்டாம் கண் வணக்கம் யாருக்கு?” என்று யாரும் அவரிடம் கேட்பதில்லை!  At first எனும் பொருளில் முதற் கண்ணைப் பயன்படுத்தும் போது,  “முதற்கண் எனது வணக்கம்“ என்று சொல்வதே சரியானது. ‘எனது முதல் வணக்கம்’ என்பது இன்னும் தெளிவானது.  இதில்,  தேவையில்லாமல் கண்ணை ஏன் இழுக்க வேண்டும்! பெண்பாவம் போல கண்பாவம் இல்லையா?!

------------------------------------------------

புதுக்கோட்டை கவிதைத் திருவிழாவுக்கு 25வயது!

                             2000ஆம் ஆண்டு, 202கவிஞர்களைக் கொண்ட

மகா-கவியரங்கம்

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடந்தது.

20 அமர்வுகளில் 202 கவிஞர்கள்!

கந்தர்வன், பாலா இருவரும் 

சிறப்புக் கவிதை வழங்க

அப்துல் ரகுமான் வாழ்த்துச் செய்தி அனுப்ப

காலை10மணி தொடங்கி,

இரவு11மணி முடிய

13மணிநேரத் தொடர் கவியரங்கம்!

முதல் அமர்வுக்கு

கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்க

20ஆவது அமர்வுக்கு

நா(ன்).முத்துநிலவன் தலைமையேற்க

ஒவ்வோர் அமர்விலும் 10கவிஞர்கள் பங்கேற்ற

வரலாற்றுச் சிறப்பு நிகழ்வு அது!

கவிதைத் திருவிழா!

அந்தக் கவிதைகள் பின்னர்

'கவிதைப் பயணம்' எனும் பெயரில்

தமுஎகச புதுக்கோட்டை மாவட்ட 

வெளியீடாக நூலாகவும் வெளிவந்தது!

புதுக்கோட்டை கவிதைக்கோட்டையானது!

அது நடந்து 25ஆம் ஆண்டு இது!

---------------------------- 

இதோ,  2024 பிறந்த இரு மாதத்தில்

அதாவது 

புதுக்கோட்டை கவிதைத் திருவிழாவின்

வெள்ளிவிழா ஆண்டில்...

கவிஞர் அகன் (எ) அமிர்தகணேசன்,

கவிஞர் மைதிலி கஸ்தூரிரெங்கன்,

இரண்டு நாள்முன் கவிஞர் தங்கம் மூர்த்தி

இப்போது கவிஞர் ரேவதி ராம்!

எல்லாம் கவிதை கவிதை மற்றும் 

கவிதை சார்ந்த விழாக்கள்!

புதுக்கோட்டை மீண்டும்

கவிதைக் கோட்டையாகத் தொடர்வதைச் 

சொல்லி நடக்கும் விழாக்கள்!

-----------------------------

வரும் 03-03-2024 ஞாயிறு காலை10மணிக்கு

மகளிர் கல்லூரி எதிரில் உள்ள தாஜ்அரங்கில்!

புதுக்கோட்டை நண்பர்கள் வருக!

சுற்றுவட்டாரத்தில் உள்ள சுவைஞர்கள் வருக!

வாய்ப்புள்ள கவிஞர்கள் எங்கிருந்தாலும் வருக! வருக!


அன்புடன் அழைப்பது

வீதி - கலைஇலக்கியக் களம்,

புதுக்கோட்டை

கவிஞர் மு.கீதா, ஒருங்கிணைப்பாளர்.

------------------------------- 

 ரூ.600 விலையுள்ள

மூன்று கவிதைத் தொகுப்புகளும்

வெளியீட்டு விழாவுக்காக

நேற்றுமுதல் ரூ.500விலையில் கிடைக்கிறது.

இப்போதே தொகை செலுத்தி 

விழா அன்று 3தொகுப்புகளையும்

கையிலேயே பெற்றுக் கொள்ளலாம்!

ஜி.பே., ஃபோன் பே - எண் :

+91 95974 02010 

(ராம்தாஸ் என்று இருக்கும்)

பி.கு.-

கவிதைப் புத்தகத்தை

விலைகொடுத்து வாங்குவதை விடவும்

அந்தக் கவிஞரைப் பாராட்டக் கூடிய

சிறந்த விமர்சனம் வேறென்ன இருக்கமுடியும்?

நன்றி, வணக்கம்,

மற்றவை நேரில்.

-----------------------------------------