புலவர் நா.ரா. என்னும் எனது ஆசான்

                

நண்பர்களுக்கு வணக்கம்

------------- இது எனது 999ஆவது பதிவு -------------

(பக்கவாட்டில் இருக்கும் பதிவுகள் எண்கள் பார்க்க)

------------- அடுத்த பதிவு 1000ஆவது பதிவு -------------

அதை இன்னும் சில நாள்களில் பதிவிடுவேன்.

அதற்கு முன்னோட்டமாக எனது ஆசானுக்கு

நன்றிசெலுத்தும் விதமாக இந்தப் பதிவு

---------------------------------------------------------------

இன்றைய என்னைஉருவாக்கியவர்களில் முக்கியமானவர் புலவர் நா.ரா. அவர்கள். அவர்களது மகனும் எனது இனிய நண்பருமான தோழர் ஜீவா மகள் திருமணத்தில் வெளியிட்ட மலரில் வந்த                             எனது கட்டுரை இது

நன்றி – தோழர்கள் இராமதிலகம், நாகலட்சுமி.

எழுத்தாளர் அண்டனூர் சுரா

---------------------------------------------------- 

எனது மேடைப் பேச்சுக்கு, ஆசான் புலவர் நா.ரா அவர்கள்!

---நா.முத்துநிலவன்--

ப்போது, -2024இல்- அமெரிக்கா உட்படப் பல்வேறு நாடுகளுக்கும் அழைக்கப்பட்டு, சென்று, பேசிவரும் எனக்கு, 45ஆண்டுகளுக்கு முன்னால் (1979இல்) முதன் முதலாகப் பட்டிமன்ற மேடையேற்றிப் பேசப் பயிற்சி தந்த, எனது மேடைப்பேச்சு ஆசான் புலவர் நா.இராமச்சந்திரன் () என்.ஆர். () புலவர் நா.ரா அவர்கள்தான் என்பதை நன்றியோடு எங்கும் சொல்வேன்

உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை!

வாருங்கள் விவரம் சொல்வேன்-

பெயர் சொல்லியோ பெயரின் முன்னெழுத்துகளுடன் தோழர் எனும் களங்கமற்ற நட்பின் சொல்லைச் சொல்லியோ அழைப்பது இடதுசாரித் தோழர்களின் இயல்புதானே? ‘என்ன தோழர் என்.எஸ்?” என்று மூத்த தலைவர் என்.சங்கரய்யாவை நான் அழைத்ததுண்டு. இப்போதும் சி.பி.எம்.-அரசியல் தலைமைக் குழுத் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களிடம் பேசத் தொடங்கும் போதுசொல்லுங்கள் ஜி.ஆர்.என்று பேசுவதுண்டு!

அதுபோலவே, 2010இல் ஒருநாள் காலை 6-மணியிருக்கும், எனது செல்பேசி சிணுங்கியது. தூக்கக் கலக்கத்தில் எடுத்த நான், ‘வணக்கம், யாருங்க?” என்று என் இயல்பில் கேட்டுவிட்டேன்.நான் நல்லக்கண்ணு பேசுறேன்என்று பதில் வர, தூக்கக் கலக்கத்தில் இருந்த நான், ‘எந்த நல்லக்கண்ணு?” என்று கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார, ’தோழர், நான் ஆர்.என்.கே. பேசுறேன்என்று உரிமையான அதட்டலுடன் பதில் வர, எனக்கு சுருட்டி வாரிப்போட, உடனே சுதாரித்துக் கொண்ட நான்.மன்னிக்கணும் தோழர்..என்று இழுக்க, ‘எனது தூக்க மயக்கத்தைபுரிந்து கொண்ட அவர், ‘இன்றைய ஜனசக்தியில்செம்மொழி மாநாடும் கம்பனும்என்ற உங்க கட்டுரையப் படிச்சேன்.. காரைக்குடி கம்பன் விழாவில் தோழர் ஜீவா பேசியதைக் குறிப்பிட்டு எழுதி, அன்றைய நினைவில் என்னை ஆழ்த்திவிட்டீர்கள்..என்று தோழர் ஆர்.என்.கே. பேசப் பேச நான் நெகிழ்ந்து போனேன்.. (அத்தகைய அவர்கள், கடந்த 03-01-2025 அன்று, சென்னையில் காமராசர் அரங்கில் நடந்த, உ.சகாயம் இஆப., அவர்களின்கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலைநூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை யேற்க வந்தபோது, அவ்விழாவில் பேச அழைக்கப்பட்டிருந்த நான், மேடையிலேயே என்னை அறிமுகப் படுத்திக் கொண்டும் அவருக்கு என்னை நினைவில்லை! நூறாண்டு தாண்டியும் தகைசால் தமிழராக தோழர் ஆர்.என்.கே வாழ்கிறார், நிகழ்ச்சிக்கு வருகிறார் என்பதே பெரும் பேறுதானே?) அப்படி, தோழர் என்ற சொல்லிலேயே  அவ்வளவு பாசம்!

இடதுசாரிகளின் வழக்கப்படியே, மற்றவர்கள் புலவர் இராமச்சந்திரன் அவர்களை, என்.ஆர்.’ என்றே அழைக்க, நான் மட்டும் தோழர் நா.ரா.’ என்றே அழைத்தேன்.  கல்லூரிக் காலத்தில் (1974-78) திருவையாறில் உள்ள நான்காண்டுப் படிப்புக்கான அரசர் கல்லூரியில் எனக்கு மூத்த தமிழியக்கத் தோழர்கள புலவர் செந்தலை ந.கவுதமன், முனைவர் மு.இளமுருகன் ஆகியோர் தந்த பயிற்சியில்-- முன்னெழுத்தை (இனிஷியல்) தமிழிலேயே நான் இட்டுக் கொண்டதுடன் பிறரையும் அவ்வாறே இடச் சொல்வது வழக்கம். அப்படித்தான் என்.முத்து பாஸ்கரனாக இருந்த நான், நா.முத்துநிலவன் ஆனேன்.  இந்தப் பெயரை எனக்கு இட்டவர் அண்ணன் புலவர் செந்தலை ந.கவுதமன்தான். இப்போது வரை, என்னை யாராவது என்.முத்துநிலவன் என்று சொன்னால் அவ்வளவு கோவம் வரும்! (நான் என்ன அவுங்களோட முத்துநிலவனா, மக்களின் தோழன் அல்லவா? என்பது போல!) அரசுப் பள்ளி வருகைப் பதிவேட்டில்தான் நா(ன்).முத்துபாஸ்கரன்! அந்த வகையில் மற்றவர்க்குஎன்.ஆர்.என்றாலும் எனக்கு, என்றும் தோழர் நா.ரா.தான்!   

1979-80-இல், புதுக்கோட்டை அரசு ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியப் பயிற்சி படித்துக் கொண்டிருந்தேன். அது ஆறுமாதப் பயிற்சி தான். புலவர் படிப்பை முடித்தவர்கள் தமிழாசிரியராகப் பணியேற்க அந்த ஆறுமாதப் படிப்பே அப்போது போதுமானது. அந்த ஆண்டே இரண்டு தாள் மட்டும் எழுதி புலவர் பட்டம் பெற்றவர்கள் எழுத வேண்டிய பி.லிட். தேர்வை எழுதி- தேர்ச்சி பெற்றேன். பிறகு முதுகலைத் தமிழ்த் தேர்விலும் தேர்ச்சி பெற்றேன். 1980இல் ஆவுடையார்கோவிலை அடுத்துள்ள அமரடக்கி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியேற்றேன். ஆயினும் சிறந்த தமிழாசிரியராக இன்னும் என்னைத் தகுதிப் படுத்திக் கொள்ள விரும்பி, புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த தமிழாசிரியர்களைப் பற்றிப் பலரிடமும் விசாரித்துத் தெரிந்து, தெளிந்து, புலவர் நா.ரா அவர்களைப் பற்றி அறிந்து, தேடிப் போய்ச் சந்தித்தேன்.

புலவர் நா.ரா. அவர்களை அஞ்சல்வழியாகவே எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தவர், நான் படித்த திருவையாறு அரசர் கல்லூரியில் பிந்திய இரண்டாண்டு முதல்வராக இருந்த பேராசிரியர் சொ.சண்முகானந்தம் (எ) பாரதிப்பித்தன் அவர்கள்! அப்போது தொலைபேசி பரவலாக இல்லை  என்பதால், நான் உரிமையோடு பேசக் கூடிய என் முதல்வருக்குக் கடித வழியே தொடர்பு கொண்டு கேட்டேன். அவர் சில நூல்களை எழுதிய எழுத்தாளராகவும், தமிழ்நாடு கலை-இலக்கியப் பெருமன்றத்தின் தஞ்சை மாவட்டப் பொறுப்பாளராகவும் இருந்தவர், தோழர் நா.ரா பற்றி எனக்குச் சொல்லி அவரைப் போய்ப் பார்த்து அறிமுகப்படுத்திக் கொள்! எனது மாணவன் என்று சொல்என்றும் தெளிவாக அறிவுறுத்தியிருந்தார்.

ஆலங்குடியில்1983இல் (அப்போது என்வயது-27) நடந்த புலவர் நா.ரா. அவர்களின் அண்ணன் மகள் திருமணத்திற்கு வந்த எங்கள் முதல்வர் பாரதிப் பித்தன் அவர்கள், புதுக்கோட்டையில் என் வீட்டு முகவரியைக் கேட்டு வந்து சேர்ந்தார்! கல்லூரிப் படிப்பை முடித்து வந்து 5ஆண்டுகள் ஆனாலும் தொடர்பு விட்டுப் போகவில்லை! நானும் விட விரும்பவில்லை! சாப்பிட்டு ஓய்வெடுத்து, என்னையும் அழைத்துக் கொண்டே ஆலங்குடி வந்து என்னை நா.ரா.அவர்களிடம் நேரடியாகவும் அறிமுகம் செய்தார்.  

      அதற்கு முன்பே நாங்கள் அறிமுகமாகிப் பட்டிமன்றங்களில் பேசிக் கொண்டிருந்தோம். என்றாலும்இவனப் பாத்துக்கங்க என்.ஆர்.! நெறயப் படிப்பான், புலவர் படிப்பில் இரண்டாம் ஆண்டில் மாநில முதல் இடமும், நான்காம் ஆண்டு இறுதித் தேர்வில் இரண்டாமிடமும் பெற்றவன். கலை-இலக்கியப் பெருமன்றத்திற்கு வருவான்னு பார்த்தேன், இவன் என்னடான்னா, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருக்கிறான்என்று சலித்துக் கொண்ட தொனியில் சொன்னார். நான் கல்லூரியில் படித்த போதே தோழர் அறிவுறுவோன், மன்னை மறவன் (எ) மன்னார்குடி விஜயரங்கன் வழியாக மதுரையில் தமுஎச தொடங்கப்பட்டது அறிந்து, திருவையாறில் கிளை தொடங்கி அதன் முதல் செயலாளராகி, தஞ்சை மாவட்ட முதல் மாநாடு நாகையில் நடந்தபோது பிரதிநிதிகளோடு நான் சென்று கலந்து கொண்டது எங்கள் முதல்வருக்குத் தெரியும்! பிறகு புதுக்கோட்டைக்கு வந்த நான், 1978இல் த.மு.எ.ச.வின் புதுக்கோட்டை நகரத்தின் முதல் கிளைச் செயலராக, பிறகு பல இடங்களில் கிளைகள் அமைத்தபின் மாவட்டச் செயலராக இருந்து வந்தேன் என்பதை தோழர் நா.ரா.வும் அறிவார். எனவே தன் இயல்பில் வெடித்துச் சிரித்துக் கொண்டேஅதனால என்ன? இரண்டுமே இரட்டைக் குழல் துப்பாக்கி தானே?’ என்று என் முதுகில் தட்டிக் கொடுத்தார். அது எனக்குப் பலப்பல விருதுகள் பெற்றது போலிருந்தது! அந்தச் சிரிப்பில் ஜீவா தெரிந்தார்!   

ஒரு பேச்சு எப்படி இருக்க வேண்டும்?” என்றால், புலவர் நா.ரா. அவர்கள் பேச்சைக் கேட்பவர்கள் புரிந்து மயங்கிப் போவார்கள். இடதுசாரி மேடைப் பேச்சாளர்கள் பலருக்கு இன்றும் வழிகாட்டியாகத் திகழும் ஜீவா அவர்களின் பேச்சை நான் கேட்டதில்லை. மேடையை வசப்படுத்தி, சுற்றிச் சுழன்று, ஆளுமையுடன் அழுத்தமாகப் பேசுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். மேடையில் தோழர் நா.ரா. அவர்கள் பாரதியின்தேடிச் சோறு நிதம் தின்று பாடலைப் பாடும்போது, கடைசி வரியாக நான் வீழ்வேன் என நினைத்தாயோ?” எனும் வரிகளை மட்டும் இரண்டு மூன்று முறை, சற்றே ஏறிய குரலில் சொல்லும் போது அந்த பாரதியே வந்து பாடுவது போல இருக்கும். அதில் மயங்காதார் யார் இருக்க முடியும்?

அவர் உயிருடன் இருக்கும்போதே கலைஇலக்கியப் பெருமன்றத் தோழர்களிடம் இதைச் சொல்லியிருக்கிறேன். ஆசிரியர் டி.ராஜாக்கண்ணு தமிழாசிரியர்களும் நல்ல கவிஞர்களுமான சுந்தரபாரதி, துரை.மாணிக்கம், கொத்தமங்கலம் காசிலிங்கம், ஆசிரியர் சொக்கலிங்கம் என அப்போதே ஒரு குழுவாகப் பட்டிமன்றங்களில் பேச மாவட்டம் தாண்டியும் பலப்பல ஊர்களுக்கு எங்களை அழைத்துப் போனார் தோழர் புலவர் நா.ரா.அவர்கள்.

தோழர் நா.ரா., சொல்லித்தான், இன்றும் தமிழகத்தின் மேடைகளில் அதிரடியான பாடலாகப் புகழ்பெற்ற ‘’காருபோட்டு ஓடிவந்து கையெடுத்து சலாம் போட்டு... ஓட்டுக் கேட்டு வந்தாய்ங்களே சின்னாத்தா இப்ப ஒருத்தனையும் காணலயே என்னாத்தாபாடல் உள்ளிட்ட பல அற்புதமான பாடல்களைக் கொண்ட தோழர் சுந்தரபாரதியின் பாடல் தொகுப்பு, புதுக்கோட்டை சர்மா அச்சகத்தில் அச்சிட்டு வெளிவர நான் உதவி செய்தேன். தோழர்களின் மீதான அவரது அன்புக்கு எல்லையே கிடையாது!

மேடையில் அவர் பேசும்போது, உரத்தகுரலில் பாரதி பாடல்கள் பலவற்றுக்குப் புதிய கோணத்தில் விளக்கம் சொல்லி -தன் பாணியில் சிறு ராகமும் போட்டு- ரசித்து ரசித்துப் பேசி, கேட்போரை மயக்கி விடும் வசீகரப் பேச்சாளர் அவர்! அதுவும் பாரதி, ஜீவா பற்றிப் பேசத் தொடங்கினால்... அவ்வளவுதான் உணர்ச்சிப் பிழம்புதான்! இதனாலேயே அவர் உடல் பாதிக்கப்படும் என்றறிந்து மற்றவர் சொல்லத் தயங்கினாலும் மேடையில் பேசும் அவருக்குப் பின்னாலிருந்து, நான் உரிமையோடு மெதுவாகச் சொல்வேன்..சரிங்க தோழர்...அவருக்கு மட்டுமே கேட்டாலும் என்னைப் பார்த்து வெற்றிலைக்கறை படிந்த பற்கள் தெரிய ஒரு சிரிப்புச் சிரிப்பாரே தவிர அந்தச் சிங்க முழக்கத்தைத் தடுக்க யாரால் முடியும்?

உடல் நலம் நலிவுற்ற போதும் தன் உடல்நலத்தைவிட மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்த தன்னலம் கருதாத மக்கள் தொண்டர் அவர்! இப்போதும் பல ஆயிர ரூபாய் பேசி, உறுதிப் படுத்திக் கொண்டு இலக்கியம் பேசும் பேச்சாளர்களை நினைக்க, தோழர் நா.ரா. என் மனதில் கோபுரமாக உயர்ந்து நிற்கிறார்!   

இப்போதும் நான் மேடையில் பேசும் போது, ஏதாவது பொருத்தமான ஒரு பாடலுடன் தொடங்குவதற்கும், மெதுவான குரலில் பேசத் தொடங்கி, இடையில் கொஞ்சம் கொஞ்சமாக குரல் உயர்த்தி, முடிக்கப் போகும் போது உரத்த குரலில் பேசி முடிப்பதற்கும் அவருடன் பேசிய நிகழ்ச்சிகள் தந்த அவரது பாணி தான் காரணம் என்பதை நான் என்றும் மறவேன்.

பிறகு அவரது மகன் ஜீவாவின் திருமணம் புதுக்கோட்டையில் அய்யா மண்டபத்தில் நடந்த போதும், பொன்னீலன் அண்ணாச்சியைப் பார்க்கும் போதும் மிகுந்த தோழமையோடு சேர்ந்து பேசி மகிழ்வோம். புதுக்கோட்டையில் திருவள்ளுவர் மன்றத் தலைவர் கவிஞர் கண்ணதாசன் மகன் (என் மாணவர்) திருமணத்தை என் தலைமையில், பொன்னீலன் அண்ணாச்சி நடத்தி வைக்க வந்திருந்த போது, ரயில் ஏற்றிவிட முன்னாலேயே போய், ரயிலடியில் பேசியதில் பாதி, நா.ரா.பற்றித்தான்!  

1993இல் வெளிவந்தசிவகங்கை அண்ணன்- மீராவின் அன்னம் வெளியீடாக வந்த- எனதுபுதிய மரபுகள்நூலுக்கு அந்த ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கான பரிசைத் தமிழ்நாடு கலை-இலக்கியப் பெருமன்றம் எட்டயபுரத்தில் எனக்கு வழங்கிய போதும், அந்த நூலை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ., தமிழ் வகுப்பிற்குப் பாடநூலாக வைத்த போதும் புதுக்கோட்டையில் கலை-இலக்கியப் பெருமன்றக் கிளை சார்பில் எனக்குபாராட்டு நிகழ்ச்சி நடத்தினார். இளைஞர்களை ஊக்குவிப்பதிலும் அவர் எப்போதுமே ஜீவா தான் என்றறிந்த எனக்கு, இந்தப் பாராட்டு நிகழ்ச்சி சிறிய அளவினதாயினும் மிகப் பெருமையாக இருந்தது

அவர் கலைஇலக்கியப் பெருமன்றத்தின் வேர்களில் ஒருவர் என்பது எனக்கு அப்போதே தெரியும். நான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைப் புதுக்கோட்டையில் அமைத்து வளர்த்து வருபவன் என்பது அவருக்கும் நன்றாகத் தெரியும். ஆயினும் என்னிடம் எந்த வேறுபாடும் காட்டாமல் என்னை வளர்த்தார்! இந்தப் பண்புதான் இன்றும் என்னை இந்த வேறுபாடுகளைக் கருதாமல் யாராயினும் இளந்தோழர்களை வளர்க்கத் தூண்டுகிறது என்பதைப் புதுக்கோட்டைத் தோழர்கள் நன்கு அறிவார்கள்!

எது தோழமை இயக்கம்? எது எதிரிகளின் இயக்கம்? என்பதில் உள்ள வித்தியாசத்தை அவரது தோழமை மிகுந்த செயல்பாடுதான் எனக்குக் கற்றுத் தந்தது! ‘’நட்புமுரண், பகைமுரண்’’ என்னும் இந்த வித்தியாசத்தைத் தனது அனுபவச் செயல்பாடுகளால் எனக்குக் கற்பித்தவர் அவர்தான்!

அதனால்தான் இன்றும் -- நான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக எனது பணியைத் தொடர்ந்த போதிலும் -- இன்றைய கலைஇலக்கியப் பெருமன்றத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் தோழர் அண்டனூர் சுரா, மாவட்டச் செயலர் தோழர் பாலச்சந்திரன், மாவட்டப் பொருளர் தோழர் சோலச்சி ஆகியோரை, எனது சகாக்களாக எண்ணி என்னால் மகிழ்வோடு நெருக்கமாகப் பேசிப் பழக முடிகிறது! இணைந்து செயல்பட வைக்கிறது! அதனால்தான் என்னோடு 40ஆண்டுத் தோழமையுடன் கலை-இலக்கியப் பெருமன்றத் தலைவர்களில் ஒருவராக வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் செம்பை மணவாளன் நினைவஞ்சலியில் என்னால் பேச முடிந்தது!

ஆக, இந்த முத்துநிலவனின் ஆளுமையில்ஏதும் இருந்தால்- அதன் வேர்களில் ஒன்றாக இருந்து என்னைத் தோன்றாத் துணையாகத் தூண்டுபவராகத் திகழ்பவர் அருமைத் தோழர் நா.ரா. என்பதை எப்போதும் சொல்வேன். அவருக்கு எனது நன்றியை அவர்வழியில் பணியாற்றி நிறைவேற்றிக் காட்டுவேன் என்பதே அவருக்கான எனது நினைவஞ்சலி!

-------------------------------------------------------------------------------------------

அடுத்து எனது 1000ஆவது பதிவு... விரைவில்

--------------------------------------------------------------------------------------------

 

             

 

8 கருத்துகள்:

  1. மிகவும் சிறப்பான இயல்பான கட்டுரை தந்தையார் பாரதிபித்தன் வழிகாட்டிய நிகழ்வுப்பதிவு நெஞ்சைத்தொட்டது புலவர் நா.ரா. பேச்சை கேட்க வேண்டும் போல் இருக்கிறது...இனியும் உங்கள் மூலமாக.. நன்றி ஐயா!..ஓய்வுநேரம் கிடைத்தால் அப்பாவைப்பற்றி ஒரு தனிக்கட்டுரை தயாரித்து கொடுத்தால் பெரிதும் யகிழ்வேன்..பெருமகிழ்ச்சி!..வாழ்க!..வணக்கம்.

    பதிலளிநீக்கு
  2. சாரதா வி கிபுதன், மே 07, 2025

    உங்கள் 999 பதிவு அருமை ஐயா. தங்கள் ஆசான் புலவர். நா.ரா அவர்களைப் பற்றியும் உங்களைப் பற்றியும் நிறைய விசயங்களைத் தெரிந்துக் கொண்டேன். 1000வது பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாவியாழன், மே 08, 2025

    நன்றி மிக்க அன்பு தோழருக்கு வணக்கம்.

    பதிலளிநீக்கு
  4. தனது பேச்சுக்கு மூச்சு கொடுத்த ஆசானை நெகிழ்வுடன் பெருமை சேர்க்கும் தங்களது நன்றி உணர்வும் அவரது வழிகாட்டுதலும் எத்தகையது என்பதை நேர்த்தியான கட்டுரையாக எழுதியுள்ளீர்கள் அய்யா அருமை

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லாவியாழன், மே 08, 2025

    ஆசானின் பெருமை அருமை ஐயா👌👌

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லாவியாழன், மே 08, 2025

    தோழர் நா ரா அவர்கள் பேச்சைக் கேட்க வேண்டும் எனும் ஆவல் மேலிடுகிறது. நன்றி தோழர்.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லாவெள்ளி, மே 09, 2025

    சிறந்த தமிழ் ஆளுமையை, இளைஞர்களை ஊக்குவித்து முன் வரிசைக்கு அழைத்துச் செல்லும் பாங்கை கொண்ட உங்கள் ஆசான் திரு.நா.ரா அவர்களைப் பற்றி அறிந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இத்தகு ஆளுமைகளின் பேச்சுகள் ஒலி வடிவத்தில் கிடைத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். இப்பகிர்வுக்கு மிக்க நனலறி நன்றி ஐயா🙏🏽

    பதிலளிநீக்கு