மின்னூல் முகாம் – என்ன செய்யவேண்டும்?எப்போதுமே நம் முன்னால் இரண்டு பாதைகள் இருக்கும்!
ஒன்று, எதிலும் பட்டுக்கொள்ளாமல், ‘அப்பா’ படத்தில் வரும் “எதிலயும் பட்டுக்காமெ, இருக்கிற இடம் தெரியாமெ இருந்துட்டுப் போயிரணும்டா” எனும் ஒரு பாதை! இதுதான் பெரும்பாலோர் செல்லும் பழைய பாதை!
இன்னொன்று புதியபாதையைப் போட்டுக்கொண்டு, கைகோத்து வருவோர் பலரையும் சேர்த்துக் கொண்டு, பயணிக்கும் புதிய பாதை! இதுகொஞ்சம் முட்டமோதிமுன்னேறவேண்டும்!                                               வரலாற்றை மாற்றும் வல்லமை கொண்டது புதிய பாதையே!
பிரச்சினையில்லாத பழைய பாதை சுயநலமிக்கது. பிரச்சினைகளுக்கு அஞ்சாத புதிய பாதைதான் புது உலகின் வாசலைத் திறந்து முன்னேறும்!
கணினித் தமிழ்ச்சங்கத்தின் ஒரு முக்கியக் கனவு இந்த மின்னூல் முகாம்!
இதில் கூடவரும் நண்பர்களைக் கைகுலுக்கி வரவேற்கிறேன்!
தமிழின் முதல் எழுத்துமுறை எந்த ஊடகத்தில் இருந்திருக்கும்? கல்லிலோ மண்ணிலோ, மணலிலோ இருந்திருக்கலாம். விலங்குகளின் தோலிலும், மரப்பட்டைகளிலும் எழுதியிருக்கலாம். (காதலர்கள் வேண்டுமானால், காதலிகளின் தோளில், நெற்றியில் ஓவியங்களைத் தீட்டியிருக்கலாம். ஓவியம் தானே எழுத்தின் முன்னோடி?!)
பேச்சு மொழி தோன்றிப் பற்பல நூற்றாண்டுகளின் பின்னர்தானே எழுத்து மொழி தோன்றியிருக்க வேண்டும்? உலக வரலாறு அதுதானே? இன்றும் நாடக பாணியில் சைகையிலேயே சகல வரலாறுகளையும் காட்டிவிடும் சிலர், அந்த முந்திய நம் வரலாற்றின் மிச்சசொச்சம் தானே? சைகையே இல்லாமல் கையைக் கட்டிக்கொண்டு பேசச் சொன்னால் யாருக்கும் பேச்சே வராது! (எம்.ஜி.ஆரைக் கையைக் கட்டிக்கொண்டு ஒரு பாட்டாவது பாடி, படம் எடுத்துவிட முடியுமா?) சைகை முக்கியம்! நாடகத் தமிழ்தான் தமிழின் தொடக்கம், அதோடு இசைத்தமிழ், அதன் பின்னே இயல்தமிழ்!  
சரி எழுத்துக்கு வருவோம்!  சுட்ட பானை, ஓடு, கல்வெட்டு, பனை யோலை, துணிச்சீலை எனப் பலநூற்றாண்டுக் காலம் பயணித்த நம் தமிழ், கடந்த நூற்றாண்டில் தானே காகிதத் தாளில் கண் சிமிட்டியது? பின் கணினி எழுத்துருக் கண்டது, இப்போது நூல் வடிவமும் மாறுகிறது!
(நன்றி - தமிழ் விக்கிப்பீடியா)
அவ்வப்போது, எழுத்தின் வரிவடிவமும் மாறித்தானிருக்கிறது. வாகனத்திற்கேற்ற பயணம்! சிந்துவெளிக்கால எழுத்து பிராமி எழுத்து, வட்டெழுத்து என்ற பெயர் மாற்றங்களே இவற்றை உணர்த்தும். கடைசியாகப் பெருவாரியாக இருந்த ஓலைச் சுவடி எழுத்து,  அச்சு வடிவில் நூலானதும் புலிப்பாய்ச்சல் பாய்ந்து பரவியதல்லவா?!
மயிற்பீலி (மயிலிறகின் அடிக்கட்டை-தூவி) கொண்டு, துணியில், பற்பல தாவரக் குழம்புகளால் எழுதப்பட்ட மையும் மாறியிருக்கிறது. தூவி எனும் சொல்லிலிருந்து வந்ததது தான் தூவல் எனும் பேனாவுக்கான தனித் தமிழ்ச் சொல்? (PENNA என்றால் லத்தீனில் இறகின் அடிக்கட்டை தூவி என்பதே பொருள் – அதிலிருந்தே ஆங்கிலப் பேனா வந்தது!)
பலர் சேர்ந்து எழுத்தாணி கொண்டு எழுதிய ஓலையை ஒருசிலரே பயன் படுத்தியது போக, ஒரே முயற்சியில் பலஅச்சுப் பிரதிகள் கண்டதையும் தாண்டி,  ஒருவர் எழுதுவதைப் பிரதி எடுக்காமலே, பலரும் பயன்படுத்தும் மின்காந்தக் கணினி அச்சு வந்தது. இப்போது, அதையும் கடந்து, புயல் பாய்ச்சல் பாய்கிறது இந்த மின்னூல்! அச்சுப்போடாமல், ஆகாய விமானம் ஏறாமலே ஒவ்வொரு நூலுக்கும் கிடைக்கும் உலகப்பயணமிது!
மனிதக் கண்டுபிடிப்புகளில் நெருப்பு, சக்கரம், உலோகம், நெம்புகோல் இவற்றை விடவும் மின்சாரமே புலிப்பாய்ச்சல் நடத்தியது. அதையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டுப் பறக்கிறது இந்த மின்காந்தப் புயல்வாகனம்!
அப்படி ஒரு பாய்ச்சல் வேகத்திற்கு, நமது பாரம்பரியத் தமிழின் எழுத்தாளர் பெருமக்களை அழைக்கும் மின்னூல் முகாம் இதோ!
வரலாறு உங்களை அழைக்கிறது!  வருக! வருக நண்பர்களே!
“தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்
சூழ்கலை வாணர்களும்-இவள்
என்று பிறந்தனள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்” என்று பாரதி பாடியதன் அர்த்தம் உணர்ந்து, “முன்னைப் பழமைக்கும் மூத்த பழமையாய், பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றித்தான” நம் தமிழில், கணியன் பூங்குன்றனார் பாடிய “யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற தொடரின் உண்மையான பொருள், இனிமேல்தான் அனுபவப் பூர்வமாக, எழுத்தாளர் பலருக்கும் இங்கே இயல்பாகப் போகிறது!
சரி, இப்போது சொல்லுங்கள் நீங்கள் எந்தப்பக்கம்?
      பழங்கதை கொண்டு, வெற்றுப் பெருமை பேசி அதிலேயே மகிழ்ச்சி அடைந்து மயங்கி நிற்கப்போகிறீர்களா?
      வளர்ந்து வரும் புதுமைகளை ஏற்று, நம் கருத்துகளை அச்சு ஊடக உலகில் அறிமுகப் படுத்தியதுபோலவே, அகில உலகும் அறியப்போகும் இணைய உலகில் ஏற்றப் போகிறீர்களா? என்பது தான் இப்போது கேள்வி!
      பழையன கழியாமலே புதியன புகும் புதுமையிது!
      அச்சும் இருக்கும் மின்னூலும் பிறக்கும்! அதுதான் சிறப்பு!
      அச்சிட்ட நூல் உள்நாட்டில் விற்கும் எனில், மின்னூல் தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நம்மை அறிமுகப்படுத்தும். (விற்பது, நூலில் தரத்தைப் பொறுத்தது) எனவேதான் இந்தப் முயற்சிக்கு உங்களை அழைக்கிறோம்!
      வருக பயன்பெறுக!
மின்னூல் முகாமிற்கு வருவோர்  கவனத்திற்கு-     
(1)  நேரில் வந்து ஐயம் களைந்து மின்னூலாக்குவதே சிறந்தது
(2)  வரும்போது, மின்னூலாக்க நினைக்கும் உங்களது நூலில் ஒரு பிரதியும் உங்கள் புகைப்படமும் கொண்டுவருக!
(3)  நுழைவுக்கட்டணம் பெரிதில்லை. கையொப்பம் முக்கியம்.
(4)  தவிர்க்க இயலாத சூழலில் வர இயலாவிட்டால், நூல்களின் பெயர்ப் பட்டியல், ஒவ்வொரு நூலின் உள்ளடக்கப் பொருள் பற்றிய மின்னஞ்சல் ஒன்றை எனக்கு அனுப்பிவிடுங்கள்
(5)  அச்சிடாமல் கையெழுத்துப் பிரதியாகவோ, கணினி அச்சிட்ட பிரதியாகவோ வைத்திருந்தாலும் ஒரு நூலாக்கத்திற்குரிய இறுதிவடிவில் அதனை எடுத்து வருதல் வேண்டும். (அச்சுப் பிரதி கணினி  எழுத்துரு வகை பற்றித் தெரிவிக்க வேண்டும்)
(6)  மூடநம்பிக்கை பரப்புகின்ற- வாஸ்து, சோதிடம், மற்ற சாதி மதத்தவர் பற்றிய அவதூறு கிளப்பும், சமூக - தேச விரோத உள்ளடக்கம் கொண்ட- நூல்களைக் கணினித் தமிழ்ச்சங்கம் பரிந்துரைப்பதில்லை என்பதும் முக்கிய கவனத்திற்குரியது.
(7)  வருவது பற்றி முன்னதாகச் சொல்லி விட்டால், ஏற்பாடுகள் செய்வோர்க்கு உதவியாக இருக்கும்.
(8)  மாலை 6மணிக்குத் தொடங்கி, இரவு 8.30க்கு முடிவடையும்.
(9)  பிறர் நூல்களைப் பரிந்துரை செய்வோரும் வரலாம். அந்தந்த நூலாசிரியர்களின் அனுமதிக்கடிதம் பெற்றுவர வேண்டும்.
(10)          இறுதி முடிவு www.pustaka.co.in நிறுவனத்தினுடையதே!

மற்றவை நேரில்… வருக! வணக்கம்!
அன்புடன் அழைப்பது,
கணினித் தமிழ்ச்சங்கம்,
புதுக்கோட்டை

செல்பேசித் தொடர்புக்கு-
9443193293,  9659247363, 8870394188
மின்னஞ்சல் தொடர்பிற்கு
வழக்கம்போல்,
கணினித் தமிழ்ச்சங்கத்தின்
பயன்மிகு நிகழ்வுகளுக்குத்
துணைநிற்கும்
பத்திரிகை நண்பர்களுக்கு
 ------- நன்றி நன்றி -----
நன்றி - தினமணி நாளிதழ்  11-01-2017

நன்றி - புதுகை வரலாறு  நாளிதழ், 11-01-2017

நன்றி -  தீக்கதிர்  நாளிதழ் 12-01-2017
--------------------------------------------------------------- 
பின்குறிப்பு
முகாம் தொடர்பான
முந்திய பதிவு பார்க்காதவர்கள்
பார்க்க - இணைப்பிற்கு

இச்செய்தியை
இணையத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி-
------------------------------------------------------------------ 

24 கருத்துகள்:


 1. தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  பதிவர்களுக்குப் பயனுள்ள நிகழ்வு
  பங்கெடுப்போருக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 2. சிறப்பான முயற்சி ஐயா. இந்த நிகழ்வு மூலம் பலரும் பயனடைய வேண்டும்.....

  புதுகை நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா. சுமார் 50 வலை எழுத்தாளர்கள் இதனால் நூலாசிரியராக முயல்கிறோம். தவிர மொத்தமாய் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை மின்னூலாக்கித்தர திரு பத்மநாபன் அவர்களிடம் கேட்க எண்ணியிருக்கிறோம். இது தொடக்கம் தான், சென்னை, மதுரை, கோவை என இன்னும் பல இடங்களில் இப்படி நடத்திட நமது வலை நண்பர்கள் முன்வந்தால், நானும் உதவுவேன், திரு பத்மநாபன் அவர்களும் தயாராக உள்ளார்கள். அநேகமாக அடுத்து, மும்பையில் நம் வலைப்பதிவரும் எழுத்தாளருமான புதிய மாதவி திட்டமிடுவார் என நினைக்கிறேன்! ஏன்..டெல்லியில் நீங்கள் கூட நடத்தலாம்! கூடிவாழ்ந்தால் கோடி நன்மை, வலைப்பதிவர்கள் கூடி முயன்றால் கோடி மின்னூல்! உண்மைதானே?

   நீக்கு
 3. கணினித் தமிழ்ச்சங்கத்தின் மகுடத்தில் மற்றுமொரு மைல்கல் (வைரக்கல்...)

  விழா சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா, வலைச்சித்தரே, தங்களின் வலைப்பக்கம் உருவாக்கும் வழிகாட்டி நூலை மின்னூலாக்கினால் உலகத்தமிழர்க்குப் பயன்படுமே? வாருங்களேன்?

   நீக்கு
 4. போற்றுதலுக்கு உரிய செயலை முன்னெடுத்துச் செய்கின்றீர்கள்
  அவசியம் வருகிறேன் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
 5. விரிவான விளக்கம் அண்ணா....நானும் பகிர்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 17ஆம் தேதி மாலை நம் நண்பர்களோடு சந்தித்துத் திட்டமிட்டு 18ஆம் தேதி சிறப்பாக நடத்துவோம் மா.

   நீக்கு
 6. அண்ணா வணக்கம்.

  நல்ல முயற்சி. முகாமுக்கு வரும் சூழல் இல்லை. நான் புத்தகம் எழுதும் அளவிற்கு திறன் படைத்தவள் அல்ல. ஆனால் துளசிக்குப் புத்தகம் கொண்டுவரும் ஆவல் உண்டு. இன்னும் அவர் அதற்குத் தயாராகவில்லை. மார்ச் மாதம் அல்லது அதன் பிறகு என்றாலும் உங்களைத் தொடர்பு கொள்ளலாம் தானே? இப்போது நீங்கள் கவனத்திற்கு என்று கொடுத்திருக்கும் வழிகளைப் பின்பற்றி உங்களைத் தொடர்பு கொள்ளகாம் தானே?

  மிக்க நன்றி அண்ண இது போன்ற வாய்ப்பை அறிமுகப்படுத்துவதற்கு. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரரும், தாங்களும் இணைந்து நடத்தும் வலைப்பக்கப் படைப்புகளையே தனித்தனித் தொகுப்புகளாகக் கொண்டுவரலாமேம்மா? முயலுங்கள்.. சென்னையில் ஒரு முகாம் நடத்தலாமா? நண்பர் முரளி மற்றும் அய்யாவிடம் கேட்கிறேன், நீங்களும் சென்னை நண்பர்களிடம் பேசுங்கள்!

   நீக்கு
 7. இதற்கு முந்தையக் கருத்தில், (கவனத்திற்கு என்று சொல்லப்பட்டதில்) வரமுடியாத சூழலில் செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பின்பற்றி என்று எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். அவரது புத்தகம் தயாரானதும் உங்களைத் தொடர்பு கொள்ளலாம் தானே. (6 வது விதிக்கு - புத்தகம் விதிகளுக்கு உட்பட்ட புத்தகமே.) இது பற்றிய ஐயங்களைத் துளசியைத் தொடர்பு கொண்டுவிட்டு உங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பச் சொல்லுகிறேன்.

  மிக்க நன்றி அண்ணா.. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தங்கையே! வலைப்பக்க எழுத்தாளர் பலர் -நண்பர் துளசி உட்பட- அருமையாக எழுதியும் இன்னும் நூல் வெளியிடாமல் உள்ளார்கள். அவர்களை நூல் வெளியிடச் செய்வதும், அல்லது மின்னூல் வெளியிடச் செய்வதுமே நோக்கம். உங்கள் எழுத்துகள் விரைவில் நூலாகி, வலையுலகம் தாண்டியும், உலகம் முழுவதும் சென்றடைய வாழ்த்துகள் மா.

   நீக்கு
 8. அற்புதமான தெளிவான விளக்கம் அய்யா! தங்களின் வித்தியாசமான தொடர் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். நானும் கலந்து கொள்கிறேன். நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் வருவதால், இன்னும் இளைய எழுத்தாளர் பலர் உற்சாகம் பெறுவர். அவசியம் வரவேண்டும்.

   நீக்கு
 9. அருமையான முயற்சி ஐயா! அதைவிட இதை நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள விதம் மிக அருமை! தமிழ் எழுத்து வரலாறு, தூவல் - பேனா ஆகிய சொற்கள் பிறந்த விதம் என சுவையான வரலாற்றுப் பதிவையே வழங்கி விட்டீர்கள். மிக்க நன்றி!

  எனக்கும் நூல் எழுதும் ஆவல் உண்டு ஐயா! வலைப்பூவில் வெளிவந்த கட்டுரைகளை மின்னூலாக்கும் எண்ணமும் உண்டு. ஆனால் இன்னும் அந்த வேலைகளுக்கு நான் ஆயத்தமாகவில்லை. மின்னூல் உருவாக்கும் பதிப்பகத்திலேயே வேலை பார்த்ததால் பட்டறிவும் உண்டு. விரைவில் அந்த வேலைகளில் இறங்குவேன். இப்பொழுது உங்கள் வழிகாட்டலில் மின்னூலுலகுக்கு வருகை புரியவிருக்கும் நம் நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவன்பான நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா, பழம் நழுவிப் பாலில் விழுந்தது, விஜய்காந்த் போல ? அதுவும் நழுவியது எப்படி?
   விரைவில் நூலாசிரியராக வாழ்த்துகள்.

   நீக்கு
 10. நல்லது ஐயா,உங்கள் முயற்சிகள் அனைத்துக்கும் எமது நன்றிகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன்.
   வாழ்த்துகள் இருக்கட்டும், அதற்குத் தனி நன்றி. சரி, நூலாக்கம் எப்ப?

   நீக்கு
  2. உண்மையில் நான் இதுவரை அப்படி எதையும் எழுதவில்லை ஐயா.இப்போதைக்கு என்னால் நன்றியும் பாராட்டுக்களையும் தானே வாரிவழங்க முடியும்.

   மின் நூலாக்கும் படி என் எழுத்துக்களும் மேம்படட்டும் ஐயா. அதன் பின் நானும் உங்களுடன் இணைகின்றேன்.

   நீக்கு
 11. வணக்கம் அண்ணா! நேரில் வர முடியாமைக்கு வருந்துகிறேன். ஆனால் நீங்கள் கொடுத்த ஊக்கத்தினால், இரண்டு சிறுகதை தொகுப்புகளும், மூன்று கட்டுரை தொகுப்புகளும் மின்னூலாக்கத் திட்டமிட்டிருக்கிறேன். (ஒரேயொரு மின்னூல் மட்டும் ஏற்கெனவே நிலாச்சாரல் வெளியிட்டுள்ளது.) என்னுடைய மற்ற ஆக்கங்கள் மின்னூலாவதற்கு உங்களுக்கும் புதுகை கணிணித் தமிழ்ச்சங்கத்துக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். மூட நம்பிக்கை பரப்பும் நூல்களை வெளியிடுவதில்லை என்ற கொள்கைக்குப் பாராட்டுக்கள்! படைப்புக்களை மின்னூல்லாக்கப் பதிவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வழிகாட்டும் தங்களுக்கும், புதுகை கணிணித் தமிழ்ச்சங்கத்துக்கும் பதிவர்கள் அனைவரும் நன்றி கூறக்கடமைப் பட்டுள்ளோம். மீண்டும் நன்றி அண்ணா!

  பதிலளிநீக்கு
 12. அருமையான அறிமுகத்துடன் தகவல் பகிர்ந்துள்ளது கலக்கல் அண்ணா. என் நூலும் அனுப்புகிறேன். நன்றி அண்ணா.

  பதிலளிநீக்கு