“இரவிலே வாங்கினோம் விடியவே இல்லை“ எழுதியவர் யார்? எனக்குப் பிடித்த கவிதைகள் – 4/100

“இரவிலே வாங்கினோம் விடியவே இல்லை“ எழுதியவர் யார்? எனக்குப் பிடித்த கவிதைகள் 4/100

எழுதியவர் பெயர் தெரியாமலே, பிரபலமாக விளங்கும் கவிதைகள் தமிழில் பலவுண்டு!


சென்னை உதவித் தொடக்கக் கல்வி அலுவலரும் பிரபல பதிவருமான தி.ந.முரளிதரன் அவர்கள் தனது பதிவொன்றில்,
“வெறும்கை என்பது மூடத்தனம் – நம் 
 விரல்கள் பத்தும் மூலதனம்“ எனும் பிரபலமான கவிதையை இவ்வாறே எடுத்துக்காட்டி எழுதியவர் தாராபாரதி என்னும் நம்காலக் கவிஞர் என்பதைச் சுட்டிக்காட்டியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

அதுபோல, சில நல்ல கவிதைகளை மறந்துவிடாமல் நினைவூட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது மட்டுமல்ல, அவற்றை எழுதியவர்களையும் சேர்த்து நினைவூட்ட வேண்டும் என்பது என் ஆசை. 
எனவே தான் இந்தப் பதிவு.

சங்க இலக்கியத்திலேயே இந்தச் சிக்கல் உண்டு. அருமையான கவிதைகள் பலவற்றுக்கு எழுதியவர் பெயர் தெரியவில்லை. பதிவுகள் இல்லை! எனவே, அந்தக் கவிதையின் சிறப்பான வரிகள் மற்றும் சொல்லாட்சியைக் கொண்டே அந்தக் கவிதையை எழுதியவரை அறியும் உத்தியைப் பின்பற்றினார்கள்.
“செம்புலப் பெயல்நீரார்“, “ஓரேர் உழவர்“, தேய்புரிப் பழங்கயிற்றினார்“, “தொடித்தலை விழுத்தண்டினார்“, “கழாத்தலையார்“ போன்றன இவ்வாறான ஆசிரியர் பெயர் அறியாப் பாடல்களின் ஆசிரியர் பெயர்களே! பார்க்க-
http://ta.wikipedia.org/wiki/ பகுப்பு:பெயர்_தெரியாச்_சங்கப்_புலவர்கள்

அன்று பதிவுக்கு வாய்ப்புகள் இல்லாததைப் புரிந்து கொள்ளமுடியும். இன்றைய கவிதைகளின் ஆசிரியர் பெயர் அறியாமலே பரவுவது எடுத்துக் காட்டுவோரின் அலட்சியமன்றி வேறில்லை! பெரும்பாலும் இதுபோலும் தவறுகளை மேடைப் பேச்சாளர்கள்தாம் செய்கிறார்கள் என்பதும் உண்மை! அல்லது மாற்றிச் சொல்லிவிடும் கொடுமையுமுண்டு

சரி இப்போது கேள்விக்கு வருவோம்-
புதுக்கவிதை வெற்றிபெற்றதன் அடையாளமாக இந்தக் கவிதையைச் சொல்லலாம். தமிழின் மிகவும் பிரபலமாக விளங்கும் வெகுசில புதுக்கவிதைகளில் இதுவும் ஒன்று. “மூவாயிரம் ஆண்டு மரபுக்கவிதை இந்த இரண்டுவரி புதுக் கவிதையிடம் மண்டியிட்டது அதாவது வடிவத்தின் வெற்றியால்“ என்று நான் பல கருத்தரங்குகளில் பேசியும் எழுதியுமிருக்கிறேன். மிக எளிய படிப்புள்ள தமிழர்களும் அறிந்திருக்கும் புதுக் கவிதை இது. தமிழ்க்கவிதை வரலாறு எழுதுகின்ற யாரும் மறக்காமல் சேர்க்கும் வரிகள் இவை.
“இரவிலே வாங்கினோம்,
விடியவே இல்லை“ இதுதான் அந்த 2வரிக்கவிதை!

இதை எழுதியவர் யார் என்பதுதான் கேள்வி.

(தெரியாதவர்கள் இந்தப் பதிவின் கடைசிப் பத்திக்கு வரவும். வேணாம்.. வாச்சாங்கோலி ஆட்டம் ஆடக் கூடாது.. தெரியலன்னா தெரியலன்னு சொல்றதுதான் சரி.. களவாணித்தனம் வேணாம் சொல்ட்டேன்..)
தெரிந்தவர்கள் மேலே தொடரலாம்...

திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்து வந்த போது, பாரதிதாசன் பாடல்களை அந்தக்கட்சியின் பிரபல பேச்சாளர் பலரும் மேடையில் எடுத்து முழங்குவார்கள். கேட்கவும் உணர்ச்சிகரமாக இருக்கும், கிளர்ச்சியூட்டுவதாகவும் இருக்கும்.

அப்படி அவர்கள் முழங்கிய கவிதைகளில் –
“சீரங்க நாதனையும் தில்லை நடராசனையும்
பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ? மற்றும்
“சாம்போதும் தமிழ்படித்துச் சாதல் வேண்டும் எந்தன்
சாம்பலும் தமிழ்மணந்து வேக வேண்டும்“ எனும் இரண்டு கவிதையும், அன்று எப்படியோ தெரியாது, ஆனால், தமிழ்நாட்டின் பல்வேறு மேடைகளில், இன்று பாரதிதாசன் பெயரில் சொல்லப்படுகின்றன!
இவை இரண்டுமே பாரதிதாசன் பாடல்கள் அல்ல!

இவற்றை –இந்த இரண்டு கவிதைகளையும்-எழுதியவர் பெயர்கள் தெரிந்தவர் சொல்லலாம். 

புதுக்கோட்டை தவிர்த்து, பிற ஊர்களில் இருந்து முதலில் சொல்லும் ஐந்து நண்பர்களுக்கு எனது நூல்கள் இரண்டை என் செலவில் அனுப்புவேன். (புதுக்கோட்டையில் இவை பற்றி அடிக்கடி நானும் பேசியிருக்கிறேன் என்பது ஒரு காரணம்)
--------------------------------------
அந்தக் கவிதையை எழுதியவர் -
கவிதைத் தொகுப்பு எதுவும் வெளியிடவில்லை!
வேறு கவிதை எழுதியதாகவும் தெரியவில்லை!
அவர் பெயர் சேலம் அரங்கநாதன் என்பதாகும்.

ஆனாலும் இந்தக் கவிதைக்கு ஒரு முன்னோடிக் கவிதை ஒன்றும் உண்டு.. 
அது என்னவென்பது அடுத்த பதிவில்...

---------------------------------------------

14 கருத்துகள்:

 1. அய்யா வணக்கம்.

  அறியப்படாத அல்லது தவறாக அறியப்பட்ட கவி ஆளுமைகளை அறியத்தரும் தங்களின் முயற்சி போற்றப்பட வேண்டியது.
  இந்தக் கவிதைத் தொடரைத் தொடர்கின்ற என்போன்றோர்க்குப் பேருதவி அது.

  தங்களின் முதல் கேள்விக்கான பதில்

  1) அம்மையப்பன். நாகபட்டினத்தைச் சார்ந்த இவர் திராவிட இயக்க மேடைகளில் டேப் அடித்துப் பிரச்சாரப் பாடல்களைப் பாடக் கூடியவர். பாடும்போதே அப் பாடல் அடங்கிய துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படும்.
  வேங்கடாசலபதியின் “முச்சந்தி இலக்கியம்“ எனும் நூலில் இவர் பற்றிய குறிப்பு இருக்கிறது என நினைக்கிறேன்.

  இரண்டாம் கேள்விக்கான பதில் ஏற்கனவே அவுட் ஆகிவிட்டது
  http://valarumkavithai.blogspot.com/2014/07/blog-post_8.html எனும் தங்களின் பதிவில்...


  “““““எல்லோரும் புரட்சிக்கவி பாரதிதாசன் என்று கருதும் இவ்வரிகளின் சொந்தக்காரர் ஈழத்தின் மறக்கப்பட்ட ( மறைக்கப்பட்ட) மாகவிகளுள் ஒருவராகிய சச்சிதானந்தம் அவர்கள்.““““““

  விடைசரியெனில்.. ஈச்சான்கோலி என்பதற்கு அர்த்தம் சொன்னால் போதும்.
  த ம கூடுதல் 1
  மிக்க நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
 2. அய்யா வணக்கம்.
  திரு. அரங்கநாதன் அவர்களின் கவிதைக்கு முன்னோடி,
  ‘பொதுவுடைமைக்கு நான் பகைவன்...?’ எனுந்தலைப்பில் பாரதிதாசன் பாடிய,

  “ அறியா மையும் செருக்கும்கை கோத்து
  அரியணை யமர்கையி லண்ணலே வொதுங்கினார்.
  உழுதவ னில்லை விதைத்தவ னில்லை
  மக்களுக் குள்ள சிக்கலறுக் காமல்
  ‘எல்லார்க்கு மெல்லாம்‘ என்னும் உரிமை
  சொல்லால் செயலால் தொடவு மெண்ணினார்
  ‘இரவில் வாங்கும் இந்திய விடுதலை
  என்று விடியுமோ யார் அறிகுவரே‘.“

  என்னும் வரிகள்தானே அய்யா.....?!

  நீங்கள் சொல்லிக் கொடுத்ததுதான்..!

  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. 1) சுப்புரத்னம் அவர்கள் 2) முனைவர் க.சச்சிதானந்தன் அவர்கள் என்று நினைக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வலைச்சித்தரே,
   இரண்டுக்கும் சரியான விடையை நம் ஊமைக்கனவுகள் விஜூ எழுதிவிட்டார் என்பதால் அவரது பின்னூட்டத்தை வெளியிடாமல் வைத்திருக்கிறேன். விரைவில்.. நன்றி

   நீக்கு
 4. பதில்கள்
  1. சரியா தவறா இருக்கட்டும், “அந்த இன்னொன்னு“ எங்கண்ணே?
   (மேற்காணும் பின்னூட்டத்தைக் காண வேண்டுகிறேன்) நன்றி

   நீக்கு
 5. யாழ்பானத்தில் இருந்த
  மாவிட்டபுரம் சச்சிதாநந்தன் அவர்கள்....
  இவர் விபுலானந்த அடிகளாருடைய மாணவர்

  பதிலளிநீக்கு
 6. அய்யா,மற்றொன்றுக்கு பதில் தெரியவில்லை .ஆனால் அவர் பெரியாரின் சீடர்களில் ஒருவராய் இருக்கலாம் என நினைக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 7. அப்ப சரி ஆர்வத்தோடு காத்திருக்கிறேன் பதிலுக்காக .

  பதிலளிநீக்கு
 8. Ayya ...ennai annan ena azhaikathirkal.....
  Neengal edutha paadatthai etti nindru paartha eakalaivan....naan ungal maanavan...
  Naan namathu mun maathiri palliyil ,+1,+2 padikkum vaaippai matrume petravan..

  பதிலளிநீக்கு
 9. முதல் கவிதை கலைஞருடையது என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. அய்யா..இதில் யாருக்கு பரிசு??

  பதிலளிநீக்கு
 11. அவர் சேலம் அரங்கநாதனா என்பது தெரியாது. எ. அரங்கநாதன். பட்டப் படிப்பை வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் படித்தார். பின்னர் எம்.ஏ. படிப்பை (தத்துவ இயல்) பச்சையப்பன் கல்லூரியில் படித்தார். அவருக்கு ஓர் ஆண்டு இளையவர் வைரமுத்து. அதையடுத்து ஓராண்டு ஜூனியர் லேனா தமிழ்வாணன். அதற்கு பின்தான் அடியேன். நான் (1 ஆம் ஆண்டு பி.ஏ. தமிழ்), வைரமுத்து (3 ஆம் ஆண்டு பிஏ), பொன்மணி, அரங்கநாதன் (எம்ஏ முதல் ஆண்டு) ஒரே மேடையில் கவிதை படித்தோம். அரங்கநாதன் பட்டிமன்றத்திலும் பேசினார். அவர் நூல் வெளியிடவில்லை. சில நண்பர்கள் அவருக்கு உதவ முன்வந்தனர். (முத்தையா இராமநாதன், தாமோதரன் ஆகியோர்). எதுவும் நடக்கவில்லை. கல்லூரியில் பாப்புரலாக இருந்த அவர், பின்னர் காணாமல் போனார்............. தொடர்பில்லை.

  பதிலளிநீக்கு
 12. பாவேந்தர் பாரதிதாசன் பாடல் வரி உண்டு. அதுதான் அரங்கநாதன் கவிதைக்கு முன்னோடி.

  தாரா பாரதி வேடந்தாங்கல் இலக்கிய வீதியில் இருந்தவர் என நினைவு. சென்னை மடிப்பாக்கில் வசித்த அவர் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார். அவரது படைப்புகள் நூலாக வெளியாகியுள்ளன என அறிகிறேன்

  பதிலளிநீக்கு