பாரதிக்கு இலக்கணம் தெரியாதா?! - தினமணியில் வைரமுத்து !

பாரதி பாரதிதாசனை இப்படியா ஒப்பிடுவது?

பாரதியைப் பெரிதும் விரும்புவோர் பாரதிதாசனைத் தாழ்த்துவதும், பாரதிதாசனைப் பெரிதும் விரும்புவோர் பாரதியைத் தாழ்த்துவதுமான போக்கு, தமிழ்நாட்டில் வெகுநாளாகவே நடக்கிறது.

இருபெரும் ஆளுமைகளான இருவரையும் ஒப்பிட்டு சுயதிருப்தி கொள்ளும் இந்த வேண்டாத வேலையைப் பலரும் பலகாலம் செய்து வந்தாலும் இன்றைய (29-04-2015) தினமணியில் –பாரதிதாசனின் பிறந்தநாளில்- வைரமுத்து செய்திருப்பது பெரிய தவறு!


பாரதிதாசனைப் பற்றிய பல நல்ல செய்திகளை எடுத்துரைத்த வைரமுத்துவை, வெகுநாள் கழித்து வெறும் “கவிஞர்“ என்ற அடைமொழி கொண்டு, (கவிப்பேரரசு எனும் திரைமொழி விட்டு) வெளியிட்டிருக்கும் தினமணியைத் தனியாகவே பாராட்ட வேண்டும். (ஆனாலும், வைரமுத்துவின் எந்தெந்த வரிகளையெல்லாம் வெட்டினார்கள் என்று வைரமுத்துவிடம்தான் கேட்க வேண்டும். சரி அதை விடுங்கள்..)

“பாரதியைவிட இலக்கணம் கற்ற பாரதிதாசன்“ என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் வைரமுத்து.
ஏன் இந்த வேண்டாத வேலை?

இதில் பலகேள்விகள் எழுகின்றன-
1.பாரதிக்கு இலக்கணம் தெரியாதா?
2.எந்தெந்த இடத்தில் இலக்கணப் பிழையுடன் பாரதி தம் கவிதைகளை எழுதியிருக்கிறார் என்று சொல்ல முடியுமா?
3.பாரதியை விட இலக்கணம் கற்ற என்று பாரதிதாசனைப் பற்றி எழுதும் நோக்கமென்ன? (பாரதியை விட உயர்ந்தவர் என்பதன்றி)
4.பாரதி, பாரதிதாசன் இருவருமே இலக்கணம் பற்றிப் பேசிக்கொண்டவர்கள்தான். இதில் உயர்வு தாழ்வு எங்கே வந்தது?
5.தேசிய-திராவிட மோதல் போக்குக்கு இந்த மாபெரும் கவிஞர்களை இப்படியா ஒப்பிடுவது?
6.இலக்கணம் பற்றிய புரிதலில் புலவர், கவிஞர் இருவருக்கும் வேறுபாடு உண்டு. இதில் பாரதியின் இலக்கணப் புரிதல்தான் முக்கியமே அன்றி இலக்கணம் தெரியாது என்பது எப்படிச் சரியாகும்?
தெரிந்தே இலக்கணத்தை மீறியவன் பாரதி.
(அவனது “செந்தமிழ் நாடெனும் போதினிலே“ பாடல் இரண்டாம் பரிசு பெற்ற காரணத்தை அறிந்தவர் அறிவார். அறியாதார் இந்த எனது வலைப்பக்கம் வருக -http://valarumkavithai.blogspot.com/2013/10/blog-post_22.html#more

அதே கட்டுரையில், பாரதியின் “பாஞ்சாலி சபத கையெழுத்துப் பிரதியைப் பார்த்து, இனிமேல் நாமும் எளிய தமிழில் எழுத வேண்டும்“ என்று முடிவெடுத்துச் செயல்பட்டதாக பாரதிதாசனின் செயலை வெளிப்படுத்திய வைரமுத்து, இதில் தமிழ்ப்பயன்பாட்டை பாரதியிடம் பாரதிதாசன் கற்றுக்கொண்டதை அல்லவா சொல்லியிருக்க வேண்டும்? அதைவிட்டு ஏன் இப்படி?

கவிஞர் வைரமுத்துவுக்கு நாம் சொல்வது
“ஒருவீர் தோற்பினும் தோற்பது நும்குடி!
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே“
 (புறநானூறு 45, நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி சண்டையைத் தவிர்க்க, கோவூர் கிழார் பாடியது- ) 


இன்று பாரதிதாசனின்125ஆவது பிறந்தநாள்!
“நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா,
காடு கமழும் கற்பூரச் சொற்கோ
தமிழர் திறம்பாட வந்த புலவன்
புதிய அறம்பாட வந்த அறிஞன்”
இது பாரதியைப் பற்றி பாரதிதாசன் பாடியது.
பாரதிதாசனுக்கும் பொருந்தும்!
பாரதிதாசனின் புகழ் நீடுவாழ்க!
----------------------------------
நன்றி தினமணி – ஏப்.29, 2015. 
தலையங்கப் பக்கக் கட்டுரை-எழுதியவர் வைரமுத்து.
-----------------------------

19 கருத்துகள்:

  1. ஒரு வேளை எழுத்தாளர் அவர்கள் இறந்த பின் எழுதிய கடிதத்தை மறைக்க மறக்க இப்படி செய்து இருப்பாரோ என்று தோன்றுகின்றது.
    பாரதியார் .. பாரதிதாசன் ... இருவரும் தம் தம் வழியில் தனக்கே நிகரானவர்கள் . வடுகபட்டி அவர்கள் சில நாள் நம்மிடம் இருந்து மறைந்தவர்களை தனியே விட்டுவிடுவது நல்லது என்று நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  2. //பாரதியைவிட இலக்கணம் கற்ற பாரதிதாசன்“ ///
    இவ்வரிகள் வருத்தத்தைத் தருகின்றன ஐயா
    தம+1

    பதிலளிநீக்கு
  3. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணமே காரணம் தான் சொல்வதெல்லாம் சரி என்ற மமதையும் தான் சகோ

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா
    இல்லாத மனிதர்களை பற்றி குறை சொல்வது மனிதர்களின் இயல்பு... அவற்றில் ஒன்றுதான் இது. எழுத்து சிகரம் ஜெயக்காந்தன் பற்றி என்ன சொல்ல காத்திருக்கார் வைரமுத்து அதுவரை காத்திருப்போம் ஐயா.

    இலங்கையில் மாணவர்களுக்கு தமிழ் பிரிவில் பாரதியர் கவிதை ஒரு பாடமாக உள்ளது .அவர் இலக்கணம் மீறி எழுதியிருந்தால் பாடத்திட்டத்தில் சேர்த்திருக்கமாட்டார்கள் த.ம3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் அய்யா!
    தங்களது பதிவினை படித்தேன்!
    கவிஞர் வைரமுத்துவை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு திரிந்தவன் நான் எனது கல்லூரி பருவத்தில்? புதுவை பாரதிதாசன் மகளீர் கல்லூரி பக்கத்தில் உள்ள குப்புசாமி பங்களாவில் இலக்கிய நண்பர்களுடன் ஒரு பெரிய விவாதமே நடைபெறும்!
    பொதிகையாய் பொங்கி வரும் அர்த்தங்களை கொண்டு அவரது எழுத்தின் பிம்பத்தைக் கண்டு மலைத்திருந்தோம்! அன்று! ஆனால்? இன்று?
    சமீப காலமாக அவரது செயல்பாடு அவ்வளவாக சொல்லும்படி இல்லை என்றே தங்களை போன்றே இன்னும் சில நிகழ்வுகள் (பதிவுகள்) (எழுத்தாளர் ஜெயகாந்தன்) நிருபித்துக் காட்டியுள்ளன.
    தவறு செய்தால் அதை கண்மூடித் தனமாக எப்படி ஏற்க முடியும்? எடுத்து சொல்லி உள்ளீர்கள் அய்யா? பாராட்டுக்கள்.

    பாரதிக்கு இலக்கணம் தெரியாதா?! - தினமணியில் வைரமுத்து"
    பாரதிக்கே தாசனாகி, கனக சுப்புரத்தினமாக இருந்த கவிஞர் பாரதி தாசனாகி மாறி அந்த பெயராலே நிலைத்து நின்றபோது, அவர்களது நட்பை நாணம் கொள்ள செய்யும் வேலையை வைரமுத்து செய்வது முறையாகாது.
    பாரதிதாசன் அவர்களது பணி ஆசிரியர் பணி!
    அவர் இலக்கணம் கற்றிருத்தல் அவசியம்! அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை!
    கவிஞர் தமது புகழை தக்க வைக்க தமது எழுத்தைமட்டுமே நம்ப வேண்டும் என்பதை இனியாவது உணரட்டும்!



    புதுக் கவிதை மன்னன் வைரமுத்துவா? மு.மேத்தாவா?
    கண்ணதாசனா? வாலியா?
    கமலா? ரஜினியா?
    விஜய்யா? அஜித்தா?
    வேண்டாமே இந்த பட்டிமன்ற தலைப்புகள்!
    திறமையை மட்டுமே பேசுங்கள்! குறை இருப்பின் சொல்லுங்கள்
    ஒருவரோடு ஒருவரை உயர்த்தி தாழ்த்தி கருத்து கூறுவது!
    அழகுக்கு அழகல்லவே!

    புரட்சிக் கவி
    தனது பாடலில்
    “அக்கா அக்கா என்றாய் !

    அக்கா வந்து கொடுக்க

    சுக்கா, மிளகா ?

    சுதந்திரம் கிளியே”




    இந்த பாடலை வைத்து பாரதிதாசன் அவர்கள் சுதந்திரத்தை கிண்டல் செய்வதாக அப்போது ஒரு பெரிய விவாதமே நடை பெற்றதாகாக கூறினார்கள். ஆனால் "கூண்டுக் கிளி" தலைப்பிட்டு எழுதிய இந்த கவிதையை ஒவ்வொருவர் பார்த்த பார்வையின் நோக்கமே அன்றி வேறு ஒன்றும் இல்லை!
    எனவே வேற்றுமையிலும் ஒற்றுமையை காண்போம் என்றே சங்கே முழங்கு!
    நன்றி அய்யா!
    த ம 4
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  6. வைரமுத்து இப்போது சீஃப் பப்ளிசிட்டிக்கு ஆசைப்பட்டு இப்படி தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்பி விடுவதாகத் தோன்றுகிறது! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. இது வைரமுத்துதான், இப்போதுதான் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கவேண்டாம். முன்பே பலராலும் சொல்லப்பட்டது. செம்மலரின் இதுபற்றி விவாதம் நடந்து படித்திருக்கிறேன்.

    முதலில் நாமறிய வேண்டியது: இலக்கியவாதிக்குக் கண்டிப்பாக இலக்கணம் தெரியவேண்டிய அவசியமில்லை. மெத்த படிக்கவும் வேண்டியதில்லை. ஆனால் தமிழாசிரியருக்கு வேண்டும்.

    பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைப்படித்தால் ஒன்று புரியும் (வ.ராவின் பாரதியார்). சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் நீண்ட விடுப்பில் சென்றதால், அவ்விடத்தில் பணிபுரிய பாரதியார் அமர்த்தப்பட்டார். பாரதியார் முறையாக தமிழ்ப்படித்தவரன்று. தமிழாசிரியருக்கு வேண்டிய கல்வித்தகுதி இல்லை. இருப்பினும் அவர் பெருங்கவிஞர் என்பதால் அமர்த்தப்பட்டார். அதன்பின்னர் புலவர் பட்டம்பெற்று தொடர்ந்திருக்கலாம். ஆனால், பாரதியாருக்கு தமிழிலக்கணம் வேப்பங்காயாகக் கசந்தது. நன்னூலைப்பகடி பண்ணிச்சொன்னதை வ ரா எழுதியிருக்கிறார்.

    எனவே பாரதியார் முறையாக தமிழாசிரியர் பணிக்கு படிக்கவில்லை என்பதில் இலக்கணமும் முறையாகப் படித்தவரில்லை என்பதோடு சேர்க்கலாம்.

    பாரதியார், பாரதிதாசன் - இவர்களைப்பற்றி எது சொன்னாலும் அது தவறு என்பது பொதுமக்களிடையே சரி. கற்றவரிடையே முறையான விவாதமும் தெளிவும் வேண்டுமென்றால் சரியன்று.

    இவ்விவாதத்தைப்பண்ணிவிட்டால் பாரதியாரின் கவிப்புலமையையும் அவரின் படைப்புக்களையும் இகழ்ச்சி செய்வது போல என்பது இடியைக்கேட்டு குழந்தை பயப்பட்டது போல :-)

    பதிலளிநீக்கு
  8. தமிழுக்கு சோறுபோடும் கவிஞர் அல்லவா...
    தடுக்கி விழும் ஆளுமைகள்

    பதிலளிநீக்கு
  9. இது விளம்பர யுக்தியே. எதற்காக அவர் விளம்பரம் தேட வேண்டும் என்று ஆச்சரியமாக உள்ளது ஐயா. கவிப்பேரரசு என்று சொல்லப்பட்டவர் மமதையால் - அது அவருக்கு எப்போதுமே உண்டு - இவ்வாறு செய்து தன்னைத் தானே இழிவாக்கிக் கொள்கின்றார். தனக்குத் தானே குழி பறித்துக் கொள்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்?!

    பதிலளிநீக்கு
  10. திரு முத்துநிலவன்!

    உங்களுக்காக சிரமப்பட்டு பரணிலெல்லாம் தேடிப்பார்த்து கணடுபிடித்துவிட்டேன். வ.ராவின் ''மகாகவி பாரதியார்'' என்ற நூலை. உங்களைப்போன்றோர் இந்நூலைத் தவறவிடக்கூடாது. வ.ரா ஒரு அதிசயமான மனிதர். நம்மைப்போன்றோருக்கு உருவாகும் வெறுப்பு விருப்புமன்றி எந்தவொரு விசயத்தையும் நோக்கும் மனிதர். இந்நூலில் அவரின் பாரதியார் பற்றிய பார்வை முழுக்க ஒரு கற்றோனின் பார்வை. ஈ வெ ராவைப்போற்றியவர். அண்ணாவால், அகரஹாரத்து அதிசய மனிதர் என வியக்கப்பட்டவர்.

    வ ரா எழுதுகிறார்:

    ...மதுரையில் சேதுபதி உயர்தாப்பள்ளிக்கூடத்தில் இந்த சமயத்தில் தமிழப்பண்டிதர் வேலை காலியாயிற்று....தமிழ்ப்பண்டிதர் பதவிக்குப் பாரதியாரிடமிருந்த இலட்சணங்கள் வினோதமானவை. ஏட்டயபுரம் சமஸ்தான வித்துவான்கள் அளித்த பாரதி பட்டமொன்றோ முதற்தரமான இலட்சணம் என்று கருதுகிறேன். தமிழ்ப்பண்டிதர்கள் நன்னூல் (இலக்கண) சூத்திரங்களைத் தலைகீழாய்ச் சொல்லமுடியுமே, அந்தச்சாமர்த்தியம் பாரதியாருக்குக் கொஞ்சம் கூட கிடையாது. நன்னூலை அவர் பார்த்திருப்பார் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். அதைப்படித்து நெட்டுருப் பண்ணிப்பார்த்திருபாரா என்பது சந்தேகந்ந்தான்.

    தோன்றல், திரிதல், கெடுதல், விகாரம்
    மூன்றும் மொழி மூவிடத்துமாகும்.

    இந்தச்சூத்திரத்தைப் பாரதியார் எப்படியெல்லாமோ கேலி செய்வார். நன்னூல் தற்போது இருக்கிற நிலையில் பாரதியாருக்குத் துளிகூடப்பிடித்தம் இருந்ததில்லை. நன்னூலிலே இவ்வளவு வெறுப்பு கொண்ட பாரதியார் எவ்வாறு தமிழ்ப்பண்டிதர் உத்தியோகம் பார்த்தார் எனப்தைக்குறித்து ஆச்சரியப்பட் வேண்டியதிருக்கிறது.//

    (மகாகவி பாரதியார். வ.ரா (வ.ராமசாமி ஐயங்கார்) முல்லை பதிப்பகம், தி நகர் சென்னை விலை உருபா 40)

    அடுத்த மடலில் என் கருத்து சில)

    - Bala Sundara Vinayagam

    பதிலளிநீக்கு
  11. வ ராவின் கருத்துப்படி பார்த்தால், தமிழ்ப்பண்டிதர் வேலைக்கு பாரதியார் புலவர் பட்டம் பெறவில்லை. தமிழை பாரதியார் வெறுக்கவில்லை; ஆனால் தமிழ் இலக்கணத்தையே வெறுத்தார். என்னைப்போல. அதே சமயம், இவருக்கு அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் வேலை கிடைத்திருந்தால் வெளுத்துவாங்கியிருப்பார் காரணம். பாரதியாரின் ஆங்கிலப்புலமை அளப்பரியது. ஷெல்லியை ஹீரோ வர்ஷிப்பண்ணியது மட்டுமில்லாமல் தன் பெயரையே ஷெல்லிதாசன் என்றல்ல்வா மாற்றிக்கொண்டவர். கங்கைக் கரைப்படிக்கட்டுகளில் ஷெல்லியின் கவிதைத் தொகுப்பைத் தன் கோட்டுப்பாக்கெட்டில் வைத்துக்கொண்டே அலைவாராம்.

    பாரதியார் மனம் அவர் தமிழாசிரியர் வேலையில் நிலைக்கவில்லை. வேலையே பிடிக்காத போது எப்படி நிலைக்கும்? தமிழைவிட ஆங்கிலத்தின் கவர்ச்சி அலாதியானது என்றால் தமிழாசிரியரான உங்களுக்கு கோபம் வருமென்பதால் நான் பயப்பட்டு அதைச்சொல்லவில்லை.

    எப்படி தமிழ் படித்தார் எனபதை //பாரதியும் நண்பர்களும்'என்ற நூலைப் படித்தறியலாம். இந்நூல் பாரதியாரின் பலபல பரிமாணங்களை அசத்தலாகச் சொல்லிச்செல்கிறது. with the same honesty of purpose and purview as we find in Vaa.Raa.

    இதுகாறும் எழுதியவற்றிலிருந்து பாரதி தூடணை செய்யப்படுகிறது என்று நினைக்காமல் ஒரு அசாதாரணமான மனிதனின் ஒரு அசாதாராணமான வாழ்க்கையிலிருந்து சில வினோத குணப்பாங்குகளைக்கண்டோம் என்று எடுக்கவேண்டும். இவற்றுக்கும் பாரதியாரின் இயற்கையிலமைந்த கவி பாடும் புலமைக்கும் தொடர்பே இல்லை. பாரதியாரைப்பற்றிய எந்த ஆராய்ச்சியும் அவர்தம் பாடல்களின் புகழைக் குறைக்கவே குறைக்காது.

    \வணக்கம். நன்றி.

    -- Bala Sundara Vinayagam

    பதிலளிநீக்கு
  12. இவர் கற்றுக் கொண்ட லட்சணம் அப்படி...! ம்... எவ்வித பிரச்சனைக்கும் விதை இந்த ஒப்பீடு...

    பதிலளிநீக்கு
  13. வைரமுத்து சமீப காலங்களில் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கமாக இருக்கிறது. ஒரு வேளை விளம்பரத்திற்காகக் கூட இருக்கலாம் . தினமணி இதை திருத்தாமல் வெளியிட்டது ஆச்சர்யம்.இன்னொருவரை தாழ்மைப்படுத்துவதை அறிந்தோ அறியாமலோ ஒருவரை பெருமைப்படுத்துவதுவது வைரமுத்து போன்றவர்களுக்கு அழகல்ல . கவிராஜன் கதை எழுதி பாரதியின் பெருமை உரைத்த வைரமுத்து வேண்டுமென்றே இப்படி எழுதி இருக்கமாட்டார் என்று நம்புகிறேன்.ஒப்பற்ற கவிஞர்களை ஒப்பீடு செய்யவேடிய அவசியம் இல்லை. ஒருவேளை பாரதி இலக்கண அறிவு குறைவானவராகவே இருந்தாலும் இந்தக் கட்டுரையில் வைரமுத்து அதை குறிப்பிட்டிருக்கத் தேவை இல்லை.

    பதிலளிநீக்கு
  14. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  15. பாரதியார் இலக்கணப் பிழையுடன் பாடல்கள் எழுதினாரா?

    அங்குப் போனான்

    புதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவரது நெருக்கமான நண்பர்களாக, சால்வே கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பூ.ஆ.பெரியசாமி, பங்காரு பத்தர், திருப்புளிசாமிஅய்யா, பாரதிதாசன் போன்றோர் இருந்தனர்.

    சில சமயங்களில் பாரதியார் இலக்கணப் பிழையுடன் எழுதுவது கண்டு பூ.ஆ.பெரியசாமிக்கு வருத்தம் இவரெல்லாம் பாட்டெழுத வரலாமா - இலக்கணம் தெரியாமல் என்று குமுறுவாரே தவிர, பாரதியிடம் வெளிப்படையாக சுட்டிக்காட்டத் தயக்கம். எவருக்கும் அஞ்சாப் பாவேந்தர் பாரதிதாசன், நால்வரில் இவர் மட்டும் துணிந்தார்.

    அங்கு + போனான் என்பதை அங்குப் போனான் என்றே எழுத வேண்டும் எனச் சுட்டிக் காட்டி, சுட்டுச் சொல்லுக்கு பின் வல்லினம் மிகும் என்ற இலக்கண விதியை எடுத்துக்காட்டினார். அதற்கு பாரதி, அங்குப் போனான் என்று எழுதினால் என்னவோ போல் உள்ளதே! இயற் கைக்கு முரணாக ஒலிக்கிறதே! என்றார். அதற்குப் பாவேந்தர் பாரதிதாசன் சொன்னார். நீங்க இலக்கணத்திற்குக் கட்டப்பட்டவரே தவிர, இயற்கைக்கு அல்ல என்று பாரதிதாசன் அடித்துக் கூறி, பாரதியை இலக்கண வேலிக்குள் கொண்டு வந்தார்.

    --------- சந்தன் - அக்டோபர் 16-31 2008 "உண்மை" இதழிலிருந்து ..மேலும் தகவல்களுக்கு கீழ்கண்ட சுட்டியை சுட்ட வேண்டுகிறேன்.http://thamizhoviya.blogspot.in/search/label/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

    பதிலளிநீக்கு
  16. தமிழ் ஓவியாவுக்கு நன்றி. இனி வைரமுத்துவைச் சாடுவதற்கு முன் சிறிது சிந்திப்பார்கள் அனைவரும். எவ்வளவுதான் வைரமுத்து பக்கம் நான் சேர்ந்துபேசுவது போல இருந்தாலும். நான் பாரதியார் வகையையே சார்ந்தவன். அதாவது, எனக்கும் இலக்கணம் தெரியாது. ஆங்கில இலக்கணமும் முறையாகத் தெரியாது. நான், பாரதியார், என் தமையன் (அவன் ஒரு எழுத்தாளன் - தமிழே சரியாக எழுதவரத்தெரியாது. ஆனால் அவன் நாவல் தில்லி, மனோன்மணீயம் சுந்தரனார் பலகலைக்கழகங்களிலும் அவன் நாவல்களும் சிறுகதைகளும் எம் பில் மாணவர்களால் தீசிஸ் எழுதவும் பயனபடுகிறது. எங்கே போச்சு தமிழ் இலக்கணம்? அதை ஆண்டவன் -அதாவது பதிப்பகத்து காப்பி ரைட்டர் பார்த்துக்கொள்வார்!) அனைவருக்குமே ஒரே கொளகை:

    சித்திரமும் கைப்பழக்கம்
    செந்தமிழும் நாப்பழக்கம்\
    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்

    எனபதே. பாரதியாருக்கு வந்த அதே ஐயம் எனக்கும் வரும்: அங்குப்போனார் என்றால், கொஞ்சம் இசை இடைஞ்சலாக இருக்கிறதே என்றுதான் நினைப்பு. எனவே எப்போதுமே அங்கு போனான் தான்.

    பாரதியார் வாகவி. அவருக்கு இலக்கணம் தேவையில்லை. பாவின் ஓசையும் சொற்களும் தானாகவே வந்துவிழும். பாரதியார் எதையாவது முணுமுணுத்துக்கொண்டேயும் பாடிக்கொண்டும் இருப்பார் எனபது அவரோடு வாழ்தவர்களால் சொல்லப்பட்டது. இலக்கண வரைகளுக்குள் அடைபட்டுக்கிடந்திருந்தால், பாரதியார் கவித்திறன் தட்டுத்தடுமாறி செயற்கையாகிப்போகுமென்பது என் கருத்து.

    மில்டன் சொல்வான்: நான் விரும்புவதே என் ஆங்கிலம். (What I will is my English!)

    அஃதே என் கொளகை:

    What I will is my English.

    WHAT I WILL IS MY TAMIL and Bharatiar;s too. Grammarians, keep off !

    பதிலளிநீக்கு
  17. அதற்கென்ன? வைரமுத்து பற்றி எழுதும்போது இனிமேல் 'ஜெயகாந்தன் பெயரில் ஃபோர்ஜரி கடிதம் தயாரித்து அம்பலப்பட்டுப்போன வைரமுத்து' என்று ஒரு வரியையும் சேர்த்து எழுதுவதை நாமெல்லாம் வழக்கமாக்கிக்கொண்டால் போயிற்று!

    பதிலளிநீக்கு