பத்தாம் வகுப்பில் காதல் - கவிதை

    

    பத்து வகுப்புப் படிக்கிற போதே
                     பருவக் கோளாறு! மனம்
    குத்தும் குடையும் குறுகுறுக் கும்,வாய்
                    குழறும், தடுமாறும்! ஒரு
    பித்துப் பிடிக்கும், ரகசிய மாய்,செல்
                    பேசியும் பரிமாறும்! இது
    தொத்து வியாதி! பரம்பரை யாகத்
                    தொடர்வது தான் மகளே!


     2)        உன்னை நினைத்தால் உனக்கே பெருமை
          ஊற்றாய்ப் பெருகிவரும்! – உன்
கண்ணை முகத்தைக் கண்டு ரசிப்பாய்
          கண்ணாடி உருகிவரும்! – “நீ
பெண்ணை வளர்த்த முறைசரி யில்லை
          பேதாய்“ என்போரை – உன்
அன்னை முறைப்பது கண்டு சிரிப்பாய்
          “அட,போ“ என்பாயே!

 (3) ஏட்டை எடுப்பாய், எழுத்து மறப்பாய்
          எழுதாப் பேனாவை – வரி
ஓட்டி முடித்தது கண்டு துணுக்கென
          ஒருவரி காணாயே! – திரைப்
பாட்டில் கறிச்சாப் பாட்டை மறப்பாய்
          பசியிலை என்பாயே! – அறை
பூட்டிக் கிடப்பாய், பொழுது மறப்பாய்,
          பொய்யைத் தின்பாயே!

 (4) ஒருவன் இளைஞன் ஒருமுறை உன்னிடம்
          உரையா டியபின்னே – இந்த
கருமம் அனைத்தும் நடைபெறும் மகளே!
          கதையிது உலகறியும்! – இது
பருவம் அடைந்தவர் பார்த்தது தான் நீ
          பயப்பட ஏதுமிலை! – ஒரு
மருமம் எதுவும் இல்லையடா! – உடல்
          மாறும் வயதுஇதுவே!

 (5) பதினா றென்பதும் பதினைந் தாகிப்
          பதினான் காகியதே! – ஒரு
புதிராய் உலகம் புரியா நிலையில்
          பூக்கும் உணர்ச்சியிது! – உன்
எதிராய் இளைஞர் இருக்கப் புதிதாய்
          எதையா வதுசெய்வாய்! – அட
இதுஏன் இப்படி என்னும் எரிச்சலில்
        எதற்கும் கடுப்பாவாய்!
         
 (6) ஒருவரும் உன்னைக் காணாத போதும்
          உடையைத் திருத்திடுவாய்! – முகப்
பருவரும், அழகு போய்விடு மோ?எனப்
          பயந்தே குழம்பிடுவாய்! - உன்
தெருவரும் யாரும் திடுமென உன்னைத்
          திரும்பவும் பார்த்தவுடன் – மனப்
பெருமிதம் ஓங்க முகத்தைத் துடைப்பாய்,
          பின்னும் துடைத்திடுவாய்!

 
  (7) இதுசரி யில்லை என்பது தெரியும்
          எனினும் புரியாது! – அட
     இதுஏன் இப்படி? என்பது புரியா
          இரண்டும் கெட்டானாய் – உன்
     கதைபுரி யாதவர் கண்டு சிரிப்பது
          கண்டும னங்குமைவாய்! – நீ
     “இதையா ரிடம்போய்க் கேட்பது?!“ நெஞ்சுள்
          எண்ணிக் குழம்பிடுவாய்!

 (8) காதல் பற்றிய படங்கள் இனிக்கும்
          கண்ணும் அலைபாயும் – திரை
    காதல் என்றே காமச் சுழலைக்
          காட்டும் வலைவீசும்! – உன்
    காதல் வருகிற வயதும் வரும்வரை
          காத்திருப் பாய்மகளே! – உடல்
    நோதல் தணிதல் எல்லாம் இயற்கை
          நுட்ப  உணர்ச்சியிதே!

  (9) இருபது வயதின் மேல்தான் மகளே
          எதுவும் புரியவரும் – அட
     வருவது வரட்டும் என்று துணிந்தால்
          வாழ்வே கருகிவிடும்! – இதழ்
     தருவது பெறுவதை நினைப்பதிலேயே       
தன்னியல் பறிபோகும்! – அதில்
     உருகிடும் பெருகிடும் உணர்ச்சிகள் பின்னர்
          உடனே வடிந்துவிடும்!

 (10) காதல் உயர்ந்ததுதான்,என்மகளே!
     கைவரும் வயதா இது?யோசி!
நோதல் தணிதல் புரியா வயதில்
     நுகரத் துணிதல் சரிதானா?
வாழ்தல் இனிது வசமா னால்தான்!
     வாழ்க்கைச் சுழலை அறியாமல்
வீழ்தல் அழிவே விளைக்கும்! வாழ்க்கை,
     திரும்பவும்  எழுதத்  தேர்வல்ல!

-------------- (பத்தாம் பாடல் மட்டும் வேறு ஓசை)
கொடுமையான படத்திற்கு நன்றி - கூகுள் தேடுபொறி.
                                             --------------------------------------------------
 (பத்தாம் வகுப்புப் படிக்கிற பெண்ணுக்கும் கல்லூரியில் படிக்கும் இளைஞனுக்கும் காதலாம்!  சாதி பற்றியல்லாமல், அவர்களின் சின்னவயது பற்றிய பிரச்சினையில் இருவரின் வீடுகளில் எதிர்ப்பு. முடிவு? இருவரின் தற்கொலை!   அந்தச்சிறுமியின் நினைவால்  அந்தமகள் போல வேறு எந்தமகளும் போகக்கூடாதே என்ற உணர்வில் அழுந்தி என் மனம் அழுத கவிதைக் கதையிது!)

46 கருத்துகள்:

  1. அண்ணா,
    இந்த பாடலை முதலில் அம்மாக்கள் படிக்கவேண்டும். பின் தந்தையும், பதின்ம வயது குழந்தைகளை கையாளும் ஆசிரியர்களும் படிக்கவேண்டும். இதைவிட ஒரு வயது பெண்ணுக்கு எளிமையாய் எப்படி சொல்லிவிட முடியும்!! எளிய சொற்கள் கொண்டு அறிய தகவல்கள்!! முக்கியமாய் நான் இதை மனனம் செய்யவேண்டும் என் எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்காக!! நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகள் குழந்தைகள்தான். சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் அவர்களைத் தடம்புரள வைக்கின்றன. அதை மாற்றும் சக்தி நமக்கில்லையே? மாற்ற வேண்டியதை மாற்ற முடியாததால் குழந்தைகளிடமே பேசவேண்டியுள்ளது. “கண்ணதாசன் கூட ஒரு பாடலில். “அவள் பதினாறும் நிறையாத பருவ மங்கை, காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை“ என்று எழுதியிருப்பார். பதினாறு நிறையாதவள் குழந்தையல்லவா? அந்தக் காலத்தில், கண்ணகி “ஈறாறு ஆண்டு அகவையாள்“ எனத்திருமண வயதைக் குறிப்பது சரி. அந்தக் குழந்தைமணம் இப்போது சட்டப்படி தவறு எ்ன்று சினிமாக்காரர்களுக்கு யார் சொல்வது? நான் கூட ஒரு பட்டிமன்றத்தில், “சீருடையோடு காதல் பண்ணும் காட்சிகளைத் தடைசெய்ய வேண்டும்“ என்று பேசினேன்.யாரு கேட்டா? இருந்தாலும் எழுத வேண்டியுள்ளதே. உன் கருத்திற்கு நன்றிடா. உன் பாராட்டு, பெற்றோரும் ஆசிரியரும் சேர்ந்து பாராட்டியதற்குச் சமம்.

      நீக்கு
  2. (3) ஏட்டை எடுப்பாய், எழுத்து மறப்பாய்
    எழுதாப் பேனாவை – வரி
    ஓட்டி முடித்தது கண்டு துணுக்கென
    ஒருவரி காணாயே! – திரைப்
    பாட்டில் கறிச்சாப் பாட்டை மறப்பாய்
    பசியிலை என்பாயே! – அறை
    பூட்டிக் கிடப்பாய், பொழுது மறப்பாய்,
    பொய்யைத் தின்பாயே!

    வலி நிறைந்த கவிதை ஐயா...
    எல்லாக் குழந்தைகளும் படிக்க வேண்டிய கவிதை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலியில் பிறந்த கவிதை அய்யா.
      கமல் நடித்த மகாநதி படம் பார்த்து ஒருநாள் முழுவதும் அழுதிருக்கிறேன். அந்த நினைவு மீண்டும் வந்தது.. நன்றி நண்ப!

      நீக்கு
  3. இன்றைய குழந்தைகளின் மனநிலை..பெற்றோர்களை படம் பிடித்துக்காட்டியது போல் இருக்கு சார்...இப்பதான் ஒரு பத்தாம்வகுப்பு மாணவியின் மரணயாத்திரைக்கு போய் வந்தோம்...சாதாரணச்சண்டைக்கு தன்னையே எரித்துக்கொண்டாள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவைப் பார்த்தேன் சகோதரி. நல்ல ஆசிரியராக இருக்கும் நல்ல எழுத்தாளராக இருக்கும் நல்ல மனிதர்கள் இந்தச் சமூகச் சிக்கலைப்பற்றிப் பேசியாக வேண்டும். அதுதான்.. நன்றி.

      நீக்கு
  4. வணக்கம்
    ஐயா

    இன்றைய யதார்த்த நிலையை மிக அருமையாக கவி வடிவில் விளக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. இந்தக் கவிதையில் உள்ள உண்மையை புரிந்து கொண்டால் பதின்ம வயது உணர்வின் நன்மை தீமைகளை உணர முடியும். ஆனால் என்ன செய்வது? எதையும் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் அவர்கள் இருப்பதில்லையே. காதலை தெய்வீகம் என்று கொண்டாட வேண்டியதும் இல்லை. அது இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று நினைக்க வேண்டியதும் இல்லை அதை ஒரே அடியாக வெறுத்து ஒதுக்கவும் தேவை இல்லை என்பதை புரிந்து கொண்டால் போதும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குமுதம் அரசு கேள்வி-பதிலில் 10,15ஆண்டுகளுக்கு முன்னர்ப் படித்த ஒரு பதில் இன்னும் நினைவில் இருக்கிறது அய்யா.
      கேள்வி - உடல்உறவு அசிங்கம் என்கிறார்கள் முனிவர்கள், ஆபாசம் என்கிறார்கள் சிலர். புனிதம் என்கிறார்கள் சிலர். எதுதான் சரியானது? அதற்கு அரசுவின் பதில்- இரண்டும் தவறு அது இயல்பானது! இதைப் பதின்பருவக் குழந்தைகளுக்குச் சொல்லாமல் சும்மா பாடடனி, ஜூவாலஜி நடத்துவது எப்படி? தங்களின் நியாயமான கருத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் முரளி. உடனடிக் கருத்திற்கு நன்றி

      நீக்கு
  6. இன்றைய மாணவிகள் அனைவரும் அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய கவிதை மட்டுமல்ல பாடமும்கூட...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதின்ம வயதுப் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்தும்போது, இலக்கணத்தில் அகப்பொருள்.. காதல் பற்றியது.. நான் பாட்டுக்கு முகத்தில் சிரிப்பே இல்லாமல் சொல்வேன். அதுதான் இது...

      நீக்கு
  7. தீக்கனல் தின்னும் பூக்களைக் காக்கத்
       தெய்வம் வருவ தில்லை! - பல
    சாக்கடை தாண்டச் சிறுவய தின்னும்
       சரிவரக் கற்கவில்லை - உயர்
    நோக்கினில் பாட நிமிர்முது கோடு
       நிற்பவர் யாரு மில்லை - எனும்
    போக்கினைச் சாய்க்குமும் பாக்களைக் காண
       பாரதி யாரு மில்லை!

    பாடலின் சோகம் நெஞ்சு தொடும்!
       

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி விஜூ. கோனார் நோட்ஸ் தேவைப்படாத கவிதைதானே? இப்படி இருக்கலாம் என்று சொல்வதைவிட எழுதியே காட்டவும் ஒரு வாய்ப்பென்று கருதியே எழுதினேன். சரியா? நன்றி. உ ங்கள் பாடலும் அழகு, எளிமை, அருமை. நண்பா!

      நீக்கு
    2. அய்யா,
      வணக்கம். அய்யா இதுவும் ஒரு வடிவம். நீங்கள் இப்படித்தான் எழுதச் சொல்கிறீர்கள். அது சில வடிவ சாத்தியத்திற்கான முயற்சி அய்யா!! நிச்சயம் அதில் முடங்கி விட மாட்டேன்.
      இன்னம் எவ்வளவோ படிக்கக் கிடக்கிறது???
      கலை மக்களுக்காக என்பது உங்கள் கட்சி.
      கலை கலைக்காக என்று நான் சொல்லிக்கிடக்கிறேன்.
      அதெல்லாம் ஒரு புறம் கிடக்கட்டும்,
      நான் முக்கியமாய் வந்தது, பின்னூட்டப் பாட்டில் புள்ளியில்லாமல் தள்ளி எழுதப்பட்டதைப் பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே என்பதற்காகத்தான்!
      நன்றி.

      நீக்கு
    3. கலை மக்களுக்காக என்பது உங்கள் கட்சி.
      கலை கலைக்காக என்று நான் சொல்லிக்கிடக்கிறேன் -
      இதுஎன்ன புதுக்கூத்து?
      நான் கலை மக்களுக்காக என்று சொல்பவன்தான்.
      நீஙகள் அது கலைக்காகவே என்று எங்கும் சொன்னதாக நினைவில்லை. அடுத்து.. இது எப்படி அய்யா சாத்தியமாயிற்று? புள்ளியின்றிப் பின்னூட்டப் பாட்டை எழுதுவது எப்படி? புதிய செய்தியாக இருக்கிறதே!

      நீக்கு
  8. இக்கவிதையை பாட நூலில் சேர்க்கவேண்டும். இலகுவாக, பக்குவமாக தங்கள் பாணியில் கூறியுள்ளீர்கள். முதலில் இக்கவிதையை பெற்றோர்கள் படிக்க வேண்டும், உணர வேண்டும். பின்னர் தம் குழந்தைகளுடன் இது தொடர்பாக விரிவாகப் பேச வேண்டும். தடம் மாறும் மனத்தை சரியாக நிலைப்படுத்த விவாதங்கள் உதவும். அதற்கு நல்ல வழிகாட்டியாக உள்ளது இக்கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடத்திட்டத்தோடு மாரடித்த கதையைத்தான் எனது நூலில் எழுதிவிட்டேனே அய்யா... இன்னுமா அந்த நம்பிக்கை?
      தங்கள் கருத்திற்கு நன்றி அய்யா.

      நீக்கு
  9. பெற்றோர் அனைவரும் அறியவேண்டிய அனைத்து விடயங்களையும எளிமையாக விளக்கி யுள்ளீர்கள். உண்மைகளை உணர்ந்து உருகி வடித்த கவிதை எல்லோரையும் சிந்திக்க வைக்கும். அருமை வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் ஆழ்ந்த கவனிப்பிற்கும், உளப்பூர்வமான கருத்துரைக்கும் எனது உளமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நீக்கு
  10. யாரைக் குற்றம் சொல்வது என்று தெரியவில்லை. இன்றைய இளைய தலைமுறையை சொல்ல முடியாது. அவர்கள் இந்த அளவிற்கு ஆவதற்கு எது காரணம் ? ஊடகமா ? தொலைக்காட்சியா ? திரைப்படங்களா ? ... இப்படி எத்தனையோ ? எனினும் பெற்றவர்கள் கடமை பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் நல்லது கெட்டது அவர்களுக்கு தெரியும் என்று இருந்து விடாமல் அவர்களோடு நண்பராகப் பழகி சிலவற்றை உணர்த்த வேண்டும். இதெல்லாம் பிள்ளைகளிடம் நாம் பேசலாமா ? என்று நிறைய பெற்றோர்கள் யோசிப்பதின் விளைவு தான் இப்படியான சம்பவங்கள். பத்தாவது படிக்கும் பிள்ளைகளுக்கு இப்போது எல்லா விஷயங்களும் தெரிய வருகிறது. ஆதலால் அவர்களிடம் மனம் விட்டு பேசி புரிய வைப்பதன் மூலம் தான். அவர்களை நல்வழியில் கொண்டு செல்ல முடியும். மனம் கனத்துப் போனது அண்ணா. அண்ணா தாங்கள் தொலைக்காட்சிகளில் பேசும் போது இன்றைய பிள்ளைகளுக்கு புரியும் படி பல செய்திகளை சொல்லுங்க. (பெற்றோர்களுக்கும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளுக்கு நேரடியாகச் சொல்லவே முடியாது சசி. அது எதிர்மைறை விளைவைத்தான் தரும் என்பது என் அனுபவம். (இறந்துபோனவளை வைத்து மற்றவர்களுக்குச் சொன்னதே ஒரு குறியீடுதான்.. பேசவேண்டிய விஷயத்தைப் பேசாமல் இருப்பதால் இப்படி இவள் போனாளே எனும் குரலைக் குழந்தைகளும் கவனிப்பார்கள்) அதனால்தான், பள்ளிச் சீருடையில் வரும் காதல்காட்சிகளையும், மாணவரின் நோட்டு அட்டையில் இளைய சினிமா நடிக நடிகையரின் படங்களைப் போடுவதையும் தடைசெய்ய வேண்டும் என்று ஒரு பட்டிமன்றத்தில் பேசினேன். உன் உணர்வுகளை உளப்பூர்வமாகச் சொன்னதற்கு நன்றி தங்கையே! உன் கவிதைத் தொகுப்புக் கிடைத்தது, விரைவில் படித்துவிட்டுப் பேசுவேன் தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். நன்றிம்மா.

      நீக்கு
  11. இது
        தொத்து வியாதி! பரம்பரை யாகத்
                        தொடர்வது தான் மகளே///உண்மையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.. அவர்களுக்கு எப்படி உணர்த்துவது என்பதுதானே புரியவில்லை... நன்றி அய்யா.

      நீக்கு
  12. //கண்ணை முகத்தைக் கண்டு ரசிப்பாய்
    கண்ணாடி உருகிவரும்! //
    அருமை
    தமிழ் ஓடிவருகிறதே ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மது. “திருத்தமுள்ள ஆடையினைத் திருத்திக் கொள்வாள்“ எனும் பாரதிதாசனை நகலடித்ததுதான்.. (விஜூ மன்னிக்க)

      நீக்கு
  13. பதில்கள்
    1. நன்றி மது. ஆனால் எனக்குத்தான் இந்த த.ம.வாக்குப்பதிவின் விவரம் தெரியவில்லை. இது எப்படிக் கணக்கிடப்படுகிறது? எப்படி நம் வாக்கைப் பதிவது?...

      நீக்கு
  14. மனம் கனத்தது ஐயா
    மாணவ மாணவிகள் மட்டுமல்ல
    பெற்றோர்களும் படித்து உணர வேண்டிய
    வரிகள்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் மாணவ-மாணவியரின் காதலைக் கேள்விப்பட்ட ஆசிரியன், பெற்றோரே நம்பி வந்து என்னிடம் இதுபற்றிப் புகார் சொல்வதும் நான் அந்தக் குழந்தைகள் அறியாமல் வகுப்பில் “பொத்தாம் பொதுவாக“ பேசுவதுபோலப் புரியவைப்பதும் உண்டு. “ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள“ (திருக்குறள்) என்பதை அறிந்ததால் வந்த அவஸ்தை இது! நாமும் இருவகையில் பெற்றோர் அல்லவா?

      நீக்கு
  15. பதில்கள்
    1. ஆசிரியர் மொழியில் மாணவர் ஏடுகளில் “நன்று“, “மிகவும் நன்று“ என்று போடுவது போலத்தானே அய்யா இது? (வாக்களிக்கும் சூக்குமம் தெரியாததால் வந்த அய்யம்) அப்படியெனில் நன்றி.

      நீக்கு
  16. காலத்திற்கேற்ற அருமையான பதிவு அய்யா.எங்கள் கல்லூரியிலேயே ஒரு சில விரிவுரையாளர்கள் இது போன்ற மாணவ, மாணவிகளை ஒதுக்குவதும் , குத்திக் காட்டிப் பேசுவதும் ரொம்ப கஷ்டமாக இருக்கும்.
    அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே தவறு செய்கின்றனர்.ஆசிரியர்களிடம் தாயைப் போன்ற அன்பும் ,தந்தையைப் போன்ற கண்டிப்பும் இருத்தல் அவசியம்.அவர்களை குத்திக் காட்டிப் பேசுவதோ,ஒதுக்குவதோ சரியல்ல.
    நான் பல முறை அவர்களுடன் வாதம் செய்ததுண்டு இப்படி கடுமையாக நடந்து கொண்டால் அவர்கள் திருந்த மாட்டார்கள். இதே தவறை உங்கள் பிள்ளைகள் செய்தால் இப்படியா நடந்து கொள்வீர்கள்?
    மதிப்பெண்களை குறைத்தால் மாணவச் செல்வங்கள் முட்டாள்தனமாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்வார்கள்.
    இது பதின் பருவம். அவர்கள் இன்றைய அதி நவீன விஞ்ஞான வளர்ச்சியில் கெட்டுக் குட்டிச் சுவராக நிறைய வாய்ப்புகள் உள்ளன.ஆசிரியராகிய நாம் நினைத்தால் திருத்துவதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளது.அவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்று ஆசிரியர்கள் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
    அந்த வகுப்பிற்குச் சென்று பாடம் நடத்தினால் மட்டும் போதும் என்ற எண்ணம் மாற வேண்டும்.ஒவ்வொரு மாணவனின் பின் புலன்களை தெரிந்து வைத்தல் அவசியம்.
    இந்த பதிவில் என் எண்ணக் குமுறல் அனைத்தையும் காண்கிறேன்.நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிரியர்கள் பள்ளயில்-கல்லூரியில் இருக்கும் பெற்றோர்,
      பெற்றோர்கள் வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள் என்பதை நான் அடிக்கடி எனது மேற்கோள்போலப் பேசுவதுண்டு.
      அந்த எண்ணத்தில்தான் இந்தக் கவிதை.... நன்றி சகோதரி

      நீக்கு
  17. நினைத்து நினைத்து நெஞ்சம் கனக்கிறது அய்யா என்ன சொல்வது ஏடென்ன சொல்லி எழுத்தென்ன பாட தேடெனும் போதிலே தேவையும் அமைந்ததே புரிதலே அவர்களுக்கு நல்ல வழியே ஏற்படுத்தும் அவர்கள் வழியிலே அவர்களுக்கு உணர்த்துதல் வேண்டும் கண்டிப்பு தேவையே அதுவே அவர்களுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும் பெரியவர்கள் கொஞ்சம் சிறுபிள்ளை தனமாக அந்த நிலையில் மாறிவிடுகிறார்கள் விடனும் விட்டை ஆகனும் இல்லை நீ எங்கையும் போக கூடாது இல்லை நான் செத்துவிடுவேன் என்ற போக்கை மாற்றி அவர்களை திசை திருப்ப அவர்களுக்கு என்ன தேவை ....

    மனதையறிந்து மார்க்கம் கண்டு பிடிக்க வேண்டும் தனதில் இருந்து அல்ல தான் அந்த நிலையில் இருந்து அவர்களாக நாம் இருப்பின் அந்த மனநிலையில் அவர்களை கையாண்டால் நல்லதே நடக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “தனதில் இருந்து அல்ல தான் அந்த நிலையில் இருந்து அவர்களாக நாம் இருப்பின் அந்த மனநிலையில் அவர்களை கையாண்டால் நல்லதே நடக்கும்“ இதுதான் நண்பரே! நன்றி.

      நீக்கு
  18. இந்தக் காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவு ஐயா! காதல் தவறல்ல! ஆனால் அது வரும் வயது என்று ஒன்று இருக்கின்றதல்லவா? இந்த வயதில் வருவதை மிகவும் திறம்படக் கையாள வேண்டும். பெற்றோரும் சரி, ஆசிரியர்களும் சரி, சமூகமும் சரி. ஏனென்றால் உணர்வுகள் பீறிட்டு எழும் ஒரு வயது. இப்போதுதான் தென்றல் கீதா அவர்களின் இடுகைக்கு ஒரு பின்னூட்டம் இட்டு வந்தோம். அதே தான் இங்கும். இந்த வயதில் இது போன்றவற்றிற்குக் கண்டிப்புத் தேவையாக இருக்கலாம் ஆனால் அதைக் கத்தி மேல், கயிற்றின் மேல் கழைக்கூத்தாடிகள் நடப்பது போல் என்பதால் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும் இல்லையேல் இப்படித்தான் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்குச் சென்று விடும்.

    அருமையான வரிகள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “கயிற்றின் மேல் கழைக்கூத்தாடிகள் நடப்பது போல் என்பதால் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்“ - கழைக்கூத்தாடிகள் வாழ்வு பாவம், நிச்சயமற்ற ஒன்றுதான். ஆனால் அதற்குக்கூட அவர்கள் நெடுநாள் பயிற்சிசெய்திருப்பது எதார்த்தம். ஆனால் ஒரே முறையில் - பயிற்சிலேயே - அரங்கேற்றம் எனில்...? அதுதான் வாழ்க்கையின் முடிவு அல்லவா? அதுதான் சிக்கல். அதைத்தான் கவிதையாக்க நினைத்தேன். நன்றி அய்யா.

      நீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  20. காதலைத் தடுக்க முடியாது. சிறுவயது முதல் பெற்றவர் வளர்க்கும் சூழலும் முறையுமே சிந்தித்துச் செயல்பட வைக்கின்றது. தற்போதைய தொழில் நுட்பங்கள் அனைத்துக்கும் சாதகமாகின்றது. உயிரின் மதிப்புப் புரியாமலே உயிரை இழக்கின்றனர். தேவையான கவிதை இதை உரியவர்கள் படிக்க வேண்டும் பயன் பெறவேண்டும்

    பதிலளிநீக்கு
  21. காதலை எதிர்ப்பதைவிட அதை புரிய வைக்க முயற்சித்தாலே இந்த மாதிரியான அவலங்கள் மிக குறையும்.ஆனால் அது அவ்வளவு எளிதல்ல பெற்றோர்களுக்கு காரணம் அவர்களுக்கும் காதல் என்றால் என்ன என்று புரியாத மனநிலையில்தான் அவர்கள் உள்ளனர். நல்ல கவிதை பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  22. ஒவ்வொரு வரியும் என்னை உளியாய் செதுக்கியது உண்மை அப்பா.. நீங்கள் அய்யா என்று சொல்லச் சொன்னீர்கள்.. அய்யாவுக்கும் அப்பாவுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை என்பதால் துணிவுடன் சொல்கிறேன் அப்பா என்று..உங்களின் மகள் எனச் சொல்லிக்கொள்வதில் சிறிது கர்வமும் என்னுள் தலை எடுக்கிறது.. வரிகள் ஒவ்வொன்றையும் உருகிப் படித்தேன் அப்பா..இதுபோல் ஒவ்வொரு தந்தையும் யோசித்தால் மகள்களின் தற்கொலைகள் தடுக்கப்படும்.. ஆன்மாவை வருடிச்சென்ற அன்பு பகிர்வுக்கு நன்றி அப்பா

    பதிலளிநீக்கு