தவறான விளக்கத்துக்கு கோபிநாத் பரிசளித்தது தவறு...


 “நீயா-நானாவிவாதத்தில், தவறான விளக்கத்துக்கு கோபிநாத் பரிசளித்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அவருக்குத்தான் இது தெரியவில்லை, சிறப்பு விருந்தினராக வந்திருந்த கவிஞர் அ.வெண்ணிலாவுக்குமா இது தவறென்று தெரியவில்லை? மேலும் வந்திருந்த சமூகவியல் எழுத்தாளர் ஞாநி, தலித்திய ஆய்வாளர் இமையம், மனநல மருத்துவர் ஷாலினி இவர்கள் யாருமே இதுபற்றி வாய்திறக்க வில்லையா? அல்லது இவர்கள் சொல்லியும் கோபிநாத்  அதை எடுத்துக் கொள்ளவில்லையா?

வழக்கமாக எல்லாரையும் பேசவிட்டுத் தன்கருத்தை இறுதியாக முத்தாய்ப்பாக வைக்கும் திரு.கோபிநாத் 23-11-2014 அன்று இரவு விஜய் தொலைக்காட்சியில் நடந்த “ஆசிரியர்-பெற்றோர்“ மற்றும் “மாணவர்-குழந்தைகள்“ இடையே நடந்த விவாதத்தில் நம்மை ஏமாற்றிவிட்டார் என்றே எனக்குப் படுகிறது.
பேசிய பெரியவர்களும் குழந்தைகளும் முதலில் ஃபார்மலாகப் பேசினாலும், போகப்போக உண்மையான உணர்வுகள் வெளிப்பட... ஒருபக்கம் குழந்தைகள் தம்மைப் புரிந்துகொள்ளாத பெற்றோரைப் பற்றிச் சொல்லிக் கண்ணீர்விட்டனர். அதைப்பார்த்துப் பொறுக்க முடியாத பெற்றோர் உடனே மன்னிப்புக் கேட்டுக் கண்ணீர் விட.. ஒரே உணர்ச்சி மயம்தான்... இதெல்லாம் கூட வழக்கமானதுதான்.
பத்தாம் வகுப்பில் 500க்கு 420மதிப்பெண் எடுத்த குழந்தை, “மதிப்பெண் குறைந்துவிட்டதாக அப்பா திட்டிக்கொண்டே இருப்பார்“ என்று அழுததும், அதை நியாயப்படுத்தி அந்த அப்பா மேலும் பேச, குறுக்கிட்டு குழந்தையை ஆறுதல்படுத்திவிட்டு பிரேக் விட்டார் கோபி. அதெல்லாம் சரி.
குழந்தைகளில் சிலர் “படிப்பே வரல நா என்ன பண்ண?என்றும், வேறுசிலர், “படித்துப் படித்துப் பார்த்தும் மறந்துவிடுகிறதுஎன்றும் இதற்காகத் தன் பெற்றோர் “செத்துத் தொலை“ என்று திட்டியதைச் சொன்னதைக் கேட்கப் பரிதாபமாக இருந்தது. பிள்ளைகள் மனதில் தன் கருத்தைக் கேட்காத, தன் கருத்துக்கு மதிப்புத்தராத, தன்னை மற்றவர் மத்தியில் அவமானப்படுத்துகிற, மற்றவரோடு ஒப்பிட்டுத் திட்டுகிற ஒவ்வொன்றும் எவ்வளவு காயப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
சிறப்பு விருந்தினராக வந்திருந்த எழுத்தாளர் ஞாநி, “இந்தப் பள்ளிப் பாடத்திட்டம் குழந்தைகளைப் புரிந்துகொண்டதாக இல்லை என்றும் மதிப்பெண் தவிரவும் மற்ற திறன்களைப் பெற்றோர் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை“ என்றும் தெளிவாகச் சொன்னார்.
மனநல மருத்துவர் ஷாலினி, “ஒவ்வொரு தாயும் அல்லது தந்தையும் தன் கருத்தைப் பிள்ளைகள் பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்புவது ஏன்? தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாவுக்காக நான் வாழ முடியாதுங்க.... என்னை நானாக இருக்க விடுங்க, படிப்புக்கு இடையூறாகப் பிள்ளைகள் சொன்னதில் முக்கியமான ஒன்றை விட்டு விட்டார்கள் எதிர்பாலின உணர்வைக் கணக்கில் எடுக்கவில்லை“ என்றதும் நச் அடி! மனநல மருத்துவரல்லவா? சரியாகவே சொன்னார்.
“30வருஷத்துக்கு முந்தியிருந்த படிப்பு இல்ல இப்ப இருக்குறது, இந்தப் பாடம் பெற்றோருக்கும் புரியல, ஆசிரியருக்குமே புரியல, இதில் நான் 186மார்க் தான் வாங்குனேன். முதல் மார்க் வாங்குனவன் யாரும் இந்தச் சமூகத்துக்குப் பயன்படல.. சராசரிக்கும் கீழ வாங்குன ஆளுக தான் சமூகத்தையே மாத்தப் பயன்படுறாங்க“ என்று மிகச்சரியான விளக்கத்தைக் கொடுத்தார் எழுத்தாளர் இமயம்.
அடுத்துப் பேசிய வெண்ணிலா, அங்கு வந்திருந்த குழந்தைகளில் எத்தனை பேர் தமிழ்வழியில் படிக்கிறார்கள் என்று கேட்க சுமார் 25பேரில் ஒரே ஒருவர்தான் தமிழ்வழி என்றது ஆச்சரியமாக இல்லை. எல்லாருமே சச்சினாகவும், ராம்ஜெத் மலானி(?)யாகவும், பத்மா சுப்ரமணியமாகவும் வந்துவிட முடியாது என்று ஏன் சொன்னாரோ தெரியவில்லை! இவர் விவாதத்தில் இம்முறை ஆழம் அதிகமில்லை.
கடைசியாக கோபிநாத் பரிசு கொடுத்து ஒரு அதிர்ச்சி கொடுத்தார்.
பொருளாதார ஆசிரியராம் ஒருவர் 
அவர் தமிழ் எழுத்துகளைச் சொல்லித்தரும் 
உத்தி ஒன்றைச் சொன்னார்.- அதாவது –
ல, ள, ழ எழுத்துகளின் உச்சரிப்பு வித்தியாசத்தைத் தான் சொல்லித்தரும் முறை என்று ஒரு முறையைச் சொன்னார்.
குளம் குலம் என்பதை ளகர லகர வித்தியாசம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர பெரிய ல சின்ன ள என்று சொல்லக்கூடாது என்றது சரி... அதற்கு அவர் சொன்ன விளக்கம்-
“மஞ்சுளாவுக்குப் போடுற ள வா?
லதாவுக்குப் போடுற ல வா? என்று கேட்டு, “மஞ்சு கிட்ட போயி உலாவக் கூடாது... அந்த இடத்துல ள தான் போடணும்”  என்று சொல்லி, “ஏழைக்குழந்தைக்கு வாழைப்பழம் கிடைக்கல“ என்பது போல எதையோ சொல்லி ழ உச்சரிப்பை விளக்குவதாகவும் சொன்னார்
அட அட அட... என்ன விளக்கமடா சாமி?!!!!?
இதைக் கோபிநாத் மறுப்பார் என்று பார்த்தால் பரிசு கொடுக்கிறார்! இன்னொரு ஆசிரியர் “ஊதாக் கலரு ரிப்பன், உனக்கு யாரு அப்பன் மாதிரி ரைமா(?) ள,ல எழுத்து வித்தியாசத்தைச் சொல்லணும்“ என்று சொன்ன அபத்தத்தை உடனடியாக மறுத்த கோபிநாத், இந்த அபத்தத்திற்குப் பரிசு தந்தார்!  கணித ஆசிரியராக இருந்தாலும் தமிழ் எழுத்தாளரான அ.வெண்ணிலா மறுப்பார் என்று பார்த்தால் மற்ற சிறப்பு விருந்தினர்களோ எதுவும் சொல்லவில்லை!
ல, ள - சரியான விளக்கம் –
ல என்பது ஒற்றல் லகரம் அதாவது நுனிநாக்கு, வாயின் நுனி அண்ணத்தை ஒற்ற, வரும்எழுத்து என்பதால்.. இந்தப் பெயர்.
ள என்பது வருடல் ளகரம் அதாவது நுனிநாக்கு, வாயின் நடு அண்ணத்தை வருட, வரும்எழுத்து என்பதால்...
ழ என்பது சிறப்பு ழகரம் அதாவது நுனிநாக்கு, வாயின் உள்பகுதிக்குச் சென்று சுழன்று திரும்பி வருவது, தமிழ் உச்சரிப்பிலேயே சிறப்பாக உச்சரிக்கப்படும் எழுத்து என்பதால் இந்தச் சிறப்புப் பெயர்.
இவற்றைக் குழந்தைகளுக்குப் புரியவைக்க, இந்த வேறுபட்ட உச்சரிப்புடன் தமிழைப் பேச ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வேண்டும். இல்லன்னா.. “பூவுன்னும் சொல்லலாம்... புஸ்பம்னும் சொல்லலாம் அய்யா சொன்னா மாரியும் சொல்லலாம்“ கதைதான் தொடரும்.
எடுத்துக் காட்டுகள் –
புழல் ஏரியில் புனல் குறைந்தது 
ஒற்றல் ல கரம்  
ள்குடித்த வேடனிடம் அகப்படாமல், புள் பறந்தது,
வருடல் ள கரம்.
தமிழ்தமிழ் என்று சொல்ல அமிழ்தமிழ்து எனவரும் 
சிறப்பு ழ கரம்.

சிறப்பு ழகரத்தைச் சொல்லித்தர –
“வாழைப்பழம் அழுகி, கொழகொழத்து, கீழே விழுந்தது என்று என் ஆசிரியர் சொன்னதை என் மாணவர்க்குச் சொல்லியிருக்கிறேன்.
-------------------
இதுபோல ர,ற எழுத்துகளை,
சின்ன ர, பெரிய ற, என்பதும் தவறு...!
இரண்டு சுழி ன, மூன்று சுழி ண  என்பதும் தவறே!

இவற்றுக்கென்று சரியான பெயர்கள் உண்டு!
அவற்றைச் சொல்லிக்கொடுத்தால் 
பிழையில்லாமல் பேசவும், சரியாக உச்சரிக்கவும் 
குழந்தைகள் பழகிக்கொள்ளும்!
இதுபற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் ...
(ஓடுற நரியில ஒருநரி கிழநரி
கிழநரி முதுகுல் ஒருபுடி நரைமுடி...
10முறை விடாமல் சொல்லுங்க பாப்பம்!)
திரு கோபிநாத் அவர்கள்,
சிறப்பாகத் தொகுத்தளித்த நிகழ்ச்சிகளையெல்லாம் 
அவ்வப்போது பாராட்டிய நான் 
இந்த முறை என் வருத்தத்தைச் சொல்வது
எனக்கே வருத்தமாய்த்தான் இருக்கிறது..
இதை யாராவது 
திரு கோபிநாத்துக்குச் சொன்னால் தேவலயே!
-------------------------------------- 

80 கருத்துகள்:

 1. //ல, ள - சரியான விளக்கம் –
  ல என்பது ஒற்றல் லகரம் அதாவது நுனிநாக்கு, வாயின் நுனி அண்ணத்தை ஒற்ற, வரும்எழுத்து என்பதால்.. இந்தப் பெயர்.
  ள என்பது வருடல் ளகரம் அதாவது நுனிநாக்கு, வாயின் நடு அண்ணத்தை வருட, வரும்எழுத்து என்பதால்...
  ழ என்பது சிறப்பு ழகரம் அதாவது நுனிநாக்கு, வாயின் உள்பகுதிக்குச் சென்று சுழன்று திரும்பி வருவது, தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்து என்பதால் இந்தச் சிறப்புப் பெயர்.///

  மிக சிறப்பான விளக்கம். மனம்திறந்த பாராட்டுக்கள் இந்த எழுத்டை எனது குழந்தைக்கு எப்படி சொல்லித்தருவது என்று நினைத்து கொண்டிருந்த எனக்கு இது மிகப் பெரிய வரப்பிரசாதம் குட்

  பதிலளிநீக்கு
 2. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே! (ஆமா “கவிதை“ங்கிறதுனால இதற்கு முந்திய பதிவைப் பார்ககலயோ? சுமமா பயப்படாம பாருங்க நண்பா... உ ங்களுக்குப் பிடிக்கும்!)

  பதிலளிநீக்கு
 3. ஆமாம் விஜய் டிவிகாரங்க என்றுதான் சரியான ஆட்களுக்கு அவார்டு கொடுத்திருக்காங்க

  பதிலளிநீக்கு
 4. நீங்கள் சொன்னால் அது சரியாக இருக்கும் கோபிக்கு யாராவது சொல்வார்கள் என நம்புவோம் ஐயா.

  பதிலளிநீக்கு
 5. திடீர் திடீரென நினைத்துக் கொண்டு இந்நிகழ்ச்சியை அவ்வப்போது பார்ப்போம். நேற்று ஊதா கலர் ரிப்பன் வரை பார்த்தோம்! யாருக்குப் பரிசளித்தார் என்று பார்க்கவில்லை. 'ல' 'ள' 'ழ' விளக்கம் சிறப்பாகக் கொடுத்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுவரை கோபிநாத்தும் கான்ஷியஸ்ஆகத்தான் இருந்தார். (அந்த ரிப்பன்-அப்பன் சொன்னவர்க்குக் கொடுத்தார் பாருங்க சூடு!.
   அப்பறம் என்னவோ அசந்துபோய்ட்டார்னு நெனைக்கிறேன்.நன்றி

   நீக்கு
 6. 'ல', 'ள', 'ழ' வேறுபாடு விளக்கம் அருமை அய்யா. பிழை தவிர்க்க உங்கள் பதிவு நிச்சயம் உதவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது. அப்ப அடுத்த ர-ற, ன-ண-ந வேறுபாடு பத்தித் தெரிஞ்சிக்க வேணாமா?

   நீக்கு
 7. நானும் பார்த்தேன் சார் .பெற்றோர்கள் சமூக அந்தஸ்திற்காக பாடு கொடுமை.ஆனால் பெற்றோர்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் தனது சோம்பேறித்தனத்தை நியாயப்படுத்தும் குழந்தைகள் .ல ள ழ சொல்லிகொடுத்த கொடுமையை..நானும் கடைசிவரை சரியாக சொல்லிடுவார்னு கடைசிவரை எதிர்பார்த்தேன் ...என்னத்த சொல்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சோம்பேறித்தனமல்ல சகோதரி... புரியாமை.
   செல், கேம்ஸில் சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறார்கள்..
   நாம்தான் மடைமாற்ற வேண்டும்.. நன்றி

   நீக்கு
 8. ஐயா நன் நினைத்தேன். நம்ம சப்ஜெக்ட் ஆச்சே.நீங்கள் நிச்சயம் இதைப் பற்றி எழுதுவீர்கள் என்று. உடனடியாக இரவே உட்கார்ந்து எழுதி விட்டீர்களே ஐயா! இந்த ஸ்பீடு எங்களுக்கெல்லாம வரலியே!
  இந்த நிகழ்ச்சியைப் பாக்கும்போது தங்களுடைய "முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே " என்ற கட்டுரை நினைவுக்கு வந்தது. தாங்கள் கலந்து கொண்டிருந்தால் நிச்சயம் நல்ல கருத்துகள் கிடைத்திருக்கும்.
  அந்த ஆசிரியர் சொன்ன நா பிறழ் பயிற்சி எனக்கும் திருப்தி தரவில்லை. அரசு பள்ளிகளை இதைவிட ஏராளமான பயிற்சி வாக்கியங்கள் கற்றுத் தரப் படுகின்றன எனபது கோபிநாத்துக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை .
  நீங்கள் சொன்னது போல இமயம் அவர்கள் சொன்னது ஒரு நம்பிக்கையை ஊட்டியது. ஞானி போன்றவர்கள் வழக்காமாக கல்வி முறை சரி இல்லை என்று பொத்தம் பொதுவாக சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மாதிரி கல்வித் திட்டத்தை உருவாக்க இவர்களைப் போன்றவர்கள் ஏன் முயலக் கூடாது. இநநிகழ்ச்சியில் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ள முடியவில்லை
  நானும் இதைப் பற்றி எழுதலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “அரசு பள்ளிகளை இதைவிட ஏராளமான பயிற்சி வாக்கியங்கள் கற்றுத் தரப் படுகின்றன எனபது கோபிநாத்துக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை“ - சரியாகச் சொன்னீர்கள் முரளி.
   நீங்களும் அவசியம் எழுதவேண்டும், ஒரு கல்வி அலுவலராக, ஓர் எழுத்தாளராக, ஒரு பெற்றோராக நீங்கள் அவசியம் நல்ல கருத்துகளை முன்வைக்க வேண்டும். உடனே எழுதிவிடுங்கள்.

   நீக்கு
 9. மதிப்பிற்குரிய முத்து நிலவன் அவர்களுக்கு ! தமிழ் பேராசிரியர் நீங்கள் ! சந்தேகமகக் கெட்க நினைக்கிறேன் ! தமிழின் சிறப்பு "ழ" கரம் என்று பள்ளிப்பருவத்திலேய சொல்லிக் கொடுத்துள்ளார்கள் ! மிகவும் பெருமையாக இருக்கிறது ! ஆனல் தமிழில் மட்டும் தான் இந்த உச்சரிப்புஎன்று சொவது சரியா என்று தோன்றுகிரது ! பிரஞ்சுக்காரர்கள்" சோழமணடலத்தை" "choramandal" எழுதுவது வழக்கம் !அவர்கள் மொழியில் "ழ" எழுத்தும் உச்சரிப்பும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ! மராத்திய மொழியில் "ழ" கரமுண்டு ! மலையாளத்திலும் உண்டு ! ரஷ்ய மொழியிலும் இருப்பதாக கெள்விப்பட்டிருக்கிறென் ! மொழியியல்வல்லுனர்கள் தான் இதற்கு விளக்கமளிக்கவேண்டும் ! "ழ" கரம் தமிழுக்கு மட்டும் தான் என்பதை விளக்குங்களேன் ! உங்களைப் போன்றவர்களால் தான் இதனை செய்யமுடியும் ! வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தோழரே! நலமா? எனது நண்பருக்காக நீங்கள் செய்த உதவியை அவர் மறந்துவிடடார். ஆனால் நான் மறக்கவில்லை. நிற்க. “தமிழில் மட்டும் தான் இந்த உச்சரிப்புஎன்று“ நான் எங்கும் சொல்லவில்லை. மலையாள மொழியில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்தில் கூட எழுத்தாக இல்லாவிடினும் உச்சரிப்பில் இருக்கிறதே! நாம்தான் AMERICA என்பதை அமெரிக்கா என்கிறோம் அவர்களோ “அமேழிக“ - யுனைட்டட் ஸ்டேஸ் அஃப் அமேழிக“ என்றும் BBCயை, “ப்ரிட்டிஷ் ப்ராட்கஸ்டிங் காபொழேஷன்“ என்றும் சொல்வதைக் கேட்டிருக்கிறோமல்லவா? எனவே “தமிழுக்கே உரிய சிறப்பெழுத்து” என்பதாக எடுத்துக் கொள்வதை விடவும் “தமிழில் உள்ள எழுத்துகளில் சிறப்பாக உச்சரிப்பைத் தரும் ழகரம்“ என்று எடுத்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து. (இதுபோகட்டும், உண்மையிலேயே வேறு மொழிகளில் இல்லாத வேறுசில பெருமைகள் தமிழுக்கு உண்டு என்பதை, தமிழர்கள் சொல்லிக் கொள்வதில் தடையில்லையல்லவா தோழரே, இல்லை அதில் எதுவும் தடையிருக்கிறதா என்ன?)

   நீக்கு
  2. மன்னிக்க வேண்டும் தோழரே! நீங்கள் கேடடதுபோலத்தான் நான் எழுதியிருந்திருக்கிறேன். “தமிழுக்கே உரிய “ என்னும் சொல்லாடல் தந்த குழப்பம்.. இப்போதுதான் பார்த்தேன். நான் நினைத்ததைச் சரியாக வெளிப்படுத்தாததால் வந்த குழப்பம். இப்போது திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டிய தோழமைக்கு நன்றி. நன்றி.

   நீக்கு
  3. அய்யா வணக்கம்.
   நேற்று இந்த நீயா நானா வைப் பார்க்கும் போது உங்களது முந்தைய பதிவை முரளிதரன் அய்யாவைப் போலவே நினைத்துக்கொண்டேன்.
   காஸ்யபன் அய்யா கேட்பது சரிதான். இதைத் தமிழுக்கு மட்டுமே உரிய எழுத்து என்று சொல்வது நாம் சொல்வது சரியில்லை.
   ஆனால் “தமிழுக்குரிய சிறப்பெழுத்து“ என்று இவ்வெழுத்தை அறிமுகப்படுத்தும் நிலையில் மாணவர்களுக்குச் சொல்லலாம் என்பதில் உள்ள என்தரப்பு நியாயங்களை இங்கு முன்வைக்கிறேன்.
   இந்திய மொழிக்குடும்பத்தில் பேராதிக்கம் செய்த இரு மொழிகள் சமஸ்கிருதமும் தமிழுமே!
   ழகரம் தமிழில் உண்டு . சமஸ்கிருதத்தில் இல்லை.
   எனவே தமிழுக்குச் சிறப்பான எழுத்து என்பதைக் காட்டவே, சிறப்பு ழகரம் என்கிற வழக்கு வந்திருக்க வேண்டும் . இம்மரபின் தொடர்ச்சியே இவ்வாட்சி!
   இவ்விரு மொழிகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இப்படிச் சொல்வதில் தடையில்லை.
   பிறமொழிகளுடன் இவ்வொப்பீட்டுப் பட்டியல் நீளும்போது இதில் பிரச்சனை வருகிறது.
   திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மலையாளத்தில் இவ்வெழுத்துத் தமிழிலிருந்துதான் சென்றிருக்க வேண்டும் என்பதால் மலையாளத்தோடு ஒப்பிடும்போது அதைத் தமிழின் சிறப்பெழுத்து என்பதில் தடையில்லை.
   மராத்தியில் இந்த ழ கரப்பயன்பாடு இருப்பதற்கு, (இன்று சமஸ்கிருதத்தோடு உரசலில் ஈடுபட்டிருக்கும்) மராத்தியம் உட்பட, விந்தியத்திற்குத் தெற்கே உள்ள திராவிடம், கன்னடம், ஆந்திரம், கூர்ச்சரம், ஆகிய நாடுகளைப் “ பஞ்ச திராவிடம் “ என்று அழைக்கின்ற வழக்கையும் நாம் ஒப்பு நோக்க வேண்டும்.
   இதை ஏற்காமல் மராத்தியம் சமஸ்கிருத மூலத்திலிருந்து தோன்றியது என்று கொண்டாலும் புராதன இந்தியமொழிக்குடும்பத்தில் சமஸ்கிருத மூலத்திலிருந்து கிளைத்த எம்மொழியிலும் சமஸ்கிருதத்தில் இல்லாத “ழ“கரம் திராவிட மொழிக்குடும்பத்திலிருந்தே, (நாம் இன்று வடமொழி எழுத்துகளைப் பயன்படுத்துவது போல) பயன்பாடு கருதிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
   பிறமொழிகள் பற்றிய அறிவைத் தமிழாசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதையே காஸ்யபன் அய்யாவின் பின்னூட்டம் உணர்த்துவதாக நினைக்கிறேன். நிச்சயமாய் அதில் நியாயம் இருக்கிறது.
   மேலை நாடுகளில் பட்டப்படிப்பபில், மொழிப்பாடம் எடுப்பவர்கள் அம்மொழியன்றிக் குறைந்தது இரண்டு வெவ்வேறு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளை எடுத்து அவற்றில் தேர்ச்சி பெறல் கட்டாயம் என அறிகிறேன்.
   நம் நாட்டில் வழக்கிலிருக்கும் ஆங்கிலத்தில் ழ கர ஒலிப்பு வருவதாகத் தாங்கள் குறிப்பிடுகிறீர்கள்.
   அதைக்குறிக்கும் தனி எழுத்து ஆங்கிலத்தில் இல்லை எனவே ஆங்கிலத்தோடு ஒப்பிடும் போதும் “ழகரம் சிறப்பெழுத்து“ என்பதில் தடையில்லை.
   ஓரளவு ஒத்த ஓசையுள்ள மூன்று எழுத்துகளில் ஒன்றை அறிமுகப்படுத்தும் நிலையில், மற்ற இரு எழுத்துகளிலிருந்து மாணவர்களுக்கு ழகரத்தை வேறுபடுத்திக் காட்ட “தமிழின் சிறப்பெழுத்து“ என்று சொல்வதில் இவ்விவாதங்களை முன்னிறுத்த வேண்டுமா என்பது என் கேள்வி!
   ஆறாம் வகுப்பு வரை, “மூன்றில் நான்கு போகாது“ என்று தான் மாணவருக்குக் கற்பிக்கப்படுகிறது. ஏழாம் வகுப்பில் மாணவனுக்குச் சொல்கிறார்கள் “மூன்றில் நான்கு போனால் - 1“ என்று.
   பல்வேறு மொழிகளை ஒப்பிட்டு ஆயும் நிலையில் மாணவன் ழகரம் தமிழில் மட்டுமன்று பிறமொழிகளில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளட்டும்.ஆரம்பநிலையில் ழகரத்தைச் சிறப்பெழுத்து என்று சொல்லத்தடையில்லை என்பதே என் கருத்து.
   ஆனால் ஆறாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியன் “மூன்றில் நான்கு போகாது “ என்று சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் அவன் கண்டிப்பாய், “ மூன்றில் நான்கு போகும்“ என்பதையும் போனால் விடை -1 என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
   இவை என் கருத்துகளே!
   நான் தமிழாசிரியனோ மொழியியல் வல்லுநனோ இல்லையென்றாலும் கற்றுக் கொள்ள ஆர்வமுள்ளவன் என்பதால் கருத்துகளில் தவறிருப்பினும் சுட்டிக் காட்டினால் திருத்திட ஆர்வமாகவே இருக்கிறேன்.
   நன்றி!!!

   நீக்கு
  4. நண்பர் விஜூ அவர்களே! நீங்கள் தமிழாசியனோ மொழியியல் வல்லுநரோ அல்ல என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அவர்களைவிடவும் ஆர்வமாக ஆய்வில் ஈடுபடுவதும், வெளிப்படுத்துவதும் பாராட்டுக்குரியது
   நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி விஜூ. தமிழாய்வில் தமிழாசிரியரின் பங்களிப்புக்குக் குறையாத அல்லது சற்றே கூடுதலான பங்களிப்பை மற்ற பாடங்களை முக்கியப்பாடமாகக் கொண்டவர்கள் தந்திருக்கிறார்கள்.தமிழை முக்கியப் பாடமாகக் கொள்ளாதவர் கேட்ட ஒரு கேள்வியில்தான் தமிழுக்குப் பெருஞ்செல்வத்தைக் கொண்டுவந்து சேர்த்த தமிழ்த்தாத்தாவே ஊர்ஊராகக் கிளம்பிச் செம்மொழிச் செல்வங்களையெல்லாம் சேர்த்துக்கொடுத்தார்.

   நீங்கள் சொல்வதுபோல பிறமொழிக் கல்விகற்றால் தமிழுக்கு நல்லதுதான், அதில் கணினியும் சேர்ந்தால் மிகவும் நல்லது. தெளிவாகச் சொன்ன தங்கள் கருத்தில் முரண்பட ஏதுமில்லை. (ஒன்னாம் வகுப்பில் ஏபிசிடி சொல்லித்தர்ர ஆசிரியருக்கு அதுக்கு மேல தெரிஞ்சிருத்தாத் தானே தெளிவாச் சொல்லித்தர முடியும்? அப்படியெனில், தாங்கள் சொல்வது சரிதானே?)
   தமிழின் சிறப்புகளை மறைக்க நினைத்த சிலர் “அஞ்செழுத்தால் ஒருபாடை என்று அறையவும் நாணிய“கதையும் தமிழ்வரலாற்றில் உண்டல்லோ? இதையெல்லாம் மீறி வந்த தமிழில் இப்போது “ழ“கரம் குற்றுயிரும் குலைஉயிருமாக இருப்பதுதான் நம் கவனத்துக்குரியது.
   அனேகமாக 99விழுக்காட்டினர் ழ உச்சரிப்பை மறந்துவருகின்றனர். பெரியவர் ஒருவர் -பெயர் நினைவில்லை- செம்மொழி மாநாட்டின்போது “வேறு ஒன்றும் செய்யவேண்டாம் தமிழின் சிறப்பெழுத்தான ழ வைக் காப்பாற்றுங்கள் போதும்“ என்று ஒரு சிறு வெளியீட்டையே தந்தார். இதுதான் நிலைமை. பெயர் என்னவேண்டுமாயினும் இருக்கட்டும். ல ள ழ வேறுபாடறிந்து பிள்ளைகள் கற்கவும், தமிழில் ழகரம் நிற்கவும் செய்தால் போதும் என்பதே என் கருத்தும். நன்றி.

   நீக்கு
  5. இன்று மாலை திரு காஸ்யபன், பேசினார் அவர் எனது 15ஆண்டுக்கு முந்திய, இருபதாண்டுக்கால நண்பர்! மதுரை ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றி தமுஎச- மாநிலச் செயற்குழுவில் இருந்தபடி நாடகம், சிறுகதைகளில் பல சிறப்பான படைப்புகளைத் தந்து தற்போது நாக்பூரில் உள்ள 80வயதை நெருங்கும் இனிய நண்பர். (நமக்குத்தான் 15வயது முதல் 90வயதுவரை நண்பர்கள் உண்டல்லவா, விஜூ? ) அவரது வலைப்பக்கம்-http://kashyapan.blogspot.in/

   நீக்கு
 10. இது குறித்து குமரி அனந்தன் ஒரு மேடைப் பேச்சில் மிகத் தெளிவாக சொல்லியிருந்தார். அதனைத்தான் இன்று வரை குழந்தைகளுக்கு உதாரணம் காட்டுகின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது இலக்கண நூல்களிலேயே இருக்கிறது நண்பரே.
   தமிழாசிரியர்கள் இலக்கணப்படி நடத்தினாலே போதும்.
   நோட்ஸை வைத்து நடத்துவோர்க்கு இது தெரியாது. நன்றி

   நீக்கு
 11. எழுத்தாளர் இமயம் சொன்னது மிகவும் சரி...!

  உங்களின் விளக்கம் மிகவும் சிறப்பு...

  அடுத்த நீயா நானாவில் பங்கு பெற வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோபிநாத் அவர்களுக்கு என்“முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!” புத்தகத்தை அனுப்பலாம் என்றால் அவர் முகவரியோ, செல்எண்ணோ கிடைக்கவில்லையே? நிற்க. இடைவெளிக்குப் பிறகு வந்த பதிவில் கலக்கல் போங்க

   நீக்கு
 12. வணக்கம்
  ஐயா.

  சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்... பிழையை சுட்டிக்காட்டி பதிவாக எழுதியமைக்கு பாராட்டுக்கள் ஐயா....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது செய்தால் பாராட்டுவதும், தவறு எனத் தெரிந்தால் எடுத்துச் சொல்வதும் எம் தொழில்! நன்றி ரூபன்!
   இதில் பாராட்டுக்குரியவர் சிறியவர் என்பதாலோ,
   விமர்சனத்திற்குரியவர் பெரியவர் என்பதாலோ தயங்கியதில்லை

   நீக்கு
 13. தன்களின் விளக்கமும் வாதமும் சரியே

  பதிலளிநீக்கு
 14. அதாங்க உண்மை ..எல்லாம் நாடு போகிற போக்கில்தான் ........நாளடைவில் சென்று விடுகின்றனர் .இல்லீங்க திரும்ப அவர் உணர்ந்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 15. அருமையான பதிவு ஐயா! எழுத்தாளர் இமயம் சொன்னதும், டாக்டர் ஷாலினி அவர்களும், ஞானி அவர்களின் கருத்தும் மிகச் சரியே. இந்த ல,ள, ழ "கர" த்தின் உச்சரிப்பு, ஆங்கிலத்தில் வரும் ஃபோனிட்டிக்ஸ் போல நீங்கள் இங்கு விளக்கமாகச் சொல்லியிருப்பதைப் போல வீட்டில் சொல்லிக் கொடுத்ததுண்டு. ஆங்கிலத்தில் A அ அ அ ஆப்பிள்...பி bababa பேய்பி (Baby) என்று ஆங்கிலத்தில் ஃபோனிட்டிக்ஸ் வருவது போல நம் மொழியையும் கற்பித்தது உண்டு பிள்ளைகளுக்கு.

  வரும் விருந்தினர்களுக்கு இந்தப் பரிசு பற்றி எல்லாம் கவலை இல்லை ஐயா. அவர்களது வேலை கருத்துச் சொல்வது மட்டுமே. அவர்கள் இதில் தலையிடுவதாகத் தெரிய வில்லை ஐயா!

  மிக்க நன்றி ஐயா இந்த அருமையான பதிவிற்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரரே!
   உச்சரிப்புப் பிழை, எழுத்துப் பிழைகளைக் களையாமல் என்னதான் இலக்கிய இலக்கணம் சொல்லித்தந்தாலும்அது பயனற்றதாகும் என்பது எனது அனுபவக் கருத்து அய்யா.

   நீக்கு
 16. இப்ப இருக்குறது, இந்தப் பாடம் பெற்றோருக்கும் புரியல, ஆசிரியருக்குமே புரியல, இதில் நான் 186மார்க் தான் வாங்குனேன். முதல் மார்க் வாங்குனவன் யாரும் இந்தச் சமூகத்துக்குப் பயன்படல.. சராசரிக்கும் கீழ வாங்குன ஆளுக தான் சமூகத்தையே மாத்தப் பயன்படுறாங்க“ என்று மிகச்சரியான விளக்கத்தைக் கொடுத்தார் எழுத்தாளர் இமயம்.//
  இவர் மிகச்சரியாக சொல்லியிருக்கிறார். ல ள ழ உச்சரிப்புகளை இது போன்ற இடங்களில் சரியாக விளக்கினால் பலரைச் சென்றடையும் . இதனை நிகழ்ச்சி நடத்துபவர்கள் புரிந்து நடத்த வேண்டும். இது எனது கருத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊடகங்களில் நடக்கும் தவறு பரவலாகிறது.
   பாடங்களில் நடக்கும் தவறு பரம்பரையாகிறது...
   அது தான் என் கவலைம்மா..

   நீக்கு
  2. @ சசிகலா இப்ப உள்ள பாடம்மட்டுமல்ல அப்ப உள்ள பாடங்களும் எனக்கு புரியல.. மண்டையில களிமண் உள்ளவங்களுக்கு எப்பவுமே புரியாது என்பது நீங்க சொல்லுற சத்தம் இங்கே கேட்குதுங்க ஹீஹீ

   நீக்கு
 17. மிகச்சிறப்பான அலசலும்,விமர்சனமும் அய்யா.ஒரு சில நேரங்களில் ஏன் இந்த விஜய் டிவியில் இப்படி நடந்து கொள்கின்றனர்? என்றே தோன்றுகிறது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரி.
   சில நேரத்தில் அல்ல பல நேரம்... என் பதிவின் நிலையான முகப்பின் இறுதியில் வரும் -எனது மொத்தப் பதிவுகளிலும்- அதிகமாகப் பார்வையிடப்பட்ட பதிவுகளைப் பாருங்கள். அதில் விஜய் தொலைக்காட்சிக்கான பாராட்டும் விமர்சனமும் ஏறத்தாழச் சமமாகவே இருக்கும். இதற்கு நான் காரணமல்ல..!

   நீக்கு
 18. பெரும்பாலும் இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்வுகளைப் பார்ப்பதில்லை. தங்களின் பதிவு உண்மை நிலையை உணர்த்துவதாக உள்ளது. தங்களின் மதிப்பீடு நடுநிலையோடு இருப்பதாகத் தெரிகிறது. ல, ள, ழ வேறுபாட்டினை மிகவும் உணர்ந்து படித்தேன். ஏனென்றால் பள்ளி நாட்களில் இந்த உச்சரிப்புக்காக நான் கொக்கு போட்டு நின்றது இன்னும் நினைவில் உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொக்கு? முட்டிக்காலா அய்யா? நான் நின்றதை அப்படித்தான் பயக சொன்னதா நினைவு..
   இப்போதும் இந்த உச்சரிப்புக் கல்வி நம்மைத் துரத்துகிறது. புதுக்கோட்டை நண்பர்களுக்குத் தெரிந்த கதையெனினும் உங்களுக்காகச் சொல்கிறேன்- எங்கள் மாவட்டத் தமிழாசிரியர்களுக்குத் தமிழ்ப்பாடம் மற்றும் செய்யுள் இலக்கணப்பகுதியை மாணவர் மனம்கொள்ள, சிறப்பாகச் சொல்லித்தருவது பற்றிய வகுப்பில் என்னோடு வகுப்பெடுக்க வந்த பேராசிரியர் ஒருவர், ”எனது நண்பர் ஒருவர் “தமிளை, பிளையின்றி எளுதுவது,தெலிவாக உச்சரிப்பது” பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்“ என்றார். அதிர்ச்சியடைந்த நான் அவரது தவறான உச்சரிப்பைக் கவனக் குறைவென்று நினைத்து நினைவூட்டுவதுபோல..“அ்ய்யா அந்தத் தலைப்பு என்னங்கய்யா?” என்று கேட்க, மீண்டும் அதே கொடுமையான உச்சரிப்புடன் தலைப்பைச் சொன்னார். நம் தமிழாசிரியர்களில் சிலர் புரிந்துகொண்டனர். ஆனால், அவர் புரிந்துகொண்டதுபோலத் தெரியவில்லை. எனவே நான் எழுந்து நின்று பேனாவையும் தாளையும் எடுத்துக்கொண்டே “அந்தத் தலைப்பைத் திரும்பவும் சொல்லுங்க.. நா எழுதிக்கிறேன்..“ எ்ன்று சொன்னேன். மனிதர் சற்றும் அசராமல்...அழுத்தம் திருத்மாக..“தமிளை, பிளையின்றி எளுதுவது,தெலிவாக உச்சரிப்பது” என்றார்..
   தமிழாசிரியர்க்குச் சொல்லிக் கொடுக்க வந்த பேராசிரியரே இந்த நிலையெனில்...?
   எல்லாரும் இப்படியென்று தவறாகப் புரிந்துகொள்ளவேண்டாம். ஆர்வத்துடன் கற்றுக்கொண்டே அழகாகச் சொல்லித்தருவோர் மத்தியில் இப்படியும் இருக்கிறார்கள் எனில்..
   “மெல்லத் தமிலினி வாலாமல் இருக்குமா என்ன?”

   நீக்கு
 19. 'ல', 'ள', 'ழ' வேறுபாடு விளக்கம் அருமை அய்யா. எது எப்படியோ என்னைப்போன்ற பாமரனுக்கு இது உதவும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் இருக்கு நண்பரே..
   ஒற்றல் லகரம், வருடல் ளகரம் போலவே
   ர ற, ன ண, வேறுபாடுகள் தெரிய இவற்றின் பெயரைத் தெரிந்துகொண்டால் போதும்.அடுத்து வர்ரேன். நன்றி நண்பா

   நீக்கு
  2. காத்திருக்கிறேன் அண்ணா. :)

   நீக்கு
 20. "ல என்பது ஒற்றல் லகரம் அதாவது நுனிநாக்கு, வாயின் நுனி அண்ணத்தை ஒற்ற, வரும்எழுத்து என்பதால்.. இந்தப் பெயர்.
  ள என்பது வருடல் ளகரம் அதாவது நுனிநாக்கு, வாயின் நடு அண்ணத்தை வருட, வரும்எழுத்து என்பதால்...
  ழ என்பது சிறப்பு ழகரம் அதாவது நுனிநாக்கு, வாயின் உள்பகுதிக்குச் சென்று சுழன்று திரும்பி வருவது"

  அருமை ஐயா, ஒரு வேளை நணபர் கோபிநாத் அவர்கள் (நான் அவரின் தமிழுக்கு ரசிகன்) மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்பதால், அவருக்கு இதன் ஆழம் புரியாமல் போனதோ? (அவர் சொல்கிற வணக்கத்தை கவனியுங்கள்-"வனக்கம்") ஆனால், தமிழுக்கு அவர் செய்கிற தொண்டு தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பலரை விட மிகப் பெரியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரது சலசலவென்று கொட்டும் அருவிபோலும் வேகமான பேச்சை ரசிப்பவன்தான் நான். நல்ல செய்திகளை இளைய தலைமுறைக்குச் சொல்வதும், வந்த சிறப்பு விருந்தினர்கள் மறந்தாலும் இவரே எடுத்துக் கொடுப்பதையும் பற்பல் முறை நான் கண்டு மகிழ்ந்து பாராட்டியிரு்க்கிறேன். எனது பதிவுகளைப் பாரத்தாலே இது தெரியம். இப்போதும் இப்படிக் குறைகாண்பது எனக்கு வருத்தமாக இருப்பதையும் இதே பதிலவில் தெரிவிததிருக்கிறேன்... நன்றி.. தங்கள் பெயர்?

   நீக்கு
 21. உங்கள் கட்டுரையும் படித்தேன் அண்ணா..னகரம் ணகரம் எப்பொழுது எழுத வேண்டும் என்று..
  ஒற்றல் லகரம், வருடல் ளகரம், சிறப்பு ழகரம் - பெயர்களே அருமையாய்ச் சொல்லிவிடுகின்றன, இதை ஏன் அண்ணா பள்ளியில் சொல்லிக் கொடுக்கவில்லை?
  இதில் ழகர உச்சரிப்பு வருகிறதா என்று பார்த்து செய்யப்படும் காமெடிகள்(அப்படிச் சொல்லிக்கொண்டு!!) எனக்குப் பிடிப்பதே இல்லை அண்ணா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெடுநாள் இலக்கணப் பாடத்திட்டத்தில் இல்லாமல் இருந்தது கிரேஸ. இப்போது சேர்த்திருக்கிறார்கள் படம் போட்டு விளக்கம்! அப்படியும் அதை நம் ஆசிரியப் பெருமக்கள் சரியான வடிவில் பிள்ளைகளிடம் கொண்டு சேர்ப்பதிலலை.. எனினும் என்னைப் போல எளிமையாகப் பிள்ளைகளுக்கு இலக்கணத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைத்த ஆசிரியர் பலரும் யோசித்து, பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு மாணவர்க்குச் சொன்னதை அடுத்த பதிவில் எழுதுகிறேன் பா.

   நீக்கு
  2. எங்கள் பள்ளி க்கூடத்திலும் இதெல்லாம் சொல்லித்தரவில்லை :( ..தொழில் நுட்பம் எவ்வளவோ முன்னேறிருச்சு,ககற்றலில் அதை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும், ஆசிரியர். வகுப்பில் நாக்கை மடித்து, சுழற்றி ல,ள,ழ. கரங்களை சொல்லிக்கொடுப்பதினும், (நிறைய ஆசிரியர்களுக்கு தெரியாது என்பது வேறு ) பெரிதுபடுத்தப்பட்ட வீடியோ வும் , அதன் தொடர்புடைய ஆடியோவும் , ஆசிரியரின் உதவியும். உச்சரிப்பு முறைகளையும் கற்றுக்கொள்ள , கற்று க்கொடுக்க சிறந்த முறை என்பது என் கருத்து , பயனுள்ள பதிவு அண்ணா

   நீக்கு
 22. அண்ணா
  ரசிகர்களின் நேரத்தை சற்றும் மதிக்காத நிகழ்சிகளில் அதுவும் ஒன்று . ஐந்து நிமிடம் பேசினால், அரைமணிநேரம் விளம்பரம்.இரவு வெகுநேரம் விழித்துவிட்டு பள்ளியில் போய் தூங்கியா விழுவது!! நான் அதை தவிர்த்து ஆண்டுகள் ஆகிறது!! நல்லவேளை இது போலும் அபத்தங்கள் எல்லாம் பார்க்காமல் இருக்கிறேன். அந்த மொழிபயிற்சி சிலவற்றை நிறைக்கும் சொல்லிகொடுத்திருக்கிறேன். மற்றவற்றையும் இனி சொல்லிகொடுகிறேன்.நிறைக்கு பயனுள்ளதாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்து வரும் ர-ற, ன-ண-ந வேறுபாடுகளையும் சொல்லிவிடு. இந்த எழுத்துகளின் பெயர்களைச் சரியாகத் தெரிந்துகொண்டால் போதுமானது. அதுவே உச்சரிப்பைக் கற்றுத் தரும்ல?

   நீக்கு
 23. அருமையான அலசல்.
  சிறப்பு விருந்தினர்களில் நீங்களும் இருந்திருந்தால் எல்லோருக்கும் தெளிவு கிடைத்திருக்கும்.

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... இதெல்லாமும் பார்க்கிறதுண்டா நாகா?
   இல்ல.. நா சொன்னதுக்கப்புறம் -இணையத்தில்- பார்த்தாயா?
   எப்படியோ.. கருத்திட்டதற்கு நன்றி.

   நீக்கு
 24. தவறைச்சுட்டிக் காட்டிய அருமையான பதிவு. அதனைத் தொடர்ந்து நல்ல ஆரோக்கியமான விவாதங்கள், சுட்டல்கள் மறுமொழிகள் மூலம். வாழ்த்துக்கள் தோழரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தோழரே! தங்கள் தளத்தின் “வாசிப்போர் களம்“ வாசித்தேன். http://vaanehru.blogspot.in/2014/11/26.html
   மிக அருமையான யோசனை! அரசு அலுவலகங்கள்- பள்ளி-கல்லூரிகள்-நூலகங்கள் கூட இதை நடைமுறைப் படுத்தினால் வாசிப்புத் தரமும், படைப்பின் தரமும் கூட உயர வாய்ப்புள்ளது. நன்றி

   நீக்கு
 25. ல,ள, ழ உச்சரிப்பு முறைகளை தெளிவாக விளக்கியமை சிறப்பு! இன்றைய ஆசிரியர்களும், மாணவர்களும் இலக்கணத்தை எளிமை படுத்துகிறேன் என்று சினிமாவை தேர்ந்து எடுப்பது அபத்தம்தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரைப்பட உதாரணம், மூல பாடத்தைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்பது என் அனுபவம். ஆனால் அதுதான் பெரும்பான்மையாக நடக்கிறது என்பதும் உண்மை. நன்றி அய்யா.

   நீக்கு
 26. இந்தப் பதிவு கோபிநாத்துக்குப் போய் சேர்ந்தால் நன்றாக இருக்கும் அண்ணா.
  லகர ளகர ழகர விளக்கத்திற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதைத்தான் நான் விரும்புகிறேன் சகோதரி. ஆனால், சடடென்று யாரும் தொடர்பு கொள்ளும் நிலையில் அவர் இல்லை். எனவே, அவருக்கு யாராவது சொன்னால் நல்லது. யார் வந்து சொல்லப்போகிறார்கள்? எனினும் நம் கடன் பணிசெய்து கிடப்பதே! (நன்றி - திருநாவுக்கரசர்) நன்றிம்மா

   நீக்கு
 27. நல்ல பதிவு ஐயா ...

  நானும் இந்த வார தொடரை நிகழ்ச்சியை பார்த்தேன் ... ஏதோ ஒரு தலைப்பு வைக்க வேண்டும் என்று கண்ட கண்ட மாதிரி தலைப்பு வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.. வீட்டில் உள்ள சில படிப்பில் பின் தங்கிய குழந்தைகள், டி.வி யை பார்த்து அதே போல, எனக்கு பிடிப்பு வரல.... நான் என்ன செய்யட்டும்??? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள்..

  உங்கள் ல, ள ,ழ வேறுபாட்டை படித்தவுடன், நான் சின்ன வயசுல படிச்சது ஞாபகம் வருது..

  " ஏழைக்கிழவன் வியாழக்கிழமை வாழைமரத்தில் ஏறி, வழுக்கி விழுந்து எழுந்து அழுதான்...."

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆர்வமுள்ளவர்கள் ஆளுக்கொரு வகையில் உச்சரிப்பு வேறுபாடுகளைத் தெரிந்துகொண்டு தெரியவைக்கிறார்கள். ஆர்வமில்லாதவர் ஆளுக்கொரு மாதிரி பேசித்திரிகிறார்கள்.
   தேடல்தானே புதியவற்றைக் கொண்டு தரும்? நன்றி விமல்

   நீக்கு
 28. ஒற்றல் லகரம், வருடல் ளகரம், சிறப்பு ழகரம் -- மிகச் சரியான விளக்கம் . நான் என் மகனுக்குச் சொல்லித் தரும் போது ல- நுனி , ள-நடு- ழ-நாவை மடக்கி இப்படித்தான் - . சொல்லித் தந்திருக்கிறேன், ஒற்றல், வருடல் புதியதாய் , பயனுள்ளதாய் இருந்தது . நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்து வரும் ர-ற, ன-ண-ந பெயர்களையும் அப்படியே என் பேரனுக்குச் சொல்லித்தாருங்கள். நான் அவனைப் பார்க்கும்போது கேட்பேன். அடுத்த பதிவில் விரைவில் போடுவேன். நன்றி.

   நீக்கு
 29. நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. மீண்டும் தமிழ் கற்க வேண்டும் உங்களிடம். அன்புப் படையலாக அளிக்கிறீர்கள். நன்றி அண்ணா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்பொழுதும் கற்றுக்கொண்டுதானே இருக்கிறோம்? நீங்கள் என்னிடமும், நான் உங்களிடமும், நாம் மக்களிடமும்? நன்றி

   நீக்கு
 30. திரைப்பட உதாரணம் பற்றி நீங்கள் சொல்வது 100% உண்மை. தமிழ்க்கொலையில் இதுவும் ஒரு விதமே. அதிலும் மிக வலிமையானதும், வேதனையானதும் கூட. என் பதிவைப் படித்துப்பாருங்கள். இங்கே...

  "கடவுழ் தாண் டமிள வால வைக்கனும்…" http://wp.me/p5gvcj-44
  http://vnsraghavan.wordpress.com

  ராகவன்
  சிங்கப்பூர்

  பதிலளிநீக்கு
 31. அன்புள்ள ஐயா

  வணக்கம். தொடர்ந்து வேலைகள். இருப்பினும் தற்செயலாக வந்தபோது எவ்வளவு பெரிய அசைவை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். மரபு என்பதை மறந்து அவரவர் விருப்பம்போல் தமிழைக கற்றுத் தருகிறேன் பேர்வழி என்று சொல்லும் எந்த ஒரு செயலும் தொடர்ந்து அதுவே அடிப்படையாகிவிடும் அபாயத்தை உணர்ந்து தகர்த்து எறிந்திருக்கிறீர்கள் உங்களின் இந்தச் சிறு கட்டுரை வழியாக. எனக்குத் தெரிந்து நம்முடைய தாய்மொழீயில்தான் தாய்மொழியில் பேசுங்கள்,, சரியாகப் பேசுங்கள்.. உச்சரியுங்கள்.. எழுதுங்கள் என்று போராடுவது அதிகமாக உள்ளது என நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் ழ வை தமிழின் சிறப்பு எழுத்து என்று சொல்வதில் ஒரு சிறு துளியும் தவறில்லை என நினைக்கிறேன். இது நமக்கான உணர்வு. நம்முடைய தாய்மொழியின் பெருமையை நிலைப்படுத்தும் உணர்வு. பிறமொழிகளில் இருப்பதை நாம் மறைககவும் இல்லை. மறுக்கவும் இல்லை. அதுபற்றிய கவலையில்லை என்பதுதான்.

  எப்போது நாம் இன்னும் பொறுப்பாக நம் மொழியை நேசிக்கவும் வாசிக்கவும் கவனமாகப் பராமரிக்கவும் செயல்படப் போகிறோம் என்பது கவலையாகவே தொடர்கிறது. இன்னும் சற்று விரிவாக உங்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள நேரம் ஒதுக்கி வருகிறேன்.

  எப்படியானும் அறிவார்ந்த ஒரு வெடியை வெடித்து நினைவுப் படுத்தியிருக்கிறீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்தூட்டம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன் அய்யா.
   தங்களின் சிறுகதை பரிசுபெற்ற செய்தியறிந்து வாழ்த்துச் சொல்ல நினைத்தும் செல்பேசி எண் கிடைக்கவிலலை (இப்போதுதான் தங்களைப்பற்றிக் கரந்தை ஜெயக்குமார் அ்யயா எழுதியதைப் பார்த்து நன்றி தெரிவித்துவிட்டு வந்தேன்) தங்களுக்கு நேரமிருக்கும்போது, எனது மற்ற பதிவுகளில் கண்ணோடி, தங்கள் கருத்தில் பட்டதை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அண்ணாமலைப் பல்கலையில் என் தம்பி குமார் மெரைன் பயாலஜி விரிவுரையாளராய் இருக்கிறான். அவனது தந்தை என் சித்தப்பா சேலம் வள்ளுவர் பல்கலையின் துணைவேந்தராய் இருந்தவர் அ்யயா. சிதம்பரம் வரும்போது தங்களைச் சந்திப்பேன், நன்றி அய்யா. வணக்கம்.

   நீக்கு
 32. அன்பின் முத்து நிலவன்

  63 மறுமொழிகள் உள்ளிட்ட அருமையான பதிவினைப் பொறுமையாகப் படித்தேன் - மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா, தங்களின் வலைச்சரப் பயணத்தைத் தொடர்கிறேன். அடுதத பதிவிற்கு வந்த 99பின்னூட்டங்களையும் படிக்க முடியவில்லை எனினும், பதிவு மற்றும் முக்கியமான பின்னூட்டங்களையும் பார்க்க வேண்டுகிறேன். மிக்க நன்றி.

   நீக்கு
 33. ல, ள, ழ - எப்படி உச்சரிக்க வேண்டும் எனச் சொன்னது அருமை ஐயா...
  கோபிநாத்துக்கு இது போன்ற விஷயங்களை யாராவது எடுத்துச் சொல்வார்கள் என்று நம்புவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊடகத்தில் இருப்போர் இதைக் கவனித்துவிட்டாலதான் தமிழுக்கு நல்ல காலம் வந்துவிடுமே அ்யயா. வந்தால் நல்லதுதான். நன்றி.

   நீக்கு
 34. கவிஞர் முத்து நிலவன் அவர்களே,

  முதல் முறையாக உங்களின் தளத்திற்கு வருகிறேன்.

  தமிழ் மொழியின் சீர்திருத்தம் பற்றிய பல எண்ணங்கள் எனக்கு இருந்தாலும் அதையெல்லாம் சொன்னால் நீங்களே என்னை வெளியே துரத்தி விடுவீர்கள் என்பதால் இந்தக் கட்டுரையின் மையத்தைத் தொட்டுப் பேசுகிறேன்.

  ல ள ழ வித்தியாசத்தை தெளிவாக புரிய வைத்ததற்கு நன்றி. ஆனால் இந்த ழ தமிழில் மட்டுமல்லாது பல இந்திய மொழிகளிலும் உள்ளது. ஸ்காட்டிஷ் மொழியின் Loch Ness என்ற தண்ணீர் ஜந்துவுக்கான Loch என்ற உச்சரிப்பு ஆங்கிலத்திலேயே ஏன் எந்த மொழியிலும் கிடையாது. இதுபோலவே எல்லா மொழிகளும் எதோ ஒரு விதத்தில் சிறப்பானவை.

  பதிலளிநீக்கு
 35. ஐயா, நான் இந்தப் பதிவினை எதேச்சையாக இன்றுதான் (21.2.15) படித்தேன். ல, ள வேறுபாட்டினை சிறப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். நான் இது பற்றி எனது 'அகழ்வு' வலைப்பூவில், 'வாசி..வாசி' எனும் தலைப்பில் ஒரு பதிவினைச் செய்துள்ளேன். வாசித்தல் இன்றி எவ்வொரு மொழியும் செம்மையுறாது. தங்களுக்கு நேரம் இருப்பின் என் பதிவினை வாசித்துப் பாருங்கள். வலைப்பூ முகவரி: akazhvu.blogspot.com; பதிவின் முகவரி: http://akazhvu.blogspot.in/2014/08/blog-post_9.html
  அன்புடன்
  கோ. மதிவாணன்

  பதிலளிநீக்கு

 36. லகர, ளகர, ழகர வேறுபாடுகளை எளிதில் அறிந்து கொள்ள அடியேன் எடுத்துக் கொண்ட ஒரு சிறு முயற்சி.


  https://www.youtube.com/watch?v=mVZG9iMSdx8&feature=youtu.be

  உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவியுங்கள்

  அன்புள்ள
  சுந்தரராமன்
  091-9840923764

  பதிலளிநீக்கு
 37. அருமையாக சொன்னீர்கள் அய்யா!
  ல, ள - சரியான விளக்கம்
  ல என்பது ஒற்றல் லகரம் அதாவது நுனிநாக்கு, வாயின் நுனி அண்ணத்தை ஒற்ற, வரும்எழுத்து என்பதால்.. இந்தப் பெயர்.
  ள என்பது வருடல் ளகரம் அதாவது நுனிநாக்கு, வாயின் நடு அண்ணத்தை வருட, வரும்எழுத்து என்பதால்...
  ழ என்பது சிறப்பு ழகரம் அதாவது நுனிநாக்கு, வாயின் உள்பகுதிக்குச் சென்று சுழன்று திரும்பி வருவது, தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்து என்பதால் இந்தச் சிறப்புப் பெயர்.

  பதிலளிநீக்கு
 38. பெரும்பாலான ‪#‎பெற்றோர்‬,மற்றும் ‪#‎ஆசிரியர்கள்‬!
  தங்கள் பிள்ளைகள் மற்றும் மாணவர்கள்
  "என்னத்த சொன்னாலும்"புரிஞ்சிக்கவே மாட்றாங்க என சொல்லி
  ஆதங்க படறாங்க,அங்கே "என்னத்த சொன்னமோ!அது தான்
  பிரச்சனையே என்பத புரியாம முதலில் அந்த பிள்ளைகளின்"எண்ணத்தை"புரிஞ்சிக்கிட்டு பிறகு நீங்க
  "என்னத்த"சொன்னாலும்" புரிஞ்சிக்கிட்டு அதன்படி நடப்பார்கள்!
  தம்பி!
  "நீ" எதையும்
  "மார்க்"குக்காக படிக்காதே!
  ஆனா,
  "மார்க்"இல்லாமா
  "படிப்பே"இல்ல
  என்பத "மறக்காதே!
  நான் பேசறது தவறா?
  என்பது எனக்கு தெரியாது!
  ஆனால்,
  தவறா? பேசக்கூடாது
  என்பது மட்டும் தெரியும்.
  "தோல்வி"என்பது
  "சோகமாக" இருக்கலாம்
  அந்த "சோகத்தை"
  "சுகமாக" மாற்றுவது
  "வெற்றி"தான் என்பதை
  மறவாதே!
  "வாழ்க்கைக்கு" கல்வி அவசியம்-ஆனால்
  "கல்வி"மட்டும் "வாழ்க்கை" ஆகாது!

  பதிலளிநீக்கு
 39. #கல்வியின் நிலை இன்று!

  "இன்றைய மாணவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து அவர்களுக்கு
  தூண்டுகோலாக இருக்க வேண்டிய ஆசிரியர் மற்றும் பெற்றோர்களே
  இன்றைய கல்விமுறையின் தூண்டிலில் சிக்கியுள்ளனர்.என்றால்
  அது மிகையாகாது.
  ஆம்,
  'மதிப்பெண்"எனும் மாயை வலையில் சிக்கி அதற்காக மாணவர்களை
  கசக்கி எடுக்கிறார்கள்.

  #இன்றைய மாணவர்களின் பிரச்னைகள்!

  *பெருபாலான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களை அந்தகாலத்தில் நாங்க எல்லாம் எப்படி படிப்போம் தெரியுமா?
  என்று கேள்வி கேட்டே கொல்கிறார்கள்.

  அன்றைய சூழல் வேறு என்பதை மறந்து,
  அன்று,
  நான் விளக்கொளியில் படித்து இன்று பெரிய பதவியில்
  இருக்கிறேன்.என்று சொல்லும் நீங்கள்,

  இன்றைய மாணவர்களின் பிரச்சனையை உணராதது தான்
  பெரும் பிரச்சனையே!

  *அன்று நீங்கள் படிக்கும் காலத்தில் மின்சார வசதி இல்லாமல் இருந்திருக்கலாம்,ஆனால்

  இன்று அந்த மின்சார வசதி உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் கிடைத்திருக்கலாம்,
  மின்சாரவசதி கிடைத்தும் படிக்கவில்லை என்று கூறும்
  நீங்கள் அந்த வசதியே அவனுக்கு பெரும் இடையூராக உள்ளது
  என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்.

  *இன்று அறிவியல் துறையின் அபரீத வளர்ச்சியால் தொலைக்காட்சி,செல்பேசி,இணையம்,மற்றும் பல தகவல் தொடர்பு வளர்ச்சியின் காரணமாக

  *ஒரு மாணவன் தகவல்களை சேகரிப்பது மட்டும் கல்வியாக இருந்தால் அவனுக்கு ஆசிரியரே தேவையில்லை.


  * விவேகானந்தரின் கூற்றுப்படி,
  கல்வியின் சாரம் மன ஒருமைப்பாடே தவிர,
  வெறும் தகவல்களைச் சேகரிப்பதல்ல...

  அவனை மீட்டு எடுக்க வேண்டிய ஆசிரியர்களே
  தொலைக்காட்சியால் அவனையே அவன் தொலைக்கிறான் என்பதையும்,செல்லிடபேசியால் அவன் செல்கள் செயல் இழக்கின்றன
  என்பதை உணர்த்தாமல் பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களை
  குறைக்கூறுவதையே பெரும் குறையாக வைத்துள்ளனர்.
  அதற்கு அவர்கள்
  கூறும் காரணங்கள் "எதுவாக"இருந்தாலும்-அது
  மாணவர்களுக்கு "ஏதுவாக" இல்லை என்பதே
  என் வருத்தம்.


  குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை
  உருவாக்குவதை விட, மகிழ்ச்சியான
  நிகழ் காலத்தைத் தருவது நம் கடமை!
  என்பதை மறுக்காமலும், மறக்காமலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 40. ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?

  #நமது கல்விமுறை 100% தகவல்களை அளிப்பதாகவே இருக்கிறது.
  அது ஒரு தூண்டுகோலாக,ஊக்கம் கொடுப்பதாக இல்லை ஊக்குவிப்பவர் இல்லையென்றால்,ஒரு மனிதன் அவனுடைய
  எல்லைகளை தாண்டி உயர முடியாது.
  வெறும் தகவல் தேவை என்றால்,
  ஓர் ஆசிரியர் சிறந்தவராக இருக்க முடியது.
  புத்தகங்களும் ,இணையத்தளமும் இந்த வேலையை
  இன்னும் சிறப்பாக செய்யும்.

  #ஓர் ஆசிரியரின் பங்கு,ஒரு மாணவனை கற்க தூண்டுவதாக
  இருக்க வேண்டும்.அறிவுக்கான தாகத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.அப்போது தான் ஆசிரியரின் பங்கில் ஏதாவது பொருள் இருக்கும்.
  -சத்குரு

  ஆசிரியர்-மாணவர் உறவு மேம்பட!

  இன்றயை மாணவர்களின் பிரச்சனை!

  இன்று நேரத்தை மாணவர்கள் "useless" ஆக பயன்படுத்துவதற்கும்,

  "usedless" ஆக பயன்படுத்துவதற்கும்,

  வாய்ப்புக்கள் அதிகம் என்பதை உணர்த்தும் வகையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் போதிக்க வேண்டும்.


  என்னை பொறுத்தவரை ஒரு நல்ல ஆசிரியர், என்பவர் வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் போது, தான் ஒரு முன்னாள் மாணவன் என்பதை மனதில் வைத்துகொண்டு பாடம் கற்பிக்க வேண்டும்!

  ஒரு நல்ல மாணவன் என்பவர் பின்னாளில் தானும் ஆசிரியர் ஆகலாம் என்ற எண்ணத்தோடு பாடத்தை கற்க வேண்டும்!


  #யார் சிறந்த ஆசிரியர்?

  சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிகொள்பவர்கள்- சாதரணமானவர்கள்!
  சூழ்நிலையை தனக்கு சாதக்கமாக பயன்படுத்திக்கொள்பவர்கள்-புத்திசாலிகள்!
  சூழ்நிலையை தங்களுக்கு ஏற்றவாறு மாற்ற நினைப்பவர்கள்-போராளிகள்!
  சூழ்நிலையை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியவர்கள்-சாதனையாளர்கள்!

  இன்றைய கல்விமுறையால் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் உறவில்
  உள்ள சிக்கலுக்கான காரணம் புரிதல் இல்லாததே என்பதை என் மன நெருடலாக பதிவு செய்துள்ளேன்!


  இந்த பதிவு ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் உறவை மேம்படுத்த உதவும்
  என்ற நமிக்கையோடு!

  உங்கள் வாத்தியார் நண்பன்
  அருள் .பி.ஜி

  பதிலளிநீக்கு
 41. க.சு.சுப்பையாவியாழன், மே 05, 2016

  சிறந்த பதிவு. 'நீயா? நானா?' மட்டுமல்ல, பட்டி மன்றங்களில் பேசும் சில தமிழாசிரியர்களும், மற்றும் சில நல்ல பேச்சாளர்களும், பேச்சைக் கேட்பவர்களைச் சிரிக்கவைக்க வேண்டும் என்பதற்காகத் தரமற்ற நகைச்சுவைகளயும், மேற்கோள்களையும் பேசுவது வழக்கமாகிவிட்டது. பேச்சைக் கேட்பதற்காக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறவர்களில் பலர், இதுபோன்ற தரம் குறைந்த பேச்சைக் கைதட்டி, வாய்விட்டுச் சிரித்து வரவேற்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் தொலைக்காட்சியில் வரும்போது வீட்டில் அதைப் பார்த்துக்கொண்டிருபோரும் அந்த காட்ச்சிகளை ரசித்து மகிழ்கின்றனர். தமிழ் சிதைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டித் திருத்துகின்ற தங்களைப் பாராட்டுகிறேன்.

  க.சு.சுப்பையா, ஆலந்தூர், சென்னை 600 016. 05.05.2016

  பதிலளிநீக்கு
 42. கோபிநத்துக்கு யாரும் சொல்வார்களோ என்னவோ. வாசிப்பொருக்கு மிகவும் பயனுள்ள பதிவு

  பதிலளிநீக்கு