இதுதான் “மோடி வித்தை”யா மிஸ்டர் மோடி? (ரூ.500, 1000 செல்லாதாமே?)

வர வர இந்தியாவின் பிரதமர் மோடிஜி, ”துக்ளக் ஆட்சி“யை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்.. அவர்தான் திடீரென்று “நாணயங்கள் எல்லாம் இனி தோலில் வெளியிடப்படும்.. முந்திய அரசாணைகள் செல்லாது” என்பதுபோல திடீர் அறிவிப்புகளை வெளியிடுவாராம்!
நமது இன்றைய பாரதப் பிரதமரும் இரவு 08-11-2016அன்று இரவு 9மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி, “இன்றிரவு 12மணிமுதல் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது” என்று அறிவித்து, நாடு முழுவதும் பரபரப்பை நிகழ்த்தியிருக்கிறார்! ஏழை பாழைகள் நாயாய், பேயாய் அலைகிறார்கள்!
இதனால், “கள்ள நோட்டுப் புழக்கம் அறவே ஒழியும். கணக்கில் வராத ரூபாய்கள் மதிப்பிழக்கும், ஊழல் ஒழியும்” என்று விளக்கம் தருகிறார்கள்!
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு, சில கேள்விகளை முன்வைக்கிறேன்-

(1)  தமிழக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பிடிபட்ட ரூ.5,000 கோடி “கண்டெய்னர்” என்னாச்சு? அது கள்ளப் பணமா? நல்ல பணமா? இது ஊழல் பணம்தானே? ஊழல் செய்தது யார்? காப்பாற்றியது யார்? - http://valarumkavithai.blogspot.com/2016/05/blog-post_18.html
(2)  நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், “சுவிஸ் வங்கியில் கிடக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்டு, இந்தியர் ஒவ்வொருவருக்கும் பதினைந்து லட்சம் ரூபாயை அவரவர் வீட்டுக்கு அனுப்புவேன்” என்ற திருவாளர் மோடி அவர்களின் வாக்குறுதி என்னாச்சு?
(3)  பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகள் இந்திய வங்கிகளில் வாங்கித் திருப்பிக்கட்டாத ரூ.ஒருலட்சத்துப் பதினான்காயிரம் கோடி ரூபாயை மீட்க எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கை என்னாச்சு? (http://www.dinamalar.com/news_detail.asp?id=1452271)  இதன் மொத்தத் தொகை ரூ.14லட்சம் கோடி என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தனவே? அதுவும் இன்னார் இவ்வளவு என்று புள்ளிவிவரமும் தந்து, இதன்மீது நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம் என்று உச்சநீதி மன்றமே கேட்டதே? (நமக்குத் தெரிந்து ஒன்பதாயிரம் கோடியோடு ஓடிப்போன விஜய் மல்லையா இங்கிலாந்தில் தடபுடலாக இருப்பது ஊரறிந்த ரகசியம்தானே?) இதன்மீதெல்லாம் நடவடிக்கை எடுத்து இந்திய மக்கள் பணத்தை மீட்டிருந்தால் இந்த உங்கள் நடவடிக்கை பாராட்டுக்கு உரியதாக இருந்திருக்கும். இப்ப சந்தேகம் வராதில்ல?
(4)  'கடந்த, 2000 - 2013 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட, 13 ஆண்டுகளில் வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை, 2.04 லட்சம் கோடி ரூபாய்என்று இப்போது “சபாஷ்!” போடும் தினமலர் அப்போது கேட்டதே? எழுதியதே! அது உண்மையா? பொய்யா? பார்க்க -  


(5)   சரி இப்ப நடுச்சாமத்தில நோட்டுகளைச் செல்லாதின்னு ஒரு சர்வாதிகாரியைப் போல மோடிஜி அறிவிக்கிறாரே, இதனால் எத்தனை கோடி கள்ளப்பணம் (கண்டுபிடிக்கப்பட்டு) அழிக்கப்பட்டது என்னும் விவரத்தையாவது அறிவிப்பாராமா? அட ராமா?
(6)  இரண்டு நாளில் வங்கியில் கணக்கில்லாத –ஏடிஎம் என்றால் என்னவென்றே தெரியாத- அப்பாவிப் பொதுமக்கள், ஏழைக் கூலி அன்றாடங்காய்ச்சிகள் எத்தனை கோடிப்பேர் பரிதவித்தார்கள் என்னும் விவரம் கொஞ்சம் கொஞ்சமாக வரும். வந்து என்ன? அவர்கள் இந்த அறிவிப்பால் எந்த லாபமும் பெறப்போவதில்லை என்பது மட்டும் சத்தியம், சத்தியம், சத்தியம்!

இந்தியாவில், ஏற்கெனவே, விடுதலைக்கு முன்னர் ஆங்கிலேயரால் 1938இல் வெளியிடப்பட்ட ரூ.10,000 நோட்டு, செல்லாது என்று 1946இல் ஆங்கில அரசே அறிவித்தது தான்!
பின்னரும், மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது அறிவித்த ரூ.1,000 நோட்டை மீண்டும்  செல்லுமென்று வாஜ்பாயி கொண்டுவந்தார்... அப்பப்ப இது நடக்கும்!

2014இல் ஐ.மு.கூ.ஆட்சியில், 2005க்கு முன்னர் அச்சிட்ட ரூ.500, 1,000 நோட்டு செல்லாதென்று அறிவித்து புதிய நோட்டுகளை வெளியிடப்பட்டது.
இந்த செல்லாத அறிவிப்புகள் எல்லாம் கள்ளப்பணத்தை, கருப்புப் பணத்தைக் கண்டுபிடிக்க, முடக்க, அழிக்க, என்றே முழங்கினர்!
ஆனால், கள்ளப்பணமும், கருப்புப்பணமும் இத்தனை ஆண்டுகள் கழித்தும், இன்னும் லட்சக்கணக்கான ரூபாய்களில் இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்துகொண்டுதானே இருக்கிறது இந்தியா முழுவதும்!

(தெரியாதவர்களுக்காக – கள்ளப்பணம் என்பது அரசு அனுமதி பெறாமல் தனியாரே அச்சிட்ட பணம்,இவர்கள் ரெட்டிப்பாக்கித் தருவதாக சாதாரண மக்களைத்தான் ஏமாற்றுவார்கள், வங்கியிலும் இது கலப்பதுண்டு!

கருப்புப் பணமென்பது, தனியார் வருமானக் கணக்கில் காட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றி வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களின் மிகைப் பணம்!இது பெரும்பாலும் தங்க, வைரக் கணக்கில்தான் இருக்கும் 
“ஏழையான பணக்காரர்கள்” மட்டும்தான் ரொக்கமாக வைத்திருப்பார்கள் அல்லது அரசியல் வாதிகள் அவ்வப்போது செய்யும் தேர்தல் “செலவு”க்கு மாற்றி “சில்லறையாக” சிலபல கோடி வைத்திருப்பர்!)

ஆனால், இந்தா நாளைமுதல் வரவிருக்கும் ரூ.1000 மற்றும் 5,000பணத்தைக் கண்டெயினரில் கட்டுக் கட்டாக ஏற்றுவதைத் தடுக்க ஏதும் திட்டமுண்டா? அல்லது, ஏற்கெனவே கணக்கில் காட்டாமல் இருப்பவர் பணத்தைப் பிடுங்கத் திட்டமுண்டா?
அல்லது, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்தவரின் சொத்துகளைப் பறிமுதல் செய்து அரசுக் கருவூலத்தில் சேர்க்கத் திட்டமுண்டா?
என்ன திட்டமுள்ளது? இப்படி எதுவுமில்லாமல்...

இந்த இரண்டுநாளாக தேசபக்தி பொங்க பேட்டி கொடுத்த அப்பாவிகள் உட்பட, ஏராளமான ஏழைகள் சில்லறை தேடி அலைந்ததுதான் மிச்சம்!
“பூசணிக்கா போறது தெரியாதாம்? கடுகு போறதப் பத்தியே கவலப்பட்டானாம்” இது எப்படி இருக்கு?
எனவே, மோடிஜியின் இந்த (மோடி?) வித்தையால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்பபோவதில்லை என்பது மட்டுமல்ல.. அதிரடியாக ஊழலை ஒழிக்கப்புறப்பட்ட அவதார புருஷர் என்பதான இமேஜூம் கிடைக்கும்.. எப்புடீ? தூங்குறவங்க இருக்குற வரைக்கும் தொடையில மட்டுமில்ல தலையிலேயே கயிறு திரிக்கிறவனும் இருக்கத்தான் செய்வான்...
----------------------------------------------------------------------------------------
இதுலயும் ஒரு காமெடி பாருங்க…
“கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்படும் :
பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிப்பு”
அடடா! இந்தப் புண்ணியவான்கள் சுனாமியையும் முன்கூட்டியே சொல்லியிருந்தால் பல்லாயிரம் அப்பாவி மக்கள் அநியாயமாகச் செத்துப்போனதையும், ஆயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் அனாதையானதைம் அப்பவே தடுத்திருக்கலாம்ல…?
அடப் போங்கப்பா… முடியல..
------------------------------------------------------------------------------- 
இது கடைசியா  நம்ம பஞ்ச்...
பிச்சைக்காரர் நம்மைப் பார்த்து, “ஐயா..அஞ்சுரூபா பத்துரூபா இருந்தாக் குடுங்க சாமீ!!” என்று கேட்டது போன வாரம்!
இந்தவாரம் -- 
நாம தான் அவரைப் பாத்து “ஐயா பிச்சைக்காரரே! 5ரூ, 10ரூ, 100ரூபா இருந்தாக் குடுங்கய்யா”னு கேக்கிற நிலை!
இதுதான் நம்ம மோடி(ஜி) வித்தையோ?!
------------------------------------------------------------------------------

48 கருத்துகள்:

 1. அனைத்தையும் / அனைவரையும் ஒரு பிடி பிடித்து விட்டீர்கள் அய்யா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உணர்ச்சி வசப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்...மோடிக்குக் குவியும் புகழ்ச்சியைச் சொன்னேன். இதைத்தானே அவர் எதிர்பார்த்திருந்தார்?!

   நீக்கு
 2. பதில்கள்
  1. உங்களது காண்செவிச் செய்திப்படத்தையும் பயன்படுத்திக்கொண்டேன் நன்றி தோழரே

   நீக்கு
 3. சரியான கேள்விகள் தான்.மைய அரசினரின் காதுகளுக்குள் ஏறுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “செவிடன் காதில் சங்கு” கேள்விப்பட்டதில்லையா? இது நம்ம மக்களுக்காக எழுதியது நண்பா!

   நீக்கு
 4. அருமை! அருமை! அருமை ஐயா! குருமூர்த்திகளும், ரஜினி கமல்களும், தினமலர் - தினமணிகளும், இன்னும் ஊரிலுள்ள மேதைகள் பெரும்புள்ளிகள் எல்லாரும் மோடிராகம் பாடித் தாளம் போட்டுக் கொண்டிருக்கையில் நீங்கள் மட்டும்தான் துணிந்து உண்மையை எழுதியிருக்கிறீர்கள்! மிக்க நன்றி! இது தொடர்பாக விகடனும் மிக அருமையான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. பார்க்க: http://www.vikatan.com/news/india/71838-modis-5001000-rupees-shock-treatment-politicians-suffer-corporate-celebrate.art

  பதிலளிநீக்கு
 5. நல்ல பதிவுங்கய்யா... நானும் தவறான புரிதலிலே இருந்தேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் அவசரப்பட்டு வாழ்த்திவிடாமல், கொஞ்சம் நிதானித்து யோசித்தபோதுதான் இந்தக் கருத்துகள் பிடிபட்டன. இல்லன்னா “ஜோக்கர்” பட வசனகர்த்தா, இயக்குநர் சசி மாதிரித்தான் ஆகியிருப்பேன்.. தானத்தில் சிறந்தது நிதானம் ல?

   நீக்கு
 6. பதில்கள்
  1. நன்றி அய்யா. (உங்கள் பதிவுகளைப் படித்து வெகுநாளாகி விட்டது...வர்ரேன்...இடையில் சில வேலைகள்..)

   நீக்கு
 7. Release a video about it,then this information will reach so many people

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யோடா.. அந்தத் தொழில் நுட்பத்துக்கு நா எங்க போக...? எனினும் நல்ல யோசனைதான் பார்க்கலாம்..முயன்று கற்போம்! நன்றி நண்பா

   நீக்கு
 8. சிறப்பு பதிவு . விடை எங்கே ?
  தமிழ்நாட்டு அரசு கடனில்.
  இரு பிரதான கட்சிகள் தலைவர்கள், கட்சியின் சொத்து
  பல லக்ஷம் கோடி . பணம் வைத்தவர்கள் நகைக்கடையில் கூடி கருப்புப்பணம் நகைகளாக மாறிவிட்டது.
  அன்றாடங்காய்ச்சிகள் பட்டபாடு -ஓ!அவர்கள் தான் ஆண்டவன் படைத்த பாவ ஜன்மங்கள்.
  துயரம் அனுபவிக்க ஆண்டவன் பூமியில் நரக வேதனைக்காக படைக்கப்பட்டவர்கள்.
  நாங்கள் நாற்பதடி விநாயகர் சிலை
  அழகாக வடித்து
  சமுத்திரத்தில் எரிந்து அருள் பெறுகிறோம்.
  வாழ்க பக்தி. வாழ்க ஆன்மிகம்.
  நாயை அடித்தால் ப்ளுக்ராஸ்.
  மாரடிச்சான் ஊர்வலம் இரத்தம் சிந்த அது பக்தி.
  தீமிதி பக்தி,
  ஒண்ணுமே புரியல உலகத்திலே.
  வைரக்கிரீடம் வைத்தால் ஆண்டவன் காப்பாற்றுவார் ஊழல் வாதிகளை. வாழ்க இறை பக்தி.
  உங்கள் கட்டுரையால் பல எண்ணங்கள்.
  சிந்தனைகள்.
  சிறந்த கட்டுரை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிந்தனைகளை அள்ளித் தெளிக்கிறீர்களே அய்யா! சேர்த்துக் கோத்து ஒரு கட்டுரையாக்குங்கள் நன்றி

   நீக்கு
 9. பதில்கள்
  1. “காலம் ஒரு நாள் மாறும்” - கண்ணதாசன்
   “தானா எல்லாம் மாறுமென்பது பழைய பொய்” --பட்டுக்கோட்டை. முயற்சி திருவினையாக்கும்!

   நீக்கு
 10. மிக ஆழமான செறிவுள்ள பதிவு...ஆனால் அய்யா எல்லாம் முன்னரே திட்டமிட்ட வேலை தான்.... ஆட்சியில் இருப்பவர்கள் இதன் பின்னே நட என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பயம் தான் வருகிறது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த பயம்தான் அவர்களின் எதிர்பார்ப்பு. அரசு செய்தால் யாரும் எதுவும் கேட்க முடியாது என்னும் எண்ணத்தை விதைத்து, போராடுவோரையும் முடக்கிப்போடுவதுதான் அவர்களின் யுத்த ஆயத்தம்! புரியுதா கவிஞரே?

   நீக்கு
 11. கறுப்பு பணம் என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களை சரியாகவே படம் பிடித்து காட்டியமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆயிரம் ரூபாய்க்குப் பதிலாக இரண்டாயிரம் ரூபாய் அவ்வளவுதான். ஏற்கெனவே பதுக்கியதெல்லாம் தங்கம் வைரம்தானே? பணமாக வைத்திருக்க அவர்கள் என்ன லூசா?

   நீக்கு
 12. வழக்கம் போல ... செமையான பதிவு

  தம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி மது. (மைதிலி ஏதாவது பெரிய திட்டத்துடன் பதுங்கியிருக்கிறதா? பாய்ச்சல் எப்போ?)

   நீக்கு
 13. பதில்கள்
  1. உங்களின் வழக்கமான -எல்லாப் பதிவுகளுக்குமான- cut & paste தானே நண்பா? எனினும் நன்றி.

   நீக்கு
 14. நடுத்தர மக்களுக்குத்தான்
  அனைத்து கெடுபிடிகளும் .

  வரி சம்பளத்தில் பிடித்ததாம்.
  வீடு வாங்கினால் எப்படி பணம்.
  ரசீதில்லா நகை வியாபாரம் .
  இதை தடுக்க முடியுமா ?
  கூலி சேதாரம் ௬% .
  அந்த நகை காட்டி பொண்டாட்டி முகம் பார்த்தேன் . புன்னனகை பறந்து ஒரு பொன்னகை காட்டினாள்.
  சேதாரம் ௨௦% வேலைப்பாடு .
  எனக்கு பொல்லாத வேளை பாடு.
  ஒருநகை ஒரு கடையில்
  வாங்கி மறுகடையில் விற்றால்
  தங்கத்தின் தரம் குறைவு.
  அதையும் நாம் மௌனமாக ஏற்று ஒரே கடை வாடிக்கையாளர் ஆகிவிட்டோம்.
  தரம் எப்படி குறையும் ?
  கேட்கமுடியவில்லை.
  அரசு அதிகாரிகள் மௌனம்.
  நம்மிடையே எங்கே விழிப்புணர்வு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் கண்ணாடி ஃப்ரேம் மாற்றவேண்டிய நிலை! கடைக்காரரிடம் தலையைச் சொறிந்தேன். “அட நீங்க போங்க சார் அப்பறம் வாங்கிக்கிறேன்” என்று மானத்தைக் காப்பாற்றினார். வங்கிகளின் முன் மக்கள் கடல் வற்ற இரண்டுநாளாவது ஆகும் நாம்தான் நடுத்தர வர்க்கமாம். நடுத்தெருவில் நிற்கும் நடுத்தர வர்க்கம் புரிந்துகொள்ள வேண்டும்

   நீக்கு
 15. கோடீஸ்வரர்களும் திறமையான அரசியல்வாதிகளும் கைகோர்த்துப் பயனடையவே வழிவகுக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னமா திட்டம் போடுறாய்ங்கெ! உண்மையிலேயே பார்லிமெண்டில் ரூம்போட்டுத்தான் யோசிப்பாங்க இல்ல..?

   நீக்கு
 16. அருமையான பதிவு அண்ணா... ஆனால் ஆஹா ஓகோவென்று மக்கள் புகழ்ந்து காலடிமண் விலகுவது தெரியாமல் நிற்கிறார்களே...என்னவோ போங்க அண்ணா. சாதாரண மக்கள் தான் அடிப்படைத்தேவைக்கும் பரிதவிக்கிறார்கள்.. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்கள் இதுபோலும் சிக்கல்களை எப்போதுமே புரிந்துகொள்ள விடாமல்தான் புதியகல்விக் கொள்கை முதலான அரிய திட்டங்கள் வருது!

   நீக்கு
 17. பதில்கள்
  1. நன்றி டா (அங்கயும் ட்ரம்புக்கு எதிரா என்னென்னவோ நடக்குதாமே? கவனமாக இரு!)

   நீக்கு
 18. நீங்க இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் மோடி ஒரு புதிய சட்டம் போட்டு இப்படி கேட்பதை தடை பண்ணிவிடுவார் அந்த புதிய சட்டத்தின் படி அரசு வேலையில் இருந்தவர்களும் இருப்பவர்களும் இப்படி பதிவு எழுதினால் வேலையில் இருந்து தூக்கி அடிக்கப்படுவார்கள் அதன் பின் நோ பென்சன் என்று அறிவிக்கப் போகிறார். ஜாக்கிரதை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட ஏற்கெனவே முழுநேர ஆசிரியராக இருந்தபோது பகுதிநேரமாகப் பார்த்ததைத்தான் இப்போது முழுநேரமாகப் பார்க்கிறேன். (பகலில் பாஸ்கரன் இரவில் நிலவன்) அப்படிச் செய்து என்னைத் தியாகியாக்கி பிரபலமடையச் செய்ய அவர்கள் என்ன லூசா? நம்மை லூசில் விடுவது தான் அவர்களின் புத்திசாலித்தனமே! (அய்யா சும்மா இருங்கய்யா..கொஞ்சம் உதறல்தான்)

   நீக்கு
 19. அய்யா காலை வணக்கம்! உங்களின் இந்த பதிவு தமிழ்மணத்தில் வெளியாகாமல், திரைமணத்தில் வெளியாகி உள்ளது. காரணம் நீங்கள் உங்கள் பதிவினை வெளியிடுவதற்கு முன்னர், வகைப் ( Label ) படுத்தாதுதான் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்பவுமே வகைப்படுத்துவதில்லை அய்யா. இனி செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். நன்றி

   நீக்கு
 20. நன்றாக அலசியுள்ளீர்கள். தடாலடியாக எதுவும் நடக்காது என்பது உண்மையே. இந்நடவடிக்கையால் சிறிதளவாவது கள்ளப்பணம் குறைய வாய்ப்பு கிடைக்குமோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கள்ளப்பணக்காரர்களுக்கு விளம்பர இடைவேளை அவ்வளவுதான் அய்யா! ஆயிரமாக அடித்தவன் இனி இரண்டாயிரமாக அடிக்கப்போகிறான். (இடையில் மோடியின் விளம்பரம் அவ்ளோதான்!)

   நீக்கு
 21. மிகவும் அருமையான பதிவு ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பா ( எதற்கு இரண்டு பின்னூட்டங்களை ஒன்றுபோல் அனுப்பியிருந்தீர்கள்? தவறுதலாக வந்துவிட்டதோ? ஒன்றை நீக்கிவிட்டேன்)

   நீக்கு
 22. வங்கியில் கணக்கில்லாத –ஏடிஎம் என்றால் என்னவென்றே தெரியாத- அப்பாவிப் பொதுமக்கள், ஏழைக் கூலி அன்றாடங்காய்ச்சிகள் எத்தனை கோடிப்பேர் பரிதவித்தார்கள் / ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊடகங்களை நீங்கள் முழுவதுமாக நம்ப வேண்டாம் அதற்காக நம்பவே மாட்டீர்களா என்ன?

   நீக்கு
 23. இல்லை இது மோடி மட்டும் எடுத்த முடிவல்ல. இந்தியாவில் செயல்படுத்துவதற்கு பிரதமராக அவர் பெயர் அடிபடுகிறது. சில மாதங்களுக்கு முன் 100 டாலர் நோட்டுகளை ஒழித்தால்தான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த முடியுமென அமெரிக்காவில் விவாதித்துள்ளனர். மற்றபடி வங்கிகளை கட்டுபடுத்துவர்கள் (ரோத்சைல்ட் போன்ற உலக மகா கோடீஸ்வரர்கள்/ தீவிரவாதிகள்) அவர்கள் கட்டுபடுத்தும் முறைகளுக்குள் மக்கள் இருந்தால் மட்டுமே அவர்களால் பிழைக்க முடியும். தற்சார்பு பொருளாதாரம் (மக்களுக்குள்ளாகவே பணப்புழக்கம் / பண்ட பரிமாற்றம்) அவர்களுக்கு ஆகவே ஆகாது. ஒவ்வொரு முறை அமெரிக்க தேர்தல் முடிந்த பின்னும் அவர்களது பங்குச் சந்தை கடுமையான வீழ்ச்சி அடைந்திருக்கிறது. உலகமயமாக்கல் இச்சிக்கல்களை உலகெங்கும் பரப்பவே செய்யும். ஒருவேளை பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்தால் மக்கள் பீதியில் தங்கள் சேமிப்பில் இருக்கும் மொத்த பணத்தையும் வெளியே எடுத்து விடுவார்கள். இதைத் தடுப்பதற்கு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிகச்சரியாக அமெரிக்க தேர்தல் முடிவுகளுக்கு முன் இப்படி அதிரடியாய் செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பது என் ஊகம்.

  ஒட்டுமொத்த உலக சந்தையின் அளவிற்கு அச்சடிக்கப்பட்ட பணம் இல்லவே இல்லை. எல்லோரையும் படிப்படியாக நவீன மாய வலைக்குள் இழுப்பதே அவர்கள் நோக்கம். உட்கார்ந்த இடத்திலிருந்து கணினியின் வழி ஒரு இனத்தையே கட்டுப்படுத்த இயலும். இதன் அரசியல் புரிந்து கொள்ள கடினமான ஒன்று.

  எளிதாய் புரிந்து கொள்ள...
  அவர்கள் சொல்லுவது அண்ணாச்சி மளிகைக் கடையில் சென்று ஐநூறு ரூபாயை மாற்றாதே. பண்ணாட்டு விற்பனைக் கடைகளில் வங்கி/கடன் அட்டை மூலமாக எவ்வளவு வேண்டுமானாலும் தேய்த்து தேய்த்து எங்கள் அடிமையாகவே இருங்கள் என்பதே. முடிந்தவரை உள்ளூர் கடைகளில் பொருள் வாங்குவோம். எல்லாமே பிணைக்கப் பட்ட ஒன்று. எல்லாரும் நல்லா இருப்போம் என்ற எண்ணமில்லாமல் இனி வரும் காலங்களை இனிதாகக் கடக்க முடியாது. 150 ரூபாய் கடையில் கொடுத்து செருப்பு வாங்காமல் 130 ரூபாய் இணையத்தில் வாங்குவது அப்போதைக்கு மட்டுமே 20 ரூபாய் மிச்ச மாகும் என்பதை புரிந்து கொள்வோம். சுயநலம் ஏற ஏற கேடுகள் தவிர்க்க இயலாதது. பணத்தை மட்டுமே துரத்தும் அன்றாட வாழ்க்கையில், கொஞ்சமாவது உண்மை பொருளை சிந்திக்க இடமளித்தற்காக வேண்டுமானால் இதை வரவேற்கிறேன்.

  உள்ளூர் சந்தையை முடிந்தளவு ஊக்குவிப்போம், சமூகமாக ஏற்றம் பெறுவோம்.

  கடைசியாக ஒரு செய்தி இந்த பண நோட்டுகளை அச்சடிப்பது யார்? மத்திய அரசும் இல்லை, ரிசர்வ் வங்கியும் இல்லை. இவர்களுக்கு மேல் நிறைய அமைப்புகள் பின்னனியில் இருக்கின்றது. இங்கு அச்சடிப்பதால் அது இந்தியாவின் பணமல்ல. கிட்டத்தட்ட இங்கு செயல்படும் பெப்சி கொக்கக்கோலா நிறுவனங்களைப் போலத்தான். ரிசர்வ் வங்கியின் தலைமையிடம் இந்தியாவா? பணக் காகிதமும் வெறும் காகிதம் தான் என உணரும் நாள் தொலைவில் இல்லை. அதற்காவது ஒரு மதிப்புண்டு, வங்கி/கடன் அட்டையிலும் கணினியிலும் மொத்த இருப்புத் தொகையை பார்க்கிறோமே, அது வெறும் எண். பகிர்ந்துண்டு வாழ்வோம். மகிழ்ச்சியாய் இருப்போம்.

  சாமனியர்களின் குரலை தாங்கள் பதிவு செய்ததற்கு வணங்குகிறோம் ஐயா.
  திராணியற்ற அரசுகள். கலிகாலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக மிக மிக ஆழமான கருத்துக்கள்! கற்பனைக்கும் எட்டாத கோணங்கள்! மிக்க நன்றி இராச்குமார் அவர்களே!

   நீக்கு
 24. நீங்கள் சொல்லும் பல விஷயங்கள் உண்மை. செய்த விசயம் சரியாக படுகிறது. செய்த விதம் சரியல்ல. நிச்சயம் கருப்பு பணம் ஓரளவு மறைந்து விடும்.
  கண்டெய்னர் பணம் போய் இருக்கலாம், ஆனால் மிச்சமுள்ள கண்டெய்னர் எவ்வளவோ? இதனால். கள்ள பணம் முளைக்க சில காலம் ஆகலாம்.

  ஆனால் இங்கு நிலவும் பல ஏற்ற தாழ்வுகளை சரி செய்வது மிக மிக பெரிய காரியம். அதை மேல்வர்ண மக்கள் ஏற்க மாட்டார்கள். அடிபட்ட மக்களும் ஆண்டவன் என்றோ வந்து அள்ளி கொடுப்பான் என்று கற்பனையில் வாழ்ந்து மரிக்கிறார்கள். நாம் தேர்ந்தெடுத்த அரசு மட்டுமே வாழ்வை மேம்படுத்தும் என்று எண்ணம் சிறிதும் இல்லை. எதற்கு அரசின் பணத்தை கொள்ளை அடிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் திருடுபவர்கள் அரசியல்வாதி ஆகி விட்டார்கள். எவ்வளவு பெரிய செயல் செய்தாலும் மனித சமுகத்தின் முன் அது ஒன்றும் இல்லை. ஆனால் இங்கோ தனி மனித துதி விண்ணை முட்டும் அளவிற்கு அருவெறுப்புடன் உள்ளது. உழைக்காமல் முன்னுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ஊரில் சும்மா சுற்றி கொண்டு இருந்தவன் எப்படி சுமோ வாங்க முடியும்.? காலில் விழுவது , மண் சோறு தின்பது, போன்ற செயல்கள் செய்தால் சுமோ கிடைக்கும். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் கிடைபதில்லை. அதனால் அவலமாக நடந்து வரும் செல்வத்தை தவறாக நினைப்பதில்லை.

  பதிலளிநீக்கு