தீபாவளியன்று ஒரு வைரத்தைத் தீயில் இட்டோம்!

------------------------------------------------------- 
எஸ்.ரா.விடம் நினைவுப் பரிசு பெறும்
விழாக்குழு ஆசிரியர்
சி.குருநாதசுந்தரம்

ஆசிரியர்தான், ஆனால் சாதாரண ஆசிரியரல்ல! தமிழாசிரியர்கள் மட்டுமின்றி அனைத்துப் பாட ஆசிரியர்களும் விரும்பும்  வண்ணம் “பவர் பாயிண்ட்”வழி நடத்தும் ஆசிரியர்களின் ஆசிரியர்!

வலைப்பதிவர் இணையப்பயிற்சிமுகாமை இருமுறை நடத்திய அமைப்பாளர்களில் முக்கியமானவர்!
பார்க்க, படங்கள் மற்றும் செய்திகள் -
இடமிருந்து.. மது கஸ்தூரி, சி.குருநாதசுந்தரம், நான்,
முனைவர் நா.அருள்முருகன், ராசி.பன்னீர்செல்வன்,மகா.சுந்தர்,அ.பாண்டியன்,
சகோதரிகள் இரா.ஜெயா, மு.கீதா
பார்க்க -
   
RMSA (அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்ட) ஆசிரியப் பயிற்றுநர்! மாநிலக் கருத்தாளர்களில் முக்கியமான தமிழ்ப்பாடப் பயிற்சியாளர்!

ஆசிரியர்கள் கணினிவழி கற்பிக்கும் பயிற்சி பெறத் தூண்டி, முன்னோடிப் பயிற்றுநர்!



இவர் தமிழாசிரியர்கழக மாவட்டச் செயலரானதும் கணினிவழி அறிக்கை, சுவரொட்டி பிரபலமானது!  
இந்தியா டுடே, தினமணிக் கதிர் உள்ளிட்ட இதழ்களாசிரியர்கள் கேட்டு வாங்கி வெளியிட்ட சிறந்த சிறுகதைகளின் எழுத்தாளர்! 

படித்த ஆசிரியரல்ல, தினமும் இரவு 12மணி வரை படித்துக்கொண்டே இருந்த ஆசிரியர்! 

மாநில TNPSC மற்றும் SSLC தேர்வுகளுக்கு, தமிழ்வினாத்தாள் எடுத்துத் தந்ததை கடைசிவரை வெளியில் சொல்லாத நம்பிக்கையான அரசு ஊழியர்!

பலரும் படிக்கத் தயங்கும் –சாகித்திய அகாதெமி விருது பெற்ற- “அஞ்ஞாடி” படித்து அதன் சாரத்தை உணர்த்திய சிந்தனை மிக்க விமர்சகர்!

வறட்டுத் தமிழரல்ல, வரலாறு உணர்ந்து உணர்த்தும் தமிழுணர்வாளர், மரபுக்கவிஞர், ஆய்வாளர், கட்டுரையாளர், சிந்தனை உரையாளர்!

தமிழாசிரியர் கழக மாவட்டச் செயலாளர்! நம்பிக்கையான தலைவர்! சங்கங்களோடும், அலுவலர்களோடும் வாதாடியும் போராடியும் ஊழியர் உரிமைகளை விட்டுத்தராத பிடிவாதமான போராளி! 

புதுக்கோட்டையின் வீதி –கலைஇலக்கியக் களம் தோன்றிய காலம் தொட்டு அதன் வேர்களில் ஒன்றாக விரும்பிச் செயல்பட்டவர்!

கன்னித் தமிழோடு, கணினித் தமிழையும் நேசித்த, புதுகை கணினித் தமிழ்ச் சங்கத் தலைவர்களில் முக்கியமானவர்!

புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவின் விழாக் குழுவினரில் செயல் திறமிக்க வலைப்பதிவர்!
http://gurunathans.blogspot.in/ எனும் வலைப்பக்கம் அவரது!

வலைப்பதிவர் விழா மேடையில், அய்யா அருள்முருகன் அவர்களை அடுத்து அமர்ந்திருக்கிறார் (வலது ஓரம்)
மாணவர் நலனையே நினைத்து, பள்ளிநேரம் கடந்தும் உழைத்துக்கொண்டே இருந்த தமிழ்உணர்வாளர்!

பெற்ற குழந்தைகளும் பள்ளிக் குழந்தைகளும் விரும்பும் தாயுமானவர்,
தமிழாசிரியர் கழக மாவட்டச் செயலராகத்
தேர்வுபெற்ற குருவைப் பாராட்டும்
மாநிலத் தலைவர் புலவர் ஆறுமுகம்

-------------------------------------------------------------
தன் குழந்தைகளின் பெயருக்கு முன்னால், தந்தை தாய் இருவரின் முன்னெழுத்துகளையும் சேர்த்தே போட்டுப் பழக்கிய சமத்துவ உணர்வாளர்!

தனக்குத் தெரிந்த கணினி அறிவை மற்றவர்க்கு மட்டுமின்றித் தன் மனைவிக்கும் தந்து அலுவலர்களின் பாராட்டைப் பெறச்செய்தவர்!
பிரபல பதிவர் வெங்கட் நாகராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட
வீதி கூட்டத்திற்குத் தலைமையேற்ற குரு
(வெ.நா.அவர்களுக்குப் பூங்கொத்து தருபவர்
கவிஞர் மீரா செல்வக்குமார்.
இருவருக்கும் இடையில் பூக்களும் நம் குருவும்)
இடது கோடியில் நான்,  
வலதுகோடியில் -மு.கீதாவின் அருகில்- வைகறை!
பதிவர் விழாக்குழுக் கூடி விவாதித்த வீடுகளில் 
     குரு அவர்களின் வீடும் ஒன்று!

இவ்வளவுக்கும் மேலாக, வீட்டையும் நாட்டையும் நேசித்த அன்பானவர், மூத்தோருக்கு உரிய மரியாதை செய்யத் தவறாத பண்பானவர்!
புதுகையில் உள்ள நல்ல ஆசிரியர்களுக்கு விருது வழங்கிய கவிராசன் அறக்கட்டளையினர் விழாவில் (நம் கவிஞர் மு.கீதா இடமிருந்து 4ஆவதாக )  இந்தப் பக்கம் வலமிருந்து மூன்றாவதாக விருதுடன் நம் குரு
---------------------------------------------------- 


வயது 44தான்! (பிறந்தது 1972) 
65வயதுக்குரிய சிந்தனையும், 
25வயதுக்குரிய செயல்துடிப்பும் 
ஒருங்கே அமையப் பெற்றவர்!
 “வீதி” கூட்டத்தில் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற “அஞ்ஞாடி” நாவலை விமர்சனம் செய்யும் குரு
இவ்வளவும் சேர்ந்தொரு மனிதர் இருக்க முடியுமா?
இருந்தாரே! நம்முடன் இருந்தாரே! இருந்தாரே!
இதோ இன்று அகால மரணமடைந்து 
நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்தாரே! பிரிந்தாரே!
2016 பிப்ரவரி வீதி விழாவில்
இடமிருந்து கவிஞர் மு.கீதாவுக்கும்,
முனைவர் சு.துரைக்குமரனுக்கும் நடுவில் குரு! 

 “பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி” “பூக்களாக இருக்காதே! உதிர்ந்து விடுவாய்! செடிகளாக இரு! அப்போதுதான் பூத்துக்கொண்டே இருப்பாய்!” –எனத் தன் “பெருநாழி” வலையில் உருளும் முத்திரை வரிகள்!

அந்த நாள் 11-10-2016 காலை சுமார் 9.30மணி! 

எப்போதும் தலைக் கவசமணிந்தே செல்பவர், இசைவகுப்புக்குச் சென்ற தன் குழந்தைகளை அழைத்துவர அடுத்த வீதிதானே என இருசக்கர வாகனத்தில் தலைக்கவசமின்றிச் சென்றவர்..

விபத்தில் பின்தலையில் அடிபட்டு, நினைவிழந்த நிலையில் திருச்சி கே.எம்.சி.மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு... சற்றே நலமென்று நம்பவைத்து...

29-10-2016 தீபாவளி அன்று காலை 9.30மணிக்கு அகாலமரணமடைந்தார் என நிர்வாகம் தெரிவித்தது

மருத்துவம் கிடைக்காமல் இறந்துபோன கிராமத்துக் கர்ப்பிணியின் சாவை “கொலை” என்று எழுதினார் மேலாண்மை பொன்னுச்சாமி! இதை என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை!

அவரது படைப்புகள் சிலவற்றைப் பாருங்கள்!


இவர் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றபோது, வலைப்பக்க எழுத்துகளை அறிமுகப்படுத்திய இவரது பாணி முற்றிலும் புதிது – வலைச்சர அறிமுகத்திலேயே வகைவகையான கலையம்சங்கள்.. பாருங்கள் - http://blogintamil.blogspot.in/2014/12/blog-post_22.html

வாசம் ! 
(செப்-5, 2016 ஆசிரியர் தினக் கவிதை)
வகுப்பறை வாசமற்ற
நாள்கள்
என்னுள் வசப்படுவதில்லை.

உதிர்ந்த சுண்ணாம்புத் துகள்களுக்குள்
மாணவ வாசம் தேடுகிறேன்.
புரிதலற்ற விடைத்தாளுக்குள்
புரிதலின் வாசம் தேடுகிறேன்..

பாடக்குறிப்பேட்டுக்குள்ளும்
மதிப்பெண் பட்டியலுக்குள்ளும்
வாசம் வசப்படுவதேயில்லை..

புத்தகங்களுக்குள் ஒளித்துவைத்திருந்த
மயிலிறகில்
புத்தக வாசமில்லையெனெ
புகார்க்கடிதங்கள் மாணவரிடமிருந்து..

கற்பித்தலுக்குள்
என் வாசம் தேடி
நெடுந்தூரம் பயணிக்கிறேன்..

யாருக்கும் தெரியாமல்
பறித்து வந்த,
ஒற்றைச் செம்பருத்தியை
என்னிடம் தந்து,
வாழ்த்துச் சொல்லிப் போனான்..
ஒன்பதாம் வகுப்பு அஜய்.

கசங்கிய பூவில்  மணத்தது..
நான் தேடிய வாசம் !!!

புதுக்கோட்டைப் பதிவர் திருவிழாப் பணிகள் தொடங்கிய விதத்தை அவர் பாணியில் விவரிக்கிறார்.. http://gurunathans.blogspot.in/2015/09/blog-post.html

“தமிழில் கடித இலக்கியம்” “நத்தார் விழா”  “கார்ல்மார்க்ஸ்” உலக மகளிர் தினம்”  “உலகத் தாய்மொழிதினம்” என இவரது ஆய்வுத் தளங்கள் பெரியன! அதற்கான பதிவுகள் இவருக்கே உரியன! ஆய்வின் மாதிரிக்காகப் படிக்கவேண்டிய “விடுதலைநாள்” பதிவு- http://gurunathans.blogspot.in/2014/08/blog-post_14.html

அகமதிப்பீட்டின் அவசியம் - ஆசிரியர்கள் படிக்க வேண்டிய பதிவு- http://gurunathans.blogspot.in/2015/01/blog-post.html 

சாகித்திய அகாதெமி விருது பெற்ற பூமணியின் “அஞ்ஞாடி” பற்றி- http://gurunathans.blogspot.in/2014/12/blog-post_61.html

“வலைச்சரம்” ஆசிரியராக இவர் எழுதிய பதிவுகள்- (டிச.இறுதி-2014)
http://gurunathans.blogspot.in/2014/12/blog-post_98.html (இதுபோல் ஒரு வலைச்சரப் பதிவர்கள் அறிமுகத்தை யாரும் செய்ததில்லை படியுங்கள்..)

மாமனிதர் அப்துல்கலாம், இயக்குநர் கே.பாலச்சந்தர், கவிஞர் நா.முத்துக்குமார், நம் புதுகைக் கவி வைகறை மற்றும் எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் (http://gurunathans.blogspot.in/2014/10/blog-post_22.html ) முதலானோர் மறைவின்போது இவரது உணர்வு வெளிப்பாடு நெகிழவைத்தது... படித்துப் பாருங்கள்…

புதுகை கவிராசன் அறக்கட்டளை சார்பாக இவருக்கான “நல்லாசிரியர்” விருது வழங்கப்பட்டபோது இவரது உணர்வுபூர்வமான பதிவு இது -http://gurunathans.blogspot.in/2014/08/blog-post_16.html


பதிவர் பாண்டியன் நினைவுப்பரிசு பெறும்போது
எழுத்தாளர் எஸ்.ரா. அய்யா அருள்முருகன் நடுவில் குரு

வரவேற்புக் குழுவின் நடுவில்
மலர்ந்த முகத்துடன் குரு

பதிவர் மது கஸ்தூரி, நான், அடுத்து குரு
(பதிவர் விழா மதிய உணவின்போது)
முன்னணியில் பதிவர்கள்
 முனைவர் மகா.சுந்தர், “ஊழியர்குரல்”
பின்னணியில் குரு



பதிவர் விழா வரவேற்புக்குழுவினர்
(வலது கோடியில் திண்டுக்கல்
தனபாலன் அருகில் குரு)

கடந்த  செப்டம்பர்-11, 2016 
பாரதி நினைவுநாள் கவிதை இது-

நினைவுகளில்   என்றும்
உயிர்த்திருக்கிறாய்.
என்
நொடிகளில் என்றும்
பயணிக்கிறாய்..

உனது
மீசை வைக்கும்
எனது எத்தனிப்புகள் மட்டும்..
தினந்தோறும்
தோற்றே போகிறது.

உடற்கல்விப்   பாடவேளையில்
இலக்கணம் கற்பிக்கும் அவசரத்தில்
உன்
ஓடி விளையாடும் பாப்பாக்களை
ஒளித்து வைத்தேன்..

மைதானத்தை விட
மதிப்பெண்கள் தானே முக்கியம் இங்கு !

பாதகம் செய்பவரைக் கண்டால்
பயம் கொள்கிறது மனம் !!
பணத்துள் மரணித்துவிட்டது..
மோதி மிதித்தல்கள் இங்கு !!
உமிழ்நீரும்  வற்றிவிட்டது !!

சிறகொடிந்த குருவிகளும்
கரைய மறுத்த  காக்கைகளும்
வயல்  தேடும் மாடுகளும்

ஆதரித்தலுக்காய்
அங்குமிங்கும்  அலைகின்றன.

ஆங்கிலச்  சுவையில்
உன்
அமிழ்தத்தமிழை எங்கெனத் தேடுகிறது..
என்
மாணவ  நாக்குகள் !!

இருந்தாலும்
உன்
நெருப்புக் கண்களையும்
துடிக்கும் மீசையையும்
அச்சமில்லாத்  தலைப்பாகையையும்


என்
மாணவனுக்குள்  
தினமும் பொருத்திப் பார்க்கிறேன்..

பொருத்துதலின்  உயிர்ப்பில்
நீ
மீண்டும் உயிர்ப்பாய் ..

என்னுள்
வாழ்ந்து  கொண்டிருக்கும்
உன்
நினைவுகளுக்கு   நன்றி !!

---சி.குருநாதசுந்தரம்புதுக்கோட்டை
----------------------------------
“சமூகப் பிரக்ஞையுள்ள ஒரு கலைஞனின் இறப்பின் இடைவெளி நிரப்பவியலாப் பெருவெளி. அவரின் பணி அளப்பரியது. இனி எந்தக் குரல்நாணும்  ஆத்தாவின் சேலையை   அவரைப் போல் நெய்ய  முடியுமா என்பது ஐயமே.. ஒரு சமூகக் கலைஞனுக்கு ரௌத்திரம் பழகிய புரட்சியாளனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” -
இது அண்மையில் காலமான மக்கள் கலைஞன் கரிசல் திருவுடையானுக்கு இவர் எழுதிய இரங்கல் உரை!  
இது முற்றிலும் இவருக்கும் பொருந்துமல்லவா?

மருத்துவ மனையிலிருந்து திரும்பும்போது, அவருடன் –அதாவது அவரது உடலுடன்- வந்த தமிழாசிரியர்கழக மாவட்டத் தலைவர்கள் கு.ம.திருப்பதி, மகா.சுந்தருடன் நானும் -அன்று தீபாவளி என்பதால்- தயங்கித் தயங்கியே நண்பர்களுக்குக் குறுஞ்செய்தி வழி தெரிவித்தபடி புதுக்கோட்டைக்கு 3மணிக்கு வந்தோம்…

அப்படியிருந்தும் நூற்றுக் கணக்கானோர் – பல்வேறு பாட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், அரசுஊழியர்கள்- ஆசிரியர்களின் சங்கத் தலைவர்கள், மாவட்டக் கல்வி அலுவலர், ஆசிரியச் சகோதரிகள், நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர்… உடற்கூறாய்வு செய்யப்பட்ட புதுகை மருத்துவ மனைக்கும் பின்னர் 5மணிக்கு அவரது பெரியார் நகர் வீட்டுக்கும்,  பின்னர் 6மணிக்கு இறுதிச் சடங்குக்கான போஸ்நகர் மின் மயானத்திற்குமாக வந்து குவிந்து விட்டனர். தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் நாகேந்திரன் சிவகங்கையிலிருந்து மயானத்திற்கே வந்துவிட்டார்...

இவ்வளவு துரிதமாக -அதுவும் தீபாவளி விடுமுறை யன்றே- இவ்வளவும் நானும், திருப்பதியும், மகா.சுந்தரும்- திருச்சி மருத்துவ மனையில் குருவின் மைத்துனர்களுக்கு உதவி செய்து, அவரது உடலைப் பெறும் போராட்டத்தில் இருந்தபோது... 

அதனைப் புதுக்கோட்டைக்கே கொண்டுவரவும், உடனே உடற்கூறு செய்யவும், உடலைப் பெறவும் அடுத்தடுத்து நடந்தேற உதவிய புதுகைக் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் காவல் நிலையத்திற்கும், மருத்துவ மனைக்கும் நேராக வந்து செய்த உதவிகளை மறக்கவே முடியாது, மறக்கவும் கூடாது! 

அதேபோல மருத்துவர் இராமதாஸ் தனது வாகனத்தைக் காவல் ஆய்வருடன் திருச்சிக்கு அனுப்பி மயானம் வரை வந்து.. இவர்களோடு, தமிழாசிரியர் கழக மாவட்ட இணைச்செயலர் முனைவர் துரைக்குமரன், மாவட்ட நிர்வாகிகள், குரு பணியாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரி்ய நண்பர்கள், தலைமை ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் சாமி.சத்திய மூர்த்தி, த.நா.அரசுஊழியர் சங்கத்தலைவர்கள் நாகராஜன், ஜெயபால், ஆ.ஆ.கூட்டணி மாவட்டத் தலைவர் கருப்பையா, பல்வேறு  ஆசிரியர் அமைப்புகளைச் சேர்ந்த புதுக்கோட்டையில் வசிக்கும் மாநில மாவட்ட நிர்வாகிகள்.. பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியச் சகோதரிகள்,  மாவட்டக் கல்வி அலுவலர், என நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் காத்திருந்தனர்... பின்னர் குருவின் வீட்டிற்கும், மயானத்திற்கும் வந்திருந்தனர்.. கவிஞர் கீதா, மாலதி , மது கஸ்தூரி, ஸ்ரீமலை, உள்ளிட்ட நண்பர்கள் ஒருபக்கம் கதற,மாலை ஆறுமணிக்கு, அவரது துணைவியாரும், இரு பெண்குழந்தைகளும் உறவினர்களும் கதறக்கதற... வீட்டிலிருந்து போஸ்நகர் மின்மயானம் வந்தோம்...
ஆம் அவ்வளவுதான்...
தீபாவளியன்று 
எங்கள் வைரத்தைத் 
தீயிலிட்டு எரித்துவிட்டோம்! 
வேறு என்ன சொல்வேன்?!!?

நிகழ்வில் ஒன்றை மீண்டும் சொல்லியாக வேண்டும் - 
“எங்கள் கவிஞர்” என்று புதுக்கோட்டைக்காரர் அனைவரும் சொந்தம் கொண்டாடும் எங்கள் கவிஞர் தங்கம் மூர்த்தி, மனித நேய மருத்துவர் இராமதாஸ்  போலும்  மாமனிதர்கள்  செய்த உதவிகள் உரிய நேரத்தில்  கிடைத்திருக்காவிடில், நாங்கள் எங்கள் குரு உட(லுட)னே மூன்று நாள் முழுவதுமாக இருந்திருப்போம்! 

இதேபோல, நிலஅளவையர் சங்க மாநிலத் தலைவர் குமாரவேலு அவர்களும் திருச்சி ஆசிரியர் பலரும் குருவின் மைத்துனரும், தம்பியும் மருத்துவ மனையில் செய்த உதவிகள் பலப்பல! அவரது துணைவியார் திருமதி ராஜேஸ்வரிக்கு இவர்கள் தந்த ஆறுதல் சொற்களால் விவரிக்க இயலாதது! இதை வேறு எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை! இவர்கள் அனைவரும் வாழ்க!

குருவின் பணிகள் என்றும் நினைவிலிருக்கும்! குறையாத அவரது அன்பே எமை வழிநடத்தும்!

வரும் 20-11-2016 ஞாயிறு மாலை புதுகை நகர்மன்றத்தில் படத்திறப்பும் அஞ்சலிக் கூட்டமும் நடத்த, தமிழாசிரியர் கழக நண்பர்கள் திட்டமிட்டு வருகின்றனர், மாவட்டத் தலைவர் கு.ம.திருப்பதியும், இணைச்செயலர் முனைவர் துரைக்குமரனும், முனைவர் மகா.சுந்தரும் இதர மாவட்ட நிர்வாகிகளும்...
நினைவஞ்சலி அறிவிக்கை

-------------------------------------------------------------------------------------- 
நமது அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்களும் நமது  முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி அவர்களும் கலந்துகொள்வதாக உறுதியளித்திருக்கிறார்கள்.
இயலும் நண்பர்கள் அனைவரும் வருக!
------------------------------------------ 

21 கருத்துகள்:

  1. மிகவும் துயரமான செய்தி அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  2. கருத்திடவா அல்ல கதறிடவா அய்யா... மீளாத் துயர்

    பதிலளிநீக்கு
  3. அய்யா...மிக அரிதான தொகுப்பு...குரு அவர்களைப்பற்றிய ஒரு முழுமையான ஆவணப்படத்தை பார்த்தது போன்ற உணர்வு..நெகிழ்வு....

    பதிலளிநீக்கு
  4. உங்கள் பதிவைப் படித்ததும், ஆசிரியர் குருநாத சுந்தரம் அவர்களது நினைவலைகள், எனக்குள் ஏற்படுத்திய வலியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    பதிலளிநீக்கு
  5. சாகும் வயதா இது? அவரது சாதனைகளை நீங்கள் பட்டியலிட்டுள்ளதைப் பார்க்கும்போது வியப்பாக உள்ளது. என்றும் புன்னகையுடன் இருக்கும் நண்பர். தங்கள் மூலமாகத்தான் அவருடைய பன்முகத் திறனை அறியமுடிந்தது. நெருக்கமாக பழகாவிட்டாலும் உங்களது பதிவு மூலமாக அவரைப் பற்றி முழுமையாக அறியமுடிந்தது. நீங்கள் நிறைவாக கூறியுள்ளதைப் போல அவரது அன்பே வழிநடத்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் வாழ்வு எவ்வளவு கோரமானது ... சில வேளைகளில் ..
      சனியன் பிடித்த மருத்துவமனை தீபாவளி அன்று அறிவித்திருக்க வேண்டாம்...

      இதன் ரிப்பில் எபக்ட்.. மிக மோசமானது அல்லவா

      நீக்கு
  6. மனம் வலிக்கிறது ஐயா
    திருச்சி சென்று, ஐ.சி.யூ வில்
    நண்பதைப் பார்த்தேன் ஐயா
    தேறி வருகிறார் என்று செவிலியர் அறிவித்தார்
    ஆனால் நம்மை விட்டுப் போய்விட்டாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பார்வைக்கு எப்படி இருந்தார் தோழர்...
      மனம் வலிக்கும் சந்திப்பு

      நீக்கு
  7. பதிவர் சந்திப்பில் சந்தித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. இனிமையான மனிதர். இந்த துயரம் தாங்கமுடியாது. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.

    பதிலளிநீக்கு
  8. வேதனை ஐயா...
    மிகப்பெரிய இழப்பு...
    அவரின் ஆத்மா சாந்தியடையவும் இந்த மீளாத்துயரில் இருந்து அவரின் மனைவியும் குழந்தைகளும் மீண்டு வரவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  9. வருத்தமான செய்தி!.....
    மரியாதைக்குரிய ஐயா,வணக்கம்.எழுத்துலகுக்கு,மாணவ சமுதாயத்துக்கு பேரிழப்பு.அன்னாரது குடும்பத்தாருக்கு மிகப்பேரிழப்பு....வருந்துகிறேன் ஐயா....

    பதிலளிநீக்கு
  10. கண்ணீருடன் ஆழ்ந்த இரங்கல்...

    பதிலளிநீக்கு
  11. நம்ப முடியவில்லை ஐயா! நலமடைந்து வருகிறார் என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தேன். பொய்யாய்ப் போனதே! இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறேன். சில மாதங்களுக்கு சென்னையில் ஒரு பயிற்சியில் சந்தித்தேன்.சிறந்த ஆசிரியர்பண்பாளர் ஒருவரை இழந்தது பேரிழப்பே.
    அதிர்ச்சி அடைந்து கலங்குகின்றேன்.

    பதிலளிநீக்கு
  12. பெருந்துயர் :-(
    பார்த்துப் பழகியிராத எனக்கே இவ்வளவு கனம் என்றால்....

    பதிலளிநீக்கு
  13. மனிதம் ஒளிர்ந்த மனிதரை மறக்க மனம் கூடுதில்லையே.

    பதிலளிநீக்கு
  14. வருத்தமான செய்தி. ஆழ்ந்த இரங்கல்.

    பதிலளிநீக்கு