கவிதையைச் செதுக்குவது எப்படி? – “மின்சாரக்கவி“யின் சில கவிதைகளை முன்வைத்து...

இனிய நண்பர் “மின்சாரக்கவி“ இன்று காலை வீட்டுக்கு வந்திருந்தார். தொலைந்து போன எனது “காதல்கடிதம்“ குறுந்தொடரை மீட்டுத் தந்தவர் என்று எனது “புதிய மரபுகள்“ கவிதைத் தொகுப்பின் பின்னுரையில் நன்றி தெரிவித்திருப்பேனே? அவர்தான். பேசிக்கொண்டே அவரைக் கவனித்தேன்.

வாழ்க்கைச் சிக்கல்களில் நலிந்து மெலிந்து ஆளே மாறிப்போயிருந்தார். முன்பே அவர் ஒன்றும் குண்டர் அல்ல எனினும், இது, வாழ்க்கைச் சோர்வுகள் தந்த மெலிவு! என்றாலும் கவிதை மீதான காதலை இப்போதும் அவர்கண்களில் கண்டேன். உயிர்வாழ உபசரிக்கும் இலக்கியக்காதல்!

மின்சாரக்கவி (எ) கிருஷ்ணமூர்த்தி, காபியை வாங்கிக் கொண்டு, ஒரு நோட்டைத் தந்தார். ஒருகுயர் பெரிய நோட்டு! அவ்வளவும் கவிதைகள்!
படித்துப் பார்த்து, “பத்திரிகைகளுக்கு அனுப்பலாமா?அனுப்பறதுன்னா எதை எதை அனுப்பலாம்“ என்று சொல்லும்படி என்னைக் கேட்பதற்காகவே வந்ததாகவும் சொன்னார். வந்ததிலிருந்து, அவரைப் படித்துக்கொண்டிருந்த நான், பிறகு கவிதைகளைப் படித்துக்கொண்டே சொன்னேன் –

கவிஞனுக்கு முதலில் தன்மீது நம்பிக்கை இருக்கணும். பத்திரிகைக்கு அனுப்பினால் பிரசுரமாகும்னு முதலில் தன்னை நம்பணும். பிறகு எந்தக் கவிதையை எங்கே அனுப்பலாம் எனும் தெளிவும் படைப்பாளிக்கு அவசியம்” 
என்று சொல்லிக்கொண்டே வந்தபோது, சில கவிதைகள் தன்னைப் படிக்க மீண்டும் என்னை அழைத்ததைக் கேட்டேன், கண்டேன்  –
“காடு வளர்க்க ஆள்போட்டது
காடு வளரவில்லை,
ஆள் மட்டுமே வளர்ந்தது
படித்துக்கொண்டே சொன்னேன் நல்லா இருக்கு, இதை இன்னும் செதுக்கலாமே? என்னென்ன கவிதைத் தொகுப்புகளை அண்மையில் படிச்சீங்க“ என்று கேட்டேன். அவர்  ஆயாசத்தோடு, சலித்துக்கொண்டே “எங்கய்யா படிக்க நேரம் இருக்கு? ஆலாப்பறக்குற வாழ்க்கை“ என்றார்.
கவிதையைச் செதுக்குவது என்றால் என்ன?
எனக்கு ஒருபக்கம் அவரிடம் சொல்லத் தயக்கமாக இருந்தாலும், “இந்த அளவுக்கு எழுத்தின்மீது காதல்கொண்டவரிடம் சொல்லாமல் இருப்பதுதான் தவறு“ என்று நினைத்துத் தொடர்ந்தேன் – “இதுதான் தப்பு. உங்களுக்குக் கவிதை வருது, பிறகு அதை இன்னும் நேர்த்தியா எழுதணும்கிற பொறுப்பு வேண்டாமா?  “நமக்குத் தொழில் கவிதை“ன்னான் பாரதி. எந்தத் தொழிலில் நமக்கு ஈடுபாடு இருக்கோ அந்தத் தொழிலில் பயிற்சி அவசியமில்லையா?
தெருவோரத்தில் நின்று இளநி விற்கிறவர், பளபளவென்று தீட்டப்பட்ட அரிவாளைக் கொண்டு அப்படி இப்படி என நாலே நாலு வீச்சில், ஒரு சின்ன “மட்டைக்கரண்டி“யையும் அதிலிருந்தே செதுக்கி எடுத்து நம் கையில் தருகிற லாவகத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதற்கு எவ்வளவு பயிற்சி வேண்டும்? அசந்தால் அந்த வேக வீச்சுக்குக் கையே போய்விடும், இல்லையெனில் பல வீச்சு வீசியும் இளநீர் சீவி முடியாது, வியாபாரமும் கெட்டுப்போய்விடும் இல்லையா?” என்று சொல்லி,  “அதே கவிதையில் மட்டுமே என்பதை முதலில் எடுத்துவிடலாம். ஆள்வளர்ந்தது  என்பதைச் சற்றே மாற்றி –எதுகை மோனை நயத்துடன்- ஆடு என்று சேர்த்துக் கொள்வோம். எதுகை மோனையை வலிந்து போட்டால் டி.ஆர்.மாதிரி சம்பந்த மில்லாமல் துருத்திக்கொண்டு நின்று, கவிதையைக் கேலிக்குரியதாககி விடும் எனும் கவனம் கவிஞர்க்கு ரொம்ப ரொம்ப முக்கியம். இயல்பா வந்தா, அதுல அர்த்தமும் கூடுதலாக் கிடைச்சாப் போடலாம் அவ்ளோதான்)
“காடுவளர்க்கச்
செடிநட்டது அரசு
ஆடு வளர்ந்தது“  - என்றோ,
“அரசுத்திட்டம்
காடுவளர்ப்பு,
ஆடு வளர்ந்தது“  - என்றோ,
“காடுவளர்க்கத்
திட்டம் போட்டார்கள்
ஆடு வளர்ந்தது“  - என்றோ, முதலில் எழுதிய வரிகளிலேயே திருப்தியடைந்து விடாமல், வரிகளை மாற்றி மாற்றிப் போட்டு
எதுகை மோனைக்குள் ஒரு நயம் வைத்து அதன்படி என்னபொருள் வருகிறது  என்பதைச் சொல்லிச் சொல்லி மீண்டும் மீண்டும் எழுதிப் பாருங்கள் திருப்தி தரும்படி எழுதுங்கள் அதுதான் செதுக்குவது“ என்றேன். எல்லாக் கவிதைக்கும் இப்படித் தேவையிருக்கும் என்று சொல்லமுடியாது. திருப்தி அடையும் வரை கவிஞனின் தாகம் குறையக் கூடாது. எழுதும்வரைதான் கவிஞன், எழுதிமுடித்து வெளியிடும்போது கவிஞனே தன்னை ஒரு இதழின் ஆசிரியராக நினைத்துக் கொள்ள வேண்டும். பக்க அளவு, அந்தக் கவிதையின் உருவ-உள்ளடக்க அழகு சரிதானா, என்பதைச் சிந்தித்து பட்டுக்கத்திரிச்சது போல –தேவையெனில்- மீண்டும் திருத்த்த் தயங்கக் கூடாது. பயிற்சி இது“

“அப்பாடா கற்கண்டுப் போலப் புரியும்படிச் சொல்லிவிட்டோம்“ என்று நினைத்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து சொற்குண்டை வீசிச்   சுக்குநூறாக்கிய மின்சாரக்கவி கேட்டார் -
“எல்லாம் சரிங்கய்யா.. நேரம் கிடைக்கிறப்ப தோணுறத எழுதி வச்சு பின்னாடி எடுத்துப் படிச்சுக்குவேன்... நீங்கதான் நம்ம கூட்டத்துல அத நா வாசிக்கக் கேட்டு கவிதை நல்லாருக்கு தொடர்ந்து எழுதுங்கனு சொன்னீங்க.. இப்ப இன்னும் செதுக்கணும்ங்கிறீங்க”   

இப்போது என் முறை! 
உரையாடலின்போது தன்னை விட்டுக் கொடுக்க யார்தான் முன்வருவார்கள்? அவர் தன்னை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்பது புரிந்தது. நானும் இப்படி இருந்தவன்தானே? இப்போது நிறைய அனுபவங்களால் கொஞ்சம் மாறியிருக்கிறேன்.
இந்த உரையாடலில் தோற்பது, எதிர்கால நட்புக்கும், இவரைத் தொடர்ந்து எழுதத் தூண்டுவதற்கும் பயன்படுமென்றால் நான் தோற்றுப்போகத் தயார்“ என்னும் புதிய மனநிலையோடு தொடர்ந்தேன்.

“ஆங்.... சொல்லியிருக்கலாம்.. ஆனா அது எந்தக் கவிதைனு நினைவில்ல, ஒன்னுமே இல்லாதத நல்லாருக்குனு சொல்லி உசுப்பேத்தி உடுறது தப்புத்தான். ஏதோ ஒரு ஆர்வத்தோட எழுதுறவங்கள அப்படி நா சொல்றதில்ல... நீங்க வாசிச்ச கவிதைகளில் ஏதோ ஒரு பொறி இருந்திச்சு. நல்லாருக்குனு சொல்லி உங்களை இன்னும் எழுத வைக்கணும்கிறதுக்காக சொன்னது அது...“ என்று மென்று விழுங்கி, மேலும் தொடர்ந்தேன். அவரது குண்டுவீச்சில் நொறுங்கி விழுந்துகிடந்த நான் மெதுவாக எழுந்து நிமிர்ந்தேன்.

கவிதைக்குப் பயிற்சி அவசியமா? அல்லது
சிலையைச் செதுக்கப் பயிற்சி வேண்டுமா?
“இப்ப நீங்க ஒரு மின்துறை ஊழியர். எங்க வீட்டுல ஒரு பல்பு மாத்தணும்னா கடையில வாங்கி நானே மாத்திடுவேன். பல்பு போட்டும் எரியலன்னா, பாசிடிவ் நெகடிவ் தெரிஞ்சு எந்த இணைப்புல என்ன சிக்கல்னு சரிபண்ண எனக்குத் தெரியுமா?“ நான் விரித்த வலையில் தானாக வந்து விழுந்தார்.
“அது எப்படி உங்களுக்குத் தெரியும்? அதுக்குத்தானே நாங்க படிச்சு, மேலும் அனுபவத்துல கத்துக்கிட்டு பாக்கெட்டுல “டெஸ்ட்டர்“ குத்தி வச்சிக்கிட்டு திரியிறோம். இல்லனா எங்க பொழப்பு என்னாகுறது?
இப்போது என் நிலை உறுதியாகிவிட அம்புகளை வீசினேன்.
“உங்கள மாதிரி அததுல அனுபவம் உள்ளவங்கதான் அதுதெரிஞ்சு சரிபண்ணுவீங்க இல்லையா? சரிதான். பல்பு மாத்துற மாதரியும் ஃபியூஸ் போடுற மாதிரியும் சில வேலைகளை எல்லாரும் செய்ற மாதிரி, எல்லாரும் நல்ல அல்லது கெட்ட விஷயம் மனசுக்குப் படுறத சுருக்னு சின்னச்சின்ன சொற்களில் சொல்வது கவனிக்க வைக்கும், அது கவிதை மாதிரி இருக்கும். அதுவே தொடர் பயிற்சி மற்றும் படிப்பின் வழியாகவே கூர்மையான திறமையை வளர்த்துக்க முடியும். தான் உணர்ந்ததையே படிப்பவரும் உணரும்படிச் செய்ய கொஞ்சம் பயிற்சி தேவை.
மிதிவண்டி ஓட்டத் தெரிஞ்சவுங்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்டப் பழகுவது எளிது. கியர் வண்டி ஓட்டத் தெரிஞ்சவுங்களுக்கு மகிழ்வுந்து (கார்) ஓட்டக் கற்றுக்கொள்வது எளிது அல்லவா அதுபோலத்தான் முந்திய நம் தமிழ்க் கவிதையின் வகை மற்றும் அழகியல் நுணுக்கங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்கள் நுணுக்கங்களைத் தன்கவிதையில் ஆள்வது எளிதாகக் கைவரும் அதோடு, கவிதையில் ஆழமும் அழகும் கூடும். எதை எப்படிச் சொல்லலாம் என்பதும் அத்துப்படியாகும்.
அதுக்காக, விமானம் ஓட்டத் தெரிஞ்சவுங்களுக்கு மிதிவண்டி ஓட்டத் தெரிஞ்சிருக்கணும்னு நான் வறட்டுவாதமும் செய்யலை. ஆர்வமும், பயிற்சியுமே அடிப்படை.  எந்தப் பயிற்சியுமில்லாமல் எந்த நுணுக்கமும் கைவராது. இல்லியா?
தீட்டத் தீட்டத்தானே கத்தி கூர்மையாகும். மொன்னைக் கத்தி எப்படி வெட்டும்? 
என் ஆயுதம் சரியாக அவரைத் தாக்கிவிட, அமைதி காத்தார்.

பலவீனமானவரை மேலும் தாக்க நான் விருமபவில்லை. (ஆமா இவுரு பெரிய அர்ச்சுன மகாராசரு..னு யாருப்பா அங்க மைண்ட் வாய்சுல மொணகுறது? மைதிலியா? இருடா கொஞ்சம் நானும் ஒன்னமாதிரி நடைமுறைத் தமிழ்ல சொல்லிப் பாக்குறனே? சரி ஒரு இளநி குடிச்சுக்கிறேன்.. நோ கோலா! சரியா?)

இப்போது அவரது அடுத்த கவிதையைக் கையிலெடுத்தேன் –
“நெடுநெல் வயல்களில்
செந்நெல் செழித்தோங்கியது
வீடுவந்து சேரும்முன்னே
கடன்வந்து அறுவடை செய்தது
இந்தக் கவிதையில், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் எழுதிய வரிகளின் சாயல் இருந்தாலும், “கடன்காரன் வயலுக்கே வந்து அறுவடை செய்வான்“ என்கிற புதிய அர்த்தம் கிடைப்பது கூடுதல் ஆழமுடையது என்பதால் நல்லதுதான். ஆனால் வரிகள் அதிகமாய், இன்னும் சுருக்கலாம் பாலை சுண்டச் சுண்டக் காய்ச்சக் காய்ச்ச ருசி தானே? அதுக்காக சட்டி புடுச்சிக் கருகிடாமயும் பாத்துக்கணும். ஏதோ ஒரு படத்துல வர்ர “இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்“  வடிவேலு மாதிரியும் ஆகிடக்கூடாது.
சரி.. அப்ப, எப்படிச் சுருக்கலாம்? இப்ப பாருங்களேன் –
           வயல் விளைந்தது
           வீட்டுக்கு வருமுன்னே
           கடன் அறுவடை செய்தது. சரியாக இருக்குமா? அல்லது,

           நல்ல விளைச்சல்
           விவசாயியை முந்திக்கொண்டு
           கடன் அறுவடை செய்தது. சரியாக இருக்குமா? அல்லது,

           வயல் விளைந்தது.
           கடன் அறுத்தது. – என்பதே போதும்போல இருக்கிறதே! யோசிக்கலாம். திருக்குறளில் அசைச்சொல் கூட ஏதோ ஒரு தொனிப்பொருளை உணர்த்தும் என்று சொல்வாருண்டு. 

ஒருசொல் அல்ல, ஓர் எழுத்துக்கூடக் கவிதையில் வீணாக இருக்கக்கூடாது.ஒரு சொல்லை எடுத்தால் ஒன்று அர்த்தம் போகும் அல்லது இலக்கணம் போகும் அல்லது அழகு போகும் என்று ஆகப் பொருத்தமான (APT WORD) சொல்லாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். 

வரிகளை மடக்குவதற்கும் அர்த்தம் உண்டு. கூடுதல் அர்த்தம் கொடுக்கவே வரிகளை மடக்கிப் போடவேண்டுமே அன்றி பெரியவரி சின்னவரி என்பதால் அல்ல. இந்தப் பயிற்சியைத்தான் மரபுக்கவிதைப் பயிற்சி நமக்கு மிக எளிதாக்கும்.

ஆக, ஓவியம் வேண்டுமானால் வண்ணங்களை எடுத்துப் பூசிப்பூசி சேர்ப்பது எனும் அரிய கலையாக இருக்கலாம். கவிதை, சிற்பம் போல. வேண்டாத கல்லு சில்லு களையெல்லாம் தன் உளியால் செதுக்கிச்செதுக்கி எடுத்துத் தூர எறிந்து உள்ளே ஒளிந்திருக்கும் அழகுச் சிலையை வெளிக்கொண்டு வரும் சிற்பியைப் போலத்தான் கவிஞன். சிரமம் பாராமல் கவனம் மாறாமல் உழைக்க வேண்டும். சிலை உடைந்துவிடக்கூடாதல்லவா? சிற்பி கடைசியில்தான் சிற்பத்தின் கண்ணைத் திறப்பானாம். அதுமாதிரி கவிஞனும் கடைசியில் தன் கவிதைச் சிற்பத்திற்குக் கண் திறப்பது போல கவிதைக்கான தலைப்பை வைக்க வேண்டும்.  தலைப்பு இல்லாமலும் கவிதை தனியே புரியவேண்டும். தலைப்பே கவிதையின் பொருள் என்ன என்பதைச் சுருக்காய்ச் சொல்லிவிட வேண்டும். ஜெயகாந்தன் சொல்வார் கதை முகம் என்றால் தலைப்பு திலகம் மாதிரி இருக்கவேண்டும் என்று. இப்போதைய பெண்கள் –மதம் பற்றிய கவலை இல்லாமல் பொட்டுவைத்துக் கொள்ளாமலே இருப்பது போல- தலைப்பு இல்லாத கவிதைகள் பெருகி வருகின்றன. அது அவரவர் விருப்பம். பொட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் முகமும் அகமும் நல்லா இருந்தாச்  சரிதானே?

நிறைவாக ஒன்று –
எதையும் நேரிடையாகச் சொல்வதைவிட, படிமமாக, புரியக்கூடிய குறியீடாகத் தருவது கூடுதல் ஆழம்காட்டும். (பழந்தமிழில் இதனை இறைச்சி, தொனி என்று இலக்கணமாக்கி வைத்திருக்கிறார்கள்) கற்பனைதானே கவிஞனின் அடையாளம்?
எ.கா. கவிக்கோ அப்துல் ரகுமானின்
புறத்திணைச் சுயம்வர                
மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்.
கையில் மாலையோடு
குருட்டுத் தமயந்தி
இது நம்நாட்டுத் தேர்தல் பற்றி அவர் எழுதிப் புகழ்பெற்ற கவிதை.
ஒவ்வொரு வரியும் எப்படி ஈட்டிபோலக் கூர்மையாக குத்துகிறது பாருங்கள்.
ஈட்டி எறிதல் (ஜாவ்லிங் த்ரோ) மாதிரி... வெகுதூரம் போகவேண்டும். குறியை விட்டு விலகி ஃபவுல் ஆகிவிடாமல் குத்தி நிற்கவும் வேண்டும். 
அதுதான் நல்ல கவிதை.

சரியா கவிஞரே? நம் நாட்டு வயலுக்கு ரசாயன உரங்களைவிடவும், இலை-தழை மக்கிய குப்பைபோல இயற்கை உரம்தான் நல்லது. புரியுதா? வாழ்த்துகள்.
--------------------------------- 

80 கருத்துகள்:

 1. எந்த ஒன்றும் பயிற்சி பெறும் நிலையில் மெருகேறும் என்பதே உண்மை. அதற்குக் கவிதையும் விலக்கல்ல. கவிதையில் தோய்ந்தவர்களும், கவிதை எழுத ஆரம்பித்தவர்களும் என அனைவரும் படிக்கவேண்டிய பதிவு. எனக்கென்னவோ கவிதையின் பக்கம் நாட்டம் வருவதில்லை. அதற்காக அதனைக் குறை கூறாமல் பிறிதொரு தளத்தில் தடம் பதிக்க முயன்று வருகிறேன். தெளிவான விவாதத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடிப்படையில் ஆர்வம் முக்கியம்தான் அய்யா. ஆர்வம்தான் திறனை வளர்க்கும், அப்போதுதான் பயிறிசி இனிக்கும். அவரவர் துறையில் ஆழ்வதில் உள்ள சுகமே தனி. நன்றி

   நீக்கு
 2. அண்ணா!
  கவிதை எழுதத்தொடங்கும் பலருக்கும் பாலபாடமாகவும், எழுதிக்கொண்டிருப்போர்க்கு ரெபரன்ஸ் புத்தகமாகவும் இருக்கிறது இந்தபதிவு!!! நடுவில் பல இடங்களில் வேடித்துச்சிரித்தேன். அந்த அர்ச்சுனர் மேட்டருக்கும் அப்படி சிரித்துக்கொண்டே தொடர்ந்தால் அந்த ராவடியில்(அதிரடி காமெடி) என்னையும் சேர்த்திருக்கிறீர்கள் :))))) நன்றி அண்ணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னை அறியாமல் எழுதியதுதான் அது!
   அது என்னமோ யாராவது யாரையாவது -புத்திசாலித்தனமாக- கிண்டல்செய்தால் (கலாய்த்தால் என்பதே உன் ஸ்லாங் இல்ல?) உன் நினைவு வந்துவிடுகிறதுப்பா.. வேறொன்னுமில்ல.. நன்றிடா

   நீக்கு
  2. மைதிலியின் மைன்ட் வாய்ஸ் கேட்டது அறிந்து சிரித்தேன்..தோழியின் மைன்ட் வாய்ஸ் எப்பொழுதும் என் மைண்டில் :)

   நீக்கு
 3. தான் உணர்ந்ததையே படிப்பவரும் உணரும்படிச் செய்ய கொஞ்சம் பயிற்சி தேவை. என்ற எனக்கான தங்களின் அடிக்கோடிட்ட வரிகளைத் தாண்டிப் போக முடியவில்லை.
  கவிதை ஒரு தவம் தான் பலரும் அதை முடிக்கும் போது சாபத்தைத்தான் பெற்றுத் தொலைக்கிறார்கள் நானுட்பட..!
  அடுத்த பதிவிற்கு அடித்துக் கொண்டிருந்த போதுதான் தங்களின் பதிவு வெளியிடப்பட்டதறிந்தேன்.
  மீண்டும் வருவேன்.
  நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் அந்த வகையா நண்பா?
   நான் சாபம் பெறுவதற்காகவே தவம் செய்யும் ரகம்!
   “அறிந்தவர் அறிவாராக“-எனும் கண்ணதாசனை ரசிப்பவன். தங்கள் மீள்வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி நண்பா.

   நீக்கு
 4. நல்ல பதிவு பாராட்டுகள் .வளரும் கவிஞர்களுக்கு கவிதை பற்றிய புரிதலை உணடாக்கும் பதிவு.வாழ்த்துகள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுத்தான் முதல் மடைதிறப்பு.
   தொடர்ந்து நீர்பாய்ச்சி..களையெடுத்து, கண்காணித்தல் நல்லவிளைச்சல் நிச்சயம்தானே? நன்றி நண்பரே.

   நீக்கு
 5. கவிதையை சிற்பத்தோடு ஒப்பிட்டு மிக எளிமையாக
  விளக்கி சொல்லிவிட்டீர்கள் அய்யா.உங்களது இந்த பதிவு
  மீண்டும் ஒரு முறை படிக்கத் தூண்டியது.நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரி. உங்கள் கவிதைகளின் உள்ளடக்கம் மிகவும் அருமை. பெண்கள் சரியான பார்வையில் பெண்களைப் பற்றி எழுதுவது மிகவும் குறைவு. அழுகாச்சியாக அல்லது அலட்சியமாக எழுதுவோர் மத்தியில் தேவையான கோபத்துடன் எழுதும் நீங்கள் நிச்சயம் கவனம் பெறுவீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

   நீக்கு
 6. நிறைய படிக்கணும். நிறைய எழுதணும். நிறைய யோசிக்கணும். நிறைய உழைக்கணும். அப்பதான் கவிதைப் பூ ராஜ கம்பீரமாக மலரும். அருமையான பதிவு சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. . உங்கள் கவிதைக ஒன்றைப் படித்துப் பின்னூட்டம் இட்டிருக்கிறேன். தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.
   தொடர்வோம் நன்றி நண்பரே

   நீக்கு
 7. அன்பின் முத்து நிலவன்

  வயல் விளைந்தது
  கடன் அறுத்தது

  கவிதை அருமை - நோக்கம் நிறைவேறிய கவிதை - விளைச்சலில் வந்த பணத்தை விட அவ்விளைச்சலுக்கான செலவினால் ஏற்பட்ட கடன் அதிகம். நான்கு சொற்களீல் எவ்வளவு பெரிய நிகழ்வு - அழகாகக் கூறப்பட்டிருக்கிறது. மிக மிக இரசித்தேன்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 8. இது போல் நிறைய சொல்லித்தாருங்கள் ஐயா.
  நன்றி

  பதிலளிநீக்கு
 9. நல்லதோர் பதிவு ...
  எடுத்துகொண்டால்
  எழுச்சி
  நிச்சயம்

  விளைச்சல் அமோகம்
  அறுத்ததென்னவே
  கடன்

  சரியா இருக்கா

  நல்ல விளைச்சல்
  அறுத்துப் போனதேன்னவோ
  கடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னவோ எதுக்கு? அதையும் அறுத்தால் கவிதை சுருங்கும்.
   “சொல்லுக்குள் வாக்கியத்தைச் சுருக்கிவச்ச கவிப்புலவா” என்று வைரமுத்து கம்பனைச் சொன்னது அதனால்தானே? மீண்டும் சொல்லிப்பாருங்களேன் மது. விளைச்சல் அமோகம் அறுத்தது கடன். நன்றி.

   நீக்கு
 10. வணக்கம் ஐயா
  ஊக்கம் தரும் நல்ல பதிவு
  ஒருசொல் அல்ல, ஓர் எழுத்துக்கூடக் கவிதையில் வீணாக இருக்கக்கூடாது என்னும் தெளிவு பிறந்தது என்னுள் ....

  சொல்லொடு சொல்சேர தேக்கும் அமைதியாய்
  கோர்க்கும் கருவெனும் பேருரு பொய்க்கண்டு
  மெய்க்கொள்ளும் வேராழம் தேறும் நிலைக்கல்
  கடுகும் கவனமீர்க்கும் பழகு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெண்பா முயற்சிக்கு என் வாழ்த்துகள். எதுவுமே முயற்சி செய்யாமல் இருப்பதைவிட முயன்று தவறாகச் செய்தாலும் அது வெற்றியின் முதற்படியே. எனவே என் வாழ்த்துகள். ஆனால், முதலடியில் மோனையில்லை.அடுத்த அடியில் சொற்பிழை, மூன்றாம் அடியில் எழுத்துப் பிழை, மற்றும் மோனைக்குறை, ஈற்றடியில் தளைப்பிழை. சற்றே சரிபார்க்க.

   நீக்கு
  2. நன்றி ஐயா
   இப்படி நான் செய்யும் தவறுகள் என்ன என்று எனக்கு புரியாமலே செல்கிறேன் என்னை திருத்த நல்ல ஒரு வழி சொல்லுங்கள் ... உள்ளிருந்து கொட்டுவதை கோர்த்துவைப்பேன் அது கதம்பமா ஒற்றைச் சரமா என்பது அறியாமலே சென்று விடுகிறேன் வழிகாட்டி துணை வாரும் அய்யா....

   நீக்கு
  3. இவ்வளவு அடக்கம் மிகையாக உள்ளது நண்பா.
   உங்களது தேடல் நிச்சயமாக உங்களுக்கு நல்வழி காட்டும். மரபுக்கவிதை எழுதச் சொல்லித்தருவதற்காகவே பல தளங்கள் இயங்குகின்றன. ஆனால் அவை எலும்புக்கூட்டு ஆய்வுகளே. “அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும் ஆழந்திருக்கும் கவியுளம் காண்கிலார்“ என்னும் பாரதியின் பொருள்தான் உயிர். அதைப் பிடியுங்கள் முதலில். ஆர்வம் ஆற்றலை வளர்க்கும், ஆற்றல் சாதனையில் போய் விடியும்

   நீக்கு
 11. எழுதுவதில் வலிமையான விசயம் கவிதை என்பதே என் கருத்து. மூன்று வரிகளில் மூச்சு வலிக்க சிரிக்க வைக்கவும் முடியும். மூர்ச்சையடையந்து போகும் அளவிற்கு யோசிக்க வைக்கவும் முடியும். நான் பலரிடமும் சொல்லியுள்ளேன். எழுதிய கவிதைகளை பல முறை வாசித்து யோசித்து திருத்தி பிறகு வெளியிடுங்க என்று. ஆனால் பலருக்கும் ஆர்வக்கோளாறு காரணமாக அதைச் செய்வதே இல்லை. அதன் ஆயுளும் குறைவாக அமைந்து விடுகின்றது.

  சிறப்பான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயிற்சி எனும் பாசத்தாயும், முயற்சி எனும் தந்தை ஊக்கமும் அமைந்தால் கவிக்குழந்தை கொழுகொழுவென வளரும். பலரும் நோஞ்சானாய்த் திரிய இந்த ஊக்கமாத்திரைக் குறையே. காரணம்.

   நீக்கு
 12. சமீப பதிவுகள் என் போன்ற கவிதை கற்போருக்கு பாடம் சொல்லும் பதிவுகளை அமைந்ததில் மகிழ்ச்சி ஐயா! வளரும் கவிதைகள் என்ற வலைப்பூ தலைப்பு மிகப் பொருத்தமாகிவிட்டது


  '//நெடுநெல் வயல்களில்
  செந்நெல் விளைந்தது
  அறுவடைக்கு காத்திருந்தார்
  கடன்காரர்.//
  இது என்னோட version

  வயல் விளைந்தது என்று சொன்னால் போதுமானது என்றாலும் நெடு நெல்லும் செந்நெல்லும் கூடுதல் அழகு சேர்க்கிறது. இந்த வார்த்தைகள் அதிகமான விளைச்சல் ஏற்பட்டுள்ளது என்பதை உணரவைக்கக் கூடியதாய் எனக்கு தோன்றுகிறது. ஆனாலும் அதை விட செலவு அதிகம் என்பதால் கடன் காரருக்கு பலன் சென்று விடுகிறது.
  "அறுவடைக்கு ஆர்வத்துடன்
  காத்திருந்தார் கடன்காரர்"

  என்று அமைத்தால் இன்னும் கூட பொருள் விரியும்

  அதாவது கடன் கொடுத்தவரும் இவரைப் போல ஒரு விவசாயி. உதவிக்காக கொடுத்த கடனை திரும்ப வாங்க முடியவில்லை இந்த முறை விளைச்சல் அதிகமாக இருப்பதால் கொடுத்த கடன் திரும்பக் கிடைத்து விடும் என்று ஆர்வத்தோடு காத்திருப்பதாகக் கொள்ளலாம். இதன் மூலம் இருவரின் துயரங்களை பங்கு போடுவதாக கவிதை அமையும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம் நாட்டு நிலை அப்படியில்லையே அய்யா. இதுவரை கடந்த 10ஆண்டுகளில் மட்டும இரண்டுலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்கிறது நம் பாராளுமன்ற நிலைக்குறிப்பு. உங்கள் நல்ல உள்ளம் இப்படி நினைப்பது நன்றாகவே இருந்தாலும் “கடன்“ என்னும் சொல்லால் கழுத்தறுபட்டவர்களின் கதையே பெரும்பான்மை. எனவே... மன்னியுங்கள்... “விவசாயி கரும்பு போட்டான் விற்கல, நெல் போட்டான் விற்கல...காய்கறி போட்டான் விற்கல கடைசியில் பிளாட் போட்டான் உடனே விற்றது“ என்னும் வயிற்றெரிச்சல் கவிதையைப் படித்ததில்லை?

   நீக்கு
  2. “நெடுநெல் வயல்களில்
   செந்நெல் விளைந்தது..“
   இது போல் எழுதுவது சங்க மரபு.
   அங்கு இதுபோன்ற அடைகள் அர்த்தமற்று நிற்பதில்லை.
   இங்கு கூட எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.

   நெடுமை இங்கு நீண்டு கிடக்கும் அவனது வறுமை, தக்க ஊதியமற்றுத் தொடரும் உழைப்பு, உலகோர்க்கு ஊட்டிப் பசிகொண்ட வயிறு இதுபோல் பல பொருளுக்குக் குறியீடாகலாம்.
   செந்நெல்,
   அவர் இரத்தம் சொரிந்து விளைத்தெடுத்த அறுவடையின் குறியீடு!
   உழைத்தவனுக்குப் பலன்கொடாமல், யாருக்கோ பயன்தரப் பிறந்தோமே என்று செய்ந்நன்றி காட்டும் வழியற்றுச் சிவந்த நெல் புறங்காட்டும் தற்குறிப்பேற்றம் சிவப்பின் குறியீடு...
   பல நேரங்களில் இது போன்ற அடைகள் தரும் பாடம் கவிதையைவிடச் சுவையூட்டிப் போன அனுபவம் எனக்குண்டு.
   நன்றி திரு முரளிதரன் அவர்களே!
   ......“பிளாட் போட்டான் வித்திடுச்சு“..... “ விழுமியது பயத்து“ நின்றுவிட்டது கவிதை.
   நன்றி அய்யா!!!!

   நீக்கு
  3. நெடுநல் வாடையின் வாடை அடிக்கிறதே! சரிதான். ஒரு கவிதையின் ஒருசில வரிகளை ஒரேமாதிரித்தான் ரசிக்க வேண்டும் என்றில்லையே கவிதையின் வானவில்போலும் வண்ணமயமே அதுதானே? முரளி, விஜூ உங்கள் ரசனையில் “நூறுபபூக்கள் மலர” நான் தடையாக மாட்டேன்.

   நீக்கு
 13. ஒன்று புரிந்தது .
  நல்லா இருக்குன்னு சொன்னா உடனே நம்பிடக் கூடாது . ஹிஹிஹி

  ஒரு கவிதையோ கதையோ கட்டுரையோ அவரிடம் நன்றாக இருக்கிறது சொல்வதை விட வேறு ஒருவரிடம் அந்தக் கவிதை நன்றாக இருந்தது என்று சொன்னால்தான் உண்மையில் நன்றாக இருந்தது என்று அர்த்தம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன்றும் இல்லாததை நான் எதுவுமே சொல்வதில்லை. அதில் ஒன்று நன்று என்று தெரிந்தால் உடனே அதைக் குறிப்பிட்டுச் சொல்லி மேலும் எழுதத் தூண்டுவதை வாடிக்கையாகவே கொண்டிருக்கிறேன். அவர்கள் அதன் பின் முன்னேறியதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். என்ன குறைந்துவிட்டோம்? “பொய்மையும் வாய்மை இடத்த,..“ -நம் தாத்தன் வள்ளுவனின் பேரப்பிள்ளைகள் தப்பாவா சொல்லப் போறோம்? சரிதானே?

   நீக்கு
 14. பதில்கள்
  1. “ஒன்றுக்கும் பயன்படாத“ என்பது பொருள். ஏனய்யா இந்த சநதேகம்? (நம்மல வச்சி காமெடி கீமெடி பண்ண நாம ஒன்னும் சூப்பர் ஸடார் இல்லன்னாலும் ...)

   நீக்கு
 15. வணக்கம் ஐயா மீண்டும், மீண்டும் படித்தேன் காரணம் புரியாமல் அல்ல ! எழுத்தின் ஈர்ப்பு சக்தியின் மிகுதியால் எனோதானோ வென்று எழுதும் எனக்கும் ? கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது தங்களது எழுத்தின் ஆளுமை அதற்கோர் நன்றி வைரங்கள் பூமியில் கற்களைப் போல்தான் இருக்கும் அதை தங்களைப்போன்ற சிற்பிகள் பட்டை தீட்டும் பொழுதே அது வைரமாக ஜொலிக்கும் அந்தச்சிற்பியான தங்களுக்கு இந்தக் (கில்லர்ஜி) கருங்கல்லின் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்லுக்குள் -கவிதை-ஈரம் உண்டு என்பதை அழகழகான உவமை சொல்லி அசத்துகிறீர்கள் கில்லரே! உங்களுக்குள் கவிதை இலலை என்று யார் சொன்னது? கல், வைரம் என்பதைப் புகழ்ச்சி என்று நினைக்காமல் அழகான உவமையாகவே நான் பார்த்தேன். உங்களுக்குள் ஒளிந்துள்ள கவிஞனை அன்புகூர்ந்து அடையாளம் காட்டுங்கள் நண்பா.

   நீக்கு
 16. மிக அருமையாக கவிதை எழுத சொல்லிக் கொடுக்கிறீர்கள்! நிறைய எழுத நிறைய வாசிப்பு வேண்டும் என்றும் நல்ல பயிற்சியும் செதுக்கி அழகுபடுத்தலும் அவசியம் என்று புரிந்து கொண்டேன்! நன்றி! என்னுடைய இன்றைய பதிவில் இந்த தள இணைப்பை தருகிறேன் உங்கள் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதற்கு எதற்கு அனுமதி நண்பரே? பெயர்போட்டு எழுதும் எதற்கும் அனுமதி தேவையில்லை. தகவல் சொல்வது போதும்.
   நான்தான் உங்களுக்கு நன்றி கூறவேண்டும். நன்றி நண்பரே.

   நீக்கு
 17. கவிதை எழுதுவதை இப்படிவும் எளிமையாக கூற இயலுமா என்று எண்ணி வியந்தேன் ஐயா
  மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது தங்களின் பதிவு
  இதோ மீண்டும் படிக்கப் போகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏற்கெனவே தேடித் தேடிப் படிக்கக் கூடியவர் தாங்கள். நீங்களே மீண்டும் படித்தால்... ஏதோ வேதியியல் மாற்றம் நடக்கிறது என்று பொருள். சிறந்த கட்டுரையாளரான தாங்கள் (அழகாகவும் மேலும் நிதானமாகவும் கம்பீரமாகத் தாங்கள் உரையாற்றியது மதுரையில் நிலைநிற்பது எங்கள் நெஞ்சில்) இப்போது, கவிஞராகவும் மாறிக்கொண்டிருக்கிறீர்கள் போல.. எழுதுங்கள் அய்யா.. நல்லன சேரச்சேர அல்லன தொலையும்.

   நீக்கு
 18. பதில்கள்
  1. மிக்க நன்றி அய்யா. (அமைத்துக் கொடுத்த முரளிக்கும். ஆமாம் தமிழ்வெளிக்கு என்னாயிற்று? நான் தவறான தள அறிமுகம் வேண்டாம் எ்ன்றேன். ஏதும் அறம்பாடவில்லையே?)

   நீக்கு
 19. வணக்கம் ஐயா!

  கவிதைச் செதுக்கல் கவர்ந்தது ஐயா!
  குவித்தேன் மனதோடென் கை!

  மிக மிக அருமை ஐயா!
  கவிதைச் செதுக்கல் நுட்பம் அறிந்தேன்.
  கவனத்திற் கொள்கிறேன் நானும்!..
  இதுபோல பயன் தரும் விடயங்கள் இன்னும் தாருங்கள்!
  பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

  த ம.7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் ஏராளம் இருக்கிறது சகோதரீ!
   அதனால்தான் வளரும் கவிதை! (கவிதையையே எப்பொழுதும் பேச முடியாதில்ல..? அதுதான், கவிதையின் பாடுபொருளாம் நம் சமூகத்தையே எடுத்துக்கொண்டு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வந்து மீண்டும் கவிதை மேலும் கவிதை பிறகு கவிதை...நன்றி

   நீக்கு
 20. ஆர்வம் மிகுந்திடவே தாங்கவில்லை செந்தமிழை
  கற்றிடவே ஏங்கும் இதயம் !எண்ணத்தில்
  சோர்வுதனை நீக்கியே பாக்கள் பருகிட
  ஊற்றுவார் மகிழ்வுடன் விஜ்ஜூ

  நிலவன் அண்ணா நீங்களும் சகோதரர் விஜ்ஜு அவர்களின் கருணையினாலும் கற்றுத் தெளிய பேரவா கொண்டேன் எப்படி நன்றி சொல்வேனோ நானறியேன். இது என் சிறு முயற்சியே இதனுள் தங்களையும் அடக்க முயற்சி செய்து தோற்று விட்டேன். ஏதோ என்னால் முடிந்தது . பிழைகளை சுட்டிக் காட்டவும் . தங்களின் பதிவு மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது அழகிய முறையில் எளிமையான விளக்கங்கள் எமை கவரும் வகையில் மிக்க நன்றி அண்ணா நான் செய்த தவமே தங்கள் அனைவரதும் நட்பும் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதுகை மோனை, தளைப்பிழையின்றி எழுதுவது பற்றிய செய்திகளை எளிதாக நண்பர் விஜூ எழுத, கவிதையின் ஆன்மா பற்றிய அனுபவங்களை நான் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்கிறேன் சகோதரி. அது சொல்லி மாளாது, முழுதாய்ச் சொல்லவும் இயலாது. “ரோஜாவின் அழகை எனக்கு வர்ணிக்கத் தெரியாது ஒரு வயலின் கொடுங்கள் வாசித்துக் காட்டுகிறேன்“ என்றானாம் ஓர் இசைக்கலைஞன். அவரவர் “மொழி“யோடு ஒன்ற வேண்டும். குழந்தை மொழி தனி. கவிதைமொழி தனீ. பெண்உடல் மொழி, தலித் மொழி.. இன்னும் ஏராளம் கற்றது கடுகளவு, சொன்னது அணுவளவு. கல்லா்தது... கடலளவு! கற்க நிற்க. நன்றிம்மா.

   நீக்கு
 21. \\\உயிர்வாழ உபசரிக்கும் இலக்கியக்காதல்!///

  இந்த ஒரு வரியிலேயே கவிதை ஒளிந்திருக்கிறது.

  நான் கவிதைகளை செதுக்குவதில்லை. இனியாவது செய்ய வேண்டும். இளநீர் வெட்டும் லாவகம் - மிகச் சிறந்த உதாரணம்.
  பயனுள்ள பதிவு. குறிப்பாய் என்னைப் போன்றோருக்கு . மிக்க நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் “குடிகாரனும் அவன் பொண்ஜாதியும்“ வெண்பா உங்கள் புலமையின் அடையாளம். (அதன் பின்னூட்டம் பார்த்தீர்களா?)
   கற்கவேண்டும் என்னும் உணர்வு உள்ளவரைதான் கவிஞன் காய்ந்துபோகாமல் ஈரம் வற்றாமல் இருப்பான், நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அறிவிக்கும் பின்னூட்டம்தான் இது. சிவகுமாரன் உங்கள் மின்னஞ்சல் வேண்டும். 94431 93293 அனுப்புக, அல்லது muthunilavanpdk@gmail.com வருக.

   நீக்கு
 22. அண்ணா என்னைப் போன்ற அவசரக் குடுக்கைகளுக்கு தகுந்த தெளிவான உரை. ஆமாம் அண்ணா நினைப்பதை எழுதிவிட்டு அப்படியே பதிவேற்றும் என்போன்றவர்களுக்கு நல்ல அறிவுரை. கவிதை சிற்பியாக இருக்க வேண்டும் கவிஞன் என்பதை நன்றாக
  புரியும் படி விளக்கிய விதம் சிறப்புங்க அண்ணா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேண்டுமென்றே யாராவது விளங்காமல் எழுதுவார்களா? அல்லது தெளிவின்றி எழுதவேண்டும் என்றா எழுதுவர்? அனுபவம் பகிரப்பகிர கலையும் இலக்கியமும் கூடுவிட்டுக் கூடுபாயும். உன் கவிதை ஏற்கெனவே நல்லாத்தான் இருக்கு, சொற்களைச் சிக்கனப் படுத்தினால் சிக்குனு நிலைக்கும்.

   நீக்கு
 23. சரியா கவிஞரே? நம் நாட்டு வயலுக்கு ரசாயன உரங்களைவிடவும், இலை-தழை மக்கிய குப்பைபோல இயற்கை உரம்தான் நல்லது. புரியுதா? வாழ்த்துகள்.

  பதிவை முடித்த விதம் மிகவும் அருமை! அதாவது, இளநீர் வெட்டும் லாவகம் போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா தங்களின் கவிதைகளின் ஓசை நயம், சொல்லழகில் பலநாள் சொக்கி நின்றிருக்கிறேன். எனது நடையைத் தாங்கள் எடையிட்டு வாழ்த்தியது விருதுபோலக் கருதி மகிழ்கிறேன். நன்றி

   நீக்கு


 24. “கவிஞனுக்கு முதலில் தன்மீது நம்பிக்கை இருக்கணும். பத்திரிகைக்கு அனுப்பினால் பிரசுரமாகும்னு முதலில் தன்னை நம்பணும். பிறகு எந்தக் கவிதையை எங்கே அனுப்பலாம் எனும் தெளிவும் படைப்பாளிக்கு அவசியம்” என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

  தமிழகத்தின் முன்னைய எழுத்தாளர் க.நா.சு. அவர்கள் தனது நூலொன்றில் "பத்திரிகைக்கு அனுப்ப அனுப்பப் பிரசுரமாகாவிட்டாலும் பத்திரிகைக்கு அனுப்பினால் ஒரு நாள் பிரசுரமாகும்." என்று எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. அதாவது, நாம் எழுத எழுத வைரத்திற்குப் பட்டை தீட்டியது போலப் பயிற்சி கிட்டுகிறது. முடிவாக எமது கவிதை எழுத எழுத தரம் கூடிப் பத்திரிகையும் பிரசுரிக்கும்.

  அப்படியென்றால்,
  முதலில நம்மாளுகள்
  கவிதை எழுதுவதை விரும்ப வேண்டும்.
  விரும்பிய ஒன்றை அடையாமல் இருக்க
  நமது உள்ளம் இடமளிக்காதே - அப்ப
  கவிதை எழுதுவதைத் தொடங்க வேண்டும்.
  கவிதை எழுத எழுதப் பயிற்சி கிட்டவே
  சிறந்த கவிதைகளை ஆக்கலாம் வாரீர்!

  பதிலளிநீக்கு
 25. இரசித்தேன்

  சோம்பல் , அவசரம் இவையே கவிதையை
  குறை மாதக்குழந்தையாக பிறக்க வைக்கின்றன .

  இவ்விடுகையை என்னை
  இன்னும் செப்பனிடவும்,செதுக்கவும் உதவும் .

  வாழ்த்துகள்

  நன்றிகள்

  தமிழுடன்
  திகழ்

  பதிலளிநீக்கு
 26. அய்யா,
  வணக்கம். தங்களின் அனுபவம் ஆயிரம் புத்தகங்களைப் படிப்பதற்குச் சமமானது.
  சில நேரங்களில் ஆயிரம் புத்தகங்களைப் படித்தால் கூட இதல் செறிந்துள்ள கருத்துகளைப் பெறமுடியாமல் போகலாம். இது என் அனுபவத்தில் நான் கண்டது.
  வடமொழி மரபின் வியாகரணத்தில் ஒரு எழுத்தைக் குறைக்க முடிந்தால் அதைப் படைப்பவன் ஒரு ஆண்குழந்தையைப் (?) பெற்ற மகிழ்ச்சியை அடைவானாம்.
  எதற்காகச் சொல்ல வருகிறேன் என்றால் தேவைக்கு அதிகமாக ஒரு சொல் அன்று ,ஓர் எழுத்துபோலும் கவிதைக்கும் தேவையில்லை என்பதற்காகவே!
  மரபின் கட்டுமானத்திற்கு வெறுமனே நிற்கின்ற அசைநிலைகள்,
  இடநிரப்பிகளாய் அழகைக் கெடுத்து நின்று , “இங்கு உனக்கென்ன வேலை?“ என்று படிப்பவன் கேட்கும் போது பல்லிளித்துத் தலையைச் சொறிகின்ற சொற்கள்... இவற்றைக் கொண்டலைய வேண்டிய அவசியம்
  புதுக்கவிதைகளில் இல்லை என்பது மிகப்பெரிய வசதி
  எனவே இதைப் பெற்றிருக்கும் புதுக்கவிதை எழுதுகிறவர்கள் இன்னும் கவனமாய் இருக்க வேண்டும்.
  சொற்களைக்குறைத்தல் , சொற்களை முன்பின்னாக மாற்றுதல்,
  சொற்களை மடக்குதல் எல்லாவற்றிலும் கவிதையைப் படைப்பவனுக்கு மிகுந்த கவனம் இருக்க வேண்டும்.
  ஏனோதானோ என்று எழுதிப் போதல்.
  எழுதியதை மற்றவர் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்த்தல்,
  குறைகண்ட இடத்துச் சினங்கொள்ளுதல்,
  இவையெல்லாம் கவிதை எழுதுபவரிடத்தில் இருக்கக் கூடாத குணங்கள்!
  பாராட்டுவது எளிது. அது அடுத்தவருடைய மனதைக் கஷ்டப்படுத்தாமல் போவது. அதே நேரம் அர்த்தமற்ற இதுபோன்ற புகழுரைகளால் ஒருவரது வளர்ச்சியை எளிதாகத் தடுத்து நிறுத்திவிடலாம்.
  ஒரு படைப்பினைப் பொதுவெளியில் வைப்பவன், அது தனக்குரியது இல்லை என்பதில் தீர்மானமாய் இருக்க வேண்டும்.
  ஏனெனில் பொதுவில் வைத்தபின் அது வாசிப்பனுக்கு உரியது.
  “பெரிய யானையைச் செதுக்கியிருக்கிறேன் பார்த்தாயா “ என்று சொல்லுபவன் வீட்டில் வைத்து வேண்டுமானால் பெருமை பட்டுக்கொள்ளலாம்.
  தெருவில் இறக்கிவிட்டால் ஏம்பா இந்தப பன்னி உன்னோடதா?
  “இதத்தான் இவ்வளவு நாளா யானைய வளக்குறேன் யானைய வளக்குறேன்னு சொல்லிகிட்டுத் திரிஞ்சியா“ என்றால் அப்படிச் சொல்லும் வாக்கை முதலில் கேட்கப் பக்குவப்படவேண்டும்.
  ஒரு வேளை நாம் பன்றியை யானை என நம்பிக்கொண்டிருக்கலாம்.
  அல்லது சொல்பவனுக்குப் பார்வை கோளாரிருக்கலாம்.
  சொல்வதைக் கேட்கும் பக்குவம் படைப்பாளிக்குரிய முதல்தகுதி.
  அவன் அப்படிச் சொல்லுவதற்குரிய காரண காரியங்களை திறந்த நடுநிலையான மனதுடன் படைப்பாளி ஆராய வேண்டும்.
  ஆராய்ச்சியின் முடிவில் நாம் பன்றியை யானை என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடும்.
  தெரிந்து தெளிந்தோமானால் அது ஞானம்.
  அதைத் துரத்திவிட்டு யானையைத் தேடவேண்டும்.
  யானையாக இருந்தால் சொல்லுபரின் பார்வைக் கோளாறுக்காப் பரிதாப்பட்டுப் போய்விடவேண்டும்.
  நாம் மறக்கக் கூடாதது வெற்றுப் புகழுரைகள், பாராட்டுகள் எல்லாம் பன்றியை யானையாக்கி விடுவதில்லை.
  முக்கியமாக நான் சொல்லவேண்டியது,
  இணையத்தில் இதைச் சொல்லுவதற்கு “ நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் வேண்டும்“
  நானுட்பட மிகப்பலரும் ஒன்றுமில்லாததை ஒன்றுமில்லை என்று சொல்ல அஞ்சுகிறோம். பிறருடைய மனம் வருந்துமே என்று நினைக்கிறோம். அல்லது அப்படைப்பை சரியாக மதிப்பிடும் திறனற்றிருக்கிறோம்.
  அப்படிச் சொல்பவர்களின் தைரியத்தை மதிநுட்பத்தை, நியாவாதத்தைத் திரைமரைவில் இருந்து கைத்தட்டிப் போகிறவர்களாகவே நானிருக்கிறேன்.
  இது கோழைத்தனம் என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கில்லை.
  நெருங்கிய ஒரு சிலரிடம் நான் வெளிப்படையாக இருக்கிறேன்.
  அது அவர்கள் வளர்ச்சிக்கு உதவும் என நினைக்கிறேன்.
  தவரிக்க முடியாத மிகப் பலரிடத்தும் பாராட்டி உள்ளுக்குள் வருந்திப் போகிறேன்.
  சில படைப்புகளுக்குக் கருத்திடாமல் நழுவி விடுகிறேன்.
  ஆரம்பத்தில் கவிதைப் பதிவர் ஒருவரிடம் கருத்துரைக்கப்போய் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்ட அனுபவம் எனக்கிருக்கிருக்கிறது.
  அவரது யானையைப் பன்றி என்றது என் பார்வைக் கோளாறு.
  அப்புறம்தான் சுதாரித்துக்கொண்டேன்.
  அய்யா,
  மீண்டும் இலக்கணத்துள் நுழைவதற்கு என்னை மன்னிக்க வேண்டும்.
  கவிதைக்கு இந்த இலக்கணம் பொருத்தமாக இருக்குமா பாருங்கள்..!

  சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்,
  நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
  ஓசையுடைமை ஆழமுடைத்தாதல்
  முறையின் வைப்பே உலக மலையாமை
  விழுமியது பயத்தல் விளங்கு தாரணத்(து)
  ஆகுதல் கவிதைக்(கு) அழகெனும் பத்தே.

  சரி எனில் அது கவிதை!!!!!

  அம்புட்டுதான்

  உங்கள் பாணியைச் சிக்கெனப்பிடித்ததன் விளைவு இது!
  இலக்கணக்காரர்கள் மன்னிக்கட்டும்!
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா மரபின் நல்லது கெட்டது, புதுக்கவிதையின் நல்லது கெட்டது பற்றி எனது நூலில் கொஞ்சம் எழுதியிருக்கிறேன். இன்னும் எழுதத்தான் வேண்டும். இணைந்தே எழுதுவோம். நன்னூல் சொன்ன நூல் அழகு பத்தையும் கவிதைக்கு என்று மாற்றிவிட்டீர்கள்... அது எனக்கு ஒப்பவில்லை. நன்னூல் ஆசியர் இலக்கணத்தையே நான் ஏற்பதில்லை. மாணவரை அடிமைப்படுத்தி வைக்கச் சொல்லித்தரும் இலக்கணம் அது.

   நீக்கு
  2. அய்யா,
   நன்னூலுக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கேனும் முன் தோன்றிய விருத்தியிலேயே இந்த அழகு இருக்கிறது அய்யா!
   நன்னூலின் நூற்பாக்கள் பலவும் இது போல முன்னோர் மொழி பொருளைப் பொன்னே போல் போற்றி மொழிந்ததுதான்!!!
   நன்றி.

   நீக்கு
  3. தங்களின் பரந்த தமிழறிவு வியக்க வைக்கிறது விஜூ

   நீக்கு
  4. நல்லது நண்பா. உங்களின் இலக்கணத் தேடல் என்னை அண்ணாந்து பார்க்க வைக்கிறது (அப்படிப் பலநேரம் பார்த்துப் பார்த்தே கழுத்தையும் வலிக்கிறது) யாப்பருங்கல விருத்தியில் நீங்கள் தொடுத்தது போல “கவிதை அழகு“ என்றா இருந்தது?

   நீக்கு
  5. “பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுத்துண்டம் நமக்கு“ என்பார்களாம். இதற்கு அடாப்டேஷன் என்று சமாதானம்வேறு. எங்கு போனாலும், யார் சொன்னாலும் நம் கருத்தை -தவறு என்று தெரிந்தாலன்றி- மாற்றிக் கொள்ளாத உறுதி, தவறு உணர்ந்தால் திருத்திக்கொள்ளும் உண்மை இருந்தால் யானை பன்றி இரண்டும் ஒன்றே. பாரதியின் “பன்றி முனி“ கவிதைக் கதை நினைவிருக்கிறதா? இப்போதெல்லாம் பாராட்டு, திட்டு இவற்றின் உள்நோக்கம் புரிந்துவிடுகிறது. அன்பும் வம்பும் தெரிந்துவிடுவதால் அது பற்றிப் பெரிதாக ஒன்றும் பாதிப்பில்லை நண்பா.

   நீக்கு
  6. அய்யா,
   மன்னிக்க வேண்டும்.
   விருத்தியில் நலல நூலுக்குரிய மாண்புகள் என்றுதான் இந்நூற்பா காட்டப்படுகிறது.

   நீங்கள், “ கவிதைக் கரையில கற்பவர் நாள்சில“
   என்றதைப் பொல நானும் முயன்று பார்த்தேன்.
   அதனால் தான்,
   ““உங்கள் பாணியைச் சிக்கெனப்பிடித்ததன் விளைவு இது!
   இலக்கணக்காரர்கள் மன்னிக்கட்டும்!““
   என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
   நூல் என்பதைக் கவிதை என மாற்றியது என் கைங்கரியமே!
   தவறெனில் பொறுக்க!

   நீக்கு
  7. நான் தங்கை மைதிலியிடம் சிலவற்றைக் கற்றுக்கொண்டேன். (அதற்காக அவரது தமிங்லீஷ் நமக்கு வராதுதான்) என் மாணவர்களிடம் அவர்கள் “பாஷை“யில் பேசுவதுதான் அவர்களுக்குப் பிடிக்கும் என்னும் உளவியல்தான் இது. (இலக்கணக் காரர்கள் மன்னிக்காமலே போகட்டும் நமக்கென்ன வந்தது. நாம் சொல்வது எலும்புக் கூடு ஆராய்ச்சி அல்ல், கவிதையின் உயிர் தொடர்பானது. என்பதால் மட்டுமல்ல “வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்“ முதலில் வழக்கை வைத்த பனம்பாரனாரே நமக்கு வழியமைத்துக் கொடுத்துவிட்டார் அது போதாதா நமக்கு?
   இறங்குங்கள் நம் பாதையை நாமே தீர்மானிப்போம்.

   நீக்கு
 27. கட்டுரை ஒரு கவிதைப் பயிற்சிக் களம் போலத்தான் இருந்ததென்றால் மிகையாகாது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. களம் எனில் விளைச்சலுக்குப் பிறகுதான் பலன் புரியவரும். பார்க்கலாம் நன்றி சகோதரி.

   நீக்கு
 28. நன்றாகவே செதுக்கி இருக்கிறீர்கள், தற்காலக் கவிஞர்களுக்கான கவிதை யுத்தியை.
  த.ம.10

  பதிலளிநீக்கு
 29. கவிதை செதுக்கக்
  கற்பிக்கும்
  பாடம் அருமை

  பா செதுக்கும் பாடம்
  அருமை

  கற்றுக்கொண்டேன் அண்ணா, நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி, கண்ணதாசன் கவிதைகள் (பாடல்கள் அல்ல-அது வேறுவகை) இணையத்தில் கிடைக்கும் பதிவிறக்கம் செய்து படிக்கப்படிக்க பாவடிவங்கள் பலவும் தானே மனத்தில் படியும்.. படித்துக்கொண்டே தோன்றுவதை எழுதலாம். புதுக்கவிதையும் புதுப்பொலிவு பெறும. பயிற்சிக்கவிதைகளை அவ்வப்போது வலையேற்றலாம்பா. உனக்கு மிகவும் உதவும்.

   நீக்கு
 30. கவிதை எழுத முனையும் தொடக்கநிலையாளர்களுக்கும், என்போல் கவிதை என்கிற பெயரில் தமிழ்க்கொலை புரிவோருக்கும் மண்டையில் நிலைத்து நிற்கும்படி சொன்னவிதம் சிறப்புங்க அய்யா ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “கரைசேரா அலை“ எனும் உங்கள் வலைப்பக்கத் தலைப்பே கவித்துவமாகத் தான் இருக்கிறது நண்பரே! உங்களின் அந்த “ஏமாற்றம்“ கவிதை வித்தியாசமான களத்தோடு என்னை வியப்படைய வைத்தது. தொடர்ந்து எழுதுங்கள் நண்பா!

   நீக்கு
 31. எழுதும்வரைதான் கவிஞன், எழுதிமுடித்து வெளியிடும்போது கவிஞனே தன்னை ஒரு இதழின் ஆசிரியராக நினைத்துக் கொள்ள வேண்டும். பக்க அளவு, அந்தக் கவிதையின் உருவ-உள்ளடக்க அழகு சரிதானா, என்பதைச் சிந்தித்து பட்டுக்கத்திரிச்சது போல –தேவையெனில்- மீண்டும் திருத்த்த் தயங்கக் கூடாது. பயிற்சி இது“

  சரியான புரிதல்.

  பதிலளிநீக்கு
 32. கவிதையைச் செதுக்குவது எப்படி? – “மின்சாரக்கவி“யின் சில கவிதைகளை முன்வைத்து...= ஒருசொல் அல்ல, ஓர் எழுத்துக்கூடக் கவிதையில் வீணாக இருக்கக்கூடாது.ஒரு சொல்லை எடுத்தால் ஒன்று அர்த்தம் போகும் அல்லது இலக்கணம் போகும் அல்லது அழகு போகும் என்று ஆகப் பொருத்தமான (APT WORD) சொல்லாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். = Muthu Nilavan = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Muthu Nilavan

  பதிலளிநீக்கு
 33. அருமையான பதிவைத் தொடரும் அருமையான பின்னூட்டங்கள். அருமையான விவாதங்கள், பதில்கள். மிக்க மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 34. கவிதையின் வரலாறு http://chandroosblog.blogspot.ae/2010/10/blog-post_25.html

  பதிலளிநீக்கு