பட்டுக்கோட்டைக்கு ஒரு எளிய கவிதைப் பொன்னாடை!

பட்டுக்கோட்டைக்கு 
ஒரு எளிய 
கவிதைப் பொன்னாடை!
எழுதியவர் 
கவிஞர் தங்கம் மூர்த்தி
அதுவரை
திரைப்படப் பாடல்கள் அணிந்திருந்த
ஆடம்பர ஆபரணங்களை அகற்றினான்.
பகட்டில்லாத
பருத்திப் புடவையை
அணிவித்து அழகுபார்த்தான்

திரையுலகில் எல்லோரும்
அவரவர் உயர்வை நினைத்தே 
எழுதியபோது
இவன்மட்டுமே
வியர்வை நனைத்து எழுதினான்.


பிச்சைப் பாத்திரங்களோடு 
திரிந்தவர் மத்தியில்
அட்சயப் பாத்திரங்களோடு 
அலைந்தவன் இவன்.

நிர்வாணத்தை விற்பனை செய்யும்
கனவுச் சந்தையில்,
நிலவுக்கும் ஆடைகட்டிப்
நாகரிகம் காத்தவன்.

குளிர்சாதன அறைகளில்
கும்மாளமடித்து சிந்திக்காமல்,
வறுமையின் பாடல்களை
வறுமையிலிருந்தே பிரசவித்தான்.

உலகத் தத்துவங்களை, தன்
உழவுப்பாடல்களிலேயே உரைத்தான்.

 கனவுக் காட்சிகளில்
 புகைதிரியும் பூமியின் மேலே
     புழுதிக் கால்களோடு
     புறப்பட்டுப் போனான்.

     நெல்மணியிலிருந்தே
     சொல்மணிகளைக் கண்டெடுத்து,
     அறிவு அறுவடை நிகழ்த்தினான்.

அவன் வாழ்க்கையின்
எந்தப்பக்கத்திலும்
இன்பம் என்ற சொல் வந்ததில்லை.
வறுமையின் வளர்ப்புப் பிள்ளையாய்
வாழ்ந்த அவனை
தமிழ், தன் சொத்தாக்கிக் கொண்டது.

பட்டுவேட்டிகள் பளபளக்கும்
வெள்ளித்திரை வாசல்களில்
அவன்மட்டும்
காலுக்குச் செருப்புமின்றி,
கைத்தறி வேட்டியோடு,
பொதுவுடமைக் கொள்கையைப்
புரியும்படிப் பாடினான்.

வார்த்தைகளில் பூசியிருந்த
அரிதாரங்களைக் கலைத்தான்.
சேறும் சகதியும் பூசிய
செம்மண் வரிகளுக்காக உழைத்தான்.

மெல்லிசைக் கருவிகளின்
மென்சிறகுகளில்
அவன்பாடல்கள் பயணம் செய்தன.
அதனால்தான்-
அரைநூற்றாண்டுக்குப் பிறகும்
வலிக்காமல் ஒலிக்கின்றன.

தெய்வத்தையே முதலீடாக்கி
தொழில்செய்யும் மூடர்க்கெல்லாம்,
செய்யும் தொழிலே தெய்வமென்று
புரியவைத்தான்.

அவனுக்கு, தாராளமனசு!
மரணத்துக்குப் பிறகு
ஆறடி போதுமென்று
அனைவரும் சொன்னபோது,
அவன் மட்டும்தான்
எட்டடி போட்டுவைத்தான்.

வீட்டுவரி கட்டமுடியாமல்
அவன் குடும்பம் தவித்தது.
அவன் பாட்டுவரியைப் பயன்படுத்தியே
பலகுடும்பம் பிழைக்கிறது.

அவன் பள்ளிக்கூடம் போனதில்லை,
அவன் பாட்டுப்போகாத
பள்ளிக்கூடமே இன்றில்லை!

காதலில் திளைத்து,
கரைந்து போகவேண்டிய வயதில்,
காரல்மார்க்சில் விழுந்து
கம்பீரமாய் எழுந்தான்.

ஆர்லிக்சும் பூஸ்டும் போன்விட்டாவும்
பரிமாறப்பட்ட வேளையில்
அவன்மட்டும்தான்
கஞ்சிக்கலயம் சுமந்து சென்றான்.

தங்கம் மூர்த்தி
காலங்கள் கடந்தும்
அவன்பாடல் நடக்கும்,
அந்தக் கருத்துகள்      
எந்நாளும்
மனசுக்குள் கிடக்கும்.
எழுதியவர் - 
கவிஞர் தங்கம் மூர்த்தி
இடம்பெற்ற தொகுப்பு -“கவிதையில் நனைந்த காற்று“
------------------------

14-04, பட்டுக்கோட்டையார் பிறந்தநாள். 
அவருக்கொரு 
கவிதாஞ்சலி செய்ய 
ஆசைப்பட்டேன். 
தங்கம்மூர்த்தியின் இந்தக் கவிதை 
நினைவிற்கு வந்தது. 
இதைவிடச் சிறப்பாக 
என்னால் எழுத முடியாது என்பதால், 
கவிஞர் தங்கம்மூர்த்திக்கு நன்றிசொல்லி 
அதை அப்படியே இங்கே தந்திருக்கிறேன். 
நன்றி மூர்த்தி! 
– நா.மு.14-04-2015
----------------------------------------

7 கருத்துகள்:

 1. Mikka nandri ayya .
  Naanum pattukottai paguthiyai saarnthavan enpathil perumai padukiren..

  பதிலளிநீக்கு
 2. அவரின் வரிகளை கேட்டுக் கொண்டேயிருக்கலாம்

  பதிலளிநீக்கு
 3. தெய்வத்தையே முதலீடாக்கி
  தொழில்செய்யும் மூடர்க்கெல்லாம்,
  செய்யும் தொழிலே தெய்வமென்று
  புரியவைத்தான்.

  அருமை ஐயா
  தம 1

  பதிலளிநீக்கு
 4. ஐயா, வணக்கம். பட்டுக்கோட்டைக்கு நம் கவிஞர் போர்த்திய எளிய பொன்னாடை அருமை.!

  பதிலளிநீக்கு
 5. தங்கமான வரிகள்... கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்
  ஐயா

  செப்பிய வரிகள் நன்று ஐயா
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. “வீட்டுவரி கட்டமுடியாமல்
  அவன் குடும்பம் தவித்தது
  அவன் பாட்டுவரிகளைப் பயன்படுத்தியே
  பலகுடும்பங்கள் பிழைக்கின்றன.“
  அருமையான வரிகள். பாராட்டுகள் கவிஞர்க்கு

  பதிலளிநீக்கு