முனைவர் வா.நேரு அவர்களுக்கு நன்றியும், சிலகேள்விகளும்

கலைஞர் தொலைக்காட்சியின்
விடியலே வாசிறப்பு விருந்தினர் பகுதியில், 
06-04-2015 திங்கள் காலை 8மணிமுதல் 8.30மணிவரை ஒளிபரப்பான எனது நேர்காணல் நிகழ்ச்சியைப் பார்த்து, அதுபற்றிய கருத்துகளையும் தனது வலைப்பக்கத்தில் விமர்சனத்தோடு வெளியிட்டிருக்கும் 
மதுரை முனைவர் திரு. வா.நேரு
(பொதுச்செயலர், பகுத்தறிவாளர் கழகம்
அவர்களுக்கு எனது நன்றியும் வணக்கமும்.
Dr.Vaa.Neru, Madurai

(அவருக்கான எனது கேள்விகள் இப்பதிவின் இறுதியில்) 
-------------------------------
இனி அவரது எழுத்தில்

கவிஞர் முத்து நிலவனின்
கலைஞர் தொலைக்காட்சிப்பேட்டி
---------------------------------------------------  
தோழர் கவிஞர் முத்து நிலவனின் நேர்காணல் இன்று
(6.4.2015)  காலை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தோழர் முத்து நிலவனைப்போலவே அவரது பேட்டியும் இயல்பாகவும், எதார்த்தமாகவும் இருந்தது. தமிழ் ஆசிரியர் என்பதாலோ என்னவோ மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட வார்த்தைகளாக அவரின் பதில்கள் வந்து விழுந்தன.

நேர்காணல் காண்பவரின் தமிழ் உச்சரிப்பைப் பாராட்டிவிட்டு (உண்மையிலேயே அவரின் உச்சரிப்பு நன்றாக உள்ளது ) ஊடகத்தில் இருக்கும் பலர் தமிழ் உச்சரிப்பைக் கொலை செய்வதைக் குறிப்பிட்டார். கல்வி இன்று வியாபாரமாக இருப்பதையும் , கல்வி என்பது ஆசிரியர்கள் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல, அனைத்து தரப்பினரும் பங்கு கொள்ள வேண்டிய, பணியாற்ற வேண்டிய பணி என்பதனைக் குறிப்பிட்டார். "ஆசிரியர்கள் வகுப்பறையில் இருக்கும் பெற்றோர்கள், பெற்றோர்கள் வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள் " என்று குறிப்பிட்டது அருமை.

இணையத்தின் பயன்பாடுகளை, வலைத்தளப்பயன்பாடுகளைப் பற்றியெல்லாம் மிக நன்றாகக் குறிப்பிட்டார். எல்லாவற்றிலும் எதிர்மறை (நெகடிவ்) இருக்கிறது, அதற்காக அதனைப் பயன்படுத்த மாட்டேன், ஒளிந்து கொள்வேன் என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகத்தான் இருக்கும்.

தான் வலைத்தளம் ஏற்படுத்தி பயன்படுத்துவது மட்டுமல்ல, வலைத்தளத்தில் எழுதும் பலருக்கு மிகப்பெரிய ஊட்டசக்தியாகத் திகழ்பவர் தோழர் முத்து நிலவன் அவர்கள். பேட்டியில் அதனைக் கூறியிருக்கலாம். தன்னடக்கத்தால் அதனைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டார் என எண்ணுகின்றேன்.

                    
தோழர் முத்து நிலவன் பேட்டியில் எனக்கு நெருடலான ஒரு செய்தியும் இருந்தது. கம்பனின் எழுத்துக்களைப் பற்றிக் கூறியது. கம்பன் கவிதை நன்றாக இருக்கலாம், படிக்க சுவையாக இருக்கலாம் , ஆனால் அதன் விளைவு. இன்றைக்கும் இராமனை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு பக்க துணை கம்பன்தானே, நமது சேது சமுத்திரத்திட்டம் நனவாகப்போனது தடுத்து நிறுத்தப்பட்டது அதனால்தானே, திருக்குறள் பேரவை என்று பெயர்வைத்துக்கொண்டு கம்பராயணத்தைப் பற்றி அந்த அவையில் பேசிக்கொண்டு இருக்கும் நிலைதான் பல இடங்களில் இன்றும் . இன்றைக்கும் திருக்குறளைப் பரப்புவதற்கு இடையூறாக இருக்கும் இலக்கியம் கம்பராமாயணம்.  

கம்பரசம் எழுதினார் அறிஞர் அண்ணா - அவரே தீ பரவட்டும் என்றார், மலத்தில் அரிசி பொறுக்கும் வேலை என்றார் அய்யா பெரியார். வால்மீகி கொடுத்த புராணத்தை , முகமூடி போட்டுக் கொடுத்தவர் கம்பன். கணினித் தமிழுக்கு நேர் எதிரானது கம்பன் தமிழ். இதில் அவருடைய கருத்தோடு முற்றிலும் எதிரான கருத்து எனக்குண்டு.

      மற்றபடி சமூக அக்கறையோடு பட்டிமன்றப்பேச்சாளராய், எழுத்தாளராய், வலைத்தளப்பதிவராய், தமிழ் ஆசிரியராய் வலம் வரும் தோழர் முத்துநிலவனின் பேட்டி மிக அருமையான பேட்டி.வாழ்த்துக்கள் தோழரே...
பேட்டி எடுக்கப்படுபவர் முழுமையாகத் தனது கருத்தை பதிவு செய்யும்வரை பொறுமையாகக் காத்திருந்து, கேட்டு பின்பு அடுத்த கேள்விக்குச்சென்று செழுமையான விவாத அரங்கமாக, பேட்டியாக அமைத்த ஊடகவியலாளர் , பேட்டி எடுத்த ஸ்ரீவித்யாவுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்
-------------------------------------------------------------------------------------------------
அன்பினிய தோழர் முனைவர் வா.நேரு அவர்களுக்கு
நன்றி கலந்த வணக்கம்.
எனது கருத்தில் மாறுபட்டாலும் தங்களின் கருத்தை, அறிவு பூர்வமாகவும் நாகரிகமாகவும் வெளியிட்ட தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கம்பன் தமிழ் பற்றிய எனது நேர்காணல் கருத்தையே எனது கட்டுரைகள் சிலவற்றிலும் வெளியிட்டிருக்கிறேன்.
கம்பனைப் பற்றிய அண்ணாவின் கம்பரசம்”  நூல் கருத்திலும், 1940களில் தமிழ்நாட்டில் நடந்த அவரது தீ பரவட்டும்” இயக்கத்திலும் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
(இதுபற்றிய தகவல் அறியாத இளையவர்களுக்காக சிறு விளக்கம்- 1940களில் தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்களில் நடந்த முக்கியமான நிகழ்ச்சி தீ பரவட்டும்”  என்பதாகும். அதாவது, பெரிய புராணம், கம்பராமாயணம் முதலான தமிழ்நூல் சிலவற்றை அவை பக்தி எனும் பெயரில் மூடநம்பிக்கை மற்றும் காமத்தையே பரப்புவதாகச் சொல்லிக் கொளுத்துவதையே இயக்கமாக நடத்தியதாகும்)

தீபரவட்டும் என்று கொளுத்தியதும் எனக்கு உடன்பாடில்லை, பின்னர் தேரெழுந்தூரில் மண்டபம் கும்பிட?- கட்டியதிலும் உடன்பாடில்லை. அதைக் கம்பனைக் கற்கும் இடமாக மாற்றி இருந்தால் அதுதான் சரியான அஞ்சலிஎன்பதே என் கருத்து.

கம்பனை ஆழ்ந்து படித்தால் கொளுத்துவதோ, கும்பிடுவதோ அவனுக்கான சரியான எதிர்விளைவல்ல என்பது புரியும் என்பதே இப்போதும் எனது கருத்து.

இதுபற்றி விரிவாக ஆதாரங்களோடு எனது 
பின்வரும் கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன்.
“கம்பனும் காரல் மார்க்சும்” -  

“செம்மொழி மாநாடும் கம்பனும்

நேரமிருக்கும் போது படித்துவிட்டுத் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.

மீண்டும் சொல்கிறேன், கம்பனிடம் எனக்கும் கருத்துவேறுபாடு உண்டு. கம்பனைப் பார்க்கும் பார்வையில் அண்ணா, பெரியார் போலும் மேதைகளிடம் நான் வேறுபடவே செய்கிறேன் என்று நன்கு புரிந்துகொண்டே சொல்கிறேன்.

தந்தைபெரியார் எனக்குச் சிந்திக்கக் கற்றுக்கொடுத்தவர். அவரே “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு“ எனும் குறள்வழிச் சிந்தனை மரபை எனக்குள் தூண்டிவிட்டவர்.எனினும், அவரே கற்றுத்தந்த சிந்தனையின் படியே கம்பனை நான் பார்த்தேன்.

“மாடனைக் காடனை வேடனை“ யெல்லாம் பாடினாலும், பக்தியைப் பாடியதைவிட மக்களைச் சிந்திக்கத் தூண்டியவன் பாரதி என்பதாலேயே பாரதியின் கவிதை வரிகளை மாநாட்டு வாசலில் பெரியார் எழுதிவைத்திருந்தார் இல்லையா?எனினும் பாரதியை முழுவதுமாக நாம் ஏற்க முடியாது தானே?

பழுத்த ஆத்திகன், “கற்றதன் பயனே இறைவனைத் தொழுவது தான்“ எனத் தனது இரண்டாவது குறளிலேயே (குறள்எண்-02) எழுதிய வள்ளுவனை ஊர்ஊராகப் பாராட்டிப் பேசிய தந்தைபெரியாரை நான் பெரிதும் பின்பற்றுகிறேன். அவரும் நாமும் வள்ளுவரிடம் முரண்படும் இடங்கள் உண்டுதானே?

எல்லாவற்றிலும் –நூறுவிழுக்காடு- ஒத்துப் போகிற நூலை, நபரைத்தான் நாம் பாராட்டவேண்டும் என்றால், அண்ணாவை, கலைஞரை, ஏன் சங்கப் புலவர்களை, கம்பனை, வள்ளுவரை, இளங்கோவடிகளை, அம்பேத்கரை, பெரியாரை மட்டுமல்ல பாரதியை, பாரதிதாசனை, கண்ணதாசனை, அண்மையில் மறைந்த ஜெயகாந்தனையும் நாம் பாராட்ட முடியாதே? 

சரியான அணிசேர்க்கை என்பதன் பொருளை அரசியலாக மட்டுமின்றி, கலை-இலக்கியங்களிலும் ஊடகங்களிலும் சமூகரீதியாகப் பார்க்க வேண்டும் என்பதே என்கருத்து.

“குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் 
மிகைநாடி மிக்க கொளல்“ என்பதால் தானே மேற்காணும் மேதைகளையெல்லாம் நாம் நம் வழிகாட்டிகள் என்று பெருமையாகப் பேசுகிறோம்?

கொள்ளுவன கொண்டு, தள்ளுவன தள்ளிப் பார்த்தால் நமக்குக் கம்பனிடம் எடுத்துக் கொள்ள ஏராளம் உண்டு என்பதே எனது கருத்து. தவறிருந்தால் திருத்தினால், திருத்திக் கொள்வேன். 

மீண்டும் தங்களுக்கு எனது நன்றியும் வணக்கமும்.
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை. 10-04-2015

----------------------------------------------- 

3 கருத்துகள்:

  1. கம்பனின் தமிழ் அடிக்கரும்பினும் இனியதே. அவருடைய விருத்தங்களும் வெண்பாக்களும் விரும்பியுண்ணத்தக்க அமிழ்துகளே. ஆனால் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஒவ்வாத, நடப்பியலுக்கும் பகுத்தறிவிற்கும் ஏற்பிலா ஒரு கடவுள் அவதாரக் கதையினை இந்த பாமர சமூகத்தில் பரவவிட்டு மேலும் மூடநம்பிக்கைகளுக்குள் மூழ்கடித்து விட்டாரே என்ற வருத்தம் என்னுள்ளும் உண்டு.

    பதிலளிநீக்கு
  2. வேண்டியதை... நல்லவற்றை... எடுத்துக் கொள்வதே சரி...

    பதிலளிநீக்கு