செம்மொழி மாநாடும் கம்பனும்
-- நா.முத்துநிலவன் --
தமிழுக்கு
‘கதி’எனப்படும் இருபெரும் புலவர்கள் ‘க’ம்பனும் ‘தி’ருவள்ளுவனும்.அறநூலை இலக்கியமாக்கியவன் வள்ளுவன், இலக்கியத்தை அறநூலாக்கியவன் கம்பன்!
இவ்விருவரில் ஒருவரையேனும் தவிர்த்துத் தமிழ்இலக்கியத்தைக் காண முடியாது!-அது செம்மொழி மாநாடாயினும்!
கவிஞர்கள் சில கவிதைகளை எழுதுவார்கள்,
நல்ல கவிஞர் சிலரோ கவிஞர்கள் சிலரையே எழுதிவிடுவார்கள்!
மகா கவிகள்தாம் காலத்தையே எழுதுவார்கள்!
தமிழில் வள்ளுவன், கம்பன், பாரதி என முப்பெரும் மகாகவிகள் உண்டு.
தமக்குப் பிறகு தமிழின் போக்கை மாற்றியதே இவர்களின் இலக்கியம்! இவர்களின் பாதிப்பு நூற்றாண்டுகளைக் கடந்துநிற்கும் என்பதே இதற்கான இலக்கணம்!
இம்மூவருக்குமான பொதுத்தன்மைகள் எவையெனில், அவ்வக்காலத்துச் சமூக அவலங்களை உலகப்பார்வையுடன் இலக்கியமாக்கியது, ‘அரசு-நிறுவன-எதிர்ப்பு’க் குரல் தந்தது,
அவ்வக்கால மதங்களை ஏற்றுக்கொண்டவராயினும் ஏற்றுக்கொண்ட மதங்களைமீறியும் ‘மானுடம் பாடியது’ என்பதோடு, தமக்குப்பின் நிகழவிருக்கும் எதிர்காலச் சமூகமாற்றத்தை உணர்ந்து அதற்குத் தேவையானதையும் முன்வைத்துப் பாடியது என்பது முக்கியமானதாகும்!
கடவுள் நம்பிக்கையுள்ள வள்ளுவரே, ‘பரந்து கெடுக
உலகியற்றியான்’(குறள்:1062)என்றும், ’தெய்வத்தான்
ஆகாதெனினும்’(குறள்:619)என்றும், ‘பிறப்பொக்கும் எல்லா
உயிர்க்கும்’(குறள்:972), என்றும் எழுதிய வரிகள் சாதாரணமானவையல்ல! --அதுவும் சாதிவாரியாகவே அறியப்பட்டிருந்த அன்றைய சமூகத்தில்! ‘தன்அன்புக்கு உரிமையுள்ள
பெண்ணை ஆரத்தழுவிக்கொள்வதை விடவும் சொர்க்கம்சுகமானதோ?’(குறள்:1103)என்று, அறம், பொருள், இன்பம் மட்டுமே பாடி, ‘வீடு’பாட ‘மறந்த’ அந்தச் ‘சமணத்துறவி’தான் இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேலாக நிற்கிறான்!
இனியும் நிற்பானல்லோ?
கம்பன்காலமோ வள்ளுவன் காலத்தைவிட ஆயிரமாண்டுகள் ‘முன்னேறியது’! –அதை நாம் அடுத்த ஆயிரமாண்டுக்கழித்து இப்போது ஆய்வுசெய்கிறோம்;!
அதுதான் சிற்றரசுகளை விழுங்கிப் பேரரசுகள் நிலைத்துவிட்ட காலம்! ‘சங்கஇலக்கிய’த்தில் இருந்ததுபோன்ற ‘அரசன்மீதான கண்மூடித் தனமானபற்றே நாட்டுப்பற்று’ எனும்கருத்து மாறிவந்துவிட்ட காலம்! அரசர்களின் மீதான அதிருப்தி வளர்ந்துவந்த காலம்!
கம்பனுக்குப் பின்,(கி.பி.13ஆம்நூற்றாண்டில்) உலகளவில் பேரரசுகள் சிதைந்துவந்ததையும் கம்பன் காலத்தின்பின் தமிழிலும்; காவியங்கள் புகழ்பெறவில்லை என்பதையும் சேர்த்துக்கவனிக்கவேண்டும்!
‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்ற(புறநானூறு-186) கருத்துக்கும்,‘திருவுடை மன்னனைக்காணின் திருமாலைக்கண்டேன்’
என்ற(திருவாய்மொழி-4:8)கருத்துக்கும் மாறாக,‘மக்கள் தாம் உயிர், மன்னன் அவர்களைச்சுமக்கும் உடலே’ எனும் புதியகருத்தில் ‘உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்’ எனக் கம்பன் (பாலகாண்டம்-பாடல்178-அரசியல்படலம்) பாடிய பொருள் புதிது!
மன்னராட்சிக் காலத்திலேயே மக்களுக்கான முக்கியத்துவத்தைச் சொன்ன வரிகளிவை! முன்னோர் கருத்தை மாற்றி ஏதோ தெரியாமல் பாடிவிட்டார் என்று யாரும் நினைத்துவிடக்கூடாது என்றோ என்னவோ இதே கருத்தை, இராமனின் ஆசிரியர் வசிட்டரே சொல்லித் தருவதாக. ‘வையகம் மன்னுயிராக அம்மன்னுயிர்
உய்யத் தாங்கும் உடலன்ன மன்னன்’ என்று தெள்ளத்தெளிவாகச் சொல்லிவைக்கிறான் கம்பன்!
இராமன் எனும் தெய்வம்
மக்களின் துன்பத்தைப்போக்க மனிதஅவதாரமெடுத்து வந்ததாகத்தான் கம்பன் தன்காவியத்திற்கு ‘இராமஅவதாரம்’என்று பெயரிட்டான்! அந்த மக்கள் கருத்தின் வெற்றியை ‘மானுடம் வென்றதம்மா’ என்று பின்னும் பாடிய கம்பனின் சொல்லும்புதிது! பொருளும்புதிது!
இதனால்தான் அரச-உதவி கிடைக்காமல், சடையன் எனும் தனிநபரின் உதவியே கம்பனுக்குக் கிடைத்தது! கம்பனுக்குச் சற்றே முன்பின்னாக வாழ்ந்த ஜெயங்கொண்டார், ஒட்டக் கூத்தருக்குக் கிடைத்த அரசப்பரிசுகளோ, ‘அரசவைப்புலவர்’பதவியோ, அரசனே தந்த
‘கவிச்சக்கர வர்த்தி’ப் பட்டமோ கம்பனுக்குக் கிடைக்காததைப் பற்றி யோசித்தால் இதன் பின்னணி புரியக்கூடும்!
ஜெயங்கொண்டார் குலோத்துங்க சோழனின் ‘வீரத்தை’
கலிங்கத்துப்பரணியில் பாடிப்புகழ்ந்தது போல கம்பன் தன்கால அரசர்களைப் புகழ்ந்து பாடாதது ஏன்? தன்மகன் அம்பிகாபதி பொருட்;டாக சோழ மாமன்னனையே உதறித்தள்ளிவிட்டுக் கம்பன் பாடியதாகச் சொல்லப்படும் --
‘மன்னவனும் நீயோ, வளநாடும் உன்னதோ?
உன்னைஅறிந்தோ,தமிழை ஓதினேன்? – என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?’ – எனும் நேரிசைவெண்பாவிற்கு, வரலாற்றுச் சான்றுகள் இல்லையென்றாலும், கம்பனின் ‘அரசு-எதிர்ப்புக்கருத்து’ ஒத்துப்போவதை இங்கு ஒப்பிட்டுக் கொள்க!
இதே போல உழுது உண்ணும் உழைக்கும் மக்களைவிடவும் உழுவித்துண்ணும் மக்களை உயர்வாகச் சொன்ன இலக்கிய-இலக்கணங்களுக்கு மத்தியில், வள்ளுவரின் ‘உழுதுண்டு
வாழ்வாரே வாழ்வார்’(குறள்-1033) என்பதற்கு நிகராகத் தனது ‘ஏர்எழுபது’நூலில் உழவரையே பெருமைப் படுத்திப் பாடுகிறான்! -
‘மேழிபிடிக்கும் கை வெல்வேந்தர் நோக்கும் கை’ !
கம்பனைப்பற்றிய இரண்டுவிதமான தவறானகருத்தோட்டங்கள் தமிழறிஞர்களிடையே உள்ளன. ஒன்று : அவன் ‘வைணவம் தழைக்கவந்த வரகவி’ என்பது. கம்பன் வைணவன் என்பதில்
மாற்றுக் கருத்தில்லை. ஆனால், பக்திச்சுவையை விடவும் தமிழ்ச் சுவையே கம்பனிடம் மிகுதி என்பது மற்றைய பல பக்திஇலக்கிய நூல்களைப் பார்த்தாலே தெரியும். இடைக்கால பக்திஇலக்கியங்கள் பலவற்றையும் ஒப்பிடும்போது, கம்பராமாயணம் மிகவும் நாகரிகமான
பக்திநூல் என்பதை யாரும் ஒப்புக்கொள்வார்கள்.
ஞானசம்பந்தர் தேவாரத்தில் பத்துப் பாடல்களுக்கு ஒருமுறையும், சேக்கிழார் வாய்ப்புக்கிடைத்த இடங்களிலும் பிறசமய
–குறிப்பாகச் சமணசமய– கருத்தை மறுக்கும்விதமாகக் கையாண்டிருக்கும் சொற்களைச் சைவர்களே பெருமையாக எடுத்துப் பேசமுடியாது!
கம்பனோ தான் வைணவ பக்தன் என்பதை மறைத்ததும் இல்லை, பற்பல இடங்களில் பிறசமயத்தினரை – குறிப்பாக சைவசமயத்தை -- பெருமையாகக் குறிப்பிட மறந்ததும் இல்லை!
மற்றொருகருத்து, ‘கம்பரசம் காமக்கசடு’ என்பது. ‘விறலிவிடுதூது’ மற்றும் பல்வேறு உலாச் சிற்றிலக்கியங்களும் மட்டுமல்ல, உலகப் புகழ்பெற்ற ஓவியங்களும் காவியங்களும் கூட அப்படிப் பட்டவைதாம்! காமம் --‘இறைவனை அடையும்
பார்வை’யிலும்-- ஆபாசம் எனில், ஆண்டாளை விடவா கரைகடந்த காமத்தைக் கம்பன் எழுதிவிட்டான்? இதுவும் பலவீனமான கருத்தே.
கம்பனை மட்டுமல்ல, ஆண்டாளையும்
அண்மைக்கால ஓவியர் உசேனையும் நாடுகடத்துவதும், அல்லது ஏடு கொளுத்துவதும் ஒன்றுதானே? இரண்டுமே தவறல்லோ?
‘ஆரிய-திராவிடக்கருத்துப்போர்’ தனிப்பெரும் ஆய்வுக்குரியது. அன்றைய சோழனைத்தான் ‘பாவப்பண்டாரமாக’ப் பார்த்தான் ‘திராவிடத் தமிழ்க்கம்பன்’ என்பது என் கருத்து!
கோசலை நாட்டையே ‘கம்பன் கண்ட தமிழகம்’ என்று காரைக்குடிக் கம்பன் கழகத்தில் தோழர் ஜீவா பேசிய புகழ்பெற்ற பேச்சை எல்லாரும் படிக்கவேண்டும்! இதுபற்றித் தனியே விரிவாக ஆய்வுசெய்ய நிறைய இடமுண்டு, ஆய்வுகள் தொடரவேண்டும்!
ஜீவா சொல்வதைக் காணுங்கள்:
“கம்பன் ஒரு லட்சியத்தமிழகத்தை ‘எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்திய தமிழகத்தை, ஒரு கற்பனா உலகத்தை (உடோபியாவை) தனது இராமகாதையின் மூலம் நமக்குப் படைத்தளிக்கிறான்.செல்வச் செழிப்பும், தொழில்வளர்ச்சியும், கலைமுழக்கமும், சமாதானச்சூழலும் நிறைந்த ஒரு பொன்னாட்டைத் தனது கவிதா மேன்மையால் சிருஷ்டித்திருக்கிறான்”
(19-03-1954 காரைக்குடிக் கம்பன்கழகத்தில் தோழர்ஜீவா முழங்கியது
பார்க்க -ஜனசக்தி-18-01-2010- ஜீவாசிறப்புமலர்)
சங்கக் காலத்திலேயே தொடங்கி, வளர்ந்து, பின்னர் கிட்டத்தட்ட சாதியாகவே பிரித்து அறியப்பட்ட தமிழ்ச்சமுதாயம், பக்திஇலக்கியக் காலத்தில் சமயச்சார்பாகவே அறியப்பட்டது. வடமொழிப் பக்திநூல்களைவிடவும் தமிழ்நாட்டுப் பக்திஇயக்கங்களும், இலக்கியங்களும் சாதிய உடைப்பிற்கு ஆற்றியபங்கை ஆய்வுசெய்வது
மிகவும் அவசியம் என்றே நான் கருதுகிறேன்.
எனினும்; பிறசமயக் கருத்துகள் நல்லனவாகவே இருந்தாலும், அவற்றை மறந்தும் புகழ்ந்துவிடாத அளவிற்கு சமயச்சார்பில் கண்கட்டிக்கிடந்த காலமது! இக்கருத்தோட்டம், இருபதாம்
நூற்றாண்டில் உ.வே.சா. அவர்களின் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் வரை நீண்டதை அனைவரும் அறிவோம். உ.வே.சா.தான் அதனைத் தமிழ்கொண்டு மீறினார், தமிழ்த்தாத்தாவாக மாறினார்!
கம்பன் சாதிய-சமுதாய ஏற்றத்தாழ்வை மீறி எழுதியவிதம் ஆய்வுக்கு உரியது. கூடப்பிறக்காத குகனை இராமனின் சகோதரனாக்கி, கூடப்பிறந்த வீடணனை இராவணனின் எதிரியாக்கிய கம்பனின் நோக்கம்தான் என்ன? சமத்துவ-சகோதரத்துவ சமுதாயமாக அன்றி
வேறென்ன இருக்க முடியும்?
உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர் தால்ஸ்தாய் ஒன்றும் --கார்க்கியைப் போலும்– புரட்சி எழுத்தாளர்அல்லர். கார்க்கி,ஷோலகோவ் போலும் எழுத்தாளர்கள், மாயகாவஸ்கிபோலும் கவிஞர்கள் பலர் இருந்தும்கூட ‘சோவியத்தின் மனச்சாட்சி’ என்று – உண்மையான
புரட்சித் தலைவர்-- லெனினால் சொல்லப்பட்டவர் தால்ஸ்தாய் தான்! இதுஏன்என்று கம்பனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சிந்திக்கலாம். பல புதியசெய்திகள் பிடிபடும்.
கம்பனைமட்டுமல்ல ‘ஆழ்ந்திருக்கும் கவியுளமும்’ காணலாம்.
சதாரண ‘பக்திஇலக்கியவாதி’என்று கம்பனை அவ்வளவு இலகுவாக ஒதுக்கிவிடமுடியாது. ‘தீ பரவட்டும்’ என்று நெருப்புவைத்துவிட்டால் மட்டுமே அழிந்து நீறாகிவிடக்கூடியவனும் அல்லன் கம்பன்!
காலத்தை வென்று நிற்பவன்! முட்டினாலே முறிந்துவிழும் முருங்கைமரமல்ல வெட்ட வெட்டவே துளிர்க்கும் வேங்கை மாமரம்!
இன்னொரு பக்கம், ‘அப்படியானால், கம்பனை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறீர்களா?’ எனும் கேள்விக்கு, ‘அனைவரும் நூறு விழுக்காடும் முக்காலமும் ஏற்றுக்கொள்ளும்படியான இலக்கியம் எங்காவது இருக்கிறதா?’என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. குணமும் குற்றமும் மிகைநாடிக் கொள்க!
‘கம்பராமாயண ரசனை’ எழுதிய வ.வே.சு. முதற்கொண்டு தமிழறிஞரும் நீதியரசருமான மு.மு.இஸ்மாயிலார்வரை பலரும் கம்பனைக் கற்கவேண்டிய அவசியம்பற்றி எடுத்தெடுத்துச் சொல்லி விட்டார்கள்.
ஆறுசீர்க் கலிவிருத்தத்தில் நூறுசீர்ச் சந்தவேறுபாடுகளை அமைத்துக்காட்டிய கம்பனின் ‘கம்பசித்திர’ வித்தைகளை இன்றைய நம்
இளைய தமிழர்க்கும் எடுத்துக்காட்ட வேண்டாமா?
‘செம்மொழி’இலக்கியக் காலவரம்புக்குள் வேண்டுமானால் கம்பனின் காலம் வராமல் இருக்கக் கூடும். செம்மொழியின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய படைப்பாளிகளை, இன்றைய புதுக்கவிதைகள் வரை ஆய்வுசெய்ய இடம்தரும் செம்மொழி மாநாடு, கம்பனைப் பற்றிய
ஆய்வுக்கும், பக்தி இலக்கியங்களின் சமுதாயப்பின்னணி பற்றிய ஆய்வுக்கும் நிச்சமாக இடம்தரலாம், அப்போதுதான் செம்மொழி மாநாட்டு இலக்கிய ஆய்வுகள் முழுமை பெறும். தகுதிமிக்க ஆய்வாளர் தமிழில் பற்பலர் உளர்.
‘விண்ணப்பிக்காத’அன்னோரையும் விரும்பி அழைத்தால், அடுத்த தலைமுறையும் பாராட்டும்! செம்மொழி மாநாட்டில் ‘கம்பன் பெயர் தாங்கிய அரங்கு’ அமையவிருப்பது, நம்தமிழக
முதல்வர் கலைஞர்அவர்களின் நல்லெண்ணத்தைக் காட்டுகிறது. கம்பனையே ஆய்வுப் பொருளாகவும் வைப்பது, செம்மொழித் தமிழுக்கே சிறப்புச்சேர்க்கும்! மாநாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆய்வுரைகள் இடம்பெறத் திட்டமிட்டிருப்பது சிறப்பானதுதான். இவ்வாய்வுகள் ‘கணித்தமிழி’ன் நுனிமுனைக் கொழுந்துகளை
இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் என்பதில் வேறு கருத்தில்லை.
ஆனால்,நம் வேர்களையும் விழுதுகளையும் அறிமுகப் படுத்தாமல், இலைகளையும் கிளைகளையும் மட்டும் அறிமுகப் படுத்துவது சரிதானா என்பதை ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளர்கள்
யோசிக்க வேண்டுகிறேன்.
தொல்காப்பியரோடும், வள்ளுவரோடும், கம்பனையும்
பெருமிதத்தோடு வரவேற்பதுதான் செம்மொழி மாநாட்டில் தமிழுக்கு நாம் செய்யும் சீருமாகும்! சிறப்புமாகும்!
‘பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த
சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும்
வித்தாக வில்லையென்று பாடு’ – கண்ணதாசன்.
(கோவையில் உலகச் செம்மொழி மாநாடு நடப்பதை ஒட்டி அதற்கு முன்னதாக எழுதியது- நன்றி -17-05-2010 “ஜனசக்தி“ நாளிதழ்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக