ஜெயபாஸ்கரன் கவிதையில் ‘கெட்ட’ வார்த்தை!


ஜெயபாஸ்கரன் கவிதையில் ‘கெட்ட’ வார்த்தை!
--நா. முத்துநிலவன் --

                     சென்னையில் நடந்த ஜெயபாஸ்கரன் கவிதைகள் முதல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் சுவையான விவாதம் ஒன்று நடந்தது.
                     ‘நந்தன்’ ஆசிரியர் நா.அருணாசலம் தலைமையில், கவிஞர் கனிமொழி புத்தகத்தை வெளியிட்டுப் பேச, வீ.கே.டி.பாலன் முதல்படி பெற்று உரையாற்றினார்.சு.ப.அறவாணன், திலகவதி, ‘தென்கச்சி’ கோ.சுவாமிநாதன், வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மணிமுடிநிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

                     நானும் திருப்பூர் கிருஷ்ணனும் நூல் திறனாய்வு செய்து பேசினோம்.
                    முதலில் பேசிய நான் - கவிதையெனில் முதலில் புரியவேண்டும். பாரதி அப்படித்தான் ‘எளிய பதம். எளிய சொற்கள். பொதுமக்கள் விரும்பக்கூடிய மெட்டு -இவற்றால் ஆகிய காவியம் ஒன்றை செய்து தருகிறவன் தமிழன்னைக்குப்புதிய அணிகலன் சூட்டியவனாகிறான்’, என்று பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையிலேயே பிரகடனப்படுத்திவிடுகிறான்.
ஜெயபாஸ்கரன் கவிதைகளின் வலிமையே அதன் எளிமைதான்.. என்று பேசியதோடு சில கவிஞர்கள் ‘எந்த அளவிற்குப் புரியவில்லையோ அந்த அளவிற்கு உயர்ந்த கவிதை’ என்பதாக நினைத்துக் கொண்டுவிடுகிறார்கள், என்றும் கூறினேன்.
கவிஞர் மகுடேசுவரன் இப்படித்தான்.
…அது அதுவாகவும்
            இது இதுவாகவும் இருந்தது
            பிறகு –
           அது இதுவாகவும்
           இது அதுவாகவும் மாறின.
           இப்போது
           அதது அததுவாக
           இதிது இதிதுவாக.. என்றொரு கவிதையை எழுதியிருக்கிறார் என்று சொன்னேன். எனது பேச்சின் ஒரு பகுதிதான் இது.

ஆனால்,  அடுத்துப் பேசிய திருப்பூர் கிருஷ்ணன் - ‘தனக்குப் புரியவில்லை என்பதற்காக கவிதையில் ஒன்றுமில்லை என்று சொல்லிவிடக்கூடாது. புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்’ என்று பேசிவிட்டு ஜெயபாஸ்கரனின் கவிதைகளைப் பாராட்டிய கையோடு தொகுப்பில் உள்ள ‘மயில்’ என்னும் கவிதையின் இறுதியாக –
                   ‘மயில்களைப் பார்க்கும் போது மட்டுமின்றி
                    போய்ப்பார்க்கும் போதும்
                    சொல்லியாக வேண்டியிருக்கிறது.
                    மயிலே…மயிலே….நீ
                    எந்த மயிரானுக்கும்
                    இறகு போடாதே’
 --என்றுவரும் வரிகளை இன்னும் கொஞ்சம் மறைமுகமாகச் சொல்லியிருக்கலாம். கவிதையில் இது போன்ற சொற்களைக் கையாளும் போது இன்னும் யோசிக்கவேண்டும் எல்லாவற்றையும் அப்படியே சொல்லிவடுவது நல்லதல்ல… என்று பேசினார். ‘பகா ஈகாரம்-பவ்வீ’ என்றெல்லாம் ஓரெழுத்து வார்த்ததையைச் சொல்வதுமாதிரி இலைமறை காயாகச் சொல்ல வேண்டும்..என்றார்.

                       பிறகு பேசியவர்கள் இதுபற்றி நிறையப் பேசினார்கள் அப்போது இதுபற்றி நான் சொல்ல நினைத்ததை அங்கேயே சொல்ல முடியாதவாறு நான் முதலிலேயே பேசி விட்டதால், இப்போது அந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
  இது பற்றிக்கவிஞர்கள்மட்டுமல்லஅனைவருமே கருத்துக்கூறலாம்.

                              சொல்லில் வழக்குச்சொல்லே முக்கியத்துவம் மிகுந்தது. தொல்காப்பியரும்…          
‘வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி’த்தான் இலக்கணம் படைத்தார்.
அப்படித்தான் தமிழ் இலக்கணத்தில் அதே வழக்கை ‘இயல்பு வழக்கு. தகுதி வழக்கு’ என இரண்டு பிரிவாக்கினர் பின்வந்த நன்னூல் இலக்கணத்தார்.
அதற்கு என்ன பொருளெனில். ‘இயல்பு வழக்கு’ அப்படியே இயல்பான (உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்றவாறு) உயர்வான வழக்கு.
  தகுதி வழக்குத்தான் கொஞ்சம் தகராறு. சபையில் - இலக்கியத்திலும் கூட-“சொல்லத்தகாத” சொற்களை தகுதிப்படுத்தி
(அல்லது மறைத்து-பூசி மெழுகி) சொல்வது.

  ‘பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கும்போது மருவாதிஇல்லாம பேசப்படாது’ எனும் உள்ளடக்கம் தான் இது.இதனைச் சிலவகையாகப் பிரித்தனர் ‘பெரியோர்’ –

அதாவது – ‘இடக்கர்அடக்கல்’ (இடக்கான தகுதியற்ற சொற்களை மாற்றிப்பேசுவது). ‘ஆய் வருதும்மா’- ன்னு சொல்லக்கூடாது. ஆனா -டூ பாத்ரூம் வருது-ன்னு சொல்லலாம்.

 ‘மங்கலம்’ (அமங்கலமான சொற்களை மங்கலமாக மாற்றிப்பேசுவது)
 ஆடிப்பெருக்கில் தாலி சுருக்குவதை ‘தாலி பெருக்கிப்போடுவது’ என்பது.

 அடிப்படையில் பார்த்தால் ‘தகுதியற்ற’ சொற்களை ‘நீர்தெளித்து’ தகுதிப்படுத்துவதுதான் இதன் உள்ளடக்கமும்

அது-தகுதிப்படுத்துவல்ல. இருக்கும் வேற்றுமைக்கு எதிரான கோபத்தை –சமாதானப்படுத்துவது- ஏற்கச்செய்வது – வேற்றுமையைப் பாதுகாப்பாதேதான்!

தகுதியற்ற சொல்என்றோ தகுதியற்ற மனிதன்என்றோ இயல்பில் யாரும் எதுவுமில்லை. சொல்லப்படும் சூழல்-நோக்கம்தான் சொல்லின் பொருளை ஆழமாக வெளிப்படுத்தும்.

 ‘மயிர்’ எனும் சொல்லை வள்ளுவரும் உவமையாக்கியிருக்கிறார்
(குறள் 969). அது அசிங்கமாயில்லை.

  கவிஞர் அறிவுமதியும்.-
‘பறையர், படையாட்சி, தேவர், செட்டியார்,              
  நாடார், பிள்ளை….மசுரு
  ஒரே முருகன், ---எனும் போது ஒரே சாமியக் கும்பிட்டும் இன்னும் சாதிச்சனியன் ஒழியலையே எனும் எரிச்சல் நமக்குள் ஏற்படுவதைச் சரியாகத்தானே வார்த்தைப் படுத்தியிருக்கிறார் கவிஞர்?

               கவிஞர் இன்குலாப் அதையே எரிச்சலாக அல்ல ஆவேசமாகவே பயன்படுத்துகிறார்.
          ‘சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே-உங்க                            சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணைய ஊத்துதே       எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க-நாங்க                   எரியும்போது எவன் மசுரப் புடுங்கப்போனீங்க’
  ----எனும்போது. முனைவர் கரு.அழ.குணசேகரனின் கம்பீரக் குரலில் தெறிக்கும் கோபம். தலித்துகளின் தர்மாவேசமன்றி அசிங்கமாஅது?

  ‘பறையருக்கும் இங்கு தீயப்
                     புலையருக்கும் விடுதலை’
  ---- எனும் பாரதி வரிகளைக் கேட்டு மிரண்டு, “சாதிப் பெயரா இருக்கே கொஞ்சம் மாத்திக்க முடியுமா?”  என்று கேட்ட வானொலி அதிகாரிகளிடம் பாரதியைக் கூட்டி வந்தா மாற்றமுடியும்? அவன் வந்தாலும் இந்த வரிகளை மாற்றித்தருவானா?  

பறைச்சி யாவ தேதடா பார்ப்  
             பனத்தி யாவ தேதடா  
இறைச்சி தோல் எலும்பிலே  
           இலக்க மிட்டு இருக்குதோ’
--- எனும் சித்தர் பாடலில் கூட சாதிப்பெயர்கள் வரத்தான் செய்கின்றன.
அது இழிவுபடுத்தும்நோக்கில் அல்ல-இடித்துரைக்க.

                 அசிங்கத்துக்கும் ஆபாசத்துக்கும் வேறுபாடு நிறைய உண்டு ‘முன்னது அருவெறுப்பூட்டுவது’ பின்னது - இன்னது என்றறியாமலே தவறு செய்யத தூண்டுவது ‘திரைப்பட வணிக படைப்பாளிகள் இரண்டையும் குழப்புவதில் தெளிவானவர்கள்’ அதனால்தான் உடல்உறுப்புகூட ஆபாசமாக நமது சமூகத்தில் அறியப்பட்டுள்ளது.

                    இரண்டு பொருள்பட (சிலேடை) எழுதிய நரைப்புலவர்களாவது தேவலாம் எனும் அளவில் இன்றைய திரைப்புலவர்கள் ஒரே பொருளில்தான் உறுப்புகளைப் பற்றியும் பொறுப்பின்றி எழுதுகிறார்கள்.
 
                    மறை உறுப்புகளின் பெயர்களைக் கூட ஒடுக்கப்பட்டவர்களின் ஆவேசத்தைத் தூண்டும் வகையில் பாட முடியுமா?
  முடியும் என்றெழுதிய கவிகளும் உண்டு.
  வேதம் படிக்க –
        கண்வேண்டும் வாய்வேண்டும்
        ஆண்குறி எதற்கு?
  -----எனும் நீலமணியின் கேள்வியில் தெறிப்பது ஆபாசமா ஆவேசமா?

                              பெண்ணிய வளர்ச்சியில் பாடவந்தபெண் கவிஞர்கள் இந்த உறுப்பு சமாச்சாரங்களையெல்லாம் நொறுக்கியெறிகிறார்கள் --

                அச்சமும் நாணூம் மடனும் முந்துறுத்த
                நிச்சமும் பெண்பாற்கு உரிய. -எனும் பழம்பஞ்சாங்கத்தை கிழித்தெறிந்து --  
                 ‘மரப்பாச்சி பொம்மைக்கும்
                  மாராப்பு போட்டுவைத்த
                  பண்பட்ட தேசமிது,
                  இன்று –அரைகுறைதான் அழகாம்!          
                  இடையைக்கூர்ந்து
                 தொடையை ஆய்ந்து
                 கசாப்புக் கடைகட்டும்
                 ஐஎம்எப்  கலாச்சாரம் !
                 எல்லா நாயும்
                 காலைத் தூக்க    
                 எம் தேசமென்ன  
                 தெருவோர நடுகல்லா?’
 --எனும் ஆர்.நீலாவின் கோபத்தில்- - ‘ஆபாசம்’ ஆவேசமாகிறதே!

  இதையெல்லாம்விடவும், ‘பெண்கள் இப்படிப்பாடலாமா’ என்று சிலர் அதிர்ச்சியடையும் விதத்தில் பாடுகிறார்கள் இன்றைய தமிழ்பெண்கவிகள் (க்ருஷாங்கினி-மாலதிமைத்ரி தொகுத்த 20ஆம் நூற்றாண்டுப் பெண் கவிகளின் - ‘பறத்தல் அதன் சுதந்திரம்’ – காவ்யா வெளியீடு பார்க்க)

                          பெண்பார்க்கும் படலத்தில் பெண்ணின் சம்மதம் கேட்கப்படுவதில்லை யெனும் புலம்பல் ஒருபக்கம் தொடரும்போதே திருமணம் பற்றிய மாற்றுப் பார்வையுடன்
                  ‘…உன்னிடமிருந்து                        
                    கலங்கலானதே எனினும்            
                    சிறிதளவு அன்பைப் பெற  
                    எல்லா அறிதல்களுடனும்  
                   விரிகிறதென் யோனி’
  ----எனும் சல்மாவின் கவிதைகளில்தான் எத்தனை யுக ஆதங்கம்.
குட்டி ரேவதியின்
              .. ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும்
                  சிசுகண்ட அதிர்வில்    
                 குருதியின் பாலையும் சாறெடுக்கின்றன
   -----எனும் ‘முலை’ கவிதை, எந்த உறுத்தலும் இன்றி இயல்பாகவே உள்ளதே!.

                     அதைச்செய்யாதே இதைச்செய்யாதே எனும் பழைய கட்டுப்பாடுகள் கவிஞர் - கலைஞர்களிடம் வேண்டியதில்லை என்பதே எனது கருத்து.

                      சொல்லின் வலிமை தெரிந்தவர்தானே கவிஞராக முடியும்?
  புண்ணைக்கீறும் போது நிணமும் சீழும் வரத்தான் செய்யும். மருந்து போட்டு ஆற்றுவதே நோக்கமெனில் அது தவறாகப்படாது.
நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் இதை அறிவாராக.

                      வாய்மொழிவழக்கு – சொலவடை – பழமொழிகளில் இந்த உழைக்கும் மக்களின் இயல்பான ‘கெட்ட வார்த்தைகள் ஏராளமாக வருவதையும் பார்த்தால் அதிலதான் நமது மக்களின் ஆசை-கோபம்-எரிச்சல்-ஆற்றாமை-மகிழ்ச்சி உட்பட வாழ்க்கை வரலாறே தெரியும்.

                       அந்த பாணியிலான சொலவடையோடு இந்த விவாதத்தை முடிப்போமா…அயோத்தி வழியாக கோத்ராவிலோ குஜராத்திலோ காட்டுமிராண்டித்தனம் செய்யும் ஒருவனை எந்த மதம் என்றா கேட்பீர்?
 அவன் மனிதனே கிடையாது !
அப்புறம் அவனை எந்த மதத்தில் சேர்ப்பது?
 “நக்குற நாய்க்கு
செக்கு என்ன சிவலிங்கம் என்ன ”
என்றுதான் சொல்ல முடியும். என்ன நாஞ் சொல்றது சரிதானுங்களே-?
-------------------------------------------------------------------------------------  
 (ஜெயபாஸ்கரன் கவிதைகள் முதல் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசியது-25.03.2002. பின்னர் “நந்தன் வழி” மாதஇதழில் வெளிவந்தது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக