தினமணிக் கதிர் இதழில் நேர்காணல்


கவிதையின் பொற்காலம் எது? 
தினமணிக் கதிர் இதழில் நா.முத்துநிலவன் நேர்காணல்

முகாம்களாவும் முகங்களாவும் திரண்டு முரண்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது இன்றைய தமிழ்க் கவிதை உலகம் முரண்படுவது என்பது மனிதகுல வாழ்க்கையின் ஒர் அங்கம்தான். எனினும் முரண்படுவதே வாழ்க்கையாகிவிட்டது நமது தமிழ்க் கவிஞர்களுக்கு. எல்லோரையும் ஏற்றுக் கொள்ள முடியாதவராகி விடுகிறார்கள். இலக்கியத்தால் முரண்படுவது என்கிற நமது முன்னோர்களின் மரபு தவறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வளர்ந்து வளர்ந்து இன்றைக்குக் குடுமிப்பிடிச் சண்டையாகப் பரிணாமம் பெற்றிருக்கிறது.’எது கவிதை என்று காலம் தீர்மானிக்கும் என்று சொல்லிக் கொண்டு ஆறுதல் அடைவதுதான் ஒரே வழி என்கிற முடிவுக்கு இன்றைய பல கவிஞர்கள் வலுக்கட்டாயமாத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலைலையில் நேற்றைய தமிழ்க் சங்க காலம் தொடங்கி இன்றைய சாதிச் சங்க காலம் வரையிலான தமிழ்க் கவிதையின் வரலாற்றை ஆய்வு செய்து தொகுத்து வழங்கும் பணியில் இறங்கியிருக்கிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிஞர் நா.முத்துநிலவன். தான் மேற்கொண்டிருக்கும் ‘கவிதையின் கதை’ என்கிற ஆய்வுத் திட்டப் பணிகளைப் பற்றி நீண்ட நேரம் நம்மிடம் மிகத் தெளிவாக விளக்கினார் அவர்.
இப்படியொரு முயற்சியில் நீங்கள் இறங்கக் காரணம் என்ன?
தமிழ்க் கவிதையின் வரலாறு நெடுகிலும் ஒன்றையொன்று ஏற்றுக்கொள்ளாத போக்கு பரவலாகக் காணப்படுகிறது. தனக்குப் பிடிக்காத ஒரு வடிவத்தில் பொதிந்து மிளிரும் கவிதையைப் பார்க்கவோ பாராட்டவோ தவறிவிடுகிறார்கள். மரபுக்கவிதை புதுக்கவிதை ஹைகூ ஆகிய மூன்றிலும் கவிதை இருக்கிறது. அல்லது இல்லாமலும் இருக்கிறது. பண்டிதர்கள் புதுக்கவிதையை ஒதுக்குவது அநியாயம். அது கவிதையே அல்ல என்பது அதைவிட அநியாயம். தமிழ்ச் செய்யுள் தொடங்கிய காலம் முதல் இன்று வரை தமிழ்க் கவிதையின் பரிணாம வளர்ச்சிப் போக்குகளை ஒருசேரத் திரட்டித் தர வேண்டியது இன்றைய முக்கியத் தேவையாக இருக்கிறது. மூன்றையும் சேர்த்து எழுதினால்தான் நியாயம் கிடைக்கும் என்பதால் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன்.
இதற்கு முன் இப்படித் தமிழ்க் கவிதைகள் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் எழுதப்படவில்லையா?
உ.வே.சா.. தொ.பொ.மீ.. மு.வ.. தமிழண்ணல் சி.பாலசுப்பிரமணியம் போலும்  தமிழறிஞர் பலரும் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆய்வு செய்து எழுதியுள்ளனர். இந்த ஆய்வுகளில் அவ்வளவாகப் புதுக்கவிதை இடம்பெறவில்லை. ஹைகூ இல்லவே இல்லை.
வல்லிக்கண்ணன் பாலா தமிழவன் போன்றவர்கள் புதுக்கவிதைப் போக்குகள் பற்றி ஆய்வு செய்து எழுதியிருக்கின்றனர். அப்துல்ரகுமான். நிர்மலா சுரேஷ் அறிவுமதி சுஜாதா ஆகியோர் ஹைகூ கவிதைகளைப் பற்றிநிறைய எழுதியிருக்கின்றனர். இப்படியாகக் கவிதையின் தனித்தனி வடிவங்கள் தனித் தனியாகத் தாலாட்டப் பட்டிருக்கின்றன.
மூன்றையும்சேர்த்துத் தாலாட்டுவதுதான் முழுமையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
எத்தகைய கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் உங்கள் ஆய்வில் இடமளித்திருக்கிறீர்கள்?
எந்த வடித்தில் எவர் எழுதியிருந்தாலும் அந்த வடிவத்தில் கவிதையும் புதியதொரு சிந்தனையும் இருந்தால் தயங்காமல் எனது ஆய்வில் அவற்றை இணைத்துக் கொள்கிறேன். பத்தரைக்கம்பன். நாலரைக்கம்பன் என்றெல்லாம் தங்களைப் பிரகடனப்படுத்திக்கொண்டு கவிதையென்பது வரிக்கணக்கு என்று புரிந்து கொண்டு எழுதித் தள்ளுகிறவர்களை என் ஆய்வில் வருத்தமுடன் தவிர்க்கிறேன். அதே நேரத்தில் ‘கல்லானால் ரோட்டுக்கு. புல்லானால் மாட்டுக்கு’ என்று புதியதொரு புருஷ இலக்கணத்தை வகுத்திருக்கும் முகம் தெரியாத ஒரு கல்லூரி மாணவிணையும் ‘மாமனார் உழவர் சந்தையில் காய்கறி விற்கிறார். மருமகன் உலகச் சந்தையில் இந்தியாவை விற்கிறார். என்று எழுதிய அறியப்படாத ஓர் இளைஞனையும் ‘இஷ்டப்பட்ட இருவர் சேர்ந்த கஷ்டப்படுவதே காதல்’ என்று ஒரு நேர்காணலின்போது சொன்ன நடிகை அர்ச்சனாவையும் நான் விட்டுவிடவில்லை.
இது கவிதைகளின் தொகுப்பல்ல அறிஞர் ரா.பி.சேதுபிள்ளை 1960-ஆம் ஆண்டு ‘தமிழ்க்கவிதை களஞ்சியம்;;’ எனும் நூலைக் கால வரிசைப்படி தொகுத்திருக்கும் வேலையைச் செய்து விட்டார். அதுவும் நியாயமான பங்கீட்டில் தொகுக்கப்படவில்லை என்பது வேறு விஷயம்.
கவிதையின் பொற்காலம் எது?
கவிதை வரலாற்றில் மூவாயிரம் ஆண்டுகளைவிடக் கடந்த முப்பது ஆண்டுகளின் வீச்சு அதிகமாக இருக்கிறது. ‘திருக்குவளை இருந்தென்ன இரு குவளை இருக்கிதே’ என்கிற மா.காளிதாஸ் கவிதை கலைஞரையே கலங்கச் செய்யும் என்பதுதானே உண்மை.
புதுக்கவிதை வரலாற்றில் அதன் வீச்சை எப்படி உணர்கிறீர்கள்?
புதுக்கவிதை அறிமுகமான (1930) ‘மணிக்கொடி’ காலத்தில் கவிதைகள் தூவானம் போலச் சிதறியது. ‘எழுத்து’க்காலம் என்றழைக்கப்படுகிற 1950-களில் கவிதை மழை போலப் பொழிந்தது. ஆயினும அது மக்களிடம் போய்ச் சேரவில்லை 1970-களில் வந்த ‘வானம்பாடி’களின் கவிதைகள் மக்கள் இயக்கமாகிப் ‘புயல்’ போல வீசியடித்து ஓர் இலக்கிய மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தன. 1980-களில் இந்தக் கவிதைச் சுதந்திரம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு ஏராளமான கவிதைகள் ‘உற்பத்தி’ செய்யப்பட்டன. அதன் விளைவாக நீர்த்துப்போய்க் காணப்பட்ட கவிதை 1990-களில் மீண்டும் ‘புயலாக’ வடிவெடுத்து வீசிக் கொண்டிருக்கிறது. வானம்பாடிகளின் எழுச்சி வீண்போகாமல் தமிழ்க் கவிதைகளில் இப்போது அதிசயிக்கத்தக்க அருமையான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்க் கவிதைகளின் பொற்காலம் 1990-களில் தொடங்கித் தொடர்கிறது என்பதுதான் என் ஆய்வுகள் சொல்லும் உண்மையாக இருக்கிறது.
புரியாத கவிதைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
எல்லாம் புரிந்த பின்னாலும் சிந்தனையைத் தொட்டுச் சிலிர்ப்பதுதான் கவிதை. ஆனால் ‘எதுவுமே புரியாமல் இருப்பதுதான் கவிதை’ ‘எந்த அளவுக்குப் புரியவில்லையோ அது அந்த அளவுக்கு நல்ல கவிதை’ என்பது போன்ற புரிதல் வியாக்கியானங்களும் இங்கே  தாப்படுகின்றன. இது ஏதோ புதுக்கவிஞ்ர்களின் புலம்பல் அல்ல. மாபுக்கு இந்த மரபு உண்டு. புரியாத கவிதைகள் குறித்து அதிகம் பேசப்படுவதால் அதில் மயங்கிப் பல கவிஞர்கள் இப்படி எழுதத் தொடங்கி விட்டார்களோ என்று எண்ணத் கோன்றுகிறது. மரபில் புரியாமல் எழுதும் வழக்கம் இருந்தது புதுக்கவிதையிலும் அதுநீடிக்கறது. இதில்ஏதாவது அர்த்தம்இருக்குமோஎன்று குழம்ப  வைக்கிறார்கள்.
நீங்கள் ஒரு முகாம் சார்ந்த படைப்பாளியாக இருக்கிறீர்கள. இந்த நிலையில் ‘பாரபட்சமற்ற முறையில்’ என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்?
நான் ஒரு முகாமைச் சார்ந்தவன் என்பது உண்மைதான். ஆனால் ‘கற்றுணை பூட்டியோர் கடலுள் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சிலாயமே’ என்று திருநாவுக்கரசர் பாடும்போது தமிழ்க் கவிதைதான் திருநாவுக்கரசரை முந்திக்கொண்டு கடலுக்கு மேலே வந்து கம்பீரமாக நிற்பதாக நான் உணர்கிறேன். முகாம் நோக்கத்தோடு இந்தப் பணியைச் செய்தால் அது நிறைவானதாகவும் முறையானதாகவும் இருக்காது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். நான் ஒரு குறிப்பிட்ட முகாமைச் சேர்ந்தவன் என்று தெரிந்தேதான் அனைத்து முகாம்களில் இருந்தும் எனது முயற்சிக்கு மிக உறுதியான ஆதரவைத் தெரிவித்துக் கவிதை நூல்களை அனுப்பபிக் கொண்டிருக்கிறார்கள் பல கவிஞர்கள். வெளி முகாம்களில் இருந்து இதுவரை 250-க்கும் மேற்ப்பட்ட கவிதைத் தொகுதிகள் எனக்கு வந்திருக்கின்றன.
பல அறிஞர்கள் பல ஆண்டுகளாகச் செய்ய வேண்டிய பெரும்பணி இது. தனியொருவராக நீங்கள் சரியாகச் செய்து விட முடியும் என்று நம்புகிறீர்கள்?
எனது முன்னோடிகள் பலர் எழுதியதை முக்கியமான இடங்களில் தொட்டு. நான் தொடர்கிறேன் என்;பதுதான் எனது பலம் தமிழ்க் கவிதை ஆய்வில் தவிர்க்க முடியாத வல்லிக்கண்ணன். பாலா தி.க.சி.. அப்துல்ரகுமான் வைரமுத்து ஞானி வா.செ.கு.. செந்தில்நாதன் பொன்னீலன் போன்ற கவிஞர்கள் இலக்கிய ஆய்வாளர்களிடம் அவ்வப்போது ஆலோசனை கேட்டிருக்கிறேன் சேரன் சிவத்தம்பி ‘சிங்கைச்சுடர்’ஆசிரியர் இளங்கோ மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா போன்றவர்களைப் படைப்புகளில் சந்திக்க விருக்கிறேன்.
தமிழ்நாடு தாண்டியும் நல்ல தமிழ்க் கவிஞர்கள் இருக்கிறார்களே அவர்களையும் சேர்த்துதான் எழுதப்போகிறேன். வெளிநாடுகளிலிருந்தும் தமிழ்க்கவிதைத் தொகுப்புகளை அனுப்பியும். அனுப்புவதாகக் கூறியும் பல தொடர்புகள் கிடைத்திருப்பதால்தான் நூல வெளியீட்டைத் தள்ளி வைக்க நேர்ந்திருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------
‘கவிதையின் கதை’யை எழுதி வரும் நா.முத்துநிலவன் இந்த முயற்சிக்கு முன்னோடியாகச் சில ஆய்வு நூல்களை எழுதிய அனுபவம் பெற்றவர். க.நா.சு.ஜெயகாந்தன் இருவரைப் பற்றி இவர் எழுதிய’இருபதாம் நூற்றாண்டு இலக்கியச் சிற்பிகள்’ என்னும் ஆய்வு நூல் தமிழ் இலக்கிய உலகின் நல்ல ஆதரவைப் பெற்றது.; ‘கவிதையின் கதை’ நூல் உருவாக்கத்திற்கு அலுவலகப் பொறுப்பாளராக இருந்து செயல்படுகிறவர் இவரது துணைவியர் மல்லிகா
புதுக்கோட்டை இலக்கிய ஆர்வலர்களின் அயராத ஒத்துழைப்பும் முத்துநிலவனுக்கு உண்டு.
-------------------------------------------------------------------------------------------------------
நேர்காணல் : கவிஞர் ஜெயபாஸ்கரன் - தினமணி கதிர் - 29.04.2001 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக