கேரளாவில் தேசியக் கட்சிகள் இல்லையோ?
--நா.முத்து நிலவன்--
இந்தியா ஒரேநாடு, இந்திய மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்று இவர்கள் பேசுவது உண்மையானால், முல்லைப் பெரியாறு தொடர்பாகத் தமிழர்களுக்கு எதிராகவே இவர்கள் தொடர்ந்து செயல்படுவது ஏன்? – எனும் நியாயமான கேள்வியை திரு பழ.நெடுமாறன் அவர்கள் எழுப்பியள்ளார்கள் (தினமணி-14-12-2011)
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, இன்றைய கேரளாவும் தமிழ்நாடும் ஒரே மொழிபேசும் ஒரே தேசிய இனமக்கள் வாழும் பகுதியாகத்தான் இருந்தன என்பதை நம் கேரளச் சகோதரர்களும் ஒப்புக்கொள்வார்கள். நம் சங்க இலக்கியத்தில் வரும் சேர-சோழ-பாண்டிய ‘மூவேந்தர்’களில் சேரமன்னர் ஆண்ட பகுதிதான் இன்றைய கேரள மாநிலம் என்பதை யாரேனும் மறுக்க முடியுமா?
ஆனாலும் 1956இல் மொழிவழி மாநிலங்கள் பிரிந்த பிறகு, அந்தச் சகோதர உணர்வை இருவரும் மறந்து, இன்றைய ‘முல்லைப் பெரியாறு’ பிரச்சினை இருநாட்டுப் பகைபோல ஆகி, ‘நாம் இருவரும் முரண்பட்டால் நட்டம் இருவருக்கும்தான்’ எனும் நினைப்பே இல்லாமல் ‘சுயநல அரசியல்’ எனும் சுழலில் சிக்கிக்கொண்டிருப்பதை என்ன சொல்ல?
ஆங்கிலேய ஆட்சியில் இராணுவப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்த கர்னல் பென்னி குக் எனும் நன்மனத்தார், தான்வந்த -இந்தியமக்களைச்சுரண்டும்- வேலையை மறந்து, ‘தென்னிந்தியாவின் அந்தப்பக்கம் பெய்யும் பெருமழைநீர் பெரியாறு எனும் ஆறாக ஓடி வீணாகக் கடலில் கலப்பதையும், இந்தப் பக்கம் மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நிலம் நீரின்றித் தரிசாகித் தவிப்பதையும் கவனித்தார்.
ஏற்கெனவே --1798இல்-- ராமநாதபுரம் மன்னர் சேதுபதி முல்லையாறு மற்றும் பெரியாறு நதிகளை இணைத்து அணைகட்டுவதன் மூலம் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்குத் தண்ணீர் கொண்டுவர முயன்று, பின்னர் கைவிட்ட திட்டத்தைத் தான்எடுத்துச் செயல்படுத்திட முன்வந்து, ஆங்கில அரசின் அனுமதியையும் பெற்றுவிட்டார் பென்னி.
1887இல் எழுபத்தைந்து லட்ச ரூபாய்த் திட்டமதிப்பீட்டில் வேலையைத் தொடங்கி. அடர்ந்த காடு, பெருவெள்ளம், காட்டு விலங்குகள் தந்த அச்சம் இவற்றுடன் போராடி, மூன்றாண்டுகள் கட்டிய அணை பெருமழை வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டது! அதன் பின்னரும் அசராத பென்னி, அரசின் உதவியும் கிட்டாத நிலையில் இங்கிலாந்து சென்று தன் சொத்துகளையெல்லாம் விற்றுக் கொண்டுவந்த பணத்தில் அணையை மீண்டும் கட்டி முடித்தார் என்பது ஏடறிந்த வரலாறு
ஆங்கிலேயரான பென்னி குக் எனும் அந்தப் புண்ணியவான் கட்டிய ‘முல்லைப் பெரியாறு’ அணையை 1895டிசம்பர் மாதம் சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் என்பவர்தான் திறந்து வைத்தார் எனும்செய்தி இன்றைய ‘சுயநல அரசியல்வாதி’களுக்குத் தெரியுமா?
152அடிவரை -முழுக்கொள்ளளவும்- நீரைத் தேக்கிவந்த அணையில் மாநிலப் பிரிவினைக்குப் பின், பல்வேறு காரணங்களைக் கூறி தற்போது 120 அடியிலேயே நீரளவை நிறுத்திவிட்டது கேரள அரசு. இத்தனைக்கும் உச்சநீதிமன்றம் 142 அடிவரை நீரைத் தேக்கிக்கொள்ளலாம் என்று 2006இல் வழங்கிய தீர்ப்பை இன்றுவரை நடைமுறைப்படுத்தவிடாமல் இழுத்தடித்து நம் விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருவதை அங்குள்ள எந்தத் தேசியக் கட்சியும் கண்டுகொள்ளவில்லை.
இந்தப் பிரச்சினை இப்போது திடீரென்று புயலாக எழுந்து வீசக் காரணம் என்ன?
ஆளும்கட்சி அமைச்சராக இருந்த ஜேக்கப்பின் மறைவால் வரப்போகும் இடைத்தேர்தல்தான்!
ஒரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலால் இவ்வளவு பெரிய பிரச்சினையை அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து அரசியலாக்கிடக் காரணம் இருக்கிறது!
‘சரி, இடைத்தேர்தல் என்றால் ஓரே ஒரு தொகுதிதானே? அதற்கா இவ்வளவு கலவரம்!’ என்று கேட்கலாம்… ஆனால் அந்தத் தொகுதியால் ஆட்சியே மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதுதான் சுயநல அரசியல் சுழலின் மையம்.
140 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கேரளாவில், இப்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கு 72இடங்களும், எதிர்க்கட்சிகளுக்கு 68இடங்களும் உள்ளன. அமைச்சர் ஜேக்கப்மறைவு, சபாநாயகர்ஒருவர் எனும்நிலையில்; காங்கிரஸ்கட்சி; 70இடங்களுடனும், எதிர்க் கட்சிகள் 68இடங்களுடனும் உள்ளன. ‘வெறும் 174வாக்குகளில் இழந்த இந்த ஒரு தொகுதியையும் எதிர்க்கட்சி பிடித்துவிட்டால்?’ 70–69 எனும் நிலையில் ஆளும்கட்சி மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாக நேரும். அந்தத் தொகுதி இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணைப்பகுதியையும் உள்ளடக்கிய ‘பிரவம்’ தொகுதி. அந்த இடைத்தேர்தல் அனேகமாக வரும் ஜனவரி மாதம் நடக்கலாம். அதற்குள் ‘களத்தை’த் தயாரிக்கும் ‘அரசியல் பணி’தான் இப்போது நடக்கிறது!
இப்போது புரிகிறதா –
முல்லைப் பெரியாறு அணையின்
‘அரசியல் முக்கியத்துவம்’?
கேரளாவின் இன்றைய ஆளும் கட்சி, தனது ஆட்சி அதிகாரத்தைத் தொடரவும், எதிர்க்கட்சி தான் இழந்திருக்கும் அதிகாரத்தைப் பிடிக்கவும் நடத்தும் போட்டியில் பலியாவது தமிழக மக்கள் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாடும்தான் என்பது புரிகிறதா? இவர்களின் ‘சுயநல அரசியல் போதை’க்கு நாம் என்ன ஊறுகாயா? இவர்கள் தங்களை ‘தேசிய மற்றும் சர்வதேசியக் கட்சிகள்’ என்று சொல்லிக் கொள்வது நியாயம்தானா?
இவர்கள் தமது கட்சிகளின் முன்னோடிகளிடமாவது பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா?
காங்கிரஸ்காரர்களான காமராஜர், ராஜாஜி ஆகியோரும், கம்ய+னிஸ்ட்களான இ.எம்.எஸ்., பி.ராமமூர்த்தி ஆகியோரும் இணைந்து, இரு மாநில மக்களும் பயன்படத்தக்க ‘பரம்பிக்குளம் ஆழியாறு’ திட்டத்தை 1958இல் கொண்டுவந்தது இன்றைய கேரளத் தலைவர்களுக்குத் தெரியாதா?
தமிழ்நாட்டின் ‘மூத்த பொறியாளர் சங்கம்’ தயாரித்துள்ள ‘முல்லைப் பெரியாறு- பிரச்சினையும் தீர்வும்’ எனும் அருமையானதொரு 42நிமிட ஆவணப் படத்தை இணையத்தில்கூடப் பார்க்கலாமே (http://player.vimeo.com/video/18283950?autoplay=1) இதையாவது அந்தத் தலைவர்கள் போட்டுப் பார்த்தார்களா? முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை, நமது தமிழக மக்களே சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறபோது, ‘டேம்-999’ எனும் ‘மாயாஜால-விட்டலாச்சாரியார்’ படத்தைச் செலவு செய்து எடுத்து மக்களைக் குழப்பும் வேலையில் கேரளா வெற்றிபெற்று வருகிறதே! இதற்குத் தடைவிதித்ததை விடவும், நமது ஆவணப்படத்தைக் கிராமம் கிராமமாகக் கொண்டுபோய்த் தமிழக அரசு காட்டியிருந்தால் குறைந்த பட்சம் தமிழர்களையாவது தெளிவுபடுத்தியிருக்கலாமே?
சரி ‘டேம்-999’படத்தில் வருவது போல, அணையே உடைந்தாலும் கூட, ‘முல்லைப் பெரியாறு அணையில் தேக்கிவைக்கக் கூடிய நீர் அளவைவிட 7மடங்கு தாங்கக் கூடியதாக அதன் கீழிருக்கும் இடுக்கி அணை உள்ளது உண்மைதான்’ என்று கேரள அரசின் அட்வகேட் ஜெனரலே கேரள உயர்நீதிமன்றத்தில் --ஒப்புதல் வாக்குமூலம் போல-- சொன்னதைக் கூட அவர்கள் ஏற்கவில்லையே?
அணை உடைந்தாலும், அந்த வெள்ளம் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து கீழே உள்ள இடுக்கி அணையைத்தான் வந்தடையப் போகிறது. இடையில் எந்த நாடும் நகரமும் இல்லை 35லட்சம் மக்கள் அழிந்துபோவாரகள் என்பதும் மிகைப்பட்ட கதை! உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி நீர்மட்டத்தைக் குறைத்த காரணத்தால் ஏற்பட்ட ஆற்றுப் படுகைகளில் அத்துமீறி வீடுகட்டி வாடகைக்கு விட்டிருக்கும் 450 ‘ஆக்கிரமிப்பு’கள்தாம் பாதிப்படையும்! அதையும்கூட எளிதாகக் காப்பாற்றிவிட முடியும். இந்த உண்மையைச் சொன்னதற்காக கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் மேல் பாய்ந்து அவரைப் பதவிநீக்கம் செய்யவேண்டும் என்று குரல்கொடுத்தவர் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தனார்தானே?
கேரள அரசின் இன்றைய பிரச்சாரங்களில் முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவு 136அடிதான் என்றே திரும்பத்திரும்பச் சொல்லி வருவது பச்சைப்பொய் அல்லவா? ‘152அடிக் கொள்ளளவில் 142அடிவரை நீரைத் தேக்கிக்கொள்ளலாம்’ என்னும் 2006 உச்சநீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்தும் கேரளத் தலைவர்களில் ‘தேசியவாதிகள்’ யாருமே இல்லையா?
புதிய அணை கட்டுவதற்கான மசோதாவிற்கு கேரள அரசின் அனைத்துக் கட்சிகளும் சட்டமன்றத்தில் ஆதரவு! ஆளும் கட்சிக்கு ஒருபடி முன்னே போய் அதற்கான நிதிவசூலில் இறங்கப் போவதாகவும், உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் முழங்குகிறார்!
‘தமது ‘தேசியஉணர்வும் ஒன்றும் குறைந்ததல்ல’ என்று காட்டிக்கொள்ள முனைந்த கேரள பா.ஜ.க. இளைஞரணியினர் இதுவரை யாருமே போகாத அடர்காட்டுப் பின்வழியில் சென்று அணையைச் சேதப்படுத்தும் ‘கரசேவை’யை கடந்த வாரம் மேற்கொண்டார்கள். அவர்களும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பற்பல தொகுதிகளில் 50,000வாக்குகளுக்கு மேல் பெற்றிருக்கிறார்களே! அவர்களுக்கு இடைத்தேர்தலிலாவது வெற்றிபெற வேண்டும் எனும் வேட்கை இருக்காதா என்ன?
ஒரு வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும் கூட, புதிய அணை கட்டக் குறைந்தது 5ஆண்டுகளாவது ஆகும்;. அதுவரை 120அடிக்கு மேலே முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்காமலிருக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிக் கொடுத்த மனுவை உச்சநீதிமன்றம் நல்;லவேளையாகத் தள்ளுபடி செய்துவிட்டது. இல்லையென்றால், அந்த 5ஆண்டுகளும் தமிழகத்தில் முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி வாழும் 2லட்சம் விவசாயிகளின் வாழ்க்கைக்கு யார் உத்தரவாதம் தருவது? சுமார் 5லட்சம் மக்கள் குடிநீருக்கு எங்கே போவார்கள்?
‘புதிய அணையின் மூலம், தமிழகத்திற்கு இப்போது கிடைக்கும் நீரளவில் ஒருசொட்டுக்கூடக் குறையாமல் பார்த்துக்கொள்வோம்’என்று கேரளஅரசு சொல்வதையும், இதற்காக 700கோடி ரூபாய் செலவுசெய்யத் தயாராக இருப்பதாக அவர்கள் சொல்வதையும் எப்படி நம்புவது? ‘தமிழகத்திற்கு நீர், கேரளாவிற்குப் பாதுகாப்பு’ என்று முழங்குகிறார் கேரள முதல்வர். ஏற்கெனவே தரவேண்டிய நீரளவையே தராதவர்கள் புதிய அணைகட்டியா தந்துவிடப்போகிறார்கள்? பகலிலேயே பசுமாடு தெரியவில்லை என்பவர்கள் இருட்டில்போய் எருமை மாட்டைத் தேடித் தருவார்களா என்ன?
2006ஆம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்திருத்த மசோதாவின்படி, ‘கேரள நதிநீர்ஆணையத்தின் நடவடிக்கை இந்தியாவின் எந்த நீதிமன்றச் சட்ட வரம்புக்கும் உட்பட்டதல்ல’ என்று சொல்லியிருப்பது, ‘கேரளா தனி நாடு’ என்று கேரளத் தலைவர்கள் நினைப்பதாகத்தானே படுகிறது? கேரளா இந்தியாவின் ஒரு மாநிலம் இல்லையா? அங்குள்ளவர்கள் இந்தியர்கள் அல்லரா? கேரளாவில் தேசியக் கட்சிகளே இல்லையா? என்று கேட்கத் தோன்றுவது நியாயம் தானே?
புதியஅணை கட்டுவதற்கான ஆய்வுகளை நடத்த மத்தியஅரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது என்பதும், இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தின் அரசியல் அமைப்பு பெஞ்ச் விசாரணை நடத்திவந்தாலும், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிக்குத் தடையேதும் விதிக்கப்படவில்லை என்பதும், மிகுந்த அரசியல் தொடர்புள்ளது அல்லவா? மாநில அரசு ‘பிள்ளையைக் கிள்ளி விடுகிறது’ மத்திய அரசு ‘தொட்டிலை ஆட்டிவிடுகிறது’ என்பது, அரசியலில் அரிச்சுவடி படித்துவரும் ‘கைப்புள்ளைக்கு’க் கூடப் புரியாதா என்ன?
கேரள முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து பிரதமரைச் சந்தித்துவிட்டார்கள்! ‘ஆகா! என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!’ என்று ‘டூயட்’பாடாத குறைதான் போங்கள்!
தமிழக முதல்வரின் அறிக்கைக்கு அடுத்த நாளே கேரள முதல்வரின் பதில்! அடடடா! கேரள முதல்வரின் ‘இடைத்தேர்தலில் வெற்றிபெற்றே தீர்வேன்’ எனும் சுறுசுறுப்புத்தான் என்னே!
இங்கே தேனி கம்பம் உள்ளிட்ட தமிழகத்தின் கேரள எல்லையில் உள்ள மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு பல ஆயிரம் பேர் -தமிழ்நாட்டின் எந்த அரசியல் கட்சியையும் நம்பாமல் --தாமாக ஊர்வலம் போவது தொடருமானால், இது ‘சேர – பாண்டிய’ நாடுகளின் போர்போல் ஆகிவிடக்கூடிய அபாயத்தை கேரள அரசியல்வாதிகள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்!
அங்கே அவர் முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டுப் புதியஅணை கட்டியே தீர்வேன் என்பது, ‘அடைந்தால் மகாதேவி… இல்லையேல் மரணதேவி… உறா உறா உறா’ என்ற பழம்பெரும் நடிகர் வீரப்பாவின் வீரவசனத்தை நினைவூட்டுகிறது என்றால், நம் தமிழ்நாட்டில் அவரது கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவர், ‘புதிய அணைக்கு எதிரான போராட்டத்தைத் தேனியில் இருந்து துவங்கி வைப்பது’ என்பது ஒருபடி மேலே போய், ‘அடிப்பியோ… ஙொப்பன் மவனே.. சிங்கம்’டா’ எனும் புகழ்பெற்ற நகைச்சுவை வசனத்தையே நினைவூட்டுகிறது…
நல்லவேளையாகக் கடந்த 50ஆண்டுகளாகத் தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் கருத்தே மேலோங்கி இருந்து வந்த போதிலும், தமிழர்களிடம் என்றென்றும் ‘தேசிய - சர்வதேசிய உணர்வு’ மங்கியதே இல்லை. இன்றும் தமிழ்நாட்டில் இருக்கும் கேரளக்காரர்களின் வணிக வளாகங்களில, ; சில இடங்களில் சிலர்-பலர் கலவரத்தில் ஈடுபட்டாலும் அதைப் பெரும்பாலான தமிழர்கள் ஏற்கவில்லை என்பதுதானே உண்மை?
இதுதான் தமிழ்நாடு!
ஆனால், ‘திராவிட ‘இனவெறிக் கட்சி’ ஏதும் இல்லாத கேரளாவில்(?)’ தேசியக் கட்சிகளே அந்தக் குறையை நிவர்த்திசெய்து வருகின்றன என்பதுதான் சோகச்சுவைமிக்க முரண்பாடு!
இதற்கிடையில் நாம்…
‘சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே – எனும் பாரதி பாடலையும்,
‘இமயம் வாழும் ஒருவன் இருமினால்
குமரி வாழ்வோன் மருந்துகொண்டு ஓடுவான்’ – எனும் பாரதிதாசன் பாடலையும் விடாமல் பாடுவோம். உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை ஏனெனில் கேரளாவில் மாத்திரமல்ல, நம் தமிழ்நாட்டிலும் தேசியக் கவிகள் மட்டுமல்ல, தேசியக்கட்சிகளும், தலைவர்களும் இருக்கிறார்களே!
அலசலும் அறைதலுமான அருமையான கட்டுரை. ஒன்று விடுபட்டுள்ளதாக எண்ணுகிறேன். அரசியல் ஆதாயத்தோடு.. இடுக்கி நீர்த்தேக்கத்தின் மூலம் 800 மெகாவாட் புனல் மின்சாரம் தயாரிக்கக் கேரள அரசு போட்ட திட்டத்திற்கு முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர்த் தேக்கினால், இடுக்கி அணைக்கு நீர் வரத்து குறைந்து போகும் என்னும் உள்நோக்கமுமே புதிய அணை கட்டுதல் என்னும் முயற்சி.
பதிலளிநீக்குப
அந்தோ! கேரளாவில் மனித இனமே இல்லையோ?! மனிதன் எவனுமே அடுத்த உயிரைச் சார்ந்துதான் வாழவேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் நடக்கிறார்களே இந்த "அறிவாளிகள்". இவர்கள் திருந்துவது எந்நாளோ?-
பதிலளிநீக்கு-----க.வேழவேந்தன்,புதுக்கோட்டை.
எல்லாம் சரி சார், இரண்டு பக்கமும் இருக்கும் நம் கம்யுனிஸ்டுகள் என்ன சொல்கிறார்கள்?
பதிலளிநீக்குபுதியமாதவி
வணக்கம் முத்து நிலவன் அவர்களே.
பதிலளிநீக்குநலமா?
நான் ...சிவகுமாரன்.. நினைவிருக்கலாம்.
முல்லைப் பெரியாற்று பிரச்சினையில் .. நான் பெரிதும் மதிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட இப்படி நியாயமின்றி நடந்து கொள்கிறதே.
தமிழகத்தில் அந்தக் கட்சியினரின் நிலைப்பாடு என்ன?
நண்பர்களுக்கு வணக்கமும் நன்றியும்.
பதிலளிநீக்கு1. நன்றி, பொன்.க. அய்யா,
உங்கள் கருத்து மிகப் பொருத்தமானது. விரிவஞ்சி நான் விட்டிருந்தாலும் இது ஒரு முக்கியமான கருத்துத்தான். நன்றி
1. நன்றி புதிய மாதவி, நலம்தானா?
இதைத்தான் நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்…
நாயகன் திரைப்படத்தில் விடுதலையாகிவந்த தாத்தாவைப்பார்த்து பேரன் கேட்ட கேள்விக்கு கமல்சொன்ன பதில்தான்…
2. நன்றி தமிழ்ச்செல்வன்,
இதை நீங்கள் எனது வலைப்பூவின் பின்னூட்டத்திலேயே இட்டிருக்கலாம்
3. நன்றி சிவகுமாரன்
நாம் சந்தித்திருக்கிறோமா?
மன்னிக்கவும்.
எனக்கு நினைவில் இல்லையே?
உங்கள் வலைப்பூ முழுவதும் ‘பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடி..” வழிந்தோடுகிறதே! என் வலையில் எனது மரபுக்கவிதை உங்களுக்குப் பிடித்தமானதோ? நன்றி. எனது 23-12-2011 படைப்புப் பற்றிய உங்கள் கருத்தையும் அறிய ஆவலோடு இருக்கிறேன்.
தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள்.
(என் மனைவி, முழங்கையில் இரண்டாவது அறுவைச்சிகிச்சைக்குப் பின்னர். ஒரு சில நாள்களாகத்தான் இயல்புநிலைக்குத் திரும்பியிருக்கிறார். வீட்டில் சமையல் வேலையும் செய்துகொண்டு இயங்கும் மனைவியரின் அருமை இப்போதுதான் நடைமுறையில் புரிகிறது…)
நண்பர்களுக்கு மீண்டும் வணக்கமும் நன்றியும்.
தோழமையுள்ள.
நா.மு.
26-12-2011
இந்த நமது கட்டுரையைத் - தங்கர் பச்சான் உள்ளிட்ட – தம் நண்பர்களுக்கெல்லாம் அனுப்பித் தொலைபேசியிலும் கூப்பிட்டுப் பாராட்டிய நண்பர் -- திருச்சியிலிருந்து வெளிவரும் -- ‘நாளை விடியும்’ மாத இதழின் ஆசிரியர் திரு அரசெழிலனுக்கும்,
பதிலளிநீக்குதொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய நண்பர் ‘ஆறாம்திணை’ அப்பணசாமிக்கும்
நன்றிகள் பலப்பல..
இவர்களிருவருமே இந்தக் கட்டுரையின் பின்னூட்டத்தில் இதையே எழுதியிருந்தால் இன்னும் மகிழ்ச்சியடைந்திருப்பேன்..
எனினும் உங்களுக்கும் எனது நன்றி நண்பர்களே.
ஆன்புடன்,
நா.மு.
28-12-2011
மிக்க நன்றி நண்பரே ........போட்டுக்கொண்ட கண்ணாடி மூலமாகவே எல்லோரும் கருத்து கூறிக்கொண்டிருக்கையில் அல்லது சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்கையில் உள்ளதை உள்ளபடி எழுதி இருப்பதற்கு நன்றி...தேசிய ஒருமைப்பாட்டிற்காக தியாகம் செய்த ,சர்வதேசம் பேசும் பொதுஉடைமை வாதிகள் கூட குறுகிய எண்ணத்தோடு செயல்படுவது காலக்கொடுமை.கட்டுரைக்கு நன்றி
பதிலளிநீக்கு