பட்டுக்கோட்டையின் பாட்டுக் கனவுகள்…
-- நா.முத்துநிலவன்--
“ எளிய பதங்கள் எளியநடை அறிந்து கொள்ளக்கூடிய சந்தம் பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினுடைய காவியமென்று செய்து தருவோம் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டு வருடத்து நூல் பழக்கமுள்ள தமிழ்மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்கு உள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும்.” என்று மகாகவி பாரதி தனது ‘பாஞ்சாலி சபதம் ‘முன்னுரiயில் பிரகடனம் செய்வார்.
மகாகவியின் எளிமையும் புராட்சிக் கவியின் கூர்மையும் இணைந்துவரத் தமிழ்ப் பாடல் உலகில் தனிப்பாதை போட்டவர் ‘மக்கள் கவிஞர் ‘ பட்டக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பட்டுக்கோட்டையின் அருகில் உள்ள செங்கப்படத்தான் காடு எனும் ஊரில் சிற்றூரில் பிறந்து 29 வயதுவரை வாழ்ந்து அதற்குள் படாக சிரமங்களையெல்லாம் பட்டு தற்காலக்கவிஞர்கள் எவரும் தொடாத சிகரங்களையெல்லாம் தொட்டவர்.
கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் (டாஸ்கேபிடல்) எனும் நூலின் சாராம்சமே வர்க்கப் போர்தான். இதை எளிமைப்படுத்திய பலரும் ‘முழிபெயர்த்து’நின்றபோது ‘வர்க்கப் போர்’ என்பது வேறொன்றுமில்லை… என்பது வழிகாட்டுவதுபோல-
‘வசதி இருக்கிறவன் தரமாட்டான்-அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்’
என்று எழுதியவர் பட்டுக்கோட்டை .
‘உலகத் தொழிலாளர்களே! ஓன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்க்கு எதுவும்மில்லை அடிமைச் சங்கிலிகளைத் தவிர!’ எனும் மார்க்ஸ் ஏங்கெல்ஸின் உலகப் புகழ்பெற்ற தொழிற்சங்க அறைகூவலைக்கூட
‘காடு வெளைஞ்சென்ன மச்சான்-நமக்கு
கையும் காலும் தானே மிச்சம்!’ என்று எளிமைப்படுத்தி எழுதிய கவிஞர் வேறு எவர் இருக்கிறார்கள்?
இன்றும் இந்தியாவில் உழைக்கும் மக்களிடையே பெரும்பான்மையாகக் கிடக்கும் கூலி விவசாயிக்கு’ இழப்பதற்கு எதுவுமில்லை-உழுபடைக் கருவிகள் கூட அவனுக்குச் சொந்தமில்லை.
பாரதி வழிவரும் சிந்தனைப் பரிணாமத்தை பட்டுக்கோட்டையின் பாடல்களில் நிறையப் பார்க்க முடியும்.
இரண்டு வேறுவேறு நிலைகளை-முரண்பாட்டை-ஒப்பிட்டு பாரதி காட்டிய சிந்தனை ஒன்றுண்டு:
‘இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
என்னரும் திரு நாடு
கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றித் தரும் நாடு’ என்று பாடிவிட்டு இந்த நாட்டில்தான்
‘கஞ்சி குடிப்பதற்கிலார்-அதன்
காரணம் இதுவெனும் அறிவுமிலார்’ என்று வருந்துவார்.
இதையே தனது பாணியில் பாடிய பட்டுக்கோட்டையார்
'தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது!
ஆனாலும் மக்கள் வயிறு காயிது!’ என்று பாமரத் திருக்குறள் போலப் பாடிவிட்டு அதற்கும் மேலே போய்க் காரணத்தையும் பாட்டிலேயே போட்டுடைக்கிறார்:
‘மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே-பசி
வந்திடக் காரணம் என்ன மச்சான்? -அவன்
தேடிய செல்வங்கள் சீமான் வீட்டிலே
சேர்ந்தனால் வரும் தொல்லையடி!’ அதிலும் “சீமான் வுpட” என்பது மிகச்சரியான குறி என்பதை உணர்ந்தே திரைப்படம் எடுத்தவர்கள் அந்த வார்த்தைகளை சந்தம் மாறாமல்(!) “வேறே இடம்” என்று திருத்திவிட்டார்கள்!
விடுதலை பெறுவதற்கு 30 வருடமுன்பே
'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’ என்று பாரதி போல எதிர்கால மாற்றம் பற்றி உறுதியோடிருந்தார் பட்டுக்கோட்டையார். அந்த மாற்றமும் 'தானாக ஒன்றும் நடந்து விடாது' எனும் எதார்த்தத் தெளிவோடு நாம்தான் முன்கை எடுக்க வேண்டும் என முடுக்கிவிட்டு
‘தனி உடமைக் கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா!
தானா எல்லாம் என்புத
பழைய பொய்யடா!’ என்பது தமிழின் புதிய குரல்!
'பொதுநலம் பேசும் புண்ணியவாங்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேசம் ‘என்று அவர் பாடியது இன்றைக்கும் பொருந்துகிறதே!
இறுதியாக முக்கியமான ஒன்று:
எளிமைப்படுத்துவது வேறு மலிகப்படுத்துவது வேறு!
‘போட்டுக்கிட்டா-தாலி போட்டுக்கிட்டா
ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் - என்று ‘டப்பாங்குத்துப் பாடல் இசையில்கூட பெண் சமத்துவக் கருத்தைப் பேசியவர் பட்டுக்கோட்டை!
‘காளை மாட்டுக்குக் காம்பெதுக்கு
கன்னி கழிக்கப் படிப்பெதுக்கு’ எனும் உழுத்த எழுத்தே ஓங்கிவரும் இன்றைய சூழலில் ‘படிப்பு தேவை-அதோடு உழைப்பும் தேவை‘ என்று சமூகப் பொறுப்பைச் சரியாக இலக்கியமாக்கிய பட்டுக்கோட்டையாரை மறக்க முடியுமா?
‘ஆசை வைக்கிற இடம் தெரியணும் மறந்துவிடதே!
அதுக்கு மேலே வார்த்தையில்லே வருத்தப்படாதே’ என்று எழுதியதும் பருவக் கிளர்ச்சிக்கும் ஒரு வரம்பு நெறிமுறை உண்டு என்பதையே இலக்கியமாக்கி
‘மாலை வெயில் மயக்கத்திலே
மறந்திடலாமோ?-நான்
மனைவியென்றே ஆகுமுன்னே
நெருங்கிடலாமோ?' என்றும் எழுதிய பாடல் வரிகள் கமூக ஒழுக்கத்துக்கும் சரியான வழிகாட்டியாக இருப்பதை மறந்துவிட முடியுமா?
மக்கள் ஒற்றுமையின் மகத்துவத்தை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பாடத் தவறாத பட்டுக்கோட்டையார்,
'உச்சி மலையில் ஊறும் அருவிகள்
ஒரே வழியில் கலக்குது!
ஓற்றுமையில்லா மனித குலம்
உயர்வும் தாழ்வும் வளர்க்குது!’ என்று வருந்தும் பட்டுக்கோட்டையார்,
‘யாருமேல கீறினாலும் ரத்தம் ஒண்ணுதானே?
ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம்தானே? - என்று கேட்பது இன்றும் பொருந்துகிறதே!
பட்டுக்கோட்டையாரின் மறைவைப்பற்றி
வாழும் தமிழ்நாடும் வளர்தமிழும் கலைஞர்களும்
வாழும் காலம்வரை வாழ்ந்துவரும் நின்பெயரே’என்று எழுதிய கவிஞர் கண்ணதாசனை விட வேறு என்ன சொல்வது?
ஆனாலும் ஒன்றுண்டு:
கவிஞரின் பெயரால் பட்டுக்கோட்டையில் ஒரு நினைவு மண்டபம் கட்டுவதற்காக எடுக்கப்பட்டுவரும் தமிழக அரசின் முயற்சிகள் ஆண்டுக்கணக்கில் தாமதமாவதைத் தவிர்த்து இன்றைய அரசு துரிதப்படுத்தி கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்த உதவுவதே பட்டுக்கோட்டையாருக்குச் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும்! அதுவே அவர் கனவுகளை நினைவாக்கும்!
----------------------------------------------------------------------------------------------------------
(ஏப்ரல்-13 மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்தநாள்
கட்டுரையாளர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் துணைச் செயல்ர். -------- தினமணி 13.04.1998 )
nalla kaddurai.paaraaddukkal.
பதிலளிநீக்குmullaiamuthan