வலைப்பக்கப் பதிவு எப்படி இருக்க வேண்டும்?

 வலைப்பக்கம் தொடங்கி சுமார் இரண்டரை ஆண்டு முடிந்த நிலையில், வலைப்பக்க வாசகர்களின் வாசிப்பு ருசியைக் கண்டுபிடிப்பதில் நான் தோல்வியடைந்து விட்டேனோ என்னும் குழப்பம் வருகிறது...
பல்லாயிரம் கூட்டங்களில் பேசியிருக்கும் நான், அந்தந்தக் கூட்டத்தின் பார்வையாளர் தன்மைக்கேற்ப என் கருத்துகளையும் விட்டுக்கொடுக்காமல் பேசுவதே என் வழக்கம். ஓரளவிற்கு நல்ல நல்ல கருத்துகளைக் கொண்டு நல்லவிதமாகபேசக்கூடியவன் என்றே பெயரெடுத்திருக்கிறேன்.(?)

பாரதி தன்னைத்தானே நொந்துகொண்டு சொன்னதுபோல... உயிரை உருக்கி ஒரு படைப்பைத் தந்தால்... அதைக் கண்டுகொள்ளாத தமிழ்வாசகர்கள்... போகிற போக்கில் எழுதிய சில -- திரை சார்ந்த – செய்திகளுக்குத் தரும் முக்கியத்துவம் என்னைக் குழப்புகிறது.

நாம ஒன்றும் பாரதியிடம் வரம் வாங்கிவரவில்லை என்பது வேறு!

இதனால்தான் –ச.தமிழ்ச்செல்வன், மாதவராஜ், உதயசங்கர் போலும்- புகழ்பெற்ற எழுத்தாளர் சிலர் தான் எழுதிப் புகழ்பெற்ற வலைப்பக்கத்தைத் தொடராமலே முன்னாள் எம்எல்ஏ மாதிரி “முன்னாள் வலைப்பக்க எழுத்தாளர்“ ஆகிவிட்டார்களோ என்றும், எஸ்.வி.வேணுகோபால் போலும் நல்ல எழுத்தாளர் சிலர் வலைப்பக்கமே தொடங்காமல் இருக்கிறார்களோ? என்றும் நினைக்கத் தோன்றுகிறது...

இவ்வளவு புலம்பலும் ஏன் என்றால்...
எனது எழுத்தில் நானும் ரசித்து, நம் வலைவாசகர்களும் பெரிதும் ரசித்த “முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே“ எனும் எனது பதிவு ஆரம்பத்தில் முதலிடத்தில் இருந்து, பிறகு விகடன், விஜய்தொலைக்காட்சி பற்றிய சாதாரணப் பதிவுகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டு இரண்டாண்டுக் காலமாக நான்காம் இடத்தில் இருந்து வந்தது..
இப்ப என்னடான்னா...
ஒரு திரைப்படம் பற்றியும், சிவ.கார்த்தி பற்றியும், ஒரே நாளில் நான் எழுதிப் பதிவிட்ட கவிதை(?) மற்றும் கட்டுரை இரண்டும் அடித்துப் பிடித்து முன்னால் போய் நின்று கொண்டு, மதிப்பெண்ணைப் பின்னால் தள்ளிவிட்டன...! (சிவ கார்த்தி ஒருநாள் முழுவதும் தமிழ்மணத்தில் முதலிடத்தில் இருந்தார்!)  நம்ம “முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே“ பழைய படிக்கு ஆறாமிடம்...!
அதுவுமில்லாமல் அதிகமான வாசகர்கள் படித்த முதல் பத்துப் பதிவுகளில் இரண்டுமட்டுமே ஊடகம் சாராததாக இருக்கிறது!

அதுக்காக விட்டுடுவமா? வாசகர்களும் ரசிக்கத்தக்க விதத்தில் இன்னும் நல்ல நல்ல செய்திகளை எழுத முயற்சி செய்ய வேண்டும்... விடப்போவதில்லை... 

ஊடகச் செய்திகளை ஊன்றித் தொடரும் நம் வாசகர்கள், ஊடகம் தாண்டியும் உலகம் இருக்கிறது, உண்மையில் அதுதான் உலகத்தை மாற்றுகிறது என்பதை எப்போது புரிந்து கொள்வார்கள்?

இரண்டரை ஆண்டுகளில் – 300 பதிவுகளுக்குள் – ஏறத்தாழ ஒரு லட்சம் பக்கம் படிக்கப்பட்டுப் போய்க்கொண்டிருப்பது ஒன்றும் ஏமாற்றம் தருவதல்ல என்று என்னை நானே சமாதானப் படுத்திக்கொள்கிறேன்(?) லட்சக்கணக்கில் பக்கவாசிப்பை வைத்திருக்கும் நண்பர்கள் 
திண்டுக்கல் தனபாலன் http://dindiguldhanabalan.blogspot.com/
இரா.குணசீலன் http://www.gunathamizh.com/
தி.ந.முரளிதரன் http://tnmurali.blogspot.com/
திருப்பூர் ஜோதிஜி http://deviyar-illam.blogspot.com/
தமிழ் ஓவியா http://thamizhoviya.blogspot.in/
மனசு சே.குமார்.http://vayalaan.blogspot.com/ முதலான நம் முன்னோடிப் பதிவர்கள்தான் இதுபற்றிக் கருத்துச் சொல்ல வேண்டும்.

பத்துலட்சத்தைத் தொட்ட  பதிவுகள் எதுவும் திரைப்படத்தைவிட்டு வெளியில் வரவில்லை என்பதும் ஒரு செய்திதான்..

எனினும், ஆழ்ந்த சிந்தனைக்குரிய நல்ல செய்திகளையும் வாசகர்கள் படிக்கத்தான் செய்கின்றனர்... என்பது தமிழ்மணம், தமிழ்வெளிப் பதிவு முன்னணிகளைப் பார்க்கும் போது தெரிகிறது. பெரும்பாலும் ஜாலியாக கேலியாக எழுதப்படும் எழுத்துகளுக்கே த.ம. வாக்குக் கிடைப்பதும் ஒரு பக்க உறுத்தல்தான் என்றாலும், நல்ல வாசகர்கள் பலர் இருக்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. 

இல்லையென்றால் பலர் எழுதுவதையே நிறுத்தியிருக்க வேண்டுமே! அப்படியில்லாமல், சிறந்த பதிவர் பற்பலரும் இப்போதும் தொடர்ந்து எழுதிக் கொண்டுதானே இருக்கிறார்கள்...?

“என் கடன் பணிசெய்து கிடப்பதே அல்ல! பணிக்கேற்ப விளைவுகளையும் தொடர்புகளையும் எதிர்பார்ப்பதால் வரும் உள் மன உளைச்சல்தான் இது.

இதுபற்றிய நம் நண்பர்களின் மனம் திறந்த கருத்துகளைச் சொன்னால் என்னிடம் இருக்கும் தவறுகளைத் திருத்திக்கொண்டு மேலும் சிறப்பாக எழுத முயற்சி செய்யலாம்.

---------------------------------------------------- 
புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கத்தின் அடுத்த பயிலரங்கை விரைவில் மே-மாத இறுதிக்குள் நடத்திவிட வேண்டியதுதுான்... சுயநலத்தோடு கூடிய பொதுநலம்தான்... என்ன தனபாலன் அய்யா? 

46 கருத்துகள்:

 1. கவலைப்படாதீர்கள் ஐயா? எண்ணற்ற வலைப்பக்கங்களில் ச்சும்மா மேய்ந்து விட்டுத்தான் பலரும் போகிறார்கள். ஆழ்ந்து படிப்பதில்லை. அவசர கால யுகத்தில் பலருக்கு நேரமும் இருப்பதில்லை. தொடர்ந்து எழுதுங்கள். நல்ல எழுத்து நிச்சயம் ஒரு நாள் கவனிக்கப்படும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “காலம் ஒருநாள் மாறும் - நம்
   ....கவலைகள் யாவும் தீரும்” - கண்ணதாசன்
   “காலம் புரண்டு படுக்கும் - நம்
   ...கண்ணீர்த் துளியைத் துடைக்கும்“ - வைரமுத்து (இந்தக்கவலையை நினைத்து அவர்கள் எழுதவில்லை, “இருவேறு உலகத்தியற்கை“ பற்றிய தொடர்ச்சிதானே இதுவும்?)

   நீக்கு
 2. சமீபத்திய வலைத்தளப் பதிவுகள் எழுத ஆரம்பித்ததற்கு காரணம் நீங்கள் தான் ஐயா... அதற்கு முதலில் நன்றிகள் பல...

  உங்களின் கருத்துக்கள் (புலம்பல்கள்) பலருக்கும் தோன்றுவது தான்... இதைப் பற்றி இன்னும் ஒரு பதிவு எழுதலாம் என்றிருந்தேன்... (அது "திரட்டியை உருவாக்கும் பகிர்வு") ஆனால், MP3 இணைப்பது பற்றி சமீபத்திய பதிவில் பலரும் சொல்லி உள்ளதால் அதையும் பகிர வேண்டும்... திரட்டிகள் பற்றி ஆய்வுகள் செய்து கொண்டிருக்கிறேன்... பயிலரங்கம் நடத்துவதற்கு முன் அந்தப் பதிவை பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறேன்....

  வலைப்பக்கமே தொடங்காமல் இருப்பவர்களை தொடங்க வைத்து விடுவோம்... புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கத்தின் அடுத்த பயிலரங்கை ஞாயிறு அன்று வைத்துக் கொள்வோம்... பலரும் வருவதாக கூறி உள்ளனர்... அவர்களிடமும் முன் கூட்டிய தகவல் தெரிவிப்போம்...

  இது போல் பயிலரங்கத்தால், பல வலைத்தள நுட்பங்களை சிந்தித்து தேடி செயல்பட வைக்கும் சுயநலத்தோடு கூடிய பொதுநலத்தை, உங்களின் தயவில் சிறப்பாக தொடருவோம் ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “திரட்டிகள் பற்றி ஆய்வுகள் செய்து கொண்டிருக்கிறேன்... “ இதில் நான் இன்னும் கவனம் செலுத்த வில்லை, நண்பர் சிலர் 7,8திரட்டி வைத்து நம்மை மிரட்டி வருகிறார்கள்.. அது எப்படி என்னும் வித்தையை நீங்கள் தான் சொல்லித்தர வேண்டும். வணிகர்கள் தாம் தயாரித்த பொருள்களை விற்பனைக்குக் கொண்டு சேர்க்க விளம்பரம் செய்கிறார்கள்... நாம் அப்படிச் செய்வது சரியாக இருக்காதில்லையா? ஆயினும் நிறையப் பேரின் பார்வைக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் அந்த வித்தையை உங்களைப் போலும் நண்பர்கள் கற்றுத்தந்தால் நன்றி கூறுவேன். (தமிழாசிரிராகிய நான், கணினியில் இதுவரை எந்தப் பயிற்சி வகுப்புக்கும் போனதில்லை.. ஏகலைவன்தான்!)

   நீக்கு
 3. வணக்கம் சகோதரா!
  அந்த தெய்வமே கலங்கி நின்னா அந்த தெய்வத்திற்கு யாரால் ஆறுதல் வழங்க முடியும். எங்கேயோ கேட்டமாதிரி இல்ல. ஆமா....! நீங்களே இப்படி எண்ணினால் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம். இப்படி பல தடவை நான் கூட எண்ணியுள்ளேன்.நல்லாவே இல்ல போல விட்டிடலாமா என் பல தடவை எண்ணியிருப்பேன். ஆனாலும் ஓரிருவர் கருத்து இட்டாலும் எழுத உந்துதல் கிடைக்கும். அதுவும் இல்லாமல் சிலருக்கு திரைப்படம் பெரிய அளவில் பிடிக்காது. சிலருக்கு அரசியல் புரியாது. இப்படி வேறுபாடுகள் இருக்கத் தானே செய்யும். எதுவாக இருந்தாலும் எதோ ஒரு கருத்தை முன்வைக்க தானே அதை எழுதுகிறீர்கள் நீங்கள் விரும்பியதை தோன்றுவதை எழுதுங்கள். சில வலைப்பக்கங்களில் நல்ல நல்ல பதிவுகள் இருக்கும் ஆனால் கருத்துகள் எதுவும் இருக்காது. எனக்கு ஆச்சரியமாகவே இருக்கும். மனம் தளராமல் பணியை தொடருங்கள். தங்களுக்கு கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு அனுபவம் போதாது தயை கூர்ந்து தவறாக எண்ணவேண்டாம். ( பூக்கள் பூக்கிறதே புகழுகேங்கிறதா வாசம் வீசுறதே வஞ்சனை செய்கிறதா) இது என் பழையகவிதை ஒன்று ....
  புத்தாண்டு வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூக்கள் பூக்கிறதே புகழுக்கேங்கிறதா வாசம் வீசுறதே வஞ்சனை செய்கிறதா - கருத்தும் கவிதையும் நன்று சகோதரி. நன்றி “தங்களுக்கு கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு அனுபவம் போதாது“ - இப்படி எழுதுவதுதான் தவறு! இன்றைய குழந்தைகள் மூத்தோர் பலருக்கும் கிடைக்காத வாய்ப்புகளுடன் பலதிறன் பெற்று விளங்குவதை நான் பார்த்திருக்கிறேன். என் மாணவரிடமே கற்றுக்கொள்பவன் நான். உங்களிடம் கற்றுக்கொள்ள ஏதுமிருந்தால் அதைத் தவறாக ஒருபோதும் எண்ணமாட்டேன், தாராளமாக எழுதலாம். நன்றி

   நீக்கு
 4. உண்மைதான் வாழ்வின் பல செயல்களில் திரைப்படங்களின் வசனங்களே ஆக்ரமித்து கொண்டுள்ளன.மருந்தையும் விடமாகிய வெள்ளைச்சர்க்கரையில் கலந்து தரும் நிலை.நல்லவைகளே வாழும் அல்லவைகள் வீழும் சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “நல்லவைகளே வாழும் அல்லவைகள் வீழும் சார்“ - அடிக்கடி இல்லாவிடினும், அவ்வப்போது நேரில் பார்க்கும் வாய்ப்புடைய நீங்களே இப்படிச் சொல்லும்போது நம்பிக்கை சுரக்கத்தான் செய்கிறது... நன்றி கவிஞரே... நம் பயணம் தொடர்வோம்.

   நீக்கு
  2. முகநூலில் லைகிற்காக ஸ்டேடஸ் போடுபவர்களுக்கு மத்தியில் நீங்கள் சொல்லும் கருத்துகள் நன்றாகவே இருக்கிறது அய்யா...

   நீக்கு
 5. அன்பு நண்பரே வணக்கம்!

  முகநூல், வாட்சாப், இன்ட்ஸ்கிராம்,லைன் என பல்வேறு சமூகத்தளங்கள் இன்றைய தலைமுறையினரைத் திசைமாற்றம் செய்திருக்கின்றன. வலைப்பதிவுகளை வாசித்தல், மறுமொழியிடுதல் இதனால் மிகவும் குறைந்திருக்கிறது. மேலும் திரைப்படங்கள், அரசியல், ஆன்மீகம், விளையாட்டு ஆகியவற்றைக் கடந்துதான் இலக்கியம், மொழி, சமூகம், பண்பாடு குறித்த தேடல் உள்ளது என்பது எனது அனுபவம் நண்பரே.

  இந்த வலையுலகில் நான் கற்ற பாடங்கள்.

  நாம் இதுவரை எழுதிய பதிவுகளைவிட இனி எழுதவிருக்கும் பதிவுகள் தான் மதிப்புமிக்கன என்று எண்ணிக்கொள்ளவேண்டும்.  பார்வையாளர் எண்ணிக்கை, மறுமொழி எண்ணிக்கையை வைத்துக்கொண்டு நம் மதிப்பை நாம் குறைவாக மதிப்பிடக்கூடாது.

  மனிதன் உழைப்பை ஏமாற்றலாம்
  உழைப்பு மனிதனை என்றும் ஏமாற்றுவதில்லை.

  (பதிவுலகத் திருடர்கள் வாழ்க http://www.gunathamizh.com/2012/03/blog-post_27.html )
  நமது உழைப்புக்கு உரிய மதிப்பு தக்க காலத்தில் நம்மைத் தேடிவரும்.


  நம் கருத்து பலரையும் சென்றடைய..

  தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்10 உள்ளிட்ட திரட்டிகளில் இணைப்பதுடன் முகநூலிலும் இணைக்கலாம்.

  பல வலைப்பதிவுகளுக்குச் சென்று நாமும் மறுமொழியிடவேண்டும்

  என் அனுபவம் புதிய பதிவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

  தமிழ்மணம் முதல் பரிசும் விருதும்
  நட்சத்திரப் பதிவர்
  வலைச்சர ஆசிரியர் வாய்ப்பு
  தினமணி, ஆனந்தவிகடன்.
  பல கல்லூரிகளில் சொற்பொழிவாற்ற வாய்ப்பு.
  உயர்தனி்ச்செம்மொழி என்ற எனது கட்டுரை கற்பகம் பல்கலைக்கழகத்தில் தமிழ்படிக்கும் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

  வலையில் எழுதிய சங்கஇலக்கியம் தொடர்பான கட்டுரைகளை மறுமொழிகளுடன் தொகுத்து “சங்க ஓவியங்கள், உயிருள்ள பெயர்கள் “ என இரண்டு நூல்கள் வெளியிட்டிருக்கிறேன்.

  தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருகிறேன்.
  என் பதிவுக்கு முதல் பார்வையாளர், முதல் விமர்சகர், முதல் நடுவர் நான்தான்! எனக்கு பெரிய எதிர்பார்ப்பெல்லாம் கிடையாது.

  நான் சொல்லவிரும்பும் கருத்தை முடிந்தவரை பலருக்கும் புரியும் மொழிநடையில் சொல்கிறேன். திரட்டிகளில் இணைக்கிறேன், பலருக்கும் மறுமொழியிடுகிறேன். இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் நிறைய வலைப்பதிவர்களைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சூழலில் எழுதுவதை நிறுத்தியிருக்கிறார்கள், குறைத்திருக்கிறார்கள்.

  மறக்கமுடியாத சில பதிவர்கள்..

  தமிழ் நெஞ்சம், தேவன் மாயன், தமிழரசி, குமரன்..

  அன்பு நண்பரே 6 ஆண்டுகால அனுபவத்தை நினைத்துப்பார்த்தால் இந்த வலையுலகம் எனக்கு இன்னொரு உலகமாகவே இருந்திருக்கிறது.

  இன்றைய முகநூல் உள்ளிட்ட தளங்களில் நான் கற்றதைவிட வலையுலகில் நான் கற்றதும் பெற்றதும் அதிகம்.

  இன்றைய பதிவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ளவிரும்புவது, தொடர்ந்து எழுதுங்கள் முடிந்தவரை திரட்டிகளில் இணையுங்கள். நீங்கள் என்ன துறை சார்ந்தவராக இருந்தாலும் உங்கள் துறை சார்ந்த செய்திகளை அழகிய தமிழில் பதிவு செய்யுங்கள்.

  கடந்த காலத்துக்கு என்னை அழைத்துச்சென்ற தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நண்பர் குணசீலன், தங்களின் விரிவான, அனுபவப் பகிர்தலுடன் கூடிய பதில் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

   நீக்கு
  2. "என் பதிவுக்கு முதல் பார்வையாளர், முதல் விமர்சகர், முதல் நடுவர் நான்தான்! எனக்கு பெரிய எதிர்பார்ப்பெல்லாம் கிடையாது." என்ற முனைவர் இரா.குணசீலன் அவர்களின் கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

   நீக்கு
 6. எந்தத் திரட்டிகளிலும் இணைக்காமலேயே நல்ல வாசகர்களைப் பெற்றிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. இன்ட்லி, தமிழ் 10, தமிழ்மணம், ஹாரம், இன்னும் எத்தனையோ திரட்டிகளில் இணைத்தால் வாசகர்கள் எண்ணிக்கைக் கூடலாம். பொதுவெளியில் கண்ணுக்குத் தெரியும் நண்பர்களிடையே பேசுவதற்கும், கண்ணில் படா வாசகர்கள் வாசிக்க, எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே!

  வாசகர்கள் எதைப் படிப்பார்கள் என்பது புதிர்தான். பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் படிக்கப் படுகின்றன. ஒரு நாளைக்கு எத்தனையோ பதிவுகள் வெளியாகின்றன. நண்பர்களால் தங்கள் அலுவல்களையும் விட்டு எத்தனைப் பதிவுகள் ஆழ்ந்து படிக்க முடியும்?

  அவரவர் மனதுக்குகந்த தலைப்புகளை அவரவர் தெரிவு செய்து படிக்கலாம். படிப்பவர்கள் குறைவாக இருந்தாலும், பின்னூட்டங்களைப் பற்றி குறை கொள்ளாமல் எழுதிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்!

  எங்கள் பாஸிட்டிவ் சிதிகளுக்குக் கூட வாசகர் எண்ணிக்கை சென்ற வருடம் குறையத் தொடங்கியது. நிறுத்தி விடலாமா என்று கூட யோசித்தேன். நண்பர்கள் படிப்பவர்கள் எண்ணிக்கை பற்றி கவலவிப் படாமல் தொடர யோசனை தந்தார்கள். இன்று 'எங்கள் ப்ளாக்'கின் முக்கிய அடையாளமாய் அது இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் நண்பரே, “இன்ட்லி, தமிழ் 10, தமிழ்மணம், ஹாரம், இன்னும் எத்தனையோ திரட்டிகளில் இணைத்தால் வாசகர்கள் எண்ணிக்கைக் கூடலாம்“ - நான் தமிழ் மணம், தமிழ்வெளி இரண்டிலும் இணைந்திருக்கிறேன், மற்றவற்றைப் பற்றித் தெரியாதே?! அதற்கு நீங்கள் வழிகாடட முடிந்தால் மிகவும் மகிழ்வேன் இதற்கென வலை வழிகாட்டித் தளங்கள் இருந்தாலும் சொல்லவேண்டுகிறேன்.நன்றி.

  பதிலளிநீக்கு
 8. சினிமா, நகைச்சுவை பதிவுகளுக்குத்தான் பார்வை அதிகம் கிடைக்கிறது என்பது உண்மைதான். அதே சமயம் நாமும் நிறைய பதிவுகளுக்கு சென்று படித்து கருத்திடுவதால் அந்த தள எழுத்தாளர்கள் நமது தளங்களுக்கு வர வாய்ப்பு உண்டு. முகநூலில் பல்வேறு குழுக்களிலும் இடுகைகளை பகிர்ந்து வாசகர்களை இழுக்கலாம். ஒரே மாதிரியான பதிவுகளை தவிர்த்து பல்சுவையாக எழுதி கவரலாம். ஆனால் இவையெல்லாம் நமது மனத்திருப்திக்குத்தான் எழுதுவது என்ற பக்குவம் வரும்போது மாயைகளாகிவிடும். நல்லதொரு பகிர்வு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. பத்துலட்சத்தைத் தொட்ட பதிவுகள் எதுவும் திரைப்படத்தைவிட்டு வெளியில் வரவில்லை என்பதும் ஒரு செய்திதான்..

  பத்துலட்சத்தை தாண்டிய எமது ஆன்மீக
  பதிவுகள் திரைப்படத்தைத் தொட்டவை அல்ல..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிக்க வேண்டும் சகோதரி, உங்களுக்குத் தனியாக விரிவாக எழுதவேண்டும். அவசியம் எழுதுவேன்.. உ ங்கள் கருத்திற்கு எனது நன்றியும் வணக்கமும்.

   நீக்கு
  2. அ்ம்மா வணக்கம். காதல் பாடல் எழுதிக் குவிப்பதும், சாமிப்படங்களைத் தொகுத்துக் கொடுப்தும் பெரிய சாதனையாக நான் கருதவில்லை. இதுபற்றித் தனியாக எழுதுவே்ன். தங்களின் அயராத உழைப்புக்கு எனது மரியாதைகலந்த வணக்கம்.

   நீக்கு
 10. ஐயா,

  வணக்கம்.

  எந்தத் திரட்டியிலும் இணைக்காமலே நிறையப் பேரை தங்களது எழுத்துக்களால் இழுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதே மிகவும் சிறப்பான விஷயம்.

  என்னைப் பொறுத்தவரை தோன்றுவதை எழுதுவேன். அதிகம் பேர் வாசிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை... தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு எனது எழுத்து எதாவது சொல்ல வேண்டும் என்பதே எனது எண்ணம்.

  நானும் அவ்வப்போது சினிமா சம்பந்தமாக பதிவுகளை எழுதுவேன்.. அன்றைக்கு பார்த்தவர்கள் எண்ணிக்கை ஆயிரங்களுக்கு மேல் போகும். ஆனால் எனது நண்பனுக்கு இது பிடிக்காது. உடனே சாட்டில் வந்து எதுக்கு உன்னோட எழுத்துல இருந்து விலகிப் போறேன்னு சத்தம் போட ஆரம்பிச்சிடுவான்.

  நான் தொடர்ந்து அவ்வப்போது சினிமாவையும்தான் எழுதுகிறேன்.... இன்னும் எழுத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்... சிறுகதைகளை பகிர்வில் குறைத்தாச்சு... நிறையக் கதைகளை பலபேர் தாங்கள் எழுதியது போல் பதிந்திருக்கிறார்கள். எனவே சிறுகதைகளை குறைத்து விட்டு மற்ற தலைப்புக்களில் எழுதுகிறேன்.

  நிறைய எழுத வேண்டும் என்பதே எனது எண்ணம்... படிப்பவர்கள் குறைவாக இருந்தாலும் நம் எழுத்து மனசுக்கு நிறைவாக இருக்க வேண்டும். இதுதான் எனக்கு நான் சொல்லிக் கொள்ளும் கருத்து.

  அந்த வகையில் உங்களது எழுத்துக்கள் எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்கின்றன ஐயா.

  இங்கு வந்து தனிமை என்னைச் சுட்ட போது நண்பன் மூலமாக வலையுலகில் அடியெடுத்து வைத்தேன். இன்று உலகளாவிய நல்ல நட்புக்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. எத்தனை உறவுகள்... அத்தனையும் அன்பான உறவுகள் என்னும் போது சந்தோஷமாக இருக்கிறது.

  எனக்கு வலையில் எழுதவே விருப்பம். முகநூலில் எதுவும் எழுதுவதில்லை. இன்னும் எழுதுவோம்...

  தொடர்ந்து எழுதுங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “எந்தத் திரட்டியிலும் இணைக்காமலே நிறையப் பேரை தங்களது எழுத்துக்களால் இழுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதே மிகவும் சிறப்பான விஷயம்.“ - இல்லை நண்பரே, நான் தமிழ்மணம், தமிழ்வெளியில் இணைத்திருக்கிறேன். ஆனால், ஏகப்பட்ட திரட்டிகள் உள்ளனவாமே? நமக்குத் தெரியலயே?

   “எனக்கு வலையில் எழுதவே விருப்பம். முகநூலில் எதுவும் எழுதுவதில்லை. இன்னும் எழுதுவோம்“- நானும் அப்படித்தான் முகநூலில் கொண்டுபோய் நம் பதிவை இடுவதோடு ?ஓடிவந்து விடுவேன்.அது நம் நேரக்கொல்லி! கருத்துக்கு நன்றி நண்பரே.

   நீக்கு
 11. மலிவான பொருள் இடத்திலும் கிடைக்கும் இல்லையா அண்ணா? திரைப்படம் மட்டுமே சார்ந்த பதிவுகளை பற்றிய கவலையை விடுங்கள். உங்கள் மற்றும் ஜோதிஜி அண்ணா போன்றோரின் பல பதிவுகளை படிக்கும் வேளைகளில் இதுக்குமேல நாம எழுத என்ன இருக்கு என்று கூட தோன்றிவிடும். அவ்வளவு ஆழமான எழுத்துக்குச்சொந்தகாரர்கள் தான் என்னை போலும் வளரத்துடிப்போர்க்கு வழிகாட்டி. சக்கைபோடு போடும் குத்துப்பாடல்கள் சிலநாட்களில் காணாமல் போக்கும், தங்களை போன்றோரின் மெல்லிசை காலம் தாண்டி வாழும். என்ன அண்ணா தங்கை ரொம்ப டூ மச்சா பேசிட்டேனா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடக்கம் ஆரிருள் உய்த்து விடும் -நம் காலத் தெருக்குரல்.
   பேச வேண்டியதைப் பேசத்தான் வேண்டும் மைதிலி! உன் கருத்துத்தான் எனக்கும். இருந்தாலும்... நம் பாரதியின் FOX WITH THE GOLDEN TAIL கருத்தைத்தான் நினைத்து மீள்வேன்... பார்க்கலாம்... காலம் மாறும் என்னும் நம்பிக்கைதான்.நன்றிடா

   நீக்கு
 12. ஐயா!
  தாங்கள் மிக சிறப்பாக எழுதி வருகிறீர்கள் என்பதில் ஐயமில்லை. ஒரு லட்சம் பக்கப் பார்வைகளை பெற்றுள்ளதும் சாதாரண விஷயம் அல்ல .
  பொதுவாக சினிமா பதிவுகள் அதிக பார்வையாளர்களைப் பெற்றிருக்கும். சினிமாவைப் போன்றே அரசியல்,பரபரப்பான சமூக நிகழ்வுகள், விவாதத்திற்குரிய பிரபலங்களின் கருத்துக்கள் போன்றவற்றை பற்றி எழுதப்படும் பதிவுகளும் பதிவர் அல்லாதவர்களால் வாசிக்கப்படுகின்றன .
  கஷ்டப்பட்டு எழுதிய பதிவுகள் அதிக பார்வையாளர்களை ஈர்க்காமலும்,சாதாரண பதிவுக்கு அதிகப் பேர் வருவதும் பதிவுலகில் சகஜமான ஒன்று.
  உங்கள் ஆதங்கம் போலவே எனக்கும் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. . நல்ல பதிவுகளை பலர் தேடிப் படித்துப் படிக்கவே செய்கிறார்கள். அவர்களுக்காகவே தங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து படைப்புக்களை தரவேண்டும்
  முனைவர் குணசீலன் அவர்களின் கருத்க்க்கள் ஏற்புடையதாக இருக்கும் என்று கருதுகிறேன். அவர் உறுதியாக இலக்கிய சம்பந்தப் பட்ட தரமான பதிவுகளை தருகிறார்.நான் அக்டோபர் 2011இல் எழுத ஆரம்பித்தபோதே முன்னிலைப் பதிவராக இருந்தார். இன்றும் அவ்வாறே திகழ்கிறார். பெரும்பாலும் இங்கே படைப்பாளர்களே வாசகர்களாகவும் இருப்பதால் சக பதிவர்கள் தங்கள் பதிவுகளை படிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
  பிற பதிவர்களை ஊக்குவிப்பதன் மூலமும் நமது பதிவுகளை கொண்டு செல்ல முடியும். நீங்கள் அப்பணியை செவ்வனே செய்து வருகிறீர்கள்.
  திரட்டிகளில் தமிழ்மணம் தமிழ் 10 இன்ட்லி முதலியவற்றில் இருந்தே கணிசமான பார்வையாளர்கள் வருகிறார்கள்.(இவற்றில் இணைக்கும் முறை பற்றி திண்டுக்கல் தனபாலன்
  முக நூலிலும் நமது பகிர்வுகளை பிற முடியும் என்றாலும் அவற்றின் மூலம் வருபவர்கள் மிகக் குறைவே. அதிலும் பதிவுலக நண்பர்களே நட்பு வட்டத்தில் இருப்பதால் வருகை எண்ணிக்கை விரிவடவைதில்லை என்றுதான் எனக்குத்தோன்றுகிறது .
  இணையம் பயன்படுத்துவோர் பத்திரிகைகளுக்கு ஒருமாற்றாக வலைப்பதிவுகளை கருதுவதால் பத்திரிக்கையில் உள்ள சுவாரசியம் பதிவிலும் எதிர்பார்க்கப் படுகிறது.
  கவிதை. சிறுகதை போன்றவற்றிக்கு போதுமான வரவேற்பு இருப்பதில்லை.அதற்காக அவை ரசிக்கப் படுவதே இல்லை என்று கூறிவிட முடியாது.
  பள்ளி, கல்லூரிகளில் தமிழாசிரியர்கள் கணினி மற்றும் இணையத்தை ப கற்றல் கற்பித்தலில் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.இதன் மூலம் நல்ல வாசகர்களையும் படைப்பாளிகளையும் உருவாக்க முடியும். தாங்களும் அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பது வரவேற்கத் தக்கது. இவை நிச்சயமாக வருங்காலங்களில் தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
  அறிவியல் கணிதம் வரலாறு போன்றவற்றை எளிய தமிழில் தர தமிழாசிரியர்களும் முயல வேண்டும்.
  பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் தரமான பதிவுகளுக்கு என்றுமே மரியாதை உண்டு.
  இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.சந்தர்ப்பம் வாய்க்கும்போது இன்னும் பேசுவோம்
  நீங்கள் கவலையின்றி தொடர்ந்து எழுதுங்கள்.ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி முரளி அய்யா.
   தங்களின் விரிவான கருத்துகளை மீண்டும் மீண்டும் அசைபோட்டு என் கருத்துகளை இணைத்துப் பார்த்துக் கொள்கிறேன்... நன்றி

   நீக்கு
 13. தாங்கள் சொல்லியிருப்பது மிகவும் உண்மையே ஐயா! சினிமா, பதிவுகள் நிறைய வாசகர்களை ஈர்ப்பது என்பது இருக்கத்தான் செய்கிறது! தங்கள் இடுகைகள் ஆக்கப்பூர்வமானப் பதிவுகள்தான் ஐயா! தங்கள் இடுகைகளை வாசிக்கவும் ஆர்வமுடன் வருபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்!

  எங்களுக்கும் கூட வாசிப்பவர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்களோ என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது! ஆனாலும் எங்கள் தளத்திற்கு வந்து பின்னூட்டம் இடும் அன்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! இப்போதுதான் கொஞ்சம் வரத் தொடங்கி இருக்கின்றது எனலாம். ஆரம்பத்தில் என்னட இது என்ற எண்ணம் வந்த போதும், பரவாயில்லை நமது எழுத்து ஆர்வத்தை வளர்த்துக் கொள்வோம் என்றா நம்பிக்கையுடன் தொடங்கியதுதான்!

  தாங்கள் மிக அழகாக எழுதுவதால் இன்னும் அதிர்கரிபார்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்பிக்கைதான் விளக்கு - வலைப் பக்கம் எழுதும் நமக்கு.
   தங்களின் விரிவான கருத்துக்கு நன்றி அய்யா

   நீக்கு
 14. எந்த சினிமா படம் ஓடும் ,ஓடாதுன்னு யாராலும் கண்டுபிடிக்க முடியாததைப் போலத்தான் பதிவுகள் விசயமும் !
  நான் ஜோக்காளி தளத்தை ஆரம்பித்து ஒண்ணரைவருடம் ஆகிறது ...அப்போது என் நோக்கம் சிறுகதைகள் நிறைய எழுத வேண்டும் என்பதுதான் .நான் ஏற்கனவே எழுதி இருந்த சிறுகதைகளை பதிவிட்டேன் .பெரிய அளவில் வரவேற்பில்லை.மொக்கை சிறுகதையை எப்படி வரவேற்பார்கள் என்று கேட்கக்கூடும் ...சிறுகதையில் ஒன்று ஆனந்தவிகடனில் வெளியான ஒன்று ,அதுவே இன்று வரையில் 1 1 1 பார்வைகள் மட்டுமே கிடைத்துள்ளது ,இதில் எத்தனை பேர் படித்தார்கள் என்ற விபரமும் இல்லை !
  பல்வேறு தலைப்புக்களில் பதிவுகள் போட்டும் பார்வையாளர் எண்ணிக்கை கூடவில்லை ....
  சமூகம் சார்ந்த ஒரு பதிவை'அந்தரங்கத்தைப் படம் பிடிக்க அனுமதிக்க கூடாது 'என்ற தலைப்பு,பார்வையாளர் எண்ணிக்கை 1590 ஒரே நாளில் ஆனது !
  அகல உழுவதிலும் ஆழ உழு என்பதைப் போல ,நீளமாக எழுதுவதை பலரும் படிப்பதில்லை ,சொல்லப்போனால் என்னைப் போன்ற பதிவர்கள்தான் பொறுமையா படித்து கருத்து இடுகிறார்கள் !
  நான் தினசரி பதிவு போடவேண்டும் என்ற குறிக்கோளுடன்,பதிவு நாலு வரி ,கமெண்டுக்குப் பதில் நாற்பது வரி என்ற பாணியில் ,என் தளம் தமிழ் மணத்தில்ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருப்பது தாங்களும் அறிந்ததே !
  சினிமா செய்திகளை நான் எழுதாத போதிலும் குறுகிய காலத்தில் இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் பார்வைகளைப் பெற்றிருப்பதில்
  மகிழ்கிறேன் .ஒரு பைசா வரவில்லை என்றாலும் மனத் திருப்திக்காக எழுதிக் கொண்டிருக்கிறேன் !
  என் கருத்தை நீங்கள் மட்டுமல்ல பல பதிவர்களும் எதிர்பார்ப்பார்கள் என்றே நினைக்கிறேன் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ”என் தளம் தமிழ் மணத்தில்ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருப்பது தாங்களும் அறிந்ததே ! சினிமா செய்திகளை நான் எழுதாத போதிலும் குறுகிய காலத்தில் இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் பார்வைகளைப் பெற்றிருப்பதில் மகிழ்கிறேன்” - இந்த தமிழ்மணம் கணக்கே எனக்குப் புரிவதில்லை ஐயா.. எனினும் புரிந்துகொள்ள முயல்கிறேன். தங்களின் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி பகவான்ஜீ

   நீக்கு
 15. ஐயா வணக்கம். தாங்கள் கூறுவது உண்மைதான். நல்ல பதிகள் பல முறை, குறைந்த வாசகர்களைப் பெறுவதும், செய்திகளே இல்லாத பதிவுகள்ம முன்னனி இடத்தினைப் பெறுவதும் நடக்கத்தான் செய்கிறது.
  தரமான பதிவுகளைப் படிக்கக் காத்திருக்கும் வாசகவர்கள் எங்கும், எப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்காக எழுதுவோம், நமது மன நிம்மதிக்காக எழுதுவோம்,.
  வாசகர்களின் எண்ணிக்கையை மனதில் கொள்ளாமல், நம் பதிவினை மனதில் கொள்ளும், ஏற்றுக் கொள்ளும் பதிவர்கள், சிறு எண்ணிக்கையில் இருந்தாலே, வெற்றிதானே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடமையைச் செய்வோம், பலனை எதிர்பார்க்க மாட்டோம் என்று இருக்க முடியவில்லையே அதுதான் என் மனக்குழப்பமே! இருவேறு உலகத்தியற்கை இதிலுமா? எனினும் தங்களின் விரிவான கருத்திற்கு நன்றி கரந்தையாரே! அம்மா அப்பாவிற்கு என் வணக்கததைத் தெரிவியுங்கள். வணக்கம்.

   நீக்கு
 16. வலைபதிவுலகம் தான் நம் எல்லாரையும் நண்பர்களாய் இணைத்திருக்கிறது ஆக்கபூர்வமான கட்டுரைகள் தொடர்ந்து எழுதுங்கள் சார் என்றேனும் ஒரு நாள் சிகரம் தொடலாம்

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 1. நண்பர்களைத் தந்த வகையில் நன்றிகள் பலப்பல.
   தங்களுக்கும் எனது நன்றி நண்பரே.
   2.சிததிரை முதல்நாளை நான் தமிழ்ப்புத்தாண்டாக நினைக்கவில்லை, எனினும் தங்களன்பிற்கு நன்றி நண்பா

   நீக்கு
 17. அறிமுகமானது முதற்கொண்டு தங்களது பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். முடிந்தவரை எனது கருத்துக்களைப் பதிந்தும் வருகிறேன். பன்முக நோக்கில் அமைந்துள்ளவை உங்களது பதிவுகள். தாங்கள் தொடர்ந்து இதே நடையில் எழுதலாம். வாசகர்களின் விருப்பம் சில பதிவுகளில் அதிகம் இருக்கும். சில பதிவுகளில் குறைவாக இருக்கும். அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது என் எண்ணம். எங்களது பதிவுகளைக் குறித்த உங்களது கருத்துக்களையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவை இன்னும் எங்களை மேம்படுத்த உதவும் என்று நம்புகிறோம். தொடர்ந்து எழுதுங்கள். உடன் வருகிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ”தாங்கள் தொடர்ந்து இதே நடையில் எழுதலாம்” நன்றி அய்யா.
   தங்களின் விதம் விதமான ஆய்வுகள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன... எனக்குப் பழக்கமில்லாத பலதுறை அறிவோடு தாங்கள் எழுதிவருவதால், கண்டு தங்களின் பதிவுகளைத் தொடர்ந்து படித்தாலும் கருத்து வெளியிடத் தயங்கியே இருந்துவிடுகிறேன் அய்யா. இனித் தொடர்வேன்.

   நீக்கு
 18. வணக்கம் ஐயா
  இன்று அரசியல், சினிமா, விளையாட்டு (கிரிக்கெட் மட்டும் தான்) தான் மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது, இதில் தொடர்புடைய பிரபலங்கள் தான் தொலைக்காட்சிகளில் அதிகமாக தோன்றுகின்றனர். இதைப் பற்றிய பதிவு என்றால் அதிகளவில் வாசிக்கப்படுவது நடந்தேறுவது இணையத்தை இன்னும் ஆக்கப்பூர்வமாக பார்க்காத பொழுதுபோக்கு அம்சமாக பார்க்கும் மனிதர்கள் நிரம்ப இருக்கிறார்கள் என்பதைத் தான் காட்டுகிறது. இது கவலை அளித்தாலும் உங்களின் எழுத்து அவர்களுக்கானது அல்ல இலக்கியங்களை ஊன்றிப் படிக்கும் ஒரு பிரிவினருக்கானது. அவர்களுக்காக நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். வலைப்பக்கங்களால் தான் திண்டுக்கல் தனபாலன் ஐயா, மூங்கில் காற்று முரளிதரன் ஐயா, கரந்தை ஐயா போன்றோரின் நட்பு கிடைத்திருக்கிறது. அவர்களைப் போன்றவர்களின் நட்பு வருங்காலங்களில் கிடைக்க தொடர்ந்து எழுதுங்கள். நல்லவை எங்கிருந்தாலும் தேடி படிக்கும் ஒரு வாசகர் இருக்கிறது அவர்களுக்காக தொடர்ந்து எழுதுவோம். (ரொம்ப பேசிட்டேனு நினைக்கிறேன்) பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நட்பு வருங்காலங்களில் கிடைக்க தொடர்ந்து எழுதுங்கள். -- ஆமாம் பாண்டியன், உங்களைப் போலும் இளைய பாரதம் எனக்குக கற்றுத் தரும் பல செய்திகளில் இதுவும் ஒன்று. தொடர்வோம் நன்றி.

   நீக்கு
 19. அன்பின் ஐயா அவர்களுக்கு,
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
  எல்லா நலன்களும் நின்று நிலை பெறுக!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே. ஆனாலும் அறுபது ஆண்டுகளில் ஒன்றுகூடத் தமிழாக இலலாத இந்தத் தமிழ்ஆண்டுக் கணக்கை என்னால் நம்ப முடியவில்லை... எனினும் நன்றி துரை.செல்வா

   நீக்கு
 20. எப்படி ஐயா, நான் நினைத்ததை நீங்கள் பதிவிட்டு விட்டீர்கள்? தமிழ், சங்க இலக்கியம் னு எழுதிய பதிவுகளை விட, மாலில் தொலைந்த சிறுவனைப் போல அன்றாட நிகழ்வுகள் முன்னே ஓடுகின்றன..இப்போ ஆங்கிலத்திலும் சங்க இலக்கியம் எழுதிக்கொண்டு எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்..ஆனா ஒன்று ஐயா, அவ்வப்பொழுது எனக்கே சொல்லிக்கொள்வேன்.."எனக்காக எழுதுகிறேன். நான் படித்து புரிந்து கொண்டவை, நான் நினைப்பவை என்று நாளை எனக்கொரு நினைவூட்டுதலாக இத்தளம் இருக்கும்" என்று..சில நண்பர்கள் சங்கஇலக்கியம் கற்றுக் கொள்வது எனக்கு மகிழ்ச்சி.
  திரைப்பட பதிவுகளை பலர் படித்துச் சென்றாலும், அது மேலோட்டமாக இருக்கும். உங்கள் கருத்துள்ள பதிவுகள் படிப்பவர் எத்தனை பேராய் இருந்தாலும் அவரவர் மனதில் பதியும் என்பதே என் கருத்து. அதனால் எழுதிக் கொண்டேயிருப்போம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் இதயப பூர்வமான கருத்துப் பகிர்வுக்கு நன்றி கிரேஸ்.
   தொடர்ந்து எழுதுவோம்... எழுதிக்கொண்டே இருப்போம்.

   நீக்கு
 21. சார், எத்தனைப் பேர் வாசிக்கிறார்கள் என்பது எவ்வளவு முக்கியமோ
  அதைவிட முக்கியமானது வாசிப்பவர்கள் யார்? என்பது தான்.
  என் பதிவுகளில் முக்கியமான ஒரு செய்தியை என் பார்வையில் பதிவு செய்திருப்பதை எட்டிப் பார்த்துவிட்டு கள்ளமவுனம் சாதிப்பார்கள்!
  நமக்கு ஏன் வம்பு? என்று எண்ணி பின்னூட்டம் எழுத மாட்டார்களோ என்னவோ...
  இத்தனை வருட வலைப்பக்க அனுபவத்தில் இப்படியும் எனக்கு ஒரு
  புரிதல் ஏற்பட்டிருக்கிறது! குருவே.... நீங்களே இப்படி எல்லாம்
  அலுத்துக் கொண்டால் எங்களைப் போன்றவர்கள் எங்கே போய் முட்டிக்
  கொள்வது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே! கவிஞரே... என்னது... நான் குருவா? நான் கணினி இணைய நண்பர்கள் குழுவில் அடித்துப் பிடித்துக் கொண்டிருந்த 2000 ஆண்டுப் புதிதில் அகன்ற அலைக்கற்றை வாங்கி அதுபற்றி எ ன்னிடம் முதன்முதலாகச் சொன்னவரல்லவா நீங்கள். தங்களின் இரண்டாவது வருகைக்கு நன்றி.

   நீக்கு
 22. எது நல்ல பதிவு என்று நாம் நினைக்கிறோமோ அதை நிறைய பேர் படிப்பதில்லை.... :)

  நம்முடைய மனத் திருப்திக்கு மட்டுமே எழுதுகிறோம். அதிகம் பேர் படிக்கவில்லை என்ற கவலையோ, சினிமா பதிவுகளுக்கு மட்டுமே அதிக வரவேற்பு இருக்கிறது என்பதோ எண்ணத் தேவையில்லை. தொடர்ந்து எழுதுவோம்.....

  பதிலளிநீக்கு
 23. சில நேரங்களில் பரப்பான பதிவுகள், தலைப்புகளை பார்ப்பார்கள், ஆனால் உங்களுடைய கருத்து செரிவுள்ள பதிவுகள் தேவை..

  பதிலளிநீக்கு