தாலாட்டு ஏன் ஒப்பாரியானது?கண்ணே கனியமுதே! - என
                             காலமெல்லாம் உன்நினைவை
முன்னே வளர்த்தவரே – உன்
                             மூச்சடக்கிப் போட்டாரோ?
என்னே தவறிழைத்தாய் அட
                             எவர்குடியைநீ கெடுத்தாய்?
முன்னே மனம்கவர்ந்தான் உன்
                             முன்நடக்க பின்நடந்தாய்!

நயமாகப் பேசியுனை இனி
                             நல்லதென்றே நம்பவைத்தார்,
பயமாகப் போனஉனை நல்ல
                             பாம்பாகிக் கொத்தினரே!
சுயமாகப் பெண்ணெவளும் இனி
                             சுதந்திரமாய் சிந்தித்தால்
மயமாகும் நிலையென்றே உன்
                             மரணத்தைத் தந்தனரோ?

மணமாகிப் போனவள்நீ கரு
                             மடிசுமந்தே வந்தவள்நீ!
பிணமாகிப் போனதென்ன? – உள்
                             பிள்ளைசெய்த தவறென்ன?
நிணமாகிப் போனதென்ன உனை
                             நெஞ்சுக்குள் வைத்ததவனே!
கனமாகிப் போனமனம் இனி
                             கல்லாமோ? வில்லாமோ?

கௌரவம் எனும்பெயரால் உன்
                             காதல்மணக் கொலையாச்சே
மௌடிகம் பேசுதடீ உன்
                             மரணம்தான் சாட்சியடீ

கொலையே நடந்தாலும் இந்தக்
                             கொடுமையே தொடர்ந்தாலும்
அலையே அடங்கிடுமோ இது
                             ஆழிப்பே ரலையல்லோ?

ஆதியிலே சாதியில்லை எந்த
                             ஆண்டவனும் தந்ததில்லை
பாதியிலே வந்ததல்லோ கொடும்
                             பாதகரே தந்ததல்லோ?

இளவரசன் திவ்யாவால் அன்று
                             எமதுவிழி எரிந்தடங்கி
சிலதிங்கள் கழியவில்லை அட
                             செவ்விழியில் குருதிவெள்ளம்!

கௌரவக் கொலையென்றால் அது
                             காதலரை மட்டுமென்றால்
ஔடதம் உருவாகும் சாதி
                             அழிவதொன்றே வழியாகும்!
                    ----------oooooooooooo-----------------

குறிப்பு – பத்திரிகைச் செய்தி பார்த்தபோதே மனம் கனத்துப் போனது,
வலை நண்பர் “வயலான்“ சே.குமார் அவர்கள், இதே செய்தியை அதன் பின்னணியோடு, தனது வலையில் விரிவாக எழுதியதைப் படியுங்கள்.. 
“பார்த்துப் பார்த்து வளர்த்த உயிர் போனதால் கிடைக்கும் இதெல்லாம் ஒரு வெற்றியா... இல்லைவே இல்லை இது இரத்தத்தில் ஊறிய சாதி வெறி. சாதி இல்லாத சமுதாயமும் மதம் இல்லாத மனிதமும் மலர வேண்டும் என்றால் இந்தக் கௌரவக் கொலைகளை ஒழிக்க வேண்டும்.
இந்தப் புற்று ஒன்று இரண்டென எங்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. மொத்தமாக புற்றையே அழிக்க வேண்டும் என்றால்  எங்கள் குலக் கௌரவம் காக்க நாந்தான் கொலை செய்தேன் என்று பெற்ற தாயோ, தந்தையோ, உடன்பிறப்புக்களோ, மாமனோ, மச்சானோ, சித்தப்பனோ, பெரியப்பனோ சொல்லும் போது அவர்களது குரல்வளையை அறுக்க வேண்டும். அப்போதுதான் கௌரவம் காக்க கொலை செய்தேன் என்று எவனும்/எவளும் மார்தட்டிக் கொள்ளமாட்டார்கள்.
தங்கள் பிள்ளைகள் காதலித்தால் அது பிடித்திருந்தால் அவர்களை வாழ்த்தி வாழ வையுங்கள்... இல்லையா அவர்கள் கண்கானாத இடத்தில் உயிருடன் வாழவாவது விடுங்கள்... இந்த மண்ணில் காதல் வாழ வேண்டும் என்பதற்காக அல்ல... உங்களின் ரத்தம்... உங்களின் செல்லம்... உங்களின் வாரிசு வாழட்டும் என்பதற்காக
நன்றி நண்பர் சே.குமார் அவர்களே!
உங்கள் எழுத்து -
என்னை அழவைத்து எழவைத்தது, எழுதவும் வைத்தது. 
-------------------------------------------------------------------------------------------------- 

32 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. ஆமாம் சீனி அய்யா. பிஞ்சு நெஞ்சங்களில் சாதியெனும் நஞ்சு கலக்காமல் வளரும் ஒரு தலைமுறைக்காக...

   நீக்கு
 2. காலம் முன்னோக்கிச் சென்றென்ற பயன்.
  மக்கள் மனம் பின்னோக்கியல்லவா பயணிக்கிறது.
  நெஞ்சம் பதறுகிறது ஐயா
  விஞ்ஞானத்தோடு போட்டிப் போட்டுக் கொண்டு அறியாமையும் அல்லவா வளர்ந்து கொண்டிருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கரந்தையாரே அறிவியல் வளர வளரக் குறைய வேண்டிய அறியாமை அதுஒருபக்கம் வளர்ந்து நிற்பதுதான் ஆபத்து. நன்றி

   நீக்கு
 3. ஒவ்வொரு முறையும் சில உயிர்களையாவது காவு வாங்கியபின் தான் ஞானம் பிறக்கும் நம்மூர் ஆட்களுக்கு. அப்படி காவு கொடுக்கபடுவது பெரும்பாலும் பெண்களாய் தான் இருக்கிறார்கள்:((((
  எல்லா சாதியிலும் கீழானவள் அகவே கருதப்படுகிறாள் பெண்.
  மனம் கனக்கிறது அண்ணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியும இவர்களுக்கு உறைக்கவில்லையே மைதிலி.
   இன்னும் எத்தனைப் பிஞ்சுகளை வதைப்பார்கள்...!

   நீக்கு
 4. வணக்கம் ஐயா
  கௌரவக் கொலைகள் அதிகரித்து வருவதும், அதை நான் தான் செய்தேன் என்று மார்தட்டிக்கொள்வதும் இந்த சமுதாயத்திற்கு அவர்கள் தரும் தவறான முன்னுதாரணம். இவைகள் வேறோடு களையப்பட வேண்டும். இனியும் இது அரங்கேறக்கூடாது. அதற்கான அச்சாரமே உங்கள் கவிதை. வரிகள் ஒவ்வொன்றும் வலியால் துடித்து வெகுண்டெழுந்த மனதிலிருந்து பிறந்தது என்பதைப் பறைசாற்றுகிறது. தங்களுக்கு எனது நன்றிகள் ஐயா. சகோதரர் சே.குமார் அவர்களின் எழுத்தும் இதே ரகம் தான் அவர்களுக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள். தொடர்வோம் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரர் குமாருக்கு நன்றி சொல்லி, சக மனிதரை மனிதராகவே பார்க்கும் ஒரு சமுதாயத்திற்காக நாம உழைப்போம் பாண்டியன்

   நீக்கு
 5. சற்று முன் தான் நண்பரின் தளத்திலும் வாசித்தேன்...

  இவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது முந்திய பதிவின் தலைப்பைத்தான் மீண்டும் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது அய்யா. நன்றி. தங்களின் வலைஆலோசனைகள் அருமையாக உள்ளன. புத்தகமாகவே கொண்டுவரலாம் போல் உள்ளது அய்யா. அதற்கும் நன்றிகள்.

   நீக்கு
 6. இந்த ஈனப்பிறவிகளாஇலாம் என்னச் செய்ய!? இவங்க பார்த்து செய்து வைக்கும் கல்யாணத்துல எதாவது பிரச்சனை வந்து பொண்ணு வாழ்க்கைப் போனாலும் பரவாயில்ல. இவங்க ஜாதி, பணம், ஸ்டேட்டஸ்தான் முக்கியம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகன் செத்தாலும் பரவாயில்லை மருமக தாலி அறுக்கணும்னாளாம் ஒரு மாமியாக்காரி... அந்தக் கதைதான்!

   நீக்கு
 7. உணர்வுகளை மிக அருமையாக வரிகளில் வடித்திருக்கிறீர்கள். மனதில் நிற்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுதத் திட்டமிட்டு உட்காரவில்லை ஸ்ரீராம், அந்த உணர்வு என்னை எழுதவைத்தது, தங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. பெண்களின் மீதான கொடுமைகள் மட்டும் விதம் விதமாகத் திட்டமிட்டு நடக்கிறதே இவர்கள் எப்படி இதையெலலாம் யோசிக்கிறார்கள் என்று நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. புதிய நோய்களைப்போல புதிய ஆதிக்க உணர்வுகளும் பரவுகின்றன சகோதரி... நோயை விட நோய்பரப்பும் கிருமிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்...

   நீக்கு
 9. இந்தத் துயர்
  எந்தக் காலத்திலயும் தொடர
  இடமளிக்கக் கூடாதண்ணே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜீவா, காவலர்களை விடவும் கள்வர்களல்லவா கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்...

   நீக்கு
 10. வட இந்தியாவில் வெகு காலமாக இருந்த இந்த அவலம் இப்போது எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பித்து விட்டது பார்க்கும்போது மனதில் துயரம்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “கௌரவம்“ என்றொரு திரைப்படம் சமீபத்தில் வந்தது இதன் தாக்கம்தான், அருமையாக எடுத்திருந்தார்கள்... அதைவிடவும் இந்த நிஜக் கொலைகாரர்களின் செயல் கொடுமைதான்...

   நீக்கு
 11. கொடுமை தாய்மை அடைந்த பெண்ணை கொல்லும் வக்கிரம் ....மனிதராய் பிறந்ததற்காய் வெட்கபடுகின்றேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம் எதற்கு வெட்கப்பட வேண்டும் கவிஞரே, வேதனைப் பட்டு, வேகப்பட்டு, செயல்பட்டு அவர்களை வெட்கப்படவோ, வேதனைப் படவோ செய்ய வேண்டும்... அதுதான் சரியான பதில். சரியா?

   நீக்கு
 12. ஐயா மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்...
  இது புற்று போல் வளர்ந்து கொண்டேதான் போகிறது... முடிவு என்பது வருமா என்பது தெரியவில்லை...

  மருதாணி அழியும் முன் உயிரை எடுத்திருக்கிறான் தகப்பன்...
  ஐந்து மாதக் கர்ப்பிணியை கொன்று சாக்கில் கட்டிப் புதைக்க உடந்தையாய் இருந்திருக்கிறாள் பாலுட்டிய தாய்...

  இந்தச் சமூகம் எங்கே போகிறது?

  உங்கள் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மனசை அரிக்கிறது...

  உங்களால் அன்புக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மருதாணி அழியும் முன் உயிரை எடுத்திருக்கிறான் தகப்பன்...
   ஐந்து மாதக் கர்ப்பிணியை கொன்று சாக்கில் கட்டிப் புதைக்க உடந்தையாய் இருந்திருக்கிறாள் பாலுட்டிய தாய்.. -- இதுதான் அய்யா உதைக்கிறது... தாய்ப்பாசம், தந்தைப்பாசம் என்று வாய்கிழியப் பேசுகிறார்களே அதெல்லாம் சாதிப்பாசத்திற்கு முன்னால் வெறும் வேசம்தானோ? என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது... உங்கள் பதிவு தந்த உத்வேகம்தான் நன்றி.

   நீக்கு
 13. கொலை செய்து விட்டு அந்த கௌரவத்தால் என்ன சாதித்து விட்டார்கள்..
  கவிதை கண்களில் நீரை வரவழைத்து விட்டது. ஐயா நெஞ்சு பொறுக்குதிலை இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவது கூட வாங்கப்படும் பொருளின் மதிப்பைக் காட்டும். ஆனால், நீங்கள் சொல்வதுபோல இவர்கள் தன் மக்களைக் கொன்று மனுநீதியையா வாங்கினா்? சாதியம் என்னும் புண் நம் மண்ணில் புரையோடியிருப்பதன்றி வேறு காரணம் ஒன்றும் எனக்குப் பிடிபடவில்லை அய்யா.

   நீக்கு
 14. வறட்டு கௌரவத்தை வாழ்கை யாக கொண்டு வாழ்பவரை என்ன செய்வது பெற்ற பிள்ளையையே கொலை செய்யுமளவுக்கு ஜாதி வெறி இருப்பது தான் அபத்தம்.அழகான கவி வரிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்திற்று. நன்றி வாழ்த்துக்கள்.....!

  பதிலளிநீக்கு
 15. பெத்த மகளையே கொலை செய்யும் அளவிற்கு அவர்களுக்கு எப்படித்தான் மாநாடு வந்ததோ? கொடுமை. கொடுமை.

  ஐயா உங்களின் கவிதை மிக அருமை.

  "கௌரவக் கொலையென்றால் – அது
  காதலரை மட்டுமென்றால்
  ஔடதம் உருவாகும் – சாதி
  அழிவதொன்றே வழியாகும்!//"

  நன்றாக சொல்லிவிட்டீர்கள். அது எப்பொழுது நடக்கும் என்று தான் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடக்கும் என்பார் நடக்காது! - அது
   ..........நடக்கா தென்பார் நடந்துவிடும்,
   நம்பிக்கை வைப்போம் நன்றி நண்பரே!

   நீக்கு
 16. மனத்தைக் கனக்கச் செய்து விட்டது உங்கள் கவிதை! கல்வியறிவு பெற்று நாகரிகம் வளர வளர மனிதன் மிருகமாக அல்லவோ மாறிவருகிறான்! என்ன கொடுமை சார் இது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறிவு வளர வளரப் பண்பு குறைகிறதே!
   அறிவு குறைந்தவர்களிடம் அது குறையாமல் இருக்கிறதே!
   “படிச்சவன் சூதும் வாதும் பண்ணா...
   போவான் போவான் அய்யோன்னு போவான்“ - பாரதி
   தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி.

   நீக்கு