எனது காதல் கடிதம்… நிறைவுப்பகுதி

எனது காதல் கடிதம்  நிறைவுப்பகுதி

இவ்வாறே வந்த பிற
                         இலக்கியங்கள் கலை வடிவில்
ஒவ்வொன்றாய் நஞ்சமுதை
                         உள்ளத்தில் ஏற்றியதால்                    -76

தாமே அறியாமல்
                        தமிழ்ப் பெண் நான் என அடங்கித்
தேமே என வாழ்ந்தார்
                         தெய்வாம்சம் அடைந்தாராம்!           -77

பத்தினியும் கன்னியும்
                         பரத்தையும் விதவையும்
முத்தமிழில் பெண்ணுக்கே!
                         ஆண்பால்சொல் இதற்கில்லை!      -78

சிந்தித்துப் பார்த்தால்தான்
                         சிங்காரச் சொல் இவற்றுள்
வந்திருக்கும் பெண்ணடிமை
                         வரலாற்றுக் கதை புரியும்!               -79

தம் மனைவி இழந்தவாக்குத்
                        தமிழிலே பெயரில்லை!
கம்மனாட்டி சொல் எல்லாம்
                        பொம்மனாட்டிக்குத் தானே?         -80

சொல்லின் வரலாறு
                        சொல்லும் வரலாற்றில்
வல்லார் அடிமைசெய்த
                        வரலாறும் புலனாகும்!                     -81

சிந்தனைகள் மென்மேலும்
                         சிவந்துவரும் என்தோழீ!
இந்தக் கொடுமைகளை
                         இல்லாமல் நாம் ஒழிப்போம்!          -82


அழகைவிடவும் பெண்ணுக்கு அறிவே தேவை!

இப்போது சொல்கண்ணே!
                         ஏன் உன்னை அழகியாக
இப்பாவ லன் நெஞ்சில்
                         எண்ணாமல், உன்னறிவை                  -83

இன்னுமின்னும் வளர்க்கவே
                         எண்ணுகிறான் புரிகிறதா?
மண்ணில் வளர்ந்துவந்த
                         மனிதப் பெருங்குலத்தில்                    -84

சரிபாதி அடிமைகளாய்
                        சமையலறைக் குள்ளேயே
கரியாகிப் போவதா?
                        கண்ணே! நாம் சிந்திப்போம்!         -85

சுரண்டலை ஒழிப்பதற்கு
                         சூளுரைக்கும் நாம், நமது
உரிமையை உணர்ந்து, பிறர்
                         உரிமைக்கும் மதிப்பளிப்போம்            -86

உழைப்புக்கும் மனித மன
                        உணர்வுக்கும் சரியான
மதிப்பைப் பெறும்வகையில்
                        மக்களை ஓரணியில்                                -87

திரட்டிடத் தோழியரும்
                        தேவை! மிக மிகத் தேவை!
இரட்டைக் குழல் வேட்டாய்
                        எழுவோம்! இணைந்தெழுவோம்!        -88


அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வோம் வா!

மனித உணர்வுகளை
                        மழுங்கடித்துக் கதைபேசும்
முனிவர்களின் வரிசையிலும்
                        முத்து நிலவனில்லை!                     -89

எல்லாரை யும்போல
                        இல்லறத்தில் இணைந்தின்ப
எல்லையைக் காணுதற்கும்
                        எல்லையிலா ஆசைஉண்டு!                -90

ஆனால் நம் காதல்
                        அடுத்தவர்கள் கேடுகெட்டுப்
போனால் நமக்கென்ன
                        போகம்தான் பெரிதென்னும்                  -91

எண்ணத்தை வளர்த்துவிட
                        இடந்தருமேல் அதைவிட நாம்
பன்றிபோல் வாழலாம் -
                        பன்றிக்கும் கூட்டமுண்டே!                   -92

சமுதாயக் கொடுமைகளை
                        சற்றும் நினைக்காமல்
நமது இன்பம் ஒன்றையே
                        நாடுவது வாழ்க்கையென்றால்       -93

சொத்தோடும் சுகத்தோடும்
                        சுற்றத்தின் வாழ்த்தோடும்
பத்தோடும் பதினொன்றாய்
                        வாழ்வதுதான் வாழ்க்கையென்றால் -94

அந்த வாழ்க்கையைநாம்
                        அமைப்பதிலே அர்த்தமில்லை!
நொந்தோர் நுகத்தடியை
                        நொறுக்குவதே பயன்வாழ்க்கை!    -95

இன்பம் பெறவிழையும்
                        எண்ணம் தலையெடுத்தால்
உன்னைநான் அழைப்பதுபோல்,
                        என்னை நீ அழைக்கலாம்!                     -96

ஆ!அதுநம் பெண்மைக்கு
                        அடக்கமில்லாப் பண்பு என
யாதும்ஓர் சட்டமில்லை!
                        யார்நான்? உன் தோழன் அன்றோ?     -97

இயலும் வகைஉழைத்தே
                        எல்லாத் தேவையிலும்
அயலையும் எண்ணிடுவோம்
                        அனைவருமே சமம்என்போம்!           -98

ஒன்றேநாம் என்றேநாம்
                        தனிஉடமை இனிஉடைய
ஒன்றுபட்ட நம்வாழ்வால்
                        ஒருவரை மற்றொருவர்                    -99

நின்று தூண்டுவோம்!
                        நெஞ்சில் எழுச்சிமிக
உன்றன் இதழ் முத்தம்
                        ஒன்றெனக்குத்  தா! தோழீ !          -100
               

                    ------------------------------------ ( நிறைந்தது ?  )-------------------------------  
படத்துக்கு நன்றி - http://www.bharatmoms.com/

21 கருத்துகள்:

 1. தங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்

  பதிலளிநீக்கு
 2. இனி இன்னும் நிறைய நேரம் கிடைக்குமே .இனிமேல் இன்னும் நல்ல காதல் கடிதங்கள் எழுத முடியுமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூலை மாதம் எனது நான்கு புத்தகங்களை வெளியிட முயற்சிகள் நடந்து வருகின்றன அய்யா. நன்றி

   நீக்கு
 3. அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. கீதா டீச்சர் சில நாட்களுக்கு முன் பெண்ணின் அறிவை போற்றும் கவிதைகள் வரவில்லையே என வருந்தியிருந்தார். போதும் போதும் எனும் அளவுக்கு பாடிவிட்டீர்கள் அண்ணா! படித்த பெண்கள் பலரே கணவன் பேரை சொல்வதால் ஆயுள் குறையும் என்று இன்னும் நம்பும் அளவில் தான் இருக்கிறது நம் சமுதாயம், நிச்சயம் உங்கள் கவிதை அப்போதே புதுமை பேசியிருக்கிறது ! மிகுந்த மகிழ்ச்சி அண்ணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எழுதுவதிருக்கட்டும். அழகியல் ததும்பும் உன் கவிதைகளில் இதுபோலும் கருத்துகளை யதார்த்த நடையில் உன்னிடமும் எதிர்பார்க்கிறேன். அதுதான் ஒரு கவிதைத் தொகுப்புக்கு கனம் சேர்க்கும். அதைப் பெண்களே எழுதும்போது சத்தியஆவேசம் தெறித்துவரும் என்பது என் நம்பிக்கை.

   நீக்கு
 5. கொடுமைகளை அழிக்கக் கண்டிப்பாக ஒன்றிசேருவோம்.
  // நொந்தோர் நுகத்தடியை
  நொறுக்குவதே பயன்வாழ்க்கை! //
  நல்லதொரு கவிதை ஐயா..இதைப்போல அனைவரும் சிந்தித்தால் நலம். பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுதானே என் எதிர்பார்ப்பு. அதுக்குத்தானே எழுதிக்கிட்டும் பேசிக்கிட்டும் இயங்கியும் திரிகிறோம். வாழ்க்கையே இதுதானே? நம்பிக்கை இருக்கிறது. நடக்கும். நடக்கவைப்போம்

   நீக்கு
 6. ஆண்பால் இல்லாத வார்த்தைகள் ...
  கவிதை மொத்தமும் கனக்கிறது...மனதை வருடி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பத்தினி, கன்னி, பரத்தை, குடிமகன், கவிஞன், எழுத்தாளன், விதவை(கம்மனாட்டி எனும் கைம்மனையாட்டி), மலடி, இவற்றுக்கெலலாம் தமிழில் ஆண்பாற்சொற்கள் இல்லை நண்பா இதன் சமூகப் பின்னணியை ஆய்வுசெய்தால் பலவரலாற்றுப் பினபுலங்கள் தெரியவரும்.இதுபற்றித் தனிஒரு பதிவு எழுத என்னைத் தூண்டியவிடடது உங்கள் கருத்தூட்டம்.

   நீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி! உண்மை தான் எவ்வளவு அழகாக வார்த்தைகளை கோர்த்து நியாயங்களையும் சேர்த்து தந்துளீர்கள் அடக்கி ஆளவே நினைக்கும் ஆண்களுக்கு மத்தியில், பெருமையாகவே உள்ளது உங்களை நினைத்தால். நிறையவே சிந்திக்க வைக்கிறது.
   வாழ்த்துக்கள் ...! எத்தனையோ துன்பங்களை தாங்கிக் கொண்டு பெண்கள் வாழ்ந்திருகிறார்கள் என்று வருந்தியிருகிறேன். ஏனெனில் போக்கிடம் இல்லாமையாலும் சமூகத்திற்கு பயந்தும் தான் .இதற்காகவே ( அன்னையர்கள் செய்த தியாகம் கொஞ்சமோ ) என்று ஒரு கவிதை எழுதியிருந்தேன் ஆரம்ப காலக் கவிதை.
   வாழ்த்துக்கள் சகோதரரே...!

   அத்துடன் மனைவியை இழந்த கணவனை ( தபுதாரன் ) என்று அழைப்பர். சின்ன வயதில் எனக்கு படித்த ஞாபகம்.

   நீக்கு
  3. தபுதாரன் என்று வடமொழி வழிவந்த பழந்தமிழச் சொல்வழக்கும், திருக்குறளிலேயே “பரத்தன்” எனும் ஆண்பாற் சொல்லும் இருப்பது உண்மைதான். நான் கேட்பது வழக்கில் இருக்கிறதா? ஏன் வழக்கத்தில் இல்லை யெனில் அப்படி அழைக்கும்படியாக சமூகத் தேவை எழவில்லை புரியுதா? (பொண்டாட்டி செத்தா புருசன் புதுமாப்பிள்ளை!)

   நீக்கு
 7. 'எத்தனையோ துன்பங்களை தாங்கிக் கொண்டு பெண்கள் வாழ்ந்திருகிறார்கள் என்று வருந்தியிருகிறேன'' - வீட்டில் மட்டுமல்ல சகோதரி, அரசியலில், கல்விக்கூடங்களில் ஏன் கலை-இலக்கியத்தில கூட இன்னும் பெண்களுக்கான இடம் கிடைக்கவில்லை. அவ்வளவு ஏன்? எந்த மதமாவது பெண்ணை ஒரு தலைவராக ஏற்றதுண்டா? போப்பாண்டவராக ஒரு பெண்? “இத்தனை ஆயிரம் நபிகளில் ஒரு பெண்நபி கூட இல்லையே ஏன் வாப்பா?” எனும் புகழ்பெற்ற கவிதை எழுதியவரைத் தெரியுமா? அதகற்காக அவர் என்ன பாடு படுத்தப் பட்டார் தெரியுமா சகோதரி? எம்மதமும் பெண்ணை இரண்டாம்பட்சமாக நடத்துவதில் சம்மதம்! இதைத்தான், நானொரு தொகுப்புரையில் கவிதைபோல “எல்லாச்சாதிக்குள்ளும் இழிந்த சாதியாய் அவரவர் பெண்சாதி” என்றேன். வேறென்ன சொல்ல?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரரே! அனைத்தும் அழகாக தெளிவு படுத்தியுள்ளீர்கள். அனைத்தும் சிந்திக்க வைக்கிறது. எனக்கு அந்த புகழ் பெற்ற கவிதை படிக்க வாய்ப்பு கிட்டவில்லை.

   புதுமாப்பிள்ளை ஆவதால் தான் அச் சொற்கள் வழக்கத்தில் புழக்கத்தில் இல்லாமல் போயிற்று இல்லையா, உண்மை உண்மை அதனால் தான் பலரை நான் கேட்ட போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை போலும் விபரம் இப்பொழுது தானே தெரிகிறது. தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோதரா.
   வாழ்க வளமுடன் ...!

   நீக்கு
 8. /// பத்தோடும் பதினொன்றாய்... ///

  சிறப்பு ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே மிக்க நன்றி
   உங்கள் பின்னூட்டம் வரவில்லையென்றால், இந்தப் பதிவு சரியில்லையோ என எனக்கே சந்தேகம் வந்துவிடுகிறது... ஆனால் அதற்குள் நீங்கள் வந்துவிடுகிறீர்கள்.. நன்றி நன்றி.

   நீக்கு
 9. பல தமிழ்ச்சொற்களுக்கு ஆண்பால் சொல் இல்லை சகோதரி இனியா! அதுபற்றி ஒரு சிறு பதிவே எழுதலாம் என்றிருக்கிறேன் - அதற்காக உங்களுக்குத்தான் நன்றி சொலல வேண்டும். விரைவில் எழுதுவேன்.

  பதிலளிநீக்கு
 10. முற்றும் வரியிடுக்கில் முத்தமிழை காண்கின்றேன்
  சுற்றமில்லா நேரத்தில் சொர்க்கமுறும் - உற்றவளின்
  அற்றைக் கனவுகளின் ஆசையெல்லாம் மீதமின்றி
  பெற்றிடுக பேரின்பம் உண்டு !

  அழகிய அர்த்தமுள்ள வரிகள்
  வாசித்தேன் அருமை அருமை
  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 11. நிறைவுப்பகுதி என்று கூறியுள்ளீர்கள். ஆனால் மறுபடியும் முதலிலிருந்து என்று கூறும்படி உள்ளது. நன்றி.

  பதிலளிநீக்கு